Friday, 3 April 2020

2019 டிசம்பர் மாத கவிதைகள்

தேநீர் கோப்பையில்
மதுரசம் வழிந்து கொண்டேயிருக்கிறது...
போதையென்பது
கிரீடத்தின் கற்களில்
மிளிர்ந்து கொண்டிருக்கலாம்...
துடிப்பதை ரசிப்பதில் வழிகின்ற போதை
சுவாரசியமானது....
நீங்கள்தான் சொல்கிறீர்கள்
சர்வாதிகாரியென்று
ஆனாலும்...
அகிம்சையை எதிர்பார்க்கிறீர்கள்?
சிறுபான்மை
என்ற சொல்லாடலில்
பெரும்பான்மை அடங்கிக் கிடக்கும் போது
வலதுசாரிகளுக்கு
தேசியக்கொடியின் சக்கரம்
எந்தப் பக்கம் கழன்று விழுந்தாலென்ன?

- முகமது பாட்சா*
23/12/2019

கன்னத்தில்
மெல்லிதாக முத்தமிட்டவனின் விரல்கள்
தூரிகையாக நகர்ந்தது
ஹிட்லர் காதலிக்கத் தெரிந்தவனென்று
உனக்கு மட்டும்தான் தெரிகிறது ஈவா!

முடிவிற்கு வந்துவிட்ட கதையில்
அவர்களும் எழுதுவார்கள்
நாம் இருவரும் இறந்துவிட்டதாக...

அவர்களுக்குத் தெரியாது
தற்கொலையென்பது கோழைகளுக்குப்
பிடிக்காத தைரியமென்று...

இனி எங்காவது
பிச்சையெடுத்தாவது
பிழைத்துக் கொள்ளலாம் வா...
உன் அதரங்களை இம்சிக்கும்
அழகிய மீசையை எடுத்துவிடுகிறேன்!

- முகமது பாட்சா*
24/12/2019

ஜோஸபின்; தான்
சுருட்டிவைத்த இரவை எழுப்ப மனமில்லாமல்
வெளிச்சங்களைக் கட்டி
ஆலயத்தை அழகூட்டிக் குதிக்கிறாள்...
இசைப்பாடல்களில்
தெப்பமிசைக் கட்டி
எல்லோரும் பெத்லேஹம் செல்கிறார்கள்...
தச்சன் யோசப்பின் கட்டிலில்
நட்சத்திரக்குழந்தை சித்திரமாகச் சிரிக்க...
வாசனைத் தூபங்களில்
ஜெபப் பாடல்கள் சந்தோஷம் இசைக்கின்றன...
வானசாத்திரர்கள்
பரிசுகள் அளித்து ஆயரின் வருகைக்கு
மகிமை செய்கிறார்கள்....
பிரார்த்தனையில் ஆமெனை கூட்டிய ஜோஸபின்
மடியில் சாய்ந்து சிரித்தபோது
எடிசனுக்கும்
மகிமைக் கூட்ட கிறிஸ்து பிறந்திருந்தார்!

- முகமது பாட்சா*
24/12/2019

கதவுகளை அடைத்து விட்டு
நாங்கள்
உள்ளே பேசிக் கொண்டிருக்கிறோம்
வெளியே அசாத்திய பலத்துடன் ஒரு மிருகம்
காத்திருப்பதாகச் செய்திக் கசிகிறது!
சன்னல்களைத் திறந்தவுடன்
சிட்டுக் குருவிகளின் சத்தம் நுழைகிறது!
கதவைத் திறந்த பிறகுதான்
காற்றே வேகமாக நுழைந்தது!
தீப்பந்தங்களைக் கொளுத்தி
வீதிகளில் இறங்குகிறோம்...
கர்ஜனையின் கடூரம் மெல்லத் தேய
காட்டிற்குள் ஓடியிருக்கும் என்றும்
இல்லையில்லை
பாய்வதற்காகத்தான் பதுங்கியிருக்கும் என்றும்
பேசிக் கொள்கிறார்கள்....
சாத்தனின் சேட்டைகளாக இருக்கலாம்
என்பதும் சிலர் முன் வைக்கும் வாதம்!
எது எப்படியோ...
வீட்டைத் திறந்து வைத்தே
அதனைப் பிடிப்போம் என்று காத்திருக்கிறோம்...
பூனையின் சப்தம் மெல்ல நுழைகிறது!

- முகமது பாட்சா*
25/12/2019

எரிந்து கொண்டிருக்கும்
வாகனத்தின் அருகிலிருந்து ஒரு நிழல்
நகர்ந்து செல்கிறது
நிழலின் நிறம் காக்கி

பதக்கத்தை மறுதலித்தவள்
நிமிர்ந்து வருகிறாள்...
கைதட்டுபவர்களின் நிறம் வெள்ளை

அகங்காரன்
ஆணவத்தின் உச்சியில் நின்று
உரையாற்றுகிறான்
கூடியிருக்கும் கூட்டத்தின் உறக்கம் வறுமை

அகதி முகாம்களில்
யாக குண்டத்திற்கான படிமானங்கள்
கட்டப்படுகின்றன அதில்
தூங்கிக் கிடக்கும் நெருப்பின் முகம் வஞ்சம்

பிணத்திற்கும் வரி போடுகிறான்
சர்வாதிகாரி..
அவன் தைரியத்தின் கரம் அகங்காரம்
கால்களின் நிழல் பயம்.

- முகமது பாட்சா*
26/12/2019

வளையமிட்ட கிரகணத்தை
நானும் பார்த்தேன்....

வெளிச்சத்தை மறைத்த நிழலுக்காக
வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார்கள்
நிழல் விலகியதும்
வெளிச்சம் தானாக வெளி வந்தது...

பட்டாம் பூச்சியொன்றின் நிழல்
டைனோசர் போலவும்
கழுகின் நிழல் பட்டாம் பூச்சி போன்றும்
காட்சியளித்தது...

காலுக்குக் கீழிருக்கும் நிழல்
சில நேரம்
சுவரின் மீது உயர்ந்து நகர்கிறது!

ஆக்ரோசமாகச்
சண்டையிட்டுக் கொண்டிருந்த பூனை
களைத்தவுடன் நிழல்
எலியாக
அதன் காலருகில் அமர்ந்து கொண்டது!

நிழலுக்குள் வாழக் கற்றுக் கொண்டதால்
வெளிச்சத்திற்குத்
தள்ளுகிறது விருட்சத்தை வேர்கள்!

கிரகணம் விட்டவுடன்
முகமலம்பிக் கொண்டு வெளியில் வந்தேன்
நிழல்
என் காலிலிருந்து படர்கிறது!

- முகமது பாட்சா*
26/12/2019

அந்தச் சுவர்கள்
தேதி மற்றும் கிழமைகளை அறிந்ததில்லை
அதன் உயரம்
தொலைந்து போன கனவுகளின் தூரம்...
அமெரிக்காவின் குருட்டுக் கண்
குவான்டனாமோவின் அகன்ற வாசல்...
மனிதம் பேசும் உலகத்தில்
நாய்கள் மட்டுமே
சுதந்திரமாகப் பேசித் திரிகின்றன...
குன்றிய மன நலத்துடன்
ஒருவன் குமுறி அழுது கொண்டிருக்கிறான்..
இராணுவத் தொப்பிகள்
மலடிகளுக்கு மகனாகப் பிறந்திருக்க வேண்டும்
பிட்டத்துப் புணர்வில்
செத்துக் கொண்டிருந்தது மனிதம்...
'என் சடலத்தின் புகைப்படங்களையெடுத்து
நீதிதேவதைகளுக்கு அனுப்புங்கள்
அவர்களின் கண்கள் முழுமையாகக் குருடாகட்டும்!'
மரணக் கவிதை எழுதுகிறான்
ஜூமா அல் தோசாரி...
போய்ச் சேராது என்று தெரிந்தும்
தன் தந்தைக்குக் கடிதம் எழுதியிருக்கிறான்
அப்துல்லா தானி ஃபரிஸ் அல் அனாசி,
ஷாகி அப்துர்ராஹீம் கோப்பையில் எழுதிய கவிதை
இன்னமும் நுரைத்து வழிகிறது....
இவர்களுக்குத் தொழுகையைத்தவிர
வேறொன்றும் தெரிந்ததில்லை...
இப்போது கவிதையெழுதவும் தெரிந்திருக்கிறது!

- முகமது பாட்சா*
27 /12 /2019

கனவுக் காண்பதற்கான விளக்கங்கள்
எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன!
கோழைகளின் கூடாரத்தில்
கனவுகள்
ஓர் ஒட்டகம் போல்
தலையை வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது!
சுதந்திரத்தைத் தேடியலைகின்றவனுக்குக்
கனவுகளைக் காண
நேரங்கள் இருப்பதில்லை!
கனவுகளைக் காணக் கற்றுக் கொடுப்பதும்
ஓர் அரசியல்தான்!
மதுக்குடுவையில் விழுந்திருக்கும் கனவுகள்
ஊர்வசிகளைத் தேடியலைகின்றன !
கனவுகள் கடவுள்களாக ரூபம் எடுக்கும் போது
பக்தர்கள் பூமிக்குள்
புதைந்து கொண்டேயிருக்கிறார்கள்!
தேசத்தின் கனவுகள்
மோடி வித்தைக்காரர்கள் தருவித்த மாங்கனியில்
அழுகலாகவே இருக்கின்றன!

- முகமது பாட்சா*
30/12/2019

எனக்குப் பிடித்த 10 புத்தகங்கள்

அம்மாவின் நினைவுகள்
துரத்தும் அப்பாவின் வாசனை
உறவுகள் எழுதிய சொல்லித் தந்த பாடம்
நண்பர்களின் கனவுகள்
மரணம் வாங்கும் இறுதி மூச்சு
மலிவாய் கிடைக்கும் உபதேசங்கள் நூறு
மந்திரம் செய்யும் மோடி
எடப்பாடியின் 'காலை வாரும் கலை'
எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் மக்கள்
மற்றும்
இனிமேதான் இருக்கு ஆட்டம்!

- முகமது பாட்சா*

முழுமையான சொற்களால்
நிரப்பப்படாத ஆண்டு
மெல்ல நழுவிக் கொண்டிருக்கிறது!

துயரங்களை மடித்துக் கொடுத்த
விபூதிப் பொட்டலங்களில்
பிரார்த்தனைகளின் தொங்கல்கள்!

கரையேறக் கிடைக்காத துடுப்பையே
கண்கள்
தேடிக் கொண்டிருக்கின்றன!

தூறலில்
வட்டமிடும் ஜாலம் போல்
நீர்மையான வாழ்க்கைச் சிக்கல்கள்!

கடிகாரத்திற்கு
நாள் கிழமை ஆண்டுகள் இல்லை
ஆனாலும்
அதுதான் காலத்தை நகர்த்துகிறது!

புறாக்களின் கூடடைந்த உறக்கம்
பஜ்ர் தொழுதவனுக்கு
இஷாவில் கையேந்துகின்ற தூரம்!

தேவாலயங்களில்
புதிய ஆண்டின் வருகைக்காக
வண்ண மெழுகுவர்த்திகள் கரைகின்றன!

விடிந்தபிறகு
இருக்கும் பணத்தைப் பொறுத்துத்தான்
புத்தாண்டின் கொண்டாட்டங்கள்!

விடிந்ததும் 2020
அதுவரை தாங்கி நிற்பது 2019

- முகமது பாட்சா*
31/12/2019

No comments:

Post a Comment

Popular Posts