இடுப்பில் ஓர் ஆட்டை வளைத்துக் கட்டிக் கொண்டவன்
பாம்பின் வாயில் கிரெடிட் டெபிட் கார்டுகளைத் திணித்து
பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான்
அவன் கால்களுக்காகவே ஒரு பசுமாடு காத்திருந்தது...
அவளும் தன்னைப் பட்டாம்பூச்சிகளால் உடுத்திக் கொண்டவள்
பன்றிக் கொழுப்பை உதட்டில் பூசிக்கொண்டாள்...
கருங்குரங்கைத் தோளில் தொங்கவிட்டவள்
ஒப்பனைப் பொருட்களை அதன் வயிற்றில் போட்டு வைத்தாள்...
வாக்கிங் என்பது கொழுப்பைக் குறைத்தாலும்
திமிரைத் தேகம் முழுவதும்
திட்டு திட்டாய் ஆங்காங்கே வைத்திருக்கிறது...
நடை பாதைகளில் நாற்றம் குடலைப் பிடுங்கியதால்
ராயல் மிர்ராஜை நாசியில் திணித்துக் கொண்டார்கள்...
செத்த மாட்டைச் சாப்பிடும் அவர்களுக்கு
இன்று ஏதாவது பண்டிகையாக இருக்கலாம்...
கையேந்திய தேசியக்கொடியை கார் கண்ணாடி இறக்கி
விரட்டி விட்டவர்கள்...
தேசம் கெட்டு போச்சு என்று சொன்னார்கள்...
கடற்காற்றை அழுக்குகள் நக்கி நகர்ந்து கொண்டிருந்தன...
மீன்கள் எண்ணெய்ச் சட்டியில் சப்தமிட்டுக் கொண்டிருக்க
கடல் நாறுகிறது என்றால் சீமாட்டி
கழுத்தில் தொங்கிய சிப்பிகளின் எச்சங்களும்
அட்டிகையின் பவழ அழுக்கும் கோபமாக அவளைப் பார்க்க
கவிச்சி சாப்பிடுபவர்களைச் சுட்டுவிடனும் என்றான்
அவளின் காதில் மட்டும் கேட்கும் படியாக...
- மு. முகமது பாட்சா*
18/06/2019