Thursday, 31 May 2018

இப்போது அவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

சிகரெட்டை 
தூக்கிப்போட்டுப் பிடித்த போது 
அவனும் அப்படித்தான் 
முயற்சித்துக் கொண்டிருந்தான் 

அவன் அப்பாவின் சவுக்கடி 
அவனுக்கு மரத்திருந்தது 

'இது எப்படியிருக்கு' என்று 
பூவிற்கும் தனத்தை இழுத்து 
அவள் புருஷனிடம் 
மொத்தடி வாங்கினான் 

செல்வியக்காவின் புடவையில் 
ஓட்டைப் போட்டபோதுதான் 
ஊரே அவனை விரட்டியது 

நேற்றுதான் அவனைப் பார்த்தேன் 
ஏளனமாக என்னைப் பார்த்துவிட்டு 
ஏதாவது ஆகனும்னா 
என்னை வந்து பாரென்றான் 

அவன் கொடுத்த அட்டையில் 
அவன் கட்சியின் பெயரும் இருந்தது.

-மு. முகமது பாட்சா*
31 /05 /2018

Wednesday, 30 May 2018

தொடர்பு எல்லைக்கு அப்பால்

ரமலான் 15
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் தாடி


தொடர்பிழந்த தொலைப்பேசியில் 
பேசிக்கொண்டிருக்கிறேன் 
தொடர்பு எல்லைக்கு அப்பால் நின்று 

தொடரும் என்று முடியாத கதையின் 
கதாப்பாத்திரம் நான் 

கஜானாவின் அடுக்குகளில் 
கத்தை கத்தையாகப் பாவக் கரண்சிகள் 

தொழுகையில் மட்டுமா கழுவமுடியும் 
கண்களையும் கரங்களையும்? 

தாயாரின் தஸ்பீகளில் 
எனக்கான மன்னிப்புகள் எத்தனையிருக்கும்? 

ஆசைகளைச் சுமக்கும் முதுகில்தான் 
எத்துணை அழுக்கு மூட்டைகள்? 

கலங்கிப்போன முட்டையில் 
கருவிற்கேது இனி வாழ்க்கைப் பயணம்? 

நாடோடி கால்களுக்கு நாற்காலி 
தேவைப்பட்டபோதே 
ஆசையும் துளிர்த்து விட்டது 

சதக்காவும் ஜக்காத்துகளும் 
வாசல் கதவை காட்டுகின்றன 

மனம் மட்டும் 
இரும்புப் பெட்டியில் இருக்கிறது 
சாவியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். 

- மு.முகமது பாட்சா* 
31 /05 /2018 

விஷக்கிருமி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, இரவு மற்றும் வெளிப்புறம்

கிருமிகள் 
மெதுவாகத்தான் உள்ளே நுழைகின்றன 
சாக்கடைகளில் மட்டும்தான் 
கிருமிகள் இருக்கும் என்பதில்லை 
அழகான பழங்களுக்குள் ஒளிந்திருக்கலாம் 
இனிப்பான பண்டங்களில் பதுங்கியிருக்கலாம் 
கைக்குலுக்கல்களில் கூட 
ஒட்டிக் கொண்டு உள்ளே நுழையலாம் 
தழுவும்போது அதுவும் நம்மை 
தழுவிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது 
தும்மலாக, இருமலாக, 
சின்னக் கட்டியாக வரும் போதெல்லாம் 
அலட்சியத்தில் அதை விட்டுவிடுகிறோம். 
கிருமிகள் எப்போதுமே கிருமிகள்தான் 
அவற்றுக்கு நமது உடல்தான் இமயமலை 
ஏனென்றால் அங்குதான் 
அந்தக் கிருமிகள் தவம் செய்கின்றன.. 
காய்ச்சல் வந்த பிறகுதான் 
கண்ணடைந்தவனுக்குத் தெரிகிறது 
அஃதொரு விஷக்கிருமி. 
இனியும் ஜீவ காரூண்யம் பேசினால்... 
அதன் தவத்தைப் பற்றி யோசித்தால்... 
அதன் அழகை இரசித்துக் கொண்டிருந்தால்... 
செத்துமடி மனிதனே 
இங்கு வேறு எதுவும் வழியில்லை. 

- மு.முகமது பாட்சா* 
30 /05 /2018

Tuesday, 29 May 2018

நாடோடியின் நகரம்

ரமலான் 14
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நகரத்தின் அசுர வாழ்க்கையில் 
விழுந்து விட்டோம் 

தேசாந்திரியின் சுதந்திரத் தனிமை 
யாருக்குக் கிடைக்கும்? 

சூஃபிகளின் கூடாரங்களை 
வெறுக்காதீர்கள் 
அஃதொரு நகர்ந்து செல்லும் வீடு! 

படைப்புகளின் ரகசியம் அறிந்தால் 
சாத்தானின் வலையில் 
யாரும் விழ மாட்டார்கள் 

ஒருவேளை வனத்தில் கண்விழித்தால் 
சருகுகளின் கம்பளம் காண்பீர்கள் 

வண்ணப்பூக்களின் சொறிவு 
பாதைகள் முழுவதும் நிறைந்திருக்கும் 

நாம் சுவாசிக்கும் காற்றுதான் 
வாழ்க்கையை வாசிக்கிறது 

முத்தெடுக்க 
யாரும் கடலுக்குள் மூழ்கவேண்டாம் 
பயணம் செய்யுங்கள் 

நாம் எல்லோருமே பயணிகள்தான். 

சுத்தமான காற்றைத் தேசாந்திரித் தவிர 
யாரும் சுவாசிக்க முடியாது 

பனி 
காற்று 
மழை 
குளிர் 
எத்தனை மகிழ்வுகளைத் தொலைத்துவிட்டு 
செயற்கை குளிரூட்டிக்குள் 
சிலிர்த்துப் போகிறோம்! 

சூஃபிகளின் பள்ளி விசாலமானது 
அங்குப் பறவைகள் 
இனிமையாகப் பாங்கு சொல்லும் 

அருவிகளில் ஒலுவெடுக்கும் நற்பேறு 
நாடோடிகளுக்கு மட்டுமே 
கிடைக்கிறது... 

நகரத்தின் வாழ்க்கைக் குப்பையானது 
நகரத்தின் முகம் போலியானது 
நகரத்தின் வேசம் அறுவெறுப்பானது 

மொத்தத்தில் நகரம் நரகமாகிவிட்டது.. 

- மு.முகமது பாட்சா* 
30 /05 /2018

திடீரென்று

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குளோஸ் அப்

எல்லாமே திடீரென்று மாறிவிடுகிறது 
எல்லோருமே 
திடீரென்றும் மாறிவிடுகிறார்கள் 
வாய் மூடிக்கிடந்தவர்கள் பேச ஆரம்பித்தார்கள் 
அப்போதுதான் தெரிந்தது 
அவர்களின் வாய் 
ஏன் பூட்டப்பட்டிருந்தது என்று 
கிரீடத்தை 
ஆணி வைத்து அறைந்து கொண்டார்கள் 
வசம்பு வைத்துத் தேய்த்தாலும் 
வார்த்தைகள் வளமாக வந்ததில்லை 
கிடைத்த துப்பாக்கியையெடுத்து 
சுட்டுசுட்டு விளையாடினார்கள் 
இறந்து கிடந்தவர்களை 
மடியில் வைத்து அழவும் செய்தார்கள் 
இவர்கள் பரமார்த்தாவின் முட்டாள்களல்ல 
முட்டாள்களின் 
முகமூடி போட்ட சைக்கோக்கள் 
துப்பாக்கியைப் பிடுங்குங்கள் 
அல்லது துப்பாக்கியால்........................................... 
கோடிட்ட இடத்தையாவது பூர்த்தி செய்யுங்கள். 

- மு.முகமது பாட்சா* 
29 /05 /2018

Monday, 28 May 2018

கோட்சொல்லல்

ரமலான் 13

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

முதுகின் பக்கம் 
முழுவதுமாகத் தெரிவதில்லை 
புறம் பேசாதீர்கள் 

கழுவியும் கறை போகாத நாக்கு 
கல்வியைச் சொல்லித் தருமா? 

எடுத்த வாந்தியை மீண்டும் 
யாராவது எடுத்து உண்பார்களா? 

கலகத்தின் பிரதிக்கு ஆயிரம் நாவுகள் 
கோட்சொல்லல் என்பது 
நரகத்தின் முதல் படி 

அடுத்த வீட்டின் அழுக்குகளை 
நாம் ஏன் பூசிக் கொள்ள வேண்டும்? 

சகோதரனின் மாமிசம் 
அத்துணை ருசியா? 

நாவிற்கு அடிமைப் பட்டவன் 
நலவிற்கு மிகத் தூரமாகிப் போகிறான் 

சாத்தானின் நாக்கை வைத்து 
சொறிந்து கொள்கிறோம் 

கபரிலும் அணையாத 
தீயென்பது நபிகளின்(ஸல்) வாக்கு 

முதுகின் பக்கம் 
முழுவதுமாகத் தெரிவதில்லை 

எப்போதும் புறம் பேசாதீர்கள் . 

- மு.முகமது பாட்சா* 
29 /05 /2018

வார்த்தைகளின் வரவு செலவு

ரமலான் 12
தானியங்கு மாற்று உரை இல்லை.

சொல்லம்புகளில் சிக்கிக்கொண்டு 
சிலர் வீழ்ந்து கிடக்கிறார்கள் 
வார்த்தைகளென்பது வரமளித்தது 
வரவு செலவுகளில் கச்சிதம் தேவை 
தூற்றிய வார்த்தைகளை 
துடைப்பத்தாலும் வார முடியாது 
வார்த்தைகளை வசீகரிக்கத் தெரிந்தவன் 
வாழ்க்கையை இரசிக்கிறான் 
நல் வார்த்தைகளை 
நயமாகப் பகரச்சொல்கிறான் அல்லாஹ் 
- (அல்பகறா, அல் இஸ்ரா 53 ) - 
புறத்தின் தூய்மை நீர் கொண்டு 
அகத்தின் தூய்மை வாய்மொழியாகும் 
பரிகாச வார்த்தைகள் 
நரகத்தில் மின்னும் எரி நட்சத்திரங்கள் 
ஏளன வார்த்தைகள் திரும்பி வந்துவிடும் 
பூமராங்காகும். 
ஸலாம் என்பது அழகிய வார்த்தையாம் 
அதை விட்டு விடாதீர்கள்... 
சோதரரே சுவனத்தின் வாசமே 
நல் வார்த்தைகளின் சுவாசம்தான். 

- மு.முகமது பாட்சா* 
28 /05 /2018 

Sunday, 27 May 2018

ஓதுவீராக!

ரமலான் 11
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குழந்தை மற்றும் வெளிப்புறம்

ஒரு மரத்துப் பறவைகளென்றாலும் 
தேடலின் பொருட்டே இரை கிடைக்கிறது 
தெளியாத நீரில் முகம் தெரியாது 
எறும்புகளின் உலகம் தேடல் கொண்டது 
ஓதுவீராக ! 
இறைவன் தொடங்கி வைத்த பயணம் 
இன்னமும் நடந்து கொண்டேயிருக்கிறது 
அஸ்ஸலாமு அலைக்கும் வார்த்தையில் 
துரோகத்தின் நிழல் இருப்பதில்லை 
சஜ்தாவில் இருக்கும் போது 
இறைவன் பூக்களைச் சொரியலாம்... 
தொழுகையை விட்டு விடாதீர்கள் 
பணத்தைத் தேடும்போதே 
பசித்தவனையும் தேடுவது இறைவழியாகும் 
நடக்கின்றபாதை நமக்கானது மட்டுமா? 
தேடல் மட்டுமே 
நம் கால்களுக்குச் சொந்தமாக இருக்கிறது 
சிலந்தியின் வலையில் 
சிந்தனையை வைத்துவிட்டுச் சிந்திப்பீராக! 
திருமறையின் வசனங்கள் 
கொசுவையும் உதாரணம் காட்ட மறந்ததில்லை 
ஓதுவீராக! ஓதுவீராக 
தேடலின் பொருட்டு  சிந்தனைகள் விரியட்டும். 

- மு.முகமது பாட்சா* 
28 /05 /2018 

Saturday, 26 May 2018

சுவனம் எப்படியிருக்கும்?

ரமலான் 10


சுவனத்தைத் தேடியொருவன் அலைகிறான் 
சுவனம் எப்படியிருக்கும்? 
நரகத்தின் வாசல்கூட 
அலங்காரத்துடன் இருக்குமென்று 
ஒரு சூபிக்கவிதை சொல்கிறது 
தாயின் கண்ணீரில் நரகம் இருக்குமென்றால் 
துடைத்துவிடு சுவனம் கிடைக்குமென்று 
நாடோடியொருவன் பாடுகிறான் 
சுவனத்திற்காக மட்டுமே தொழுகிறவன் 
அல்லாஹூவை மறந்து விட்டவன் 
இரக்கமில்லாத தர்மம் 
சுவனத்தின் காற்றைக்கூடக் காட்டாது 
அடுத்த வீட்டின் அழுகையை அறியாதவன் 
தன் வீட்டில் இருக்க அருகதையற்றவன் 
உறவுகளைக் கழுவிவிட்டு பிறருக்காய் 
தேடித்தேடிச் செய்யும் உதவிகள் 
வேசமென்பது இறைவனுக்குத் தெரியும் 
சாய்ந்து கொள்ளத் தோள் கொடுக்காதவன் 
தான் சாய்ந்து கொள்ள 
சுவனம் கேட்பது எப்படிச் சரியாகும்? 
சுவனத்தைத் தேடியொருவன் அலைகிறான் 
சுவனம் எப்படியிருக்கும்? 

- மு.முகமது பாட்சா* 
27 /05 /2018 

Friday, 25 May 2018

இரவு பள்ளி

ரமலான் 9
தானியங்கு மாற்று உரை இல்லை.

இரவின் கருணை 
மிகப்பெரியது 

நிழலையே குடையாக 
விரித்திருக்கிறது 
வானம் 

நட்சத்திர விளக்குகளை 
யாருக்குக் கட்டியிருக்கும் 
இந்த இரவு? 

நம்மோடு நடந்து வரும் 
நிலவைப் போல் 
சூரியனென்றும் இருந்ததில்லை 

அல்லியின் சுதந்திரம் 
இரவில்தான் மலர்கிறது 

அதனால்தான் 
வரிசைக் கட்டி நிற்கிறதோ 
தராவிஹ் தொழுகை 

குர்ஆனின் வசனங்கள் 
துல்லியமாகக் கேட்கின்றன 

அமைதிக்குள் 
நுழையும் மனம் 
என்றும் ஆர்ப்பரிப்பதில்லை 

கருணையைக் 
கற்றுக் கொடுக்கிறது 
அழகிய ரமலான் 

விரைந்து வாருங்கள் 
இந்த இரவு பள்ளி 
இப்போது திறந்திருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
26 /05 /2018

Thursday, 24 May 2018

இமாமை பின் தொடர்ந்து

ரமலான் 8 
தானியங்கு மாற்று உரை இல்லை.

மரணம் 
நம் வாசல் கதவைத் தட்டுகிறது 
வாத்தியக் கருவிகளோடு 
இசையில் இலயிக்கிறோம் 

மறை குர்ஆனின் ஆயத்துகளை 
விரல்கள் மேய்கின்றன 
சிந்தனைகள் 
ஊர் சுற்றிவிட்டுத் திரும்புகின்றது 

இமாமைப் பின் தொடர்ந்து 
'அல்லா ஹூ அக்பர்' சொல்கிறோம் 
சலாம் கொடுத்த பிறகுதான் 
உள்ளே நுழைகிறோம் 

ஏந்திய துவாக்களில் தவறியும் 
நாங்கள் 
எங்களைவிட்டு நகர்வதேயில்லை 

கையில்லாதவனுக்கும் இட்ட காசை 
காட்சியாக்கி மகிழ்கிறோம் 

எட்டாம் நோன்பிலும் இயக்கங்கள் 
இப்படித்தான் நகர்கின்றன 

இபாபத்தின் சிறகுகள் 
இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது 

இலாபத்தின் கணக்குகளை நாங்கள் 
பார்த்துக் கொண்டே திரிகிறோம் 

கபரின் குழிகள் மட்டும் 
காற்றை நிரப்பிக் காத்துக் கிடக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
25/05/2018 

நிழல் இங்குத் தொழுகிறது

ரமலான் 7
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், ட்விலைட், சமுத்திரம், வானம், தொப்பி, வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

நிழல் இங்குத் தொழுகிறது 
நிஜம் அங்கு மன்றாடுகிறது 

பாவத்தின் கணக்குகளை 
பற்றியெரிக்கிறது நோன்புத்தீ 

திக்ருகளின் ஓசைகள் 
அர்ஷின் கணக்கில் 
வரவு வைக்கப்படுகின்றன 

எதுகை மோனைக்குள் 
அடங்கவில்லை இந்தக் கவிதை 

சந்திப் பிழைகளில் 
அடிக்கடி சிக்கிக் கொள்கிறது 

யாப்பில்லாத கவிதையில் 
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் 
ஒட்டிக் கொண்டிருக்கின்றன 

சீர் பிரிக்க முடியாத வார்த்தைகளில் 
சிக்கிக் கிடக்கிறது வாழ்க்கை 

எறும்புகளின் 
பள்ளத் தாக்குதான் நம் உலகம் 
அதன் எச்சம்தான் நம் அறிவு 

தேனீக்களின் சிறகுகளில் கூட 
ஒட்டியில்லாதது நம் உழைப்பு 

கற்பனைக்குள் வாழ்கிறவன் 
காகத்தின் சிறகை 
எப்படித் தொடமுடியும்? 

நிழல் இங்குத் தொழுகிறது 
நிஜம் அங்கு மன்றாடுகிறது .

- மு.முகமது பாட்சா*
24 /05 /2018

Tuesday, 22 May 2018

பேரீச்சம் கனி

ரமலான் 6 
  à®ªà®Ÿà®®à¯ இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்
இருட்டிற்குள் 
வெளிச்சத்தைப் புதைத்துவிட்டு 
விளக்கைத் தேடுகிறோம். 

விளக்கு எரிவதற்கு 
எண்ணெய், திரியைத் தேடுகிறது 

தீக்குச்சி மட்டும் இங்குக் காத்திருப்பில் 

வெளிச்சமென்பதே 
இருட்டிலிருந்துதான் வெளிவருகிறது 

இரவு மட்டும் இல்லையென்றால் 
பகல் எப்போதும் 
பைத்தியம் பிடித்தே திரியும். 

கறுத்த இதயங்களை 
இறைவன் கணக்கில் வைத்திருக்கிறான் 

வார்த்தைகளென்பது அலங்காரமானது 

தொழுகையென்பது நடிப்பாகிப் போனால் 
தொப்பியும் தாடியும் கூட 
சுவனம் செல்லாது

சுருக்கிக் கொண்ட கைகளில் 
தஸ்பீகள் 
வெறும் மணிகள் மட்டுமே. 

யாரும் 
யாருக்கும் தர்மம் செய்யலாம். 

புன்னகை கூட ஒரு தர்மம்தான் 
ஏழையும் கூட அதில் கொடையாளி. 

ஈகையென்பதே பேரீச்சம் கனி 
பேரீச்சம் கொண்டே நோன்பைத் திறங்கள் 

- மு.முகமது பாட்சா* 
23/05/2018 

ஸ்டெரிலைட் துப்பாக்கிச்சூடு

உரிமையின் விலை உயிர்கள் 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு மற்றும் இரவு

சுடும் வரை சுடுங்கள் 
தோட்டாக்களின் தூரம் 
மிகமிகக் குறைவு 

வாயுக்களால் சாகிறவர்கள் 
துப்பாக்கி ரவைகளுக்கு 
சாவதில் அதிசயம் நிகழ்ந்திடாது 

இறந்தவர்களுக்கு 
பணமுடிப்பு வழங்கலாம் 

தூங்கும் நீதிமானைக் கொண்டு 
விசாரணை வைக்கலாம் 

உயிர்களின் மீதுதானே 
உங்களின் 
ஆட்சி அமர்ந்திருக்கிறது 

பேடிகளே 

சுடும்வரை சுடுங்கள் 
தோட்டாக்களின் தூரம் 
மிகமிகக் குறைவு 

தலைவியின் 
பிணத்தின் மீதே 
நாற்காலி போட்டவர்கள் நீங்கள் 

தலைவியென்ன 
இன்னமும் 
தங்கக் கட்டிலிலா உறங்குகிறார் 

பணத்தின் வரலாறு படித்த நீங்கள் 
புரட்சி பிணங்களின் 
வரலாற்றைப் படித்ததில்லை 

பேடிகளே 
சுடும் வரை சுடுங்கள் 
தோட்டாக்களின் தூரம் 
மிகமிகக் குறைவு 

-மு. முகமது பாட்சா -
22/05/2018 

Sunday, 20 May 2018

முசல்லாவில் நிற்கும் முதல் தொழுகை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், காலணிகள், இரவு, ட்விலைட் மற்றும் வெளிப்புறம்

ரமலான் 5 

சிறகுகளில்லாமல் யாரால் பறக்கமுடியும் 
முயற்சிகளை முன் வைக்காமல் 
வானத்தையளப்பது முட்டாள்தனம்... 
பறவைகளுக்கும் 
பாதுகாக்கத் தெரிகிறது தன் குஞ்சுகளை 
வானத்தயசைக்கும் மின்னல் 
ஏன் உடனே இறந்து போகவேண்டும்? 
காற்றிடம் நீ கற்றுக் கொண்டதென்ன? 
வேர்கள் பயணப்படாவிட்டால் 
மரங்களெப்படி உயிர் வாழ முடியும்? 
விதைகளுக்குள் உட்கார்ந்திருக்கும் உலகம் 
பெரும் விருட்சமல்லவா! 
கால்களைக் கட்டிக் கொண்டு கையேந்துபவன் 
அப்படியேதான் இருக்கிறான் 
பூமிப்பந்து தன் நகர்வை நிறுத்துவதில்லை 
தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும் 
கேட்டால்தான் எதுவுமே இங்குக் கிடைக்கும் 
பூனைக் கண்களை மூடிக் கொண்டாலும் 
சிந்தனை எலிகளின் அசைவைக் கண்காணிக்கும் 
கட்டிப்போடாத ஒட்டகம் 
எப்போதுமே நம் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை 
பிஸ்மில்லாவில் தொடங்காமல் 
இன்ஷா அல்லாஹ்விற்குள் ஒளிந்து கொள்கிறோம் 
முயற்சியென்பதும் 
முசல்லாவில் நிற்கும் முதல் தொழுகைதான் 

- மு.முகமது பாட்சா* 
21/05/2018 

Saturday, 19 May 2018

வெற்றிடம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பானம், மேஜை மற்றும் உட்புறம்

ரமலான் 4

அறைகள் காலியாக இருக்கின்றன 


காலியென்பது வெறுமையின் பொருளல்ல 

ஏதோவொன்று 
கண்ணிற்குத் தெரியாமல் நிறைந்திருக்கிறது 

அஃது இசையாக இருக்கலாம் அல்லது 

பசியாகவும் இருக்கலாம். 

வெற்றுக் கோப்பையில் 

என் பார்வைகள் நிறைந்திருக்கின்றன... 

அதில் தேநீர் மட்டுமே தீர்ந்துபோன ஒன்று 


சுவை நாவிலும் மனதிலும் ஒட்டிக் கொள்கிறது 


நபி சுலைமான் (அலை) அறிந்ததை 

சாத்தான் ஜின்களின் காதுகள் அறிந்ததில்லை 

கைகளை மூடிக் கொண்டு 

பட்டினி கிடப்பவனின் பிணம் நாறுகிறது 

இறையின் இரகசியம் வெற்றிடம் 

அதன் நிறை யாருக்கு எப்படித் தெரியும்? 

ஈமானில்லாத தொழுகை 

சாத்தானோடுதான் சேர்ந்து தொழுகிறது 

கைகளை ஏந்தினாலும் 

இறைவன் மனதை மட்டுமே பார்க்கிறான் 

கணக்கிட்டுத் தர்மம் செய்யுங்கள் 

அரசாங்கமல்ல 
அவன் கஜானாவை பார்க்காமல் போவதற்கு 

விரதமென்பது பட்டினி கிடப்பது மட்டுமா? 

பாவங்களைக் கழுவுவதும்தான். 

- மு.முகமது பாட்சா* 
20/05/2018 

இரவின் வானம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ரமலான் 3

இரவின் வானம் 
திக்ருகளை எண்ணிக் கொண்டிருக்கிறது

சஜ்தாவின் நெற்றித் தழும்புகள் 
இறைவனைச் சந்திக்க முயல்கின்றன

கருணைகளை அவரவர் 
கைகளில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள்

இருட்டிலிருந்துதான் வெளிச்சம் பிறக்கிறதோ 
இரவுக்கேன் இத்துணைப் பிரகாசம் !

இறைத்தூதர்களின் எண்ணிக்கை 
வானில் இரைந்து கிடப்பதாக 
சூஃபி பாடலொன்று சுற்றிக் கொண்டு போகிறது

வயிறு பசிக்கும் போது 
மனிதம் விழித்துக் கொள்ளும் மகோன்னதம்

முசல்லாக்களில் 
பாவத்தின் கண்ணீர் இரைந்து கிடக்கிறது

இரவு தியானத்திலமர்ந்து விட்டதோ

புறாக்களின் சிறகசைப்புடன்.... 
பஜ்ரின் பாங்கோசை பவ்வியமாக ஒலிக்கிறது

ஒலுவின் ஓசைகளைக் கேட்டீர்களா 
தூக்கத்தைவிட 
தொழுகையே மேலென்று தளும்புகின்றன.

- மு.முகமது பாட்சா*
19/05/2018

Friday, 18 May 2018

மனதோடு யுத்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

ரமலான் 2

மனதோடு 
ஒரு யுத்தம் தொடங்கி விட்டதால் 

பசியென்ற படகிலேறி 
பயணத்தைத் தொடங்கிவிட்டோம் 

நிலவு தன் முகத்தை 
முறுவல் கூட்டி வரவேற்கிறது 

விழித்திருக்கும் இரவுகள் 
எம்மைத் தினந்தினம் படிக்கின்றன... 

தொழுகைக்குள் தொலைந்து போவது 
தேடுவதற்காகவே 

விழித்திருப்பதும் பசித்திருப்பதும் 
ஒரு கடும் யுத்தத்தின் முகாந்திரம் 

கழன்று போகும் கள்ளம் 
வெறுப்புடன் பார்த்துவிட்டு நகர்கின்றது 

இப்தாரின் உணவுகளும் 
பசியின் சுவையைக் கூட்டுகின்றன 

நான் கழன்று நாமாகிறோம் 

கைகளைத் திறந்தால் 
கருணையின் கண்கள் திறந்து கொள்கின்றன 

ரமலான் புனிதமாகிறது 
மனங்களோடு மனிதன் யுத்தம் செய்வதால் 

தர்மம்தான் சுவனமென்றால் 
அது நம் கண் முன்னேதான் இருக்கிறது... 

நரகத்தை வெறுத்திடுங்கள். 

- மு.முகமது பாட்சா* 
18/05/2018 

Wednesday, 16 May 2018

பசியின் திருவிழா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு மற்றும் உட்புறம்

ரமலான் 1

சுவனத்தின் வாசம் பூமியில் இறங்கி வர 
பசியின் திருவிழா இனிதே தொடங்குகிறது 

கருணையின் கண்கள் திறந்து கொள்கின்றன 

இரவுகள் வெளிச்சம் பூசிக் கொள்ள 
பள்ளிவாயல்களின் பாசம் நிரம்பி வழிகின்றது 

புறாக்களுக்கு முன்பாகவே 
திக்ருகள் விழித்துக் கொள்கின்றன 

பஜ்ரின் வாசம் காற்றில் கலந்து வர 
பசியின் நேசம் கண்விழித்துப் பார்க்கிறது 

தர்மத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன 

உறக்கம் என்பது உன்னதமாகிப் போனது 

புனித திருமறை தன் சிறகினை விரிக்க 
மலர்கள் 
வாசலைத் திறந்து வைத்துக் கொள்கின்றன 

மாளிகைக் கைகளும் 
நோன்பு கஞ்சிக்காகக் கையேந்தும் அதிசயம் 

யாசிப்பவனும் யோசிப்பவனும் 
ஒன்றாகவே உணவருந்துகிறார்கள் 

ஈகை மட்டுமே இதயத்தில் அமர்ந்து கொள்ள 
தராவிஹ் தொழுகை சங்கையாக நடைபெறுகிறது 

சாத்தானின் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன 
சபிக்கிறான் அவன் இந்த மாதத்தை. 

- மு.முகமது பாட்சா* 
17/05/2018

Tuesday, 15 May 2018

எண்கள் விளையாட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

எண்களை 
வைத்துக் கொண்டு விளையாடுவது 
சிலருக்குப் பிடித்து விட்டது 
மதிப்பெண்களின் வாசலில் 
மாணவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்
இலக்கை நிர்ணயிக்காமல் ஓடச் சொன்னால்
அவர்கள்  எங்கே ஓடிப் போய் நிற்பார்கள்?
கலைமகள் தன் வீணையின் நரம்புகளை 
எண்ணிக் கொண்டேயிருக்கிறாள்...
கால் விலங்குகளில்
கரையான்கள் கூடு கட்டியிருக்கின்றன
எண்கள்தான் கல்வியை நிர்ணயிக்கின்றது
தகுதியென்பது
எண்களுக்குள் அடங்கி விட்டதால்
திறமையென்பது தூக்கில் தொங்குகிறது
தேர்தல் களங்களில் மட்டும்
எண்கள் விலைக்கு வாங்கப்படுகின்றன
எண்களுக்குள் சிறை வைத்தவர்கள்
பிள்ளைகளை
எப்போதும் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்
ஏலம் 1   ஏலம் 2 
வியாபாரம் தொடங்கிவிட்டது
சந்தை வாசலில் நிற்பது நம் பிள்ளைகள்தான்.

- மு.முகமது பாட்சா*
16 /05 /2018



இருட்டு அறையில்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


கால்களைக் கட்டிவிட்டு நடக்கச் சொன்னார்கள் 
எம்பிக் குதித்து நகர்ந்தோம் 
கைகளை 
அவர்கள் சொல்லாமலேயே கட்டிக் கொண்டோம் 
வராத வார்த்தைகளைப் பேசுவதற்கு அச்சப்பட்டு 
வாய்களை மூடிக் கொள்கிறோம் 
நாங்கள் அணிந்திருக்கும் கண்ணாடிகள் 
காட்சிகளை மாற்றி அமைக்கிறது 
நாங்கள் பூட்டப்பட்ட இந்த அறையில்தான் 
ஒரு கத்தியும் சில துப்பாக்கிகளும் இருக்கின்றன 
ஆனாலும் சாவிக்காக 
மெல்லிய குரலில் விசும்புகிறோம் 
செயலிழந்த வானொலி பெட்டியொன்று 
அடிக்கடி தேசிய கீதம் இசைக்க... 
வலையறுத்து உள்ளே நுழைந்த எலியொன்று 
எங்களைப் பார்த்துவிட்டு நகர்கிறது 
நகங்களால் எங்களைக் கீறிக் கொள்கிறோம் 
வியாபார நிமித்தம் திரிகிறவர்கள் 
இதையெல்லாம் நிச்சயம் பார்க்க மாட்டார்கள் 
அவர்களுக்கு இப்படியொரு அறை இருந்ததே 
மறந்துவிட்டிருக்கக் கூடும். 

- மு.முகமது பாட்சா* 
15 /05 /2018 

Monday, 14 May 2018

தவறான கணக்குகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒன்று என்பது இடம் மாறும்போது 
மதிப்பும் மாறிவிடுகிறது 

எண்ணிக்கைகள் எப்போதுமே 
விரல்களுக்குள் அடங்கிவிடுவதில்லை 

சுழியம் என்பதை விட்டுவிட்டு 
யாரும் கணக்கிற்குள் நுழைவதுமில்லை 

பெரிய எண் என்பதை 
சிறிய எண் வகுக்கத் தொடங்கிவிட்டால் 
சுழியத்திற்குள் ஐக்கியமாகிவிடும் 

கூட்டலில் கூடிய எண்கள் 
கழித்தலில் மதிப்பிழந்து போகும் 

பெருக்கல் என்பது எப்போதுமே 
நம் உறவுகளின் சங்கிலி  

எல்லோருமே 
கதவுகளை மூடிவிட்டுத்தான் 
காற்று வரவில்லையெனப் புலம்புகிறோம் 

முதலிடம் என்பது 
கடைசி இடத்தைக் கணக்கிலெடுப்பதில்லை 

கடைசியிடம் மட்டும் இல்லையென்றால் 
முதலிடத்திற்கு இங்கு மதிப்பேயில்லை 

கணக்குகளைத் தவறாக மதிப்பாய்கிறோம் 
கணக்குகள்தான் 
நம்மைக் கூட்டி கழிக்கின்றன

ஆனாலும் தவறான விடைகளுக்கு 
நாம் மட்டுமே
சொந்தம் கொண்டாடி வருகிறோம். 

- மு.முகமது பாட்சா*
14 /05 /2018

Sunday, 13 May 2018

எழுதுங்கள் கவிதைகளை

தானியங்கு மாற்று உரை இல்லை.

இசை குறிப்பிற்கு எழுதியக் கவிதை 
காற்றில் மெல்லப் பறந்து போகிறது... 
நடந்து போகும் நாடோடி பாடல் 
நான்கு பேருடன் பேசிக் கொண்டிருக்கிறது... 
இரவுப் பாடகன் எப்போதும் 
நிலவைப் பற்றியே பாடிக் கொண்டிருக்கிறான் 
நவீனம் நாள் காட்டியாக கிழிந்து 
கால எந்திர உள்ளீடாக உட்கார்ந்து கொள்ள... 
பாஷோவின் பழைய குளத்தில் 
மீன்கள் இப்போதும் துள்ளி குதிக்கின்றன 
ஆருடன் எழுதிய கவிதையில் 
நட்சத்திரங்கள் இடம் மாறுகின்றன
தோட்டத்தில் ஒன்றிரண்டு கள்ளிப் பூத்தாலும் 
பூக்களென்னவோ எல்லாமே அழகுதான்.. 
நல்லதும் கெட்டதும் 
அவரவர் மனது எழுதும் கவிதைகள்... 
வார்த்தைகளைத் தேய்த்தால் 
வாசம் நிச்சயம் வரத்தான் செய்யும்
எழுதுங்கள் எழுதுங்கள் 
எழுத்திற்கில்லை எப்போதும் தோசங்கள்!

- மு.முகமது பாட்சா*
14/05/2018

Saturday, 12 May 2018

அடையாளங்கள்


அடையாளங்களை
அடையாளத்துடன் நாங்கள் 
தேடிக் கொண்டிருக்கிறோம்

துறவியென்பதற்கும்
ஓராடை 
நிச்சயம் தேவைப்படுகிறது

போதிமரத்தை
புத்தனின் அடையாளமாகவே
பார்க்க கற்றுக் கொண்டோம்

அடையாளங்களுக்கான முகமூடிகள்
சந்தைகளில்
ஏராளமாகக் கிடைக்கின்றன...

ஆதார் 
அடையாளமாகவே இருந்தாலும்
அவன் இறந்த பிறகு
அதற்கு உயிர் இருப்பதில்லை

நல்லவனுக்கான அடையாளம்
வார்த்தைகளின் மீதும்
கெட்டவனுக்கான அடையாளம்
செயல்களிலும் மீதும் சேர்ந்து கொள்கிறது

மதங்களுக்கான அடையாளங்கள்
அன்பைத் தொலைத்துவிட்டு
ஆயுதங்களைச் சுமந்து திரிகின்றன

சாதிய அடையாளங்களில்
முடிவிலியாய் 
ஒளிந்து கொண்டவர்கள் பரிதாபிகள்

இரவின் அடையாளம் இருட்டென்றும்
பகலின் அடையாளம் 
வெளிச்சமென்றும் போதித்தவன்
நிச்சயம் போக்கத்தவன்  

அடையாளமில்லாமல் 
யாருமிங்கே நடந்து போவதில்லை
உலகைவிட்டு 
கடந்து போவதுமில்லை

சுவடுகளென்பது
கடந்தகாலங்களின் பிரதிமை

நிகழ்காலமென்பதோ
மாயச் சொற்களின் காட்சி பிழை

காதல் மட்டுமே
இங்கு அடையாளமின்றி வாழ்கிறது
ஆகையினால் 
காதல் செய்வீர் மானிடரே !

- மு.முகமது பாட்சா*
13/05/2018

வாக்கப்பட்ட நாளா...


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

வாக்கப் பட்ட நாளாதான் 
வவுத்து வலியில் நானிருக்கேன்! 
வாக்காட்டுப் பொழப்பாதான் 
நீயுமெனக்கு வாச்சிருக்கே! 
பூக்காட்டில் வச்சி யென்ன 
புகழ் பாட வேணாம் மச்சான்! 
சூக்காட்டிப் போகும் பொழப்ப 
புதைச்சி வச்சாப் போதும் மச்சான்! 
சோக்காளிக் கணக்காதான் 
தினம் நீயும் சுத்தி வர 
வெக்காளம் சூழ்ந்த வாழ்க்கை 
வெளுப்பதுதான் எப்ப மச்சான்? 
தக்காம ராப் பொழுதில் 
சல்லித்தனம் செய்யிரியே... 
வேக்காளம் தின்னே நான் 
சீரழிஞ்சிப் போனேன் மச்சான்! 
நாத்தம் புடிச்ச வாயால 
நாயா யென் வாயை நக்கிறயே 
அந்த ஊத்தப் புடிச்சச் சாராயம் 
என்னையும் தான்
தினம் குடிக்கு மச்சான்!

- மு.முகமது பாட்சா*

12/05/2016

Thursday, 10 May 2018

வசீகரனின் ஆடுகள் 10

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓநாய்கள் போன பாதைகளில் 
ஆடுகளின் உதிரம் சிந்தி கிடக்கின்றது, 
தொலைந்து போன ஆடுகளோடு 
மேய்ப்பனின் வாழ்க்கை தேடியலைய 
தப்பிச் சென்ற ஆடுகளின் சுவாசத்தை 
புற்கள் மேய்கின்றன
மேய்ப்பனின் புல்லாங்குழல் சோகம்
மேய்ச்சல் காட்டினில் நுழைய
மீட்பரின் பாதை மட்டும் தொலைவில் 
நீண்டு கொண்டே செல்கிறது
காட்டருவி கண்ணவிந்ததன் காரணம்
மேகமென்றுதான் குறை சொல்ல
மரங்களுக்கு இங்கு உயிரில்லை
மலை புற்கள் உரசிப் பற்றியெரிகின்றன
முலை வற்றிய தாயொருத்தி
குழந்தைக்கு பாலைத் தேடுகிறாள்...
காலின் கீழ் விலாசத்தை தேடச் சொல்லி
நாடோடி பாடகன் பாடிச் செல்கிறான்
நானென்ற முகவரி 
ஆடுகளோடு ஆடாய் அலக்கழிகிறது
திரட்டிக் கோலின் வாசம் 
எட்டிப் பார்க்கும் வரை
ஓநாய்களின் 
கண்கள் ஆடுகளை மட்டுமே மேயும். 

- மு.முகமது பாட்சா*
11/05/2018

இனிக்கும் எதிளைப்பழம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

மொழியாத மௌனத்தை 
கட்டி பிடித்துக் கொண்ட நாம் 
இரைந்து கிடக்கும் 
இரவின் வில்லைகளைச் சேர்த்து 
பகலொன்றை உருவாக்க முயல்கிறோம் 
கனா மொழியில் 
பதுங்கிக் கொண்ட சில்லறைகள் 
உன்னிதழ் வனத்தின் வழியே 
எட்டிப் பார்க்கின்றன 
நம் பார்வைகளின் வெளிச்சம் 
மெல்லத் துளிர்க்கிறது 
குழைத்து வைத்த இரவு வழிந்து 
சிறகுகளைப் பூசிக் கொள்ள 
மூன்றாம் வனத்திற்குள் 
இருவர் மட்டுமே பறக்கிறோம் 
முப்பரிமாணங்களில் ஒரு கவிதை 
நம்மைப் பின் தொடர 
இரண்டாம் வனத்துப் போராளிகள் 
எழுத்துகளைச் சிறை வைக்கிறார்கள் 
முதலாம் வனத்தில் நம் 
கபர் குழிகளின் மேல் முளைத்திருக்கும் 
எதிளைப் பழங்கள் இப்போதும் 
இனிப்பாகத்தான் இருக்கின்றன 
காதல் சுவையானதுதானே ! 

- மு.முகமது பாட்சா*
10 /05 /2018

Wednesday, 9 May 2018

அப்படியே நடந்திருக்கலாம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

என் 
........சிறு 
.................வயதில்.... 
நான் திருவிழாவில் 
தொலைந்து போனதாக 
அண்ணன் கதைப்பான்! 
என்னைத் தவிட்டிற்கு வாங்கியதாக 
அம்மான் சொல்வான்! 
ஆஸ்பிட்டலில் மாற்றிவிட்டதாக 
அப்பா சிரிப்பார்! 
நான் அழுவதற்காகவே 
இத்தனை பேச்சுகள்....! 
ஆ 
.....னா 
............லு 
.................ம் 
இப்படி நடந்திருந்தாலும் 
நன்றாக இருக்குமோ? 
முதிர் கன்னியாக 
எத்தனை நாள் வாழ்வது ? !

- முகமது பாட்சா*
09 /05 /2015

கவிதைகளின் கூட்டம்

வண்ண வண்ணப் பட்டங்கள் 
காற்றில் பறக்கின்றன! 
அவரவர் எண்ணம் போல் 
உயரம் எட்டிப் பிடிக்க.... 
வஞ்சத்தில் கருவறுக்க 
மாஞ்சாக்கள் 
நூலில் மறைந்திருக்கின்றன! 
அத்தனை பட்டங்களையும் 
அறுத்தெறிந்து 
ஒற்றைப் பட்டம் உயரே எழும்பும்! 
மற்றையப் பட்டங்கள் மீண்டும் வரும் 
ஒற்றைப் பட்டத்தை அறுத்தெறிய... 

அரசியலில் இதுவெல்லாம் 
சாதாரணமப்பா! 

- மு.முகமது பாட்சா*
09/05/2016

----------------

தீ யென்று எழுதிப் பார்த்தேன் 
எழுதிய தாள் எரியவில்லை! 
நீரென்று எழுதிப் பார்த்தேன் 
எழுத்துகளும் அழியவில்லை! 
சாதி யென்ற வார்த்தையில்  
உதிரத்தின் கறைகள் ஒட்டிக் கொண்டன !

- மு.முகமது பாட்சா*
09/05/2016

---------------------

அன்னையர் தினம் பற்றி 
அழகாய்க் கவிதை யெழுதிய 
கவிஞனின் அம்மா 
மகளிடம் புலம்புகிறாள் 
மகனைப் பற்றி! 

- மு.முகமது பாட்சா *
09/05/2016

------------------------
வீணன்...

விதியின் கைகளில்
விளக்கைக் கொடுத்துவிட்டு
வெளிச்சம் தேடுகின்றான்!

மதியை மயக்கத்தில் வைத்து
விடியவே யில்லையென்று
விளக்கம் சொல்கின்றான்!

முகவரியை காற்றில் எழுதிவிட்டு
விழுங்கியது காற்றென்று..-வீணாகப்
பழிச் சொல்கிறான்!

நடக்காமல் நின்றுவிட்டு
கால்கள் நகரவேயில்லை யென்று
நாசுக்காக பகர்கின்றான்!

தான் நேரத்தை வீணடித்து
சூம்பியதை மறந்து விட்டு
காலங்கள் போனதென்று...
கண்டபடி உளறுகின்றான்!

இப்படியே போனால் ஒரு நாள்
இவனா செத்தான்! என்பது போய்
இவன்தான் செத்தானென்றே
சுரணை யற்று போகும்......-இவன்
தாய் சுமந்த தேகம்!

- மு.முகமது பாட்சா*
09/05/2015

------------------------

தமிழ் வாழ்த்து

தமிழின் காதலால்...
கல்வியின் பொட்டழித்து
கலவியில்  திளைத்து
ல"எடுத்து ஓரம் வைத்து
ள"சேர்த்து- களவும் செய்து
பின் "ள"வை  வீசிவிட்டு...
தை"சேர்த்து கவிதையாக்கி
என் தமிழின் உறவிற்கே
க"விலக்கி விதைத் தருவேன்...
என் தாய் மொழி தமிழ்தான்
தனிதென்றே!
வாழிய நீ வாழியவே

- மு.முகமது பட்சா*
09/05/2015
______________________

Popular Posts