Thursday, 30 November 2017

சுழற் கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

சுழற் கவிதை

நீள்விசும்பு நிழற்திரை காணாவெளியின் மாயை 
மாயைச் சுழற்றும் பம்பரம் மகிழம் கோர்த்தக் கனவு 
கனவின்வெளி காற்றின் மந்திரம் மழைச் சேகரம் 
சேகரம் ஆசையின் அற்பமாயை அழியும் யாக்கை 
யாக்கையின் விளைச்சல் அழிகண்டியின் பெரும்பேறு 
பெரும்பேறு பெருவாயின் கனற்குழம்பின் வெக்கை 
வெக்கை மிகும் யாக்கை ஆசையின் சொற்பக் கனவு 
கனவின் ஆசை விரி மந்திரமாயை நிழல் நீள்விசும்பு 

 நீள்விசும்பு நிழல் மந்திரமாயை விரி ஆசைக் கனவின்
கனவு சொற்ப ஆசையின் யாக்கை மிகும் வெக்கை
வெக்கை கனற்குழம்பின் பெருவாயின் பெரும்பேறு
பெரும்பேறு அழிகண்டியின் விளைச்சல் யாக்கையின்
யாக்கை அழியும் அற்பமாயை ஆசையின் சேகரம்
சேகரம் மழை மந்திரம் காற்றின் கனவின்வெளி
கனவு கோர்த்த மகிழம் பம்பரம் சுழற்றும் மாயை
மாயை காணாவெளியின் நிழற்திரை நீள்விசும்பு.

- மு.முகமது பாட்சா*


நான் இரசித்த கவிதைகள் - 98

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

ஏற்றிக் கொண்டார் வழியில் 
பேறுகாலப் பேச்சாயியை, 
வளைகாப்புக்கு விதை நெல்லை 
விற்க செல்லும் வீராயி மகனை, 
வழியில் ஏற்றிக் கொண்டார் 
கைக் காப்புடன். 

தொப்புளான் பேரனை பிடித்த 
டாணாக்காரர்களையும் 
ஏற்றிக் கொண்டார் வழியில், 
பச்சை ஓலைக்கட்ட 
பருத்தி விற்று 
பங்காளிகளுக்குப் பாக்கு வெற்றிலை 
கொடுக்கச் சொல்லும் 
இருளாயி மாமனோடு, 

"எய்யா....ஏழு குதிரை அய்யனாரே 
எழும்பி நிற்கும் சொடலைமாடா, 
சாதி வித்தியாசம் பார்க்காம 
மோட்டாரு ஓட்டும் எங்க 
மோட்டுத் தெரு கவுண்டரு 
ஏழெழு சென்மத்துக்கு நல்லாயிருக்கணும் சாமி..." 
என கூவி கொண்டு வழியில் ஏறிய 
ஏகாளிப் பேரனையும் ஏற்றிக் கொண்ட 
மோட்டுத்தெரு கவுண்டர்தான் 
வழியில், 
ஏற்றி கொன்றார்... 
ஏழு ஆண்டுகளுக்கு முன் 
தன் மகளை இழுத்துக் கொண்டு ஓடிய 
சேரியின் செகப்பி மகனை...!!! 

கவிஞர் அகன் (தி. அமிர்தகணேசன்) 
நூல் : பதிப்பு , பாதிப்பு

தொலைத்துவிடுகிறோம்



எங்காவது ஓரிடத்தில் 
ஏதாவது ஒன்றை 
தொலைத்து விட்டுதான் 
நிற்கிறோம்! 
பால் குடித்த மடியை 
தூங்க வைத்த தூளியை 
தூக்கிச் சுமந்தத் தோளை 
அரை டவுசர் நாட்களை 
சின்ன சின்ன 
சில்மிஷங்களை! 
காதல் சொன்னப் பெண்ணை 
கவிதைச் சொன்னக் காதலியை 
எத்தனை? எத்தனை? 
ஆண்டிற்கு ஒரு முறை 
நம் வயதையும் சேர்த்துதான்!

- மு.முகமது பாட்சா
30/11/2015

Wednesday, 29 November 2017

முகபடாம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

தூளியின் படிமத்தில் 
மெல்லென ஆடிக் கொண்டிருந்தவன் 
குதிரையின் படிமத்திற்கு மாறி 
ஓடத் தொடங்குகிறான் 
படிமமேயில்லாத முகபடாம் 
அவன் முகத்தில் வந்து ஒட்டிக் கொள்கிறது 
ஜாக்கியின் படிமம் 
தோள் பட்டைகளை இறுக்குகிறது 
கனவில் மட்டும் 
அவன் பறவையாக மாறி 
கற்பனை வானத்தில் சிறகடிக்கிறான் 
அவன் சுற்றி வந்த தேவதையின் முகத்திலும் 
முகபடாம் மாட்டியிருக்கிறது 
அகராதியில் முகபடாம் - 
ஜனநாயகம் என்றே விளக்கம் கொடுத்தது, 
இலக்கின் தூரம் 
வெள்ளைக் கோடா சிகப்புக் கோடா 
என்று விளங்காத தூரத்திலும் 
வழி நெடுக சிகப்பு விளக்குகள் எரிகின்றன, 
கொள்ளுக்கும் புல்லுக்கும் ஓடும் நேசத்தில் 
முகபடாம் தோலாக இருந்தாலென்ன? 
தங்கமாக இருந்தாலென்ன? 
தூளியின் படிமத்திற்கு மாறத் துடிக்கும் 
அவன் கால்கள் சோர்ந்து விழும் போது 
இறந்த நாயின் படிமத்திற்கும் மாறியிருக்கலாம். 

- மு.முகமது பாட்சா

செல்லாத நோட்டுகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

காற்றை அனுமதிக்கச் சொல்லி 
ஒருத்தன் அலறிக் கொண்டிருந்தான், 
பாக்கெட் தண்ணீரைத் தெளித்தும் 
பயனில்லை ! 
முதியோர் பென்ஷனுக்கான கார்டு 
அவர் வயதைச் சொல்லியது, 
மருத்துவமனையின் சீட்டொன்று 
அவர் வியாதியைச் சொல்லியது, 
ஒரு துண்டு சீட்டில், 
மருத்துவச் செலவின் தோராயக் கட்டணம் 
முப்பதாயிரமாம் ! 
வங்கியின் புத்தகம் , 
நேற்றில் பெற்றதாக இருபதாயிரம் காட்டியது, 
கையில், ஐந்நூறு நோட்டுகளாக ஒரு சில நோட்டுகள் ! 
வங்கியில் பணம் இல்லையாம் ! 
! ! ! 
ஆம், 
அதிர்ச்சியில்தான் செத்துப் போனார், 
அடக்கச் செலவிற்கும் பணமில்லாமல் ! 

செல்லாத நோட்டுகளில் 
ரிசர்வ் வங்கி ஆளுநரின் , 
செல்லாத கையெழுத்துகள் !

-மு.முகமது பாட்சா

ஓவியம் : முகமது பாட்சா
29/11/2016

நானென்பது......



நானென்பது 
ஒரு கவிதையாக இருக்கலாம் 
அல்லது 
நாயனத்தின் துளைகளாகவும் இருக்கலாம் 
வாசிக்கப் படும் வரை

வண்ணங்களுக்குள் நான் மறைந்திருக்கலாம் 
வானவில்லிற்குள் என்னைத் தேடிப் பார்க்கலாம் 
மின்னல்கள் வந்து நிறம் பிரிக்கும் வரை,

நிழலென்பது நானாகவும் இருக்கலாம் 
நிஜம் என்பது பொய்யாகவும் இருக்கலாம் 
நான் இறக்கும் வரை.

- மு.முகமது பாட்சா

காத்திருக்கிறாள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

இரவின் வானம் நீள்கிறது 
இடையுறுத்தும் அவன் நினைவுகள் 
தலைக் கீழாய்ப் பறக்கின்றன, 
யாக்கையின் சன்னல்கள் 
திறந்தே கிடக்கின்றன 
நொம்பலம் நோவினை செய்து 
கொத்துகின்றன 
வயிற்றினில் ஒரு தீ பற்றியெரிய 
சுவாசத்தின் காற்றுச் சுகமிழக்கிறது... 
சொப்பனங்களைத் தொலைத்த இரவினை 
நான் இப்போதுதான் பார்க்கிறேன், 
இடை நிறுத்தமில்லா பார்வையின் வீச்சில் 
நீ பட்டுவிட மாட்டாயா? 
பகலையும் நீ இரவாக்கி விடாதே... 
பாவியிவள் பைத்தியக்காரியென்றே 
பார்வைகளெல்லாம் பேசக் கூடும், 
இடை நழுவும் என் ஆடைகளின் கதை 
அவற்றிற்கு என்ன தெரியும்? 
பசலைக்காரி பார்த்துக் கொண்டிருக்கிறாள் 
பார்வையில் நீ பட்டுவிடு 
அல்லது பாழுடலையாவது அள்ளிச்சென்று 
                                  புதையிலிடு! 

- மு.முகமது பாட்சா*

ஓவியம் : பொன்வண்ணன் அவர்கள்

-

Tuesday, 28 November 2017

நான் இரசித்த கவிதைகள் - 97

அனார் க்கான பட முடிவு

பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னி 


கடற்கன்னி பாடுவதை
யார் கேட்டிருக்கிறீர்கள் 
அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல்
இருகரைகளில் எதிரொலித்து
துறைமுகங்களைத் தாண்டி விழுவதை
அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி
மதுநெடியுடன் பிதற்றுகிறான்

கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன
கரைமணலில் சிறுமிகளின் 
மடிகொள்ளாத வெண்சிப்பிகளாக

நடுக்கடலில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்களில்
மாலுமிகளின் தனியறைகளில் 
கடற்கன்னியின் வாசனை வியாபித்து 
திரைச்சீலைகள் படபடக்கின்றன

அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
படர்பாசிகளின் கீழிருந்து வெளிவரும் 
மீன்குஞ்சுப் பட்டாளங்கள் 
பிரயாசையுடன் பின்தொடர்கின்றன

அடர்த்தியான பச்சைநிற பளபளக்கும் செதில்கள்
நீர் அல்லிகளின் வேர்களைப் பின்னி
பௌர்ணமியில் இன்னுமதிகமாய் ஜொலிக்கின்றன

கற்;படுக்கைகளிடையே சுழியோடிகள்
அவளது கண்களின் கவிதைகளைக் கண்டெடுத்து 
ஆராய்ச்சிக் கூடங்களுக்கு 
எடுத்துச் செல்கின்றார்கள்
நள்ளிரவில் கடற்கன்னி
மேகங்களை வேட்டையாடுகிறாள்
அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே
பதுக்கி வைத்து
ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்

சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்துகொண்டு
நீருக்குள் நழுவும் அற்புதத்தை
தாம்மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற
கருங்கற்பாறைகள்
தம்மை அறியாமலேயே 
உருகிக்கொண்டிருக்கின்றன

உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது

மின்னல்கள் கூக்குரலிட்டுக் கூவிவெடிப்பதெல்லாம்
கடற்கன்னியின் பெயரைத்தான் என
மலைவாசிகள் நம்புகின்றார்கள்

புராதனகால கடல் அரக்கனின்
தந்திரோபாயங்களை தோற்கடித்தபடியே
பருவகாலங்களை அருளும் கடற்கன்னி
ஒவ்வொரு கடலினிலும் 
நீந்திக் கொண்டே இருக்கிறாள்
பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடிப்பாடி

- அனார் இஸ்ஸத் ரெஹானா

Monday, 27 November 2017

மௌனம் த்யானமல்ல

தொடர்புடைய படம்

காட்சி ; 1 

அவன் நடந்த பாதையில் 
ஓநாயின் நிழலொன்று விரிகிறது, 
நரிகளின் காதுகள் 
நாற்புறமும் இறைந்து கிடக்கின்றன, 
ஒரு வேட்டைக்கான முகாந்திரம் 
இருக்கைப் போட்டு அமர்ந்திருக்கிறது, 
புறாக்கள் கூடடைந்து கிடக்கின்றன, 
கள்ளிப் பூக்களின் வாசனையில் 
பூத்திருக்கும் மௌனம் 
த்யானமல்ல! 

காட்சி : 2 

அவன் தன்னை 
இரட்சகனாக அறிவித்துக் கொண்டான், 
அவன் உயர்த்திய கைகளில் 
கருணை பூப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள், 
அவனின் இதழ் வடித்த புன்னகையை 
புத்தன் இழந்திருந்தான், 
அவன் காலடியில் விழுந்து கிடந்தவர்கள் 
அவனைக் கடவுளென்றார்கள்! 

காட்சி : 3 

பிணங்களின் மேல் நின்று 
அவன் பேசிக் கொண்டிருந்தான், 
"கொல்வது பாவம்" 
புறாக்கள் 
கூடுகளைச் சமாதிகளாக்கிக் கொண்டன, 
பழரசம் அருந்தியவன், 
"பசியின் கொடுமை 
தனக்குத் தெரியும்" என்றான் 
சுற்றிலும் ஈட்டிக் கண்கள் 
கூர்ப்பாய் அவன் மேல் விழித்திருந்தன, 
எங்கிருந்தோ வரும் ரோஜாக்களின் வாசனை 
அவன் மூக்கைக் கோபம் செய்தது, 
மௌனம் சூழ்ந்து 
அவனுக்குள் பயம் விதைக்கிறது... 
மௌனம் த்யானமல்ல 
வேட்டையாடும் கண்கள்! 

- மு.முகமது பாட்சா

மாதேறிகள்


தானியங்கு மாற்று உரை இல்லை.

மாவெறி விலங்குகள் 
உலா வருகின்றன! 
இரண்டு கைகள் 
இரண்டு கால்கள்தான் 
இருப்பதாகச் சொல்கிறார்கள்! 
மத வெறிகள் சுமந்துத் திரியும் 
மாதேறிகளாம் இவை! 
பள்ளி வாசல்கள் முன்பாக 
சர்ச்சுகள் முன்பாக 
கோவில்களின் ஊடாகக் கூட 
இவைகள் திரியுமாம்...
இறைஞ்சுகின்ற 
கைகளுக்குப் பின்னால் 
குருதியின் ருசிப் பார்க்கும் 
வெட்டரிவாள் விரல்களாய் 
ஒளிந்திருக்குமாம்!
பேச்சுகளின் ஊடே 
உதிரத்தின் வாடை 
சற்றே 
வீசும் என்றே சொல்கிறார்கள்! 
எச்சரிக்கைத் தேவை! 
மனிதர்களில் கலந்துவிடாது
காத்துக் கொள்ள 

- மு. முகமது பாட்சா*

புள்ளிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

புள்ளிகள் 
கோடுகளாக மாறியப் பின்பு 
கோடாரிகளாகவும் 
மாறிவிடுகிறது ! 

புள்ளிகளுக்குள் இருக்கும் 
புள்ளிகளை 
அழிப்பான்கள் கூட 
அழிப்பதில்லை !

புள்ளிகளே 
கோள்களாகவும் 
மாறிவிடும் அபாயம் உண்டு ! 

ஒற்றைப் புள்ளியிலிருந்துதான் 
விரிகிறது இந்த உலகம், 
கூடவே,  பிரச்சனைகளும் ! 

புள்ளிகள்தானே என்று 
புறம் தள்ளிவிடாதீர்கள்...

காற்புள்ளிகளாய் மாறி, 
கேள்விக்குறிகளாகவும் 
கேள்வி கேட்கத் தொடங்கிவிடும் ! 

ஆச்சரியக் குறிகள் 
அப்போது 
ஆயுதம் எடுக்கத் தொடங்கி விடலாம் ! 

புள்ளிகளே, இல்லாத கோலங்கள் 
எப்போதுமே, 
அழகாக இருப்பதில்லை ! 

முக்கியப் புள்ளிகளென்று 
சுற்றித் திரிபவர்களில், 
முக்கால்வாசிப் பேர் 
முட்டாள்களாகத்தான் இருக்கிறார்கள் ! 

இவர்களின் பின்னால் 
சுற்றித் திரியும் செய்வினைகள் 
இல்லையென்றால் 
இவர்களெல்லாம் 
வெறும் எச்சங்களாகி
மிச்சங்களாகிக் கிடப்பார்கள் ! 

புள்ளிகள்தானே, 
என்று ,புறம் தள்ளி விடாதீர்கள், 
புள்ளிகள்தான், 
பரிமாணங்களின் ஆரம்பமும் கூட !

- மு.முகமது பாட்சா
27/11/2016
ஓவியம் : முகமது பாட்சா

Sunday, 26 November 2017

பார்வைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

தவறாக உணர்கிறாயா? 
நீ எங்கிருக்கிறாயென்பது உனக்குத் தெரியுமா? 
கடற்கரை நம்மைச் சுவாசிக்கிறது... 
கைகளைக் கை விட்டுவிடாதே 
அவை கவிதையெழுதிக் கொண்டிருக்கின்றன.

கண்களைக் கழற்றி வைத்துவிட்டு 
யாருமிங்கே நடக்க முடியாது... 
அவர்களின் பார்வை பார்வைகள் மட்டும்தான் 
காதல் இங்கே பூத்திருக்கிறது 
வாசனைகளின் வாசற்கதவு நம்மை வரவேற்க.

எல்லைகளை இடைவெளியில் வைத்திருக்கிறோம் 
பார்வைகளின் ஊடுருவலை யார் தடுப்பது? 
மாயையின் பிரமைகள்தான் எல்லைகள் 
மனதின் மொழிகளை மொழி பெயர்க்க முடியாது 
மனவலைகளில் கால் நனைக்கிறது காதல்.

- மு.முகமது பாட்சா*

பிடல் காஸ்ட்ரோ


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி மற்றும் குளோஸ் அப்

கரும்புத் தோட்டத்தில் பிறந்த குழந்தை 
கரும்பாக இனிக்கும் என்று 
யாருக்குத் தெரியும் ! 

கியுபாவின் வெளிச்சத்திற்கான 
விடிவெள்ளியைப் பெற்றெடுக்கவே 
ஸ்பெயினிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, 
தந்தை ஏஞ்சல் ரஸ் ! 

ஹவானாவில் அரசியல் கற்றவன் தான் 
பாடிஸ்டாவின் 
பதுங்கு குழிகளையும் தகர்த்தான் ! 

சேகுவேராவின் செவ்விய நண்பன் ! 
கேள்விக் குறிகளில் உட்கார்ந்து கொண்டு 
ஆச்சரியக் குறிகளை விதைத்தவன் ! 

ஆதிக்க நாடுகளை அசைத்துப் பார்த்தவன், 
அமெரிக்காவின் 
மாய வலைகளில் சிக்காதவன் ! 

அதிகாரத்தை மக்களிடம் கொடுத்து 
அடிமையாக ஆட்சி செய்ய 
இவனால் மட்டும்தான் சாத்தியமானது ! 

மக்களுக்கான தலைவன் மரணித்துவிட்டதாக, 
செய்திகள் பொய் வாசிக்கின்றன ! 

அவன் இறக்கவேயில்லை, 
உடலை மட்டுமே இழந்திருக்கிறான் ! 
இன்னமும், அவன் 
எளிய மக்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

- மு.முகமது பாட்சா 26/11/2016

ஆப்பிள்


தானியங்கு மாற்று உரை இல்லை.

'ஆப்பிள்' என்று எழுதிப் பார்த்தேன்,
மரமொன்று முளைத்திருந்தது !

கனிகளைக் காணவில்லை !

களவாடிச் சென்ற மந்திகளின் கூட்டத்தில்
என் ஆசை குரங்கும் அமர்ந்திருந்தது !

சுவை தேனென்றுதான் சுவைத்தேன்,
சுவையற்ற அப் பழங்களை ,

தின்று துப்பிய விதைகளில்
துளிர்விட்ட கன்றுகளை
காப்பாற்றி விடத்தான் 
வேலிகளும் போட்டேன்,

அத்துமீறி நுழைந்த ஆடொன்று
அத்தினையையும் மேய்ந்து விட்டது !

துளிர்த்தக் கண்ணீரை
துடைத்துக் கொள்ள எடுத்தத் தாளில்,
இப்படிதான் எழுதியிருந்தது,

'ஆப்பிள்'

- மு.முகமது பாட்சா

விஞ்ஞான வல்லரசுகள்



நுட்பத்தின் நுட்பமாய் 
பால் வீதிகளில் பயணிக்கும் 
கோள்கள்! 
விட்ட தெல்லாம் 
விட்டத்தை விட்டு விலகி 
இயந்திரத் துகள்களாய் 
அறிவியல் குப்பைகள்! 
நிலவில் கால்வைத்து 
நூற்றாண்டைக் கடத்தி 
பெருமைப் பேசும் 
வல்லரசுகள்! 
செவ்வாயில் நீரா? 
வேற்றுக் கிரகங்களில் 
மனிதர்களா? 
கேள்விக் குறிகளின் 
கேள்விகளாய் 
விடைத் தெரியா விஞ்ஞானம்! 
நிலவின் 
மீள் குடி யமர்விற்கு 
ஆள் சேர்க்கும் மோடிகளாய் 
வல்லரசுகள்... 
நிமிர்ந்து நிற்கின்றன 
ஏழ்மைகளின் முதுகில்! 
இன ஒழிப்பில் 
மார்த் தட்டிக் கொள்ளும் 
ஆயுதக் குவிப்பில்! 
வீழும் 
பொருளாதாரத்தில் 
மீளும் வித்தைத் தெரியாமல் 
நீ என்ன வல்லரசு? 
விஞ்ஞானத்தின் 
முதுகில் ஏறி 
அஞ்ஞானத்தில் பயணிக்கும் 
விஞ்ஞான வல்லரசுகள் 
இருப்பதைப் பிடியுங்கள் 
பறப்பதை 
பிறகு பிடிக்கலாம்! 

 மு.முகமது பாட்சா

Saturday, 25 November 2017

என்னருகில் நீ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம், சமுத்திரம், மேகம், வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்


என்னருகில்தான் நீயிருக்கிறாய்
நான்தான் உனைத் தேடுகிறேன்
இதயத்தின் கண்கள் மூடியே கிடக்கின்றன!

சிறு சிறு மழைத் துளிகளில்
நதிகள் பெருக்கெடுக்கின்றன
கருணை கடலில்  கலக்கிறது!

பட்ட மரம் துளிர்க்கிறது
பறவைகள் கூடு திரும்புகின்றன
வேர்களின் ஈரம் காயவேயில்லை

சிறகுகளைக் கழற்றி வைக்கிறேன்
பறவைகள் வானில் பறக்கட்டும்
பூமியே எனக்கொரு வானம்

புன்னகையைத் தொலைக்காதீர்கள்
பூக்கள் அங்குதான் பூக்கின்றன
வசந்த காலம் 
வார்த்தைகளில் உட்கார்ந்திருக்கிறது!

- மு.முகமது பாட்சா

கடிகாரத்தின் பிங் பாங்


தானியங்கு மாற்று உரை இல்லை.

கடிகாரத்தின் பிங் பாங் 
ராட்சசமாய் அலறுகிறது, 
நேரம் தின்று மனிதம் தேய்கிறது 
ஆடைகளுக்குள் திணித்துக் கொள்கிறேன் 
சாலைகள் சாக்கடையாக ஓடுகின்றன 
ஒருவரையொருவர் விழுங்கிக் கொள்கிறோம் 
பொறாமைக் கண்கள் புறமுதுகில் விழித்திருக்கிறது 
ஒப்பனைகள் ஒழுகியுருகி 
அவசரம் அலுவலகத்தின் வாசற்கதவைத் திறக்க 
நாற்காலிகள் அப்படியே விழுங்கிக் கொள்கின்றன 
கம்ப்யூட்டரின் கருப்பு வெள்ளை பட்டன்களில் 
ஈ மொய்க்க 
அவசர பந்தாக்கள் மிரட்டல் கொடுக்கின்றன 
வாழ்க்கையின் மிச்சங்கள் 
வசவுகளைத் தாங்கிக் கொள்கிறது 
சுவைக்காத உணவு உயிரைத் தாங்கி பிடித்துக் கொள்ள 
சுற்றும் பூமி நிற்க நாங்கள் சுற்றுகிறோம் 
துறவு என்பது போலித்தனம் 
சுயம் ஒட்டிக் கொண்ட சுதந்திர மிச்சங்கள், 
கடிகாரத்தின் பிங் பாங் 
சுவாசக் காற்றைச் சுதந்திரமாக்குகிறது 
ஒடிந்த தேகத்தை நிமிர்த்திக் கட்டுகிறது 
வாசலில் நிற்கும் அழகிய புன்னகை, 
ஓடி வந்து ஒட்டிக் கொள்கின்றன அமிழ்த முத்தங்கள் 
கடிகாரத்தின் பிங் பாங் 
சந்தோஷத்தை அணைக்க அனுமதிக்கிறது 
விரல்கள் கோதிய வருடலில் ஒரு கனவு சுவைக்க 
அடுத்த யுகத்தின் விடியலுக்காய் 
கடிகாரத்தின் பிங் பாங் இப்போது டிக் டிக் டிக்

- மு.முகமது பாட்சா

Thursday, 23 November 2017

மிஞ்சிய எழுத்துகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.


படிமத்திற்குள் உட்கார்ந்திருந்த
காகமொன்று தலை சாய்த்துப் பார்க்கிறது,
எழுத்துகளை 
கொறித்துக் கொண்டிருந்த குருவிகள்
பறந்து போகின்றன,
சிதறிக்கிடந்த எழுத்துகளைக் கூட்டி
வார்த்தைகளாக்குகிறது காற்று,
ஜென்னும் சூஃபியும் கூட
மௌனமாகக் கடந்து போகிறார்கள்,
காதலனொருவன் காதலிக்காக
சில வார்த்தைகளை 
களவாடிக் கொண்டு செல்கிறான்,
அரசியல்வாதி மிதித்துவிட்டுப் போனதில்
சில எழுத்துகள் அழிந்து போயின,
அவலப் பிழையென ஒரு சில வார்த்தைகளை
புலவர்கள் எரித்துவிடுகிறார்கள்,
சில வார்த்தைகள் மட்டும் சிறைக்குப் பயந்து
பதுங்கிக் கொண்டன,
இப்போது காகமும் நானும் மட்டும்தான் 
தனியாக இருக்கிறோம்
காகத்திடம் சில எழுத்துகளைக் கொடுத்துவிட்டு
எஞ்சிய எழுத்துகளை சேர்த்துப் பார்க்கிறேன்
என் பெயர் மட்டும் மிச்சமாய் இருந்தது. 

- மு.முகமது பாட்சா*

நான் இரசித்த கவிதைகள் - 96



நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை 
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட 
உயரமாய்
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை 
அழைக்கிற காற்று
.
என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச் நச் என்று 
ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும் 
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப்போனவை
.
உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
.
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக 
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி
எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்
.
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது
.
கவிதாயினி ஊர்வசி

Wednesday, 22 November 2017

காட்சி மயக்கம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அந்தத் தந்திரக்காரன் 
தன் விரல்களை நீவித் திறந்தவுடன் 
பூங்கொத்தொன்று கையில் இருந்தது, 
தொப்பியைக் கழற்றித் துழாவினான் 
புறாவொன்று பறந்தது, 
காட்சி மயக்கத்தில் 
கண்களைக் கழற்றி வைத்துவிட்டு நகர்கிறேன், 
ரோஜாவின் செடிக் கூட்டொமொன்று 
அழகை விரித்து மணம் செய்கிறது, 
அதன் வேர்களில் 
மண்வாசனை மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது, 
அரசனின் அலங்கார மாளிகை முன்பாக 
அடிமைகளின் கூட்டம் 
ஆடம்பரம் கண்டு வாய்பிளந்து நிற்க... 
இறந்துவிட்ட அரசனுக்குத்தான் 
இறுதிச் சடங்குகள் நடந்தன.... 
மண்ணறைக்குள் 
இப்போது மக்கிக் கிடக்கிறான் மன்னன், 
சமாதி மட்டும் பளிங்கினால் பவிசு காட்டுகிறது... 
அந்தத் தந்திரக்காரன் 
தன் விரல்களை நீவித் திறந்தவுடன் 
பூங்கொத்தொன்று கையில் இருந்தது, 
தொப்பியைக் கழற்றித் துழாவினான் 
புறாவொன்று பறந்தது, 
காட்சி மயக்கத்தில் 
கண்களைக் கழற்றி வைத்துவிட்டு நகர்கிறேன்.

- மு. முகமது பாட்சா*

சரியாக விளையாடத் தெரியாதவன்

தொடர்புடைய படம்

சீட்டுக் கட்டுகளை 
கலைத்துப் போட்டுவிட்டு 
உட்கார்ந்திருக்கிறோம் 
சீட்டுகள் பரிமாறப் படுகின்றன 
சீட்டுகளை 
அடுக்கும் போதுதான் தெரியும் 
ஆட்டம் எப்படி நகருமென்று 
ஒரு துளி விஷமாய் 
மது உள்ளிறங்குகிறது.... 
எப்படியும் ரம்மி 
யாருக்கும் உடனே சேர்ந்துவிடாது, 
அத்துணைப் பேருமே 
நல்ல ஆட்டக்காரர்கள்.... 
"ஜோக்கர்" - அஃதென்ன 
படிமக் குறியீடென்றே தெரியவில்லை, 
அரசனையும் கூடச் சில நேரம் 
இறக்கி விடுகிறார்கள், 
நல்ல ஆட்டக்காரன் எப்போதுமே 
புன்னகையைத் தொலைப்பதில்லை, 
குறிப்பறிந்தால் 
சீட்டுகள் கீழே இறங்கித் தொலைக்காது 
பலவீனம் மட்டுமே 
மதுவின் கோப்பையில் 
எப்போதும் அமர்ந்திருக்கும், 
விடுதியின் மூலையில் 
எங்காவது எவனாவது 
அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தால் 
அவனைப் பார்த்து நகைக்காதீர்கள், 
அவன்தான் 
வாழ்க்கையின் படிமக் குறியீடு 
"சரியாக விளையாடத் தெரியாதவன்".

- மு.முகமது பாட்சா*


Tuesday, 21 November 2017

அம்மம்மாவின் இரகசியங்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

அஃகப் பானையில்தான்
அடங்கியிருந்தது 
அம்மம்மாவின் இரகசியங்கள்,
சுருட்டி வைத்ததாய்
சில நூறு நோட்டுகளும்,
சில்லறையாக
சில தங்கக் காசுகளும்,
தாத்தாவின் கடிதமொன்றும்
சூதானமாய்
சுருக்குப் பையில் இருந்தது,
பேரனுக்கான அரைஞாண் கயிறும்
அடக்கமாக அங்குத்தானிருந்தது,
அத்துணையும் எடுத்துவிட்டு
எட்டி துழாவிப் பார்த்தவர்கள்
வேறொன்றும் இல்லையென்றே
அங்கிருந்து நகர்ந்தார்கள்,
அவள் பட்ட அவலத்தின் 
வெறுமை  இன்னமும்
அஃகப் பானையினடியில்
அப்படியேதான் ஒட்டி இருந்தது.

- மு .முகமது பாட்சா* 


Monday, 20 November 2017

நான் ஊமையல்ல

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நான் பேச முடியாதென்று 
யார் சொன்னது? 
என் நாவினை அசைத்து 
காற்றினைச் செலுத்தினால் 
வார்த்தைகள் வந்து விழப் போகிறது, 
அதைத்தானே 
நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள், 
என் காதுகளுக்கு 
உங்களின் மொழி தேவைப் படவில்லை 
அதனால்தான் 
அதைச் சாத்தி வைத்திருக்கிறேன், 
காற்றின் மொழிகள் அதிகமானால் 
கலவரங்கள் கூடிவிடுகிறது, 
வார்த்தைகளை இரைத்துவிட்டு 
நீங்கள் பொறுக்கிக் கொண்டிருப்பதை 
நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், 
மனதிற்குள் உட்கார்ந்திருக்கும் வார்த்தைகளை 
வடி கட்டி என்னால் எழுதிவிட முடியும் 
உதிர்த்துவிட்ட வார்த்தைகளை 
உங்களால் திருத்தம் செய்ய முடியாது, 
எரியும் வார்த்தைகளை 
எப்படித்தான் நீங்கள் அணைக்கப் போகிறீர்கள்? 
நான் ஊமையென்று சொல்வதால் 
எனக்கொன்றும் கவலையில்லை.... 
என் காதுகளை 
நான் சாத்தியே வைத்திருக்கிறேன். 

- மு. முகமது பாட்சா*

Sunday, 19 November 2017

நீ நான் ஒன்று - மீள்வடிவக் கவிதை (REVERSIBLE POEM)

மீள்வடிவக் கவிதை (reversible  poem  )
---------------------------------------------------------
தானியங்கு மாற்று உரை இல்லை.

நீ நிலம் அழகு
நிரந்தரம் பனிப் பொழில்
மின்னும் விழி இசை
கனவு மந்திரம் கார்முகில்
விரல்கள் கை நீவும் தந்திரம்
அகலிடம் சுழலும் பிரமை
நீ நான் ஒன்று
ஓங்கிசை மின்னல் சுகம்
ஓடும் நதி கணப்பு
ஒருதுளி முத்துச் சிப்பியில்
மலரிசை மயங்கும் வண்டு
மாமலை மேனி சுகம்
திருடும் இதழில் தேன்துளி
சூட்சமம் பார்வையில் சொக்கும்
வதனம் பிம்பம் மின்னும்
       ௦௦௦
மின்னும் பிம்பம் வதனம்
சொக்கும் பார்வையில் சூட்சமம்
தேன்துளி இதழில் திருடும்
சுகம் மேனி மாமலை
வண்டு மயங்கும் மலரிசை
சிப்பியில் முத்து ஒருதுளி
கணப்பு நதி ஓடும்
சுகம் மின்னல் ஓங்கிசை 
ஒன்று நான் நீ
பிரமை சுழலும் அகலிடம்
தந்திரம் நீவும் கை விரல்கள்
கார்முகில் மந்திரம் கனவு
இசை விழி மின்னும்
பொழில் பனி நிரந்தரம்
அழகு நிலம் நீ

- மு. முகமது பாட்சா*

இலக்கணப் பிழை

தானியங்கு மாற்று உரை இல்லை.

நீ கொடுத்த கடிதத்தில் 
சந்திப் பிழை அதிகம். 
நம் 
சந்திப்பிலும் பிழை அதிகம்! 
வல்லினம் மிகா இடத்தில் 
வல்லினம் மிகுகிறது. 
உனது 
அதிகாரம் போல்! 
குறிலை நெடிலாக்கினாய் 
எழுத்தில் மட்டுமல்ல 
உன் குரலிலும் தான்! 
தொடர் புள்ளிகள் 
வருமிடத்தில் 
முற்றுப் புள்ளிகளை 
விதைத்திருக்கிறாய்! 
காதலுக்கும் சேர்த்தே! 
எழுத்தின் அதிகாரம் 
கட்டளைகளாக... ? 
என் நேசம் 
ஆச்சரியக் குறியில் 
குவிந்திருக்க! 
வார்த்தைகளின் இடைவெளி 
எழுத்துகளில் நுழைந்து 
வார்த்தைகளை 
சிதைத்துச் சிரிக்கிறது. 
உன் நேசமும் தான்! 
மொத்தத்தில் 
உன் கடிதம் போலவே 
நம் காதலும் 
இலக்கணப் பிழைதான்! 

- மு.முகமது பாட்சா
19/11/2015

Saturday, 18 November 2017

நழுவிய படைப்புகள்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வரைதல்

நீ நடந்து போக 
பாதையில்லையென்று 
கவலைப் படாதே 
நீ நடந்தால் அதுவே பாதை 

அழகான வார்த்தையை 
அருமையாகச் சொன்னவன் 
ஓர் ஓவியனும் கூட 

அவன் விரல்கள் பிடித்த 
தூரிகைகள் 
கருணையைப் பேசின 

மனிதம் வழிந்த ஓவியங்கள் 
மனதில் உயர்த்தியது 

அவனும் 
கவிதைகள் எழுதினான் 

அதிகாரம் 
அவனிருக்கையில் அமர்ந்தபோது 
ஒடிந்து போயின தூரிகைகள் 

வண்ணங்கள் 
ஒரே நிறத்தை 
வாரி பூசிக் கொண்டன
அவன் ஓவியங்கள் 
கல்லறைகளுக்குள் 
பதுங்கிக் கொண்டது 

அவற்றிற்கு மட்டுமே தெரியும் 
அவன் வரலாற்றை 
இனி யாராலும் 
மாற்றியெழுத முடியாதென்று 

படைப்புகளும் சில நேரம் 
அரிதாரம் பூசிக் கொள்கின்றன 

பயனற்ற 
அவன் படைப்புகளின் கீழ் 
இப்போதும் இருக்கிறது 
அவனது அதிகாரத்தின் பெயர் 
ஹடால்ப் ஹிட்லர் 

- மு. முகமது பாட்சா

ஓவியம் - ஹிட்லர்

நீ கொடுத்த பரிசு




நீ வீசி யெறிந்து 
உடைத்த 
கண்ணாடி கோப்பையின் 
சிதறல்களில் 
என் மனமும்... 
சிதறிக் கிடப்பதை அறிவாயா? 
கோப்பையின் சிதறல்களில் 
நீ வீசிய வார்த்தைகளும் 
ஒட்டிக் கொண்டு... 
எதைக் கூட்டி , எதை 
குப்பையில் போட போகிறாய்? 
உடைத்த கோப்பையில் 
என் நேசமும் 
உன் பாசமும் ஒட்டி யிருந்ததை 
அறிவாயா? 
உனக்கு 
வெறும் கோப்பையாகத் தெரிந்தது 
எனக்கு 
நம் காதலாகத் தெரிந்தது! 
நீ மறந்து விட்டாய்.... 
....அதுதான் நீ கொடுத்த முதல் பரிசு!.....

- மு.முகமது பாட்சா

Friday, 17 November 2017

நிராசை பயிர்கள்

அடிமை மனிதர்கள் க்கான பட முடிவு

கோடிட்ட இடங்கள்
நிரப்பப் படாமல் அப்படியே இருக்கின்றன
கோடுகள் மட்டும் 
வளர்ந்து கொண்டேயிருக்கிறது
இரைந்து கிடந்த எழுத்துகளெல்லாம்
வாக்குறுதிகளாக மட்டும் ஜொலிக்கின்றன
கோபங்களை புதைத்தவிடத்தில்
கள்ளிச் செடிகள் முளைத்து நிற்க....
கனவுகளாய் விரிந்த நிராசைகளை
புறாக்களின் கால்களில் கட்டிப் பறக்க விடுகிறோம்
புத்தனின் கொண்டை
எங்களின் ஒவ்வொருவருக்குள்ளும்
முளைத்திருப்பதாய் அகிம்சை போர்த்திக் கொள்கிறோம்
கால்களை வெட்டிச் சென்றவர்கள்
நாங்கள்  நடப்பதற்குப் பயிற்சி அளிக்கிறார்கள்
போதி மரத்தினில் தொங்கும் விழுதுகளில்
கழுத்தின் கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன
அண்ணாந்து பறக்கும் நம் தேசியக் கொடி
சற்று குனிந்து பார்த்தால் நன்றாக இருக்கும்

- மு.முகமது பாட்சா*





Thursday, 16 November 2017

எது வெளிச்சம்?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

கனவுகளை பொறுக்கிக் கொண்டிருந்தவன்
நிஜங்களை  தேடிக் கொண்டிருந்தான்
வெளிச்சம் கிடைக்காத ஏக்கம்
பார்வையைப் போர்த்தியிருந்தது
'வாழ்க்கையின் சூனியத்தில், தான்
வசமாய் மாட்டிய சிலந்தியென்று'
 பாட ஆரம்பித்தான்
தூங்கிக் கொண்டிருந்த சூஃபிக் கிழவன்
அவனைப் பார்த்து சிரித்தான்
'வேதனையெல்லாம் வேடிக்கை' என்று
அவன் மீண்டும் பாடினான்.
நீ எதைத் தேடுகிறாய் என்றான் கிழவன்
வெளிச்சத்தை என்றவன் வேதனையில் சிரித்தான்
நீயே வெளிச்சம்
உனக்கெதற்கு வெளிச்சம் என்ற கிழவனை
நீயொரு பைத்தியம் என்றான் பாழிருட்டுக்காரன்
'பூமியில் எதுதான் வெளிச்சம் ?' 
'சூரியன்' என்றான் நிலவு என்றான், விளக்கு என்றான்
'கண்ணை மூடினால் காணாமல் போவதா வெளிச்சம்?
கண்களைத் திறந்துவை 
நீயேதான் வெளிச்சம்' என்ற கிழவன்
அவன் கண்களை விட்டு நகர்ந்து கொண்டிருந்தான்.

- மு.முகமது பாட்சா*




நான் இரசித்த கவிதைகள் - 95

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

காணாமல் போன தெரு
-----------------------------------------
கரித்துண்டால் பால் கணக்கெழுதிய
ரெங்குத் தாத்தா 
கைலாசம் போய்ச் சேர்ந்து விட்டார்.
அச்சு அச்சாக 
வரட்டி தட்டச் சொல்லித் தந்த 
கோடி வீட்டு அத்தைக்காரி
மணமுடித்துப் பட்டணம் போன பின் 
ஊர்ப் பக்கம் திரும்பவில்லை.
கடுங்காப்பியாச்சும் குடுடி தாயே என்று 
மருமகளிடம் சதா கெஞ்சிக் கொண்டு கிடந்த 
எதிர் வீட்டு ஆவுடையம்மாளின் பேரன் 
அவள் மரணித்த செய்தி கிட்டிய கையோடு 
அமெரிக்காவிலிருந்து வந்திறங்கி 
கிழவியின் பெரிய திண்ணை வீட்டை
வந்த விலைக்கு விற்றுவிட்டுப் போனான்.
வேப்பம்பழங்களுக்கும்
கொடுக்காப்புளிக்கும்
என்னோடு சண்டையிட்ட 
மூன்றாவது வீட்டு வேணியக்கா 
புருஷனுடன் போட்ட சண்டையில்
அரளிவிதை அரைத்துக் குடித்து மாண்டு போனாள்.
எல்லாருந்தான் போய்ச் சேந்தாச்சுல்ல 
இந்த முட்டுச்சந்துல 
என்ன வச்சுக் கெடக்குன்னு
இங்க உக்காந்திருக்க...
பம்பாய்க்குப் 
பஞ்சம் பிழைக்கப்போன என் 
பகட்டுக்காரப் பிள்ளை 
இரைந்து கத்துகிறான்.
இந்த முட்டுச்சந்துக்குத் துணையா
நானாச்சும் இருந்துட்டுப் போறேன்...
என்றெனக்குள் முனகிக் கொள்கிறேன்.
*
பிருந்தா இளங்கோவன்

Popular Posts