Wednesday, 31 May 2017

எனக்கான தெரு

my street my walk painting க்கான பட முடிவு

எனக்கான தெருவில் 
போய்க் கொண்டிருக்கிறேன்! 
கல்லெறிந்தவன் சொல்கிறான் 
அது 
தனக்கான தெருவென்று! 
வழக்காட விருப்பமின்றி 
நகர்ந்தாலும் 
கணக்காக 
வம்பு சண்டைக்கிழுக்கிறான்! 
கடன் காரனாக 
இருக்க வாய்ப்பேயில்லை! 
உறவுக்குள் சொல்லிக் கொள்ள 
அப்படி 
ஒருவன் இல்லவே இல்லை! 
எதற்காக இந்த நிலையென்றால்... 
தனக்கான பொழுதுப் 
போகவில்லையென்கிறான்! 
எனக்கான வேலைப் பார்க்க.. 
நான் 
நிச்சயம் போக வேண்டும்! 
அவனாக 
களைத்துப் போகும் வரை... 
அவன் அவனாகவே 
இருந்துவிட்டுப் போகட்டும்! 

- மு.முகமது பாட்சா

சுகப் பிரசவம்


No automatic alt text available.

தாள்களின் சயனத்தில் 
கவிதைகள் மரணித்து நிற்க 
வார்த்தைகளைத் தேடியலையும் 
மொழிச் சூன்யத்தில் 
நொம்பலம் 
முதுகுத் தண்டில் சில்லிட்டு 
முதுகுருக் காணாச் சங்கத்தின் 
கடைவாய்நக்கித்தன மொழி 
அயர்சியில் வந்த உறக்கத்தின் 
சொப்பன மொழிகளில் 
எட்டிப் பார்க்கும் எள்ளுதலாய் 
ஒரு கவிதை! 
துள்ளியெழுந்து 
துயிலெழுப்பிய அத் தாள்களில் 
தூரிகை நர்த்தனமிட நிம்மதி 
மூச்சு விடும் கவிதையின் 
சுகப் பிரசவம்! 

மு.முகமது பாட்சா

ஓநாயைக் காதலி

incredible love painting க்கான பட முடிவு

மௌனத்தைப் பிழிந்து வைத்துக் கொண்டு 
பேசச் சொல்கிறாய்.. என்ன பேசுவது ? 
தீப்பற்றியெரியும் வீட்டிலும் உன்னை வாசிப்பேன் 
உன்னால் முடியுமா? 
என் கவிதை பரந்து கிடக்கிறது 
குறிப்பிட்ட மீட்டருக்குள் அடைப்பது சிரமம் 
நான் சிருஷ்டித்த வானத்தில் 
குருவியாகக் கூட உன்னால் பறக்க முடியாது... 
ஏழு கடல், ஏழு வானம் கடந்து செல்ல முடியாதது 
கற்பனையின் பற்றாக்குறையாக இருக்கலாம், 
பறந்து கடந்துவந்தால்தான் 
என்னிதயத்தைத் தொட்டு நீ ஸ்பரிசிக்க முடியும்... 
காதலென்பதை 
கடித்துக் காயம் செய்து கொள்ளும் மாயம் என்றால் 
நீ எங்காவது வனத்திற்குள்ளோடி 
ஓர் ஓநாயைக் காதலித்துக்கொள் ! 
நான் என் இளவரசனை தேடிக் கொண்டிருக்கிறேன்... 

- மு.முகமது பாட்சா

Tuesday, 30 May 2017

முடிவுக்கு வந்தது



sad   painting க்கான பட முடிவு

இரவினைக் கொழுத்திவிட்டுச் செல்கிறேன் 
ஒரு யுத்த களம் கண் முன் விரிகிறது 
நிகழ்காலத்தில் உட்கார்ந்து கொண்டு 
ஏளனம் செய்கிறது கடந்த காலம் 
எதிர்காலம் நோக்கி ஓடி ஓடியே 
அங்கேயேதான் இன்னமும் நிற்கிறேன் 
கால்களெல்லாம் களைத்துவிட்டதாக 
ஓட்டத்தின் நிதானம் சொல்கிறது... 
கண்களின் நிறம் மங்கிவிட்டதென்று 
நேற்றுதான் அவள் சொன்னாள் 
இருக்கலாம் 
அவள்கூட யாரோ அவனாகவே தெரிகிறாள் 
சப்தக் கூட்டலில் குரைப்பொலி மிகைக்கிறது 
ஆகாரத்தை விலக்கிய விரதம் 
இன்றோடு முடிவிற்கு வரலாம் 
அலெக்ஸாண்டராய் கைகளை விரிக்கிறேன் 
ஸ்பரிசித்த ஒரு கை 'ப்..ச்' சென்று உச்சுக் கொட்டுகிறது 
அடர் மௌனம் சூறாவளியை எழுப்பலாம் 
அப்படியெதுவும் நிகழ்ந்துவிடவில்லை 
சின்னதாய் அங்கிங்கு விசும்பலிசை 
'போய்ச் சேர்ந்ததே நல்லது' - யாரோ சொல்கிறார் 
ஆம், ஒரு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது !

- மு.முகமது பாட்சா

காத்திருக்கிறாள்



முத்துக் குளிக்கப் போனவன் 
மூழ்கி விட்டதாகத் தான் சொல்கிறார்கள்! 
மூன்றாம் சாமத்தில் 
ஒரு பெண்ணோடு அமிழ்ந்ததாய் 
பார்க்காதவன் சொல்லிவிட்டுப் போகிறான்! 
பிணம் வருமென்றே பாத்திருக்கிறாயா? 
யென்று ஞொள் விதைத்து ஒருவன்! 
சுறாக்களின் செரிமானத்தில் 
மொத்தமாய்ச் சிதைந்திருப்பானோ! ? 
பாவம் பொம்மாயி... 
புதுப் புருசனை, இனி தேடவேண்டும்! 
காத்தானின் கட்டுமரக் கட்டுவலைக்குள் 
கட்டாயம் சிக்கிக் கொள்வாள்... 
துடுப்புப் போட்டவனுக்குத் தொடுப்பு ஒன்றும் 
புதுசல்ல! 
கட்டுக்காரிதான் இவளும்... 
கட்டாயம் இவள் வலையில்தான் 
கட்டுமரங்கள் சிக்கிக் கொள்ளும் ! 
காரியம் முடியட்டும் 
கச்சிதமாய் நாமும் கணக்குப் போடுவோம்! 
சுற்றிச் சிதறும் வார்த்தைகளின் வலையில் 
இன்னமும் சிக்கிக் கொள்ளாமல்தான் இருக்கிறாள் 
பொம்மாயி! 
கட்டாயம் வருவான்.... 
முத்துக் குளிப்பவன் மூழ்கிப் போகமாட்டான் 
யென்ற நம்பிக்கையோடு! 

- மு.முகமது பாட்சா

Monday, 29 May 2017

இனியுமா?

Related image

சுவர்களின் விரிசல்களை 
பூசிக் கொண்டுதான் இருக்கிறோம், 
அதனுள்ளிருந்து 
யாரோ உடைத்துக் கொண்டும் இருக்கிறார்கள், 
உடைசல்களின் விரிசல்களில் வழியும் 
கதறல்களை 
தேசிய கீதமென்றே மொழி பெயர்க்கிறார்கள், 
எங்களின் உணவுத் தட்டுகளையும் 
பறித்துக் கொண்டவர்கள் 
அடையாளத்தைச் சுமந்து சென்றால் 
குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்துகிறார்கள்... 
கேள்விகள் கேட்பது 
தேசிய குற்றமாகிப் போனது... 
விழிகளை மூடி உறங்கிக் கிடந்தால் 
குழிகளில் இறக்கிவிடும் அபாயமுண்டு... 
தேசிய உணர்விலிருந்த ஆச்சரியக் குறி 
மெல்லக் குனிந்து 
கேள்விக் குறியாக மாறிப் போனது, 
வட நாட்டு நாய்களின் இறைச்சிப் பசிக்கு 
இனியும் நாங்களேன் 
குனிந்து குண்டியைக் காட்ட வேண்டும் ? 
வீட்டுக்கொரு விளக்குமாறு எடுத்தாலே போதும் 
நாய்களையெல்லாம் விரட்டிச் சாகடிக்க ! 

- மு.முகமது பாட்சா

அவர்களுக்கு எப்படித் தெரியும் ?

Image may contain: 1 person, indoor

காற்றைப் பிடித்து 
பைகளில் போட்டுக் கொண்டேன் 
சந்ததிகளுக்குச் சேர்த்து வைக்க!

போன்சாய் மரங்களின் வீதியில் 
மனிதர்களும் 
போன்சாய்க் குள்ளர்களாகதான் மாறக் கூடும்! 

வனங்களின் ஒளிப் படங்களை 
சேகரத்தில் சேர்த்துக் கொண்டேன்... 
பெயரன் பெயர்த்திகளுக்கு 
வனங்கள் கிடைக்காமல் போகலாம்!

சுவை நரம்புகள் செத்து வீழும் காலத்தில் 
அவர்களுக்கான உணவுகள் அழியாமல் 
எப்படிப் பதனம் செய்வேன்?

எந்திரங்களின் எந்திரன்களுக்கு 
மருந்து வில்லைகளே ருசியாக்கக் கூடும்!

ஆட்டிறைச்சியை 
எப்படிதான் கடித்திழுத்தார்களோ? 
என வியப்பர் சந்ததிகள்! 

துடைக்கும் தாளில் குளிக்கும் அவர்களுக்கு 
தாகம் என்பதும் 
செத்துப் போய் இருக்கலாம்! 

மரங்களை வெட்டி மலடாக்கிய எங்களை 
அவர்கள் சபிக்கவும் கூடும்!

நதிகளைத் தொலைத்துவிட்டு 
மணல்களை வாங்கிதான் 
நகரங்களை அமைத்தோம் என்பது 
அவர்களுக்கு எப்படித் தெரியும்? 

- மு.முகமது பாட்சா

கோணாய்க் கூட்டம்

இரத்தக் களரியில் 
உதிரம் குடித்து நிற்கும் 
கோணாய்க் கூட்டத்தில்... 
சமாதானம் பேச 
வைரிகளின் தலைவன் 
வெண் கோடியேந்தி 
வருகிறானாம்! - மிருகாரி

No automatic alt text available.விருந்துக்கு  அழைத்திருக்கிறான்...                             
சிறுத்தைகளின் துணையோடு! 
மான் கறி விருந்திற்கு 
நரிதான் சமையல்காரன்! 
கூட்டத்தைக் கூட்டிக் காட்ட 
குரங்கன்தான் பொறுப்பு! 
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் 
இலவசமாய் 
புல்லுக் கட்டு வினியோகம்! 
ஓ நாய்கள் 
பல் துலக்குகின்றன... 
அடுத்த ஒரு விருந்திற்கு! 



- மு.முகமது பாட்சா

வார்த்தையொன்று

தொடர்புடைய படம்

வார்த்தையொன்று 
அநாதையாகக் கிடந்தது 
வாரியணைத்துக் கொண்டாய் 
முத்தப்பால் கொடுத்து 
முதுகு நிமிர்த்தினாய் 
அது கவிதையாக வளர்ந்தது 
கிளைகளில் பூத்த இலைகளில் 
உன் பெயரை எழுதினாய் 
பூக்களை மடியில் சொறிந்தது 
பறவைகள் வந்ததும் 
நீ கிளம்பிவிட்டாய் 
அவை இசைக்கும் பாடலில் 
அந்த வார்த்தை இன்னமும் இருக்கிறது 
காற்றில் அவை உன்னைச் சேரலாம் 
சன்னலைத் திறந்து வை 

- மு.முகமது பாட்சா 

Sunday, 28 May 2017

ஞாயமா?

கண்ணகி க்கான பட முடிவு

நெகிழ மெடுத்து வீசிய 
கண்ணகியின் சொற் பரலில் 
பரமின்றித் தவித்த கோவன் 
கோவலனின் பிறவிழைச் சுமந்தே 
மறித்தல் ஞாயமெனில்... 
மாதவியின் மாதவிப்பை எளிதில்கடந்து 
நியாயம் சுவைத்த பத்தினியாள் 
மதுரையை எரித்ததும் பாவமன்றோ? 
கொற்றவனைக் கூற்றுவன் பறித்த நொடி 
பட்டெனப்போன பட்டமகிஷியின் 
அன்பில் துளியாமோ 
கண்ணகியின் கனல் நெருப்பு ! 

- மு.முகமது பாட்சா

சில்லரைக் காசுகள்


கூட்டுப்புழு க்கான பட முடிவு

பட்டாம் பூச்சிகளுக்கும்
சிறகு முளைத்த பிறகு
புழுவாய் இருந்தது
மறந்துப்போகிறது!

சிலந்தியின் வலையில்
சிக்கிய பூச்சிக்கும்
பிழைத்துக் கொள்வோம்
என்ற; நம்பிக்கையிருந்தால்
வலையை சிதைத்து
பிழைத்துச்செல்லும்!

நட்பை மறந்தவனும்
நன்றியை மறந்தவனும்
கொலைக் காரர்கள்தான்!

*உயிர் போன 
உடலைப் பார்த்து
அழும் உறவுகள்
சவத்தின் உடமைகளுக்காக
அடித்துக் கொள்கின்றன!
"அட...நாளைப் போகும்
சவங்களே!"

*விலை மகள்களின் மார்பில் 
பதுங்கிய காசுகளும்
கோயில் உண்டியல்களில்
புகலிடம் தேடுகின்றன!

- மு.முகமது பாட்சா

இது சரியா பெண்ணே !

No automatic alt text available.

மகிழ்வின் இராகத்தை 
இசைகூட்டிச் சுரம் கூட்ட 
விரல்களின் வித்தையில் 
வீணையின் தந்திகள் அதிர 
நர்த்தனமாடும் 
சந்தோச நீர்மைக் குளியலின் ஊடே 
அதிர்ந்த நரம்புகளின் 
நரம்புகள் புடைத்து.. 
சிலீரென்றறுந்துத் தன் உயிர் மாய்க்க 
மரிக்கும்முன் 
தெரித்து வீழ்ந்த அக் கம்பி 
மீட்டியவன் விழிப்பாவை உரசி 
உதிரம் மீட்டி நகரும் வேளையில் 
மகிழ்வின் இராகம் மடங்கி 
சோகத்தின் இராகத்தை 
உச்சம் தொட்டு அலறியது போல் 
காதலின் மகிழ்வை மாய்த்தே... 
நீ கொடுக்கிறாய்ப் பெண்ணே... 
உன் திருமண அழைப்பிதழ்! 

-மு.முகமது பாட்சா

Saturday, 27 May 2017

ஹிட்லரின் பின்குறிப்பு

hiter dead க்கான பட முடிவு

சில பக்கங்களில் 
ஹிட்லர் காணாமல் போகிறான், 
அடிக் குறிப்பில் அவன் இறந்துவிட்டதாக 
செய்திக் குறிப்பொன்று இருக்கிறது... 
நேசப் படைகள் 
சுட்டுவிட்டதாகச் சொன்னார்கள், 
அவனும் 
மக்களுக்காகத்தான் உள்ளே நுழைந்தான், 
அதிகாரம் அவனை ஆட்சி செய்தது 
அதிக பட்சம் குண்டுகளில்லாத பிஸ்டலுக்குள் 
ஆணவம் உட்கார்ந்திருந்தது, 
முதல் கொலையில் பயந்து கிடந்தவன் 
அடுத்தடுத்த கொலைகளில் 
ஏளனம் இழைத்துக் கொண்டான், 
பயம் அவனுக்கு மிகவும் பிடித்த ஆயுதம் 
அதை விதைத்துத்தான் 
ஆதாயத்தை அறுவடை செய்தான், 
ஓநாயை அடிக்க ஊர் திரண்டது 
பயம் 
இப்போது அவனைப் பார்த்துச் சிரித்தது, 
அழுதிருப்பான் யாருக்கும் தெரியும் ? 
அவன் முகத்தில் 
அவனே உமிழ்ந்து கொண்டதை 
யார்தான் பார்த்திருக்க முடியும் ? 
பயத்தால் - ஹிட்லர் காணாமல் போனான் 
பயத்தால் - ஹிட்லர் சுட்டுக் கொண்டான் 
பயத்தால் - ஹிட்லர் சுடப்பட்டான். 

பின்குறிப்பில் ஏதாவதொரு ஹிட்லர் 
இப்படித்தான் எங்காவது உட்கார்ந்திருக்கிறான். 

- மு.முகமது பாட்சா

ரமலான் கரீம்

Ramadan crescent hd images க்கான பட முடிவு

வளர்பிறைக் கண்டதும் 
முகம் பௌர்ணமியானது, 
வளம்மிகுப் பாங்கோசை 
காதின் வாசலில் நின்றது, 
எழில்தரும் வனப்பாய் 
பள்ளி வாசலும் நிமிர்ந்தது, 
முகம்மதின் மொழியாய் 
தொழுகையும் நிறைந்தது, 
நோன்பின் மேன்மையால் 
வாய்மையும் துளிர்த்தது, 
ஈகையின் மொழியால் 
உள்ளம் தேனாய் இனித்தது, 
பொய்மையின் முகத்தில் 
பெருந் தீயும் சூழ்ந்தது, 
நட்பினப் பெருமையால் 
மொஹபத்தும் வளர்ந்தது... 
வாழ்த்துகள் புனித ரமலானே 
வருகவே நல் இளம்பிறையே ! 

- மு.முகமது பாட்சா

தெய்வக் குத்தம்



மாடுகளெல்லாம் வீதிக்கு வந்துவிட்டதாக 
மனிதர்களெல்லாம் பயந்து கிடக்கிறார்கள், 
மனிதர்களின் ஆதார அட்டைகளை 
மாடுகள்தான் சரி பார்க்கின்றனவாம், 
இவை மாடுகளாக இருக்கமுடியாதென 


satanic cow க்கான பட முடிவு
போகிறப்போக்கில் ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான், 
அவற்றுக்குக் கோரைப் பற்கள் நீண்டிருந்தன, 
மனிதர்களை அடித்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தன, 
மாடுகளிடம் ஆட்சி வந்துவிட்டதாக 
பிரகடனம் செய்யப் படுகிறது, 
வீதிகள் தோறும் இரத்தக்கவுச்சி வீசிக் கொண்டிருக்க 
மாடுகளெல்லாம் புனிதமாக மாறியது, 
மாட்டிறைச்சி தடைசெய்வதாகச் சட்டம் வடிவாகிறது, 
மாடுகளின் பற்களில் வழியும் உதிரப்பிசிறுகளை 
காக்கைகள் கந்தல் பார்த்துக் கொண்டிருக்க, 
கோழியிறைச்சி உண்டவனை 
சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. 
சில மனிதர்கள் மட்டும் 
கசாய்கத்தியை தீட்டிக் கொண்டிருந்தார்கள்... 
தெய்வகுத்தம் நீங்க 
மாடுகளைப் பலி கொடுத்துத்தான் ஆகவேண்டுமாம். 

- மு.முகமது பாட்சா 

Friday, 26 May 2017

பாப்பாவின் பள்ளி



தொடர்புடைய படம்

பாப்பா
பள்ளிக்கு கிளம்பி விட்டாள்!
புது ஆடை உடுத்தியிருந்தாள்!
புதுப்பை,பலகை,பல்பம்
அவளுக்கு
சந்தோஷத்தை தந்தது!

"அம்மா...ஸ்கூலூக்கு போறேன்"
மழலை மாறாத
பாப்பாவின் வார்த்தைகள்
சக்கரை கட்டிகள்!

"நானும் ஸ்கூலூக்கு போறேன்!"
"நானும் ஸ்கூலூக்கு போறேன்!"
என்ற கர்வம்
அவளின் கண்களில்!

பள்ளிப் போன பிறகு
அவளின் சந்தோஷம்
ஓடிப்போனது!

கொட்டடி சிறைக்குள்
பாப்பாக்கள்!
அடிப்பதற்கே
அவதாரம் எடுத்தது போல்
ஆசிரியர்,ஆசிரியைகள்!

மறு நாள்
பாப்பா சொன்னாள்,
"அம்...மா!...எனக்கு
வயித்தை வலிக்குது!"

- மு.முகமது பாட்சா

விளங்கிடும்

No automatic alt text available.
கசக்கிப் போட்டத் தாள்களில் 
கவிதை வரவில்லையாம்... 
கசங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்! 
உடைத்துப் போட்ட வார்த்தைகளிலும் 
உருப்படியாக ஒன்றுமில்லை! 
புரியாத வார்த்தைகளை 
புட்டுப் புட்டு வைத்தான் 
புரியும் படி அங்கில்லை! 
ஆனாலும் 
அனுப்பி வைத்தான் 
போட்டி அறிவித்த மாத இதழிற்கு... 
ஆச்சரியம் 
அவனுக்குதான் முதல் பரிசாம்! 
விளங்காத வித்தியார்த்தி யொன்று 
விளங்காமலேயே நடுவராய் அங்கு! 
விளங்கிடும் மாத இலக்கிய இதழ்! 
நாளைக்கு அவனும் ஒர் அறிவு ஜீவி! 

- மு.முகமது பாட்சா

அடக்கக் குழியின் வியர்வைத் துளிகள்

தொடர்புடைய படம்

அடக்ககுழிகளை 
காத்து நிற்பதில்லை 
நினைவுச் சின்னங்கள்! 

காதலின் சின்னமாய் 
தாஜ்மெஹல்! 

அவளுக்கும் 
அங்கு வியர்த்தால் 
குளிர்ந்தக் காற்றை 
யார் 
கடத்தித் தரப் போகிறார்கள்? 

கேள்விக் கணக்கின் 
விடைகளுக்கு 
ஷாஜஹான் 
பகரம் வந்து 
நிற்கப் போவதில்லை! 

மீசானின் தராசில் 
காதல் மட்டுமே 
தட்டுகளைச் சமன் செய்து விடுமா? 

மகஷரின் மைதானத்தில் 
அவனுக்கும் அவளுக்குமான 
இடைவெளித் தூரத்தை 
யார் நின்று நிரப்பக்கூடும்? 

சின்னமாய் மட்டுமே 
நிமிர்ந்து நிற்கிறது தாஜ் மெஹல்! 
அடக்ககுழிகளின் 
வியர்வைத் துளிகளை 
உள் வாங்கிக் கொண்டு! 

- மு.முகமது பாட்சா

வசீகரனின் ஆடுகள் 8



rush people hd painting க்கான பட முடிவு
நகரத்திற்கு வந்திருந்தான் வசீகரன் 
இங்கெல்லாம் ஆடுகள் வெள்ளெனயெழுந்து 
தானூர்திகளில் பயணிக்கின்றன, 
மேய்ப்பனிடம் தானாகப் போய் 
பட்டியில் அடைந்து கொள்கின்றன, 
மேய்ப்பனுக்காகவே 
தேவையில்லாததையெல்லாம் மேய்கின்றன, 
இரவில்தான் அவற்றுக்கு 
அந்தி சாய்கின்றது, 
போகும் போது அவற்றின் வயிற்றைக் கீறி 
மேய்ந்தவற்றை 
மேய்ப்பன் எடுத்துக் கொள்கிறான், 
அவையோ, புல்லுக்கட்டுகளை வாங்கிக் கொண்டு 
வயலுக்குத் திரும்பிச் செல்கின்றன 
உறங்கும் முன் புசிப்பதற்காக... 
வசீகரன் உடனே கிராமத்திற்குக் கிளம்பி விட்டான் 
அங்கு அவனுக்காகவே காத்திருக்கின்றன 
சுதந்திரமாய்த் திரியும் அவனது ஆடுகள் ! 

- மு.முகமது பாட்சா

இறைவன் யார் ?



தொடர்புடைய படம்

அவரொரு முல்லாவாகவும் இருக்கலாம் 
அல்லது சூஃபியாகவும் இருக்கலாம், 
தஸ்பிகளை மெதுவாகத்தான் 
உருட்டிக் கொண்டிருந்தார், 
வெயிலின் உக்கிரத்தை 
கம்பளியாடைக்குள் புதைத்திருந்தவரை.. 
புழுங்கவில்லையா ? என்று கேட்டேன் 
இறைவன் குளிராகவே இருக்கிறான் என்றார், 
இறைவனைக் காட்டமுடியுமா? எனக் கேட்டேன் 
அவனை நீ பார்த்திருக்கிறாயா ? என்றார் 
இல்லையென்றேன். 
சிரித்துவிட்டு அவன்தான் இறைவனென்றார், 
கண்களுக்குத் தெரிந்துவிட்டால் 
மனிதனென்றார்... 
கஷ்டங்களென்பது தேவையாயென்றேன், 
இல்லையென்றால் 
இன்பங்களை நீ நுகரமாட்டாய் என்றார்... 
நீங்கள் ஞானியா என்றேன் 
நான் ஞானியென்றால் 
இறைவன் யாரென்றக் கேள்வியை வைத்துவிட்டு 
நகர்ந்துவிட்டார் ! 

- மு.முகமது பாட்சா

Thursday, 25 May 2017

சூடான தேநீர்

வீதிகள்தோறும் சுற்றறிக்கை வாசித்துக் கொண்டிருக்கும் 
சேதியை எளிதில் கடந்து போகிறேன், 
பெருமழையொன்று இன்னமும் சற்று நேரத்தில் 
சூறாவளியைத் துணைக்கழைத்துக் கொண்டு வரலாம், 
பற்றியெரிந்து கொண்டிருக்கும் நகரத்தின் சுவர்களை 
யாரும் அணைக்க முற்படவில்லை, 



எரியட்டுமென்றே உள்மனம் சந்தோசம் வாசிக்கிறது, 
ஆலயங்களின் கதவுகளையெல்லாம் அடைத்துவிட்டார்களாம், 
யாசகம் கேட்காமல் பறித்துப் பசியாறின ஏழ்மையின் வயிறுகள், 

தொடர்புடைய படம்யுகமொன்று அழியப்போவதாகத் 
தொலைக்காட்சிகள் அலறுகின்றன, 
எரிந்து கொண்டிருக்கும் பணக்குவியலைப் பார்த்து 
அழுது கொண்டிருக்கிறார்கள் ஆளுமைகள் , 
ஆட்சிக்காரன் எங்கிருக்கிறான் என்ற கேள்வி 
இப்போதும்கூட யாருக்கும் எழவில்லை, 
யாரை நம்பியும் இப்போது பயனில்லை, 
சூடான தேநீருக்காக மட்டும்தான் 
இப்போது நான் அலைந்து கொண்டிருக்கிறேன், 
இலையென்று ஒன்றிருக்குமானால் 
துளிராகவும் கருகலாம், சருகாகவும் வீழலாம், 
சுவையையும்,ரசனையையும் தொலைத்துவிட்டுச் சாக 
நானொன்றும் வடிகட்டிய முட்டாளில்லை

- மு.முகமது பாட்சா

இவர்கள் இப்படித்தான்

confused man painting க்கான பட முடிவு

கப்பலொன்று கரை தட்டிவிட்டதாக
போவோர்கள் சொன்னார்கள்,
கடலில்லாத ஊரில் 
ஆவலோடு கப்பலைத் தேடுகின்றேன்...
அலையடிக்காத பக்கமாக 
பார்க்கச் சொன்னார்கள்,
ஒட்டகம் மேய்ப்பவன் சொன்னான்
இப்போதுதான் ஆடுகளைவைத்து 
சிலர் இழுத்துச் சென்றதாக
புரியவில்லைத்தானே !
எனக்கும்தான் புரியவில்லை...
நானில்லாத ஊரில் என்னிடமே
இப்படித்தான் சிலர் எப்போதும்
சொல்லிக் கொண்டுத் திரிகிறார்கள்.

- முகமது பாட்சா

கஸலாய் காதல்

Image may contain: one or more people

என்ன மாயம் செய்தாய் நெஞ்சம் வாட 
காதல்தீயை அள்ளி நானும் சூட , 

போதைக் கொண்ட நெஞ்சம் தடுமாற 
பூக்கள் கூட வாடும் உன்னைப் பாட, 

சோகம் நெஞ்சில் ராகம் கோர்த்துப் பாட 
மௌனம்தானா நீயுமெடுத்தாய்ச் சூட, 

வார்த்தையொன்றைச் சொல்லிவிட்டாய் வாட 
வாழ்க்கையென்றச் சூறைக் காற்றில் சாய, 

காதலென்ற மாயைக் கண்டும் கண்மூட 
காற்றும் கூடக் கருணைக் காட்டும் சாக.

- முகமதுபாட்சா

போய் வா நதியலையே...


புதுக்கவிதைகளின் முன்னோடி, மரபின் வாசனை நுகர்ந்த வண்டு, கவிதை வானின் பட்டாம்பூச்சி கவிஞர்.நா.காமராசன் இன்று மறைந்துவிட்டார். காலம், பூத உடலை மட்டும்தான் கைப்பற்றிச் செல்கிறது, அவரது புகழையும், எழுத்துகளையும் அல்ல... 

1942 ம் ஆண்டுத் தேனீ மாவட்டம் மீனாட்சிபுரத்தில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில்தான் உயர்க் கல்வியை முடித்தார். அதே கல்லூரியில் நண்பராக இருந்தவர்தான்,முன்னாள் சபாநாயகர்.க.காளிமுத்து அவர்களும்.இவர்களின் நட்பு கடைசிக் காலம் வரை தொடர்ந்து நிலைத்தது. 

மிகவும் உற்சாகமான பேர்வழியாகவே இருந்தார் கவிஞர் அவர்கள். நண்பர்களுடன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர், இனிய உதயத்திற்கு அளித்த பேட்டியொன்றில், தன் கல்லூரி காலத்தில் கலில் ஜிப்ரன் கவிதைகளில் தான் பைத்தியமாகத் திரிந்ததாகவும், அவரது BROKEN WINGS (முறிந்த சிறகுகள்) என்ற கவிதை நூல் தான், தன்னைக் கவிதைகளின் பக்கம் ஈர்த்ததாகவும்,அந்த நூல் இன்றும் தனது வேதபுத்தகம் என்றும் சொல்லியிருந்தார். 




உருவகங்களைக் கையாள்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர், தனக்கு உருவகக் கவிதைகளின் மீது ஆர்வம் கூட்டியதாகக் கேரளாவைச்சேர்ந்த வயலார் ராமவர்மாவையே கைக்காட்டுகிறார். ராமவர்மா மலையாள திரைப்படப் பாடலாசிரியரும் கூட. 

கம்பரையும்,இளங்கோவடிகளையும் மற்றும் கவிஞர் சுரதாவையும் முன்னோடிகளாக எடுத்துக் கொண்டு கவிதைகளை எழுதத் தொடங்கியவர், கம்பரின் கற்பனையும், பாரதிதாசனின் சிந்தனையும் ஒரு கவிதையில் இணைந்துவிட்டால் அந்தக் கவிதை உயிர்ப்புடன் என்றுமிருக்கும் என்பது அவர் அடிக்கடி சொல்வதாகும். நிகழ்காலக் கவிஞர்களில் அப்துல்ரகுமான், இன்குலாப், தமிழன்பன் மூவரையும் மிகவும் நேசித்தவர். கவிதையெழுதும் இளைஞர்களுக்கு அவர்களின் கவிதைகளைப் படிக்கும்படி வலியுறுத்துவார். 

கலைமாமணி, பாரதிதாசன் விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.காமராசன், கறுப்பு மலர்கள்,தாஜ்மஹாலும் ஒரு ரொட்டித் துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் உட்பட 33 கவிதை தொகுப்புகளையும் மரபின் பிரியம் நழுவாமல்,'பெரியார்காவியம்'என்ற கவிதைக்காவியத்தையும் வடித்து வெளியிட்டார். 

நா.காமராசன் க்கான பட முடிவு

கவிஞரை திரையுலகிற்கு அழைத்துவந்தவர், நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். கவிஞரின் ,'கறுப்பு மலர்கள்' கவிதை நூலை படித்துவிட்டு அதன் ஈர்ப்பில்தான் தனது 'நீதிக்கு தலைவணங்கு' படத்திற்காகப் பாடலெழுத பணித்தார். அதில் அவரெழுதிய, 'கனவுகளே..ஆயிரம் கனவுகளே!' பாடல்தான் முதல் திரையிசைப் பாடலாகும். அவரை உச்சத்தில் நிறுத்திய பாடலென்றால் அது, பல்லாண்டு வாழ்க படத்தில் இடம் பெற்ற,'போய்வா நதியலையே...இந்த பூமிக்கு நீர் கொண்டுவா!' என்ற பாடல்தான். இதுவரை 600 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

திரு நங்கைகளைப் பற்றி அவரெழுதிய இந்தவரிகள் காலத்திற்கும் நிற்க கூடியது 

'தாய்ப் பாலின் சரித்திரத்தில் 
சதிராடும் புதிரானோம்' 

கவிதையுலகில் புரியாத புதிராக இல்லாமல் பொக்கிஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர். நா.காமராசன் அவர்களுக்குச் செலுத்துவோம் தமிழ் அஞ்சலி ! 

-மு.முகமது பாட்சா

Wednesday, 24 May 2017

பூக்களென்றால்


வேதனைச் சிறைகளுக்குள் 
காயப் பட்டிருக்கும் 
மலர்களின் மெளனத்தை 
அழகு யென்று 
சொல்லிவிட்டு நகர்கிறோம்,

பூக்களின் மேல் பூத்திருப்பது 
பனித் துளிகளாகத்தான் 
இருக்க வேண்டுமென்பது 
கட்டாயமில்லை... 
கண்ணீர்த் துளிகளாகவும் 
இருக்கலாம்,

வாடிய பூ க்கான பட முடிவு

காயப்படுத்தாத வரையில்தான் 
முட்களும் 
காவலுக்கு இருக்கின்றன! 

சுவை தேன் 
சுவைத்தேன் யென்று 
நகர்வது மட்டுமே 
வண்டுகளுக்கும் 
வேலையாக இருக்கின்றன, 

பூக்கள் மென்மையானது 
என்பதால்தான் 
கசக்கியெறிவதொன்றும் 
அத்தனை 
கடினமாகத் தெரியவில்லை,

ஆசையோடு நுகர்ந்த பூக்கள் 
வாடியபின் 
வீதியில்தான் வீசியெறியப்படுகின்றன,

கடவுள்களும் கண்டு கொள்வதில்லை...
வாடியப் பூக்களை! 

பூக்கள் யென்றால் 
இங்கு பூக்கள் மட்டுமேயில்லை 
பெண்களும்தான்!

- மு.முகமது பாட்சா

Popular Posts