Wednesday, 16 October 2019

மழை - அவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

மழை
மழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது
இரவின் மிச்சம் போல்
வானம் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது
பூச்சிகள் பறப்பதுபோல்
தரை உச்சுகளைக் கொட்டிச் சிலிர்க்கிறது...
காற்றிற்குக் கற்பூர வாசனை...
தேநீர்க் கடைகளில் உஷ்ண மூச்சு...
குளிரென்பது அனுபவிக்கச் சுகமானது...
சூடான சோற்றில்
காரம் சேர்த்த கறியாணம் போல் மனம்...
வீட்டிற்கே வரும் சொர்கத்தை விட
குற்றாலம் அத்துணைக் குளுமையில்லை...
கொஞ்சம் அனுபவித்துப் பார்
பாரதிதாசன்
நம் வீட்டில் பாட்டெழுதிக் கொண்டிருப்பான்.

- மு.முகமது பாட்சா*
16/10/2019

---------------------------
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
அவன்
அவனுக்குள்ளிருந்தே
மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தான்
அவனது காலத்தை
கி.மு வில் புதைத்தவர்கள்
அவனை விஷ
விருட்சமென்று வெட்டிக் கொண்டிருந்தார்கள்..
அவன் சொற்கள் இலைகளாக உதிர...
உடலைச்
சிராய்களாக இறைத்துக் கொண்டிருந்தான்..
அவனுக்கான பூமி
அதிர்ந்து கொண்டேயிருந்தது...
அவனை நிலமில்லாதவன் என்று
சூளையில் போட்டு எரித்த போது
அவன் அச்சிக் கற்களில் இடம் மாறி
உஷ்ணத்தைக் கோபமாய்க் கொட்டிக் கொண்டிருக்க...
அவர்கள் அவன் மீது நீரூற்றி
செங்கல்லாக்கி
மாளிகைகள் கட்ட ஆயத்தமானார்கள்.

-மு. முகமது பாட்சா*
16/10/2019

Tuesday, 15 October 2019

வெளிச்சம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அவர்கள் கூடினார்கள்
ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொண்டார்கள்
சிலரின் தோள்களை விடமாட்டேனென்ற
ஜோல்னாப் பைகள்
புத்தகங்களை முகர்ந்து கொண்டேயிருந்தன...
அவர் இவர்தான் என்றும்
இவர் அவர்தான் என்றும்
சிலர் ஜாடை காட்டி பேசிக் கொண்டார்கள்...
ஒலிவாங்கியைப் பார்த்தவுடன்
சிலருக்கு வாய் நமநமத்துக் கொண்டிருந்தது...
ஒருவன் புருவத்தையுயர்த்தி
இவனுங்களெல்லாம் அறிவு ஜீவிகளாம் என்று
நக்கலை நழுவவிட...
முக்கியஸ்தர்
தேடியெடுத்த குறிப்புகளை வாந்தியெடுக்கத் தொடங்கினார்
வந்தவர்கள் கைகளைத் தட்டி ரசிக்க...
மேடை இருட்டாகி
திடீரென்று ஒளிர்ந்த போது உள்ளே நுழைந்தது
சினிமாவின் பிரபல வெளிச்சம்...
இப்போது அவர்களின் நிறம் மங்கிக் கொண்டிருக்க
கை குலுக்கி
செல்பி எடுத்துக் கொண்டவர்களின் கைகளில்
புத்தகங்கள்
வியர்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தன.

- மு.முகமது பாட்சா*
15/10/2019

Monday, 14 October 2019

ஹேங்க் ஓவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

யாராவது இருக்கிறீர்களா?
கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான்
இடியில் மழை பளிச்சிட்டது
அவள் என்பவள் கதவைத் திறந்தாள்
புன்னகை உள்ளே வரச்சொல்லி அழைத்தது
இரவாடைத் தளர்வில்
வழிந்தது யெவனப் பிரதேசங்கள்...
இப்போதுதான் பசியாறினேன் என்றவள்
கைகளைக் கழுவச் சென்றால்
விரல்களில் பச்சை இரத்தம் பசப்பியிருந்தது
அமானுஷ்யம் கண்களை உருட்டிப் பார்க்க..
அவளின் நிழல் இறந்து கிடந்தது
சன்னலின் வழி நிலவு அழுவதாகத் தெரிய
எதிரிலமர்ந்தவள்
ஆடைகளைத் தளர்த்தி ' தெரிகிறதா' என்றாள்
அவளின் இதழ்க்கடை வழியே
புழுவொன்று நெளிந்து போக
அதனைப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டாள்...
அவனுக்குக் குமட்டியது...
அருகில் நெருங்கி மூச்சுக் காற்றைச் சூடாக்கினாள்
திரைச்சீலை எரிந்து கொண்டிருந்தது..
அலறியடித்து ஓடும் போது
தவறி விழுந்த மதுக்குடுவையில் அவள் சிரிக்க...
தண்ணீரைத் தெளித்தவள்
ஹேங்க் ஓவரில் அலறுவதே வேலையென்று
உள்ளே சென்றாள்...

- மு.முகமது பாட்சா*
15/10/2019

ஆரிகாமி வனம் - சிறப்பு செய்திகள் 4

ஆரிகாமி வனம் வெளியீட்டில் எனது ஏற்புரை காணொளி

https://www.youtube.com/watch?v=GYWR9gBna7k&t=20s

ஆரிகாமி வனம் - சிறப்பு செய்திகள் 3

06/10/2019 ல் தஞ்சையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு
விழாவில் கங்கை அமரன் வெளியிட கவிஞர் கண்மணிசுப்பு
பெற்றுக் கொள்கிறார்



படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், ஆரூர் தமிழ்நாடன் உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

விழாவில் கவிஞர் கண்மணி சுப்புவுடன் இனிய உதயம் ஆசிரியர்
ஆரூர் தமிழ் நாடன் ஐயா அவர்கள்

விடுபட்ட கவிதைகள் 6

கோமாளி
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
என் முகத்தைப் பற்றி
இனியும் யோசிக்காதீர்கள்
சற்றே சிதைந்திருக்கிறது
ஏமாற்ற விரும்பவில்லை அதனால்தான்
கோமாளியின்
முகமூடி அணிந்திருக்கிறேன்
தோல்விகளைத் துவைத்துப் போட்ட சட்டையில்
கிழிசல்கள் இருக்கத்தானே செய்யும்..
எனக்குள் புதைந்திருக்கும் ஆயிரம் கத்திகளை
எப்போது வேண்டுமென்றாலும் வீசுவேன்..
அழுகைகளை அடர்த்தியாக்கி
அமிலமாக அடைத்து வைத்திருக்கிறேன்...
நீங்கள் எப்போதுமே
வேஷத்தை விரும்புகிறவர்கள்...
அடைத்து வைத்தது வெடிக்கும் போது
கோமாளி
சிரித்துக் கொண்டே நடந்து கொண்டிருப்பான்....
நீங்கள் பயத்தோடு
நடுங்கிக் கொண்டிருப்பீர்கள்....
இனியும் வருவேன்...

- மு.முகமது பாட்சா*
13/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உரை
காந்தியின் மரணம் பற்றிய சந்தேகங்கள்
எழுந்துள்ளன
காந்தி எப்படி இறந்திருப்பார்?
கோட்சே சுட்டுவிட்டான் என்பது
நிரூபணமில்லாத உண்மை என்று அச்சிட்டபிறகு
சாம்பலைக் கிளறிக் கொண்டிருக்கிறோம்
தூக்கிட்டுத்தான்
தற்கொலை செய்து கொண்டார் என்று
அவர் பிறந்த ஊரில் பேசிக் கொள்கிறார்கள்...
மது விடுதியில்
சண்டையிட்டதால் இறந்திருக்கலாம் என்று
போதையில் சங்கியொருவன் பேசிவிட்டுப் போகிறான்...
காந்தி சாகவில்லை என்று
ஒரு கதர் குல்லா நம்பிக் கொண்டிருக்கிறார்..
காந்தியை சாகடிப்பது எப்படியென்று
இன்னமும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
காந்தியை தேசத் துரோகி என்று அறிவிக்க
ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போதுதான்
அவர் இந்தியாவை விட்டே ஓடிவிட்டதாகக்
கல்விப் புத்தகங்களில்
திருத்தங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

- மு.முகமது பாட்சா*
13/10/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

அந்தக் கவிதை
புதிய பயணத்தைத் தொடங்கியிருந்தது
நேர்த்தியில் எழுத்துகளைக் கோர்த்து
பட்டாடையாகப்
பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு அழகு பார்த்தது..
மனதை நெய்வதற்கு
படிமங்களைத் தொட்டுத் துலக்கியிருந்தான் கவிஞன்
பளபளப்பில்
கடலை அடைத்து வாசித்தவர்கள்
மீன்களாகவே நீந்திக் கொண்டிருந்தார்கள்...
குவிந்த வாழ்த்துகளைக்
கோபுரமாக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டியவன்
கவிதையின் கீழ்
அடுத்த கவிதைக்கு ஆழ்ந்திருக்கும்
புத்தனைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்...
அதனைச் சிலர்
அவன் பெயரென்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்...
நானும் கூட இப்போது
அவனைத் தேடித்தான் பயணிக்கிறேன்
என் அடுத்த கவிதைக்கு
சில வார்த்தைகளை வாங்கிவர.

- மு.முகமது பாட்சா*
14/10/2019

விடுபட்ட கவிதைகள் 5

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

பார்வையை
தவிர்த்துத்தான் சென்றாள்...
அவளின் பின்னால்
அந்தப் பூனை
மெதுவாகத் தொடர்ந்து கொண்டிருந்தது...
அவள்
வீட்டிற்குள் நுழைந்தவுடன்
எதிர் வீட்டிலிருந்த எலியொன்று
எட்டிப் பார்த்து முத்த சப்தம் எழுப்பியது...
பால் வாங்கிய இடத்தில்
'எருமை மாடொன்று உரசிவிட்டு நகர
வாங்கிய காய்கறிகளில்
புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன...
பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொருவராக
அவளைத் தின்று கொண்டிருக்க...
எலும்புக்கூடாக
வண்டியில் ஏறிக் கொண்டவள்...
நடத்துநரின் நகரும்மா உரசலில்
நரகத்திற்குப் போய்விட்டு வந்து...
தன்னையே அறுத்துப் போட்டுச்
சமைத்து உணவு பரிமாறியபோது...
உப்பு அதிகம் என்று கை கழுவினான் கணவன்

- மு.முகமது பாட்சா*
05/10/2019
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
அருவத்தின்
முடிச்சொன்றைத் தேடிப் பயணிக்கிறேன்..
நிழல்கள் தரையில் விரிந்து கிடக்கின்றன...
விளக்கிலிருந்த இருட்டு
ஜோதியின் வழி பயணிக்கிறது...
நான் என்பவன் இங்குத் தனித்தவனல்ல...
நாளை என்பதும் இன்றின் மிச்சம்தான்...
உடையும் கண்ணாடிக்கு
ஒன்பது ஓட்டைகள் வைத்து
ஆசைகளை ரசம் பூசிப் பார்க்கிறோம்...
உப்புத் தண்ணீரில் மீன்கள் வாழ்ந்தாலும்
உப்பு ஏறாதது ஏனென்று தெரியவில்லை...
அறிவு என்பதே
அறியாததைத் தேடிக் கொண்டேயிருப்பதுதான்...
உருவமென்பது ஒரு நாள் அரூபமாகிறது....
அருவமென்பது அருகில்தான் இருக்கிறது
ஆனாலும் உருவங்களைத் தேடிப் பயணிக்கிறோம்...
இங்கு நானென்பதும்
உறவுகளின் வார்த்தைகளில் கலந்த
அரூபமாக இருக்கலாம்...
உடைந்த பிறகு
பிம்பத்தின் நினைவுகள்தான்
அடுக்குகளில் அலைந்து கொண்டிருக்கும்.
ரசம் கலைந்த பிறகு
நாம் உருவத்தை எங்கே போய்த் தேடுவது?

- மு.முகமது பாட்சா*
09/10/2019

கிளையை விட்டுதிர்ந்த ஆப்பிள் பழத்தை
தரையானது
கை நீட்டி வாங்கிக் கொள்கிறது...
நீயுட்டன்
மோசசிற்குக் காணிக்கையாக்குகிறான்...
ஜியார்டானோ புரூனோவின்
வாய் கிழிக்கப்பட்டு எரிக்கப்படுகிறான்
அண்டவெளிக் கோட்பாடுகள்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன...
ஸ்டீபன் ஹாக்கிங்
வானக் கருந்துளையில்
ஓம் பிரளய மந்திரம் கேட்டதிர்கிறார்...
ரபேல் விமானம் நகர மறுக்க
அமைச்சர் ஆயுத பூஜை செய்கிறார்
எலுமிச்சையின்
அதிர்வு மந்திரம் எளிதாக இயக்க
கருப்புக் கயிற்றுடன் இந்தியா உயர்கிறது
வானத்தில் டிஜிட்டல் நுட்பத்துடன்.

- மு.முகமது பாட்சா*
09/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
கிழிந்த ஆடையுடன் இருந்தான்
அவன் மீது
மூன்று நாள் பசி நாற்றம் வீசியது..
ஒரு ரொட்டித்துண்டை வாங்கிக் கொடுத்தேன்
வாயில் திணித்துக் கொண்டவன்
கணக்கில் வைப்பதாக எழுதிக் கொண்டான்...
யாரென்று கேட்டேன்
யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் ...
இந்தத் தேசத்தின் பிரதமர் என்றான்...
சிரித்துவிட்டேன்
அப்படியென்றால் மோடி யாரென்று கேட்டேன்..
சிந்தனைக்குள் நுழைந்தவன்
ரகசியங்கள் ஆபத்தானது என்று எச்சரித்தான்...
அங்கு வந்த காவலர்கள்
அவனை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்..
சீனப்பிரதமரின் வருகையையொட்டி.

- மு.முகமது பாட்சா*
10/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
வீதியெங்கும் இறைந்திருக்கும்
சப்தங்களின் நடுவே
சில வார்த்தைகள்
சிக்கிக் கொண்டு கதறுகின்றன..
இரவைத் திருப்பிப் போட்டது போல் சிரித்தவள்
தன் மார்புக்கூட்டில்
சுமையேங்கி இயங்குகிறாள்..
ஆதியின் சொரூபமென்றும்
அன்னையென்றும் அர்ச்சனைகள் தூவியிறைக்க
அதிரும் சப்தக் கூட்டிலாடும் ஓங்காரம்
அலைக்கழிகிறது..
பசித்தேடும் விலங்குகளின் அறை வாசல்களில்
ஆடையிழந்த மானம்
உயிர் பெற்றெழ...
உதிரத்தீட்டில் இறைந்து கிடக்கும்
யோனிக் கண்களுக்கு
டைபீரியஸ் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறான்...
ஆடையைத் திருத்திச் சொருகிய துணியில்
சில மீசை முடிகள் ஒட்டிக் கொண்டிருக்க...
அவளின் சிரிப்பில் காலங்கள்
அநியாயத்திற்கு இறந்து கிடந்தன.

- முகமது பாட்சா*
10/10/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு
இந்த நகரத்தைச்
சற்று மூடி வைக்கிறோம்
யாரும் உள்ளே நுழைந்துவிடாதீர்கள்...
உங்களின் தும்மல்களை
அடக்கியே வாசிப்பது சிறப்பானது...
வியாபாரம் முடிந்த பிறகு
வீதிகள் திறக்கப்படும்
நீங்கள் உங்கள் கனவுகளோடு
எங்கு வேண்டுமென்றாலும் திரியலாம்...
அதுவரை
இந்த நகரத்தைச்
சற்று மூடி வைக்கிறோம்
யாரும் உள்ளே நுழைந்துவிடாதீர்கள்...

- மு.முகமது பாட்சா*
11/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், இரவு மற்றும் குளோஸ் அப்
சொற்களை மூட்டிக் குளிர் காய்கிறாய்
வார்த்தைகளில்லாமல்
வதங்கிக் கொண்டிருக்கிறேன்
நேசம் என்பதைப் பற்றிப்
பேசுவதே கிடையாது...
பேசு பொருள்களில்
அழுக்கான பக்கங்களை
அதிகமாக அலசிக் கொண்டிருக்கிறோம்
ஆதாரமில்லாத வார்த்தைகள்
நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன...
நீ நீயாகவும்
நான் நானாகவும் அமர்ந்திருக்க
எரிகின்ற இதயத்திற்கு
காதலென்றே பெயர் சூட்டுகிறேன்.

- மு.முகமது பாட்சா*
12/10/2019


Friday, 4 October 2019

கரை வேட்டிகள்

கரைவேட்டிகள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
நாங்கள் வரலாற்றோடு வாழ்கிறோம்
நீங்கள்
வரலாற்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்...
நீங்கள் இந்து படித்தபோது
நாங்கள் டீக்கடைகளில்
அரசியல் பேசிக் கொண்டிருந்தோம்
வெறும் பேச்சு வெள்ளை வேட்டியென்று
எங்களை இகழ்ந்தீர்கள்....
நீங்கள் ஒதுக்கிய பார்பர் கடைகள்தான்
நாங்கள் பயின்ற அரசியல் பள்ளிக் கூடங்கள்...
இப்போது எங்களை
கரை வேட்டியென்று எள்ளுகிறீர்கள்...
இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு
நடக்கச் சொன்னீர்கள்....
நாங்கள் துண்டை தோளில் போட்டுக் கொண்டு
நடந்து சென்றோம்
கரை வேட்டிகளை கட்டி
நாங்கள் நடந்த போதுதானே நீங்கள்
நவத்துவாரங்களையும்
நாசூக்காக மூடிக் கொண்டீர்கள்?
அம்பேத்கரின்
கோட்டிற்குப் பின்னால் இருக்கும் வரலாறுதான்
எங்களின் கரை வேட்டிகளுக்கும் இருக்கிறது...
நாங்கள் வரலாற்றோடு வாழ்கிறோம்
நீங்கள்
வரலாற்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்..

- மு.முகமது பாட்சா*
03/10/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தொப்பி
எதையோ
தேடிக் கொண்டிருந்த கிழவரிடம்
எதைத் தேடுகிறீர்களென
அன்புடன் கேட்டாள் அந்தச் சிறுமி...
உனது புன்னகையில் ஒளிந்திருக்கும்
எனது கடந்த காலம் என்றார்...
இருட்டில் தேடினால்
கிடைக்கலாம் என்றவள்
பகலில் தேடுவது பறவைகளின்
ஞானம் மட்டுமே என்று சிரித்தவள்...
தன் பெயரை ராபியத்துல் பஸ்ரியா
என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

- நட்புடன்....முகமது பாட்சா*
04/10/2019

விடுபட்ட கவிதைகள் 4

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்


நாங்களா
ஒன்றும் தெரியாதவர்கள்?
கோடிகளுக்கு எத்தனை சுழியங்களென்று
எங்களுக்கு நன்றாகவே தெரியும்...
பொருளாதாரம்
படித்தவர்கள் மட்டும் மேதைகளல்ல
விழித்திருக்கும் போதே
உங்களின் கைகளைக் கட்டியவர்கள்
நாங்களென்ன பேதைகளா?
ஒட்டகங்களைக் கட்டிவைத்து
கூடாரங்களைப் பாதுகாக்கிறோம்...
அவை அடிக்கடி தலைகள் நீட்டுவதை
நீங்கள் வீழ்ச்சி என்கிறீர்கள்...
நாங்கள் எழுச்சி என்கிறோம்...
மடிகளையறுத்து பால் வழங்கும் திட்டம்
எங்களால் மட்டுமே முடிகிறது..
பட்டினிப் போட்டாவது
ஏழைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்...
அன்னிய அச்சுறுத்தல்
ஆபத்தானதல்லவா அடிமைகளே...
வாருங்கள்
எல்லைகளில் போர் புரிவோம்...
நீங்கள் கோட்சேவை
கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை...
காந்தியை தூக்கிக் கொண்டு திரியாதீர்கள்...
கிழவர்கள் நம் நாட்டை
ரொம்பவே கெடுத்து வைத்திருக்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா*
30/09/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக வட சென்னை 
'தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
 சார்பில் கவிஞர் நா.வே. அருள் அவர்களால் தொகுக்கப்பட்டு
 இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு
 வெளியான 'முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்'
 நூலில் எனது கவிதையும் தார்மீக கோபத்தை பதிவு
 செய்திருக்கிறது...

பிழைத் திருத்தும் புத்தகங்களைப்
பிழை திருத்திக் கொண்டிருக்கிறோம்...
எழுத்துகள்
மொழி மாற்றம் செய்து கொள்கின்றன...
ஆகம விதிகளுக்குள்
நுழைந்துவிட்ட புதிய கொள்கை
புண்ணாக்கு விற்பவனைப்
படிக்கவேண்டாம் என அறிவுறுத்துகிறது...
மூன்றாம் வகுப்பு மாணவன்
பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறான்...
கனவுகளைப் புதைத்து விடுங்கள்
குலத் தொழில் கற்பிக்கச்
சரஸ்வதி சாக்பீஸை எடுத்துவிட்டாள்...
கல்வியின் கர்ப்ப கிரகம்
உயர் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது...
இனி வாசலில் நின்று
சாமி என்று கூப்பிடப் போகிறாயா?
அல்லது தன் மானம் போர்த்தி
கல்விக்காகப் போரிடத்தான் போகிறாயா?

- முகமது பாட்சா*


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
தலையை வலம் சாய்த்து
மெதுவாக நகர்கிறது மிருகம்
நகங்கள் உள்ளுக்குள் மறைந்திருக்க
தந்திரங்கள்
கண்களுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தன..
கொடியாடுகள்
மேய்ச்சலுக்கான புற்களில் அசைந்த
எதிரியின் தடம் உணர்ந்து
மூக்குகள் மொசுமொசுத்துத் திரும்பி..
கோபமும் பயமும் பிடரியிலிறங்கி
கால்களை உறுதியாக்கி ஓடும்போது
மூச்சிரைக்கும் விரட்டலில்
பசிப் பாய்ந்துப் பிடரியைப் பிடிக்கும் வேளையில்
மறைந்திருந்த உறுதியொன்று
ஆக்ரோசம் கூட்டி
பிட்டத்தில் கொம்புகளைச் சொருகித்
தூக்கிப்போட்ட வேளையில்...
பயம் இடம் மாறிக்கொள்ள
தந்திரம் பொதுவாகி
மிருகம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது...

- மு.முகமது பாட்சா*
01/10/2019



இந்தத் தேசம்
வித்தியாசமாகத்தான் மாறியிருக்கிறது..
கதர் குல்லாக்களை
எங்கும் பார்க்க முடிவதில்லை...
காந்தியின் பிறந்த நாள்
திருவிழாக்களாகக் களைகட்டுகின்றன...
சிலைகள்
மாலைகளை நிறைத்துக் கொள்ள
பேனர் காந்திகளை
சங்கிகள் துப்பாக்கிகளால் சுட்டு விளையாடி
கோட்சேக்களை நினைவுக் கூறுகிறார்கள்..
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன்
காந்தி சங்கல்ப யாத்திரை தொடங்குகிறது...
நம் தேசத்தந்தை யார் என்பதை
அமெரிக்க அதிபர் நிர்ணயம் செய்கிறார்...
காந்தி என்பவர்
யாரெனக் கேட்கிறார்கள் மாணவர்கள்...
வேலை வெட்டியில்லாமல்
சும்மா சுற்றிக் கொண்டிருந்தவர் எனச்
சொல்லிக்கொடுக்கலாம் புதிய பாடத்திட்டம்.

- மு.முகமது பாட்சா*
02/10/2019
Painting : M.F.Husain




"மூக்கு மட்டும்
ஏன் திறந்தே இருக்கிறது?"
என்று அவள் கேட்ட போது
காதுகளும் கூடத் திறந்துதானே இருக்கிறது
எனக் கேட்க நினைத்துக்
கேட்காமல் விட்டுவிட்டேன்...
அவளுக்கு அடிக்கடி
மூக்கின் நுனியில் கோபம் வரும்...
உதடுகளை இறுக்கி
முத்தமிட்டுக் கொள்ளும் போது
சுவாசம் இடம் மாறுவது
வெந்நீர் ஒத்தடமாய்ச் சுகிக்கும்...
ஒரு சமயம்
அம்மாவின் நாடித்துடிப்பைப் பார்த்த டாக்டர்
மூக்கில் கை வைத்துவிட்டு
ஸாரி என்று சொன்னார்....
காதுகள் பார்த்த காட்சியை
கண்களும் வாயும் மூடிக் கொண்டபோது
மூக்கு மட்டும்தான்
பெருமூச்சு விட்டுப் பேசியது...
"என்னதான் சொல்ல வருகிறாய்?"
என அவள் இப்போது கோபப்படும் போதும்
மூக்கு விடைப்பதை
இரசிக்காமல் இருக்க முடியவில்லை...
ஆமாம் ஏன் மூக்கு மட்டும்
திறந்தே இருக்கிறது!

- மு.முகமது பாட்சா*
02/10/2019


விடுபட்ட கவிதைகள் 3


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நீங்கள் தயவு செய்து
இந்தக் கவிதையைப் படிக்காதீர்கள்...
உங்களின் ஒற்றைச் சிகரெட் புகைய ஆஷ்ட்ரேவில்
விழும் சாம்பல்களில்
என் எழுத்துகளைப் பொறுக்கத் தயாராகயில்லை....
உங்களின் மதுக்கிண்ணவோரத்தில்
ஒட்டியிருக்கும்
அழகிகளின் உதடுகள் துப்பிய வார்த்தைகள்
எனக்குத் தேவைப்படாது...
நீங்கள் முகம் சுளிக்கும் நடைபாதையில்
வார்த்தைகளோடு உருண்டு கொண்டிருக்கிறேன்...
எரியாத அடுப்பிலிருக்கும்
கரித்துண்டுகளில் எழுதும் கவிதைகள்
சற்று தீச்சலாகத்தான் இருக்கும்...
இந்தக் கவிதை பழங்கஞ்சியோடு
பச்சை மிளகாயைக் கடித்துப் பசியாறுகிறது..

- மு.முகமது பாட்சா*
27/09/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள்

'ம்'
என்ற இந்தச் சந்தத்தைத்
தூக்கிச் சுமந்து திரிகிறேன்...
'ம்'
காடுகளை வளர்த்து
பறவைகளிடம் சங்கீதம் கற்றுத் தருகிறது
உதடு பிரியாத அந்தச் சப்தம்
சாத்தானிடம் கைக்கட்டி அமர்ந்திருக்க
தேவலோகத்தின் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருக்கிறது அந்த 'ம்'
தட்டிக்கழித்த வார்த்தையென
மூளையின் செல்கள்
பற்களால் பிறாண்டிக் கொண்டிருக்க
சம்மதம் என்று
உன் கண்கள் பேசியதாக
கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்..
இனி யாராவது 'ம்' என்று இசைத்தால்
நீ வந்து போவது நிச்சயம்.

- மு.முகமது பாட்சா*
28/09/2019
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.


நகரத்தின் சுவர்களை
வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
சாலைகள்
ஒப்பனைகளில் மூழ்கியிருக்கின்றன
பதாகைகள்
பிரதமரின் வருகையைக் கட்டியங்கூற..
எனக்குள் முளைத்த கேள்விகளைச்
சிறையிலடைக்கிறேன்...
கனவுகளை விற்பதற்கான மேடையொன்று
தயாராகிக் கொண்டிருக்க...
எதிர் காலத்தைக்
கூண்டுக்கிளியிடம் ஒருவன்
கேட்டுக் கொண்டிருந்தான்...
இங்கெல்லாம்
நிக்கக் கூடாதென்றத் தாணாக்காரர்
எதுக்கு இந்த ஆடம்பரம்?
என்று முணங்கிக் கொண்டே நகர்ந்தார்...
செதுக்கலில் பூரணிக்காத புத்தரின் ஒரு கண்
விடைப்பாகவே இருக்க...
கால்கள் பாறையாகவே இருந்தன...

- மு.முகமது பாட்சா*
29/09/2019
 
                                                                       படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் இயற்கை

இந்தக் கவிதைக்கு
என்ன தலைப்பு வைக்கலாமென்று
இதுவரை முடிவு செய்யவில்லை...
வெளியே மழை
தன் வேலையைச் சிறப்பாகச் செய்து
கொண்டிருக்கிறது..
பறவைகள்
எங்கே கூடடைந்திருக்கும் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
'மிருகங்களுக்கு மழையொன்றும் செய்யாதா?'
மனம் கேள்வியைக் கேட்டுவிட்டு
சிறுவனைப் போல் என்னைப் பார்க்கிறது...
யாசகனின் போர்வையே ஒழுகிக் கொண்டிருக்க
தூரத்தில் என்னைக் கடந்து போகிறான்...
இன்னம் சற்று நேரத்தில்
மின்சாரம் துண்டிக்கப் படலாம்...
மின்னல் பலமாக வெட்டிக் கொண்டிருக்கிறது...
நாயர் கடை டீ மட்டும்
மழைக்கெல்லாம் எங்கும் ஒதுங்குவதேயில்லை...
குளிர் மெல்ல
என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகிறது...
மரங்கள்
என்னை இரசித்துக் கொண்டிருக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
30/09/2019

Popular Posts