
தேடப்படும்
குற்றவாளியென்று சொன்னார்கள்
அவன் ஒற்றை
மருவை மட்டும் வைத்துக் கொண்டு
மாறுவேஷத்திற்கு மாறிக்கொண்டான்
அவனை இப்போது எல்லோரும்
எளிதில் கடந்து போனார்கள்
அவன் போகும் பாதைகளில்
சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது
கை குலுக்கியவர்கள்
வெளிச்சம் வந்துவிட்டதாக
பேசிக் கொண்டார்கள்
அதிபர் அவனை
அரவணைத்து மகிழ்வித்தார்
அவனது சட்டைப் பணம்
அவரது பைக்கு மாறிக்கொண்டது
குனிந்த போது விழுந்த மருவை
எடுத்துக் கொடுத்த புலனதிகாரி
பத்திரமாக ஒட்டிக் கொள்ளுங்கள்
உங்களை இன்னமும் நாங்கள்
தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
அவன்தான் இவனென்று
சொன்ன பத்திரிகைக்காரனை
கையும் மையுமாகக் கைது செய்தார்கள்
அதிபர் மீது ஆவேச மைவீச
முயன்றதாகக் குற்றச்சாட்டு
- வங்கியை நோக்கித்தான்
போய்க் கொண்டிருக்கிறேன்
கிடைக்காத கடனை கேட்பதற்காக -
என்ன செய்வது பயிர்கள் கருகுகிறதே!
- மு.முகமது பாட்சா*
31 /03 2018


























