அவனை
எல்லோரும் பைத்தியமென்றார்கள்
எழுதியெழுதி
கிழித்துக் கொண்டேயிருந்தான்...
அவனது அழுக்காடையில்
சில வன்சொற்கள் உட்கார்ந்திருந்தன
அவனிப்போது
நூற்றாண்டுகள் கடந்து வாழ்கிறான்
அவன் யுகத்தின் பரிணாமத்துகள்களில்
யாருக்கும் இடமில்லை
வலிகளையெல்லாம் கடந்துவிட்டான்
போதிமரம்
அவன் காலடியில் தவம் கிடக்கிறது
அவனெழுதிய கவிதைகளை
யாருக்கும் வாசிக்க அருகதையில்லை
அவனென்பது
அவன் மட்டுமில்லையென்பது
இங்கு எத்துணைப் பேருக்குத் தெரியும்?
- மு.முகமது பாட்சா*
01 /09 /2018
அந்த முகம்
எனக்குள் அப்படியே உறைந்து போனது
என் மௌனத்தோடு
அடிக்கடி பேசிக் கொண்டேயிருக்கிறது
கனவிற்குள் நுழைந்து எழுப்புகிறது
நிழலோடு நிழலாய் நடக்கிறது
நான் இரையெடுக்கும் போதெல்லாம்
அலகை உரசிக் கொள்கிறது
என் முகத்தை அடிக்கடி கழுவுகிறேன்
கைகளில்
அந்த முகம் ஒட்டிக்கொள்கிறது...
எழுத்துகளில் என்னைக் கரைக்கிறேன்
கவிதையாய் அமர்ந்து
காதலின் பூங்கொத்தளிக்கிறது...
நிச்சயம் அஃதென் முகமேயல்ல - ஆனாலும்
ஆன்மாவிற்குள்
பாடிக் கொண்டே திரிகிறது....
அந்த முகம்
சற்றுமுன்தான் என்னைக் கடந்து போயிற்று
காரணம் சொல்லத் தெரியவில்லை
ஏனோ அழுது கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
31 /08 /2018
எழுதுகோல்களின் மந்திரம்
எழுத்துகள்தான்
விரல்கள் உருட்டுகின்றன ஜபத்தை
வெள்ளைத்தாள்
தன்னையே நிரப்பிக் கொள்கிறது
வார்த்தைகள் உயரே பறக்கின்றன
அடைகாத்தக் கூட்டில்தான்
எத்துணை அழகான குஞ்சுகள்....
புங்கை மரத்துக் காற்றின் குளுமை
சில்லென்று இறங்கிவரும் மேகம்
உறக்கம் தொலைத்துவிட்ட ஞானம்...
எழுத்துகளோடு
பேசிக்கொள்கிறது தூரிகை
வண்ணம் கூட்டும் வாசத்தின் நடுவே
ஏதோ ஒரு துர் நாற்றம்....
எங்கோ சில துப்பாக்கிகளின் ஓசை...
விடாது கேட்கும் அழுகுரல்கள்...
புழுக்கத்திலிருக்கின்ற
வார்த்தைகளின் எழுத்துகள்....
எழுதாத பேனாக்களைச் சபிக்கும்
புத்தனின் சவம்...
வறுமையின் வயிறுகள்
பசியை மட்டுமே
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன...
அங்கே இரைந்து கிடக்கும் எழுத்துகளை
தீ மூட்டிக் கொளுத்துங்கள்
சுகாதாரத்திற்கு அதுதான் மிகவும் நல்லது.
- மு.முகமது பாட்சா*
31 /08 /2018
எது சத்தியமான வார்த்தை?
எதைத் தேடிக் கொண்டிருக்கிறது என் கவிதை?
எங்கேதான் போய்க் கொண்டிருக்கிறோம் நாம்?
நிழலுக்குள் உட்கார்ந்து
நிலவைப் பிடித்துப் பந்தாடும் போதுதான்...
கூண்டிற்குள் ஒரு பறவை
கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறது...
கன்னங்களைப் பாடும் போதுதான்
கன்னிமையை ஒருவன் திருடிக் கொண்டிருக்கிறான்
என் தேநீர் அத்துணைச் சுவையானதல்ல
கொத்தடிமைகளின் வியர்வைச் சூடு...
என் சாதத்தில்தான் எத்துணைத் தற்கொலைகள்?
எத்துணைக் கண்ணீர்கள்?
என் வார்த்தைகளை
ஆய்ந்து கொண்டிருக்கும் கண்கள்
அதிபயங்கரமானவை...
எழுதாத எழுத்துகளில் உட்கார்ந்திருக்கும் கோபம்
தன்னைச் சிறை வைத்துக் கொள்கிறது
சிறையின் நிழல்கள் குளுமையானதல்ல...
வெப்பத் தீயில் எரிகிறது என் கவிதைகள்.
- மு.முகமது பாட்சா*
30 /08 /2018
கி.மு வின் கல்லறையொன்றை
பூமிக்கடியில் மீட்டார்கள்...
அதன் நீளம் சற்றேறக்குறைய எட்டடி
வேலைப்பாடுடைத்த படிகம்
பெரும் மன்னனாக இருக்கலாம்...
இல்லையில்லை இல்லவேயில்லை
சில குறியீடுகள்
மதம் சார்ந்த தீர்க்கன் என்றொரு வாதம்
அருகிலிருந்த கல் ஈட்டி
மறவன்தான் இவனோ என வியப்பு
உடைத்த பின் தெரிந்தது
ஒரு குரங்கின் எலும்புக்கூடு
அதனருகில் பழம் மது போத்தல்....
அது கடவுளென்று
சிலர் இப்போது பேசிக் கொண்டிருந்தார்கள்.
- மு.முகமது பாட்சா*
28 /08 /2018
எல்லோருமே ஒரு கூட்டிற்குள்ளேறி
உட்கார்ந்து கொண்டார்கள்
கூடு இப்போது
பறக்குமென்று ஜபிக்கப்பட்டது
கூடும்
வானத்தை நோக்கிப் பறந்து சென்று...
ஏழாம் வானத்தைக் கடந்த பிறகு
ஆதாமின் ஆப்பிள் மரம்
இதுதானென ஒருவன் கைகாட்டினான்
அலங்கரிக்கப்பட்ட வாசலைக் காட்டி
ஒருவன்
இதுதான் நரகமாக இருக்கும் என்றான்
தொங்கும் கோளைக் காட்டியவன்
இதுதான்
திரிசங்கின் சுவனமென்றான்
கூடு மெல்ல புகையத் தொடங்கி
பற்றியெரிய.....
எல்லோரும்
கீழே குதித்த பிறகுதான் தெரிந்தது
பூமி எரிந்துவிட்டிருந்தது.
-மு.முகமது பாட்சா*
29 /08 /2018
அதிகமாக மது அருந்தியிருக்கலாம்
அல்லது
யாரையாவது காதலிக்கத் தொடங்கியிருக்கலாம்
இந்தக் கவிதை
சற்று அளவிற்கு மீறித்தான் தடுமாறுகிறது...
வானத்தைப் பூமியென்கிறது
பூமியை
புல்லாங்குழலின் துளையென்கிறது...
வார்த்தைகளின் இடைவெளியில்
குறியீடுகளை நுழைத்து வேடிக்கை செய்கிறது
விமர்சகன்
அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருக்கிறான்....
விழாக் குழுவினர்
கைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
ஆனாலும் ஏனோ தெரியவில்லை
துப்பாக்கிகளின் பசித்த வாய்கள்
உளறல் கவிதையைக் குறிவைத்துக் காத்திருக்கின்றன...
நாளை நிச்சயம் தெரிந்துவிடும்
இறந்து கிடப்பது ஒரு பெண்ணா அல்லது
போராளியாயென்று...
இருந்தாலும் தலைப்பு என்னமோ
மதுக் கிண்ணம்தான்.
- மு.முகமது பாட்சா*
27 /08 /2018
நான் கொஞ்சம்
இனிப்பை வாங்கிக் கொண்டு நகர்ந்த போது
எனது மொபைலில்
ஸ்வீட் கடையொன்று கடையை விரித்தது
ஆதார் கார்டை நகலெடுக்கும் வேளையில்
ஒருவன்
பின் நெம்பர் கேட்டு அவசரம் காட்டுகிறான்
திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஸ்நாக் ஆர்டர் கேட்டு
எனது செல்பேசி சிணுங்குகிறது
படம் சுமார்தான் என்று வெளியேறுகிறேன்
ஓலோ புக் செய்ய விளம்பரம் வருகிறது
வீட்டில் வந்து விழுந்து
ஸ்மார்ட் டிவியில் செய்திக்கு நுழைகிறேன்
இடையில்
எனக்குப் பிடித்த அதே காஃபியின் விளம்பரம்
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
யாரோ என்னை
அங்கங்கே திருடிக் கொண்டிருக்கிறார்கள்!
இப்போது நான்தானா
நானென்ற சந்தேகம் மெல்லத் தலை யாட்டுகிறது...
திரைகளை இழுத்துவிட்டு
இருட்டிற்குள் கட்டிலில் புதைகிறேன்...
எனக்குப் பிடித்த நறுமணம்
குளிரூட்டும் பெட்டியிலிருந்து வழிகிறது
எனக்குப் பிடித்த நடிகையும்
செல்பேசியில் அழைத்துக் கொண்டிருந்தாள்!
- மு.முகமது பாட்சா*
25 /08 /2018
அந்தச் செய்தியை படித்தபின்
எல்லோரும்
அதன்பின் சென்று கொண்டிருந்தார்கள்...
செய்தியைச் செய்தியாக
நால்வர் மேய்ந்து கொண்டிருக்க
செய்தி இப்போது
வேறொரு செய்தியாக உலாவரத் தொடங்கியது...
இந்தச் செய்தி
ஊர்களை எரிக்கத் தொடங்கியவுடன்
அதையொட்டிய செய்திகள்
கலவரங்களாக மாறித் தொலைக்க...
செய்திகளை அடக்குவதற்காக
வேறு செய்திகள் துப்பாக்கிகளுடன் இறங்கின...
நல்லெண்ணச் செய்திகள் நாலாம் பக்கத்தில்
மூலையில் ஒட்டிக் கொண்டிருக்க...
வெட்டிக் கொண்ட செய்திகள்
சாதிகளுக்குள் நுழைந்து தும்சம் செய்தது...
செய்திகளே இல்லாத உலகத்திற்குள் நுழைய
எத்தனிக்கும் போதுதான்
பெரும் மழையொன்று வந்து
செய்திகள் அத்தனையையும் அடித்துச் சென்றது
இப்போது நடமாட்டத்திலுள்ள செய்தி
பெரும் சேத நிலவரம்தான்.
- மு.முகமது பாட்சா*
24 /08 /2018
ஒரு சில கேள்விக் குறிகளையும்
ஆச்சரியக் குறிகளையும் வைத்துக் கொண்டு
பெரும் கவிதை ஒன்றிற்காக அலைகிறேன்.
சிற்பக் கூடத்தில் சிலையொன்று
சிற்பியை செதுக்கிக் கொண்டிருந்தது.
ஒரு மரம்
வேர்களால் கவிதையெழுதிக் கொண்டிருக்க
பூக்களைப் படித்துவிட்டுப் போகிறான் வாசகன்.
என் எழுதுகோலின் மசி தீர்ந்துவிட்ட பிறகும்
விரல்கள் அதையே பிடித்துக் கொண்டிருக்கின்றன.
காகிதத்தின் தவமாய்
மனம் வெள்ளையாகவே இருக்கிறது.
நான் கவிஞன்தானா? இல்லையா?
என்னை இன்னமும் எழுதாத அந்தக் கவிதை
கேள்விகள் கேட்பதில் நியாயமிருக்கிறது.
இப்போது என்னிடமிருப்பது
சில கேள்விக் குறிகளும்
ஒரு சில ஆச்சரியக் குறிகளும் மட்டுமே!
- மு.முகமது பாட்சா*
23 /08 /2018
ஒரு கவிதைக்குள்
நுழைந்துபோகத் தெரியாமல்
அங்கேயே நிற்கிறார்கள்....
அஃதொரு மாபெரும் குகையென்று
ஒருவன் பிரஸ்தாபிக்கிறான்...
இல்லையில்லை
அடர் வனமென்று ஒருவன் எச்சரிக்கிறான்...
கவிஞனைத் தேடிக் கொண்டும்
சிலர் ஆங்காங்கே திரிகிறார்கள்....
அவர்களின் கைகளில் சூலாயுதங்கள்
கவிதைக்குள்
அணு ஆயுதங்களைக்
பதுக்கி வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு...
'கவிதைக்குள் நுழைவது
ஆபத்தானதென்று'
எச்சரிக்கைப் பலகைகள்
ஆங்காங்கே வைக்கப் படுகின்றன...
ஒரு பிரளயத்தைப் பாடியக் கவிதை
இன்னொரு
பிரளயத்திற்குள் நுழைந்துவிட்டதாக
தேசாந்திரிகள் பாடிச் செல்கிறார்கள்...
அந்தக் கவிதை மெல்ல
பிரளயத்திற்குள் மூழ்குகிறது...
இப்போது ஆங்காங்கே
சில செடிகள் முளைத்திருக்கின்றன...
அதன் வார்த்தைகளில்
ஆயுத எழுத்து அதிகமாக இருக்கின்றன.
- மு.முகமது பாட்சா*
21 /08 /2018
அந்தக் கவிதை
ஒரு மலையைச் சுமந்திருந்தது...
பறவைகளெல்லாம்
வார்த்தைகளாகப் பறந்து மகிழ்ந்தன...
அருவியொழுக்கில் ஆர்ப்பரித்த வார்த்தைகள்
குளுமைக் காற்றைச் சுமந்து வந்தது
ஒரு பரிணாமத்தினுடைய வரலாறுகள்
அங்குதான் மேய்ந்து கொண்டிருந்தன...
நீங்கள் அதை விலங்குகளென்றீர்கள்
அவையோ 'நீங்களெல்லாம்
இங்கிருந்து விலகுங்கள்' என்றன...
வாசகனாய் நுழைந்தவர்கள்
வார்த்தைகளை ரசிப்பதற்குப் பதிலாகச்
சுவைக்கத் தொடங்கினீர்கள்
மலையை உடைத்து
ரெசார்ட்டுகளை எழுப்பிக் கொண்டீர்கள்...
கவிதை இப்போது
கரை புரண்டோடுகிறது....
ஆனாலும் வார்த்தைகளைப் படிக்காமல்
வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
- மு.முகமது பாட்சா*
20 /08 /2018
காதலே! மொழியினழகை
நேர்த்தியாக உள் வாங்கிக் கொள்கிறாய்
பந்தமென்பது உறுதியான மதிலும்தான்
கைப் பிடித்த கைகளுக்குள் உறங்கிக் கொள்வது
வாழ்க்கையின் வசந்தகாலம்
உன்னிரவுகளையும்
நான்தான் தூங்கிக் கழித்திருக்கிறேன்
உன் பகல்களையும்
நான்தான் பங்கிட்டுக் கொள்கிறேன்....
காதலென்ற வார்த்தை
கடைசிவரை வருவதாகும்...
உறவுகளின் சங்கிலிகளை
உன்னால் மட்டுமே ஒட்டிவைக்க முடிகிறது
புன்னகைகளை
அடிக்கடி மோதவிட்டுக் கொள்கிறோம்
பொல்லாங்குக் கோபங்கள்
தானாகவே மோதிப் பார்த்து விழுகின்றன...
காதலே!
பந்தமென்பது உறுதியான மதிலும்தான் .
- மு.முகமது பாட்சா*
19 /08 /2018
அந்த வீட்டில்
எங்களுக்கு முன்பாகவே வெள்ளம்
நுழைந்திருந்தது.
ஒரு முதியவர் மட்டும்
உயர்ந்த பரணில் உட்கார்ந்திருந்தார்...
அவரருகில் சில புத்தகங்கள் மட்டும்
நனையாமல் இருந்தன...
'வாருங்கள் வெள்ளம் உயர்கிறது'
என்று குரலெழுப்பினோம்
'தொந்தரவு செய்யாதீர்கள்' என்றவர்
கடைசிக் குறிப்பை
வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்...
'உங்களுடன் யாருமேயில்லையா?'
எனக் கேட்டோம்
சிரித்துவிட்டு, 'நோவாவின் கப்பலில்தான்
உட்கார்ந்திருக்கிறேன்
வந்து ஏறிக் கொள்ளுங்கள்' என்றார்
சுவாதீனம் குறைந்திருக்கலாம்...
- 'இவையெல்லாம்
அடுத்தயுகத்தின் ஆரம்ப விதைகள்'
என்று ஆர்ப்பரித்தார்
வெள்ளம் கொள்ளையாய் நெருங்கி
எங்களின் படகை கவிழ்த்தது...
இப்போது
நாங்கள் நீந்திக் கொண்டிருக்கிறோம்
முதியவர்
நோவாவின் கப்பலில் மிதந்து
சென்று கொண்டிருக்கிறார்.
*
- மு.முகமது பாட்சா
18 /08 /2018
நாடோடியின் பாடலுக்கு
மொழி பெயர்ப்புகள் தேவையில்லை
அடவிக்குள் நுழைந்த வார்த்தைகளை
உள் வாங்கிக் கொள்ளுங்கள்
நிச்சயமிது அழுகையின் பாடல்தான்
கைகளைச் சுருக்கிக் கொண்டவன்
கால்களால் நழுவிப் போகிறான்
வெள்ளத்தின் பருக்கைகள்தான் எப்போதுமே
வேடிக்கைக் காட்டுகிறது
எனது' நான்'
எந்தக்கடலில் சங்கமிக்கும் யாரறிவார்?
சீரணிக்காத உணவிற்கு
வாந்தியென்றுதானே பெயர்...
கண்ணீர் துடைக்காத கைகள்
குளிர் பதனப் பெட்டியின் பிரேதங்கள்
கொடுத்துப் பாருங்கள்
கூடவே வருவது நிழலாகவிருக்காது
உதவியென்பது
எப்போதுமே முதல் சொட்டு தாய்ப்பால்....
அழுகிறது குழந்தை
மாராப்பை மூடியே வைக்காதீர்கள்.
- மு.முகமது பாட்சா*
18 /08 /2018
அந்த இரவுக்கவிதை
நீண்டு கொண்டே செல்கிறது...
அது தொடங்கிய புள்ளியில்
ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டிருக்க
அதன் வழியாக நீந்திக் கரை சேர்கிறேன்
விடியலின் வெளிச்சம்
சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க
படுக்கையறை களவாடப்பட்டிருந்தது!
எழுதாத வெள்ளைத் தாளாய்ப் பூத்திருக்கும்
ஒற்றை ரோஜா...
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமியின் பார்வையைப் பறித்துக் கொள்ள
ருசியறியாமல் தேநீர் கோப்பையை
அருந்திக் கொண்டேயிருக்கிறேன்....
என் பார்வையின் ஒளியை
விரல்கள் திருடிக் கொண்டனவென்று
கவிதையின் ஆறாவது விரல் சொல்கிறது!
நான்
பிணமாகவே இருப்பது யாருக்குத் தெரியும்?
கவிதை முடியட்டும்
மீண்டும் உயிர் பெற்று எழுகிறேன்.
- மு.முகமது பாட்சா*
17 /08 /2018
கடவுளின் தேசத்தில்
கண்ணீர்த் துளிகளின் கவிதை எழுதப்படுகிறது
அடவிகன்
ஆங்காரமாய்ப் பாடுகிறான்
காடுகளில் நுழைந்த பெரும் ஓசை
ஊருக்குள் நுழைந்து
ஒப்பாரியினிசையைக் கூட்டுகிறது...
காயம்பட்ட பூமி
காற்சிலம்பையேந்தி நீதி கேட்கிறதாம்
பாதை வகுத்துக் கொண்ட நதி
சதங்கையைக் கட்டி மிதந்து போகிறது....
மகாபலி பூக்கோலம் கேட்கிறான்
மயானத்து வாசமல்லவா
மலர்களின் இதழ்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது
வாமனன் குடையை மறந்துவிட்டானாம் -
அடவிகனின் ஆக்கிரகம் அடங்கிப்போக
கொம்பூதியாவது சூரியனை அழைக்கட்டும்...
கடவுளின் புன்னகை வெளிச்சம் காட்டுவதற்கு.
- மு.முகமது பாட்சா*
16 /08 /2018
இரவின் கைகளில்
தேசியக்கொடி அசைந்து கொண்டிருக்கிறது
நிழல் தலைவர்கள்
தேசத்தை நிமிர்த்துக் கட்டுகிறார்கள்
வல்லூறுகளின் கனவுகள் வாய்க்குமென்று
பட்சிசாத்திரன்
ஜாமமுழக்கம் செய்கிறான்...
விரல்களுக்குள்
விரல்கள் கோர்த்த பிரச்சனைகள்
விடுதலைப் பெறாமல் காத்துக் கிடக்கின்றன..
மயக்கமருந்திய மண்டைகள்
மயானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்க
புதைகுழிகளுக்குள்
தேசத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்
தொல்பொருள் ஆராய்ச்சியாளன்...
- மு.முகமது பாட்சா*
14 /08 /2018
ஒரு நிலையின் படியில்
நிர்மூலமாய் உட்கார்ந்திருக்கிறேன்
சாகரத்தின் மேற்புழையில்
மழைத்துளிகளின் சொற்றொடர்கள்
வனாந்தரம் பூசிய சப்தம்
ஓய்வெடுக்கும் பறவைகளின் கூடுகள்
செவ்வானத்தின் கீழ்
சின்னதாயொரு கையொப்பம்
சிருங்காரம் இழையோடும்
சிங்காரக் காற்றின் மென்னசைவுகள்
ஒரு பிரளயத்தின்
பிரபஞ்ச வார்த்தைகளின் நெசவு
நாளைதான் பிறக்கவேண்டும்
அவளின் அணுத்துகள்களின் மூச்சில்
அதுவரை நிலையின் படியில்
ஒரு நிர்வாணத் தவம்.
- மு.முகமது பாட்சா*
13 /08 /2018
கடவுச் சொல்லைத் தட்டியவுடன்
கதவு நகர்ந்தது...
எனது வரிசை எண் 246
குருசரில் 43 ம் கடையில் நுழைந்து
தின்பண்டங்களை வாங்கிக் கொள்கிறேன்
20 டாலர் கார்டில் கழிந்தது
தின்பண்டம் வாங்காவிட்டால்
தியேட்டரின் கதவுகள் திறக்காது...
246 ல் பின்னை உள் வாங்கிக் கொண்ட லேசர்
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது
எனது கார்டில் 500 டாலர் குறைந்திருந்தது
நான் திரையரங்கினுள் இருக்கிறேன்
அருகில் எனக்கான தின்பண்டங்கள்...
இப்போதெல்லாம்
இதுபோன்ற படங்களுக்குத்தான் கூட்டமதிகம்!
தியாகராச பகவதர்
பஞ்சணையிலிருந்து பாடிக்கொண்டேயெழ
'மன்மதலீலையை வென்றாருண்டோ
என்மேல் உனக்கேனோ பாராமுகம்'
- மு.முகமது பாட்சா*
12 /08 /2018
இந்தக் கவிதை தானெழுதியது என்றாள்
வியந்து படிக்கிறேன்...
எவ்வளவு வளர்ந்துவிட்டாள்!
அப்பாவை ஆராதிக்கும் கவிதையில்
அம்மாவின் முத்தங்களைச் சேர்த்திருக்கிறாள்
சன்னல்வழி வெளிச்சம் பாய்கிறது
ஒற்றை முத்தத்தில்
ஒரு யுகம் பிரசவித்தளின்
காகிதக் கப்பல் விட்ட ஈரம் கசிகிறது...
விளையாட்டுப் பொம்மைகளில் நானும் இருக்கிறேன்
என் கையில் அவளின் கவிதை
என்னப்பா எப்படியிருக்கிறது? எதிரொலிக்க...
அவள் புகுந்தவீட்டில்
நானென்ன அடையாளமாகவிருப்பேன்?
அவளும் அழுது கொண்டிதானிருப்பாள்
கணவனுக்கு எந்தக் காரணமும் சொல்லாமல்.
- மு.முகமது பாட்சா*
11 /08 /2018
நானும் கவிதையும்
மழைக்காக ஒதுங்கிக் கொள்கிறோம்
தேநீர்க் கடையின் வெப்பத்தை
கவிதை அருந்துகிறது
எனக்குமொரு சூடாகத் தேநீர்...
நிலவிற்கு யார் குடை பிடித்தார்கள்
வானம் இருட்டாகவே இருக்கிறது
மின்னலின் வெளிச்சத்தில்
மின்னலாக மறைகிறது ஒரு வார்த்தை
வெப்பம் சூடேற்ற
தேநீர் கோப்பையின் மேலெழும்
ஒரு பேரண்டம்
பிரபஞ்சத்தின் வாசலைத் திறக்க
உள்ளே நுழைகிறோம்
அங்குமொரு தேநீர்க் கடை
- மு.முகமது பாட்சா*
10 /08 /2018
இரங்கற்பா எதற்குத் தலைவா...
நீ குழியில் இறங்கியதற்கா?
உறங்காது விழித்திருந்தோம் உன்னருகில்
நீ போகும் கடைசி ஊர்வலம் காண்பதற்கு
இறந்தாலும் மீண்டும் எழுவதற்குத்தான்
உன் எழுத்துகளை இங்கு விதைத்தாயோ!
இரவல் வாங்கியதை
அதிக நாள் வைத்துக் கொண்டேன்...
கொடுத்துவிட்டு வருகிறேனெனச் சென்றுவிட்டாயா?
மோதிரத்திலா வைத்திருந்தாய் இதயத்தை?
அண்ணாவின்
மோதிரத்திலா வைத்திருந்தாய் இதயத்தை?
கழற்றாமல் எடுத்துச் சென்றாய்
- நீ மகா கண்ணியன் -
வாசிக்கத் தெரிந்தவன் நீ
உன் வசிப்பிடத்தை விட்டாக் கொடுப்பாய்...
வாங்கிவிட்டாய்ப் போராடி
நீதானே உண்மையில் போராளி
கட்டுமரம் கடலின் மீதுதான் மிதந்து சென்றது...
ஆம் கட்டுமரம்
மக்கள் கடலின் மீதுதான் மிதந்து சென்றது
இங்கும் உப்புத் தண்ணீர்தான்.
ஆனாலும் வங்கக்காற்று உனக்கு எப்போதும் வீசும்.
ஓய்வெடு! நன்றாக ஓய்வெடு
உன்னெழுத்துகளை பிடித்து எழுந்து கொள்கிறோம்.
- மு.முகமது பாட்சா*
09 /08 /2018
எதுவும் எளிதல்ல கடந்து செல்வதற்கு
எழுத்தாணியின் முனை சற்றே வளைந்திருக்கிறது
எழுதாத அந்தப் பக்கங்களை
யாராலும் எளிதில் எழுதிவிட முடியாது...
மனம் சமாதானக்குதிரையில் பயணிக்கிறது
பயணியோ கீழே விழுந்து கிடக்கிறான்
மூப்பிற்கு முகவுரை அவசியமில்லை
காற்றொன்று இப்போது தேவைப்படுகிறது
கீழேயிறங்க துடிக்கும் அந்தச் சருகிற்கு
காலத்தச்சனின் சக்கரம்
யாருக்காகவும் நிற்பதில்லை...
இன்றும் நாளையும் அதனிரு அச்சாணிகள்
காலத்தின் கண்களில்
கண்ணீரென்பதே கிடையாது...
அதன் கடிகார முட்கள் காலொடிந்தும் நிற்பதில்லை
நாம் மட்டும்தான் அழுகிறோம் சிரிக்கிறோம்
நம் நிழல்?
- மு.முகமது பாட்சா*
07 /08 /2018
யாருடைய வீட்டில் யார் நுழைவது?
தெளிவற்ற சப்தங்களாய்க் கேட்கின்றன
துப்பாக்கியோசைகள்
ஒப்பாரி வீட்டிலொருவன்
ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்கிறான்
நகரங்கள் நகர்ந்து கடலுக்குள் நுழைகிறது
இருட்டுதான் வெளிச்சம் ஏழைகளுக்கு...
பயனிலாப் பயன்கள்
சாலைகளில் கொட்டப்படுகின்றன
கண்களைக் கழற்றி கொடுத்துவிட்டு வருகிறேன்
இப்போது அவர்கள்தான் பார்க்கிறார்கள்
பழங்கதைவாதிகள் இன்னமும்
அந்தக்காலத்தை விட்டே இறங்கவில்லை...
நிஜத்தின் கொப்பளங்கள்
நீச்சத்தின் வாசம் சுமந்தே கனக்கின்றன
எங்களின் சேமிப்புக் கணக்குகளில்
எடுப்பதற்கென்று எதுவுமே கிடையாது ...
காடுகளைக் கழற்றிவிட்ட பாவம்
மிருகங்கள் எங்களை ருசிப்பார்க்கின்றன
நாங்கள் முதுகைச் சொறிந்துவிடுவதாக
சுகம் காண்கிறோம்.
வேறென்ன?
இதைத்தான் எப்போதும் சொல்கிறோமே...
வாழ்க பாரதம்! பாரத மாதாக்கீ ஜே!
- மு.முகமது பாட்சா*
06 /08 /2018
முதலெழுத்தின் அடுத்தெழுத்து நீ
அடுக்குமாடியென்று புகழ்கிறாய்
அத்திவாரமாய் நீயிருக்கிறாய்...
பூந்தோட்டத்தில்
கை குலுக்கிக் கொள்கிறோம்
பட்டாம் பூச்சிகளின் சந்தோசமாய்
ஒளிர்கிறது நமது சிறகுகள்
என் கண்களில் விழும் தூசிக்கு
அடிக்கடிக் கலங்குகிறாய்?
நாம் ஒட்டாத உதிரத்தின் ஒரே முகமூடி
ஒவ்வாமை வீட்டினுள் நுழையாது
பட்டத்துடன் பறப்பது நேசம்
பாசாங்கிற்கு ஏதுமில்லை வேசம்
நட்பிற்கு ஒருதினமாம் வேடிக்கை!
நாளெல்லாம் நம் தினம்தான் கேளிக்கை...
- மு.முகமது பாட்சா*
05 /08 /2018
தெளிவில்லாமல் திரிபவள்
பெரும் கதைகளின்
நூலகத்தைப் பூட்டி வைத்திருக்கிறாள்
நிமிர்ந்து திமிரும் சதைகளுக்குப் பின்னால்
கிழிந்த இதயமொன்று
தைக்கப்படாமல் சிதைந்திருக்கிறது
கிழிந்த ஆடைகளில் அவளின் கதை
சிதையாமலிருக்கிறது...
சபிக்கப்பட்ட உலகத்தை விட்டு
வெளியேறிவிட்டாள் ஈவா
சர்ப்பம்
அவள் தொடைகளைப் பின்னி நகர்கிறது
அவளின் உலகம் அவள் சமைத்தது
அவள்தான் ராணி அவள்தான் குடிமக்கள்
தண்டனையும் அவளே தருபவளும் அவளே
சக்தியும் அவளே சாந்தமும் அவளே
காமுகன் புணர்ந்தது கொடும் மிருகம்
அவள் புணர்வது மகா யோகம்
இருட்டும் அஞ்சும் மாச்சாம்பல்காரி
சுற்றி நின்று சிரிப்பது மயானத்து ஒப்பாரி.
- மு.முகமது பாட்சா*
04 /08 /2018
இந்தக் கவிதை இத்துடன் முடிவுற்றது
குப்பைக்கூடையின்
மேல் விளிம்பில் நின்று பார்த்த கவிதை
காற்றிடம் சிறகு வாங்கிச் சன்னலைக் கடந்தது
சுருக்கங்களை நீவிவிட்டு
ஒருவன்
அலைபேசியெண்ணை அதற்குள் நுழைத்தான்
பாதித்தாளாய்ப் பறந்தது கவிதை
சில்லறை மடித்தவன் தர்மம் செய்து
தூக்கியெறிந்தான் முடிந்தக் கவிதையை
முற்றுமென்று யார் சொன்னது?
முடிந்துகொண்டாள் காதலன் குங்குமத்தை
இப்போது அவள் வீடு நோக்கிப் போகிறது
முடியாத அந்தக் கவிதை...
-மு.முகமது பாட்சா*
03 /08 /2018
எனக்குள் நானிருக்கிறேன் என்பதை
எப்படி நம்புவது?
முதலில் உதிரக்கட்டியாகத்தான்
வயிற்றிலிருந்தேன்
அவள் உணவுதானென்னை உயிர்த்தது
என்னசைவுகள் எனதென்று
எப்படி நான் நம்புவது?
அவளசைவில்தான் ஒருக்களித்தேன்
நடக்காத ஜடமாய் விழுந்தாலும்
கொப்பூழ்க் கொடியை வெட்டித்தானே பிரித்தீர்கள்!
எனக்குள் நானிருக்கிறேன் என்பதை
எப்படி நம்புவது?
பால்கொடுத்த முலைகளல்லவா
என்னைப் பாட்டிசைத்தது
தோள் கொடுத்த அவள் துணைவனல்லவா
தோழமை சொன்னது
எனக்கான வண்ணம் ஏதுவென்று
எனக்கெப்படித் தெரியும்?
பேசுகின்ற மொழிகூட இரவல்தானது...
இரவும் பகலும் சூரியனின் பிரதிதானே
நிழலுக்குள் நான் உட்கார்ந்து கொண்டு
நிஜமென்பது வேடிக்கை !
- மு.முகமது பாட்சா*
02 /08 /2018