Friday, 30 July 2021

keep silence




ஆளாளுக்கு

சரித்திரத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறோம்!

நம்புவதற்கு

நீங்கள் முட்டாள்களாக

இருந்தால் மட்டுமே போதும்!


மன்னனை விட

மக்கள் பிரதிநிதி மிகவும் மோசமானவன்

கள்ளவோட்டுப் போட

அவன்தான் கற்றுக் கொடுக்கிறான்!


ஏழு மலைகள் தாண்டி

ஏழு கடல்கள் தாண்டி இன்னமும்

நம் இளவரசியை

யாரும் மீட்டப் பாடில்லை!


இப்போதுதான்

வாய்களைக் கட்டி இருக்கிறார்கள்

காதுகளையும்

கண்களையும் நீங்களாகவே மூடிக்கொண்டால்

கால்விரல்களை

எளிதாகக் கட்டி விடுவார்கள்!

keep silence


- முகமது பாட்சா*

30/07/2020

யா தைபா - 15

 #தைபா_15



மதுரசத்தை

அழகிய கோப்பைகளில் ஊற்றிக்

கொடுக்கிறார்கள்

நான் திக்ருகளின் குவளைகளில் அல்லவா

காதல் ரசத்தை

அருந்திக் கொண்டிருக்கிறேன் தைபா!



போர்த்திவிடு தைபா!

வெட்கத்தால் நான் அதிகம் குளிருகிறேன்...

உன் பக்கத்தில் என் கவிதைகள்

இன்னமும் ஈரமாகவே இருக்கின்றன!


முஸல்லாவில்

உன் முகம் பார்த்துதான் முத்தமிடுகிறேன்

வாசனை பூக்களையல்லவா

நீ எப்போதும்  வாரியிறைக்கிறாய்!


- முகமது பாட்சா*

30/07/2020


திக்ரு - நினைவுகள்

முஸல்லா- தொழுகை விரிப்பு

Thursday, 29 July 2021

நிரவவிதியம்

 



நூலாம்படை கோடுகளுக்கான கணக்கியலை

பிதாகோரஸ் விதிகள் 

என்றுமே விளங்கிக் கொள்வதில்லை!

திகிரியின் வெப்பத்தில்

திசையெட்டுமா ஒரே நேரத்தில் மிளிர்கின்றன?

விலங்குகளுக்கு

என்றுமே மனிதர்களின் முகம் கிடையாது......

அரசன் 

ஆண்டியாக பிறந்திருந்தாலும்

திசையெட்டும் தன்னைத் தொழவே பணிக்கிறான்!

நிசப்தம் 

நிரவம் கொண்ட காதுகளுக்கும் சப்தமே!

விதியென்பது

விளையாடச் செய்தப் பதுமை....

அரவம் அதற்குள் முட்டையிட்டிருக்கும் பார்!

.

- நட்புடன்..... முகமது பாட்சா*

29/07/2021



 

Wednesday, 28 July 2021

தைபா - 14

 



#தைபா_14


பெரும் மழையும்

காதலும் அடைகட்டிப் பெய்கிறது

சேதாரம் இல்லாமல்

என்னையும் சேர்த்துக்கொள் தைபா!


பூக்களைக் கழுவுகின்ற மழைதானே

என்னையும்

கழுவிக் கொண்டிருக்கிறது

தூய்மைதான் உன் பெயர் அல்லவா!


ஒலுவெடுக்கும் யாரும்

மழையை நினைப்பதில்லை!

மழையில் நனையும் என்னைத்தான்

மஜ்னூன் என்று மருள்கிறார்கள்!


எனக்குள்ளிருக்கும் மழை

பாட்டை இசைத்துக் கொண்டிருக்கிறது

காதலென்று பெயரிட்டு

காஃபாவை முன்னோக்குகிறேன்!


- முகமது பாட்சா*

29/07/2020


காஃபா - இறையில்லம்

அப்ஸ்ட்ராக்ட் பொய்




சன்னலை

திறந்தே வைத்திருக்கிறேன்

அவர்கள் சலிப்படைகிறார்கள்

என் கவிதைகள்

அதிகமாகவே சன்னல்களைத் திறப்பதாக!


வேறு வழியில்லை

புழுக்கம் போகவில்லை என்பது,

என் எழுத்துகள் வைக்கின்ற குற்றச்சாட்டு!


பூனையொன்று

சன்னலின் வழியே உள்ளே நுழைகிறது!

எலியை இப்போதுதான்

சன்னலுக்கு வெளியே விரட்டினேன் என்று

அதற்குத் தெரியாது!


என் மேசை மீது

இரண்டு நாட்களாகியும் சூடே ஆறாத

தேநீர்

என்னை இரசித்துக் கொண்டிருக்கிறது!


அதற்கும் கவிதை மனம்!


இப்போதுதான்

முழுமையாகப் பசியாறினேன் என்பதும்

கவிதையின் அழகியல்!


பின் எப்படி நான் மெலிந்திருக்க முடியும்?


இந்த அப்ஸ்ட்ராக்ட் கவிதை

பொய் சொல்லலாம்!


மன்னர்கள்

பொய் சொல்வது எப்படி என்றுதான்

எங்களுக்கு

பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!


- முகமது பாட்சா*

29/07/2020

எதற்காக?

 





அந்த நேரான கோடு

சற்று வளைந்து நெளிந்து நிமிர்கிறது...

அதனை

இப்போது கேள்விக்குறியென்றார்கள்!

பேதையின் இதிகாசக் காவியம்

எழுதுவதாய்ச் சொல்லும்

நவயுகக் கன்னியின் நாலாம் பக்கத்தில்

இலக்குவன்

விசாரணை கூண்டில் நின்று கொண்டிருக்க...

அகலிகையும், சூர்ப்பணகையும்

96 ம் பக்க

பிராது மண்டபத்தில்

மனுக்களோடு வரிசையில் நிற்கிறார்கள்!

பூமிஜா

வளைந்த கோடுகளை

வில்லாக்கி நானேற்றுகிறாள்...

அடுத்த பக்கத்தில்

சில வரிகள் மட்டும் எரிந்திருப்பது  

எதற்கென்று யாருக்கும் தெரியவில்லை!


- முகமது பாட்சா*

28/07/2020

யா தைபா 6 - 13

 #தைபா_6


பெரும் மழையொன்றில்

பேரானந்தத்துடன் நனைகிறேன் தைபா,

உன் அருள் மழை அஃதென்பதால்!


சாரல் மழை

தஸ்பீக்களாக எங்கும் உருள்கின்றன

ஓடையில் ஒளிர்கிறது

மேகமாய் விரியும்  வெள்ளாடை!


இஸ்தபரக் விரித்து

வார்த்தைகளைத் தூபகலத்தில் தூவுகிறேன்

வாசனை நுகர்வதற்கு

வாசல் வரையாவது வருவாயா!


ஹிஜரத் செய்யும் ஒட்டகம் நான்

உன்னைத் தேடுவதற்காகவே அலைகிறேன்

தாகம் பெரிதல்லவா!


- முகமது பாட்சா*

19/07/2020

இஸ்தபரக் - சிறந்த பட்டாடை

ஹிஜரத் - இடம் பெயர்தல்



#தைபா_7


உன் இரசவாதத்தில்

மெய் சிலிர்க்கிறேன் தைபா

பாதையில் முற்களைப் போட்டுவிட்டு

பார்வையில்

பூக்களையல்லவா சொரிகிறாய்!


நானொரு காகிதக் கப்பல்

ஆனாலும்

கடலளவு ஆசைகளையல்லவா

சுமந்து கொண்டு செல்கிறேன்!


எனக்குள்ளிருக்கும் அழகிய மீனை

நீயே சமைத்து உண்டுவிடு

இப்லீஷின் பூனை

என்னுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறது!


இரையெடுக்கும் போதெல்லாம்

புறாக்கள்

உன்னையல்லவா முத்தமிடுகின்றன!

அதானின் அலைவரிசை

முகிலையணைத்து முத்தமிடுகிறது

முஸல்லாவை நிறைக்கட்டுமா!


- முகமது பாட்சா*

21/07/2020


இப்லீஷ் - சாத்தான்

முஸல்லா - தொழுகை விரிப்பு

,..............

#தைபா_8


பகலைவிட இரவு

குளுமையாக இருக்கிறது தைபா!

திக்ருகளால் நெய்கிறேன்

பட்டாடையை உடுத்திக் கொள்வாயா!


கம்பளியாடைக்காரன்

உன்னைப்

புல்லாங்குழலால் இசைக்கிறான்

நானொரு ஆடாக அமர்ந்திருக்கிறேன்!


நதியின் சோகத்தைக்

கூழாங்கற்கள் இசை மீட்டுகின்றன...

என்னைத் தழுவிச்செல்ல

மழையாக ஓடி வரமாட்டாயா!


ஆகிரத்து அங்கேயே இருக்கட்டும்

என்னை ஏரில் பூட்டாமல்

துனியாவில்

உன் பாட்டுகளை எப்படிதான் உழுவேன்?


- முகமது பாட்சா*

22/07/2020


திக்ரு - நினைவுகள்

ஆகிரத்து - மறுமை

துனியா - இம்மை

.............

#தைபா_9


அந்திவானத்துப் பறவைகள்

ஆயத்துல் குர்ஸியை ஓதிக்கொண்டு

திரும்புகின்றன!

கூடுகளுக்குள் கூடுகட்ட வா தைபா!


மக்ரீப்பின் வானம்

என்னைப்போலவே வெட்கப்படுகிறது!

இஷாவின் பர்ளுவில்

எத்தனை இரக்காத்துகள் தொழவேண்டும்?


யாசகனின் கைகள் மேலெழுகின்றன

தப்ஸின் இசையைத்

தரையில் கிடத்தி உருட்டுகிறேன்...

மஜ்னூவிற்குப் போதை சற்றதிகம்தான்!


இரவை

முடித்துவிடாதே தைபா!

இன்னமும் உன்னிடம் பேசவேண்டியது

அதிகம் இருக்கின்றன!


- முகமது பாட்சா*

23/07/2020


ஆயத்துல் குர்ஸி - இறைவசனம்

மக்ரீப்,இஷா - தொழுகை நேரங்கள்

இரக்காத்து - தொழுகை அளவு

தப்ஸ் -  இசைக்கருவி



#தைபா_10


உன் புகழ் மாலையில்

அத்தரைத் தெளித்து வாசனைக் கூட்டி

அதானின் சிறகுகளுக்கும்

முத்தமிட்டு தூது அனுப்புகிறேன் தைபா!


ஒளுவு அலம்பும் நீர் நிலையில்தான்

என்னவொரு சங்கீதம்!

ரேஹாலிகள்

வாசலைத் திறந்து வைக்கின்றன

உன் வார்த்தைகளை இசைப்பதற்காகவே!


எத்தனை முறை உச்சரிப்பது

உன் பெயரை?

அத்தனையிலும் உன் வாசனையையல்லவா

பூசியிருக்கிறாய்!


விரல்களுக்குள்

உன்னை எண்ணிவிடப் பார்க்கிறேன்,

அத்தனையிலும்

அடங்கிவிடுவாயா என்ன ?

யாசிப்பதிலும் நேசிக்கிறேன் தைபா!


- முகமது பாட்சா*

24/07/2020


அதான் - பாங்கு

ஒளுவு - சுத்தம் செய்து கொள்ளல்

ரேஹாலி - புத்தகம் வாசிக்கும் மடிப்பு மேசை

.......

#தைபா_11


இப்லீஷ் இடறிவிட்ட பாம்பு

என் விழிகளுக்குள் நடனமாடுகிறது!

தவறிழைக்கும் முன்பாகவே

என்னைக் கைது செய்துவிடு தைபா!


கனவுகளைத் தினமும் உருட்டுகிறார்கள்

தாயம் விழுகிறது

நான் என் காதலைத்தான் உருட்டுகிறேன்

என் காயமே நீதான் தைபா!


நான் ருக்ஊவில் குனியும் போது

நம் காதல்

தக்பீர் கட்டிக் கொள்கிறது...

சலாம் கொடுக்காமல் தொழலாமா!


யாசகன் கைகளில்

பிச்சையாக எதையும் கொடுத்துவிடாதே...

என்னையே எடுத்துக்கொள்

நானே செல்வந்தன் ஆகிடுவேன்!


- முகமது பாட்சா*

25/07/2020


இப்லீஷ் - சாத்தான்

தக்பீர், ருக்ஊ - தொழுகை நிலை


........

#தைபா_12


அரண்மனைகள்

ஆபரணங்களை மட்டுமே காதலிக்கின்றன,

நான் உன்னழகையல்லவா

நேசிக்கிறேன் தைபா!


அஸ்மாவுல் ஹுஸ்னாவில்

அதியற்புத நறுமணம் கமழ்கிறது

புழுக்கத்தைப் போக்க

ஆயிரம் விசிறிகள் தேவையில்லை

உன் பெயர்கள் மட்டுமே போதும்!


எறும்புகள் போல்

சேகரிக்கிறேன் உன் மீதான காதலை

என்னோடு சேர்ந்து

நீயும் உணவருந்த மாட்டாயா?


கடற்கரை காகங்கள் காத்திருப்பது

கரையொதுங்கும் மீன்களுக்காக...

ஆனால்;

நான் கடலையேயல்லவா

அருந்தக் காத்திருக்கிறேன் தைபா!


- முகமது பாட்சா*

27/07/2020


அஸ்மாவுல் ஹுஸ்னா -இறைவனின் திருப்பெயர்கள்


.......

#தைபா_13


எனக்குள் என்னையே

தினமும் பாயாக முடைகிறேன் தைபா!

உனக்குள் வருவதற்கு

ஓர் அழகிய தொழுகை விரிப்பாக!


படர்கின்ற கொடிக்கு

ஓர் இருப்பிடம் தேவைதானே!

அது நீயாகவே இருந்துவிடு

நம் காதல் அழகழகாய் பூக்கும்!


மரணத்தின் வாசலில், என்

சுவாசம் இசைக்காமல் போகலாம்,

கல்புக்குள் இருக்கும் கஸலின் வாசனை

உன் கைகளுக்குள்

வராமலா போய் விடும்!


இகாமத்திற்குப் பின்னும் நமக்குள்

இடைவெளிகள் எதற்குத் தைபா?

சைத்தானை

அள்ளியெறிந்துவிடு

சங்கடமில்லாமல் சேர்ந்து கொள்வோம்!


- முகமது பாட்சா*

28/07/2020


இகாமத் - தொழுகை தொடங்கிவிட்டதற்கான அறிவிப்பு


Tuesday, 20 July 2021

மகாத்மா மாஸ்க்

 கொலையைப் பார்த்தவள்

சாட்சி சொல்கிறாள்...

விசாரணை

அவளைக் கொலை செய்கிறது!

கொலை செய்யப்பட்டவன் உயிர்பெற்று

தன்னையே குத்திக்கொள்ள

குற்றவாளிகள்

அவனைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்!

விசித்திர வழக்குகள் மட்டுமே

விசாரணைக்கு வருகின்றன! என்று

தீர்ப்பை எழுதும் போது

நீதி தேவன் கழுத்தை,

குற்றவாளிகள் களவாடிச் செல்ல...

அங்கு இப்போது

நிறையக் கொலைகள் நடந்தேறியிருந்தன!


- முகமது பாட்சா*

20/07/2020

-------------------------------

மகாத்மா_மாஸ்க்




அந்தச் சதுக்கத்தில்

அவர்கள் ஒன்றாகக் கூடியிருக்க...

வெள்ளைக்குதிரையில் வந்தவர்

மகாத்மாவின் முகமூடி அணிந்திருந்தார்!

பின்னால் நின்றவர்கள்

தேசத்தின் முத்திரையைக் குத்தி நிற்க

தேசியக்கொடி அசைந்து கொண்டிருந்தது!

மகாத்மாதான்

முதலில் துப்பாக்கியால் சுட்டார்...

படுகொலைகள்

எந்தவித பாசாங்குகளும் இல்லாமல்

நடந்து கொண்டிருந்தது!

இப்போது மகாத்மா அழுது கொண்டிருந்தார்

தேசத்தைப் பாதுகாக்க

அவசர சட்டங்கள் தேவையென்று

உரை நிகழ்த்த

துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது...

தேசிய கீதம் இசைக்கிறது!

மகாத்மாவின் முகமூடி

கேட்பாரற்று கொலைக் களத்தில் கிடக்க,

செய்தியாளன் சிறைக்குள் அடைக்கப்படுகிறான்

தேசத் துரோக வழக்கு!

"என் தேசம்"

மகாத்மாவின் முகமூடி

மிகுந்த கவலையுடன் உரையாற்றிக் கொண்டிருக்க

கைகளிலிருந்த துப்பாக்கியின் புகையில்

துண்டு மீசைக்காரன் நெளிகிறான்.


- முகமது பாட்சா*

20/07/2020


Sunday, 18 July 2021

வைரஸ் தொற்று

'இந்தக் கவிதைகள் முழுவதையும் 

எரித்துவிடுங்கள் '

என்று உத்திரவிடுகிறார்கள்!

சற்று முன் தான் கவிஞனுக்கு வைரஸ் தொற்று 

உறுதி செய்யப்பட்டது..

'சார்! அலமாரியிலிருக்கும் 

வால்ட்விட்மனையும் எரித்துவிடவா!' 

என்று கேட்கிறான் பணியாள்

அவருக்கு வைரஸ் இருப்பதாகக் தகவல் 

இல்லை  என்கிறார் காவலர்...

'மேசையிலிக்கும் பெரியாரை 

உடைத்துவிடலாம்.. ஏனென்றால் 

அவர் அதைத் தொட்டுத்தான் புழங்கியிருப்பார்!'

'சார்! வைரசைக் 

குணப்படுத்தவே முடியாதா?' 

அப்பாவியாகக் கேட்கிறான் பணியாள்

'வைரசைக் குணப்படுத்தவே இந்த நடவடிக்கை! 

நோயாளிகளையல்ல!' என்ற 

நகைச்சுவை அமுங்கிப் போனது..

'சார் ! ஐஸ்வர்யாராயிற்கும் வைரசாமே!'

'அது வைரல் பீவர்தான் சரியாகிடும்யா!'

அதிகாரி உடனே "சார்! எல்லாம் 

முடிஞ்சாச்சி! வீட்டை எரிக்க வேணாமே!"

'அப்படியெல்லாம் செய்யாதே! 

அது வைரசை விட வேகமாகப் பரவிடும்

என்று பதறியது எதிர்முனை!


- முகமது பாட்சா*

18/07/2020 

தைபா - 5

 தைபா - 5


மூடி கிடக்கும் அறைக்குள்ளேயே

முடங்கிக் கிடக்கிறேன் தைபா!

மூச்சு முட்டுகிறது ...

காற்றாக வந்து கதை சொல்வாயா?


ஷெனாயின் துளைக்குள்ளே நுழைந்து

துள்ளி விளையாடுவோம் வா...

பிரபஞ்சத்தினசை

காதலென்று இனி மொழி பெயர்ப்போம்!


அட்சரங்களை

ஆரம்பத்திலிருந்து கற்றுக் கொள்ளட்டுமா?

அப்போதாவது

உன் விரல்கள் வழியாகச் சுவாசிப்பேன்!


உன்னை நேசிப்பதால்

நோயானேன் என்று பிதற்றுகிறார்கள்

ஆனால்; நீயே எனக்கு

மருந்தென்று அவர்களுக்குத் தெரியாது!


- முகமது பாட்சா*

18/07/2020


Friday, 16 July 2021

மரணம் முற்றுப்புள்ளி

 


காலற்ற மனிதர்கள்
நடந்து செல்கிறார்கள்  வாய்களால்!
கண்ணற்ற ஒருவன்
காதலைக் கண்ணாடியாக அணிந்திருக்க...
கயிற்றை வாங்கும் ஒருவன்
துக்கத்தின் கதைக்கு தற்கொலை என்று பெயரிடுகிறான்!
கைகளைக் கிழித்துக் கொண்டவன் 
இரத்தத்திற்கு காதல் என்று பெயர் வைக்க....
அமிலத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள்
வஞ்சமென்று அச்சாகிறது!
பகலைவிட இரவு
சுத்தமாக இருக்கிறது என்பதே உண்மை!
முகமூடியைக் கழற்றாமல் 
கண்ணயர்ந்தவனுக்கு மரணம் முற்றுப் புள்ளி!
"ம்" அவ்வளவுதான்!
.
- நட்புடன்..... முகமது பாட்சா*
16/07/2021






 





விளக்கில்லாமல்
வெளிச்சத்தை மீட்க முடியுமா? என்றான் அறியான்
"இதயத்தில்" என்ற
சூஃபியின் ஓரு வார்த்தையில் தீபம் எரிந்தது!
.
முஸல்லாக்களில் தொழுகிறவன்
அழுதுக் கொண்டிருக்க....
மண்தரையில் மகிமையை விரித்து தொழுகையை 
சுவனத்துக்குத் தூதுவிடுகிறார்!
.
நெருப்பை
திக்ருகளால் மூட்டி குளிர் காய்கிறார் சூஃபி...
இரவு தன் இதயத்தை
வெளிச்சமாக்கி அணைத்துக் கொள்கிறது!
.
- நட்புடன்.....முகமது பாட்சா*
16/07/2021



கேள்வி யாகம்

 உளிகள் பேசும் போதே

சப்தம்

எழுப்பிக் கொண்டிருந்தது அந்தச் சிலை!

மந்திரமோதாமல்

கண்கள் திறந்துகொண்டதாகப் பேச்சு!

தாந்திரிகன் தனது கனவில்

தாளம் வாசிப்பதாகப் புலம்பினான்!

உயர்குடியோன்

கால்களில் கறையான்கள் ஏறுகின்ற போது

சிலையான்

கொம்பு ஊதிக்கொண்டிருந்ததாகச்

செய்திப் பரவுகிறது....

சிலையின் கைகளை முறித்தார்கள்...

கனவில் தொல்லை அதிகமானது!

கால்களை முறித்தார்கள்

தலையையும் முறித்துக் காவாயில் வீசினார்கள்

ஓராயிரம் சிலைகள்

புதிதாக நின்று கொண்டிருந்தன

கேட்கக்கூடாத பல நூறு கேள்விகளோடும்...

செருப்புகளோடும்!


- முகமது பாட்சா*

17/07/2020

யா தைபா - 2,3,4

 தைபா - 2


நீக்கமறப் பரவும் சுவாசத்தை

விரலால் சுண்டி அழைத்துச் செல்கிறாய்

நான் எங்கிருக்கிறேன் தைபா!


கண்ணாடிக் குடுவைக்குள் விழுந்த

ஐஸ் கட்டிகளாகக் கரைகிறேன்

நீ என்னை முழுமையாகவே அருந்திவிடு!


இருட்டில்

எத்தனை தீபங்கள்தான் ஏற்றுவேன் தைபா...

உன் விழிகள்

அத்தனையையும் அணைத்துவிடுகிறதே!


உன் வீட்டு மாடப்புறாக்களின்

பக்பக்கெல்லாம் எனக்குமட்டும் ஏனோ

ஹக் ஹக்கென்றே கேட்கிறது!


ஏழாவது வானத்தில் நர்த்தமிடும்

விரல்களில்; ஆசையுடன் முத்தமிடுகிறேன்

உன் இமைகளில்

சுருமாவாகப் பூசிக்கொள்வாயா?


- முகமது பாட்சா*

15/07/2020


------------------------------------


தைபா - 3


சிறகுகளில்லாமல் பறக்கமுடியுமா தைபா!

விழுந்து விடாமல்

பறந்து கொண்டேயிருக்கிறேன்

நீ என்னை

பார்த்துக் கொண்டேயிருக்கிறாய்!


அட்சயப் பாத்திரத்தில்

உன் பெயர்கள்தானே நிறைந்து வழிகின்றன...

கொடுப்பதற்கு மனமில்லை

அத்தனையையும்

நானே அருந்திக் கொள்ளவா!


யாசிப்பதற்கு வெட்கப்படுகிறேன் தைபா

காதலைக் காணிக்கையாகவே தந்துவிடு...

உறக்கமில்லாத கண்களுக்குள்

உன்னை மூடி

கொஞ்சம் உறங்கிக் கொள்கிறேன்!


சஜ்தாவில் விழுந்து கிடக்கும் காதலை

சலாம் கொடுத்து அனுப்பி வைக்க

மனமில்லை...

முஸல்லாவிற்கும் சிறகுகளைக் கொடு

விழுந்து விடாமல்

பறந்து கொண்டேயிருப்பேன்!


- முகமது பாட்சா*

16/07/2020


-----------------------------------------

தைபா - 4


இரவின் முஸல்லாவில்தான்

எத்தனை தஸ்பீக்கள்!

நான் பகலை மட்டுமே நேசித்துக்

கொண்டிருக்கிறேன்!


தூக்கத்தைவிட

என் காதல்தான் எத்தனை புனிதமானது!

பஜ்ரில்

விழித்துக் கொள்ளும் பகலுக்கும் கூட

உன் மீதுதானே காதல் தைபா!


பட்டாம் பூச்சியின் சிறகுகளில்

பகலை எழுதிவிட்டு

என்னை 

இரவின் திக்ருகளில் ஏங்க வைக்கிறாயே!


உன் வீட்டுப் புறாக்களின் கூட்டில்

ஓர் இடத்தைக் கொடுப்பாயா?

உன் பெயரையே

ஓயாமல் உச்சரித்துக் கொண்டிருப்பேன்!


- முகமது பாட்சா*

17/07/2020

Wednesday, 14 July 2021

யா தைபா - 1

 தைபா 1



கண்களைத் திறந்து வைத்துவிட்டு

கதவுகளை அடைத்துவிட்டாயா தைபா!

வெளிச்சன்

எனக்குள் விளக்கேற்றுகிறான்!


அபயாவிற்குள்

நட்சத்திரங்கள் மின்னுகின்றன....

இளம் பிறை

உன் இதழ்களில் எப்போது பிரகாசிக்கும்?


விரதமிருப்பவன்

விலாவெலும்புகளால் கூடு கட்டுகிறேன்...

உன் கல்பு

எங்கும் பறந்து சென்றுவிடக்கூடாது!


அசைந்தாடும் காற்றில்

உன் திக்ருகள் உதிர்ந்து விழுகிறதோ...

உன் வாசனையை

என் சுவாசம் நூலாக்கி நெய்கிறதே!


உறங்கிவிடாதே தைபா

கனவைவிட்டு உன்னை இறக்கவில்லை....

காதல் சொல்ல வார்த்தைகளைத் 

தேடிக் கொண்டிருக்கிறேன்!

- முகமது பாட்சா*

14/07/2020

---------------------------------

புகழென்பது

புகழ் என்பது யாதெனில்
புவி மட்டத்திலாடும் புள்ளின் காற்று!
சிறகுள்ளவன் பறக்கிறான் 
என்பதும் அதீதக் கற்பனையின் ஆறாம் அறிவு!
உனக்கும் எனக்குமான உரையாடலை
யாரோ பிடித்து இடம் மாற்றுகிறார்கள் கவிதையென!
சங்கூதுபவன் பாடையிலும்
சப்தம் சரியாகவே பயணிக்கிறது!
நான் வீதியை வாசிக்கிறேன் தோழா...
நூலகத்தில் இல்லாதப் புத்தகங்கள் நிறையவே 
இறைந்து கிடக்கின்றன!
நாடோடியாகவும் வாழ்ந்து பார்!
ஒரு நாள்  நல்லவனாகவே மாறிவிடுவாய்!
பாடினி பாடிசைக்கிறாள்
தூக்கம் உதறிவிட்டு வா போய் கேட்போம்!
"ம்"
.
- நட்புடன்..... முகமது பாட்சா*
14/07/2021


பொது உடன் பகிர்ந்தது
அந்தக் கல்லறையின்
கால அளவைக் காண கூடி நிற்கிறோம்!
பிரபஞ்சத்தின் நுனி வேர்
புதைந்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்க
வாய்ப்புகளுண்டு!
பக்குவமாக மணலையரித்து எடுக்கும் பணியில்
ஒரு கொ.மு. நாணயம் !
வெடிக்காத துப்பாக்கி ரவையில்
இரத்தத்துளிகள் ஒட்டியிருப்பது எப்படி?
அரித்துவிட்ட எலும்புக்கூடொன்றின் முகத்தில்
மக்காத முகக்கவசம்!
சிறகுகளில்லாத பறவைகளின் முள்கள்!
அடுத்தடுத்து
தங்கம் வைரம் எனப் பொக்கிஷங்கள்!
யாரும் பார்க்காத பகுதியில்
அதிசயமாய் ஒளிர்ந்த ஒன்றை
அவசரமாய் எடுத்து ஒளித்துக் கொள்கிறேன்...
அஃது
யாருமே பயிரிடாதப் பனையின் விதை!

- முகமது பாட்சா*
13/07/2020


ஆசானே! என்று
ஆரத்தழுவிக்கொள்ளும் அந்த வார்த்தை,
சற்று நகர்ந்ததும்
ஜோல்னாப் பைக்குள் கைகளைவிட்டு
எதையோ தேடுகிறது!

எழுத்துகளுக்கு ஒப்பனைப்பூசி
காற்றில் பறக்கவிட்டு
பட்டம் எனதென்று தம்பட்டமடித்துக் கொள்ளும் போது
கீழே உருண்டு கிடக்கும்  நூற்கண்டிற்கு
பெயர் : ஆசான்!
- முகமது பாட்சா*


Friday, 9 July 2021

புனைவுப்பசி




குறியீடுகளால் 
நெய்யப்பட்ட புனைவுகளால்
என்னைப் போர்த்திக் கொள்கிறேன்....
வெறுமைக்கு ஆகாயம் என்று பெயர் கொடுத்தவன்
ஆதிக் காற்றை இரவல் கேட்க
சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன தீ நுண்ணிகள்!
பெருமையின் பெயர்தான் ஆடம்பரம்!
பசித்தவன் வீட்டில்  நிறைந்த அன்பை 
வறுமை என்பதும் கூட சரியான காரணப் பெயரே!
வில்லையும் அம்பையும் 
காட்சியாக்கி காலரியில் வைத்த பிறகு
தீ நுண்ணிகள் விரட்டுவதில் 
என்ன ஆச்சரியம் நிகழ்ந்துவிடப் போகிறது?
தொட்டுத் தழுவ முடியாத உடலுக்கு
எத்தனைப் பெயர்களை நட்சத்திரங்கள் செதுக்குகின்றன!
நேற்று அவன், இன்று வேறொருவன், 
நாளை நான் "ம்" அவ்வளவுதான்!
பசி அப்படியில்லை!

-  முகமது பாட்சா*
10/07/2021

பைத்தியங்கள்

 அவன் சிரித்தான்.

அவர்களும் சிரித்தார்கள்!

அவர்களை;அவன்,

பைத்தியமாக பார்த்தான்.

அவர்கள்;அவனை,

"பைத்தியம்"

என்றுச் சொன்னார்கள்!

அவன் கையில்

ஆங்கில தினசரி!

"படித்த பைத்தியம்"

ஒரு பெரியவர் சொன்னார்!

"பொண்டாட்டி

ஓடிப் போயிருப்பா!

அதனால ஆகிருப்பான்"

ஒரு பெண்ணே சொன்னாள்!

"திருடனாகவும் இருக்கலாம்?"

ஒரு வாலிபன் சொன்னான்!

"பொய்யான காயத்தை

மெய் யென்று நம்பும்

மூடர்காள்...

நீங்கள் என்ன, பைத்தியமா?"

அவன்

வாய்விட்டுச் சிரித்தான்!

"பைத்தியமேதான்!"

ஒரு சிறுவன்

கல் விட்டடித்தான்...

"அட பைத்தியங்களே...

என்னையா அடிக்கிறீங்க?

ஓடுங்கள்!"; அவன்

கல்லை கையில் எடுத்தான்.

அத்தனை பைத்தியங்களும் 

ஓடியது! 

அவனை மீண்டும்

"பைத்தியம்!பைத்தியம்"

என்று சொல்லிக் கொண்டே!

___________________________

- முகமதுபாட்சா*

10/07/2015

Popular Posts