தைலத்தைத் தடவிக்கொண்டு
அத்தர் மணக்கிறாய்....
அல்லாஹ்வின் வாசலில் அமர்ந்து
ஆயத்துகள் ஓதுகிறாய்...
தொப்பியும் குர்தாவும் கூட
சுத்தமாய் இருக்கிறது....
தஸ்பிகள் விரலில் சினேகித்து
நகர்ந்து கொண்டே இருக்கின்றன...
ஊருக்களித்த உன் விருந்து
வியப்பில் ருசிக்கிறது....
ஆனாலும் நீ தள்ளி வைத்த சுவனம்
உனக்காகப் பிரார்த்திக்கிறது
அம்மா என்ற கந்தலாடை.
- மு.முகமது பாட்சா*
01 /02 /2019
துப்பாக்கியை
அடிக்கடி துடைத்துக் கொள்கிறான்...
நடுக்கம் வரமாலிருக்கச்
சற்று மது அருந்தியிருக்கலாம்
ஆனாலும் கை நடுங்கத்தான் செய்கிறது...
குறிதவறாமல் சுடுவதைப் பற்றிச்
சற்றுமுன்தான் படித்திருந்தான்....
ட்ரிக்கரை அழுத்தியவுடன் குறிதவறி
அவனின் தன்மானத்தைச் சாய்த்தது...
சற்று நேரம் அழுதுகொண்டிருந்தான்
மீண்டும் ட்ரிக்கரை அழுத்தியவன்
விழுந்துகிடந்த தன் கோபத்தைச்
சிறிது நேரம் வெறித்தான்...
இப்போது தன் நெற்றிப்பொட்டில் வைத்து
அழுத்துகிறான்
விசை உந்துவதற்குக் குண்டுகள் இல்லை...
துப்பாக்கியை வீசி எறிந்தவன்
நடந்துபோகும் பாதையில்...
வெறிபிடித்த
நாயொன்று இறந்து கிடந்தது.
- மு.முகமது பாட்சா*
31 /01 /2019
இப்போதெல்லாம்
நான்
காந்தியை அடிக்கடி பார்க்கிறேன்...
சற்றுமுன் கூட என்னெதிரில்
நின்று பேசிக் கொண்டிருந்தார்...
அங்கிருந்து நகர்ந்தவுடன்
இஸ்மயில் என்று பச்சை குத்திக்கொண்ட
கோட்சே போவதைப் பார்த்தேன்...
ஓய்வு பெற்ற நடிகர்
காந்தியாக மாறிக்கொண்டிருந்ததையும்
அங்கே
அகிம்சை காற்று வீசிக்கொண்டிருப்பதையும்
பார்க்க முடிகிறது...
கோட்சேக்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட
மேக் இன் இந்தியா காந்திகள்
தங்கள் கைகளை அகல விரித்து
தேசத்திற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்...
அரசியல்வாதிகளின் கைகளில்
எப்போதும் பார்க்கமுடிகிறது
சத்தியசோதனை புத்தகம்.
- மு.முகமது பாட்சா*
30 /01 /2019
பெரும் காமம்
ஓரறைக்குள் உறங்கிக்கொண்டிருக்க,
விதர்ப்பன்
ஒப்பனைப் பூசி நடம்புரிகிறான்...
ஆர்த்தன் அலைக் கழிய
வியர்க்கும் தளம் வீரிட்டெழுகிறது...
சுடரகன்ற இருட்டில்
பெருந்தீ ஆழிக்குள் நுழைந்தகன்று
ஆர்ப்பரிக்க
எரிந்தவனின் எலும்புக்கூட்டில்
ஒட்டியிருக்கிறது
தனமும் யோனியும் சகடையாய்.
- மு.முகமது பாட்சா*
29 /01 ./2019
கனவுவெளியை மதபோதகர்
சுவனத்திற்கும் நரகத்திற்குமாக
நகற்றிக் கொண்டிருக்கிறார்....
புல்லாங்குழல் இசைப்பவனை
லயம் கடத்திச் செல்கிறது...
தூண்டிலில் மாட்டிவிட்டது இரை...
மாட்டிக்கொண்டது ஆசை...
மௌனம்
பெரும் சப்தகூட்டின் அந்தகாரம்....
நிழலோடு நடக்கும் வரைதான்
மனிதன் உயிரோடிருக்கிறான்...
அழுகையை ஆராதிக்கத் தெரிந்தவன்
இரக்கத்தை இதயத்தில் வைத்திருக்கிறான்...
கண்ணாடி காட்ட மறந்த முகம்
காதலுக்குத் தெரியாது....
வஞ்சகத்தின் சிரிப்பும்
வாசனையாகத்தான் மணக்கும்...
வழிப்போக்கன் கால்கள் மட்டுமே
திசைகளை என்றும் தேடுவதில்லை...
இதுவுமொரு நாடோடி பாட்டுதான்
நாளைக்குள் மறந்துவிடலாம்.
- மு.முகமது பாட்சா*
28 /01 /2019
அந்தப் புத்தகம்
அச்சடிக்கப்பட்ட பிறகுதான்
அநாதியாகக் கிடந்தது...
அதன் வார்த்தைகள்
வாசகர்களை தேடிக் கொண்டிருக்க
வெளியே
கத்தரிக்காய் விற்பவன்
காசுக்குத்தான் கருவேப்பிலையென்று
சொல்லிவிட்டான்...
அந்தப் புத்தகம்
அச்சடிக்கப்பட்ட பிறகுதான்
அநாதியாகக் கிடந்தது.
- முகமது பாட்சா*
28 /01 /2019
இரவிடம்
என்ன சொல்லிப் புலம்பினாய்?
நிலவு அழுகிறது
அதன் கண்ணீர்த் துளிகள்
வானமெங்கும் சிதறியிருக்கின்றன....
காற்று நகரமறுத்து
மரங்கள் செயலற்று நிற்கின்றன...
வானம் அழுதுவிட்டால்
உன் புலம்பல் நின்றுவிடுமா?
மேகத்தைத் தேடி
என் பாடலொன்று அலைகிறது...
கூதையிலும் கண்ணீர்விடும்
புற்களை நான் எப்படித்தேற்றுவது?
இரவிடம்
என்ன சொல்லிப் புலம்பினாய்?
இதயமற்ற கதவுகள்
எப்போதும் திறந்திருப்பதில்லை...
இல்லையென்பது
வானத்தில் இருப்பதேயில்லை...
வெளிச்சம் வரும்போது
விளக்கு இருட்டாகத்தான் இருக்கும்....
இரவிடம்
என்ன சொல்லிப் புலம்பினாய்?
நிலவு அழுகிறது
அதன் கண்ணீர்த் துளிகள்
வானமெங்கும் சிதறியிருக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
27 /01 /2019
கனவின் வரியொன்றை
இதயத்தில் வைத்திருக்கிறேன்...
விழிகளில் தடவி
கவிதையாக வாசிக்கிறாய்!
ஒளியாண்டுகளுக்குள் ஊடுருவுகிறது
உன் புன்னகை...
நடையிலக்கணம் தேவையென்று
இடை கவிதை மொழிகிறது...
கூந்தலை அலைய விடாதே
வார்த்தைகள் சிதறிப்போகின்றன...
நிழல்மொழிதான் காதலென்று
இடைவெளி இட்டு நிரப்புகிறது...
மொழியாத வார்த்தைகளுக்குள்
பதியமிட்டிருக்கும் ரோசா செடிகளை
பத்திரமாகப் பாதுகாப்போம்
பட்டாம் பூச்சிகளின் தேடல்
மொட்டுகள் மலர்வதற்காகத்தான்.
- மு.முகமது பாட்சா*
27 /01 /2019
உதிரத்தின்
செவ்வண்ணம் விழுங்கிப் பறக்கும்
தேசியக்கொடிக்குள்
வர்ணங்களும் சாதிகளும் ஒளிந்திருக்குமா?
வெண்மையைத் திருடிக் கொண்டவர்கள்
கொடியின் கயிற்றை உயரே எழுப்புகிறார்கள்...
மதக்கலவரங்களில்
கொடிகட்டிப் பறக்கிறது எங்கள் தேசியம்...
ஆதாரத்தை உண்டுவாழும் அரசியல்வாதிகள்
தடாகத்தை அழுக்காக்கி விட்டார்கள்...
மீன்கள் செத்து மிதக்கின்றன....
பசுமை வண்ணம் படர் நிறமாக மாறிவிட்டது...
உயரத்திலிருந்து உரையாற்றுகிறார்
தேசத்தின் தலைவர்...
இன்னமும் கீழேயேதான் நிற்கிறோம்
சல்யூட் அடித்துக் கொண்டு...
வாழ்க நம் பாரதம்.
- மு.முகமது பாட்சா*
26 /01 /2019
அந்தச் சமாதியை
எளிதில் உடைத்துவிடாதீர்கள்...
அதனுள் ஒரு கடலும்
ஒரு வானமும் இருக்கிறது...
ஆடம்பர மாளிகையின் பொக்கிஷங்கள்
அதனுள் கொட்டிகிடக்கின்றன...
ஒரு பறவை இன்னமும்
அங்கேயே பறந்து கொண்டிருக்கிறது...
ஒட்டகங்களின் மூச்சிறைப்பை
இன்னமும் கேட்கலாம்....
விளக்கிலிருந்து வெளிவந்த பூதமொன்று
ஆலம்பனாவின் உத்தரவிற்காக
அங்கேயே காத்துகிடக்கின்றது...
சமாதியை உடைத்துவிடாதீர்கள்...
அந்த எலும்புகளில் ஒட்டியிருப்பது
பேரண்டத்தின் பெருந்துகள்கள்.
- மு.முகமது பட்சா*
25 /01 /2019
விரிந்திருக்கும் வானம்
நிறைந்திருந்தாலென்ன?
எத்துணை நிலவை என்
கொட்டடிக்குள் வைக்க முடியும்?
பரந்திருக்கும் கடலை
பருகிடத்தான் பயனுண்டோ?
அடர்ந்திருக்கும் வனத்தில்
தங்கிடத்தான்
அனுமதியும் இல்லையடா....
முகிழ்ந்திருக்கும் நகையைப் பூட்டி
நெளியும்வாய் என்ன வாய்?
நெஞ்சுருகிப் பேசுவதால்
வஞ்சகங்கள் கரைந்திடுமா?
என்புருக்கி வீழும் நாளில்
கைவிரித்து வேண்டுவதால்...
துன்புற்றல் போய்விடுமா
தூய நெஞ்சை விற்ற பஞ்சே?
-மு.முகமது பாட்சா*
24 /01 /2019
தலைகீழ் விகிதம்
யுகம்
யுகம் உள்ளூறும் நுகம்
நுகம் சுகிக்கிமோர் உகம்
உகம் பேரண்டத்து துகம்
துகம் தொல்லுருத்து முகம்
முகம் ஒப்பனை சுகம்
சுகம் விரியாசையின் யுகம்
யுகம்
- முகமது பாட்சா -
(கீழிருந்தும் படிக்கலாம்)
( நுகம் - சுமை, உகம் - நாள், துகம் - பங்கு )
மொழி கூட்டிற்குள்ளமர்ந்து
எதையோ
தேடிக் கொண்டிருக்கிறேன்
சாவகாசமாக - நீ
தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாய்...
சன்னல் வழியாகச் சில கண்கள்
நம்மைத் தின்று போகின்றன....
வார்த்தைகளை
வெதுவெதுப்பாகவே
தொண்டைக்குள் வைத்திருக்கிறாய்...
சில நேரம் அவை மிக்ஸியில்
அரைந்து கொண்டிருக்கின்றன....
உலை கொதிக்கும் போது
அதற்குள் விழுந்தும் வேகிறேன்....
பசி பொதுவாகிவிடுகிறது
ஜனநாயகத்தேடல் அஃதொன்றுதானே
தேடிய வார்த்தையை
உன்னருகில் வைத்துவிட்டு
உணவருந்துகிறேன்
உன் புன்னகையில்
சில வார்த்தைகள் உதிர்கின்றன....
உணவின் சுவையில்
அழகிய மலர்கள் பூத்து சிரிக்க...
ஜீரணசுவாசத்தில்
பட்டாம்பூச்சிகள் மெல்லப் பறக்கின்றது .
- நட்புடன்.....முகமது பாட்சா*
23 /01 /2019
அவள்
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
நம்பமுடியவில்லை
நேற்று என்னிடம்
நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாள்...
அடிக்கடி அழுதாள்
காயங்களைக் காட்டினால்...
சிரிக்க முயன்று தோற்றுப்போனாள்...
இப்போதும் ஏதோ சொல்வதுபோல்
இதழ்களை
குவித்து வைத்திருக்கிறாள்....
பூக்கள் அவள் மீது
நிறைத்துக் கொண்டிருந்தன...
வாசனை துர் நாற்றம் வீசியது...
புதைந்து கொண்டிருந்தவள்
மாய்ந்தழுகிறாள்....
என் கையில் அவள் தந்த கவிதை
மெல்ல
முளைவிட்டு எழுந்து கொண்டிருக்க
நான் மரமாக
நகர்ந்து சென்று கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
23 /01 /2019
ஒரு
சொல்லெடுத்து நட்டுவைக்க
அஃது ஊற்றாகி
வானம் நிறைத்து மழையாகிறது....
குளங்கள் நிறைந்து வழிய
ஆற்றின் படுகை
தாகமாய் வேகம் பருகுகின்றன....
நீரின்
கனம் தாளாது நிலம் அதிர்கிறது....
வேரின்
முனைத்தேடி பயணிக்கும் நான்
அச் சொல்லின் கைகளில்
சிக்கித் திணறுகிறேன்.....
நிழலென்னை விட்டுப்பிரிய
மழை மெல்லெனக் குறைகிறது...
நான் மட்டும் தனியனாய்
அச்சொல்லோடு வாழ்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
22 /01 /2019
17 நாட்கள் 820 விற்பனை அரங்குகள் 18 கோடி விற்பனை
எனக் களைக்கட்டி முடிந்திருக்கிறது சென்னை 42 வது
மாபெரும் புத்தகத் திருவிழா!
இப்போதெல்லாம் வசதியானவர்களின் வசந்த
பொழுது போக்கு அரங்குகளாக மாறிவருகிறதா இது போன்ற
அரங்குகள் என்பது சாமானியர்களின் கேள்வி என்பதை மட்டும்
ஒதுக்கிவிட்டு நகர்ந்துவிடாதீர்கள்
எந்த விழா மேடைக்குச் சென்றாலும் பெயர் அளவிற்காவது
சலுகைகளை அறிவிக்கும் நம் முதல்வர் கண்காட்சியைத்
திறந்துவைத்துவிட்டு பேசும் போது ஆண்டுக்கு 20 ஆயிரம்
பக்கங்களாவது படிக்கவேண்டும் என்று சொன்னவர்
நூலகங்களை மேம்படுத்துவது பற்றியோ, நூலகங்களுக்கான
புத்தகங்களை வாங்குவதற்கான தளர்வினை பற்றியோ
எதையுமே பேசாததைப் பற்றி அங்குக் கேள்வி எழுப்பாதது
என்ன மேதாவித்தனம்?
புத்தத்திருவிழா வின் ஆரம்பத்திலிருந்து கவிஞர் மனுஷ்யபுத்ரன்
உற்சாகமாக இருந்தார் என்றே சொல்லவேண்டும். முடிந்தவரை
அங்கு அவர் தன் வாசகர்களோடுவே உலாவிக் கொண்டிருந்தார்.
நான் சென்றிருந்தபோது சாரு அவர்களுடன் மிகச் சுவாரசியமாகப்
பேசிக் கொண்டிருந்தார்.
நான் 11ம் தேதி அங்குச் சென்றபோது அங்குச் சில ஏமாற்றங்கள்
நிச்சயம் காத்திருந்தன. கூட்டம் அவ்வளவாக இல்லை என்பதுதான்
நிதர்சனமான உண்மை. மேலும் வாகனங்கள் மைதானத்தின்
முன் வாசலில் நிறுத்தப்படுவதால் வயதானவர்கள் சுமார் 2 கிமீ
உள்ளே நடந்துவரக் கஷ்டப்பட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஒரு சில அரங்குகளைத்தவிரப் பெரும்பான்மையான அரங்குகளில்
கவுண்டரில் உட்கார்ந்திருந்த ஊழியர்கள் தங்களது கைப்பேசிகளை
நோண்டிக் கொண்டிருந்தார்களே தவிர , வாசகர்களைப்
பெயரளவிற்குக் கூட வாங்க என்று சொல்லி அழைக்கவில்லை
என்பது அவர்களுக்குச் சாதாரண விசயமே! அப்படியும் உள்ளே
நுழைந்த வாசகர்கள் முதலில் பார்த்தது விலை என்பதும்
பிறகுதான் தலைப்பு என்பதும் அதிர்ச்சியான உண்மை.
பாக்கெட்டை அடிக்கடி தொட்டு பார்த்துக் கொள்வது
மிக அவசியமாகிறது.
தேசாந்திரி பதிப்பகத்தில் சஞ்சாரம் நூல்கள் அதிக அளவில்
அடுக்கி வைத்திருந்தார்கள்... எஸ்ரா அவர்கள் வாசகர்களோடு
உரையாடிக் கொண்டிருந்தார்...
உயிர்மையில் சில புத்தகங்களை வாங்கினேன்... எப்போதும்
அவர்களின் விலைப்பட்டியல் அவர்களின் பையின் உள்ளிருக்கும்.
இந்தத் தடவை அது மிஸ்ஸிங். பெரும்பான்மையான பதிப்பகங்களிலும்
இப்படிதான் நடந்தது. நிவேதிதா பதிப்பகம் இன்றும் அப்படியே மாறாமல்
புன்னகையுடன் அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஐயா
கழுகு இராமலிங்கம் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்தேன்.
ரஹ்மத் பதிப்பக அரங்கு அவர்களின் பதிப்பக நூல்கள் மட்டுமில்லாமல்,
மற்ற அரங்குகளின் நூல்களையும் விற்கிறார்கள்...
அங்கு விற்பனையும் சிறப்பாகப் பார்க்க முடிந்தது... காரணம்
கவிஞர் உஸ்மான் அவர்களின் அசராத உழைப்பும் பாட்சாவின்
சளைக்காத உற்சாகமும் என்று கூடச் சொல்லலாம்.
வெளிமேடையில் நாஞ்சில் நாடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்...
வாசிப்பின் தேவை பற்றி மிகச் சிறப்பான உரை என்று
நிச்சயம் சொல்லலாம். புத்தகங்களின் விலைப்பற்றியும்
கொஞ்சம் பேசியிருக்கலாம் ஆசானே!
4௦௦௦ ரூபாய்க்கான புத்தகங்களை நானும் மகனும் வாங்கினோம்...
பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது
படித்து முடித்தபிறகுதான் தெரியும் நண்பர்களே!
- முகமது பாட்சா
21 /01 /2019
கூதையை
காற்பணத்தில் அடைத்ததாக
தாத்தன் எழுதிய கவிதையைத் தேடியபோது
கிடைத்தது ஒரு கிழிந்த ஸ்வட்டர்...
மயிலிறகின் குட்டி
மனசுக்குள் உட்கார்ந்திருப்பதாக
எழுதிய வரிகளின் அருகில்
சின்னதாய் ஒரு வளையல் துண்டு....
அந்தியைப் பிடித்து
சந்தத்தில் வைத்ததாகச் சொல்லும் தாத்தன்
மஞ்சளை அவ்வரியில் பூசியிருந்தான்...
நாற்று நடும் போது
பார்வை குனிந்தது நாற்று நிமிர்ந்ததென்று
எதைச் சொல்லியிருப்பான்....
குசும்புக்காரன் உன் தாத்தனென்று
பாட்டி அடிக்கடி கதைத்திருக்கிறாள்....
படுக்கையில் தாத்தன் கடைசியாகச் சொன்னது
இந்தக் கவிதை
இத்துடன் முடிவடைகிறது என்பதுதான்.
- மு.முகமது பாட்சா*
20 /01 /2019
அகழும்போதுதான் அவை
அடுக்கடுக்காய்க் கிடைத்தன...
நிலவறைக்குள் எப்படி
குவியல்களாய் எலும்புகள்?
விலா எலும்புகளில்
எண்ணிக்கை குறைகிறதாம்...
இடுகாடு என்பதற்கு எந்தவொரு
அத்தாட்சியும் அங்கில்லை...
அகழும்போது
துப்பாக்கிகளின் ஓசை கேட்டதாக
தோண்டுபவன் சொல்கிறான்...
குழந்தைகளின் அழுகுரல்
இப்போதும் கேட்கிறது...
முலையிழந்த பெண்
யோனியின் உதிரத்தோடு ஓடியதாக
ஒருவன் புலம்புகிறான்...
இனப் படுகொலையின் சாட்சியென
பட்சியொன்று
சொல்லிவிட்டுப் பறக்கிறது....
ஆய்வு கார்பன் 14 க்கு பிறகு
கிமு வின் அராஜகம் என எழுத
வெள்ளைத்தாள் தயாராகிறது
தேவை
தமிழனின் இரத்தம் மட்டுமே!
- மு.முகமது பாட்சா*
20 /01 /2019
காலரை உயர்த்தியவர்
கண்களால் கூட்டத்தை அளந்தார்...
எண்ணிக்கை குறைவுதான்
இருந்தாலும்
குரலொலியைக் கமறிக்கொண்டார்
கம்பனின் குகனோடு நுழைந்தவர்
ஓஷோவையும்
அருகில் வைத்துக் கொண்டார்...
கான்பூசியம் ஏன் வந்ததென்று
யாருக்கும் அங்கு விளங்கவில்லை...
தஸ்தயேவ்ஸ்கியும் காஃப்கா வையும்
பேசவில்லையென்றால்
அறிவாளியின் அக் மார்க் குறையுமென்பது
அவருக்கு நன்றாகவே தெரியும்...
அடுத்ததாய் அந்த நூலுக்கு வந்தவர்...
விரல்விட்டு
எழுதியவரைப் புகழ்ந்துவிட்டு,
நடுப்பக்கத்தின் சில வரிகளை
நட்புக்காகப் படித்துவிட்டு நகர்ந்த போது
ஏமாந்து நின்றது
அந்தப் பாவப்பட்ட எழுத்தாளனும்தான்.
- மு.முகமது பாட்சா*
19 /01 /2019
ஏதாவதொரு வார்த்தை
நெசவு செய்துகொண்டே இருக்கிறது
பார்வைகளை
ஏதாவதொன்று தாக்கிவிட்டுப் பறக்கிறது
கால்களை மறந்து நடக்கிறேன்...
நிழலொற்றனை கவனிப்பதேயில்லை...
பல் துலக்கும்போதே
ஒப்பனைகள் துவங்கி விடுகின்றன...
அசமந்தமாய்ச் சிரிக்கக் கற்றுக் கொள்கிறேன்
வார்த்தைகளைக் கழுவினால்
நிச்சயம் சாயம் மங்கிவிடும்....
வாசனைகளை நம்பிவிடாதீர்கள்...
ஓட்டைகளின் அளவைப் பெரிதாக்கினால்
ஒன்பது துவாரங்களும் நாறிவிடும்...
புத்தவிகாரத்தின் கீழ்
புத்தன் என்றும் உட்கார்ந்ததில்லை
என்பது மட்டுமே உண்மை.
- மு.முகமது பாட்சா*
18 /01 /2019
பெர்முடா மாளிகை
சில ரகசியங்கள்
அந்த மாளிகையில் பதுங்கியிருக்கின்றன...
அதன் வாசலே
முரண்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது...
பெர்முடா முக்கோணம் போல்
உள்ளே சென்ற உளவாளிகள்
எலும்புகளாகக் கூடத் திரும்பிவரவில்லை...
பறவைகளுக்கும் அதன் வானம்
அங்கே தடை செய்யப்பட்டது...
அரசியின் ரதம் கூட
சப்தமெழுப்பாமல்தான் உள்ளே வரும்
மின் காந்த நுகர்வில்
கதவுகள் சப்தமிடாமல் வழிவிடும்...
காவலாளி அப்போதெல்லாம்
கண்களைக் கட்டிக் கொள்வான்...
கால்தடுக்கித்தான் அரசி இறந்துவிட்டதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்...
இப்போதும் மாளிகையில் அரசி
உலாவுவதாக வதந்தி உலாவுகிறது...
சப்தமில்லாமல் யார்யாரோ
பேசிக்கொள்கிறார்கள்...
திடீரென்று விளக்குகள் எரிந்து அணைகின்றன...
ரகசியங்கள் மெதுவாக வெளியேறி
குற்றவாளியின் கைகளில்
செங்கோலாய் அமர்ந்து கொள்கிறது...
இப்போது மாளிகையின் காவலன்
இரத்தம் கக்கி இறந்து கிடக்கிறான்...
ரதம் கவிழ்ந்துகிடக்க
அரசி அறைந்ததால் சாரதி இறந்துவிட்டான் என
சேனாதிபதி செய்தி வாசிக்கிறார்...
இப்போதும் கூடப் பறவைகளுக்கு
அதன் வானம் அங்கே தடை செய்யப்பட்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
13 /01 /2019
கொஞ்சமாய் குடித்துவிட்டுத் தள்ளாடியவன்
நிதானமாய் இருப்பதாக சொல்லிக் கொண்டான்.
அவன் மேசை
நிதானமிழந்து மிக்சரை இறைத்திருந்தது...
கோப்பைத் தடுமாறாமல் பார்த்துக்கொண்டான்...
பாதியளவு மது
அவனைப்பார்த்துச் சிரித்தது...
மச்சான் சிரிக்குறா பாருடா! என்றவன்
அவளை அப்படியே குடித்தான்...ங்கொம்மா எங்கிட்டேயவா?
குழறியவன் நான் டீஸண்ட்டு மச்சான் என்றான்...
கோப்பை விழுந்து சிதறியது
ஆன்ட்ராய்டில் ' நீ எங்கடா இருக்க?'
அம்மா பதறிக் கொண்டிருக்க....
வாயைத் துடைத்துக் கையில் ஊதிப் பார்த்தவன்
எழுந்து நின்று தெளிவாகச் சொன்னான்...
பிரண்டு வீட்டில படிக்கிறேம்மா... காலைல வந்திடறேன்.
- மு.முகமது பாட்சா*
09 /01 /2019
கரைத் தவழ்ந்து திரும்பிச்செல்லும்
அந்தக் கவிதைக்கு
அற்களம் என்று பெயரிட்டார்கள்...
சிப்பிகளும் சங்குகளும்
சித்திரவெழுத்தில் எழுதப்பட்டிருந்தன...
கவிதையோடு
நண்டுகள் ஓடி விளையாட....
கடலின் ஆழ்மனதை
அந்தக் கவிதை
எழுதிக் கொண்டேயிருக்கிறது...
சோக வரிகளில்
கால் நனைத்தவர்கள் குதூகலிக்க...
பிரபஞ்ச இருட்டை
மறைத்து வைக்கிறது கவிதை....
மொழியறியாதவர்களின்
வாசிப்பில் கவிதை நுரைக்க....
கவிதையை
சரியாக வாசித்தவன்
மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான்...
கட்டுமரம் காற்றை விழுங்கி
முதுகில் பயணம் செய்ய...
பௌர்ணமி நிலவு
கடலை வாசித்துக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
08 /01 /2019
விழப்போகும் விமானத்திலிருந்து
ஒன்றாகத்தான் குதித்தோம்...
எங்களுக்கு முன்பாகவே பயம் குதித்திருந்தது
சிலர் நீந்திக் கொண்டிருந்தார்கள்...
சிலர்
பிணமாக மிதந்து கொண்டிருந்தார்கள்
இப்போது எந்தக் கதையும் பேசமுடியாது...
கைகளும் கால்களும் இலாவகமாகச் சுழல்கின்றன
ஜாக்கெட்டை கழற்றி வீசுகிறேன்
உயிரில்லாதவொன்று உயிரைக் காப்பாற்றுவது வேடிக்கை
கரைத் தெரியவில்லை
கட்டுமரம் கடந்துபோனால் மகிழ்வேன்...
பறவைகளின் கூட்டம் வேகத்தைக் கூட்டுகிறது
நிச்சயம் கரை இங்கு இருக்கும்...
கால்களுக்குள் நழுவிய கடலில் மூர்ச்சையாகி
தெளிந்தெழும் போது தேடுகிறேன்
தொலைந்து போனவர்களை...
விமானமொன்று சப்தமிட்டு கடந்து போகிறது.
- மு.முகமது பாட்சா*
06 /01 /2019
நாட்குறிப்பின் நாலாவது பக்கம்
திகதி நான்கு
நான் உன்னைச் சந்தித்ததைச் சொல்கிறது
அதன் பிறகானத் திகதிகளில்
உன் நிழல்கூட விழவேயில்லை....
எப்படியிருக்கிறாய் என்ற விசாரிப்பை
நேற்றுதான் உன்னிடம் நிகழ்த்தினேன்
சந்தைச்சாலைக்கு
நம்மைப் பற்றிக் கவலையில்லை...
நீ நகைப்பின் மொழியில் நவின்றதை
விளங்காமல் தவிக்கிறேன்...
நலமா? நலமில்லையா?
நீ நன்றாகத்தானே இருக்கிறாய் என்ற
அந்தச் சொல்லில்
நானும் நாட்குறிப்பும்
காலியான பக்கங்களாக இருந்ததை உணர்கிறேன்
இன்று திகதி நான்கு.
- மு.முகமது பாட்சா*
05 /01 /2019
சாம்பற்படிக்கம் நிரம்பும் வெளியில்
வெண்சுருட்டு
தன்னாயுளை இழந்து கொண்டிருக்கிறது...
மதுக்குடுவையில் வழியும்
காற்றின் உரையாடல்
என்னோடு எதனைப் பேசும்?....
பெருமையைப் போர்த்திக் கொள்ளும்
முதுமையில் ஆயுட்காலம்
தன்னை மீட்க முயற்சிக்கிறது...
பிரார்த்தனைகளின் முனையில்
ஒட்டிக்கொண்டிருப்பது
சாத்தியமில்லாத சங்கடங்கள்தான்...
துலாபாரத்தின் முனைகள்
சமமென்பதே
சத்தியமில்லாத வார்த்தை...
காற்றுக்கரைந்த பின்
காயம் நாற்றமெடுத்துவிடுகிறது...
வாசனைத் தைலங்களும்
வலுவிழந்த பிறகு
கற்பனைகளெல்லாம்
மண்ணுக்குள் புதைந்து போகின்றன...
வெண்சுருட்டு
இப்போது சாம்பற் படிக்கத்தில்.
- மு.முகமது பாட்சா*
05 /01 /2019
அந்தப் புத்தகத்தின் கதையை
யாரும் வாசித்திருக்க மாட்டார்கள்...
அஃதொரு இருட்டுப் பிரபஞ்சத்தில்
எழுதப்பட்ட கதை
கால்கள் மேவாத கானகச் சுவனத்தில்
கைகள் விரித்துப் பறந்த கதை
தூரிகையெடுத்து எழுதாத வரிகளோடு
கவிதைகள் அரங்கேற்றிய கதை
வாசிப்பே சுவாசிப்பாகி சுவனம்
சுவனத்தையே பிரசவித்த கதை....
ஆழம் தேடியலைந்து உப்புக்காற்றில்
உலர்ந்துபோன கதை....
அஃதொரு அழகான கதைதான்...
வாசிப்பிற்கு விட்டால்
அதன் வாசம் குறைந்துவிடலாம்...
ஆனாலும் அது
நாற்காலியில் அமர்ந்து
தன்னையே ரசித்துக் கொண்டிருக்கிறது
இருட்டான இதயம்
இப்போது வெளிச்சமாக இருக்கிறதாம்.
- மு.முகமது பாட்சா*
04 /01 /2019
இங்கு
எதை எதையோ
நான் தேடிக் கொண்டிருக்கிறேன்...
அச்சில் ஏறியவையெல்லாம்
சந்தைக்கடையில்
வந்து விழுந்திருக்கின்றன...
ஜோல்னாப்பை ஜீவிகளின்
நுனி நாக்கு உரையாடல்களில்
சிலர் அசந்தும்
சிலர் கசந்தும் நகர்கிறார்கள்...
கர்ப்பப்பை வேதனைகளுடன்
காத்துக்கிடக்கின்றன
கணக்கில்லாத புத்தகங்கள்...
தலை கனத்த புத்தகங்களை
சிலர்
தடவிப் பார்த்து நகர்கிறார்கள் ...
விலைகளில் இடறிவிழ
பாக்கெட்டுகளில் இடமில்லை
எழுதிய விரல்களைச் சிலர்
சிலாகித்து முத்தமிடுகிறார்கள்
கர்வத்தைச் சுமந்து சிலர்
பிணமாக உலாவுகிறார்கள்
எழுதாத பக்கங்களும் அங்குதான்
புழுக்கமாய்
உலாவிக் கொண்டிருக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
03 /01 /2019
இடத்தை மாற்றி வைப்பதே
உனக்கு
வாடிக்கையாகி விட்டது
பூக்களைப் பார்க்கும் போது
முகத்தைக் காட்டிவிட்டுத் திரும்புகிறாய்
இயல்பில்லாமல்
சிரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அருகில் - நீ
இல்லையென்பது அறியாமலும்...
எழுத்துக் கூட்டி வாசித்த உன்மொழி
பிழையென்பது
பிறகுதான் தெரிந்தது....
உன் தேநீர்க் கோப்பையில்
என் படம் அச்சிடப்படவில்லை.
- முகமது பாட்சா *
03 /01 /2019
நீர் சூழண்டம்
நிலையெனவே நான் நினைந்திருப்பேன்...
விழியசைவில்
பேரண்டம் இதுவெனவே வியந்திருப்பேன்
கை கால் அசைவுகளை
கருணையென மகிழ்ந்திருப்பேன்
கற்பனையில் அங்கும் நான்
சில கவிதைகள் எழுதியிருப்பேன்...
பந்தகச் சூழொன்றும் நான் காண்கிலேன்
பகட்டு வஞ்சமொன்றும் சூழ்ந்திலேன்
சுற்றும் நாபிக்கொடி
நிலையெனவே நான் நீந்தியிருப்பேன்...
இத்துணையும்
ஈரைந்து வாசமென்றே அறிந்திலேன்
பெற்றவளென்னை
இப் பெருவெளிதன்னில் கீழிறக்கும் வரை...
- மு.முகமது பாட்சா*
02 /01 /2019