நான் அவனை எக்ஸ் என்கிறேன் நீ ஒய் என்கிறாய் தலையின் கிரீடம் கிங் என்கிறது அவன் விரலசைவிற்கு - உன் பியானோவின் கட்டைகள் நகர்கின்றன உன் எழுத்துகளைத் திருடி அவன் தன் வார்த்தைகளென்கிறான் கைகளை உயர்த்தும் போதெல்லாம் கடாட்சம் பெற்றுவிடுகிறாய் கண்களில் கருணை வழிவதாகச் சொல்லும் நேசத்தில் ஊஞ்சலாடுகிறான்... காட்சி மாற்றத்தில் கண்களைக் கட்டிவிட்டு ஏழையாகிறான் நீ உபகாரியாகிறாய்... அவன் போகும் பாதையெங்கும் - உன் தோட்டத்துப்பூக்கள் இரைந்துகிடக்கின்றன அந்தப்புரத்தில் தன் வேசம் கலைப்பவன் அத்தர் பன்னீரில் குளிக்கிறான் அடுத்த வேளை உணவுக்காக - நீ ஓடிக் கொண்டேயிருக்கிறாய் அவனை நான் எக்ஸ் என்கிறேன் நீயோ ஒய் என்கிறாய் தலையின் கிரீடம் கிங் என்கிறது - மு.முகமது பாட்சா* 30/11/2018
அவள் அவளையே தேடிக் கொண்டிருந்தாள் அவனோடுதான் அவள் ஓடியிருக்கவேண்டும் என்பது அவளது அசையாத நம்பிக்கை... எப்படியிருப்பாள்? என்று கேட்டவர்களுக்கு தன்னை மாதிரி இருக்கமாட்டாள் என்று மட்டும் அடையாளப்படுத்தினாள்... அவ்வப்போது அழுதவள் அவளை அவளின் குடும்பம் கொன்றிருக்கலாம் என்று பிராதும் வைத்தாள்.. அவன் எங்கிருப்பான்? தன் பால்யத்திற்கே ஓடியிருப்பான் என்றவள் நீங்கள் எந்தச் சாதி? என்று கேட்டுவிட்டு என்னைக் கொன்றுவிடுங்கள் அவனும் கூட இறந்துவிடுவான் என ஆத்திரம் கூட்டினாள்.... அவள் எங்குமே கிடைக்காவிட்டால்? என்னைக் கொன்று அவளைத்தேடுவேன் என அதிர்ச்சியூட்டியவள் ஓடிக்கொண்டேயிருந்தாள் சற்றுமுன்தான் ஆயுதங்களுடன் சிலர் அவளைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள் இனி இரத்தத்துளிகளில் அவள் எங்காவது நிச்சயம் உறைந்துவிடுவாள். - மு.முகமது பாட்சா* 30/11/2018
மண்ணை அகழ்ந்தவர்கள் அவன் உடலை வெளியே எடுத்தார்கள் நூற்றாண்டுகளின் கணக்கில் அவன் வயதை அவர்களால் எட்டமுடியவில்லை எத்தனையோ ஓளி ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு யுகம் கற்பனை என்பது கற்பனையென்று குறிப்புகளின் முதல்வாசகம் பதிவானது அவனருகில் இருந்தது காகம்தான் என்பது தொல்லியலின் புள்ளியியல் வரையறை ஈஸ்ட்டோ கரைசலில் அமிழ்ந்த கருங்காகன் மூச்சுக்காற்றை நுரைகளால் நிரப்பி எழுந்தபோது ஒரு பெரும் மூச்சின் சப்தம் தரைகளின் பிளவிற்குள் ஊடுருவி சன்னல்களின் கம்பிகளைப் பிய்த்தெறிந்தது.... அவன் இப்போது முனங்கிக் கொண்டிருந்தான் உங்களின் கடைசிப் பிரதிகள் நாங்கள்தானென்று. - மு.முகமது பாட்சா* 27/11/2018
சலனமற்ற குளத்தில் மூழ்கிக்கிடக்கிறது ஆழிப்பேரலைகளின் பெரும் சப்தங்கள் உறங்கும் நிலாவிற்குத் தெரியுமா என் காதல்? யாரைத் தேடிக் கொண்டிருக்கிறது நிலா நட்சத்திரங்களெல்லாம் காத்துக் கிடக்கின்றன எனக்கு உன் வெளிச்சம் மட்டும் போதும்! வெளிச்சத்தைத் தேடுகின்ற வேர்களுக்கு பூக்களைப் பற்றிய கவலைகள் கிடையாது இந்த வண்டுக்கும் தேனிருக்குமா? தேனெடுத்தவன் தேடிக் கொண்டிருக்கிறேன் ஆழியின் பெரும் சப்தம் அருகில் கேட்கிறது சருகுகள் உதிர்வதை யார் ரசிப்பார்? - மு.முகமது பாட்சா* 25/11/2018
விவாதித்தார்கள் விவாதிக்கிறார்கள் விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது விவாதம் சரியானது என்று சொன்னவர்கள் விவாதத்தை விவாதத்தால் உரசிக் கொண்டிருக்க விவாதத்தின் ஒரு முனையில் தீப்பிடிக்கிறது விவாதிக்கிறவர்கள் யாருக்காக விவாதித்தார்களோ அவர்களின் மீதே அதனை வீசியெறிகிறார்கள்.... எதற்காக விவாதித்தார்களோ அந்த விடயம் கருகிக் போய்....இப்போது புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது... விவாதம் விவாதமாகப் புதுப்பித்துக் கொள்ள கையேந்தி நின்றவனைப் பார்த்தவுடன் கார் கண்ணாடியை ஏற்றிக் கொண்டான் விவாதித்தவன். - மு. முகமது பாட்சா* 24 /11 /2018
வக்கிரம் வாசற்கதவை தட்டிவிட்டு வந்து நிற்கிறது, உள்ளே அழைத்துப் பேசுகிறேன், பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே போக ... இருவர் கைகளிலும் இப்போது ஆயுதங்கள் ஒருவரையொருவர் கொளுத்திக் கொள்கிறோம் ... சுற்றிலும் வார்த்தைகள் எரிந்து கிடக்கின்றன பேசாத மொழியொன்றும் அங்கே பதுங்கிக் கிடக்கிறது, அவ்வப்போது தர்க்கத்தின் சப்தங்கள் ஓநாய்களின் ஊளையோடு இழைய... அந்த அறையைப் பூட்டி சீல் வைத்தவர்கள் எழுதி வைத்த குறிப்பு: இது பேய் வீடு . - மு.முகமது பாட்சா* 22/11/2018
கடல் என்பதை கட்டுமரத்தால் எழுதும் மீனவன் மீன்களை அலையென்று பிடித்து வருகிறான் ஆகாசம் என்பதை பறவைகள்தான் எழுதி வைக்கின்றன வனம் என்பதை யானையின் சாணியும் உணர்த்தும் எழுதுகோல் தேவையில்லை இயற்கை தன் கவிதைகளை எழுதி வைக்க... மழையென்பது வானத்திற்குப் பூமி கொடுத்த வரம் சிற்றுயிர்களின் சப்தமின்றிப் போனால் சகலமும் செத்துவிடும்... சங்கீதம் யாரும் அவற்றிற்குக் கற்றுக் கொடுத்ததில்லை.. சாகாவரத்தின் மண் நம்மைப் பற்றிக் கவிதை எழுதுகிறது... படிக்காமல் நாமதனை கசக்கி எறிகிறோம் ... படித்தவர்களென்று நம்மை நாமே சொல்லிக் கொண்டு - மு.முகமது பாட்சா* 22 /11 /2018
தோழர்கள் கூடுகிறார்கள் பேசுகிறார்கள் கலைகிறார்கள் அங்குத் துண்டு மின்னல் வெளிச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன கூடவே கொஞ்சம் இரத்தத் துளிகளும் சில பிணங்களும் உண்டியல் எண்ணிய பிறகு அடுத்த போராட்டம் தொடர்கிறது... வேதனைகளில் வீழ்ந்தவர்கள்.... அங்கும் வேடிக்கை பார்க்கிறார்கள் சிதறிக் கிடக்கும் கொடியினையொருவன் கோமணத்திற்கும் தடியினையொருவன் ஆட்டுத் துறட்டிக்கும் எடுத்துச் செல்கின்றனர் இரங்கல் கூட்டத்தோடு முடிந்தது தோழரின் இறுதி ஊர்வலம் வீர வணக்கத்தை வாங்கிக் கொண்டு வேலைக்கு அலையும் அவரின் மகனைப் பார்த்தால் சொல்லுங்கள் நீயாவது குடும்பத்தையும் பாரு! - மு.முகமது பாட்சா* 21/11/2018
அல் அமீன் 12 (10 ) சிலந்தி வலையின் திறனும் இல்லாதவர்கள் சிந்தனையெனும் சிற்பக் கூடாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்... குறைஷிகளின் கோபக் கொப்புளங்கள் சீழ் பிடித்து வழிந்தன... அண்ணலாரை கொல்லும் பணி ஆளாளுக்கு வழங்கப்பட்டது... 'அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள் அல்லாஹூவும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்' கஸ்தூரியின் மணம் மதினத்தின் முழு வசமானது... அல் அமீனின் தடம் பட்ட நகரம் மதியாளர்களின் கூடாரமானது... வட்டி, மது மரணித்து மஹர் திருமணங்கள் மணமேடைக் கண்டன... விதவைகள் என்ற சொல் வீணாய்ப் போனது... கல்வி நதி கடலாய் வழிந்தது... ஜக்காத்தும் சதக்காவும் கடமையாகின... உலகம் இப்போது அவர்களை உற்று நோக்கத் தொடங்கியது... தடைகளை அவர்கள் தடம் தாண்டி நகர்ந்தார்கள்... மதினத்தின் பாங்கு சப்தம் மக்காவில் மனாத்தையும் லூத்தையும் ஆட்டியது.... மாஷா அல்லாஹ்! - மு.முகமது பாட்சா* 21 /11 /2018 மஹர் - ஆண் பெண்ணிற்கு தரும் வரதட்சனை ஜக்காத் - வருவாயில் தரும் தருமம் சதக்கா - மனம் உவந்து தரும் தருமம் (படம்: நபி(ஸல்) அவர்களின் அறை
நான் எனக்குள் புதைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டேன்... என் எழுத்துகளில் புதைந்திருப்பதாக வார்த்தைகள் சொன்னது.... என் சிறகுகளை ஒருவன் பிடுங்கிச் செல்கிறான்... நடக்கவே தெரியாதவனுக்குப் பறக்கவா ஆசையென்று கனவுவெளியில் காலூன்றி நடந்ததை அவன் பார்த்ததேயில்லை... மலர் வளையத்தைக் கையில் கொடுத்தவன் உன் சாவுக்குச் சமர்ப்பணம் என்கிறான் தேநீர் நிரம்பாத அந்தக் கோப்பை காலியாகவே இருக்கிறது... சுவைப்பது போல் பாவனைச் செய்கிறேன் மசி நிரப்பாத பேனாவினால் எழுதிய கவிதை காலின் கீழ் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் மெல்ல நழுவுகிறது நான் ஒவ்வொன்றாக உதிர்கிறேன்... சிறு புல்லின் வேராகவும் இருக்கத் தெரியாமல்! -மு.முகமது பாட்சா* 20/11/2018
அல் அமீன் 12 (9) வில் வீரர் ஹம்சா ரலி அல் அமீனின் அரணாய் நின்றார் முகம்மது ஸல் துஆவையேற்று உமர் ரலியும் ஓரணியில் சேர்ந்தார் ஈமானின் பலத்தோடு ஈட்டிகளின் வலுவும் சேர இஸ்லாத்தின் தூண்களெல்லாம் உறுதியாகி உயர்ந்து நிற்க... எதிரிகளின் உறுதி மயஙகி தூது உத்பாவின் பேச்சும் முறிந்தது! ஆசைகளைக் கொட்டி வைத்து அல் அமீனை விலைக்குக் கேட்க அல்லாஹூ அக்பர் என்ற முழக்கம்தான் மிகைத்தெழுந்தது... நகர் மதினாவின் கோத்திரத்தார்கள் மாண்புடன் நேசம் காட்ட முஸ்அப் இப்னு உமைரின் அழைப்புப்பணி அழகாய் சிறந்தது மக்காவின் மனம் குப்ருவில் சூழ்ந்து கொள்ள... நகர் மதினத்து வாசிகள் வாசனா திரவியம் பூசிக் கொண்டனர் துரத்தியது ஓர் நகரம் அல் அமீனை அல்லாஹூ அக்பர் அண்ணலாரை அல்லாஹூவிடம் கையேந்தி அழைத்தது மதினத்து அன்சாரிகள் கூட்டம். - மு.முகமது பாட்சா* 19/11/2018
என்னை தேடும் அவன் என்னைத் தேடிக் கொண்டிருப்பதாக என்னிடமே அவன் சொன்னான்! ஆச்சரியமாக இருந்தது... அவன் நான்தான் என்று சொல்லியும் நம்பவில்லை... நான் இப்போது இருப்பதுபோல் அவன் தேடும் நான் எப்போதும் இருந்ததில்லையாம்! அதனால் நான் அவனில்லையென்று அடித்துச் சொல்கிறான்... எனக்குள் இப்போது சந்தேகம் மெல்ல எழுகிறது.... உண்மையில் நான் நானில்லையா என்று.... ஆடும் நீரலையில் பிம்பமாகக் கலைகிறேன் இப்போது அவன் என்னைப் போலவே நின்று கொண்டிருக்கிறான் அவன் யாரென்று இதுவரைக்கும் சொல்லவில்லை நானும் அவனிடம் கேட்கவில்லை! மு.முகமது பாட்சா* 17 /11 /2018
அல் - அமீன் 12 (7 ) இறைவனின் அருட் குடுவையிலிருந்து பெருகியது திருமறையின் வசனப் பாக்கள் பொய்ப்புலவன் என்று அண்ணல் (ஸல்) முகம்மதுவை அபூ லஹப் அவமதித்தான்! சீரான நீரென்று அன்னை கதிஜா(ரலி) அகம் மகிழ்ந்தார் தோளோடு உரசும் தோழமைக்கு அபூபக்கர் (ரலி ) நறு மணம் கோர்த்தார்... அருமை மகள் ஃபாத்திமா(ரலி) தானும் பக்குவமாய் இஸ்லாத்தை ஏற்றார்... தன் அண்ணனின் மகன் அல் அமீனின் வாளாக வந்து நின்றார் அபுதாலிப்... ஆண்டான்கள் வேரறுக்க அடிமை ஜைது இப்னு ஹாரிஸாவும் சேர்ந்து கொண்டார் சிறியதாகச் சேர்ந்த கூட்டம் சில்லறையாகச் சிதறிவிடாமல் சிந்தித்தே புரட்சி செய்ய எதிரிகளின் கோபத்தீயும் எண்ணெய்யில்லாமல் எரிந்ததுவே! - மு.முகமது பாட்சா* 17 /11 /2018
அந்த மரத்திற்குத்தான் என்ன கரிசனம் அடிக்கடி மலர்களையும் தழைகளையும் சமாதியின் மீது இறைத்துக் கொண்டேயிருக்கிறது... கட்டியழுதவர்களும் ஒட்டிப் புரண்டவர்களும் காட்டிய கருணை கல்லறை மட்டும்தான்... தானாக வளர்ந்த மரம் வேராக என் உப்பைச் சுவைத்திருக்குமோ? ஒட்டிக் கிடக்கும் புற்களும், கொட்டிக் கிடக்கும் பழங்களைக் கொறிக்கும் அணில்களும்... பறவைகளும் மட்டும் இல்லையென்றால் நான் இன்னொருமுறை இறந்திருப்பேன்... உறவுகளே நீங்கள் உங்கள் உலகத்திலேயே வாழுங்கள் இந்த உலகம் கல்மிசமில்லாதது. - மு.முகமது பாட்சா* 17 /11 /2018
அல் - அமீன் 12 (6) 'போர்த்துங்கள்... கதிஜாவே என்னைப் போர்த்துங்கள்' அச்சம் சூழ்ந்த அல் அமீன் அங்கம் நடுங்கிடச் சோர்ந்தார் ! உஷ்ணம் எகிறியது... முதியவர் வரகாவின் வருகை மொழி அறியும் வரை... ;அச்சம் போர்த்தாதீர்கள் அறிவொளியே இத்தரையின் மீது இனி நீர்தான் இறுதி நபி... முத்திரையாய் முன் வேதம் முடிந்துவைத்ததை முகவுரையாய் உம்மிடம் மொழிகின்றேன்... உம்மைக் கட்டித் தழுவியவர், கரம் கோர்த்து ஓதுவீராக! நன்மாரயம் கொட்டியவர் நாமூஸ் என்னும் ஜிப்ரில் (அலை)தான் நீர் உம்மிதான் என்றாலும் உடையவன் சொல்லுகின்றான்... உதாசீனம் இனி செய்யாதீர்கள்! உம்மிடம் அவர் கொட்டிய திரு வசனம் சொல்வீராக... நானும் என் இதயத்தில் ஏந்துகிறேன்' அச்சம் அகன்ற அல் அமீன் கட்டித்தழுவி எத்தினார் அவ்வசனம் இறையருள் ஏந்தியே... 'ஓதுவீராக! படைத்த இறைவனின் திருப்பெயரால் நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை அலக் என்னும் கருவிலிருந்து படைக்கிறான். நீங்கள் ஓதுங்கள்! உம் இறைவன் மாபெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) -------------------------------------------- *உம்மி - எழுத படிக்கத் தெரியாதவர் *அலக் - கருவான இரத்தக்கட்டி -------------------------------------------- - மு.முகமது பாட்சா* 16 /11 /2018
வானம் அமைதியின்றி இருக்கிறது வாகனங்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எங்கிருந்தோ வரும் இசை வெளிச்சம் இதமூட்ட என்னை அறையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் சற்றுமுன் வீசிய சூறாவளி தூக்கிச் சென்றிருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு நான் பெரும் மழையென்று ஒருதடவை சொல்லியிருந்தேன் அவர்கள் அதனை நம்பவில்லை... சிறு தூறல்தானென்று எள்ளி விட்டு நகர்ந்தார்கள் பெரும் சப்தமொன்று காத்திருக்கிறது அறையை முற்றுகையிட்டு முடியாத கதையை முடித்துவைக்க.... பறவைகளின் வானம் அப்போது தன் தலையை நிச்சயம் துடைத்துக் கொள்ளும். - மு.முகமது பாட்சா* 15 /11 /2018
அல் அமீன் அமர்ந்து கொண்டார். ஞானத்தின் முதல் வாசல் அஃதுதானென்பது அன்று அவரும் அறியாதது. பிறப்பொக்கும் எல்லா உயிரும் ஒன்றெனும் போது பெண் சிசுக்கள் மட்டும் கொலையாவதேன்? ஏற்றம் இறக்கம் மனிதருக்குள் இருக்கலாம் ஏழ்மைத் துயர் துடைக்க கைகளேன் உயர்வதில்லை? உறவுகளென்பது சங்கிலிதான் என்றால் உதவுவதில் மட்டும் தீவுகளாய் மாறுவதேன்? இத்துணைக் கேள்விகளையும் இழுத்துப்போர்த்திய அண்ணலார் அச்சம் சூழ்ந்திருந்தார்... ஞானத்தின் வாசலை அல் அமீனுக்காக திறந்து வைத்திருந்தது நான்குக்கு மூன்றடியே கொண்ட பாறைசூழ் ஹீராவின் குகையை ஜபல் அன்-நூர் எனும் அந்த அழகு மலை. - மு.முகமது பாட்சா* 15/11/2018
அல் - அமீன் 12 (4) அண்ணல் முகம்மதுவின் வயது 25 ஷாம் நகரத்துச் சந்தை அல் அமீனின் நறுமணம் பூசிக் கொண்டது நீதியின் தராசுகள் நிலுவைகளில் சரியாக நின்றன... வாடிக்கையாளர்கள் வாசம் தேடி வரிசையில் வந்தார்கள்... விதவை கதிஜா பின் குவைலித்தின் கஜானாக்கள் நிரம்பி வழிந்தன... அல் அமீனின் அழகிய பண்புகள் கதிஜா ரலி சீமாட்டியின் நல் வரவுகள் அடிமையாய் கிடக்க ஆயிரம் பேர் இருக்க அற்புத வதனம் அல் அமீன் நேசம் கைம்பெண் என்ற கட்டுடைத்து அண்ணல் முகம்மதுவும் ஏற்றார் முழு நிலவாய் தன் முதல் உலகாய்... நேசரின் சுகமெனவும் கனவெனவும் கண்களின் காட்சியானர் அன்னை நாயகியார் ஹூபுல் கடவுளா? மனாத், லாத், உஜ்ஜாதான் கடவுள்களா? அடிமைகளுக்கு யார்தான் கடவுள்? கடவுள்களுக்குள் சண்டையென்றால் சாமானியனுக்கு அமைதி ஏது? கேள்விகளுக்குள் புழுங்கியவரை அரவணைப்பிற்குள் அடக்கிக் கொண்டார் கதிஜா... அப்போது அன்னையின் வயது 40 - மு.முகமது பாட்சா* 13/11/2018
வார்த்தைகளை வசமாக்கி வம்படிக்கி சண்டை செய்கிறாய் இறும்பை இடையில் வளர்த்து இன்சொல்லை பதுக்கிக் கொள்கிறாய் கரும்பின் அருகில் கட்டிய காளையாகத் துள்ளுகிறேன் சிறாம்பு பார்வையாலே காதல் இதயத்தை ஏன் சிராய்க்கிறாய்? தள்ளிய படுக்கையில் அள்ளி அணைக்கிறேன் மெல்லிய முத்தம் கொண்டு ஊடலையும்தான் நீ முடிக்கிறாய்... கள்ளி உன் களவு தெரியாத என்ன? காய்ந்த மாட்டைக் கம்பம் கொல்லையில் விட்டு காய்ச்சலைத்தான் முடிக்கிறாய் உன் சுட்டி நுதலில் முத்து கோர்க்கும் உப்பை ருசிக்கிறேன் எத்துணை ருசியடி? இனியும் ஒரு கூடலுக்கு ஊடல் செய்வோம் வா! குறள் - 1328 'ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு' - மு.முகமது பாட்சா* 13 /11 /2018
இருட்டு நேரம் அந்தக் கவிதையை வெட்டிப் புதைத்துவிட்டுக் கை கழுவுகிறேன் ஒட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றாக உதிர்கின்றன... உறக்கம் வராதவன் நடந்து போகிறான் தூக்கம் கலையாத வார்த்தைகள் ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது... மூடிக் கிடக்கும் தேநீர்க் கடை வாசலில் சில வார்த்தைகளை எறும்புகள் இழுத்துச் செல்கின்றன... எழுத்துகள் ஒன்று கூடி வெளிச்சம் தேட ஈசல்களென்று ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான்.... இன்னம் சற்று நேரத்தில் நடை திறந்து பறவைகளின் சுப்ரபாதம் வழியும் ... வார்த்தைகளை வெட்டிப் புதைத்தவன் உறங்கப் போகிறேன் வெளிச்சம் கண்களைக் கூசுகிறது. - மு.முகமது பாட்சா* 11 /11 /2018