Saturday, 30 June 2018

நுண்புனை கதைகள் 6

நுண்புனை கதைகள் 6
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சிலையும் அவனும்

அந்தச் சிலை அங்கேயேயிருந்தது. 
அவன் மட்டும் அடிக்கடி, அதனிடம் பேசிக் கொண்டிருப்பான் 
காதலைப் பற்றிப் பேசும்போது அவனை ஆச்சரியமாகப் பார்க்கும் 
சோகத்தைப் பகிரும் போது கருணையுடன் கேட்கும் 
அதன் கையில் ஓர் அறுவாள் இருந்தது 
அது யாரையும் வெட்டி, அவன் பார்த்ததில்லை 
அவன் காதலி இதன் காலடியில்தான் வெட்டப்பட்டு இறந்து கிடந்தாள் 
அவன் ஆக்ரோஷமாக அப்போது அதனைப் பார்த்தான் 
அஃது அவனிடம்,'நானில்லை நண்பா' என்பதுபோல் பார்த்தது 
'என்னைக் கல்லாக்கிவிட்டார்கள், 
இல்லையென்றால் அவர்களை வெட்டிவிட்டு 
உன் காதலியை காப்பாற்றியிருப்பேன்'என்று ஒரு நாள் 
அவனிடம் சொல்லிவிட்டு அழுதது 
அவளெழுதிய ஒருகவிதையை 
அதனிடம், அவன் படித்துக் காண்பித்துக் கொண்டிருந்தான் 
சிலை 
அந்தப்பக்கமாகப் போன மூவரையே வெறித்துக் கொண்டிருந்தது...

- முகமது பாட்சா*
30 /06 /2018

Friday, 29 June 2018

ஆத்மதிருப்தி

தானியங்கு மாற்று உரை இல்லை.

கனவுகளுக்குள் நுழைந்து கொள்கிறேன் 
ஆத்மதிருப்தியாய் அங்குதான் வசிக்கிறாய் 
சொல்லாத கதைகள் பேசுவது சுலபமாகிப் போகிறது 
வண்ணங்களொற்றிய உதடுகள் தேவையில்லை 
வாசனை வார்த்தைகள் போதும் 
நிழல் பிரித்து நீ கோர்த்த வார்த்தைகள் 
கவிதைகளாக்கி ஆருயிருக்குச் சமர்ப்பணம் 
நல்லவேளை 
வனத்தைக் கனவு ராஜ்ஜியத்தில் கட்டமைத்தாய் 
எட்டுவழிச்சாலைக்கு எவரும் அகழமுடியாது 
இரசாயனம் பூசிக்கொள்ள ஆலைகளில்லை 
இலையுதிர்க்கும் நீருக்கு இலக்கணப் பிழையில்லை 
இதுவுமில்லையென்றால் 
இலக்கில்லா ஞொள்ளோடு நோவு கொண்டிருப்பேன் 
வா அடுத்தக் கதை பேசுவோம்... 
விழித்தால் விழித்தழுவி கொள்ளும் கவலைகள். 

- மு.முகமது பாட்சா* 
30 /06 /2018 

Thursday, 28 June 2018

சம்பந்தமில்லாமல்

தானியங்கு மாற்று உரை இல்லை.

சம்பந்தம் இல்லாமல் 
ஏதாவதொன்று நிகழ்ந்து விடுகிறது 
எலிமருந்து சாப்பிட்டவனருகில் 
எலியொன்று எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறது 
திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிடுகிறேன் 
ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது 
பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது 
சேகர் ரெட்டியின் குற்ற வழக்குகள் தள்ளுபடியாயின 
மரங்களைப் பற்றி எழுதிய கவிதைகளுக்கும் 
எட்டுவழிச் சாலைக்கும் சம்பந்தமில்லை 
தூங்கிக் கொண்டிருந்த போதுதான் 
ரூபாய் நோட்டுகள் மதிப்பையிழந்தன 
சுவீஸ் வங்கி முதலீடுகளும் 
கேளிக்கைகளில் இருந்தபோது நிகழ்ந்திருக்கலாம் 
அப்படித்தான் காந்தியை சுட்டபோதும் 
சிலர் பட்டாசுவெடித்துக் கொண்டாடினார்கள். 
மன்கீபாத்திற்கு நேரமாகிவிட்டது 
எங்கு எது நடக்குமென்று பயமாகவிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
29 /06 /2018

நுண்புனை கதைகள் 5

நுண்புனை கதைகள் 5 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள்

புத்தகமாய் அவள்.... 

அந்தப் புத்தகம் என்னையே வெறித்துக் கொண்டிருந்தது 
அஃதொரு ஒரியமொழி கதைப் புத்தகம் 
அநாதரவாகக் கீழே கிடந்ததென்று எடுத்து வந்துவிட்டேன், 
எனக்குத் தெரிந்து ஒரிய மொழி நண்பர்கள் யாரும் கிடையாது 
மற்ற புத்தகங்களை வாசிக்கும் போது அஃதென்னை, 
பரிதாபமாகப் பார்க்கும் 
அதற்காக அவ்வப்போது புரட்டிப் பார்ப்பேன் 
படங்களில்லையென்றாலும் ஒரு பெண்ணின் வாசம் வீசும் 
அதிலுள்ள சிகப்பு கையெழுத்து அவளுடையதாக இருக்கலாம் 
அந்த ஹாட்டின் எனக்காகப் போட்டது போலவேயிருக்கும் 
ஒருவேளை அவள் கம்யூனிஸ்டாக இருக்கலாம்... 
அவளோர் உருவம் சமைத்துக் கொண்டு என்னோடுவே வாழத் தொடங்கிவிட்டாள் 
வேறுவழியில்லாமல்தான் இந்த முடிவெடுத்தேன் 
அதில் அவளுக்கும் சம்மதம்தான். 
என் கையில் இப்போது தவழ்ந்து கொண்டிருந்தது 
'ஒரே மாதத்தில் ஒரிய மொழி கற்றுக் கொள்வதெப்படி' 

- மு.முகமது பாட்சா* 
28 /06 /2018 

Wednesday, 27 June 2018

இடைச்செருகல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு மற்றும் வெளிப்புறம்

பறப்பதைப் பார்த்துப் பட்டாம் பூச்சியென்கிறாய் 
கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டால் 
கும்பிடுவதற்காகுமா? 
தாயங்களை உருட்டிவிட்டு 
சதுரங்கக் காய்களை நகர்த்துவது வேடிக்கை 
கட்டுமரப் பாடல்கள் களைப்பைப் போக்குகின்றன 
மீனவன் வலையில் மீன்கள் மட்டுமல்ல... 
அகன்றவெளியில் ஆசைகள் அரூபம் 
தூங்கியெழுவது போல் கதைகளின் களம் 
நாற்காலிகளென்றும் நடப்பது கிடையாது 
ஒற்றைக் கோலென்றாலும் 
ஊன்றுகோல்தான் உதவிக்கு வரும் 
பயணிகளின் பரிபாசை அனைத்துமெனது 
இடுகாட்டின் இடுக்குகளில் வாழ்கிறது 
சொல்லப்படாத சரித்திரங்கள் 
இடைச்செருகலுக்குத்தான் எத்துணைத் துள்ளல் 
பறப்பதெல்லாம் பட்டாம் பூச்சிகள் கிடையாது... 

-மு.முகமது பாட்சா* 
28 /06 /2018 

நுண்புனை கதைகள் 4

நுண்புனை கதைகள் 4 

பசி
தானியங்கு மாற்று உரை இல்லை.

அவள் அங்கேயே நின்று 
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் 
அவனருகில் யாருமில்லை 
அவளின் மாராப்பு சற்று விலகியிருந்தது 
பார்ப்பதற்கு மிகவும் நல்லவனாகத் தெரிந்தான் 
வேறு வழி தெரியவில்லை 
பசி வேறு வயிற்றை இறுகப்பிடித்துத் திருகியது 
கேட்டுவிடுவதென்ற முடிவிற்கு வந்தவள் 
அவனிடன் சென்று,'பசிக்குது' என்று கை நீட்டினாள் 
அவன் இப்போது 
அவள் மீது படர்ந்து கொண்டிருக்க 
நாயொன்று பசிக்காகத் திரிந்து கொண்டிருந்தது... 

- முகமது பாட்சா* 
27 /06 /2018 

Tuesday, 26 June 2018

நிழலரசாங்கம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

இது நிழலரசாங்கம் 
காட்டமாகக் கத்தியது காகம் 
கவண் கட்டைகளைத் தடை செய்யாததேன்? 
கேள்வியெழுப்பியது கொக்கு 
உங்களின் பாதுகாப்பிற்காகத்தான் என்று 
கரடி சமாதானம் செய்தாலும் 
குருவிகள் எதிர்ப்பு குரலெழுப்பின 
நரிகளின் தொல்லை தாங்கவில்லையென்று 
கோம்பியாடு பிராது வைத்தது 
கவனிக்கப் படும் என்ற உறுதி மொழியுடன் 
நரிகளுக்கான தேவைகளும் 
நிறைவேற்றப்படுமென்றத் தீர்மானம் 
ஆதரவில்லாமல் நிறைவேறியது 
மான்களைக் காணவில்லையென்ற குற்றச்சாட்டிற்கு 
அபாண்டமானதென்று 
புலிகள் ஆட்சேபனையை எழுப்பின 
பசுக்களின் ஆட்சியில் பழிபோடுவது 
எதிர்க் கட்சிகளின் சதியென்று 
எருமைமாடொன்று எக்காளமாகக் கர்ஜித்தது. 
நோட் திஸ் பாயிண்ட் - 'கர்ஜித்தது' - 
முடிவாக 
ஆடு மாடுகளின் பாதுகாப்பிற்காக 
புலிகளின் முகாம்களை அருகிலமைக்க 
வரைவு மசோதா தாக்கல் செய்ய 
நாட்டாமை நரி காரில் பறந்தது 
இத்துடன்  சபை ஒத்திவைக்கப்பட்டது. 

- மு.முகமது பாட்சா*
27 /06 /2018

விற்பனைக்கல்ல

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

மௌனத்தை வைத்துக் கொண்டு திரிகிறேன் 
வாங்குவதற்கு ஆளில்லாமல் 
வீசியெறிந்தால் 
மீண்டும் சட்டைப்பையில் உட்கார்ந்து கொள்கிறது 
எரித்துவிட முயல்கிறேன் 
ஏழுகடலும் சூழ்ந்து கொண்டால் என்ன செய்வேன்? 
புதைத்துவிட்டு உட்கார்ந்தேன் 
புற்கள் கருகிப் புகலிடமற்ற பிணமெழுந்தது 
எங்குப் பார்த்தாலும் மௌனம் கலைத்த சடாயுக்கள் 
எல்லோரும் 
எதையோ தேடிக் கொண்டேயிருக்கிறார்கள் 
வேறுவழியில்லை 
தேநீர் கோப்பையில் நிரப்பி வைத்திருக்கிறேன் 
விஷமாவதற்கு முன் அருந்திவிடல் நலம் 
மௌனம் விற்பனைக்குமல்ல 
விடிந்தெழுந்தால் தெரியும் மௌனம் இறந்திருக்கலாம். 

- மு.முகமது பாட்சா* 
26 /06 /2018 

Monday, 25 June 2018

வீடென்பது



செடியென்பது
இலை, தண்டு, காய், வேர், பூ
இவை மட்டுமல்ல
பல சிற்றுயிர்களின் வீடும் கூட
மலர்களின் வாசமென்பது
மண்ணின் வாசனையும் சேர்ந்துதான்
நிழலென்பது வெற்றுப் பிரதி
ஆனாலும் அதுதான்
நிஜத்தை அடையாளம் காட்டுகிறது
சிறகுகளிருந்தால் பறவை
கற்பனையில் நடப்பவன்
கனவில் மட்டும் வாழ்கிறான்
வாசிப்பில்லாதன் வசிப்பிடமில்லாதவன்
வசந்தமென்பது 
பார்வையின் கோளாறு
வாசலென்பது வருகையின் பதிவேடு
மனிதமென்பது
மனதினில் வரும் வாசம்
நோயுற்றவன் 
உறவுகளை என்றும் நேசிக்காதவன்
செடியென்பது
பல சிற்றுயிர்களின் அழகிய வீடு.

- மு.முகமது பாட்சா*
26 /06 /2018

Sunday, 24 June 2018

மரணக்குறிப்பு

தானியங்கு மாற்று உரை இல்லை.

'மதுவின் கோப்பை கவிழ்ந்து கிடந்தது' 
- மரணக் குறிப்பின் முதல் வரி - 
அங்கிருந்த ஈக்களைப் பற்றிக் குறிப்பிலில்லை 
'மதுவில் விஷம் கலந்திருந்தது' 
அடுத்த வரி 
மதுவே விஷமென்பது மறைக்கப்பட்டது 
முடிவான குறிப்பு 'காதல் தோல்வி' 
- நல்லவேளை அவள் பிழைத்துக் கொண்டாள் - 

- மு.முகமது பாட்சா* 
25 /06 /2018 

Saturday, 23 June 2018

குப்பைத்தொட்டி


நுண்புனை கதைகள் 3
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

குப்பைத்தொட்டி 
அஃது அங்கேயேதான் இருந்தது 
சிலர் மூக்கை மூடிக்கொண்டு போனார்கள் 
சிலர் முகம் சுளித்து எச்சிலை துப்பிவிட்டுப் போனார்கள் 
அதன் வயிறு அவ்வப்போது புடைத்துக் கொள்ளும் 
நகராட்சி வண்டிகள் அள்ளிச் செல்லவில்லையென்றால் 
வாய்வழியே துர்நாற்றம் வழியும் 
சற்றுமுன் வீட்டுக் கழிவுகளை ஒருவன் வீசிவிட்டுப் போனான் 
அதில் கிடந்த எச்சில் சாப்பாட்டால் 
நாயொன்று நன்றிக் கடனுடன் நகர்ந்தது 
கர்ப்பமாக இருந்த எலியொன்றுக்கும் 
பஞ்சணை இதுவாகத்தானிருந்தது 
நடு நிசியில் வந்து விழும் காண்டத்திற்கெல்லாம் ஒவ்வொரு கதையிருக்கும்! 
பசி தீர்ந்த பச்ச வவுத்துக்காரி பதுங்கிப் பதுங்கி வந்து 
பொதியொன்றை போட்டுவிட்டுப் பிளசரில் விரைகிறாள் 
வீலென்றழும் பூவொன்றின் குரலுக்கு நாய் வந்து காவல் நிக்கிறது 
எலியொன்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது 
குப்பைத் தொட்டிக்கு இப்போது வயிறு வலித்தது 
அள்ளிக் கொண்ட அன்னக்கூடைக்காரி வயிற்றைத் தடவிக் கொண்டாள் 
காலியாக இருந்தாலும் 
வயிறு நிறைந்திருந்தது இருவருக்கும்.

- மு.முகமது பாட்சா*
24 /06 /2018

எதற்காக?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மரம் மற்றும் வெளிப்புறம்

இலையுதிர்த்த மரத்தின் வேர்களில் நீரோட்டத்தேம்பல் பறவைகளின் உரையாடல் கூடுகளைப் பற்றி பதுங்கலுக்கு மரம்போதும் சர்பத்திற்கு வண்டுகள் மண் குழைவோடலைகின்றன சிலந்தியின் வலை சீரிய முயற்சி குகைகளைத் தகர்த்துவிட்டால் புலிகளெங்கே உறங்கும்? யானைகளின் காடு எலிகளுக்கும் வீடு தாவித் திரிந்தால்தான் குரங்கு நீரோட்டம் உயிரிகளின் நரம்பு செறிவென்பது மழைக்கூட்ட மேகங்கள் மரங்கள் மட்டும்தான் மா மனிதனின் காற்று எந்திரங்கள் எடுபிடிகள் அதன் கழிவுகள் சுவாசத்தின் எதிரிகள் பயணமென்பது சுவாரசியம் கூடியது சுகமாக அமைந்து விட்டால் சோம்பலானது விளை நிலங்கள் மனிதனின் தெம்பு கிராமத்தின் வீடுகள் நகரத்தின் மாளிகைகள் எதையிடித்து எதை மாற்றப்போகிறோம் நாம் கடற்சூழுலகத்தின் காட்சி பொருட்கள் . - மு.முகமது பாட்சா* 24 /06 /2018

Friday, 22 June 2018

அவன் - அவன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அவன் சிலையாக நின்று கொண்டிருந்தான் 
அவன் எத்துணை நூற்றாண்டு மனிதனென்று குறிப்பில்லை 
அவன் கழுத்தை சுற்றி சில மாலைகள் சுற்றியிருந்தன 
அவன் யாரென்ற கேள்வியும் ஒரு நூற்றாண்டு சந்தேகம் 
அவன் அருகில் ஓர் உண்டியல் முளைத்திருந்தது 
அவன் அத்துணைச் சந்தோஷமாக இருக்கவில்லை 
அவன் நிச்சயம் செதுக்கப் பட்டவனில்லை 
அவன் விரட்டப்பட்டவனாக இருக்கலாம் 
அவன் கால் நரம்புகள் புடைத்திருந்தன 
அவன் உடலில் இப்போது இரத்தம் பாயவில்லை 
அவன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறார்கள் 
அவன் அரசனின் அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம் 
அவன் உடல் முழுவதும் காயங்கள் பாவியிருந்தன 
அவன் அநாதியென்று எங்கும் குறிப்புகளில்லை 
அவன் நிச்சயம் உறைந்து போனவன் 
அவன் தெய்வமென்று சிலர் கும்பிடுகிறார்கள் 
அவன் சாத்தனென்று அரசு முத்திரையிட்டிருக்கிறது 
அவன் நிச்சயம் இதற்கெல்லாம் சிரிக்க மாட்டான் 
அவன் நிற்பது அவன் நிலமாக இருக்க வாய்ப்பில்லை 
அவன் அகற்றமுடியாத சிலையென்கிறார்கள் 
அவன் முகம் அச்சு அசல் நமது முகம்தான் 
அவன் வேற்றுக்கிரக மனிதனுமில்லை 
அவன் இப்போதும் அவனாகவே அங்கு நிற்கிறான் 
அவன் இப்போது எல்லோருக்கும் ஒரு வேடிக்கை 
அவன் யாரென்ற கேள்வியும் ஒரு நூற்றாண்டு சந்தேகம் 
அவன் நம்மில் யாராவது ஒருவராகவும் இருக்கலாம். 
அவன் இன்னமும் சிலையாகவே நின்று கொண்டிருந்தான்

- மு.முகமது பாட்சா*
23 /06 /2018 

Thursday, 21 June 2018

மேஜிக் தொப்பி

நுண்புனை கதைகள் 2
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

அரங்கம் நிரம்பி வழிந்தது. 
மேஜிக்மேன் தன் நீண்ட தொப்பியிலிருந்து பூக்களை 
அள்ளியெடுத்தார் 

கூட்டம் கை தட்டியது 

அடுத்து, பின்னணியில் 'ஜாரே ஜஹான்சே அச்சா' ஒலிக்க 
நீளமான தேசியக்கொடி வெளிவந்தது 

பலமான கை தட்டல் 

அடுத்து, வெள்ளைப் புறாவொன்று சிறகடித்துப் பறந்தது 
தொப்பிக்குள் இத்தனை அதிசயங்களா? ! 

வாய் பிளந்தது மட்டுமல்லாமல் கை தட்டலும் அதிர்ந்தது 

அடுத்ததாக, அவர் தன் தொப்பியைக் கவிழ்த்த போது 
'ரூபாய் நோட்டுகள்' சரமாரியாகக் கொட்டின 
அங்கிருந்த அழகிய பெண், அவற்றையெல்லாம் 
அள்ளிக் கொண்டாள் 

அனைவரும் ஆச்சரியத்தில் அசந்து போனார்கள் 
அரங்கம் கலைந்ததும் அவரின் மகள் கேட்டாள், 
"தொப்பியிலிருந்து பணம் வரும் போது, அதுவே போதுமே அப்பா! 
எதற்காக வசூல் செய்கிறீர்கள்?' 
'அந்தப் பணமே அவர்களுடையதுதான் மகளே ' என்றவர் 
அவளை வாரி அணைத்துக் கொண்டு ,
' தொப்பியை இப்போது அவர்கள்தான் போட்டிருக்கிறார்கள் ' 
என்று சொல்லிவிட்டு சிரித்தார் 

'ஹிந்துஸ்தான் ஹமாரா' என்று பாடலொலிக்க
அரங்கம் இப்போது இருண்டிருந்தது.

மு.முகமது பாட்சா*
22 /06 /2018

காணாத செய்தி

தானியங்கு மாற்று உரை இல்லை.

இந்தக் கவிதை சற்றுப் புரியாமல்தான் இருக்கும் 
வார்த்தைகள் கிடைக்காத வறுமையாக இருக்கலாம்
ஆனாலும் அரசியல்தான் பேசுகிறது 
புல்லை நட்டுவிட்டு 
போதிமரம் வளர்ந்ததாகச் சொல்கிறவன் 
நிழலைத் தேடுகிறான்
குற்றவாளிகள் வெளியில் இருக்க.... 
சிறைச்சாலைகள் எப்போதும் நிரம்பியே வழிகின்றன 
கஜானாப் பெட்டியின் சாவியை 
ஏழு மலைத் தாண்டி கிளியொன்று வைத்திருக்க 
பூட்டை கோழிக் குஞ்சுகள் அடை காக்கின்றன 
நிழல்திரைக்கு விசில்கள் பறக்கின்றது 
கட்டையவிழ்த்த 
நீதி தேவதையின் கண்களைக் காணவில்லை... 
சர்ப்பமொன்று தேச வரைபடத்தின் மீது ஊர்கிறது 
நாய்கள் ஊளையிடுகின்றன 
இடுகாட்டுக் குழிகளில் 
எழுத்துகளைப் புதைத்துக் கொண்டிருந்தவர்கள் 
தேசக்கொடிக்கு முத்தமளிக்க 
காந்தி இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறார் 
தற்குறிகள் இராஜ மகுடத்தில் சல்லாபிக்க 
கேள்விக்குறிகள் 
தூக்குக் கயிற்றில் தொங்க விடப்படுவது வழமைதான் 
இப்போதுதான் சற்றுமுன் வந்த செய்தி 
ஒரு மூதாட்டியை, சமூக ஆர்வலரை, 
மற்றுமொரு நடிகையையும் 
காணவில்லை! 
எழுத்தாளன் காணாத செய்தியில் 
எழுத்துகளையும் காணவில்லையென்பது மிக முக்கியம்.

- மு.முகமது பாட்சா*
21 /06 /2018

Wednesday, 20 June 2018

சிகரெட்துண்டு

நுண்புனை கதைகள் 1
படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு, நெருப்பு மற்றும் புகைபிடித்தல்

அந்த சிகரெட் துண்டு இன்னமும் புகைந்து கொண்டேயிருந்தது, 
சற்று முன்தான் இந்த வழியாக ஓர் ஆம்புலன்ஸ் சென்றது... 
அதிலேற்றபட்டவன் சற்று முன்தான் புகை பிடித்துக் கொண்டிருந்தான். 
அவன் வாங்கிய சிகரெட் பெட்டியில் அந்தச் சிகரெட்டின் வாசம் 
இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது. 
அந்தப் பெட்டியினோரத்தில் ஒரு வாசகம் இவ்வாறு 
சிறிதாக அச்சிடப்பட்டிருந்தது, 'புகை பிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது' 
அங்கிருந்த பெட்டிக்கடைக்காரர் ,'என்னன்னு தெரியலை 
திடீர்ன்னு மயக்கம் போட்டு வுழுந்துட்டான்' என்று சொல்லி வருத்தப் பட்டார். 
'தண்ணி போட்டிருப்பான்' என்று சொன்ன வழிப் போக்கன் ,
'சரி சிகரெட் ஒண்ணு கொடு' என்று வாங்கி அங்கேயே பற்ற வைத்தான். 
பற்ற வைத்த கயிறு மெல்ல எரிந்து கொண்டிருந்தது.

- மு.முகமது பாட்சா*
21 /06 /2018

Tuesday, 19 June 2018

மண்ணுமேல வச்ச பாசம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

என்னைப் பார்த்துத்தானே 
எட்டு வைப்பான் சூரியனும் 
அத்தனை காலையில 
அடிச்சுழுத மண்ணைய்யா யிது, 
நாத்து நட நான் குனிஞ்சா 
நெல்லே கூட நிமிர்ந்து பார்க்கும், 
சோறுதானே நீயும் திங்கற 
மாத்திரையில வாழ்ந்திடுவியா? 
கால் செருப்பு போட்டாக்கூட 
பூதேவிக்கு வளிக்கும்னு, 
என் தோலையே 
செருப்பா போட்டுகிட்டு 
காயம் பட்ட பாசமய்யா! - எங்க 
வியர்வை விழுந்த மண்ணு இது 
தாரைக்கொட்டி நசுக்கப் பார்த்தா 
நானென்ன சும்மாவா விடுவேன்? 
காயம் பட்டு வாழ்ந்த உடம்பு 
இந்த லட்டிக்கெல்லாம் அசராது... 
கருணையிருந்தா தாயை விடு, 
இல்லையென்னா 
கண்ணை மூடிச் சுட்டுவிடு 
பார்ப்பதற்குத் தாங்காது 
பாவிமவ 
இந்த மண்ணு மேல வச்ச பாசம். 

- முகமது பாட்சா*
20 /06 /2018

நண்பர் கமல் காளிதாஸ் படத்திற்கு எழுதிய கவிதை

ஏன்டா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஸ்வாமி என்றவளின் வாரிசு 
கணவனை,' பிராண நாதா!' என்றால் 
நகர நகர அத்தானென்றவள் 
ஏங்க என்பதையும் எரிந்துவிட்டு 
ஏன்டா என்கிறாள் 
இப்போதுதான் 
அவன் மிக நெருக்கமாகவே இருக்கிறான் 
ஆண்டவனே கூட 
அவன் இவனென்பதில்தான் 
ஆசைப்படுகிறான் 
ஒருமை விளிப்பொன்றும் ஒவ்வாததல்ல 
மரியாதையுடன் காலடியில் கிடந்தால் 
மதிப்பிற்கு வாரிசேது? 
பெயரென்பதே விளிப்பதற்குத்தான் 
அடையாளத்தை அவதாரமாக்கிவிட்டால் 
ஆண்டவனுக்கு என்ன வேலை? 
கொஞ்சும் போதும் 
திட்டிக் கொள்வது பாவமில்லை 
நீ, வா ,போ ஒன்றும் 
மோசமான வார்த்தைகளுமில்லை 
குடும்பத்தைக் கோவிலாக்க வேண்டாம் 
பாசம் மட்டும் 
பத்திரமாக இருந்தாலே போதும். 
ஏன்டா ஏன்டீ கூட இனிப்பாகவேயிருக்கும்.

- மு.முகமது பாட்சா*
20 /06 /2018

காலியான காகிதம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

காகிகத்தின் பக்கம் 
காலியாகவே இருக்கிறது 
செய்திகளின் உள்ளடக்கத்தை 
அவரவர்களே நிரப்பிக் கொள்ளுங்கள் 
சப்தமிட்டு எதையும் வாசிக்காதீர்கள் 
காகிதம் மௌனத்தை நேசிக்கிறது 
காகிதத்திற்குப் பயமில்லை 
எழுத்துகள்தான் எங்கேயோ 
அச்சப்பட்டு ஒளிந்திருக்கின்றன 
காகிதத்தின் முனைகள் 
கூர்மையாகவே இருக்கின்றன 
விழிப்புடன் இருத்தல் நலம் 
நுட்பப்பிரிவு ஆடிகளைக் கொண்டு 
அளந்து கொண்டிருக்கிறது 
தீவிரவாதிகள் 
காகிதத்துள் பதுங்கியிருக்கலாம் 
காலியாக இருப்பது கூட 
அரசின் பார்வையில் 
கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைதான். 

- மு.முகமது பாட்சா*
19/06/2018

Monday, 18 June 2018

பிழை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி மற்றும் வெளிப்புறம்

சொல்லடைவில் 
பிழையிருப்பதாகச் சொல்கிறாய் 
பிழையில்லாத பிழைகள் - இங்கு 
யார் கண்களுக்கும் தெரிவதில்லை 
ஆசையைப் பிழையென்கிறோம் 
காதலாய் மலரும்போது காமம் பிழையாமோ? 
நாலாந்திரப் பிழைகள் 
நாற்காலிகளில் அமர்ந்தபிறகுதான் 
தேசத்தின் பிழைகள் தெளிவாகத் தெரிகிறது 
சூட்சமப் பிழைகளைச் சரியெனக் காட்டும் 
கண்ணாடி அணிந்து கொள்கிறோம் 
மெய் பிழையெனச் சொல்லும் வேதாந்தம் 
சொற் பிழையென்ற சொல்லாமோ? 
நதிக்கரை நாகரீகம் உயர்வென்கிறோம் 
நதிகளைச் சாகடித்துவிட்டு 
பசுமை வழியென்பதும் 
இயற்கையை அழித்துதானென்றால் 
பெயரே பிழையன்றோ? 
பிச்சையெடுத்துப் பிச்சை போடுகிற தேசமிது 
பிழைகளைப் பற்றிப் பேசுபவன் தேசத்துரோகி 
மூன்று குரங்களை 
உதாரணம் கொண்டுவிட்டோம் 
கண் மூடி வாய் பொத்தி 
காதுகளை அடைத்துக் கொள்வோம் 
பிழையில்லாத பிழைகள் - இங்கு 
யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை. 

- மு.முகமது பாட்சா* 
19 /06 /2018 

Friday, 15 June 2018

ஈத் வாழ்த்துகள்


ரமலான் 31 ( ஈகை திரு நாள்)


இனிய நோன்பின் இரவு வணக்கம் 
இனிதாக விடைபெற்றது

இறைவன் முன்புதான் துவாக்களாக 
எத்துணை மனுக்கள் சமர்ப்பணம்

தர்மத்தின் கதவு 
நோன்பிற்கானது மட்டுமல்ல...

வாசலைத் திறந்து வையுங்கள் 
வசந்தம் வந்து வீசட்டும்

நாளொரு பாடலையெழுதிய 
நாடோடி வியக்கிறேன் 
நானா இவற்றையெல்லாம் எழுதியது

இறைவணக்கம் எழுதாத பாட்டுக்காரன் 
இறைவனுக்கு இதுதான் வணக்கம்

எழுத்துகளின் பிழையிங்கு 
வார்த்தைகளை நேசிக்கிறது

ஒன்பது ஓட்டைப் புல்லாங்குழல் 
காற்றுப்புகுந்ததும் 
பாடலை இசைக்கிறது

சிறகுகளில்லாமல் பறப்பது கனவு 
சிந்தைகளோடு பறப்பது அறிவு

மழையெனப் பெய்யும் மாமழை 
இறைவனின் கருணை

மகிழம் பூக்கள் 
மரணத்தின் வீச்சத்தைச் சுமக்காது

துவாக்களின் பூக்கள் சிந்திக்கிடந்தால் 
சுவனத்திற்கு நிச்சயம் வழி கிடைக்கும்

அரவணைத்துக் கொள்கிறவன் சினேகிதன் 
அன்பு காட்டுபவன் சகோதரன்

வாழ்த்துகளென்பது 
வாசலில் தொங்கும் தோரணம்

அழகிய உணர்வுகளே 
ஆன்மா சொல்லித் தருகின்ற பாடம்

சீ யென்பவன் சீக்காளி 
சிந்தனையோடு திரிபவன் சீர்திருத்தவாதி

வளமென்பதும் வாழ்த்துகள்தான் 
வாருங்கள் 
முசபா செய்து முகமன் கூறிக் கொள்வோம்

இனிய ரமலான் நல் வாழ்த்துகள்

- மு.முகமது பாட்சா* 
15 /06 /2018

பிறை பார்த்தோம்

ரமலான் 30

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு மற்றும் வானம்

பிறையை இழுத்து வந்து 
பெரு நாள் கொண்டாட முயல்கிறோம்

வரும் பிறைக்காக 
வாசல் கதவை திறந்து வைப்போம்

முப்பது நோன்புகள் முழுமை பெறட்டும்
இறைவன் கருணையே 
- சுபஹானல்லாஹ் !

மகிழ்வென்பது மனதில் பூக்கும் 
முகமன் மட்டுமே நட்பின் இலக்கணம்

ஏந்தியக் கைகளில் வெளிச்சம் நிறைக்க - 
இனிதே கூறுவோம் மாஷா அல்லாஹ் 
மகிழ்வுடன் தொழுதே

கருணைப் பூத்த மனதினிலெல்லாம் 
கள்ளிகள் பூப்பதும் நியாயமில்லை

தூய்மையான வீட்டை நாமும் 
துப்புரவாக்கித் தொடர்வதே நேசம்

கோபம் பாவம் இரண்டும் தொலைத்து 
கொடியில் பூத்த மலர்களாவோம்

வாசமென்பது நடத்தையின் பூக்கள் 
வாடிடாமல் பாதுகாப்போம்!

- மு.முகமது பாட்சா* 
15 /06 /2018

Wednesday, 13 June 2018

கல்வியென்பது

ரமலான் 29 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ, செடி, இயற்கை மற்றும் வெளிப்புறம்

எல்லாம் முடிந்து விடுகிறது 
ஏதோவொன்று 
நம்மை விட்டும் கடந்தும் விடுகிறது 

அறிவின் கதவுகள் எப்போதும் 
திறந்தேயிருக்கின்றன 

காட்சிகளின் பிழைகளில்தான் 
கனாக்களை விரிக்கிறோம் 

நபி நூஹூவின் கப்பலில் ஏறாதவன் 
பெரும் வெள்ளத்தில் மூழ்குகிறான் 

சிலந்தி வலையின் ஆற்றல் 
சிந்தனைகளின் பின்னல் 

தேனீக்களிடம் யார் பாடம் கற்றது? 
வெட்டுக்கிளிகளுக்கு 
போர்த் தந்திரம் யார் சொல்லித் தந்தது? 

வேர்களைப் பற்றிச் சிந்திக்காதவன் 
நிழலில் நிற்க அருகதையற்றவன் 

கோடாரியைக் கண்டு வியக்கிறவன் 
காம்பை 
கையில்தான் பிடித்திருக்கிறான் 

மழையென்பது 
மண்ணிலிருந்துதான் புறப்படுகிறது 
ஆனாலும் 
மேகத்தைப் பார்த்துத்தான் வியக்கிறோம் 

அறிவின் கதவுகள் எப்போதும் 
திறந்தேயிருக்கின்றன 

கல்வியென்பதே சிந்திப்பது மட்டும்தான். 

- மு.முகமது பாட்சா* 
14 /06 /2018 

சின்ன சின்ன


சிலுவை
யாருக்காக செய்யப் படுகிறது?
தச்சனே உஷாராய் இரு!

***

குனிய மறுத்தேன்
வாசல் இடித்தது
அய்யோ கடவுளே!

***

சுவாசம் குறைகிறது
மாசடைகிறது காற்று
வராத செய்தி

***

இலையுதிர்ந்த
மரங்கள்
இனிய புல்லாங்குழலோசை
வறண்ட ஏரி

***

- மு.முகமது பாட்சா*

சகாத் அல் பித்ர்

ரமலான் 28
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

இரண்டொரு நாட்களில் 
இனிதொரு குதுகலம் எட்டிப் பார்க்கும்

உறவுகளின் கைகள் 

உரிமையுடன் இறுக்கம் சேர்க்கும்

தோள்களனைத்து 

வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வோம்

அதற்குமுன் 

'சகாத் அல் பித்ர்' நம் கடமையல்லவா

நோன்பின் நன்மைகளுக்கு 

புன்னகை வரையும் அழகிய தர்மம்

எல்லோருக்கும் இது கட்டாயம்


இல்லையென்று சொல்ல 

என்னிடம் 
எதுவும் இல்லையென்று சொல்லாதே

இருப்பதிலிருந்தும் கொடுப்பதுதானே 

சகாத் அல் பித்ர்

கையளவில் அள்ளிச் செய்யும் 

கன்னியமிக்க தர்மமிது

ஈகையின் திருநாளுக்கு முன்பே

இனிதாய் கொடுத்திடுவோம்

ஏழைகளுக்கும் இனிய பெரு நாள்

தடையின்றி நடக்கட்டுமே

கருணையின் நிழல் எப்போதும் 

நம் கையோடுவே இருக்கிறது

வாழ்த்துகள் வளம் பெறுவது

தர்மத்தின் வாசல்களில் மட்டும்தான்.

- மு.முகமது பாட்சா* 
13 /06 /2018

(சகாத் அல் பித்ர் : 
நோன்பு நோற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையான தர்மமாகும் ஒரு நபர் செய்யும் தர்மத்தின் அளவு 
2 .3 கிலோ கிராம் தானியமாகும். நாம் என்ன தானியம் 
உபயோகம் செய்கிறோமோ அதே குணமிக்கத் தானியத்தையோ 
அல்லது அதனளவு பணத்தையோ 
பெரு நாள் தொழுகைக்கு முன்பாக ஒரே ஏழைக்கு அளிக்க வேண்டும். 
வீட்டிலுள்ள ஒவ்வொருக்குமே இது கடமையாகும் )

ஆசையினாழம் அதிகம்

ரமலான் 27

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வரைதல்

புனித இரவின் பொக்கிசங்களை 
அள்ளிக் கொண்டீர்களா?

எத்தனை நன்மைகளில் - உங்களை 
நீங்களே புதைத்து வைத்தீர்கள்?

கைகளோடு கண்களுமல்லவா 
பாவங்கள் செய்கின்றன

தொழுகையினால் மட்டுமே அவை 
தூய்மையாகி விடுமா?

ஓதி முடித்த குரானுக்குள்ளிருந்தும் 
இடம் மாறாமல் 
இன்னமும் வசனங்களிருக்கின்றன...

சூறாக்களோதிய வாய்களால்தான் 
துட்சண வார்த்தைகளையும் பொழிகிறோம்

ஆசையினாழம் அதிகமென்று தெரிந்தும் 
நீந்துவதற்கு அச்சப்படுவதில்லை

காற்று எப்போதும் 
மென்மையாகத்தான் வீசுமென்பது 
நம் கற்பனை

கறையான்களுக்கும் கூட 
நம்மை 
அபகரித்துக் கொள்ள அதிகாரமிருக்கிறது

போதையென்பது 
மூளை நரம்புகளின் முட்டாள் சினேகிதன்

புகழென்பது உச்சபட்ச செருக்கு

ஆடம்பரமென்றுமே 
அடுத்தொரு உலகத்திற்குள் நுழையமுடியாது

தர்மம் செய்தீர்களா? 
தானெமென்பதும் 
நம் கண்களின் பிரகாசம்தான்

- மு.முகமது பாட்சா* 
13 /06 /2018

Monday, 11 June 2018

ஆளவந்தாரின் அறிவிப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

சாலையோரத்தில் 
அழுது கொண்டிருந்தவளின் பெயர் 
நீதி தேவதையாம் 

மக்களெல்லாம் காதுகளைப் பொத்தி 
நடந்து செல்கிறார்கள் 

செய்தித்தாள்களில் 
சாதனை விளம்பரங்கள் ஜட்டி பிரா 
செய்திகளாகியிருக்க 

தொலைக்காட்சியில் 
பிக்பாஸ், காலா, விஸ்வரூபம் பற்றி 
கலந்துரையாடல் 

படுத்தெழுந்தால் 
வேலையென்று அறிவித்தவன் 
மாயக்கண்ணாடிப் போட்டு அலைகிறான் 

பேசினால் பேசினவாய் சுடப்படும் 
ஆளவந்தாரின் அறிவிப்பு 

நீதி தேவன் 
கழற்றி வைத்த கண்ணாடியில் 
கறை ஒட்டிக் கொண்டிருந்தது 

இப்போதெல்லாம் கறை 
நல்லதென்றே விளம்பரம் செய்கிறார்கள் 

ஆம் எங்கு விட்டேன் 

சாலையோரத்தில் 
அழுது கொண்டிருந்தவளின் பெயர் 
நீதி தேவதையாம் 

- நட்புடன்.....முகமது பாட்சா* 
11 /06 /2018 

ஓதுவீராக!

ரமலான் 26 
தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓதுவீராக! 
இறைமறைத் தந்த இனிய இரவின் 
முதல் அழைப்பு 

ஜிப்ரில் அலையின் முதல் அணைப்பு 

எழுத்துகளை அறியாத எங்கள் நபி(ஸல்) 
ஓதுகிறார் 

வாசிக்கச் சொல்லுகிறான் இறைவன் 
பகுத்தறிவு 
அங்குதான் பட்டைத் தீட்டப்படுகிறது 

சந்தைகளிலிருந்து 
வீடு திரும்புகிறார்கள் பெண்கள் 

மதுக்குடங்கள் 
உடைக்கப் படுகின்றன வீதிகளில் 

அடிமைகளின் சங்கிலி அறுக்கப்பட்டது 

குறைஷிகளின் தோள்களில் 
கறுப்பர்களும் கை போட்டு நடக்கலாம் 

பூசனைகள் வெட்கப்படுகின்றன 
காலில் விழுவது கடைசியாகிப்போனது 

வணக்கமென்பது இறைவனுக்கு மட்டுமே 
வாழ்த்துகள் சக மனிதர்களுக்கு 

தர்மம் கட்டாயம் 
தானம் முக்கியம் 
வட்டியென்பது அறவே கிடையாது 

பகிர்துண்ணாதவன் பாவியானான் 

வியர்வை விழும் முன் 
கூலிகள் கிடைத்தன 

பிலால் (கறுப்பர்) தான் பாங்கு சொன்னார் 

யாருமிங்கே தொழ வைக்கலாம் 
தொழுகையிலும் தோளுரச வேண்டும் 

நறுமணக் காற்றின் முதல் வசந்தத்தை 
இந்த இரவுதான் சுமந்து வந்தது 

ஓதுவீராக! 
இறைமறைத் தந்த இனிய இரவின் 
முதல் அழைப்பு 

- மு.முகமது பாட்சா* 
11 /06 /2018 

Sunday, 10 June 2018

உதிரிப்பூக்கள்

மக்காத குப்பைகளாக
நெகிழிக் கவிதைகள் !

------

நிழலைப் பிடித்து
விளையாடுகிறது
குருட்டுப் பூனை

---------

வண்ணங்களை எடுத்து 
பூசிக் கொள்கிறேன், 
நிலா
சிரித்துவிட்டு நகர்கிறது

---------

காற்றை பிடித்து வைத்துத் திரிகிறான்
வாங்குவதற்கு ஆளில்லை
திருவிழாவில் பலூன் வியாபாரி!

---------

கடவுள் ஊர்வலம் வருகிறார் 
தனவந்தர்களின் தாம்புல வீதியில் 
அடித்துவிரட்டுங்கள் பிச்சைக்காரர்களை 
அதோ 
அவர்களோடுதான் ஓடுகிறார் கடவுள்! 

---------

இதுவும் கடந்து போகும்
என்று சொன்னவன்
இதோ 
நம்மை கடந்து போகிறான்!

---------

மெளனத்தைக் கலைத்துவிட்டுச் செல்லும்
பறவை சொல்லிவிட்டுப் போகிறது...
"போய் உங்கள் வேலையைப் பாருங்கள்!

------------------

- முகமது பாட்சா

பறையடிப்பெண்ணே பறையடி

தானியங்கு மாற்று உரை இல்லை.

பறையடிப் பெண்ணே பறையடி 
பத்து காத தூரம் 
கேட்கும்வரை பறையடி 

ஒப்பனைகள் நமக்குத் தேவையில்லை 
ஒத்தசுதந்திரம் கேட்டுப் பறையடி 
கட்டும் குழலை நாம் கழற்றி வைப்போம் 
காகிதத் தோரணை வேண்டாமே 
பற்றும் சாதிகளைப் படையல் வைத்து 
பாடிக் கொண்டுபோய்ப் புதைப்போமே (பறையடி) 

சொத்துச் சுகங்கள் எல்லாமே 
பெண்ணிற்கும் சமமாய்க் கிடைத்திட பறையடி 
ஒத்த மனத்துடன் வாழ்வதற்கே 
கணவன் உரிமை கொண்டானென்று பறையடி (பறையடி) 

மாகாளி வேசங்கள் தேவையில்லை 
மதிப்புடன் வாழவே பறையடி 
ஆதிக்கம் பெண்மைக்குள் காலை வைத்தால் 
ஆங்காரம் சூடி நீ பதற அடி (பறையடி) 

- மு.முகமது பாட்சா* 
 ஓவியம் : Ravi Palette - நன்றி!

10/06/2018 

வயதுக்கு வயதில்லை

ரமலான் 25

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நேற்றுதான் பிறந்தது போல் 
வயது ஓடிவிடுகிறது

கருவறைக்கும் மண்ணறைக்குமான 

தூரம் மிகக்குறைவு

நிழல் மரணத்தின் பிரதி


காய்க்காத மரத்தை வெட்டும்போது 

யாருக்கும் வலிப்பதில்லை

காரூனின் ஆடம்பரம் புதைந்தது 

அவனுக்கே தெரியாது

துல்கர்ணையின் 

இரும்புத்தடை இளகிவிட்டால் 
எதுவுமே இங்கே இருக்கப் போவதில்லை

அவலங்களின் கூட்டணிதான் 

அகிலத்தின் முடிவு நாளாகும்...

இருப்பதெல்லாம் எடுப்பதற்கு மட்டுமா? 

கொடுப்பதற்கும்தான்

சகோதரனின் தோளில் சாயாதவன் 

சாத்தனின் 
கையைப் பிடித்து நடக்கிறான்

தாயின் காலில் சொர்க்கமிருக்கிறது 

தந்தையின் அன்பில் சுவனம் மணக்கும்

பொருளோடு மட்டுமே வாழ்கிறவன் 

புதைகுழியில் பிணம் மட்டுமே

திருமறையின் வாசம் 

அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காது

நேற்றுதான் பிறந்தது போல் 

வயது ஓடிவிடுகிறது... 
மரணத்தின் வாசல் அகன்றே திறந்திருக்க

- மு.முகமது பாட்சா*
10 /06 /2018

Saturday, 9 June 2018

மோட்சதேசம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

தூக்கில் தொங்கிய பிணத்தையிறக்கி 
மகுடம் சூட்டினார்கள் 
பேசாத பிணமென்று எதிர்க் கட்சிகள் சாடின 
அரண்மனை நாறுவதாக அந்தப்புரம் சொன்னது 
ஈக்களெல்லாம் 
ராஜா வாழ்கவென்று கோஷமெழுப்பின 
பஞ்சமொழிந்ததாகப் புழுக்கள் பேசின 
இறந்துகிடந்த மனிதர்களைக் குப்பையில் போட்டார்கள் 
தூய்மை தேசமென்று எறும்புகள் பேசிக் கொண்டன 
காற்றடித்தபோது 
கழன்று விழுந்த எலும்புகளைச் சேகரித்தவர்கள் 
ராஜா மோட்சம் பெற்றதாகச் சொன்னார்கள் 
தேசம் நாறிக் கொண்டிருந்தது 
வெட்டியான் கைகளோய்ந்து இறந்து கிடந்தான். 

-மு. முகமது பாட்சா* 
09 /06 /2018 

Popular Posts