Thursday, 30 May 2019

நான் பூனையாக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உட்புறம்

ஒரு வரையாடு மனிதன் 
என்னைக் கடந்து செல்கிறான் 
அவனைச் சுற்றிலும் காட்டின் வாசம்... 
கடலைத் தலையில் கவிழ்த்துச் செல்லும் விலங்கை 
அதிசயமாகப் பார்க்கிறேன் 
அதன் பெயர் மகரம் என்றார்கள்... 
தரையில் பறந்து கொண்டிருந்தவன் 
தன்னை ஒட்டகமென்று சொன்னது வியப்பு! 
ஒரு காட்டெருமை உரசிவிட்டு 
வருந்திவிட்டுச் சென்றது... 
யானை அங்குசத்தைப் பிடித்து நடக்க 
பாகன் தரையிலுருண்டு 
பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்... 
பகல் கனவு இப்படித்தான் இருக்குமென்று 
நீங்கள் சிரிக்கிறீர்கள்... 
கண்ணாடியின் முன் நின்று பாருங்கள்... 
உங்கள் முன் இப்போது 
நான் பூனையாக நடந்து செல்வது தெரியும். 

- மு. முகமது பாட்சா*
30/05/2019

Wednesday, 29 May 2019

சொற்கள் - ரமலான் 22

சொற்கள் - ரமலான் 22
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்
சொற்களை
இறைத்து விடாதீர்கள்
அவை மக்காத குப்பைகளாக
மனதிற்கு அடியில் தங்கிவிடும்...
நல்ல சொற்கள் மட்டுமே
நலவிற்கு உகந்ததாகச்
சுவனத்தில் ஏற்றப்படுகிறது...
புறம் பேசும் சொற்களில்
புழுக்கள் மட்டுமே வாழுகின்றன...
அகம் கழுவுவதற்கு
அழகான சொற்களே பன்னீராகும்...
கோபத்தில் உதிரும் சொற்கள்
முகத்தை எரித்து விடுகிறது....
அஸ்ஸலாமு அலைக்கும்
என்ற சொல்லில் வாழ்கிறது
சாந்தியும் சமாதானமும்...
பூக்களைக் கொடுத்துவிட்டு
கைகளைக் குலுக்குவது போல்
புன்னகையைப் பரிசளியுங்கள்...
முஹபத் இல்லாத சொற்கள்
தர்த் என்ற கிணற்றில்
தினம் உயிருக்காகப் போராடும்...
மறையோதுவதும்
மனதைச் சாந்தியில் சங்கமிக்கத்தான்
சகதியைப் பூசிக்கொண்டால்
சாத்தானின் 
வார்த்தைகள் சந்தம் கொள்ளும்...
சொற்களை
இறைத்து விடாதீர்கள் 
அவை மக்காத குப்பைகளாக 
மனதிற்கு அடியில் தங்கிவிடும்..

(முஹபத் - அன்பு , தர்த் - சோதனை)

- மு.முகமது பாட்சா*
30/05/2019

செகர்சதாவின் கதைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
எல்லோருக்குள்ளும் 
40 திருடர்களின் குகையொன்று இருக்கிறது.... 
அவரவர் உத்திரவிடும் போது 
அது திறந்து கொள்கிறது.... 
அதற்குள் அலிபாபா நுழைவதைக் 
கண்காணிக்க முடியாது...

எல்லோரிடமும் 
ஓர் அலாவுதீனின் விளக்கிருக்கிறது... 
ஆலம்பனா எனக் கைக்கட்டி நிற்பது 
கொழுந்துவிட்டுயரும் பூதம்...

சிந்துபாத் 
லைலாவைத் தேடிக் கொண்டிருக்கிறான் 
மூஸாவின் மந்திரம் 
தோற்றுக் கொண்டேயிருக்கிறது....

செகர்சதா தன் கதைகளை 
நீட்டித்துக் கொண்டே போகிறாள்..... 
சாரியரின் இரவுகள் 
விழித்துக் கொண்டே இருக்கின்றன.

- மு. முகமது பாட்சா*
29/05/2019

புழுக்கம் - ரமலான் 21

புழுக்கம் - ரமலான் 21
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
இல்லாத ஒன்றுக்குள் 
இருப்பதாய் ஒன்று நுழைவது போல் 
எழுதாத 
பேனாவை வைத்துக் கொண்டு 
எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாய்! 
கைகளை விரித்து நடக்கிறவனுக்கு 
ஆகாயம் கூரையாகிறது.. 
கூரைக்குள் பதுங்கி கொண்ட தேரைக்கு 
பாம்பும் பயமாகிறது... 
சன்னலைத் திறந்து விட்டு உறங்கினாலும் 
கதவைப் 
பூட்டிக் கொண்டு தூங்குகிறோம்... 
புழுக்கம் அதிகமாகி விட்டது 
புல்லாங்குழல் இசைக்குக் காற்று அவசியம் 
மகரந்த சேர்க்கைக்காகத்தான் 
மலர்கள் மலர்கின்றன... 
பாங்கின் ஓசை அழகாய் எழும்புகிறது 
பள்ளிவாசல்கள் மலர்கின்றன... 
சுகந்தம் வரவில்லையென்றால்
சுய பரிசோதனை செய்து கொள்.


- மு. முகமது பாட்சா*
29/05/2019

Tuesday, 28 May 2019

ஜக்காத் - ரமலான் 20

ஜக்காத்  - ரமலான் 20
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
கைகளை ஏந்தி நிற்கிறது கருணை 
விரல்களை இறுக மூடிக் கொள்ளாதீர்கள்... 
காரூணின் கஜானாக்கள் 
கர்வத்தில் புதைந்து கிடக்கின்றன... 
ரலி அபூக்கரின் கரங்களை 
முத்தமிடத் துடித்தது ரசூலின் அதரங்கள்... 
நாற்பதில் ஒன்றுதானே கடமை 
அதற்கும் கூட நாய்ப் பட்ட ஆசை ஏன்? 
வியர்வை விழுமுன் கொடுத்தால் கூலி 
கண்ணீர் விழுந்த பின் கொடுத்தால் 
பாவத்தின் சம்பளம்... 
மறுமையென்பது 
மகஷருக்குப் பிறகே இருக்கட்டும் 
உன் கருணையைத் தொலைத்துவிட்டால் 
இம்மைக்கே இங்கு இழுபறி... 
கொடுத்தவர்கள் 
வெறும் கையுடன் திரும்புவதில்லை... 
துவாக்களுடன் இறையின் 
புன்னகையையும் ஏந்திக் கொள்கிறார்கள். 
சுஜூதுவின் தழும்புகளுக்கு ஒளி 
சும்மா வந்துவிடுமா?.... 
சுட்டெரிக்கும் மகஷருக்கும் மேகம் அதுதானே!.. 
தர்மம் என்பதைச் செய்யும் போது செய்... 
ஜக்காத் என்பது இறைவனின் கொடை 
இடை நிறுத்திக் கொண்டால் எல்லாம் 
கூடிவிடும் என்பது தப்புக் கணக்கு... 
நிழலுக்கு மறை வழி சொல்கிறது 
இன்னலுக்கு நீயொரு புதுக் கதை எழுதாதே!

- மு.முகமது பாட்சா*
28/05/2019

கவிதை நெய்கிறேன்



முதலில் இந்தக் கவிதையை 
எப்படி நெய்யவேண்டுமென முடிவெடுக்கிறேன் 
அதற்கான இழைகள் நூற்பதற்கு 
சில நூற்குருவிகள் தேவைப்படுகிறது... 
பட்டாம் பூச்சிகளிடம் 
வண்ணம் தோய்க்கச் சொல்லியிருக்கிறேன்... 
கற்பனைக்குள் 
நான் ஊறிக் கிடக்கும்போது..... 
சிலந்திகள் 
இழைகளைப் பின்னிக் கொண்டிருக்கும்..... 
அற்புதமான இந்த ஆடையை 
நான் யாருக்குப் பரிசளிக்க? 
பசியோடு கழன்றெரியும் வயிறொன்று 
அதை எரித்துவிட்டு நகர்கிறது... 
நான் இப்போதுதான் உண்மையான 
கவிதையொன்றை நெய்யப் போகிறேன்.

- மு.முகமது பாட்சா*
27/05/2019

மீனவன் - ரமலான் 19

மீனவன்  - ரமலான் 19
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
ஞானத் தேடலில் 
அவன் ஓடிக் கொண்டேயிருந்தான்... 
அவனுக்குள்ளிருந்த இல்ம் 
அவனைச் சூஃபி என்று பெருமை காட்டியது 
தலைப்பாகையும் தாடியும் 
தஸ்பீகளின் 
உருட்டலும் முஸல்லாவில் தொழுகையும் 
முகிழும் முறுவலும் 
போதுமென இயற் கொண்டான்.... 
சவுக்கை வனத்தில் 
சல்லாபிக்கும் அலைக்கரையில் 'அல்லாஹ்' 
திக்ருகளை ஆழமாக விதைத்தான்... 
காலம் கரைந்தாலும் தேவையொன்று 
அவனைச் சுற்றியே வந்தது.... 
அங்கு வந்த மீனவன் 
நிழலில்லாத பூமியில் 
நீ எதைத் தேடுகின்றாய் எனக் கேட்டான்.. 
தேடல் இறையை என்றாலும் 
நிலத்தில் வியர்வை விழ வேண்டும் 
இருந்தவிடத்தில் 
காய்ந்து கிடப்பது கருவாடு மட்டும் என்றவன் 
அலையை நோக்கி விரைவாய் நகர்ந்தான் 
வலைக்குள் வசமாய்ப் பிடித்தவன் 
ஞானச் செருக்கு அறுத்த மீனவன் நீதான் 
என்று நிலையாய் அழுதான் சூஃபி... 
அவன் உதிர்த்த கண்ணீர் 
நிலத்தில் விழும் போது அலையின் சப்தம் 
அல்லாஹ் என்றே திக்ரில் இயைந்தது.

- மு.முகமது பாட்சா*
26/05/2019

Saturday, 25 May 2019

தூவலின் ஏக்கம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்

அந்தத் தூவல் தனியாகக் கிடந்தது 
அதன் ஏக்கங்களை 
யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை... 
அதன் கனவுக்கூடு மசியின்றிக் கிடந்தாலும் 
அஃது எதையோ 
இன்னமும் எழுதத் துடிக்கிறது... 
அஃதொரு எழுத்தாளனின் தூவலாக இருக்கலாம் 
அல்லது கணக்குப் போட்டுச் சளித்தவன் 
தூர எறிந்ததாகவும் இருக்கும்... 
எனக்குள்ளிருக்கும் 
கனவுகளை அதனுள் நிறைக்கிறேன்... 
அஃது இப்போது அழுகிறது 
மை வழிந்த தாள் அரூபச் சித்திரமாகிறது... 
அதனுள்ளிருந்து சில சப்தங்கள் 
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன... 
ஒப்பாரிப் பாடகனொருவன் 
அஃதில் ஓரமாக உட்கார்ந்திருக்கிறான்... 
ஒரு காகம் மட்டும் தனியாக நிற்கிறது... 
அழிந்து போன பிரபஞ்சம் 
அதனில் மிதக்கும் நோவாவின் கப்பல்... 
அந்தத் தூவலைத் தூர எறிகிறேன் 
அதனுள்ளிருந்த சப்தங்கள் 
என் கூடவே இன்னமும் பயணிக்கிறது.

- மு.முகமது பாட்சா*
26/05/2019

எந்த நோன்பை நாங்கள் திறக்க - ரமலான் 18




எந்த நோன்பை நாங்கள் திறக்க -  ரமலான் 18
நாங்கள் எங்களின் பெயர்களைப் 
பதிவு செய்து கொண்டோம் 
அனேகமாக இன்று மாலை 
சில ரொட்டித்துண்டுகள் கிடைக்கக்கூடும்... 
இன்றும் நோன்பு தொடர்கிறது 
இன்றும் 
சில ஜனாசக்களின் ஊர்வலம் இருக்கும் 
குண்டுகள் எப்போதும் விழலாம்
பூட்ஸ் கால்கள் உள்ளே நுழைவதற்கு
நேரங்கள் கிடையாது.... 
துவாவிற்கு ஏந்திய கைகள் 
சிதறிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? 
பசிகளின் மீதுதான் யுத்தம் என்பது
இழிவான வரலாறு... 
நட்சத்திரங்களும் பிறையும் 
ஒரே வானத்தில்தான் பிரகாசிக்கின்றன... 
மேகங்கள் ஒருமித்து நகர்கிறது
மோசசும் ஈசாவும் ஏன் ஸல் முகம்மதுவும் கூட 
இறைத்தூதர்கள் என்பதை மறந்து விட்டீர்கள் 
இரத்தத்தின் மீதும் 
சதைகளின் மீதும்தான் இறைவனின் பெயர் 
எழுதியிருக்கிறதா ? 
ஹலீமா அழுவது எதற்கென்று 
உங்களில் யாருக்காவது தெரியுமா? 
திக்ரு நிலைகளில் 
துப்பாக்கிகளை நிற்க வைத்துவிட்டு 
ருக்கூவில் எதைத்தான் தேடுகிறீர்கள்? 
சஜ்தாவில் வீழ்ந்து கிடப்பவையெல்லாம்
இறைவனின் அறியப் படைப்புகள் ...
இஷாவின் அழைப்பு தொலைவில் கேட்கிறது
யா அல்லாஹ்!
எந்த நோன்பை நாங்கள் இப்போது திறக்க?

- மு.முகமது பாட்சா*
25/05/2019

இது கவிதையில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

குதிரையின் குளம்படிகளின் சப்தம் 
ஓடிக்கொண்டேயிருக்க 
கவிதையொன்றை 
எழுதிக் கொண்டிருக்கிறேன்... 
சன்னல் வழியாக ஒரு மின்னல் 
எட்டிப் பார்த்துவிட்டு நகர்கிறது... 
மழை வராது என்பது நிச்சயம் ... 
தொடர் நாயகியின் அழுகையை 
ஒளிக்கூறுகளுக்குள் 
அழுத்திப் பிடித்து அழுகிறார்கள்... 
தொல்லைப் பேச கடன்காரன் 
அழைத்துக் கொண்டேயிருக்கிறான் 
தொடர்பு அறுந்து போகிறது... 
இறந்து போனவன் பாக்கியசாலி 
இறுதி ஊர்வலம் போகிறது... 
ஆடை நீக்கி அருந்தினால்தான் 
தேநீர் நெருடாது 
ஆனாலும் ஆறிப் போய்விட்டது... 
வெளியே நாய்கள் சப்தம் 
சண்டை இப்போது ஓயாது... 
எழுதிய தாள் கசங்கிக் கிடக்கிறது 
இது கவிதையில்லையென்று 
உங்களுக்கும் இப்போது தெரியும்தானே!

-மு.முகமது பாட்சா*
25/05/2019

நான் தேடுவது சுகமே



கட்டிப் போடாத ஒட்டகமாக
மனசெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாய்
வெகு தொலைவில் புழுதிப்புயலின் வாசம்
நான் பாலை என்பதால்
உன் மேய்ச்சல் எனக்குள் நிகழ்கிறது...
எனக்குள்ளிருக்கும் வெறுமை
உன் பாதங்களை நோகடிக்கின்றன...
ஈச்சங்கனியாய் ஓர் இளமுறுவல் உன் இதழ்களில்
சித்தாரில் இசைக்கும் இரவு
மெட்டாடைக் கொண்டு போர்த்த...
ஓர் இரவு பாடலின் வரிகளில் நுழைந்து
வாசனைத் தோட்டத்தில் நுழைகிறோம்...
இல்லாத கிணற்றில்
நீரருந்துதல் சுகமென்றாலும்
தாகம் மட்டும் தணிந்துவிடுவதில்லை...
நான் தேடுவது சுகமே
என் தேடலின் ஆதிக்கம் நீ என்பதால்...
அவர்கள் சிரித்துக் கொண்டே
என்னை மஜ்னூன் என்கிறார்கள்
நானும் சிரித்துக் கொண்டே
லைலாதான் என் தேசத்தின் காதல் என்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
24/05/2019

மிதக்கும் துவா - ரமலான் - 17

மிதக்கும் துவா - ரமலான் 17
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
நிறையத் துவாக்கள் அந்தகார 
அந்தரத்தில் தொங்குவதாக 
ஒரு நாடோடிக் கவிஞன் 
பாடிக் கொண்டே செல்கிறான்... 
பள்ளிவாசல்களை விட்டு 
இன்னமும் சில துவாக்கள் 
வெளியேறவில்லையென்று 
சூஃபி ஞானி சொல்லியழுகிறார்... 
கையேந்திக் கேட்ட துவாக்கள் 
அந்தகாரத்தில் எப்படி மிதக்க முடியும்? 
சூஃபி ஞானியிடம் கேட்டேன்... 
சுயம் போர்த்திய துவாக்களை 
இறைவன் சோதனைக்குப் பின்பே 
எடுத்துக் கொள்கிறானாம்... 
மகஷரின் வெப்பம் 
போர்த்தப் பயந்த துவாக்கள் 
அர்ஷிற்கு அருகில் 
அழுகையுடன் காத்திருக்கிறதாம்
அடுத்தவருக்காகவும் மனம் உருகிக் 
கேட்கின்ற துவாக்களில்தான் 
நமது துவாவும் 
அடியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக 
சொல்கிறார் அறிவார்ந்த ஞானி... 
உண்மைதான்... 
இன்னமும் நிறையத் துவாக்கள் 
அந்தகார அந்தரத்தில்தான் 
தொங்கி அலைக்கழிகின்றன...

- மு.முகமது பாட்சா*
24/05/2019

ஆறிப்போன தேநீர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நீயும் நானும் 
நீண்ட நேரமாக உட்கார்ந்திருக்கிறோம் 
நமக்குள் ஓர் இடைவெளி 
புரிதலோடுவே அமர்ந்திருக்கிறது... 
நான் உன்னைப் பற்றி விவாதிக்கவும் 
நீ என்னைப் பற்றிப் பேசவும் 
சில குறிப்புகளை எடுத்து வந்திருக்கிறோம்... 
நம்மைப் பற்றிப் பேச விரும்பாத தேநீர் 
ஆடைப் போர்த்தி உறங்குகிறது... 
நமக்குள்ளிருக்கும் வார்த்தைகளை 
நாமே பிழிவதால் 
அவை புழுங்கி அழுகல் நாற்றமெடுக்கின்றன 
அடர்த்தி என்பது 
மௌனத்திற்கும் பொருந்தும்தானே? 
இப்போது நம்மருகில் 
எந்த ரோஜாத் தோட்டமும் இல்லை... 
சன்னல் திறந்துதான் இருக்கிறது 
நீயும் நானும் எப்போதோ வெளியேறிவிட்டோம் 
நீ நேரம் கடந்துவிட்டதாகச் சொல்கிறாய் 
நான் 
நேரம் இருந்தால் சந்திப்போம் என்கிறேன்.. 
அந்தத் தேநீர் எதற்காகவோ 
ஆறிப்போய் அங்கேயே கிடக்கிறது...

- மு.முகமது பாட்சா*
22/05/2019

Thursday, 23 May 2019

கடவுளின் முத்தங்கள் - ரமலான் 16

கடவுளின் முத்தங்கள் - ரமலான் 16
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உட்புறம்
கடவுளின் முத்தங்களைப்
பூட்டி வைத்திருக்கிறோம்... 
அதிலிருந்து பூக்கள் மணப்பதாக 
ஓர் இதிகாசம் 
எழுதி வைக்கப்பட்டிருக்கிறது... 
நூரென்ற வெளிச்சம் 
அதனுள் இருக்கும் வரை 
இந்த யுகம் பிரகாசிக்கும் ... 
அதானின் அழைப்புகளுக்கிடையில் 
சுவர்க்கமும் நரகமும் ஊசலாடுகின்றன... 
தாடியைக் கோதிவிட்ட நீர் 
சஜ்தாவில் விழுந்து 
பாவமன்னிப்புக் கேட்கிறது ஆனாலும் 
அவர் இன்னமும் தக்பீர் கட்டவில்லை... 
ஓடிவந்த குழந்தையொருவன் 
இமாமின் பின்னால் நின்று 
விழுந்து எழுந்திருக்கிறான்... 
அவனது ஆமீன் சப்தம் 
பள்ளிவாசலையே நிறைக்கிறது.. 
கடவுளின் முத்தம் 
அவனிடம் கை மாறுகிறது... 
விரல்களை ஆட்டுவதும் 
ஆட்டாததும் உங்கள் விருப்பம்... 
ஆனாலும் 
இருப்பிலிருந்து எழுந்தோடும் 
நினைப்புகள் அல்லவா 
நேரத்தைக் கணக்கிடுகின்றன... 
கைகளை விரித்து வைப்பதால் 
முத்தங்கள் மொத்தத்தையும் 
அள்ளிவிட முடியுமா? 
வெளியே உன்னிடம் 
கையேந்தியவர்களுக்கு நீ 
ஒரு புன்னகையைக் கூடப் போடாதபோது 
கடவுளின் முத்தங்கள் 
மலிவாகக் கிடைக்குமா என்ன?

- மு.முகமது பாட்சா*
23/05/2019

Wednesday, 22 May 2019

பாவத்திற்கு தண்டனை - ரமலான் -15

பாவத்திற்கு தண்டனை - ரமலான் 15
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
கடலின் உப்பு கண்ணீரிலே 
உலையின் கொதிப்பு வயிற்றினிலே 
உறக்கம் தொலைத்த பசியின் முனகல் 
ஆட்சியாளன் அழுகலிலே... 
மிதக்கும் துயரம் அடித்துப் போக 
அழுகை கீதம் பாடும் தாயவள்... 
அருகில் வந்த உமர் ரலியின் கண்கள் 
மிதக்கும் வரியில் கரைந்திளகிட 
தாயிடம் காரணம் கேட்டார் 
உடன் வந்த தோழர் அஸ்லம் அவர்கள்... 
பசியின் கீதம் பரவும் நாட்டில் 
உங்கள் கலீபா உமருக்கு 
பஞ்சணை தூக்கம் தேவையாயிருக்கும்... 
வெறுப்புடன் விழுந்த தாயின் வார்த்தைகளைப் 
பொறுப்புடனே பொறுக்கி 
அல்லாவிற்குக் கொடுத்தார் 
தவ்பா கேட்ட உமர் ரலி ஹன்ஹூ 
நெருப்புடன் உறவாடும் பசியினை அணைக்க 
பைத்துல்மால் உணவினைத் 
தூக்கிச் சுமந்தார் வலிகளும் சிவக்க 
தோழர் அஸ்லம் அடி பணிந்து கேட்டும் 
மறுத்திட்ட கலீபா, 
'மறுமை நாளின் மஹஷரின் கணக்கில் 
என் பாவம் முழுவதையும் நீயாச் சுமப்பாய்? 
பொறுப்பின்றி நடப்பவன் 
கலீபா என்றாலும் இறைவன் வெறுப்பின்றி 
நடக்க இதுவே தண்டனை' என்றார்.

- மு.முகமது பாட்சா*
21/05/2019

Tuesday, 21 May 2019

உதிரும் நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ, செடி, இயற்கை மற்றும் வெளிப்புறம்
ஒரு காற்றுக்காக ஏங்குகிறது 
அந்தக் காய்ந்த இலை... 

பச்சையம் இழந்துவிட்டாலும் 
அதன் பசுமை 
மரத்தோடுதான் ஒட்டிக் கொண்டிருக்கிறது... 

காம்பின் வலி 
மெல்லக் கழலும் போது 
சுவாசத்தின் சுதந்திரம் 
இறகுகளைப் பொருத்திக் கொள்ளும்... 

வேர்களுக்கும் நன்றியிருக்கும் 
மழைகளை வருவித்துக் கொடுத்ததில்... 

நிழலின் ஒரு துளி  உதிரும்போது 
மரணம் என்கிறீர்கள்... 
மண் அதனை 
தன் சுவாசமென்று மொழிகிறது... 

மெல்ல நழுவும் அந்த ஒற்றைச் சருகில் 
சில பறவைகளின் பெயர்களும் 
எழுதப்பட்டிருக்கும். 

- மு.முகமது பாட்சா*
22/05/2019

யாசகனின் அழுகை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள்
அந்த அறைக்குள் 
ஒவ்வொருவராக உள்ளே நுழைகிறார்கள்... 
ஒவ்வொருவரின் 
கைகளிலும் சில கனவுகள்... 
அவர்கள் தனக்கென்று ஒரு கதையை 
சோடனைகளுடன் வைத்திருக்கிறார்கள்... 
கதையின் படிமக்கூறுகளில் 
யாமக் கோடாங்கியின் அலறல் சப்தம்... 
ஒரு நாடோடிப் பாடகனின் சோகப் பாடல், 
ஒரு கழைக்கூத்தனின் இலாவக நடை, 
ஒப்பனைக்கலையா இராசபாட்டின் மிடுக்கு... 
இத்துணைக்குள்ளும் 
ஒரு யட்சியின் மாபெரும் கதறல்... 
கூடவே தூமையின் அரூபச் சித்திரம்... 
என் ஒப்பனை முகத்தை 
கைகளில் விரித்துப் பார்க்கிறேன்... 
அதிலொரு 
யாசகனின் அழுகை ஒட்டிக் கொண்டிருக்க 
நான் இன்னமும் 
அந்த அறையின் வெளியில்தான் 
காத்திருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
21/05/2019

Monday, 20 May 2019

ரூஹ் - ரமலான் 14

ரூஹ் - ரமலான் 14
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ரூஹ் என்பது எப்படி இருக்கும்? 
காற்றில் மிதக்கும் சிறகுகள் போன்றா? 
அல்லது புல் குழலில் நுழையும் 
இசையைப் போன்றதா ? 
பனிக்குள் மிளிரும் குளுமையின் உள்ளே 
மிதக்குமாவி நிழலைப் போன்றதா? 
சிதறிவிழும் தஸ்பீக் மணிகளின் 
அறுந்துகிடக்கும் நூலைப் போன்றதா? 
கணக்கும் பொழுதில் மறையும் வெப்பம் 
ரூஹ் என்றே நீ சொல்வாயா? 
காற்றிலாடிடும் பதுமைகள் போலே 
நூற்றிலொரு வேசம் நூற்பதே நம் வேலை... 
பாட்டில் களிப்போம்... 
பந்தம் சூழ்க் காற்றில் மிதப்போம்... 
வேற்றிலினம் கண்டு வேதனைகள் செய்வோம்... 
பொன்செய் பொருட்கூட்டில் 
பொக்கிசமாய் அமர்ந்து கொள்வோம்.... 
கையில் கிடந்த காலம் மாறி 
காலூன்றி நடந்ததை மறந்துவிட்டோம்... 
பையில் இருந்து வந்தவர்கள் 
பொய்யில் போவதில் ஆச்சரியமில்லை... 
மெய்யில் இருந்த காலத்திலும் 
மெய்க்குள்ளிருந்த ரூஹை மறந்தோம்... 
சிந்தியுங்கள் 
ரூஹ் என்பது எப்படித்தான் இருக்கும்?

- மு.முகமது பாட்சா*
21/05/2019

Sunday, 19 May 2019

ஊதாத புல்லாங்குழல் - ரமலான் - 13

ஊதாத புல்லாங்குழல் - ரமலான் 13
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஒரு சூபியின் இருப்பிடத்தில் 
என்னவெல்லாம் இருக்குமென்று 
ஒருவன் ஆய்கிறான்... 
காலியான தோல் துருத்தியுடன் 
அழகாகக் கவிழ்த்துவைக்க பட்ட குவளையொன்று 
ஓரமாய் ஓர் ஓலைப்பாய் 
குளிர்ச்சியுடன் எரியாத அடுப்பு... 
பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்ட 
ஒன்றிரண்டு ரொட்டித் துண்டுகள்...
ஒட்டைகளுடன்
ஊதாத புல்லாங்குழல்... 
தலைப் பலகையுடன் சாக்குத்துணி... 
இதென்ன வாழ்க்கை என வியம்புகிறான்.. 
ரூஹில்லாத தேகம் நாற்றம் 
நறுமணம் இதற்கெதற்கு? 
எனக் கேள்வியுடன் தஸ்பி உருள்கிறது... 
'நிரம்பாத எதுவும் 
பிறருக்காகவே நிரம்புகிறது மகனே... 
இதிலெதற்குப் பெருமையின் ஒப்பனை?'
வெளிச்சத்தை 
வார்த்தைகளில் வாங்கிக் கொண்டவன் 
அதானுக்குள் நுழைகிறான் 
பள்ளிவாசல் தொழுகையால் நிரம்புகிறது.

- மு.முகமது பாட்சா*
20/05/2019

பிரமை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி

எனது பிரமைக்கு 
எட்டு இறக்கைகள் இருக்கின்றன 
அவை ஒவ்வொன்றும் 
ஒவ்வொரு திசையை நோக்கியே 
பயணிக்க எத்தனிக்கிறது.. 
என் பிரமை 
ஓர் அவாந்தரத்துப் பறவை... 
அதற்குக் கால்களும் கிடையாது... 
கண்களும் தெரியாது... 
அண்டவெளியெங்கும் துர்நாற்றப் போசனம்.. 
ஆகாரமில்லாத 
தனிமையின் வெப்பக்கூட்டில் 
பொய்த்திருக்கிறது 
அதன் மெய்மையின் முறுவல்... 
பிரமை ஓர் அச்சம் 
ஒளி வட்டம் காண்பது காட்சிப்பிழை... 
எண்திசையிலும் 
ஒருமித்துப் பறக்கும் வேளையில் 
என்னுடல் விழுந்து மிதக்கும் 
பிரமையற்ற சாகரத்து மீனாக 
நீந்தும் பெரும் ஆசையுடன்.

- மு.முகமது பாட்சா*
19/05/2019

நான் மட்டும் கவிதையாக!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர்

நீள்வட்டப் பாதையில் சுழலும் வரிகளோடு 
ஒரு கவிதை வலம் வருகிறது... 
சிந்தனைவெளி ஓர் அகன்ற ஞானம் 
பறவைகளின் மொழியில் 
பேசிக் கொள்ளும் தளிர்த்தாவரங்கள்... 
பூமிக்குள் அரூப மந்திரங்களாய் எழுத்துக்கள் 
கபம் கோர்த்து இருமுகிறது வஞ்சகச் சொற்கள் 
நான் கவிதையா? கட்டுரையா? 
எனப் புரியாமல் வேதாந்த மொழிகள்... 
அகடூரியின் அகன்ற வாயிற்குள் நுழையத் 
தவளைகளின் பிரார்த்தனை... 
சொற்களின் ஆயுதங்களாய் கலகம் ... 
ஊடே மெல்லிய நீரூற்றாய்க் கவரும் சிந்தனை 
சித்திரம் வரைந்தவன் கவிதையென்கிறான் 
சிகப்பு எழுத்துகளின் இரவு கவிதைகள் 
கசங்கிய வியர்வையில் பிழையான வரிகள்... 
ஒரு மரணத்தின் பின்னால் 
சிதறிக் கிடக்கும் அபூர்வச் சொற்கள்.. 
என் மேல் ஊர்ந்து செல்லும் வார்த்தைகளில் 
நான் மட்டும் கவிதையாக
நீள்வட்டப் பாதையில் சுழலும் வரிகளோடு..

- மு. முகமது பாட்சா*
18/05/2019

ஒமர் கய்யாம் - ரமலான் 12

ஒமர் கய்யாம் - ரமலான் 12
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஒமர்கய்யாம் 
ஒரு கோப்பையைக் 
கையில் வைத்துக் கொண்டு 
கவிதைகளோடு சல்லாபிக்கிறான்... 
ரொட்டித்துண்டுகளும் 
கூடவே ஓரழகியும் தேவைப் படுகிறது... 
குயவனின் மண் பாத்திரங்கள் 
களி மண் மூளையில் உழல்கின்றன 
இடம் மாறினாலும் 
இடறினால் உடைந்துவிடுமென 
உறுதியாக நம்புகிறான்... 
சதுரங்கக் காய்கள் நகர்கின்றன 
ஒன்றையொன்று வெட்டி 
கபர்குழிக்குள் விழுந்துவிடுகிறது... 
மூலையில் ஓரம் கட்டுவதுதான் வாழ்க்கை 
ஆட்டம் முடிந்ததும் பெட்டிக்குள் 
எல்லாக் காய்களும் அடக்கம்... 
'புரியாதவன் மனிதன்' 
புரிந்ததாகச் சொல்பவன் சொல்கிறான்... 
ஒமர் கய்யாம் ஒரு குடிலோலன்.

- மு.முகமது பாட்சா*
18/05/2019

பறவை காத்திருக்கிறது - ரமலான் -11

பறவை காத்திருக்கிறது  - ரமலான்_11
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம் மற்றும் வெளிப்புறம்
பறவைகள் கூடடையும் நேரம் 
பறவை குஞ்சுகள் 
சந்தோஷமாகக் காத்திருக்கின்றன 
தாயின் வருகைக்காக... 
வானம் குளுமையைப் போர்த்துகிறது 
மேகங்கள் மினாராவைத் தொட்டு 
முத்தமிடத் துடிக்கின்றன... 
இரவின் வாசம் மெல்ல எட்டிப் பார்க்கிறது... 
அங்கசுத்தி செய்யுமோசையும் இசைதான் 
ஒழுக்கம் தாளலயம்... 
நோன்பின் கஞ்சி சுவனத்தின் வசந்தம்... 
பேரீத்தம் தரும் பெரும் இன்பம்... 
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து 
வஅலைக தவக்கல்து 
வஅலா ரிஸ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி. 
யா அல்லாஹ்! உனக்காகவே 
நோன்பு வைத்தேன், 
உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், 
உன் மீதே நம்பிக்கை வைத்தேன், 
உன்னுடைய இரணம் கொண்டே 
நோன்பு திறக்கின்றேன் 
என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

புறாக்களின் சடசட ஓசையோடு இறையழைப்பு 
'அல்லாஹூ அக்பர்'

பறவை காத்திருக்கிறது 
தன் குஞ்சுகளின் பெரும் வருகைக்காக... 
பள்ளிவாசல் வெளிச்சம் பெறுகிறது.

- மு. முகமது பாட்சா*
17/05/2019

Thursday, 16 May 2019

கத்தியொன்று கையிருப்பில்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இப்போதெல்லாம் 
ஆளுக்கொரு துப்பாக்கியோடு திரிகிறார்கள் 
சட்டைப் பையில் தேசியக் கொடியும் 
தொப்பைப் பையில் 
சாராயமும் நிறைந்திருக்கிறது... 
சாத்தான்களுக்கு எட்டுக் காலப் பூசைகள்... 
சாமியர்களின் மடியில் வைப்பாட்டிகள்.. 
கடவுளர்களின் சன்னிதானங்களில் 
பிரார்த்தனைகள் மட்டுமே 
கைகளேந்தி மிச்சமாய் நிற்கின்றன... 
சாதாரணன் 
சாத்திரங்களுக்குள் நுழைவதில்லை... 
சத்தியம் மட்டுமே தேவதேவன்... 
அச்சம் உச்சியில் நின்று பறக்கிறது 
எலிகளின் வீரம் கூட இல்லையென்றால் 
பூனையாக வாழ்வதிலும் புண்ணியமில்லை... 
நிம்மதி என்பது இனிய சுவாசம் 
மூச்சுத் திணறும்போது முக்காடுகள் எதற்கு? 
கத்தியொன்றாவது 
இனி நம் கையிருப்பில் இருக்கட்டும். 

- மு.முகமது பாட்சா*
16/05/2019

Wednesday, 15 May 2019

நான் நரியாக மாறவேண்டும்


அணிலாகத்தான் 
அஃது என்னருகில் வந்தது 
அதனைத் தடவிக் கொடுத்தேன் 
அதன் பற்கள் 
என்னைப் பிறாண்டிப் பார்த்தன 
இப்போது அஃதொரு கடுவனாக இருந்தது 
அதன் கால் நகங்கள் 
சில ஆயுதங்களை 
ஒளித்து வைத்திருந்தன... 
அஃதொரு புலியாக மாறும் முன் 
வீசிவிடத் துணிந்தேன் 
ஆனால் அஃது இப்போது 
நாயாக நின்று கொண்டிருந்தது... 
நன்றியுள்ளதென்று 
போவோரெல்லாம் புகழ்ந்தார்கள் 
அதன் எச்சில் 
இப்போது உதிரத்தைச் சுழற்றியது... 
வேறு வழியில்லை... 
இப்போது நானும் 
ஒரு நரியாகவாவது மாறவேண்டும்... 
இல்லையென்றால் அஃதடுத்து 
ஒரு பாம்பாக மாறக்கூடும்.

- மு.முகமது பாட்சா*
15/05/2019

ராபியத்துல் பாஸ்ரியா - ரமலான் 10


ராபியத்துல் பாஸ்ரியா - ரமலான் 10
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
'ராபியாவிற்குப் பைத்தியமா என்ன? 
ஒரு கையில் நெருப்பும் 
ஒரு கையில் 
நீருமல்லவா எடுத்துச் செல்கிறாள்...' 

'ஞானக்கிறுக்கு முற்றிவிட்டது' 

பாஸ்ரா நகரத்து வீதிகளைப் 
பற்றிக் கொண்டாள் சூபி ஞானி 
ராபியத்துல் பாஸ்ரியா! 

எதற்காக இந்தக் கோபம்? 

நெருப்பைக் கொண்டு சுவனத்தை எரிப்பேன் 
நீரைக் கொண்டு 
நரகத்தை அணைப்பேன்... 
அடியார்களின் அன்பும் அச்சமும் 
அதன் பக்கம்தான் விழுந்துவிட்டது 
இறையன்பு இல்லவேயில்லை... 

அல்லாஹ்வின் காதல் 
அளவற்று இருந்ததால் 
அடியாளின் காதலும் - அவன் 
காலடிகளில் விழுந்து கிடந்தது... 

ராபியத்துள் பாஸ்ரியா பாடுகிறார் 

நரகத்திற்குப் பயந்து 
உன்னைக் காதலித்தால் 
என்னை எரித்துவிடு! 
சுவனத்தின் 
ஆசைக்காக நேசித்தால் 
வெளியாக்கிவிடு... 
இரண்டுக்கும் இல்லையென்றால் 
தூயோனே... என் தும்பையே 
என் துயரை 
நீயே துடைத்துவிடு!

-மு.முகமது பாட்சா*
16/05/2019

Tuesday, 14 May 2019

ஹசன் பாஸ்ரி - ரமலான் 9

ஹசன் பாஸ்ரி - ரமலான் 9

நான் எங்கே 
நடந்து போகிறேன் தெரியுமா? 
எங்கே? என்று கேட்டான் வழிப் போக்கன் 
கபர்ஸ்தான் 
என்று அதிர வைத்தார் ஹஸன் பாஸ்ரி... 
எதற்காக ஓடுகிறீர்கள்? 
அஃது உனக்காகக் காத்திருக்கும் என்று 
மண்ணறையைக் காட்டுகிறார் 
ஞானம் இறைவன் தந்ததா? 
எனக்கேட்டான் வழிப்போக்கன் 
சிறுவனும் கூட அந்த வாசலைத் 
திறந்து வைப்பானே என்றார் ஹசன் பாஸ்ரி 
எப்படி? 
இதோ அவரே எழுதிய கவிதை:

'சிறுவன் 
விளக்கோடு வந்தான் 
ஒளியை 
எங்கிருந்து பெற்றாய் எனக் கேட்டேன் 
சிரித்த அவன் 
விளக்கை அணைத்துவிட்டு 
ஒளி 
இப்போது எங்கே போயிற்றோ 
அங்கே இருந்துதான் என்றான்.'

- மு.முகமது பாட்சா*
15/05/2019

ஒரு சொல்லுக்குள் சொல் வைத்து

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஒரு சொல்லுக்குள் சொல்வைத்துப் 
பேசுவதே வழக்கமாகிவிட்டது 
எந்தச் சொல்லைப் பிரித்து 
எந்தச் சொல்லில் தேடுவேன்... 
நீ விழிகளில் பேசும் யவன மொழி 
அழகென்று வியக்கும் போது 
உன் முகம் மொழியும் வார்த்தைகள் 
என்னைச் சிறை செய்கின்றன... 
விரல்களின் மொழி பின்னலென்றால் 
உன் உதடுகளின் மொழி மௌனம்... 
நான் வழக்குமொழி மறந்துவிட்டு 
வாழும் மொழிக்குத் தாவுகிறேன்... 
உனக்கும் எனக்குமான இடைவெளியில் 
பிரமை மொழி உட்கார்ந்திருக்கிறது... 
நீ சுட்டும் ஒரு மொழிக்காகத்தான் 
அருகில் வைத்திருக்கிறேன் 
கட்டிக் கொண்டு வந்த பெரும் இரவை... 
வெட்டியாக நகர்கிறது தனிமை 
அதுவும் கூடச் சற்று அழகாகத்தான்.

- மு.முகமது பாட்சா*
14/05/2019

பஞ்சுப்பொதி மேகங்கள்


பஞ்சுப்பொதிகளை இறைத்தார்போல் 
எங்குப் பார்த்தாலும் 
மேகக் கூட்டங்களாகவே இருக்கிறது 
நடந்து போகும் பாதையில் 
துணைக்கு வருவது போல் 
அவை தொடர்ந்தும் வருகின்றன... 
ஒரு சமயம் 
ஓடும் குதிரையின் முகம் பார்த்து 
அசந்திருக்கிறேன்... 
பிறிதொரு நாளில் அம்மா சொன்னாள் 
மேகம் 
நினைத்த உருவில் மாறிக் கொள்ளும்... 
கரடிகள் சண்டையிட்ட மேகம் 
மெல்லக் கரைந்து 
புத்தனாக நடந்து செல்கிறது...
வானத்தின் கடல்தான் மேகங்களென்றும்
அதில் மீன்கள் அதிகம் இருப்பதாக
அண்ணன் ஒரு நாள் கதைக் கட்டியிருந்தான்..
தெரு கூத்து பார்த்த மேகங்கள்
ஒப்பனைகளுக்குள் ஊடுருவுவதைப் பார்த்தேன்...
மேகங்கள் 
அரூப ஓவியங்களின் அப்பனாக இருக்கலாம்... 
இரசனையில்லாதவர்களுக்கு 
மேகம் வெறும் மேகமாகத்தான் நகர்கிறது... 
மேகங்களுக்குப் பின்னால் 
தேவலோகம் இருப்பதாகக் கூறி 
அரசியல்வாதிகள் ஒளிந்து கொள்கிறார்கள்... 
அங்குதான் ஒரு மேகம் 
பிச்சைத் தட்டை ஏந்தி நடந்து செல்கிறது...
ஊழலை மறைக்க
மேகங்கள் சரியான இடமென்று சொல்கிறார்கள்... 
சற்று முன் வந்த செய்தி 
விமானமொன்றை 
அடர்ந்த மேகம் விழுங்கி விட்டதாம்....
ரேடாரின் கண்கள் தேடிக் கொண்டிருக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
13/05/2019

அபூபக்கர் சித்திக் - ரமலான் 8

அபூபக்கர் சித்திக்  - ரமலான் 8
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்
மதீனத்து நகரக் கடை வீதி 
மகத்தான மனிதரின் பாதச்சுவடுகளை 
ஏந்திக்கொள்கிறது... 
ஹலால் என்பதே ஆகுமானது 
அண்ணல் நபி ஸல் காட்டிய அற்புத வழி... 
வியர்வைகூட உழைப்பின் முத்துகள்... 
சித்திக் அபுபக்கர் ரலியின் முதுகில் 
விற்பனைக்காகத் துணி மூட்டை... 
கலீபாவா ! 
ஆச்சரியம் வேண்டாம்... கலீபாதான்... 
உமர் ரலியின் கண்கள் சிவக்கின்றன.. 
'ஆட்சியாளர் 
நேரத்தை வீணாக்குகிறார் '... 
'ஆட்சியாளருக்கும் குடும்பம் இருக்கிறதே!' 
மாத ஊதியம் மன நிறைவிற்காக... 
நிர்வாகக் குழுவின் 
பரிந்துரையே போதுமாகவிருந்தது... 
அதிலும் மிச்சமாக்கி 
இனிப்பும் அளித்தார் துணைவியார்... 
அபூபக்கருக்கு 
அதுவும் கசப்பாகவே இருந்ததால் ஊதியத்தைக் 
குறைத்துக் கொண்டார்... 
சித்திக் அல்லாவா ... 
சித்திக் என்றால் உண்மையாளர் அல்லவா! 
அவர் இறக்கும் நேரம் 
உமரிடம் வந்தது கலீஃபாவின் பொறுப்பு.. 
அவரிடம் ஒப்படைத்ததில் 
சில அரசாங்க சொத்துகளும் இருந்தன 
ஓர் ஈச்சம் பாய் 
சில மரச் சாமான்கள் 
ஒரு தண்ணீர் வைக்கும் தோல் துருத்தி.

- மு.முகமது பாட்சா*
14/05/2019

Monday, 13 May 2019

உமரென்ற வாள் - ரமலான் 7

உமரென்ற வாள் - ரமலான் 7
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
வாளென்பது மிகவும் கூர்மையானது 
அதன் மதி நுட்பம் 
வாள் பிடித்தவன் மூளையில் அமர்ந்திருக்கிறது 
வாளென்பது வெறும் கருவிதான் 
உமர் பின் கத்தாப் ரலி அவர்களிடமும் 
ஒரு வாள் இருந்தது... 
அது மிகவும் ரத்தத்தை ருசி பார்த்தது 
கோபத்தை உரசி அடிக்கடித் தீட்டிக் கொண்டது.. 
அண்ணல் நபி ஸல் தோலை உரசிப்பார்க்க 
நாக்கை அவ்வப்போது சுழற்றியது... 
அன்றும் அந்த வாள் அப்படித்தான் துடித்தது... 
நுஜமென்பவர் 
அந்த வாளைத்தடுத்து ஏளனமாகச் சிரித்தார்... 
உமரின் கோபம் 
நுஜமின் கழுத்தருகே உட்கார்ந்து கொள்ள... 
நுஜம் மீண்டும் சிரித்தார்... 
முகம்மதுவை கொல்லும் முன்பாக 
மைத்துனன் ஸயீத்தை என்ன செய்வாய்? 
உன் தங்கை ஃபாத்திமா 
இஸ்லாத்தில் இணைந்துவிட்டாள் தெரிந்தாயா? 
வாள் இப்போது 
தணலில் தகித்துப் பிழம்பானது... 
மைத்துனன் வீட்டிலிருந்து மறையின் வாசம்! 
கதவைக் காலால் உதைத்து 
ஸயீத்தின் கழுத்தைக் கொலைவெறி நெறிக்க 
தங்கை ஃபாத்திமா தடுத்தாள்... 
'முதலில் உன் மூளையில் கோபத்தைக் கழற்று 
இறைவசனம் தருகிறேன் ஓதிப்பார் 
அஃதொரு இயலாதவன் புலம்பலென்றால் 
அப்போதே சொருகு உன் கொலை வாளை' 
ஒட்டிப்பிறந்த உதிரத்தின் கண்ணீர் 
மெல்லத் தொட்டியை நனைத்து ஈரமாக்கியது... 
இப்போது உமரின் கையில் 
மறையின் வசனம் 'தாஹா' தண்ணீராய் பொழியக் 
குளிர்ந்த வாள் 
அண்ணலைத்தேடி அவசரமாகப் போனது 
தான் தான் இஸ்லாத்தின் 
இரண்டாம் கலீஃபா என்று கூடத் தெரியாமல். 

- மு.முகமது பாட்சா*
13/05/2019


Popular Posts