Thursday, 7 November 2019

மௌனத்தைத் தின்றவன்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

மௌனத்தைத் தின்றவன்
அறையைவிட்டு வெளியேறுகிறான்...
அவனைச் சுற்றிலும்
வெப்பம் கழன்று எரிந்து கொண்டிருக்க...
இரவுகளைத் தின்றும் சீரணிக்காத மௌனம்
சதைகளை மென்று ருசிப் பார்க்கிறது...
அவன் இவன்தான்
என்று சிலர் சப்தமெழுப்புகிறார்கள்....
கண்களையுருட்டி
கால்களையகட்டி ருத்ரமாடும் அஃது
அவன் மீதேறி
உதிரத்தை உறிஞ்சிக் குடிக்கும் போதும்
கண்ணீர்த் துளிகளுடன் மட்டுமே
நடந்து சென்று கொண்டிருக்கிறான்...
உள் மனம் எப்போதோ இறந்துவிட்டிருந்தது.

- முகமது பாட்சா*
07/11/2019

Wednesday, 6 November 2019

இறையழகன் 1 - 6

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், படுக்கையறை மற்றும் உட்புறம்

சுடர்விட்டெரிகிறது
இன்னிதழ் மிளிரும் வார்த்தைகள்...
காதற்ற மௌனம்
பிரபஞ்ச பேரொளிக்குள் ஊடுருவ...
கடவுள் யாரென்ற வினா
காலம் காலமாய் தொடர்கிறது கட்டவிழ்ந்து
அத்தர் வீதிகளில்
அரபியக் குதிரைகளுடன் குமரிகளும்
விலைக்கேக
பொற்காசுகளை முத்தமிட்டவர்கள்
கடவுள்களாய்
கஜானாக்களில் நிரப்பிக் கொள்கிறார்கள்..
ஒட்டகங்களின் முதுகுகளில் ஒன்பது கடவுள்கள்
பெற்ற குழந்தை பெண்ணென்றால்
பிணமாக்கும் நிராசை...
நபி இப்றாஹீம் நிர்ணயித்த
இறையில்லம் காஃபாவிற்குள்
சாத்தான் குதிரைகளின் சலங்கைகள் சப்தம்...
வேக்காட்டில் வெந்திருக்கும் தேசத்தில்
நோக்காடு இன்றி பெற்றெடுத்தாள் அன்னை ஆமினா
அண்ணல் முகம்மது எனும்
அழகியத் திருமேனி.

- முகமது பாட்சா*
31/10/2019
                      -2 -


கனவு பிரபஞ்சத்தைக்
காய்ச்சி ஊற்றிக் கொண்டிருந்தவர்கள்
இதுதான் தேனாறென்றார்கள்
அரப் என்றாலே
பொட்டல் காடென்று பொருள்...
ஒரு கையை இழந்த
ஹூபுல் சிலை உள்ளே நுழைந்தபோது
நபி இப்றாஹீம் தொகுத்த
இறை நேசம் மெல்ல எரிந்து கொண்டிருந்தது...
செத்துக்கிடந்த
மனாத்,லாத் மற்றும் உஜ்ஜாவெல்லாம்
கல்லிலிருந்து
கடவுள்களாகக் காட்சியானார்கள்...
குறைஷிகளின் குர்தாப் பைகளுக்குள்
பொற்காசுகளும் ஆனார்கள்...
கோத்திரத்திற்கு
ஒரு கடவுளென இருந்த கற்கள்
வீட்டிற்கொரு தெய்வங்களாக விளைந்தன..
ஆட்டுப்பாலும் ஆண்டவனாக
ஒட்டகப்பாலும் அபிஷேகத்திற்காகின...
இறந்தவர்களும் கடவுள்களாகிவிட..
இல்லாதவர்களும் பெருகினார்கள்...
சாங்கியங்களைச் சட்டங்களாக்கி சாத்திரம் பேசும்
பூசாரிகள் பெருகினர்...
இவர்கள் யாருக்குமே தெரியாது
சத்திய திருமேனியொன்று
இங்குதான் ஜனிக்கப் போகிறதென்று.

- முகமது பாட்சா*
01/11/2019

                  - 3 -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நேர்ச்சைகளால்
நிரம்பிவழிந்தன மூடத்தனங்கள்...
சடங்குகளையே
சட்டமாக்கிக் கொண்ட அடிமைத்தனம்
கைகளைக் கட்டிக்கொண்டு
நட்சத்திரங்களிடம் பலன்களைக் கேட்டது...
குறிசொல்பவன்
கோபுரத்தில் வாழத் தொடங்கினான்...
அம்புகள் அடையாளம் காட்டின
இனக்குழுக்கள் எதுவென்று
விளைச்சல்களைப் பங்கு கேட்டனர்
புதிதாகப் பிறந்த கடவுள்கள்...
அடிமைகளின் வியாபாரம்
நேர்ச்சைக்காகி காமவெறிக்கும் ஆனது..
வஸீலா விடப்பட்ட ஆடுகள்
ஆண்களுக்கு மட்டுமே சுவையானது..
ஆடைகளே அவசியமில்லையென்று
பெண்களுக்குக் கற்றுத் தரப்பட்டன..
காஃபா
உண்மையில் இப்போதுதான்
கறுப்பு அங்கியை அணிந்து அழுதது...
அதன் முனகல் சப்தம்
முடிவிற்கு வர
முகம்மது(ஸல்) வின் நறுந்தேகம் கருவாகி உருவாக...
அம்ரு இப்னு லுஹய்
நரகத்தின் வாசலில் அழுது கொண்டிருந்தான்.

- முகமது பாட்சா*
02/11/2019

                      - 4 -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி
குலப்பெருமைகளைச் சூடிக் கொண்டவர்கள்
குட்டி சுவராவதற்கு
வழிகளைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள்...
மாற்றான் மனைவிகளுக்காக மல்யுத்தங்கள் நடந்தன...
கொடி நட்ட வீடுகளில்
கூத்தோடு கும்மாளம் தொடர்ந்தது...
இனப் போர்களுக்காக
ஆயுதங்கள் தீயில் வெந்து கொண்டேயிருந்தன...
பஞ்சம் தலைவிரித்தபோது
இனப் பெருமை சண்டையிட்டுக் கொண்டது..
தராசுத் தட்டுகளைச் சூதுகள் கவ்வின..
நீதியென்பது ஆணுக்காக மட்டும் அமைந்தது...
இல்லாமையும் இயலாமையும்
கடவுள்களின் கல்லாப்பெட்டியை நிரப்ப..
வட்டித் தொழில்
வசதியாக அமர்ந்து கொண்டது...
மதுக்குடுவைகளில் கவிதைகளையெழுதி
மங்கைகளுக்குப் பரிசளித்தார்கள்...
உக்கா புகையிழுத்து உற்சவம் தேடியவர்கள்
நிச்சயம் அறியவில்லை
முடிவிற்கு வரும்
முகம்மது(ஸல்) எனும் முழுமதிக் கருவால்.

- முகமது பாட்சா*
03/11/2019

                       - 5 -

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஹாஷீம் குலத்தின் அருந்தவம்
அப்துல் முத்தலிப் கனவில் சுரந்தது
புனித ஜம்ஜம் நீரூற்று...

இணை வைப்பால் மூடிக்கொண்ட புனிதம்...
புத்துயிர் பெற்றுச் சுரந்தது...
குழந்தை நபி இஸ்மயில் அழுகுரல் கேட்டு
தாகம் தீர்த்தத் தாய்க்கிணறு...

அகழ்ந்த கிணற்றிற்குள் புதையலாய்
தங்கம் அதிகமாய் கொட்டிக்கிடக்க..
காஃபா ஆலையம் கதவுகளில்
தங்கச்சட்டையை அணிந்து கொண்டது...

ஆசையூற்று
குரைஷிகளிடம் அதிகமாய்ச் சுரக்க...
கிணற்றிற்கான
உரிமைச் சண்டை சங்கடம் கோர்க்க
லேசாக்கித் தருபவன் இறைவனென்பதால்
நேர்சையாகப்
பிள்ளையொன்றை காணிக்கையாக்க
உறுதிக் கொண்டார் முத்தலிப்...

அந்த அதிசயக் கிணறு
கண்திறந்து பார்த்தபோது யாருக்கும் தெரியாது
அப்துல் முத்தலிப்பின் குடும்பத்தில்தான்
அற்புத முத்தொன்று
அழகாகப் பிறக்கப் போகிறதென்று....

- முகமது பாட்சா*
04/11/2019
                    - 6 -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு
யானை ஆண்டு
காஃபா
மெல்ல தன் கண்களைத் திறந்தது...
கஸ்தூரியின் வாசம் காற்றில் தவழ்ந்தது...
நேசமொழிகள்
தன்னை அலங்கரிக்கத் தொடங்க...
இறை இல்லத்தை இல்லாமலாக்கிட
அப்ரஹாவின் பெரும் படை
முகம்மஸ் எனுமிடத்தில் களி முகாமிட்டது...
கற்பனைக்கும் எட்டாதது அதிசயங்கள்...
கரும்புகை மேகம்
வானலையென வலை விரித்து நகர்ந்திட
அப்ரஹாவின்
யானைப்படைகள் நகர மறுத்தன...
மினா - முஜ்தலிபா இடையில்...
காதுகள் பெருத்த ஆப்ரிக்கா களிறுகள்
திசைகள் நான்கில் மேற்கைத் தவிர்த்து
மாற்றுத் திசைகளில் மதம் பிடித்தோடின...
கணக்கிலடங்கா காலாட்படைகள்
கர்வத்துடனே காஃபாவை நெருங்கிட...
கும்பிடும் கடவுள்கள் குவியல்களாவிருந்தும்
குறைஷிகளும் மற்றவர்களும்
பதுங்கு குழிகளே
பாதுகாவல் என்று ஒளிந்து கொண்டனர் ...
திடீரென்று கேட்ட
இறகுகளின் இரைச்சல் பெரிதாய் நெருங்க...
பெரும் படையாய்த் திரண்டன அபாபீல் பறவைகள்...
அவை வீசிய கற்கள் சிறியதே என்றாலும்
பெரும் பேரலை நெருப்பை விழுங்கியே விழுந்தன..
இறை மறையுரைத்த வசனம் போன்றே
கூளங்களாக எதிரிகள் கிடக்க...
அதிசய நோய் கண்டு
அபரஹாவும் அழுகித்தான் இறந்தான்...
ஏனிந்த அறிகுறி ஏதும் அறியாமல்
பதுங்கிய குறைஷிகள்
அறிந்திட வாய்ப்புகள் அன்று அமையவேயில்லை
காஃபாவை கழுவியே சுத்தம் செய்திடப்
புனிதர் இங்குதான்
அப்துல்முத்தலிப்பின் இல்லத்தில்
பேரழகனாகப் பிறப்பாரென்று...

- முகமது பாட்சா*
06/11/2019







நாவலொன்று

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், புகைபிடித்தல் மற்றும் இரவு

நாவலொன்றை எழுத எத்தனிக்கிறேன்
முன்பாகச் சில குறிப்புகள்
என்னை எழுத முற்படுகின்றன
துரோகமொன்று
'என்னை விட்டுவிடாதே' என முந்துகிறது
என்றோ இறந்து போனவள் 'என்னை
மறக்கவில்லையே' என்று கேட்டழுகிறாள்
பால்யம் தலைகாட்டி
'நான் உன் நிழல்' என்று அலட்டிக் கொள்கிறது
விட்டுத் தொலைந்த வீடு
'மீண்டும் கட்டுவாயா?' எனக் கேட்க..
எழுதாத பாவமொன்று
' நான் தொடர்வேன் ' என்று மிரட்டுகிறது...
எழுதும் முன்பாகத்
தட்டச்சும் விரலொன்றில் சிறு வீக்கம்
வின்னென்று வலிக்க...
நிரப்பப்படாத பக்கங்களால்
நாவலும் நானும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

- முகமது பாட்சா*
06/11/2019

Tuesday, 5 November 2019

சுவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சுவர் வெள்ளையாகத்தான் இருந்தது
அதிலொருவன்
சிறு நீரையாட்டி ஓவியம் என்று ரசித்தான்
சாணியடித்தவன் அற்புதமென்றான்
சாதிக்கான பெயரையெழுதி
சங்கத்திற்கு ஒருவன் உரிமை கொண்டான்
காதல் கிறுக்கன்
ஹாட்டினுக்குள் அம்பை விட்டு
காதலிக்குத் தூதுவிட்டான்
ஓட்டுக் கேட்பவன்
கைக்கூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தான்
போராட்டக்காரன் புரட்சி எழுதினான்
இறந்தவர் செய்தியொன்று சுவரை ஒட்டிக்கொள்ள...
வீட்டிற்குப் பாதுகாப்பாய்
அங்கேயே நிற்கிறது அந்தச் சுவர்.

- முகமது பாட்சா*
05/11/2019

விடுபட்ட கவிதைகள் - 10



படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

அறைக்குள் நுழைந்திருக்கும் திருடன்
பறக்கும் குதிரையிலேறி வந்திருக்கலாம்..
காற்று மண்டலத்தில் ஊடுருவி
கைப்பேசிக் கஜானாவைக் களவாடுகிறான்...
யூதக்கூட்டத்தின் குதிரைக்குளம்பு
இந்தியாவின்
அறிவு கூட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது...
பெகாசூஸ் என்று அதற்குப் பெயர்...
கைப்பேசியின் கண்களைத் திறந்து வைத்து
காட்சிகளைக் களவாடியவன்...
அதன் காதுகளை
தன் காதுகளில் பொருத்திக் கொள்கிறான்...
அவன் காதிற்கு
இப்போது வைத்திருக்கும் பெயர்
இந்திய அரசாங்கம்...
கையோடு மாட்டிக் கொண்டவர்கள்...
கண்களை மூடி இருந்ததாகச் சொல்கிறார்கள்...
விசாரணை தொடர்கிறது...

- முகமது பாட்சா*
01/11/2019



காதுகளுக்குள்
சில வார்த்தைகளை அறைந்து
மூடி வைத்திருக்கிறீர்கள்...
நிழல்களுக்குக் கப்பம் கட்டாமல்
பாக்கி வைத்திருக்கிறேன்...
தோல்களின் நிறக்கூறுகள்
தாழ்த்திக் கொள்கின்றன..
ஆதியின் சுவடு
முதுகை வளைத்தே நடக்கிறது...
பாதைகளை அடைத்துவிட்டு
சாக்கடையில் நீந்தச் சொல்லும் மந்திரம்
சத்தியம் என்ற உபதேசம்..
நிர்வாணம் தேவைகள் அற்றது..
மிருகப் பசி
சங்கீர்த்தனம் வாசிக்காது..
நிமிர்வதற்கு முன்
வாசற்கால்களையாவது
கொஞ்சமாக உயர்த்திட வேண்டும்.

- முகமது பாட்சா*
01/11/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

தமிழோடு


விளக்கொளியும்
விலைமகள் நட்பும் வேறல்ல காண் ;
தூண்டும் நெய்யற்றுப் போனால்
வெளிச்சம் கையறும்,
அவ்வண்ணம் பொருளறுந்தால்
காமம் அகலும் கண்திறந்து.

- முகமது பாட்சா*

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.

- நாலடியார் - 371



கூதிர் நெருக்கப்
பெரும் கம்பளம் கேட்கும்
மென் தேகம் நெருக்கி
காமம் துப்பும் கயமை போதம் விட்டு
அனல் வெப்பம் கூட்டி
சாகமெச்சில் திகட்டமிசைத்து
ஆடை நீக்கி
அலரும் நாழிகைக் கொட்டிச்சிதற..
உதரப்பைக்குள் ஒட்டிச் சிதறும்
ஓராயிர மீன்கள்
செத்து மிதக்க ஒன்றில் மட்டும்
உருவாகி நெகிழும்
வீரத்திற்கும்
காதலென்ற மொழியே உயிராகும்.

- முகமது பாட்சா*
02/11/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அவர்
ஒரு கதைதான் எழுதியிருந்தார்...
பார்த்தும் பார்க்காதது போல் சென்றார்
நேற்று கூட ஒருவரைச் சந்தித்தேன்
ஒரு நூல்தான் எழுதியிருந்தார்
இப்போதெல்லாம்
நேரம் கிடைப்பதில்லை என்றார்...
ஒருவர்
ஒரு பாட்டு மட்டுமே எழுதினார்
படம் ஓடவில்லை
ஆனாலும் அவரின்
வாய்ப்பாட்டு ஓயவேயில்லை...
புகழ்ச்சியைப் போர்த்தாவிட்டால்
புன்னகைக்கவே மறந்து விடுகிறார்கள்...
எறும்பு தன்னை
ஞானியென்று சொல்லிக் கொள்வதில்லை..
கர்வத்திற்குப் பெயர்
அறிவு என்று சொல்லிக் கொண்டால்
அவர்களைக்
காறியுமிழ்ந்து கடந்து போவதில்
தப்பேயில்லை.

- முகமது பாட்சா*
03/11/2019


விடுபட்ட கவிதைகள் - 9



படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

சில வார்த்தைகளைப் புதைத்துவிட்டு
இந்தக் கவிதைக்காக
சில வார்த்தைகளைத் தேடிச் செல்கிறேன்...
மழையில் நனையும் வார்த்தைகளைக் கவனிக்காமல்
வாகனத்தில் செல்லும் வார்த்தைகள்
சூடான முத்தங்களை அருந்திக் கொள்கின்றன...
வடம் கட்டியிழுத்தும் வராத வார்த்தைகளை
கவிஞன் வசப்படுத்துகிறான்...
வார்த்தைகள் வசனங்களாக மாறும் போது
உடல் மொழி திரை நடிப்பை உடுத்திக்கொள்கிறது..
வார்த்தைகளாலேயே வாழ்கிறவன்
புத்தனைச் சிறையில் வைத்துக் கும்பிடுகிறான்...
காலம் வார்த்தைகளோடு கண்ணாமூச்சி விளையாடுகிறது...
ஊமையாகவே நின்று
சில வார்த்தைகளை இங்குச் சேகரிக்கிறேன்...
அவை இந்தக் கவிதையில் இல்லை..
நீங்களதனை துர் நாற்றம் என்று நகர்வீர்கள்...

- முகமது பாட்சா*
29/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம் மற்றும் உரை



படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம்


கவிதையென்பது யாதெனில்

உடைகளைச் சரி செய்து கொண்டான்
இலக்கணம்
ஆணிவைத்து இருக்கையிலறைந்தது...

கவிதையென்பது யாதெனில்...

மோப்பம் குழைத்துப் பூக்களை நெய்தவன்
காதல் கண்கட்டி
கவிதையென்று ஒப்பம் செய்தான்...

கவிதையென்பது யாதெனில்

அரூபம் பூசி அலங்கரித்த சொற்களில்
அரசியல் வாசனை
கசங்கிய கவிதையென வசை வாங்கிக் கொள்ள...

கவிதையென்பது யாதெனில்...

படத்திற்குத் தேடிய வார்த்தைகள்
பழுதாகி நிற்க
நிற்கக் கூடாதவிடத்தில் நின்றிருக்கும் சொற்கள்...

கவிதையென்பது யாதெனில்

கள்ளமிட்ட வார்த்தைகளை
கல்மிசமின்றிப் பதியமிட முளைத்து நிற்கும்
கள்ளிச்செடிகள்...

கவிதையென்பது யாதெனில்...

அடக்க முடியா கோபங்களை
வார்தையிலடைத்து
வீசியெறியும் கையெறி குண்டுகள்...

கவிதையென்பது யாதெனில்...

தேசாந்திரியின் கைத்தடியில்
ஒட்டிக் கொண்டு
உதிர்ந்து விழும் வார்த்தைச் சகதிகள்....

- முகமது பாட்சா*

30/10/2019




விடுபட்ட கவிதைகள் - 8

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இப்போதெல்லாம் யாரும்
கொலைகளைக் கண்டு அஞ்சுவதில்லை...
சற்றுமுன் நகர்ந்த டிம்பர் லாரியின் கீழ்
விபத்தென்று எழுதிவைக்கத் தோதாக
ஒருவன் நசுங்கிக் கிடந்தான்...
நேற்று கடலில் மிதந்த இரண்டு பிணங்களை
தற்கொலை என்று பேசிக் கொண்டார்கள்..
ஒரு நடிகையின் மரணத்தில்
அவளது அங்கங்களை
அலசிக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்...
ஒருவனை ஓடஓட விரட்டிக் கொன்றதாக
நாளிதழில் செய்தி...
அவன் சிரித்துக் கொண்டே
காவல் வாகனத்தில் ஏறிக் கொண்டான்...
நிலங்களைப் பிடுங்கி துளையிட்டவிடத்தில்
கச்சா எண்ணெய் பீய்ச்சியடித்தது
சந்தடியில்லாமல்
சில பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன...
அப்படித்தான் அன்று
வங்கி வாசல்களில் இறந்து கிடந்தவர்களை
முதுமை மரணம் என்று எழுதினார்கள்...
அடுத்து இராமருக்கா சிலரும்
அல்லாவிற்காகச் சிலரும் கூட வெட்டி சாயலாம்...
அவை மோட்சமாக எழுதப்படும்...

- முகமது பாட்சா*
20/10/2019

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.


கடலைவிடப் பெரியதொன்று
இருக்கிறதென்று சொன்னவுடன்
பார்வையால் நெய்தவள்
அன்பு என்றாள்
அடுத்த வேளைக்கலைந்தவன்
பஞ்சம் என்றான்
பாதுகாப்பில் உலாவுகிறவன்
பணமே! என்றான்
பிணமாய் வாழ்கிறவன் கடன் என்றான்
கட்டிலை நேசித்தவன்
கண்கள் நிறைத்துக் காமம் என்றான்..
காலத்தைத் தேடிக் கொண்டே
ஒருவன் கடவுள் என்றான்...
படித்தவன் பல்லக்கிலமர்ந்து
ஞானம் என்றான்...
படிக்காத பாமரனோ முத்தமிட்ட கையே
அன்னை என்றான்...
கடல் சற்று உள்வாங்கி நகர்ந்து கொண்டது
நண்டுகள்
விளையாடிக் கொண்டிருந்தன.

- முகமது பாட்சா*
20/10/2019



எனக்குள்ளிருக்கும் ஒருவனை
அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறேன்..
அவன் என்னைப் போலில்லை
அடிக்கடி முரண்டு பிடிக்கிறான்
எப்போதுமே
நான் மெதுவாகத்தான் நடப்பேன்
அவன் நாட்டியமாடியபடியே நடக்கிறான்
கடந்து போகும் பெண்களைக்
கண்சிமிட்டிக் கிண்டல் செய்கிறான்..
பாக்கெட்டைப் பார்க்காமல் ஷாப்பிங் செய்கிறான்...
சற்றுமுன்
இலஞ்சம் வாங்கிய டிராபிக் போலிஸை
ஓங்கி அறைந்துவிட்டான்...
இவ்வளவு கோபம் கூடாதென்று கண்டிக்கிறேன்
கோழைகள் எப்போதுமே செத்தவர்கள் என்று
உபதேசம் செய்கிறான்...
அவனைக்
கழற்றிவிடுவது சிரமமாகத்தான் இருக்கிறது...
இப்போதுகூட நான்
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த போது
ஒரு கட்சித் தலைவரின் முகத்தில்
காறி உமிழ்ந்துவிட்டு
அமைதியாக உட்கார்ந்து
தேநீரை அருந்திக் கொண்டிருக்கிறான்...

- முகமது பாட்சா*
21/10/2019


புத்தரின் படத்தை மாட்ட
சுவரிற்கு வெள்ளையடித்திருந்தான்...
கூடத்தின் நடுவில் பூக்களைக் கொஞ்சும்
அழகான பித்தளைக் கிண்ணம்...
நறுமணம் கமழ
அரபு நாட்டின் ஊத்சாம்பிராணி...
ராஜஸ்தான் மார்பில் வசதியைக் கூட்டிக்காட்ட...
அலங்காரக் கபோடுகளாக
தேக்குக் காடுகள் இறந்து கிடந்தன..
வாஸ்து மூலையில்
அதிருஷ்ட மீனொன்று நீந்திக் கொண்டிருக்க
அதன் கண்ணீரை மறைக்க
சிரிக்கும் புத்தரையும்
பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்...
அவருக்கு இப்போது குபேரன் என்றும் பெயர்
புத்தர் இனி எப்போதும்
புது வீட்டில் சிரித்துக் கொண்டேயிருப்பார்.

- முகமது பாட்சா*

22/10/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: கூடைப்பந்து அரங்கம்

எனக்கான சாலை மூடப் பட்டிருக்கிறது...
குறுகிய சந்திற்குள் நுழைகிறேன்
வளைவுகள்
இடம் மாற்றிக் கொண்டேயிருக்கின்றன..
கால் சுழன்று முகத்திலறைய
பெரும் மழைக்குத் திரள்கிறது மேகங்கள்
வேகமெடுக்கிறது திடம்
பள்ளங்களைக் குதித்துத் தாவிப்
பழகிய வழியை எட்டியபிறகு விட்ட மூச்சில்
மேகம் சற்று நகர்ந்து நிற்க
வந்த வழி புன்னகையுடன் கையசைப்பதை
நான் எப்படி எடுத்துக் கொள்வது?

- முகமது பாட்சா*
23/10/2019



படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு

ஆழத்திலாழ்ந்த விதை வீரிய விருட்சமாகும்
தரையைத் தேடும் விழுதுகளே
தாய் மரத்தைக் காக்கின்றன...
பொய்மை சூடாத கவிதைகளுக்குக் கடுகின் வாசம்
இரக்கமில்லா
விரல்களிலோடுகிறது ஏழைகளின் உவர்ப்பு...
கண்ணாடியின் பிம்பங்கள் கண்மூடித் தூங்குபவை...
புன்னகைக்கு உவமை
கார்மேக நிலவில் கண் சிமிட்டுகிறது...
காதலென்பது வரம்
கவிதையில் மட்டும் அமர்ந்தால் அது சாபம்...
ஆகாயத்தைக் காட்டாத வீடு
முட்டாள்கள் அமர்ந்திருக்கும் கூடாரம்..
அழுகை எல்லோருக்கும் பொதுவானது..
சாக்காட்டைத் தூக்காத தேகம் சாத்தியமில்லை
சத்திரத்தில் உறங்குவதுதான் ஆசை..
பயமென்பது
பல்லாங்குழிகளுக்குள் உருளும் காய்கள்...
பகடையாகிறவன் பரதேசி..
நாடோடியாகவே இருந்துவிடு நாளை இறந்துவிடும்
நகராள்பவன் என்றுமே அடிமை.

- முகமது பாட்சா*

24/10/2019




விடுபட்ட கவிதைகள் -8

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

உள்ளே நுழைந்தவுடன்
ஆளுக்கொரு முகமூடி கொடுக்கப்பட்டது..
சாவகாசமாகத் தேநீர் அருந்தினார்கள்..
குடும்பக் கதைகளை ஓடவிட்டு
ஆற்றாமைகளை அலசிக் கொண்டார்கள்..
ஷாட் ரெடி என்றவுடன்
கவுண்ட் டவுண் இறங்கிக் கொண்டிருக்க
காமிரா சுழல ஆரம்பித்தது...
கண்களை நெருப்பில் போட்டு
வார்த்தைகளையுருட்டி வீசினார்கள்...
அடிப்பது போல் முஷ்டிகளை உயர்த்தினார்கள்
நேரம் முடிந்தவுடன்
முக மூடிகளைக் கழற்றிக் கொடுத்தவர்கள்
மறந்திடாதே மிஸ்டர் எதிர்க்கட்சி
பெண்ணுக்கு நல்ல பையனா இருந்தா சொல்லு
என்று சிரித்துக் கொண்ட போது
தொலைக்காட்சி பெட்டிகள்
ஆங்காங்கே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.

- முகமது பாட்சா*
17/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
இந்தக் காதல் கவிதையைப்
படித்துவிட்டுக் கிழித்துவிடுவதுதான்
உங்களுக்கு உசிதமாக இருக்கும்
எனது ஜன்னல்களை
நானே அறைந்து சாத்தியிருக்கும் போது
எதிர் வீட்டு விழிகளைப் பற்றிப்
பேசுவது 100 % பொய்
இல்லாதவள் மிதந்ததாகக்
கற்பனைக் கொள்கிறது இந்தக் கவிதை..
இயலாதவொன்றை
எடுத்துத் தைத்து
ஆடையாகப் போர்த்திக் கொள்கிறேன்...
எரியாத அடுப்பைக் கொண்டு
சூடான தேநீர் பருகுவதே
இந்தக் கவிதைக்கு வாடிக்கையாகிவிட்டது...
கவிதை சிருஷ்டித்த உலகத்தில்
நான் இறந்து கிடக்கிறேன்
என்னை அங்கேயே விட்டுவிடுங்கள்...
காகிதப் பூக்கள் நாறாதென்றாலும்
மகரந்த சேர்க்கைக்கு வண்டுகள் வராது என்பதும்
100 % உண்மை.

- முகமது பாட்சா*
18/10/2019




ஒரு யுகத்தின்
பிரமாண்டம் கடந்து செல்கிறோம்
விலங்குகள் அகற்றப்படாமல்
கைகளுக்கான விலங்குகளைச் செய்கிறான்
பிரம்மக் கொல்லன்
அழுகாச்சி காவியங்களுக்கான
வார்த்தைகளை
உரலில் போட்டு இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
மாராப்பு போடாதா ஆயந்திகள்...
அதனை மொழியாக்கம் செய்யும் துபாசிகள்
கவர்னர்களின் கால்களை வருடி
மண்டைகளைச் சொரிந்து கொள்கிறார்கள்..
கைகளில் துப்பிய எச்சிலோடு
கால் பணமும் காணி நிலமும் வாங்கிக் கொள்பவர்கள்
வேலையைச் சரியா பாரென்று சொல்வது
இன்னமும் தொடர்கிறது...

- முகமது பாட்சா*
19/10/2019


விடுபட்ட கவிதைகள் - 7

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு, நெருப்பு மற்றும் உரை



Popular Posts