Sunday, 22 December 2019

தேசியக்கொடி மூச்சு விடுகிறது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அவர்கள் உரத்துக் கோஷமிடுகிறார்கள்
அந்தவிடம் அவ்வப்போது அதிர்ந்து மூச்சுவிடுகிறது
இஃது எங்களின் தேசம் என்ற முழக்கம்
காற்றில் கலந்து தேசியக் கொடிகளை அசைக்க...
ஓரமாக நிற்கும் காவலர்
துப்பாக்கியைத் துடைத்து உறையில் சொருகுகிறார்...
பயம் இந்தியன் இரத்தத்தில் கிடையாது...
மரணம் கொடுத்து வாங்கியதுதான்
சுதந்திரம் என்பதை அறிவார்களா?
சாணக்கிய குடுமிகளுக்குத் தந்திரங்கள் மட்டுமே தெரியும்
பகடையுருட்டி விளையாட
நாங்களொன்றும் தருமன்கள் அல்ல...
கோட்சேவிற்கு மாலையிட்டவர்கள் தேசப் பிதாவிற்குக்
கால் செருப்புகள் என்பதைத் தெரிந்தவர்கள்
சாவர்க்கரையும்
கோல்வார்க்கரையும் உன் குடுமியில் முடிந்து கொள்
கோழைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை...
குனிந்தவர்கள் நிமிர்ந்த பிறகு
மீண்டும் குனிவதற்கு அவர்களொன்றும்
உன் கால் நக்கி அடிமைகளுமல்ல...
தேசியக் கொடிகள் மூச்சுவிடத் தொடங்கிவிட்டன!

- முகமது பாட்சா*
22/12/2019




என்னைப் பற்றி
எழுதிக் கொண்டும்
பேசிக் கொண்டுமிருக்கிறேன்
அதில் நீயும் இருக்கிறாயா
பகைவனே?

என்னுள்
நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்...
ஓரமாக நீ
சிரித்துக் கொண்டிருக்கிறாய்!

வீதிகளைக் களவாடிவிட்டு
அன்புடன் கைக்குலுக்க வருகிறாய்
கால்கள்
உறுதியாகவே இருக்கின்றன!

இடறி விழுந்தவுடன்
முதலில்
மூச்சு வருகிறதா என்று பார்க்கிறாய்
உன் நேசிப்பு இருக்கும் வரை
மரணம் எனக்கு
அத்துணைச் சுலபமல்ல...

வா விளையாடிப் பார்ப்போம்
எதிரில் நிற்பது நீயென்பதால் அல்ல
எதிரியே நீ என்பதால்!

- முகமது பாட்சா*
21/12/2019

Friday, 20 December 2019

உரிமையென்பது காதல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

பதாகைகளில்
வாசகங்கள் புகைவிட்டு எரிகின்றன...
இதயத்திலிருக்கும் நெருப்பை
வார்த்தைகளால் கொப்பளித்துத் துப்புகிறார்கள்
உறக்கமிழந்த கண்கள்
வெளிச்சம் கிடைக்காதவென ஏங்குகிறது...
கண்ணீர் புகைக்குண்டுகளுடன்
வஜ்ரா வாகனம் வந்து நிற்க
லத்திகள் ஒன்று கூடிப் பேசிக் கொள்கின்றன...
அச்சமசைவதை அறிந்தது போல்
பறவைகளெல்லாம் சப்தமிட்டு அலற...
உரிமையின் கோபம்
மண்ணை இறுகப் பற்றி முழக்கமிடுகிறது..
ஓங்கியறைய வந்தவர்களிடம்
அவர்கள் பூக்களைக் கொடுக்கிறார்கள்...
லத்தி ஒரு மிருகம் என்பது
அவர்களுக்கு விளங்கவில்லை..
சதைகளைப் பிய்த்துத் தின்பதற்காகப் பாய்கின்றன...
உரிமையென்பது காதல்
உயிரைக் கொடுக்கவும் அது முன்னேறுகிறது..
காவலரின் மகளொருத்தி தாயிடம் கேட்கிறாள்
அப்பா கொடுமைக்காரரா?
இல்லையம்மா அவரொரு ரோபோ என்று
சொல்லிவிட்டு அழுகிறாள்
அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக

- முகமது பாட்சா*
20/12/2019

Thursday, 19 December 2019

விடுபட்டக் கவிதைகள் 16

கடலுக்குத் தடை போட்டுவிட்டு
நதிகளுக்கு வழிவிடவேண்டும் என்று
மசோதா நிறைவேறுகிறது...
பூமிக்குள் புதைந்த வேர்கள் எல்லைகளைக் கடந்து
ஊடுருவுகின்றன...
நிலத்தின்
அடித்தட்டுகளில் எல்லை வகுக்கச் சென்றவர்கள்
நிழல்களை மட்டுமே
மிச்சமாய் விட்டுச் செல்கிறார்கள்...
யாம கோடாங்கி எலும்புகளில் நீறு பூசி
எலுமிச்சை பழங்களால்
அண்டத்தை அடக்க முயல்கிறான்...
ஆங்காரி தன்னுடலை முறுக்கிப் பிழியும் சாற்றில்
கடல் மூச்சு வாங்க...
நதிகளின் மேல் வீசுகின்ற காற்று
வேகத்தைக் கூட்டி விரசாக நடக்கின்றன...
சற்றுமுன் வாசித்துக் கொண்டிருந்த வானிலை அறிக்கை
நிறுத்தப்பட்டிருக்கிறது
இணைப்புகள் எதுவும் கிடைக்காமல்.

- முகமது பாட்சா*
12/12/2019

அஸர் பாங்கிற்கு
அள்ளிக் கட்டிய ஒளுவோடு
மக்ரீப் தொழுகைக்கும்
திக்ரில் காத்திருந்தவளின் கல்பில்
வேகமாகக்
காரோட்டிக் கொண்டிருக்கிறான் கணவன்...
வாழ்க்கையின் நிமித்தங்கள்
அலங்காரம் பூசிய வீட்டில் உலாவுகின்றன
வெறிச்சோடிக் கிடக்கும் சோபாக்கள் முழுவதும்
விளையாடக் குழந்தையின்றித் தவிக்க
ஊத் வாசம் நிறைக்கிறது
அடுத்தச் சபருக்கு இரண்டு ஆண்டுகள்
வெதும்பலோடு காத்திருப்பது...
யார் கண்ணிற்கும் தெரியாமல்
அவளுக்கென்ன? என்ற
வார்த்தைகளால் நிறைகிறது காலம்.

- முகமது பாட்சா*
12/12/2019

எரிகின்ற தீயில்
எச்சிலைத் துப்பிவிட்டு
அணைந்ததாகப் பாவனைக் காட்டுகிறார்கள்...
கலவரம் உரிமைகளுக்கான கட்டமைப்பு...
கால்களை வெட்டிவிட்டு
நடந்து வா என்கின்றவனை
பற்களால் கூடக் கடிக்கவில்லையென்றால்
மூளையென்பது
மூத்திரக் குழம்பிலூறியிருக்கும் களி மண்...
தலையை வருடுகிறவன்
தந்தையென்றாலும் எச்சரிக்கை அவசியம்..
புத்தனென்றாலும்
போதி மரம் வெட்டுப்பட்டால் கோபம்
கண்களில் ஆட்சி செய்யும்...
பயம் விதைக்கப் படுவது
உரம் உள்ளத்திலிருந்து கிளர்ந்து எழுவது..
தோட்டாக்களில்லாத
துப்பாக்கிகளாய் இருப்பதைவிட
அடுப்பில் எரிகின்ற
விறகாகவாவது இருந்துவிடு!

- முகமது பாட்சா*
13/12/2019

விடுபட்ட வார்த்தைகளையெல்லாம்
ஒன்றுபடுத்திச் சீராக்கினான்
தொலைந்து போன வார்த்தைகளைத்
தேடிக் கொண்டேயிருந்தது
சிந்தனையின் நரம்புகள்
போராட்டத்தில்
காதலையூற்றிக் கலக்கியதில்
எழுத்துகள் இடம் மாறிக்கொண்டன
தத்துவத்தைச் சேர்த்துக் குலுக்கியவனுக்கு
மிச்சமாய்க் கிடைத்தது வெள்ளைத்தாள்
தாவரங்களைக் கசக்கி ஊற்றினான்
வேர்கள் பறவைகளைத்தேடிப் பயணப்பட்டன...
கவிதையென்பது யாதெனில்?
ஆளாளுக்கு
மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்
வார்த்தைகளை உதறி நடந்து செல்கிறான்
வார்த்தைகள் சூழ்ந்து
அவனைத் திண்ணத் தொடங்கின...

- முகமது பாட்சா*
13/12/2019

பிரபஞ்ச ரேகைகளின்
இடைவெளிகளைக் கறையான்கள்
இட்டு நிரப்பும் கள்ளத்தன வழித்தடத்தில்
எலும்புகளைப் பொறுக்கிவைத்துத்
தந்திரம் செய்யும் மாயகனின்
விலா எலும்பிலிருந்து எழும் பெரும் தீ
அழிக்கும் உத்தரவிற்குக் காத்திருக்க,
கதம்பைக் கயிற்றினைக் கொண்டு
எறும்புகள் இழுக்கும் தோரணையில் விழுகின்ற
பெரு மழையில் நழுவும் கந்தகத்துப் பூமி
விழுங்கிச் செரிக்கும் நாளில்
விடியல் பாட்டெழுதக் காத்திருக்கும்
கூட்டிலொரு புழுவாய் துடிக்கும்
மனதின் வேட்கை போதும் அறம் செழிக்க!

- முகமது பாட்சா*
14/12/2019

நிறைவேற்ற முடியாத
சொல்லொன்றில் உட்கார்ந்து கொண்டு
பயணம் செய்வது
அத்துணைச் சுலபமல்ல...
சன்னலைத் திறந்து வைத்தாலும்
காற்று உள்ளே வராது
வாசற்கதவு
தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருக்கும்...
கவ்வியிருக்கும் சூழல்
காலைவிட்டுக் கழலும் வரை அவத்தை...
பிடியிலிருந்து நழுவிய
அவ் வார்த்தைகளைச்
சபித்துக் கொண்டிருக்கிறேன்
அச் சொல் இப்போது எனக்கு
முதன் முறையாகப்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது!

- முகமது பாட்சா*
14/12/2019

சன்னல் கதவுகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
வீட்டில்
யாராவது இருக்கிறீர்களா?

எதிரெதிர் சன்னல்கள்
திறந்திருக்கின்றன
காதல் காற்று மெல்ல வீசுகின்றது...

பாழடைந்த சன்னல்கள்
காத்திருக்கின்றன
பழைய மரக்கடையில்...
யாராவது வருவார்களா?

மூடிக்கிடக்கும்
சன்னலின் உட்புறம்
முதியவளின் மூச்சுக்காற்று
இரைத்துக் கொண்டிருக்கிறது...

திறந்து வைத்த சன்னலில்
பார்வைகளை வீசிவிட்டு
வார்த்தைகளைத்
தூண்டில் போட்டுப் பிடிக்கிறான்...

சாத்திவைத்த சன்னலில்
மெதுவாக வெளியேறுகிறது முனகல்
பசியெடுத்தவன்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்...

சன்னல் கதவுகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
வீட்டில்
யாராவது இருக்கிறீர்களா?

- முகமது பாட்சா*
15/12/2019

அன்பிற்குரிய அறிவிலி அரக்கனே
நாங்கள் என்றுமே
போராடுவதற்காகத்தான் பிறந்திருக்கிறோம்
விந்துவாய் நுழைந்த போராட்டம்
கருவாய் உருண்டதை
நீ பிண்டத்தின்
அடக்கம் என்று எடுத்துக் கொள்கிறாய்...
எட்டி உதைத்து எம்பி வெளிவந்ததில்
எம் தாய் கத்தி அழுததை
இயலாமையென நினைக்கிறாய் அறிவிலியே...
முட்டிக் கடித்துத்தான் பாலையே
நாங்கள் முலைகளில்
எட்டிக் குடித்தோம் என்பதை அறிவாயா!
கத்தியழுதே உணவினைத் தேடினோம்...
தொட்டில் மழலையாய் இருந்திடாமல்
ஒட்டி ஒருக்களித்து
முட்டியிட்டு சுவர் பிடித்து நடந்தவர்களுக்கா
பாடம் நடத்துகிறாய்?
தாய் பெற்றவலி அறியாதவன்
செத்த எலி என்பது எங்களுக்கும் தெரியும்...
போராட்டம் புதிதல்ல
அறிவிலியே...
சாகாதவன் இங்கு எவனும் இல்லை...

- முகமது பாட்சா*
16/12/2019

இந்த முறையாவது
என்னை நிறைவாக்கி விடவேண்டும்
விம்பங்களாகச் சிதைந்திருக்கிறேன்
கனவொன்றில்
என்னைப் பார்த்தாகச் சொன்னவன்
நீர்மையாக இருந்ததாகச் சொல்கிறான்..
என்னுள் நீந்துகின்ற மீன்கள் குருடானவை
மோப்பத்தை வைத்துக் கொண்டு
வளைந்து நெளிந்து வாசம் செய்கின்றன...
நானொரு பாடகனும் கூட
வாயசைவுகளில் ராகத்தைப் பிரியுங்கள்...
கேட்கவில்லையென்றால்
அஃது உங்களின் குறை...
சாகரத்தின் மௌனத்தைப் போதியில் தேடுவதுபோல்
தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
அலைகளிடம் நுரைத்து மூச்சு விடுகிறேன்..
நீங்கள் குறையுடன் தேடுகிறீர்கள்...
பாடல்
ஊமையின் சங்கீதமாக அழுந்துகிறது...

- முகமது பாட்சா*
16/12/2019

விரல்களை உயர்த்தாத வரை
குரல்வளைகள் நசுங்கியே கிடக்கும்...
மௌனம் என்பது
செத்துப்போன மொழி வேலைக்கு ஆகாது...
அதிகாரன் என்பவன்
ஒருவகையான பூச்சாண்டி...
நாம் அழிகின்ற போது அவனும்
அரக்கு மாளிகையில் இறந்து கிடப்பான்...
கால்களென்பது நடப்பதற்கு
மட்டுமல்ல எட்டியுதைக்கவும்தான்...
உரிமை உடலோடு
நழுவிக் கொண்டு கழலாது...
மண்ணின் பாசம் வாளெடுத்துச் சுழற்றும்...
அப்பன் பூமி இதுவென்று ஆர்ப்பரிக்கும்...
பேசுகிற நேரத்தில் பேசாதவன்
கால்களை முன் வைக்கிறான்
சங்கிலிகளில் பிணைத்துக் கொள்ள...
இருட்டறை
இமைகளுக்குள்தான் இருக்கிறது...
வெளிச்சம் வேண்டுமென்றால்
விழித் திறந்து பார்ப்பதும் அவசியம்....

- முகமது பாட்சா*
17/12/2019

CAB என்ற
கறையானைத் தேசமெங்கும் தூவிவிட்டு
உரம் இறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்
அடிமை விசுவாசிகள்
என்றுமே அடிமைகளென்பதால்
நாக்குகள் புழுக்களைப்போல் நெளிகின்றன
குஜராத்தில் குலமறுத்தவர்கள்
குடியாட்சியில் விஷம் கலக்குகிறார்கள்...
NRC என்ற நச்சுப் பாம்பு
நாக்கைத் துழாவிக் கொண்டேயிருக்கிறது...
பாம்பைப் பிடிக்கத்தான் போராட்டம்
சாத்தான் கழுத்தில்
சுற்றிக் கொண்டு கடவுளென்கிறான்...
தேசம் உணர்வின் மொழி
கை கோர்த்துவிட்டால் கலங்க மாட்டோம்...
அதுவரை நீ
மதுக்குடுவையில் ஊர்ந்து கொண்டேயிரு!

- முகமது பாட்சா*
17/12/2019

சாத்தான் தன் கால்களை
இப்போது அகல வைத்திருக்கிறான்...
அவனுக்கு எப்போதுமே நரியின் கண்கள்
ஓ நாயின் வாய்...
சபிக்கப்பட்டவனின் ரோமங்கள்
நரகலின் புழுக்கள்....
ஆதாமின் தோட்டம் இப்போது
துஷ்ட ஜின்களால் நிரம்பியிருக்கிறது...
நோவாவின் படகில்
ஓட்டையிடத் துடிக்கிறது அவனது பற்கள்
மூசாவின் ஆசாவைத் திருடிவிட்டதாக
எக்களிக்கிறான்....
ஈசாவின் கண்ணீரை
ஒயினென்று ரசித்து மிடறுவதை...
காபாவின் கண்கள் கவனித்துக் கொண்டிருக்கிறது...
உண்மையில் அவனொரு
அபாபில் பறவைகளை மிரட்டுகின்ற
அற்ப புழுவென்று யாருக்கும் தெரியாது!

- முகமது பாட்சா*
18/12/2019

காம முத்திரைகளுக்குப்
பொழிப்புரையொன்றை எழுதிவிட்டு
காதல் கடிதம் என்கிறாய்
நான்கு சுவர்கள் பற்றியெரிகின்ற போது
முனங்கலின் தீக்கு
எப்படி விளக்கவுரை எழுதுவேன்?...
அஞ்சனம் தீட்டிய விழிகள்
இடையில் விழுவதற்கான அம்புகள்...
எதிரிகளை வீழ்த்த
இவற்றையா எடுத்துச் செல்ல முடியும்?

- முகமது பாட்சா*
18/12/2019

நிறைந்திருக்கும் கற்களிடையே
கழுவிலேற்ற
அகலிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...
பித்துப் பிடித்தது போல்
கண்ணகி அலைந்து கொண்டிருக்கிறாள்...
மதுரை எரிவதில் உடன்பாடில்லை...
கனவுகளைப் பத்திரமாக அடைப்பதற்கு
சுவர்கள் உயரமாக எழும்புகின்றன....
நரியோடு வலம் வருகிறான் சாணக்கியன்
அரசன் அவனது உச்சி மண்டையில்
ஆடிக் கொண்டிருக்கிறான்...
காலத்தைப் புதைத்து
காலத்தை மீட்பதாகக் காலதேவன் உரை...
உருகும் பனிமலையில்
எல்லைகள் சுருங்குகின்றன...
எலும்புகளைத் தோண்டி ஆய்கிறார்கள்...
டி.என்.ஏ வில்
மதங்களுக்கான வாய்ப்பாடு கிடைக்கவில்லை...

- முகமது பாட்சா*
19/12/2019

அவர்கள் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்
ஒரு மரத்தை வெட்டுவதைப் பற்றிதான்
அந்தப் பேச்சு நீள்கிறது
உயிரற்றதாக்கி விட்டால் தளிர்கள்
பிராணவாயு இல்லாமல் இறந்து போகும்
எனக் கணிக்கிறார்கள்
திராவகம் ஊற்றினால் மொத்தத்தில்
பட்டுப் போகலாம் என்றும் பேச்சு நுழைகிறது
அந்த மரம் ஆவேசமாகத்
தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது..
பறவைகள் தங்களின் வம்சத்தைக் கூட்டி
அவர்களை விரட்டுகின்றன
அடர் மழைக்கு வனம் தயாராகும் போது
எரிப்பதைப் பற்றி ஒருவன்
பேசிக் கொண்டு ஓடி வருகிறான்...
ஆணி வேர் அதன் ஆழத்தை தீர்மானிக்கக்
கிளை விரித்துப் பரவும் வேர்களால்
தேசம் முழுமைக்கும் எரிதழல் வீச்சம்.

- முகமது பாட்சா*
19/12/2019







விடுபட்டக் கவிதைகள் 15

அந்த நாற்காலி அங்கேயே ஆடிக் கொண்டிருக்கிறது
அதை அப்படியே விட்டுவிடுங்கள்

அந்தப் படத்தில் இருப்பது போலியான புன்னகை
மாலையும் ஊதுவத்திகளும் கூட....

எரித்துவிட்ட பொருட்களில் மிச்சமிருக்கிறது கைத்தடி
இன்றும் கூட அசையாமல்...

நாட்குறிப்பின் எழுதாத பக்கங்கள்
நிறைய விஷயங்களை எழுதமுடியாமல் தவிக்கின்றன...

விரித்தது போல் படுத்திருக்கும் பார்வைக் கண்ணாடி
ஆழ்ந்து பார்க்கிறது
யாராவது விக்கியெடுத்து அழ மாட்டார்களா?

காகம் கரைகிறது
ஓடிப்போய்ச் சோறு வைப்பதை ரசிப்பதில் ....

அந்த நாற்காலி அங்கேயே ஆடிக் கொண்டிருக்கிறது
அதை அப்படியே விட்டுவிடுங்கள்

- முகமது பாட்சா*
06/12/2019

கடந்து போதல்
எளிதானவொன்றாய் நிகழ்ந்து விடுகிறது...
எரியும் கண்களில்
எள் நெய்யை யூற்றி தவம் என்கிறாள்...
காடுகள் பற்றியெரியும் போது
கட்டில் செய்வதற்கு மரங்களைத் தேடுகிறேன்...
மனக்கலசத்தில் தானியமாகக் கிடந்தவள்
காட்டாற்றைத் தட்டியெழுப்பி
குதிரையெனப் பாயும் பாய்ச்சலில்
நிலைகுலைந்து விழுந்திருக்கும் என்னிதயம்
இறைச்சிக்கென்று எடுத்துச் செல்பவளை
என்ன செய்துவிட முடியும்?

- முகமது பாட்சா*
07/12/2019

புரியாத படத்தை வைத்துக் கொண்டு
புரிந்ததுபோல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்...
அஃதொரு பெண்ணின் படம்
என்பது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும்...
விலா எலும்புகளின் சிறகுகள்
உடைந்திருப்பதைக் கவனிக்கவில்லை...
இதயம் வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஓலம்
கண்ணீராய் வழிகிறது...
காட்டுப்பூச்சிகளின் மொய்ப்பில் கூந்தலை
உலர்த்தியிருக்கிறாள்...
இடுப்பெலும்பில்
எகிறிக் கடித்த நாய்களின் தடத்தை
உதிரத்துணியில் வழிந்து நிற்கும் வண்ணங்களைக்
குழைத்து ஆடையாக உடுத்தியிருக்கிறாள்...
பிறாண்டிக் கொண்டிருக்கும் நரிகளை
யார் வேட்டையாடுவது?
கேள்விகளைத் தின்று
புழுக்களை வாந்தியெடுக்கும் அவளின்
உறக்கத்தைத் தின்னும் பிசாசுகள்
வவ்வால்களாகப் பறந்து கொண்டிருக்க...
ஓவியத்தை எரித்துவிட்டு
சாட்சியங்களை
அழித்து விட்டதாகப் பெரு மூச்சு விடுகிறார்கள்....
யோனிப்புழுக்கள் கால்கள் முளைத்து
நெருங்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள்
கவனிக்கவேயில்லை!

- முகமது பாட்சா*
07/12/2019

உதிர்ந்த சருகிற்கும்
துளிர்க்கும் தளிருக்கும் உள்ள இடைவெளியைக்
காலமென்று கணிக்கிறான் தச்சன்...
பருவங்கள்
நகராமல் நின்றிருந்தால்
சளிப்பில் வாழ்க்கை இறந்திருக்கும்...
புன்னகை மட்டுமே என்றும் விலையாவதில்லை..
ஏகாந்தம் என்பது வார்த்தையழகு
பரதேசிக்குப் பாட்டு மட்டுமே போதாது...
கடவுளோடு நடத்தும் பேச்சுவார்த்தை
இயலாமையின்
இடைவெளியை இட்டு நிரப்புகிறது ...
சிறகுகளை உலர்த்தும் போது
தன்னையுதறி எழுந்து கொள்கிறது காலம்..
சன்னலைத் திறந்தே வையுங்கள்
காற்று மட்டுமல்ல
காலமும் அதனுள் எளிதாக நுழைந்து வரும்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
08/12/2019

உன்னாவில்
தீவைக்கப்பட்ட பெண் மரணம்
பாலியல் குற்றவாளிகள் ஜாமினில் வெளியே
என்கவுண்டரில் நால்வர் மரணம்
மக்கள் கொண்டாட்டம்
வெங்காயம் விலை 300 ஐ தொடும்
முட்டைக்கோஸ்
முருக்கைக்காய் விலை எகிறியது...
நித்தியானந்தா தப்பியோட்டம்...
தமிழ் நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்...
சபரிமலை இறுதித் தீர்ப்பல்ல
டெல்லியில் தீவிபத்து
நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை
இவையெல்லாம்
வேறு வேறு செய்திகளல்ல...
கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு
பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனைக்கு!

- முகமது பாட்சா*
08/12/2019

ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கவிதை மரம் இப்போது மலையாள மண் வாசனையுடனும்...

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഞാൻ സന്തോഷത്തോടെ
തലയാട്ടിക്കൊണ്ടിരുന്നു

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഞാൻ പൂവുകളെ വിടർത്തി
വാസന കൂട്ടുകയും ചെയ്തു

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഞാൻ കായകളും
പഴങ്ങളും കൊടുത്തു

അവർ പറഞ്ഞു
ഒരു മരമെന്ന്
ഒരു ദിവസം
കാറ്റിൽ ഞാൻ വീഴ്ന്നു

കസേര , മേശ, വാതിൽ
എന്നൊക്കെ അവർ ഇപ്പോൾ
എന്നെ വിളിക്കുന്നു

ഞാൻ ഇപ്പോഴും
ഒരു മരമായിത്തന്നെയല്ലേ
ഇരിക്കുന്നത് ?

കവി : Mohamed Batcha / Tamil Nadu
മൊഴിമാറ്റം : വരദൻ

மரம் என்றார்கள்
மகிழ்வுடன் தலையாட்டிக் கொண்டிருந்தேன்

மரம் என்றார்கள்
பூக்களைப் பூத்து வாசம் கூட்டினேன்

மரம் என்றார்கள்
காய்களையும் கனிகளையும் கொடுத்தேன்

மரம் என்றார்கள்
ஒரு நாள் காற்றில் விழுந்தேன்

இப்போது நாற்காலி,
வாசற்கால், மேசை என்றெல்லாம் அழைக்கிறார்கள்

நான் இன்னமும்
மரமாகத்தான் இருக்கிறேன்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
04/12/2019

They said the tree.
I kept nodding
happily.

They said the tree.
I bloomed flowers
and added fragrance.

They said the tree.
I gave fruits
raw and ripe.

They said the tree.
One day I fell
in the wind.

Chair and table they now say
and also doorway.
As just the tree
I still stay.

Translated by :~Sri vatsa - noida

பறித்துப் போட்ட கொழுந்துகளை உண்ட
வெள்ளாட்டின் திமிர் கறி
பண்ணையின் கிடா வெட்டி விருந்தில்
கார சாரம் கூட்ட எலும்புகளுக்கு
நாய்கள் அடித்துப் பிறாண்டிக் கொண்டிருந்தன...
விருந்து முடிந்ததும் மிச்சமிட்ட சோற்றை
அள்ளிவைத்ததில் அதன் இரைப்பைத் தோஞ்சல்
ஒன்றிரண்டு மட்டும் மேய்த்தவன் இலையில்
வறட்சியாகக் கிடந்தது...

விரசாச் சாப்பிட்டுட்டு
ஆட்டுக்கெல்லாம் தழையை ஒடிச்சிப் போடு

- முகமது பாட்சா*
09/12/2019

தேசத்தின் வரைபடத்தை
நான்கு பக்கமும் இழுத்து ஆணியடிக்கிறார்கள்
நடுவில் ஆங்காங்கே விரிசல் ஏற்படுகிறது...
கொடிக் கம்பத்தின் கீழிருக்கும் குடிசைகளைக் கொளுத்திவிட்டு
தேசிய கீதம் இசைக்கப் படுகிறது...
பறவைகள் மரங்களைத் தேடியலையும் அதே வேளையில்
மலைகள் சிதறிக் கொண்டிருக்கின்றன
காந்தியின் கால்களில் செல் பூச்சிகள் நிரம்பியிருக்க
தேசத்திற்கு வார்னிஷ் அடிப்பதாக
தேசிய தலைவர் முழங்குகிறார்...
வரிக் கட்ட மறுத்தவன்
இன்னமும் சுங்கச்சாவடியைத் தாண்டாமல் நிற்கிறான்
ஆதர்ச கடவுளென்பவன்
விசாயில்லாமல் வெளி நாட்டில் விருந்து சாப்பிடுகிறான்
பெண்கள் பாதுகாப்பாகவே
கற்பழித்து எரித்து கொல்லப் படுகிறார்கள்...
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
விரட்டப்படுவதற்கான குடி மக்களை...
ஆதார் இப்போதுதான்
மெல்ல வாயைப்பிளந்து பாம்பாக மாறிக் கொண்டிருக்கிறது...
நீ முஸ்லீமாக இருப்பது பாவமென்று இராமர் சொல்கிறார்...
அம்பேத்கர் இன்னமும் கூண்டுகளில்தான்
சட்டம் போதித்துக் கொண்டிருக்கிறார்..
தேசிய வயலில் பெருச்சாளிகள்
வெள்ளாமை செய்வதாகப் பேசிக் கொள்கின்றன...
இந்தியர்கள் மடையர்களல்ல...
வேட்டையாடிகளின் இனக்குழுவில்
பூனைகள் குதித்து மகிழ்வது கூண்டிற்குள் சிக்குவதற்காகத்தான்.

- முகமது பாட்சா*
10/12/2019

#மொஹல்லா_வாசிகள்

என்னைப் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கும் போது
என்னுடைய தொப்பியைப் பற்றிச்
சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்...
குரானிலிருந்து ஆயுத எழுத்துகளைப் பிரித்து
தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது
தொடங்கிவிட்டது...
பள்ளிவாசல் புறாக்கள் ; இனி
ஜாக்கிரதையாகத்தான் பறக்க வேண்டும்
கால்களில் குண்டுகள் இருந்ததாகச்
சுட்டுத் தள்ளப் படலாம்....
காபாவின் திசையில் தொழுகை நடந்தாலும்
மொஹல்லாவாசிகள் அமர்ந்திருப்பது
ஒன்பது திசைகளல்லவா!

- முகமது பாட்சா*
11/12/2019

அவர்களுக்கு
மற்றவர்களின் வாய்கள் பேசுவதைவிட
விரல்கள் பேசுவதைக் கண்டால்தான்
பயம் அதிகம்!
இணையத்தின் நரம்புகளைத் துண்டித்துவிட்டு
ஊரே உறங்கிவிட்டதாக
எழுதிக் காட்டி மகிழ்கிறார்கள்...
தொப்புள் கொடிகளுக்குச்
சான்றுகளைக் கேட்பவர்கள்
நாளை கர்ப்பப் பைகளையும் அறுத்தெறியத்
தயங்கமாட்டார்கள்...
எண்ணிக்கை விளையாட்டு எப்போதும்
வென்று விடுவதில்லை
ஒரே கட்டில்
அதிக ஜோக்கர்கள் இருந்தாலும் ஆபத்துதான்
சீட்டுகளைக் கலைத்துப் போட்டுத்தான்
ஆடியாகவேண்டும்...

- முகமது பாட்சா*
11/12/2019









விடுபட்டக் கவிதைகள் 14

அதிகமாகச் சிரிக்காதே!

காமம் போர்த்திய கண்களைக் கழற்றி
அலசிக் கொண்டிருந்தான்
நிர்வாணமானாள்

மெதுவாக நட!

கால்கள் வெட்கம் சேர்த்துக் கட்டப்பட்டது...

அதிகம் பேசாதே!

அசிங்கமான வார்த்தைகளை அணிந்து கொண்டவள்
பணிவிடைகளைச் செய்தாள்...

மனம் கோணாமல் நடந்து கொள்!

சமையலறை அவள் கதையைக்
கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தது....

பொறுமையில் பூமாதேவியாக இரு!

பூமிக்குள் புதைந்து போனாள்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
28/11/2019

காந்தியை
ஊடகச் செய்திகளில் அடிக்கடிப் பார்க்க முடிகிறது
அவர் மீதான குற்ற வழக்கு
எண்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன..
கோட்சேயின்
சிறைக் கதவுகள் திறக்கப்பட....
காந்தி நிமோனியாவில் இறந்திருக்க வாய்ப்புகளுண்டு
அமேசானில் கிடைக்கும் அவரது
ஊன்று கோல்களை அரசு அதிகமாக வாங்குகிறது...
விழும் போதெல்லாம்
அவைதான் அவர்களை நிமிர்த்துகின்றன....
கோட்சே தேச பக்தர் என்றால்
அவன் கையிலிருந்த இஸ்மாயில் மட்டும்
ஏன் தீவிரவாதியானான்!

- முகமது பாட்சா*
28/11/2019

விடுகதையொன்று
முடிக்கப்படாமல் தொடர்கிறது
துறட்டிக்கோலிடம்தான்
ஆடுகளின் நேசம் அதிகமாக இருக்கின்றன...
விழுந்து கிடக்கும் பழத்திற்குத் தெரியாது
தானொரு விருட்சமென்று...
கூதையை உடுத்திக் கொண்டு நடக்கிறவனே
வீரனாகிறான்...
அச்சம் என்பது ஒரு போர்வை...
அரசனென்றாலும் ஆய் போவது வாயிலில்லை...
நாய் நாற்காலியில் உட்கார்ந்தாலும்
நக்கித்தானே குடிக்கிறது
கேள்விகளைப் பெட்டியில் பூட்டியவன்
கால்களில் விலங்கை மாட்டிக் கொள்கிறான்...
ஆச்சரியக்குறி
அவசியத்திற்கு மட்டுமானது...
அடிக்கடி வாய் பிளந்தால்
ஆண்டை கூட அங்குதான் சிறுநீர் கழிப்பான்...
விடையில்லாதவையெல்லாம்
விடுகதையேயில்லை.

- முகமது பாட்சா*
29/11/2019

நீ வாசிக்கும்
புதினத்தின் மூன்றாம் பக்கத்தில்
அடிக் கோடிட்ட வரியில்
மறைந்திருக்கும் என் நிழல் பெயரில்
ஒரு முத்தம் வரைந்திருக்கிறாய்

7 ம் பக்கத்தில் எதுவும்
எழுத வில்லையென்றாலும் மடித்து வைத்திருக்கும்
மூலை நாம் சந்தித்த திகதியல்லவா!

21 ம் பக்கத்தைக் கிறுக்கி வைத்திருக்கிறாய்
பிறகுதான் தெரிந்தது
அதிலுள்ள வசைமொழியொன்று உன் மீது
கோபத்தில் பிரயோகித்தது...

குட்டிப் போடுவதாய்ச் சொன்ன மயிலிறகு
40 ம் பக்கத்தில் புன்னகையை
நகலெடுத்து அழ வைக்க விரலாகக் கோதுகிறேன்...

101 ம் பக்கத்தில்தான் பார்த்தேன்
எனக்குத் தராமல்
நீயே வைத்துக் கொண்ட நீண்ட கவிதையை...

இந்தப் புத்தகத்தில் நீ புரட்டியிருப்பது
காதலின் பக்கங்களென்பதால்
முகர்ந்து பார்க்கிறேன்..
புதினம் முழுவதும் உன் வாசனை !

- முகமது பாட்சா*
29/11/2019

புனிதம் என்று சொல்லி
இந்தக் கடலை பலப்படுத்திவிடாதீர்கள்...
உப்பு வியர்வையை முகர்ந்த வானம்
துப்பும் எச்சிலை மழையெனக் கொண்டாடுகிறோம்...
மீன்களின் எச்சம் நிறைந்த நீரை
சுத்தமெனப் போற்றிச் சுடரொளிக் காண்கின்றோம்...
கடல் மிச்சம் வைத்த பெருமூச்சையும்
சுகம் வீசும் காற்றென்று கொண்டாடுவோரே...
ஆதி மூலம் பார்த்து மனிதர்களை
அடுக்கும் சாத்திரங்கள் தீட்டென்று ஒதுக்கினாலும்
கால்கழுவும் நீரைக் கழற்றி வந்த நதியில்
தோஷம் போக்குகிறாய்...
நீர் மூலம் பார்க்க வேண்டாம்...
கிராமத்தியின் தூமையுலர்த்திய துணியின் வீச்சம்
கடல் வாசனை என்பதையாவது காண்!

- முகமது பாட்சா*
02/12/2019

காதல் என்று எழுதிவிட்டு
எப்படிப் படித்தாலும் இனிக்கத்தான் செய்கிறது!

நீ அடிக்கடிச் சொல்லும்
அந்த 'ம்' கள்
உதடுகளை அழுத்தமாகவே முத்தமிடுகின்றன!

நீ சிரிக்கும் போது
கண்களை அவசியம் கவனிக்கிறேன்
அதற்கு நடிக்கத் தெரியாது!

பொய்களைச் சகித்துக் கொள்
கற்பனையென்றாலும்
கனவுகளில் அவை திமிறி எழுந்தவை!

- முகமது பாட்சா*
02/12/2019

சுவரென்பது அரண் எனச் சொல்வது
பொய்மையின் கூற்று...
காடுகளுக்குள் நுழைந்த சுவர்கள்
நாடுகளைப் பிரிக்கின்றன...
வேதங்கள் சுவர்களாகி மனிதர்களை உண்ணுகின்றது
வர்ணத்தின் சுவர்கள்
வரவேற்பறையில் நுழைந்த பிறகு
சாணக்கியம் பிரித்த சொல் தாழ்த்தப்பட்டவன்...
இடைச்சாதியென்பதும்
இங்கு இடுப்பெலும்பின் புற்று நோய்தான்...
உயரம் எழுந்த சுவருக்குப் பின்னால்
ஒளிந்திருந்த சாதியத் திமிர்
பலிக் கேட்டிருக்கிறது 17 உயிர்களை...
ராஜாவாக இரு
பல்லாக்கு தூக்குகிறவன் பாதியில் விட்டுப் போனால்
நீயும் கூடப் பரதேசிதான்.

- முகமது பாட்சா*
03/12/2019

நீ மழையைப் பற்றி எழுதிய
கவிதையில்
அடிக்கடி நனைகிறேன் ஆனந்தமாக!

நீ மழை என்பதால்
எனக்குக்
குடையே தேவைப்படவில்லை!

உன் புன்னகையின் சாரலில்
நான்தான்
அடிக்கடி பூத்துக் குலுங்குகிறேன்!

உன் மேகம் மட்டும்
எப்படி
சப்தமில்லாமல் இடிக்கிறது?

கண் சிமிட்டிய மின்னலில்
குருடான பிறகுதான்
பார்வையே கிடைத்திருக்கிறது!

- முகமது பாட்சா*
03/12/2019

மழையைப் பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தவன்
அணைந்து விளம்பரத்திற்கு மாறினான்
தலைவலிக்குச் சூடாகத் தேநீர் ஆர்டர் கொடுத்தேன்
அடுத்த மேசையின் பஜ்ஜி வயிற்றைக் கிள்ள அதிலும் இரண்டு
சட்டினி சுமார்தான் அவள் என்னையே பார்த்தாள்
அவளிடம் ஒருவன் பூவைக் கொடுத்துவிட்டு எதையோ பேசினான்..
சார் வேற எதாவது - சப்ளையர்
போதும் என்று சொல்லிவிட்டுத் திரும்பினால் அவளில்லை
டிப்ஸில் மிளிரும் புன்னகை இதமாகிறது
வெளியே மழை இன்னமும் கொட்டிக் கொண்டேயிருந்தது...
குடையை விரித்த போது
அவள் தெருவெல்லாம் தூறிக்கொண்டேயிருந்தாள்.

- முகமது பாட்சா*
03/12/2019

சில வார்த்தைகளோடு
கை கோர்த்தே நடந்து செல்கிறோம்...
கண் முன் நடந்த விபத்திற்கு
ஒரு 'ச்' போதுமானதாக இருக்கிறது...
எரிந்து கிடக்கும்
பிணத்தைப் பார்த்துவிட்டால்
'என்ன கொடுமை' மட்டும் போதும்..
அரசின் அதிகார மீறல்களுக்கு
'அவர்கள் அப்படித்தான்'
முத்தாய்ப்பாக
போராடுபவர்களைப் பார்த்தால்
'வேலை வெட்டி இல்லாதவர்கள்'

- முகமது பாட்சா*
04/12/2019

மரம் என்றார்கள்
மகிழ்வுடன் தலையாட்டிக் கொண்டிருந்தேன்
மரம் என்றார்கள்
பூக்களைப் பூத்து வாசம் கூட்டினேன்
மரம் என்றார்கள்
காய்களையும் கனிகளையும் கொடுத்தேன்
மரம் என்றார்கள்
ஒரு நாள் காற்றில் விழுந்தேன்
இப்போது நாற்காலி,
வாசற்கால், மேசை என்றெல்லாம் அழைக்கிறார்கள்
நான் இன்னமும்
மரமாகத்தான் இருக்கிறேன்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
04/12/2019

நண்பர் ஶ்ரீவத்ஸா அவர்களின் உடனடி ஆங்கில மொழியாக்கத்தில் :

They said the tree.
I kept nodding
happily.

They said the tree.
I bloomed flowers
and added fragrance.

They said the tree.
I gave fruits
raw and ripe.

They said the tree.
One day I fell
in the wind.

Chair and table they now say
and also doorway.
As just the tree
I still stay.

குதிரையின் முதுகில் எறும்பின்
பயணம் போல் நகர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை....
கடலை குடித்துவிட்ட காகம்
கற்பனையில் பறக்க மறந்துக் கூட்டிலுறங்க...
அலைச் சர்ப்பம் ஆடியசைந்து ஏறும் அம் மரத்தில்
அலறும் முட்டைகளின் வெதும்பல்
இதமென எழுதிவைக்கிறது காலப் பரீட்சயம்...
சுகமென்ற வார்த்தையை விழுங்கியிருக்கும்
அசூயையை எல்லோரும்
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்...
துளிருக்குத் திரும்பாத
சருகிற்குத்தான் தெரியும் மீட்க முடியாதது
காலமென்று...

- முகமது பாட்சா*
05/12/2019

என்னை நான்
நிரூபித்துக் கொண்டேயிருக்கிறேன்...
மௌன வெளியில் உலாவும் போது
சுற்றுச்சுவர்கள் உயரம் எழும்பி விடுகின்றன...
உடைத்துவிட்டு வெளியேறுகிறேன்...
இரவுகளின் எழுதாத பக்கங்களில் நுழைந்து
விடியலைத் தொடும் போது
எனக்குள் நொறுங்கிப் போன கனவுகள்
வீடு கட்டத் தொடங்குகின்றன...
நான் நான்தான் என்பதற்கு
என் புன்னகை ஓடிவந்து உதவி செய்கிறது...
சில கைக்குலுக்கல்களில் என்னை
நானே அறிமுகப் படுத்திக் கொள்கிறேன்...
மனைவிக்கு முத்தம்
உறவுகளுக்கு நல விசாரிப்புகளென
விரிகிறது என் பெரும் முயற்சி...
பிள்ளைகளிடம்
பாசத்தைக் குழைத்துப் பிம்பத்தைக் கடத்துகிறேன்...
எதிரிக்கும் எதிர்வினைகள்
நட்பிற்கும் நல வெண்பாக்களென எழுதுகிறேன்...
இந்தக் கவிதை கூட இருப்பை
அழுத்தமாகவே சொல்வதற்கும் இருக்கலாம்....

- முகமது பாட்சா*
05/12/2019

பிறப்பின் மீது பாய்கின்ற அம்புகளுக்கு
என்ன பெயரிடப் போகிறீர்கள்?
வணக்கத்தின் வாசலை
கடவுள் எப்போதும் அடைத்தே வைத்திருப்பானா?
சரஸ்வதி
தன் வீணையில் ஒற்றை நரம்பை மட்டுமா
மீட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஒதுக்கங்களைச் சுத்தம் செய்வதற்கும்
ஓர் இனம் தேவையா?
கடவுள் பல்லாக்கில் ஏறினால் சரி...
பண்டாரங்களையும் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?
நிலமகள் எப்போது
தன்னை விலைமகள் ஆக்கிக் கொண்டாள்?
மனிதன் சாமியாகிவிட்டால்
கடவுளுக்கேன் கற்பூர ஆராதனை?
கேள்விகளையெல்லாம் தூக்கிச் சுமந்தவன்...
விடை தேடுவதற்கு
கல்விக் கூடத்தில் விளக்கேற்றிக் கொண்டான்...
அடங்க மறு என்பதே ஆயுதம் என்றான்...
எழுவதற்குக் கல்வியை உடுத்த சொன்னவன்...
கருப்புக் கோட்டோடு நிமிர்ந்த போது
வர்ணத்தின் வாசல் ஆடத்தான் செய்தது!

- முகமது பாட்சா*
06/12/2019









விடுபட்டக் கவிதைகள் 13

பாதைகளை திருடிக் கொண்டாய்
வழி தெரியாமல்
சென்று கொண்டிருக்கிறேன்

குளத்தில் கல்லெறிந்தால்
அல்லி அடிபடும் என்று பதறுகிறாய்...
கடற்கரையில் அமர்ந்து கொண்டு

கண் நோக்கு விளையாட்டில்
கண்ணீரோடு விடை பெறுகிறேன்
உன் நோக்கு கூரென்பதால்

உன் கால்களை நனைப்பதற்கு
அலைகள்
சண்டையிட்டுக் கொள்கின்றன
நான் அலைகளோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்

நீ போடும் கடலைக்காக
காகம் கண் சாய்த்துப் பார்க்கிறது
நானும் கூட...

- முகமது பாட்சா*
15/11/2019

என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்
சில வார்த்தைகளைப் பதனிட்டு வைக்கிறேன்
சில வார்த்தைகளுக்கு அத்தர் தெளிக்கிறேன்
என்னை உச்சத்தில் வைக்க
ஒரு மேடை தேவைப் படுகிறது
அதற்கான வார்த்தைகளைக் கொண்டு
அதனை அலங்கரிக்க வேண்டும்
சிலரின் புகழ் மொழிகளை
இணைப்பில் சொருகி இனிப்புத் தடவுகிறேன்
அடிக் குறிப்புகளில்
பொய்களையும் சேர்த்து வாசித்த போது
வார்த்தைகளெல்லாம் துரத்திக்கொண்டு வர
எங்கோ ஓடிக் கொண்டிருக்கிறேன்....

- முகமது பாட்சா*
16/11/2019

அரங்கம் நிறைந்திருக்கிறது
நாம் மட்டும்
தனியாக அமர்ந்திருக்கிறோம்

அமர்ந்திருக்கிறோம்
திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது
வேறென்ன சொல்ல?

நீ காட்சிகளை ரசிக்கிறாய்
நான்
உன் ஸ்பரிசத்தை வாசிக்கிறேன்...

காதில் கதை சொல்லுகிறாய்
மூச்சுக் காற்று
முந்திவந்து முத்தம் தருகிறது..

அரங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்
திரைப்படம்
இப்போதுதான் தொடங்குகிறது!

- முகமது பாட்சா*
16/11/2019

இருட்டைப் பற்றி
கவிதையொன்று வாசித்துக் கொண்டிருந்தேன்
எனக்குள் வெளிச்சம்
மெல்ல எட்டிப் பார்த்தது
கண்களை மூடிக் கொண்ட பிறகு
வானம் விடிந்து
பறவைகள் சப்தமெழுப்பிக் கொண்டிருக்க
சிறகுகள் முளைத்துப்
பறக்கத் தொடங்குகிறேன்...
காகங்கள்
வெள்ளை நிறத்திற்கு மாறிக் கொள்கின்றன...
இருட்டைப் பற்றி
யாரும் பேசாதது ஆச்சரியமளித்தது...
கபர் குழிகளில்
வெளிச்சமிருக்கிறதென்று சூஃபிக் கவிஞன்
பாடிக் கொண்டு போகிறான்...
விழித்துப் பார்க்கிறேன்
நிழலேயில்லாமல்
நான் உறங்கிக் கொண்டிருக்க...
அந்தக் கவிதை சன்னலில் நுழைந்து
வெளியேறிக் கொண்டிருந்தது

- முகமது பாட்சா*
17/11/2019

காடுகளைத் தேடியலைகிறான்
எங்குப் போனாலும்
முட்டி மோதுகின்றன நகரங்களின் சுவர்கள்
முப்பாட்டனின் நரிக்கொம்புகள்
ஊளையிட்டுக் கதறுகின்றன
'வனத்தைத் தேடிக்கொடு என் குருவிக்காரா!'
ஈரமில்லாத வேர்களைத்
தோண்டியெடுத்து அழுகிறான்...
'காட்டுப் பாதையை நீ காட்ட மாட்டாயா?'
கம்பியில் அடிபட்ட காகம்
கடனேயென்று விழுந்து கிடக்க...
கதறியழாமல் பறக்கின்றன உறவுச் சிறகுகள்...
வயல்கள் அவனைத் தேடிக் கொண்டிருக்க
எலிகளை அவன் தேடுகிறான்...
பூனையொன்று
பரிதாபமாகப் பார்த்துவிட்டு நகர்கிறது....
சீனிப்பாகை
வாசனைக் கலந்து விற்க கற்றுக் கொள்கிறான்...
"மலைத்தேன் சாமி... மலைத்தேன்"
குருவிக்காரச்சி விற்கிறாள்
'ரிமோட் கவர்...
டிவி கவர்... ரிமோட் கவர்... டிவி கவர்...'

- முகமது பாட்சா*
18/11/2019

உதிர்ந்து கிடக்கும்
முதிரிலைகளின் மீது எழுதும்
மழைத்துளிகளின் வீழ்ச்சியில் நெளிந்தோடும்
சிற்றோடை இடையெனக் கொள்ளுங்கால்
பருவமழையென எழுதியவன் காளிதாசனின்
காம நுரையினுக்குள் சிக்கி செய்யுளொப்பி
மலையென முகடுகளைத் தழுவ
வெட்கம் விரிசலாகி வெள்ளமிகுத்து வெகுண்டெழ
ஆதிகணம் பெருகி அகன்று விரிந்து
அல்லுரு முனகலசைக்கும்
அந்தி சாமம் கண்திறக்கும் வேளையில் கை கூப்பி
நிற்கிறது வெய்யோன் வெளிச்சம்.

- முகமது பாட்சா*
18/11/2019

காற்றில் கைவீசி
நீண்ட கோடுகளை வரைகிறான்
நடனத்தின் நளினம்
அவன் விரல்களில் பெய்கிறது
கண்களைத்
தியானத்திலிட்டுச் சுழற்றிய காற்றை
போதியின் புத்தனென்கிறான்...
கிறுக்கனென்று நகைப்போரிடம் கற்களையளித்து
என் மீது வீசுங்கள் என்று சிரிக்கிறான்...
கண்ணில்லாதவர்கள் காண்பதுதான்
அரூபமென்றவன்
நீங்கள் காண்பது அசூயை என்று எள்ளி விட்டு
காற்றில் கை வீசி
காடுகளை வரையத் தொடங்கினான் ...

- நட்புடன்.....முகமது பாட்சா*
19/11/2019


அந்தச் சிறுமி
எண்களுடன் பேசிக் கொண்டேயிருக்கிறாள்..
வேதாளம் அவள் முதுகில் ஏறி உட்கார்ந்து
விடைகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது...
பள்ளிக்கூடத்தின் நுழை வாயிலில்
தன்னையொரு தடவை தடவிப் பார்த்துக் கொள்கிறாள்...
புத்தகங்கள் அவளைத் தின்பதும்
குறிப்பேடுகள் அவளைத் துப்புவதுமாக
ஒரு கதை ஓடிக் கொண்டிருக்கிறது...
வீட்டிற்குள் நுழைந்ததும் வேதாளம் இறங்கிக் கொள்ள
பதுமைகள் கதை சொல்ல ஆரம்பிக்கின்றன..
களைத்துப் போய் உறங்கும்
மகளின் கனவில்
எண்கள் பேய்களாக விரட்டிக் கொண்டிருக்க...
தூக்கத்திலும் படிப்பதாக
பெற்றவர்கள் பூரித்துப் போகிறார்கள்...
அவளது உள்ளாடையில்
சில தியரிகள் நனைந்திருந்தன...

- முகமது பாட்சா*
19/11/2019

என்னைப் பற்றி எழுதும் முன்பாகச்
சன்னலைத் திறந்து
ஆதி வனத்திற்குள் நுழைகிறேன்..
காடுகளைச் செப்பனிடாத காலம்
உதிரிலைகளால்
அழகாக நெய்யப் பட்டிருக்கிறது...
ஏவாளை இச்சைக்குள் நுழைய வைக்கச்
சாத்தான் பாம்பிற்குள் நுழைகிறான்...
ஆதி உயிரி
பாம்பென்பதை எழுத மறந்த வரலாற்றில்
விலா எலும்பின் கதை மட்டும்
விவரமாகவே இருக்கிறது...
முகத்திலறைந்த காற்றை மூடிவைத்துவிட்டு
என்னைப் பற்றி எழுதுகிறேன்...
என் காலம் கி.பி. 3000

- முகமது பாட்சா*
20/11/2019

கவிதையொன்றை
மீள்பதிவென மீண்டும் பதிகிறேன்...
அதிலிருக்கும் வரிகள்
ஒவ்வொன்றாக உதிர்ந்து
பாதைகளை முழுவதுமாக நிறைக்க..
வெப்பம் பாதங்களைச் சீண்டி
கொப்புளங்களை உருவாக்குகின்றன...
கருகிக்கிடக்கும் பறவை
சுதந்திரத்தைப் பேசிக் கொண்டிருக்க...
எழுத்துகளைப் பொறுக்கி
ஒவ்வொன்றாக விழுங்கிவிட்டு
மீண்டும் கூண்டிற்குள் அடைந்து கொள்ளும்
என்னை நீங்கள்
பச்சைக் கிளியென்று புகழ்வதும் கூட
சிறு மகிழ்ச்சிதான்.

- முகமது பாட்சா*
20/11/2019

மழையை
எல்லோரும் மழை என்றே சொன்னார்கள்
அவன் மட்டும் வெயில் என்றான்
எல்லோரும் அவனை வியப்பாகப் பார்த்தார்கள்
மழை காணாமல் போயிருந்தது.

- முகமது பாட்சா*

பூட்டை இழுத்துப் பார்த்து
சாவியிடம் நம்பிக்கை வைக்கிறான்
திருடன்

- முகமது பாட்சா*
21/11/2019

கொஞ்சம் இரு சாயிரா
வெளியில் சென்றுவிட்டு வருகிறேன்...
தேவதாஸ் போல் பாடிக்கொண்டே திரிந்ததில்
பார்வதி இறந்து போனது தெரியவில்லை...
வெளியில்
என்னவெல்லாமோ பேசிக் கொள்கிறார்கள்...
சாத்தியமா என்று தெரியவில்லை....
கடலை விற்று
மீன்களைக் காப்பாற்றப் போகிறார்களாம்...
நதிகளில் சாலைகளைப் போட்டு
நாகரீகம் வளர்க்கிறார்களாம்....
திருடர்களிடம் பொருட்களை ஒப்படைத்து
களவுகளை ஒழித்து விட்டார்களாம்...
வரும் வரை பத்திரமாக இரு
கூரையைப் பிடுங்கிவிட்டு
வானத்தில் வீடு கட்டும் திட்டம் இருக்கிறதாம்...
பெயரை மட்டும் சொல்லிவிடாதே
எந்த மார்ச்சுவரியில் உன்னைத் தேடுவது?

- முகமது பாட்சா*
22/11/2019

கனவு வெளி முழுவதும்
காற்றின் மொழி நிறைந்திருக்கிறது... சிறகுகளின் பழுதுகளை அலகு கோதி கொண்டிருக்க..
இரவு படித்துக் கொண்டிருக்கும் பாடம்
விடியல்!

- முகமது பாட்சா*

காலம் தன் வேகத்தைக்
கூட்டி நடக்க...
கருவிகளினியக்கம்
யுகத்தைப் புரட்டுகின்றன...
மனிதன்
உறக்கம் கலையாமல்
கனவின் உலகிற்குள் நுழைய...
விடியலென்பது பாட்டுகளில்
வெளிச்சம் காட்டுகிறது .

- முகமது பாட்சா

எல்லோரிடமும் ஏதாவதொன்றைச்
சொல்லிக் கொண்டேயிருப்பான்
அவனை எல்லோரும் புனைவு என்றே அழைத்தார்கள்
அவன் செயல்களும் விசித்திரமாகவே இருந்தன
ஒரு நாள் குதிரையாக மாறிய போது
தன்னைக் கழுதைப் புணர்ந்ததாகச் சொன்னான்
வானத்தை ஒட்டடை அடித்த போது
நட்சத்திரங்கள் உதிர்ந்துவிட்டதாகக் கவலைப் பட்டான்
ஒரு நாள்
தன்னை மன்னன் என அறிவித்துக் கொண்டான்...
அதன் பிறகு அவனை நாங்கள் எங்கும் பார்க்கவேயில்லை...
ஆனாலும் நாங்கள்
மன்னரைப் பார்க்கும் போதெல்லாம்
புனைவு நினைவிற்குள் வருவதும் தப்பவில்லை.

- முகமது பாட்சா*
27/11/2019


விடுபட்டக் கவிதைகள் 12

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Mohamed Batcha, உரை


விடுபட்டக் கவிதைகள் 11

காதலைப் பற்றி எழுதுவதற்கு முன்
முத்தங்களையாவது
சேகரித்துக் கொள்ளவேண்டும்

இருட்டைச் சுவாசிக்கிறேன்
வெளிச்சம் அதிகம் என்கிறாய்!

உன் விரல்களில்
ஒட்டிக்கிடக்கும் வரிகளில்
என் பெயர் மட்டும் இருக்கிறது!

நீ ரசிப்பதை நான் ரசிக்கிறேன்
உன் கண்கள் அடிக்கடி
என் கன்னங்களில் அறைகின்றன!

நீ, நேரமாகிவிட்டது என்று சொல்வதை
எப்படி எடுத்துக் கொள்வது?

நீ போகும் போது முனங்கிய பாட்டை
வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன்...
காலர் ட்யூனில் ஒட்டிக் கொள்கிறது!

நாளை வரும்வரை
இரவு என்னோடு பேசிக் கொண்டிருக்கும்
உன்னைப் பற்றி மட்டும்!

- முகமது பாட்சா*
08/11/2019

அறையின் கதவைப் பூட்டிவிட்டு
உள்ளேயே
ஆடிப்பாடச் சொல்கிறார்கள்...
உதடுகளெல்லாம்
உலர்ந்துபோய் ஒட்டிக் கொண்டிருக்க...
எழுது கோல்களில் நிரப்பிக் கொடுத்த மை
எதை எழுதினாலும் அழித்து விடுகிறது...
பேசாமல் இருப்பதே
சுதந்திரம் என்ற கட்டமைப்பு
ஜனநாயகத்தூண்களில்
மெல்ல ஏறிக் கொண்டிருக்கின்றன....
பாம்புகள் நம்மைப்
பாதுகாப்பாக இருங்களென எச்சரிக்கும் போது
பதுகாக்கப்பட்ட கனிமரம்
பற்றி எரிந்து கருகிக் கொண்டிருப்பதை
யாரும் பார்க்கவில்லை....

- முகமது பாட்சா*
09/11/2019

தலையுயர்த்திப் பார்க்கும் துளிர்களின்
வேர்க்கால்கள்
மெல்ல ஊன்றி நகர்கின்றன..
அருகில் செழித்த களைக்கு நீரையுறிஞ்சும் அவசரம்
மணிகட்டிய ஆடு
நுனிக்கு மேய்கையில் அசத்த
வேர்களில் அடுத்த முயற்சி தொடர்கிறது...
களை வேரோடு களவாடப்பட்டது.

- முகமது பாட்சா*
09/11/2019

எனக்குள்ளிருக்கும் ஒருவனை
யாரவது
உசுப்பிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்...
அவர்களுக்கே தெரிவதில்லை
ஏன் உசுப்பிவிட்டோம் என்று...
அவன் அவ்வப்போது
கிளைகளில் தாவுகிறான்
நீருக்குள் மூழ்குகிறான்
மூர்ச்சையாகிக் கிடக்கிறான்
பயந்தது போல் பாசாங்கு செய்கிறான்
சில நேரங்களில்
கோரைப்பல்லை வளர்த்துக்
கிடைத்ததைக் குதறுகிறான்
திடீரென்று ஞானமாகி புத்தனாகிறான்...
புத்தகங்களைச் சாப்பிட்டு
வார்த்தைகளை வாந்தியெடுக்கிறான்..
வேடிக்கையை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

- முகமது பாட்சா*
10/11/2019

இமைகள் துடிப்பதுபோல்
இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது
உன் இதழ்களின் அசைவிற்கு!

கண்டிப்போடு
இருப்பதாகக் காட்டிவிட்டு
கனவிற்குள்
நுழைந்து கல்மிசம் செய்கிறாய்

அகராதி கிடைக்காமல்
புழுக்கத்தில் தவிக்கிறேன்
சிரிப்பின் மொழி விளங்கவில்லை!

எது பிடிக்கும்? என்றாய்
நீ என்றேன் ; உனக்கு? என்றேன்
உன் பொய் என்கிறாய்!

கனவில்
தவறிழைப்பேன் என்பதால்
காற்றோடு மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறேன்...

நீ இல்லாவிட்டால் மட்டும்
இரவு ஏன்
இத்தனை நீளமாக இருக்கிறது?

- முகமது பாட்சா*
10/11/2019

நிலம்கொத்திப்பறவை

திக்கற்றப் பறவையைப் போல்
இந்தக் கவிதை இங்கேயே சுற்றித் திரிகிறது...
இதன் நிலம்
இப்போது தொலைந்து போனதாக
தேசாந்திரியின் பயணக் குறிப்பில் செல்லரித்துக் கிடக்க
விவசாயி ஒருவன் தூக்கிட்டுக் கொண்டு
நிலத்திற்குக் கடிதமெழுதி வைத்திருக்கிறான்...
தாலாட்டு கேட்ட தாய் மரங்கள்
தங்களின் கதைகளையெழுத...
அதன் வேரில் வைத்திருந்த மிச்ச நீரையும்
உறிஞ்சு கொண்டிருக்கின்றன ஆயில் நிறுவனங்கள்
சோம்பலுக்குப் பிறந்தவர்கள்
வீசி சென்ற நெகிழிகளில் மூர்ச்சையான நிலத்தை
எதனைக் கொண்டு தெளிவிப்பது?
வீட்டையிழந்தவனுக்குத்தான்
தாயின் மடியைப் பற்றிப் புலம்பத் தெரியும்..
தாங்கி பிடித்த நிலத்தில்
மலட்டு விதைகளை ஊன்றிவிட்டு
விளைச்சலென்று மார் தட்டிக் கொள்ளும் போதே
தாயொருத்தி மலடான கதையை எழுத
இந்தப் பறவை இடம் தேடியலைகிறது...

- முகமது பாட்சா*
11/11/2019

எழுதாத கவிதைகளில்
உன்னை எழுதிப் பார்க்கிறேன்...
வார்த்தைகள் வெட்கப் படுகின்றன!

காதலிக்க வழி கேட்டால்
புன்னகைத்து
சொர்கத்திற்கு வழி காட்டுகிறாய்!

புத்தகங்களை மூடி வைத்துவிட்டு
உன்னை மட்டும்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்!

சன்னல் வழியே வரும் காற்றிற்கு
உனது மணம்!

ஆறிய தேநீரில்
அதன் ஆடையைக் களைகிறேன்
உனக்கேன் புன்னகை?

நிலாவில்
என்ன தெரிகிறது? என்கிறாய்
உன் முகத்தைப் பார்த்துக் கொண்டு
வெட்கம் என்கிறேன்...

- முகமது பாட்சா*
12/11/2019

அவர்கள் எப்போதும்
அழகிய வார்த்தைகளுடனே உலா வருகிறார்கள்
அவர்களைச் சுற்றிலும்
எப்போதும் மேகக் கூட்டம் தவழ்கிறது...
அவர்கள் அணிந்திருக்கும்
காலணிகளின் பெயர் வாக்குறுதி...
அவர்கள் துடைத்துக் கொள்ளும் டிஷ்யூ பேப்பர்
நம்பிக்கை துரோகம்...
பிடிக்காதது கேள்விகள் கேட்பது...
இருக்கை எலும்புகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது...
கடவுள்கள்தான் இவர்களின் கைக் கடிகாரம்
ஏழைகள்
இவர்களின் உதைப் பந்துகள்...
இவர்களை நீங்கள்
தலைவர்கள் என்று தூக்கிச் சுமக்கிறீர்கள்
இந்தக் கவிதையோ
சாத்தானின் தூதர்களென்று ஒதுங்கிப் போகிறது...

- முகமது பாட்சா*
12/11/2019

பிரிவாற்றாமை
@

சொல்லுருக்கி என்னை
விழியால் அடிக்கடி சுவைத்திட்டாய்
கண்ணுருக்கி இதயத்தில்
புத்தொளிரும் வனம் அமைத்தாய்...
மென்திறன் வார்த்தைகளால்
மெல்லிடையை வளைத்திழுத்தாய்
பண்திறன் பகடையிசைத்து
பாம்பின் வாய் நுழைய விட்டாய்...
வண்கரச் சேட்டைகளால்
வசமிழந்து போனவள் நான்...
இப்போது
பிரிவு எனும் கோடிழுத்து
குப்புறவே தள்ளுகிறாய்
காதலுக்குள் இஃதென்ன நியாயமிது?
செல்லாமை உண்டென்றால்
இன் சொல்லால் எனைச் சுடர் தழுவு...
இல்லையென்றால்; நீயிங்கு வரும் போது
காத்திருக்கும் கள்ளத்தியிடம் போய்க்
கனிவாகச் சொல்
'போய் வருகிறேன்' என்று

- முகமது பாட்சா*

குறள் 1151:.
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

வார்த்தைகள்
ஒரு கூடை எடுத்து வந்தேன்
உன்னைப் பார்த்ததும்
காற்றிலவை கரைந்துவிட்டன...

கவிதை எழுதத் தெரியாதவன் என்று
கேலி செய்கிறாய்
எனக்கு நகலெடுக்கவும் தெரியாது...

மழையில் நனைவதற்காகக்
கூப்பிடுகிறாய்
அதுதான் தினமும் நனைகிறேனே...

இரவை நகர்த்துவதற்கு
இதழில் ஒத்தடம் கொடுத்தாய்
அது பகலையும் எரித்துவிட்டது....

நீ எழுதித்தந்த என் பெயரை
வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்
இன்னமும் தீரவில்லை.

- முகமது பாட்சா*
13/11/2019


உன் பெயர் என்ன?
ஃபாத்திமா லத்திஃபா
நீயெல்லாம் எப்படி முதல் தகுதியில் வந்தே!
வரக்கூடாதா?
எங்கே நீ எழுதியதைக் காட்டு!

- நன்றாகவே எழுதியிருந்தும்
அவளின் எழுத்துகள் இப்போது
முக்காடு போட்டு அல்லாஹூ அக்பர் என்று
தொழுது கொண்டிருந்தது...

'நீ ஓடிப்போ' என்ற குரல்
நாற்புறமும் சப்தமிட்டு இரைய..
அந்தப் பெயர்
கழுத்தில் வளையம் போட்டுச் சுருக்குகிறது..

என் மகளை
அவள் பெயரே சாகடித்துவிட்டது -
நீதி வேண்டும் என்ற தந்தையை
அதே கேள்வி
மீண்டும் சுற்றி வளைக்கிறது...

உன் பெயரென்ன?

- முகமது பாட்சா*
14/11/2019

அவரொரு பொதுப்பெயரில்
கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்
ஏனென்று கேட்டேன்
ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு
சும்மா என்று நகர்ந்தார்
எம்.எஸ்.அக்பர் தான் தூயவன் என்பதே
நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்
மனுஷ்யபுத்ரன் என்பதால் அவர்
கிறித்துவராக இருக்கும் என நினைத்ததுண்டு
நடிகர் ராஜ்கிரணின் பெயர் காதர் என்பது
இன்னமும் சிலருக்குத் தெரியாது
நான் கூட முதலில் தீபக் என்ற பெயரில் எழுதினேன்
நேரில் கண்டவர்கள்
நீ முஸ்லீமா? என்ற போதுதான் மாமூத்,
முகமது பாட்சா பெயர்களில் எழுத முடிவு செய்தேன்
ஜெயமோகன் கூட
இஸ்லாமியர்களின் எழுத்துகள் குப்பை என்கிறார்...
பெயர்தான் இங்குப் பிரச்சனையாகிறது
இவனெல்லாம் என்று சொல்ல வைக்கிறது...
ஆடைகளை உரித்துப் பார்த்து
அடையாளம் கேட்கிறது...
திறமைகளுக்குத் தொப்பி போட்டு
மூலைகளில் உட்கார வைக்கிறது...
கல்வி கொடுக்காமல் தற்கொலைக்குத் தள்ளுகிறது...
கடைய நல்லூர் பென்ஸி,
பாலைவன லாந்தர் இவர்கள் கூட முஸ்லீம்கள்தான்
என்று சொல்லிவிட்டு
இதை எழுதியவன் பெயர்
கீழே திருத்தமாக எழுதியிருக்கிறேன். முகமது பாட்சா என்று.

- முகமது பாட்சா*
14 /11 /2019

வெளிச்சத்தைப் பற்றித்தான்
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
என்னை நசுக்கிவிடாதே!
என்ற பிரார்த்தனையின் கீழ்
சில புற்கள் மிதி பட்டுக் கிடக்கின்றன..
கண்ணீரைப் பிறருக்காகச் சிந்துவதில்
கஞ்சத்தனம் மிகுத்துவிட்டது
அடிபட்ட நாயிக்கு அழுதுவிட்டுப் போகிறவன்
மிதி பட்டுக் கிடக்கும் மனிதனைப் பார்த்து
நகைத்துவிட்டுப் போகிறான்
பிறப்பொக்கும் குறள் இன்னமும் கூட
திருக்குறளாகவே இருக்கிறது...
சாணக்கியம் என்பதே தந்திரம் மட்டும்தான்
உழைப்பவன் வியர்வையை நக்கிவிட்டு
நான்தான் ராஜா என்கிறவன்
நாயைவிடவும் மிகக் கேவலமானவன்...
இறந்தவன் அரசனென்றாலும்
வெட்டியான்தான் எரிக்கப் போகிறான்...
விளக்கிலிருக்கும் திரி நூல் மட்டுமே
வெளிச்சத்தைத் தரும்
அது கூட எண்ணெய் இல்லையென்றால்
கருகிவிடும்.

- முகமது பாட்சா*
15/11/2019


Popular Posts