Thursday, 26 September 2019

நீட்சியில் நிலைத்த காதல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

ஆதிக் காதலைப் பற்றி
எழுதி வைத்த கவிதைகள் மெல்லப் பறக்கின்றன
நீட்சியில் நிலைத்த காதல்
புன்னகைகளால் தைக்கப் பட்டிருக்கிறது
அருகிலிருந்த காதல்
அரூபமென்று மேலெழும் போது
விக்கித்துத் திணறும் காதலை என்னவென்று சொல்வாய்...?
நான்கு பக்கங்களிலும் சுவர்கள்
வேகமாக உயர்கின்றன
வானம் கூரையாகித் தலையைத் தட்டுகிறது...
இனியிருக்கும் வழியென்றால்
காலின் கீழ் கடிதாயிருக்கும் மண் மட்டும்தான்...
நீயாவது பிளந்து வழிவிடு
அவள் போன பாதையைத் தேடிச் செல்கிறேன்...

- மு.முகமது பாட்சா*
26/09/2019

சைகைக் கூத்தன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

நானொரு சைகைக் கூத்தன்
ஒப்பனைகள்
மிதமிஞ்சித்தான் இருக்கும்...
அரசனாகும் போது
கண்களையுரிட்டிக் காட்சி செய்கிறேன்...
மந்திரியாகி
காலில் விழுந்து காலத்தைத் தேடுகிறேன்...
பஞ்சணையில் மட்டும்
பச்சைக் காட்டும் அரசியாகிறேன்....
உதடுகளைக் காதிற்கிழுத்து
நகைக்கிறேன்
நீங்கள் இங்குச் சிரிக்கிறீர்கள்...
நான் அழுது கொண்டிருக்கிறேன்
உண்மையில் யாரிங்குக் கோமாளி?

- மு.முகமது பாட்சா*
26/09/2019
Photo : Mime Artist Marcel Marceau

ஒரேயொரு காதல் கவிதை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒரேயொரு காதல் கவிதை எழுதிவிட
எத்தனிக்கிறேன்...
பற்றாக்குறையென்பது
தேநீர் கோப்பையினடியில்
மண்டியாகத் தங்கிக் கிடக்கிறது...
கறுத்துக் கிடக்கும் கவரிங் நகையில்
ஒட்டியிருக்கும் சோகம்
ஒரு முழம் பூவில் மாறித் தொலைக்கலாம்...
பட்ஜெட் உதறிவிட்டு
மிச்சம் காட்டிய புடவையில்
அப்படி என்னவொரு இரசனை
இருந்து விடப் போகிறது?
என்னதான் புன்னகையை அணிந்தாலும்
கண்கள் பேசும் சோகத்தை
மறைத்துவிடவா முடியும்?
எப்படியும்
ஒரேயொரு காதல் கவிதை எழுதிவிட
எத்தனிக்கிறேன்...
நாளை
வீட்டு வாடகைக்கு என்ன செய்வது?

- முகமது பாட்சா*
25/09/2019

Wednesday, 25 September 2019

ஆரிகாமி வனம் - சிறப்பு செய்திகள் 2

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Mohamed Batcha உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

 நூல் வெளியீட்டு விழாவில் என் பேச்சின் சாரம்

இலக்கியம் பேசுவதற்கும் இனம் பார்க்கப்பட்ட அரசியலில் 
இருந்து மெல்ல நகர்ந்திருக்கிறது இந்த வானம். தாலாட்டும் 
பாடல்களுக்கு யார் மெட்டமைத்திருப்பார்கள் ? 
வயல் வெளி நாற்றுகள் பாட்டுகள் மட்டுமே கேட்டு வளர்ந்த போது 
அமோக விளைச்சல்களைத் தந்தன.. இப்போது டிராக்டர்களின் 
சப்தத்தில் பதராகிப்போனது பயிர்கள்.. நாம் பாட்டுக் குடிகள்... 
எங்கும் பாடிக் கொண்டே திரிவோம்.. நீ பாடாதே என்று சொல்ல 
யாருடைய சங்கீர்த்தனங்களும் இங்கு நமக்குத் தேவையில்லை.... 
மீனவன் கூட வலையோடு பாட்டுகளை போட்டுத்தான் 
மீன்களை அள்ளி வருகிறான். நானும் கூட 
ஒரு நாடோடி பாட்டுக்காரன்தான். தேசாந்திரி போகிற வழியில் 
கண்களை மூடிக் கொண்டா போகமுடியும்? 
காகிதப் பறவைகளுக்குக் கவர்ண்மெண்ட் வேண்டுமென்றால் 
சாப்பாடு ஊட்டலாம்.. கதறியழும் கானகத்துப் பறவைகளுக்குக் 
கவிஞன்தானே குரலெழுப்ப முடியும். அப்படித்தான் நான் 
இந்தச் சமூகத்தை எழுதுகிறேன்.. என் பாட்டு ஒரு புல்லையும்
 புடுங்காதென்றுச் சொன்னால்... பாரதியின் பாட்டும் 
அப்படித்தான் என்று சொல்வேன்... 
நான் எப்போதுமே வார்த்தைகளோடுவே 
விளையாடிக் கொண்டிருப்பவன்... என் வார்த்தைகளின் சூட்டை 
ஆங்கிலத்திலும் குறையாமல் சமைத்திருக்கிறார் 
நண்பர் ஶ்ரீ வத்ஸா /அவருக்கு என் அன்பின் நேசங்கள்.. 
என் ஒற்றைக் கோட்டில் சிந்திக்கும் கவிஞரும் 
கலை விமர்சகருமான அணிந்துரை வழங்கிய ஆசான் இந்திரன் 
அவர்களுக்கும் / ஆரிகாமி வனம் என்ற இந்த நூல் வெளியாவதில் 
உறுதியாக நின்ற படைப்பு ஜின்னா அவர்களுக்கும், 
மேலும் எனது கவிதைகளை ஆசிர்வதிக்கும் சிற்றிதழ்களுக்கும் , 
நட்பின் புன்னகைகளுக்கும் இந்தக் கவிதைகளையே 
பூங்கொத்துகளாக சமர்ப்பிக்கிறேன்... நன்றியும் வாழ்த்துகளும்.

- முகமது பாட்சா*
22/09/2019

ஆரிகாமி வனம் - நூல் - சிறப்பு செய்திகள் 1

நூல் வெளியீட்டின் போது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், Mohamed Batcha உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், Mohamed Batcha மற்றும் M S Rajagopal உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
கவிதை சித்தர் விக்கிரமாதித்யன் உடன்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், Mohamed Batcha மற்றும் M Mohammed Farook உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

நூலை ஆங்கிலமாக்கம் செய்த நண்பர் ஶ்ரீ வத்ஸா உடன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், Mohamed Batcha உட்பட, பலர் அமர்ந்துள்ளனர், தாடி மற்றும் கண்களுக்கான கண்ணாடிகள்

ஜெயகாந்தனின் பல நூல்கள், அசோகமித்திரனின் சில நூல்கள், 
பாரதியார் கவிதைகள், உமாமகேஸ்வரியின் கவிதைகள், 
திலகவதியின் புதினம் கல்மரம், தற்காலத் தமிழ்க் கவிதைகள் 
மூன்று தொகுதிகள், சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை 
கவிதை வெளியில் இயங்கிய, இயங்குகின்ற பெண்களின் 
கவிதைகள், கவிஞர்கள் சிற்பி, புவியரசு, 
தமிழன்பனின் படைப்பாக்கங்கள் என பலவற்றை ஆர்வத்தோடு 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இன்னமும் 
ஆர்வமுடம் மொழிப்பெயர்ப்பு பணிகளில் தீவிரமாக இயங்கி வரும்
 85 வயது இளைஞர் கே.எஸ். சுப்ரமணியம் அவர்களிடம் 
எனது ஆரிகாமி வனம் நூலை அதன் மொழி பெயர்ப்பாளர் 
நண்பர் ஶ்ரீவத்ஸா கையளித்தபோது...






விடுபட்ட கவிதைகள் 3

செருப்புகளைக் கழற்றிவிட்டுத்தான்
வீட்டிற்குள் நுழைந்தார்கள்...
செருப்புகள்
காவலாளிகளைப் போல்
வெளியவே காத்துக்கிடந்தன...
மீண்டும்
செருப்புகளை மாட்டிக் கொண்டவர்கள்
கோவிலின் வாசலில் கழற்றி விட்டு
உள்ளே நுழைந்து கொண்டார்கள்..
யாசிப்பவன்
களவு போகாமல் பார்த்துக் கொண்டான்...
அவர்களோடுவே
காரிலும் ஏறிக் கொண்டன செருப்புகள்...
மது விடுதிக்குள் நுழைந்தவர்கள்
அவற்றையும்
கூடவே அழைத்துச் சென்றார்கள்...
மிஞ்சிய போதையில்
செருப்புகளால்
அடித்துக் கொள்ளவும் செய்தார்கள்...
காரிலேறி பயணப்பட்டபோது...
செருப்புகள்
கால்களை விட்டுத் தொலைந்து போயின.

-முகமது பாட்சா*
19/09/2019
--------------------------------------------------------
நீ போட்ட புள்ளிகளில்
பிரச்சனைகள் வளையமிட்டிருக்க
அழகான கோலம் என்று
ஒருவன் கடந்து போகிறான்...
சன்னல் வழியே பூனையொன்று
எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது!

- முகமது பாட்சா
19/09/2019
----------------------------------------------------
சிறகுகளைப் பொருத்திக் கொண்டோம்
பூமி வானமாகவும்
வானம் பூமியாகவும் இடம் மாறிக் கொண்டது
முத்த மைகளை நிரப்பி
புத்தகங்களை அச்சிடத் தொடங்கினோம்...
சங்கீர்தம் கூட்டி
பாட்டுகளை மெட்டுக் கட்டினோம்
பசியின் விரகம் மூளையைச் சுவைக்கக்
கடித்துக் குதறி மிருகமானோம்...
கனவை உதறி எழுந்த போது
இருவரும் இங்கே இறந்து கிடந்தோம்.

- முகமது பாட்சா*
20/09/2019
----------------------------------------
ஒரு சொல்லிற்கும்
மறு சொல்லிற்கும்
எவ்வளவு இடைவெளி இருக்கலாம் என்பதை
ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்...
இடைப்பட்ட தூரத்தை
நீ மௌனம் என்று சொல்கிறாய்...
காற்று நுழைந்து பேசிக்கொண்டிருப்பதை
அதன் அசைவுகளால்
நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்...
இடைவெளி என்பதே
இல்லாதவொன்றுதான் என்பது
யாருக்கும் புரிவதில்லை...
இட்டு நிரப்பாத இடைவெளிகளில் உட்கார்ந்து
சாத்தான் சங்கீதம் வாசிக்கிறான்...
எழுதாத பக்கங்கள்தான்
எப்போதும் நிறைந்திருக்கின்றன என்பது
சூபிகளின் சூத்திர மொழி...
நாம் நிரப்பாத சொற்களின்
இடைவெளிகளை நிரப்பி நிரம்பி வழிவது
நரகமாகவும் இருக்கலாம்..
நாளையென்பதே
இன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டால்
இடைவெளிகள் எப்போதும் இருக்காது.

- முகமது பாட்சா*
21/09/2019
-------------------------------------------------------
கீழடியில்
நாகரீகத்தை அகழ்ந்து ஆய்ந்து
தேடிக் கொண்டிருக்கிறோம்
ஆட்சியாளர்கள்
படிமங்களையெல்லாம்
நிலங்களுக்குள் தோண்டி
புதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்..
மண்ணுக்குள் புதைந்த நாகரீகம்
வெளிவரவர மூளைகளுக்குள்
களி மண்ணையள்ளி நிரப்பிக் கொண்டவர்கள்
கடவுள்களைத் தேடி
ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்..
அவர்கள் புரள்வது சாக்கடையென்று
அவர்களுக்கே விளங்கவில்லை..
சிந்துவெளி நாகரீகத்தைத்
தூக்கிச் சுமந்தவர்கள்
இன்னமும் தோண்டினால் அதனடியில்
ஆரிய நாகரீகம் இருக்குமென்பது
அவர்களின் ஆறுதலாக இருக்கிறது...
அரசியல் நாகரீகம் அறிந்தவன் தமிழன்
அவன் காலடி மண்கூட
பகுத்தறிவு பேசும் என்பதை
வைகைக்கரை நாகரீகம்
இன்று பேசத் தொடங்கியிருக்கிறது....
இனி உங்களின் வரலாற்றில் எழுதிக்கொள்ளுங்கள்
தமிழன் நாகரீகம் திமிரானதென்று

- முகமது பாட்சா*
22/09/2019
-----------------------------------------------------
தற்கொலைக்கான குறிப்புகளைப்
படித்துப் பார்த்துச் சரி பார்த்துக் கொண்டான்
பூனை மெதுவாக
உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது...
அதற்கு மது என்று பெயர்வைத்தான்..
ஓபியம் வளையம் போட்டு
அவன் நாசிக்குள் நுழைந்தவுடன்
காட்டிற்குள் தனியானான்...
கைகளில் இரத்தமாக மிளிர்ந்தாள்
கத்தியை நாக்கில் துடைத்தவன்
கதவைத் தள்ளி வந்தவளிடம் மிருகமானான்
காசு கொடுக்காமல் விரட்டினான்..
அவள் வசைகளை வாங்கி
கசக்கிக் கஞ்சாவாகக் குடித்தான்..
கழுகொன்று
மூளையைக் கொத்திக் குதறியது...
ஈடிபஸ் அழுது கொண்டே சிரித்துவிட்டு
சாகாதே என்றான்
இன்னொரு கொலைக்காக
இப்போது விடியலுக்குக் காத்திருக்கிறான்...
நேற்று கொல்லப்பட்டவள்
சமையலறையில்
ஆவிகளோடு போராடிக் கொண்டிருந்தாள்...

- முகமது பாட்சா*
23/09/2019

--------------------------------------------------------------------
காற்று நகர்த்தும் படகில்
காதலையும் நகர்த்துகிறது
கலயத்தில் மிஞ்சியிருக்கும் சோறு...
பார்த்துக் கொடுத்த முத்தங்கள் துள்ளிவிழ
வலையில் சிக்கியதெல்லாம்
அவளின் பார்வைகள்...
போர்த்திக் கொள்ள நினைவுகளிருப்பதால்
போர்வைகள் தேவைப்படவில்லை..
காற்றின் உப்புதான்
அவள் தேகத்தின் வாசம்...
அவன் முத்தெடுத்துக்கொள்ள
மூர்ச்சையாகிக் கிடக்கிறது கடல்...
அலையில் ஒதுங்குகிறது
கடலெழுதிய பெரும் கதையொன்று...
காத்திருக்கிறாள்
அவனையே விழுங்கிய மீன்வாசக்காரி.

- முகமது பாட்சா*
24/09/2019
--------------------------------------------------------
யானந்தாவின் ஆனந்தம்

கைகளை உயர்த்தியதும்
பரவசம் பக்தியாகி வழிந்து கொண்டிருந்தது..
உத்ராட்சங்கள்
தங்கப் பூணூல்களை அணிந்து கொள்ள...
சந்தனம் தேகத்தில் சங்கமித்துதிர
சாம்பிராணி வளையமிட்டு உள்ளே நுழைகிறது...
தேவலோக பிரம்ம்ம்ம்மை
உச்சந்தலையில் நுழைந்து மூளையின்
நரம்புகளைத் திண்ணுக்கொண்டிருக்க...
அப்ஸரஸ்கள் வடித்த
கண்ணீர்களைச் சேகரித்து அபிஷேகிக்கிறார்கள்..
சுவாமி யானந்தா
சுவர்க்கம் காட்ட நுழைந்த வாசலில்
யோனிப்பூக்கள் பாதைகளை விரித்திருக்கின்றன...
கபால மரங்களில்
எழுதி வைத்த கதைகளில் உதிரும் இரத்தத்தைத்
தீர்த்தமெனப் பருக...
சாந்தி நழுவி தீயில் உருகிக் கொண்டிருப்பதை
மொழிப் பெயர்த்தவன்
பக்தி என்று முழங்கும் போது
கோவில்களின் கர்ப்பக் கிரகங்கள் ஆடுவதை
பூகம்பம் என்று
தயவு செய்து மொழி பெயர்த்து விடாதீர்கள்...

- முகமது பாட்சா*
25/09/2019

- போலி சாமியார்கள் மட்டும் கோபப்படலாம்-

விடுபட்ட கவிதைகள் 2

மழை
சாலைகளில் ஓடுகிறது...
வாய்க்கால்கள் வழிந்தோடி
குட்டைகளெல்லாம் நிரம்பி வழியக்
குளமொன்று தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
விரால் மீன்கள் துள்ளுகின்றன...
நீந்துவதற்கு ஆடைகள் களைகிறேன்..
குளம் கடலாகி
அலைகள் உயரம் எழுப்புகின்றன...
நீந்துவது நானில்லை...
மேகங்கள் இருட்டாக நகர்கின்றன...
மழை வருவதற்கு வாய்ப்புண்டு என்றாலும்
நிலத்தை
அஃது எவ்வாறு தேடும்?

-முகமது பாட்சா*
18/09/2019
-------------------------------------------------------

கடலை
காகம் அருந்திவிட்டதாகப்
புனைவொன்றை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
சாத்தியமில்லைதான்
விரல் ரேகைகளில் விதி ஓடுவதாகவும்
நிழல் சாய்வுகளில் நிஜமிருப்பதாகவும்
புனைதல்களை
நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் போது
கடலை மட்டும்
நான் புனைந்த காகம்
ஏன் குடித்துவிடக் கூடாது?
கடலை குடித்த காகத்தைப் பார்த்துத்தான்
இருட்டென்று ஒரு புனைவை
இப்போது
நீங்கள் இட்டுக் கட்டுகிறீர்கள்
உங்களின் விருப்பம் போல்
இனி இதனைத் தொடருங்கள்...
என் காகம்
உங்களின் வானத்தைச்
சாப்பிட்டு விட்டு ஏப்பம் விடும் முன்பாக...

- முகமது பாட்சா*
19/09/2019
----------------------------------------------------------------

விடுபட்ட கவிதைகள் 1

கோடுகளைப் போட்டு
இதுதான் ரோடுகள் என்றீர்கள்
வியப்பாகப் பார்த்தோம்
நீங்கள் கைதட்டச் சொன்ன இடங்களில்
கைகளைத் தட்டினோம்...
புதிய இந்தியா என்று பெயர் வைத்தீர்கள்
கிராஃபிக்ஸில் கண்டு களித்தோம்
வீட்டிற்குள் நுழைந்தோம்
அடுப்படியைக் காணோம்
தேடிக் கொண்டிருக்கும் போது
ஆகாசத்தில் ராக்கெட் என்றீர்கள்
அண்ணாந்து பார்க்கும் போது
திருவோட்டைக் கொடுத்துவிட்டு
தேசம் திருந்திவிடும் என்கிறீர்கள்...
யாரிடம் நாங்கள் பிச்சைக் கேட்பது?

- முகமது பாட்சா*
05/09/2019

-------------------------------------------------------------------------
தங்கத்தின் விலை
தாவிக் கொண்டிருக்கிறது...
டாலர் நிகர் மதிப்பில்
நாங்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்
சாலைகள் சரியில்லையென்றாலும்
அபராதம் கட்டுவது நாங்கள் மட்டுமே ...
நீங்களொரு
புண்ணாக்கும் விற்றதில்லை
புடுங்கிக் கொள்ள
வரிகளுக்குப் பஞ்சமில்லை...
ஆலைகளை மூடிவிட்டு
ஆயுதங்களை வாங்குகிறீர்கள்...
அடுத்த வேளைக்கே
ஆகாரம் இல்லையென்கிறவன்
ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...
சந்திரயான்
நிலவில் இறங்குவது பெருமையே....

- முகமது பாட்சா*
06/09/2019
----------------------------------------------------------------
இருட்டுக்குள்
வெளிச்சம் ஊடுருவுகிறது
வெளிச்சத்தை
நிறங்கள் பிரித்துக் கொள்கின்றன
நான் நிழலாக
விரிந்து கொண்டிருக்கிறேன்...

- முகமது பாட்சா
09/09/2019

-------------------------------------------------------------------
மீன்களுக்கு நீந்த
கடல் கற்றுக் கொடுக்கிறது
கரையில் அமர்ந்திருக்கிறேன்
காற்று என்னைச் சுவாசிக்க!

- முகமது பாட்சா
----------------------------------------------------
நான் கனவுகளை
மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது
ஒருவன் கானல் நீரில்
குளித்துக் கொண்டிருந்தான்

- முகமது பாட்சா
-------------------------------------------------------
ஏன்? எதற்கு? எப்படி?
என்ற வாசல்கள்
எப்போதும் திறந்தே கிடக்கும்
நுழையும் வரை
மூளை இறந்து கிடக்கும்

- முகமது பாட்சா
-------------------------------------------------------
இருட்டிற்குள் நுழைந்ததும்
போர்வைக்குள் முடங்குகிறது அச்சம்
விளக்கை ஏற்றாதவன்
வெளிச்சத்தைத் தேடுவது கற்பனை
பறவைகள்
கவலையுடன் விழிப்பதில்லை
அதன் சிறகுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது நம்பிக்கை
தொடக்கம் என்பது
இதயத்திலிருந்து தொடங்குகிறது..
கண்களைக் கட்டிக் கொண்டாலும்
கால்களுக்கு நம்பிக்கை வேண்டும்...

- நட்புடன்.....முகமது பாட்சா*

-------------------------------------------------
இரவை
விழுங்கிய பிறகுதான்
பகலையே துப்புகிறது
பொழுது...

முகமது பாட்சா*
------------------------------------


Wednesday, 4 September 2019

போதி மரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

இருளுக்குள்தான்
வெளிச்சம் நிறைந்திருக்கும்
விதைக்குள்ளிருக்கும் விருட்சத்தை
யார் வெளிக் கொணர்வது?
கேள்விகள் இல்லையென்றால்
உலகம் சுருங்கிப் போகும்...
விடைகளைத்தேடும் போது
வெளிச்சம் காட்டுகிறான் ஆசிரியன்..
அட்சரம் சொல்லிக் கொடுப்பவனே
ஆகாசப் புன்னகைக்காரன்
நிழலை மறந்தவன்
கோடாரியோடு அலைகிறான்...
போதி மரம்
வகுப்பறைக்குள்தான் உட்கார்ந்திருக்கும்
வாசல் கதவு திறக்கும் போது
வருகின்ற காற்று வரவேற்பு வாசிக்கும்
நீ எதுவாகவும் இரு
உன் சின்னப் புன்னகையை
அந்தப் போதி மரத்திற்குச் சாத்திவிட்டு

- மு.முகமது பாட்சா*
05/09/2019

Tuesday, 3 September 2019

ஆப்பு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

CAR என்ற வாகனங்களின் கீழ் 
புழுக்களாக நகர்ந்தவர்கள்... 
HELICOPTER என்ற 
வாகனத்தைப் பார்த்து 
நமஸ்காரம் போட்டார்கள் ... 
எஜமானியின் காலழுக்கை 
தீர்த்தமென்று சிலாகித்தவர்கள் 
வேசம் கலைத்து 
நாகமாக மாறி நஞ்சுதறி நகர்ந்தபோது... 
விடியல் பிறந்ததாக 
வானசாஸ்த்திரம் பிரமமெழுதியது... 
சாத்தான் 
ஆயக்காலை அகலமாக்கி 
தேரின் சக்கரத்தில் 
ஆப்பு வைத்த போது மீண்டும் அவர்கள் 
CAR என்ற வாகனங்களின் கீழ் 
புழுக்களாக நகர... 
'நாய்கள் நக்கித்தான் குடிக்குமென்று' 
பரதேசியொருவன் 
பாடிக் கொண்டே செல்கிறான். 

- முகமது பாட்சா*
03/09/2019

Monday, 2 September 2019

தீஞ்சல் வாசனை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ஆளுக்கொரு பக்கம் 
ஓடிக்கொண்டேயிருக்கிறோம்... 
அவரவர் வேலைகள் 
அவரவர்களை விரட்டிக் கொண்டிருக்கிறது 
எங்கும் ஹாரன் சப்தங்கள் 
கஸ்மாலம் பாத்து போ வசைமொழி 
எக்ஸ்கியூஸ் மீ கெஞ்சல்கள் 
ஸாரி என்ற அவசரத்தில் வருத்தம் 
எல்லாவற்றிலும் வறுந்து பொரிந்து 
முறுகலாக உள்ளே போனதும் 
எல்லோரும் ஹாரன் சப்தங்களோடுவே 
பேசிக் கொண்டிருக்கிறார்கள்! 
அறை முழுவதும் ஒரே தீஞ்சல் வாசனை.

- முகமது பாட்சா*
02/09/2019

Sunday, 1 September 2019

தூங்கா இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஒவ்வொரு இரவிலும் 
ஏதாவதொன்று நிகழ்ந்து விடுகிறது... 
இப்போதெல்லாம் கனவுகள் காண்பதற்குக் 
கண்கள் அனுமதிப்பதில்லை... 
நாளை வந்து 
மண்டைக்குள் அமர்ந்து தொணதொணக்கிறது 
சாத்தானின் சங்கீதக் கீர்த்தனங்கள் 
ஒவ்வொன்றாக வந்து இசைக்கின்றன 
விடியலுக்கான அச்சத்தை 
விழிகள் சுமந்து கொள்ள.. 
சுவரில்லாத வீட்டில் திருடர்கள் 
எப்போதும் 
கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்... 
எழுத்தாணியை 
மூளைக்குள் சொருகிவிட்டு 
எழுதி வைத்த கவிதைகள் ஒப்பாரி வைக்கின்றன 
இனிமேல் இங்குத் 
தூங்காமல் இருக்கிறவன்தான் ஏழை...

- மு. முகமது பாட்சா*
01/09/2019

விபச்சாரி என்றே...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

விபச்சாரி என்றே 
மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள் 
இரவில் 
அப்படி வாசிக்கத்தான் 
உங்களின் மொழிக்கூறுகளை 
நன்றாக வளைத்து வைத்திருக்கிறீர்கள்... 
பிறப்பின ஆவணங்களில் 
கறை படிந்த உதிரப்பெருக்காய் 
ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறது 
தீட்டு... 
சுவையுருட்டு நாக்குகளின் எச்சில் 
புணர்கிறது 
மிச்சமிருக்கும் சதைத் துண்டங்களை 
எழுதாத விதியில் 
கொடியொன்றைக் கையில் கொடுத்து 
விடுதலை என்றீர்கள் 
நீங்கள் அதில் கட்டியிருப்பது 
எங்களின் கறைபடிந்த ஜட்டிகளைத்தான் 
நீங்கள் திருந்தப் போவதில்லை 
விபச்சாரி என்றே 
மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள் 
இரவில் 
அப்படி வாசிக்கத்தான் 
உங்களின் மொழிக்கூறுகளை 
நன்றாக வளைத்து வைத்திருக்கிறீர்கள்...

-மு. முகமது பாட்சா*
31/08/2019

யாருக்கு என்ன இலாபம்?



எதையாவது 
பேசியாக வேண்டும் என்பதற்காகவே 
அவர் பேசியிருக்கலாம்...

தோசையில் 
நெய் குறைவுதான் என்றாலும் 
சட்னியை 
இரண்டாவது தடவையாகக் கேட்டேன்

எல்லோரும் கை தட்டினார்கள் 
வேறு வழியில்லை 
நானும் சேர்ந்து கை தட்டினேன்

பக்கத்து டேபிளில் 
போண்டா அழகாக உருண்டு கொண்டிருந்தது...

விழாவிற்கும் 
பேச்சிற்கும் சம்பந்தமேயில்லை... 
அவரை மேதை என்று புகழ்ந்தார்கள்...

வேற எதாவது வேணுமா சார்? - சர்வர்

காஃபி இங்கு நன்றாக இருக்கும் 
ஆர்டர் செய்தேன்...

அவையை விட்டுக் கிளம்பும் போது 
சுயமிகள் அதிகமாக எடுத்துக் கொண்டோம்... 
அவரது புன்னகை 
காலரைத் தூக்கி விட்டுக் கொண்டது

பில்லோடு 
சர்வருக்கு 20 ரூபாய் டிப்ஸ் வைத்தேன்... 
சேவை நன்றாக இருந்தது...

என்னதான் பேசினார் என்று 
இப்போது வரை ஒன்றும் புரியவில்லை

யாருக்கு என்ன இலாபம்?

- மு.முகமது பாட்சா*
31/08/2019

அண்டத்தின் சூடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

அண்டத்தின் சூடு அகன்றெழுகிறது 
அனாகதவெடுப்பாக அலைகள் உருள்கின்றன 
நீள்வழிப்பாம்பென 
அடரும் சூதின் மொழி வாய் அகலிக்க... 
அனாந்திரவெளி உலவும் 
தேசாந்திரியின் பாடல்களில் சொற்பிழை... 
போன்சாய் குடில் விக்கிரகம் 
போதி மரத்தின் பிம்பம் விரித்துப் படர 
நகர்சாலைகளின் குருதி வெட்டில் 
அலைப்புறும் தாகத்திற்கு 
குறுத்த முலையாள் பிழிந்த வியர்வையில் 
காட்சிப்படிமமாய் 
கசிந்துருகும் அந்த ஓவியத்தின் கீழ் 
இருக்கும் பெயர் இந்தியன்.

- முகமது பாட்சா*
30/08/2019


எதையாவது பேசவேண்டும் என்றே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
நானும் 
எதையாவது கேட்க வேண்டுமே என்று
கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
இரண்டுமே 
உருப்படியில்லாத விஷயங்கள்தான்.

- முகமது பாட்சா*
30/08/2019

பள்ளி வாசலுக்குள்
இருந்த நிம்மதி
செருப்பு தொலைந்த இடத்தில்
தொலைந்து போனது...
யாசிப்பவனுக்கு என்ன தெரியும்?
அவன்
என்னிடம்தான்
கையேந்திக் கொண்டிருக்கிறான்.

- முகமது பாட்சா*
30/08/2019

சீர்கள் பிரித்துச் சந்தம் வைத்து 
எழுதிய கவிதையில் 
'மனைவி 
அடிக்கடித் திட்டுகிறாள்' என முடித்தான் 
குழந்தை 
பாலுக்காக அழுது கொண்டிருந்தது.

- முகமது பாட்சா*
30/08/2019


மரணமொன்றும்
அத்துணை சுத்தமானதல்ல...
சவப்பெட்டி செய்தவனின் விரலில்
சிகரெட் புகையும்
வாயில் பிராந்தி வாசமும் வீசுகிறது
பூக்களைத் தொடுத்தவன்
பான்பராக்கை
அடிக்கடி துப்பிக் கொண்டிருந்தான்..
மூச்சு மட்டும் இருந்திருந்தால்
காற்று வரட்டும் கலைந்து போங்கள்
என்று கத்தியிருப்பான்...

- முகமது பாட்சா*
30/08/2019

சிந்தனைகளைச் சோழிகளில் உருக்கி 
உருட்டிக் கொண்டேயிருந்தான்.. 
வடக்கே போகவேண்டுமென்றால் 
தெற்கைக் காட்டியது... 
கோழி சாப்பிட நினைத்தவனைக் 
கொக்கு சாப்பிடப் பணித்தது... 
நடக்க மறந்த போது 
சோழிகளை உருட்டிக் குறி கேட்டான் 
அனைத்தும் கவிழ்ந்து கிடந்தன.. 
பார்ப்பதற்கு 
அவனது மூளை வெடித்துச் சிதறி 
இறைந்து கிடந்ததுபோல் இருந்தது.

- முகமது பாட்சா*
31/08/2019

Popular Posts