Friday, 30 June 2017

அதன் கதை

Image may contain: bird

அந்தப் பறவைக்கும் 
எனக்குமான உரையாடலில் 
யார் யாரோ வந்து போகிறார்கள்! 
காலொடிந்து வீழ்ந்தக் கதையை 
அழுகையோடு சொல்கிறது 
அந்தப் பறவை ! 
நானும் என் துயரக் கதைகளை 
அதனிடம் சொல்லி வைக்கிறேன் ! 
எங்களின் நட்பு 
கால் குணமாகும் வரை நீடிக்கலாம் ! 
பறந்துச் சென்றபின் திரும்பி 
வரலாம் ! வரமாலும் போகலாம் ! 
என் கதை அதனிடமும் 
அதன் கதை என்னிடமும் 
ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் 
பாரங்களை 
கழற்றி வைத்த நிம்மதியோடு ! 

- மு.முகமது பாட்சா

அவள்-அவன்-கவிதை

Image may contain: one or more people

'அவன்' என்றெழுதி 
கவிதையைத் தொடங்கி வைத்தேன்... 
அதில் வந்து 'அவள்' 
அமர்ந்துக் கொள்கிறாள் ! 
காதல் வார்த்தைகளில் 
கவிதை மெல்ல நகர்கிறது... 
நிலாவும் பறவைகளும் 
தேவையில்லாமல் 
வந்து போகின்றன ! 
தேங்கும் குளத்தில் 
சிறு கல்லொன்று விழ... 
ராட்சசப் பறவை யொன்று 
அவளைத் தூக்கிச் செல்கிறது ... 
அவள் உறவுகளாக இருக்குமென 
ஒருவன் சொல்லுகின்றான் ! 
சாதியத்தின் விழுமியம் 
உருமாறி வந்திருப்பதாய் 
மற்றவன் வந்து 
சேர்ந்து கொள்கிறான் ! 
நாங்கள் மூவருமாய் 
அவளைத் தேடிப் போகிறோம்... 
பொது ஜன வெளியி லவள் 
இரத்த வெள்ளத்தில் 
மிதந்துக் கிடக்கிறாள்... 
கவிதையைக் 
காற்றில் பறக்க விடுகிறேன் 
அவள் மேல் வந்து ஒட்டிக் கொண்டு 
வெளி வர மறுக்கிறது ! 
இரத்தக் கறையுடன் 
கனவுகளைத் தொலைத்து 
அவளும் என் கவிதையும் அந்த அவனும்! 

- மு.முகமது பாட்சா

சின்னதாய்



குப்பைகளாக நெகிழிகள்
கூட்டித் தள்ளுகிறது காற்று
மூச்சு விடுகிறது மரம்
       
              ***

காத்திருக்கும் பூக்கள்
தேன் குடிக்காத ஈக்கள்
காணவில்லை தேன் கூடு!

                ***

- மு.முகமது பாட்சா

பாசாங்கு

Image result for காதல் கசிந்து கருப்பு வெள்ளை painting

கள்ளச் சிரிப்பில் வழி கள்ளும் 
மெல்லத் திண்ணும் பார்வையும் 
சொல்லி லடங்கா மொழியும் 
பள்ளம் தோண்டும் கவிதையை ! 
பார்க்காதே ! 
நீயும் பாசாங்கு காரிதான்!

- மு.முகமது பாட்சா

காதல் ஆசை

Related image

அழகாகத்தான் இருக்கிறாய் 
காதலிக்க ஆசைதான்
ஆனாலும்...
அறுவாள் வைத்திருப்பாயா?
ஆசிட் வைத்திருப்பாயா?

-மு.முகமது பாட்சா

எங்கும் காதல்


Image result for காதல் கசிந்து கருப்பு வெள்ளை painting

நான் உன்னுடன் இருக்கிறேன் 
நீ யாருடன் இருக்கிறாய்' 
நாடோடியின் பாடலொன்று 
கடந்து போகின்றது... 
காதலின் மொழி 
காற்றில் கலந்து கிடக்கிறது, 
சன்னலைக் கடந்து போகும் 
பார்வையெல்லாம் 
காதலே இல்லையென்று 
விதவையின் பாடலொன்று 
விசும்பலில் ஒலிக்கிறது 
மேய்ப்பனின் புல்லாங்குழலில் 
யாரை அழைக்கிறது அந்த இசை, 
திருடிய வார்த்தைகளை 
திருப்பித் தருவதிலும் ஒரு சுகம், 
காதலரின் பார்வைகளுக்குள் 
பதுங்கிக் கிடக்கிறது 
காதலின் கவிதைகள், 
துருவிய வார்த்தைகளாய் 
தூவிடும் மழைச் சாரலாய் 
எங்கும் காதல், எதிலும் காதல்.

- மு.முகமது பாட்சா

Thursday, 29 June 2017

உதிரங்களின் கதை

Related image

கிழிந்த இதயங்களோடு 
அலைந்து கொண்டிருக்கிறோம், 
வழியும் உதிரத் துளிகளின் கதைகளை 
யார் யாரோ 
எழுதிக் கொண்டிருக்கிறார்கள், 
நடந்து போகும் பிணங்களை 
நீங்கள் இங்குதான் பார்க்க முடியும், 
திருடப்பட்ட அடையாளங்களை 
பக்குவமாகச் சிதைக்கிறார்கள், 
அவர்களின் கைகளில் தேசியக் கொடியும் 
சட்டைகளில் காந்தியின் படமும்... 
காந்தியைச் சுட்டத் துப்பாக்கி 
இப்போது நிறையத் 
துப்பாக்கிகளை ஈன்றிருக்கிறதாம், 
கோட்சேக்கள் தங்களின் பெயர்களை 
காந்தியென்றே மாற்றிக் கொண்டார்கள், 
இலக்கென்னவோ இஸ்மாயில்களும் 
அப்துல்லாக்களும்தான், 
மனுதர்ம வாசல்கள் திறக்கப்பட்டு 
தலித்துகளின் 
கைகளில் விலங்கிடப் படுகின்றன, 
மாடுகளைத் தெய்வங்களாக்கியவர்கள் 
மனிதர்களை 
மேய்க்கத் தொடங்கி விட்டார்கள், 
விதைகள் இல்லாமல் போனாலென்ன... 
வேர்கள் பெரும் மூச்சு விடுகின்றன... 
மற்றுமொரு வனத்தை 
மறைமுகமாய்ப் பிரசவிக்க. 

- மு.முகமது பாட்சா

நாறப் போகுது...



Related image

"நேத்து வரை
நல்லாதான் இருந்தார்!
திடிரென்று மாரடைப்பாம்!
போய்,சேர்ந்துட்டார்!"
         
 "அடடா!அப்படியா?!
           எப்ப,எடுக்கப் போறாங்க?"

"சேர்த்து வைச்ச சொத்து,
பத்துத் தலமுறைத் தேறும்!
பாவம் மனுசன்,
பட்டென்று போயிட்டார்!"
             
 "என்னச் செய்யிறது,
              எப்ப எடுக்கப் போறாங்க?"
"அதோ...ஆடி யில வர்ராரே
அவர்தான்,அவர் மகன்!
பார்த்து பார்த்து வளர்த்தாரு?
பார்க்காம போயிட்டாரு!"
            
  "அதுக்கு,என்ன பன்றது?
              பொணம் நாறிடப்போகுது,
              எப்ப எடுக்கப் போறாங்க?"
"பதவியிலே யிருந்த போது
மதிக்க மாட்டான்!
கால்லே விழுந்தாலும்
கண்டுக்காம போயிடுவான்!"
              
 "சீக்கிரம்,எடுக்கச் சொல்லுங்க
                பொணம், நாறிப் போகும்!"
"ஆடம்பரமா வாழ்ந்த மனுசனை
அம்மணமாக்கி,
ஒத்தை துணியோடு
மொத்தமா சுருட்டிட்டாங்க!"
                
 "எல்லாருக்கும் அப்படிதான்!
                  வேலை நிறைய இருக்கு,
                  விரசா வாங்க!"

- மு.முகமது பாட்சா

மறந்து போன சுவாதி

No automatic alt text available.

வெட்டி வீழ்ந்துக் கிடக்கிறாள் ஒருத்தி,
தென் நாட்டில் இறந்ததால் 
அவளின் பெயர் சுவாதிதான், 
சுற்றி நகர்ந்தப் பயணிகள் மட்டும் 
வட நாட்டுக் காரர்களாக 
மாறிப் போனார்கள்! 
இரக்கமென்பது வரலாமா? வரக்கூடாதா? 
என்ற கேள்விக் குறிகளோடு 
ஒரு சில கண்ணீர்த் துளிகளும் 
பிணத்தி னருகில்! 
அவளின் அகோர மரணத்தின் மீது 
நம் கண்ணீர்த் துளிகளும் கலந்திருக்க 
நியாயமில்லைதான் ! 
கருணைக் கூட இல்லாமல் நகர்ந்தது, 
காவல் துறையும் ஆய்வுதான் செய்தது,
சிலரை வச்சியும் செய்தது... 
சாதி கடந்த வெறியின் உச்சியில் 
வெட்டிப் போட்டவன் சுற்றி நின்றே 
வேடிக்கையும் பார்த்திருக்கலாம்,
காவல் துறையிடம்
கை குலுக்கியும் பேசியிருக்கலாம், 
பூணூல் போட்ட  கூட்டம் மட்டும் 
தொப்பிப் போட்டவனாய் தேடிப் பார்த்தது, 
கழுகுகள் 
அங்கே இல்லையென்று யார் சொன்னது? 
அரசியல் செய்ய தேவை படுகிறது 
படுகொலைகளில் வீழ்ந்தப் பிணங்கள்,
செத்தபிணத்தை 
சுட்டுத் திண்ண ஏன் இத்தனை ஆவல் ?
இங்கே நிர்பயாக்கள் இறப்பதில்லை 
நீதிக் கிடைப்பதற்கு,

- மு.முகமது பாட்சா

Wednesday, 28 June 2017

சின்ன சின்னதாய்

Image result for flex men painting

கவிதையென்று 
சொன்னாலும் சொல்லுங்கள்... 
கதையென்று 
சொன்னாலும் சொல்லுங்கள்... 
மூச்சிருக்கும் வரைதான் 
முகவரிகள்! 

        000

சாகும் போது,ஒருவன்
"சங்கரா!சங்கரா!" என்றான்
சங்கரன் கேட்டான்,
"உனக்கு என்ன 
வரம் வேண்டும் கேள்?"
"சந்தானத்திடம்
கொடுத்த கடனை
திருப்பி வாங்கியப் பிறகு;
சச்சிதானந்தத்திடம்
வாங்கிய கடனைக்
திருப்பி  கொடுக்கும் முன்பாக
என் உயிரைப் பறித்துவிடு!

              000

கூர்மையான ஆயுதம்
குத்துபட்டது இதயம்
வலிக்கிறது வார்த்தை..

                 000

சாக்கரட்டீஸின் கையில்
விஷம் நிறைந்த கோப்பை
சுற்றிலும் கற்கால மனிதர்கள்..

                   000

- மு.முகமது பாட்சா

நகராத வனம்


Image result for model forest painting

பாலித்தீன் தாவர 
இலை நுனிகளின் மேல் 
பாலியோவின் 
நெகிழாப் பனித் துளிகள், 
கரையாத காகங்கள், 
நகராத நரிகள், 
மாடல் வனத்திலும் 
மகிழ்வுறா விலங்குகள், 
பைபர் கொடிகளில் 
தாவாத குரங்குகள், 
அசையாத வனத்திலும் 
கொய்யாத கனிகள், 
ஓடாத நதியில்
பாடாத தவளைகள்,
அழகாய் ஒரு போதி மரம், 
அமைதியான புத்தர்... 
காலம் 
நகராமல் நின்றிருந்தது 
காட்சிமைப் பொருளாய், 
நாளை என்பதுஉம் 
இப்படியே 
நகராமல் போகலாம், 
காட்சிகளின் பொருளாய் 
நாமும் அசையாமலிருக்க. 

- மு.முகமது பாட்சா

லைலா



Image result for laila majnu

இதழ் பிரிக்காத இரவொன்றில் 
நடந்து செல்கிறோம்... 
நிலவும் நட்சத்திரங்களும் 
எங்களையே 
பார்த்துக் கொண்டிருக்கின்றன, 
லைலா இறந்துவிட்டாளென்று 
சொல்கிறவர்கள் பைத்திய காரர்கள்... 
காயிஸாகிய நான் கவிதைகளில் 
அவளுக்காக உயிர் கொடுத்திருக்கிறேன், 
அவள் எப்படி இறப்பாள் ? 
என் இறந்த உடலைப் பார்த்து 
இனி யாரும் அழப் போவதில்லை... 
எனக்காக அழக் கூடியவள்தான் 
இப்போதும் 
என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறாள்... 

- மு.முகமது பாட்சா

Tuesday, 27 June 2017

நான் யார்?

Related image

வாசலைத் திறந்து வையுங்கள் 
காற்று அப்போதுதான் உள்ளே நுழையும், 
கண்ணாடியின் முன் நின்று 
புன்னகையை 
உங்களுக்குப் பரிசளித்தீர்களா? 
நீங்களே உங்களை நேசிக்காத போது 
மற்றவர் யார் உங்களை வாசிப்பார்கள் ? 
உலகமொரு நாடக மேடைதான் 
நடிப்பவர்கள் இங்கு அதிகம்... 
நாம் மட்டும் யார்? ஒரு கதாப்பாத்திரம்தான், 
அதை வடிவமைக்கும் உரிமை 
நமக்கு மட்டுமே இருக்கிறது..., 
கதவுகளைப் பூட்டிக் கொண்டு 
உட்கார்ந்திருக்கும் பொம்மையின் பெயர் 
எப்போதுமே பொம்மைதான், 
அவன் சரியில்லை,இவன் சரியில்லை... 
நாமும் சரியில்லைதான். 
கை குலுக்கவும் 
கட்டியணைக்கவும் தெரியாதவனிடம் 
உறவுகள் மட்டும் 
எப்படி ஒட்டிக் கொண்டே தொடரும்? 
நிலை வாசற்படி இடிக்கிறதே என்றால் 
குனிந்துதான் போகவேண்டும், 
கைகளை விரித்துச் சுவாசிக்கத் தெரியாதவன் 
எப்போதுமே சுயம் பேசி 
அழுக்குகளைச் சுமந்து கொண்டே திரிகிறான் 

- மு.முகமது பாட்சா

Sunday, 25 June 2017

ஈத் முபாரக்

Image result for eid mubarak image tamil

வானில் பிறை தெரிந்தது 
விடைபெறும் மாதத்திற்கு 
ஒரு மகிழ்வான 
தருணத்தைப் பரிசளிக்கிறோம், 
நேசிப்பை சுவாசித்துக் கொண்டோம், 
தர்மத்தின் பக்கம் நீளும் கைகளுக்கு 
விலங்கினை உடைத்தோம், 
பசியுணர்ந்தோம், 
ஏழைகளுக்குப் பரிசளித்தோம், 
வெளிச்சப் புள்ளிகளில் உட்கார்ந்து கொண்டு 
வாழ்த்துகள் கூறுகிறோம் 
வாழ்த்துகளை வாங்கிக் கொள்கிறோம், 
எங்கும் ஒலிக்கிறது 'ஈத் முபாரக்" 
மகிழ்வின் வேளையில் நறுமணம் கமழ்கிறது, 
ஆனாலும் ஒரு கரும் புள்ளி 
நகர்ந்து நகர்ந்து எங்களை இம்சிக்கிறது.. 
எங்களின் உணவுதட்டுகளைப் பறிக்கிறது, 
எங்களின் சோதரர்களின் உதிரங்களை 
பசுப் பாதுகாப்பென்று குடிக்கிறது... 
அமைதியைத் தழுவி கொள்கிறோம்... 
இயலாமையல்ல 
எங்களுக்கான குரலாய் ஒலிக்கும் 
நட்புகளின் மாண்புமிகும் நேசத்திற்காக... 
நட்புகளே வாழ்த்துகள் 
தர்மம் என்றும் தழைக்கட்டும்... 
அதர்மத்திற்குத் தலைகுனிவு 
வெகு விரைவில் கிடைக்கட்டும்... 
மகிழ்வுடனே 'இனிய ஈகை திரு நாள் 
நல்வாழ்த்துகள்' 

- மு.முகமது பாட்சா

Saturday, 24 June 2017

சீசரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனல்ல

Image may contain: 3 people, people standing

சீசரின் மனைவி 
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளா ? 
ஆம், அப்படியே 
சீசரும் சந்தேகத்திற்கு உட்பட்டவன்தான் 
என்று எழுதுங்கள் என்ற குரல் கேட்டது... 
திரும்பிப் பார்த்தேன், 
கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள் 
அந்த ரோம் நகரத்து கயல்விழியாள், 
பெயரை போம்பியா என அறிமுகம் செய்தாள், 
ஒ..சீசரின் மனைவியா ? 
நான் இறக்கவில்லை, அவலம் என்னை 
இறக்கவிடவில்லை என்றாள்... 
பூப்லியஸ் க்ளோடியஸ் புல்ச்சரை 
உனக்குத் தெரியாதா? என்றேன்.... 
இதே கேள்வியைத்தான் 
சீசரும் என்னிடம் கேட்டான் என்றாள் 
பெண்ணென்றால் உங்களுக்கு 
படுக்கையின் பஞ்சணை விரிப்பா ? 
வேண்டுமென்றால் விரிக்கிறீர்கள் 
வேண்டாமென்றால் தூர எறிந்து விடுகிறீர்கள்..., 
அப்படியென்றால் அவன் ஏன் வந்தான்? 
சீசரே அனுப்பி வைத்தானா? 
குற்றமற்றவன் 
என்னைக் குற்றவாளியாக்கியது எப்படி ? 
கேள்விகளை அடுக்கினாள் 
சீசரின் விசாரணை மன்றம் முழுவதும் 
கிளியோ பாட்ராவின் மயக்கத்திலிருந்தை 
நீங்கள்தானே மறைத்தீர்கள் ... 
பெரிதான குற்றத்தை எடுத்து வீசினாள், 
அப்படியென்றால் நீ நிரபராதியா ? என்றேன் 
அவள் சிரித்தாள், 
அடக்கி வைத்த கண்ணீர் தீரும் மட்டும் சிரித்தாள், 
சீசரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனல்ல, 
சீசரைக் கொன்ற மார்கஸ் ப்ரூடஸ், 
சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் 
இவர்களுக்கு மட்டுமே உண்மை தெரிந்திருக்கும், 
அவர்களிடமும் கேட்டு பார் என்றவள், 
கண்ணீரைக் கவிதையின் மீது தெளித்துவிட்டு 
சந்தேகமில்லாமல் பறந்து விட்டாள்.

- மு.முகமது பாட்சா

Friday, 23 June 2017

துரத்தும் காதலி

No automatic alt text available.

அவள், என் காதலியாம்...
அவளேச் சொல்லிக் கொண்டாள்,
"ஆசைகளின் விளைச்சல் நான்.
உன்னைக் 
கழற்றிவிடுவேன்" என்றேன்
"உன்னால் முடியாது!;நான்,
இறுதி வரை
உன்னோடுவே யிருப்பேன்"என்றாள்,
"நான்,கர்வம் கொண்டவன்,
என் கர்வத்தால்;நீ
அழிவாய் என்றேன்"
உன் கர்வத்தை,நான்
நிச்சயம் அழிப்பேன்" என்றாள்
"அழகியாகவும் தெரிகிறாய்,
அரக்கியாகவும் தெரிகிறாயே...
நீ யார்" என்றேன்
அவள் சிரித்துவிட்டு
"நான் தான் உண்மையான
உன் மரணம்"என்றாள்.

- மு.முகமது பாட்சா

எழுதாதக் கவிதைகள்

Image result for plain paper with pen

எழுதாதக் கவிதைக்கும் 
இலக்கணங்கள் இருக்கிறதாம்,
எழுதாதக் காகிதமும் 
எழுத்தைத் தராதத் தூவலும் 
அதற்கு நிச்சயம் வேண்டும்,
விழிக்காத மூளையை 
கசங்காமல் உறங்கவைத்து ,
பொத்தகங்களைப் புரட்டாமல், 
பொதுக் கோபம் கொள்ளாமல், 
எது நடந்தால் நமக்கென்ன என்ற 
ஞானிகளின் இருமாந்த இருப்பு 
திண்ணமாய் வேண்டும்! 
முக்கியமாய் அடிக் குறிப்பிட்டு 
பெயரோ தேதியோ எழுதவே கூடாது, 
ஒருவேளை அதுவும் கவிதையாகலாம்,
குறிப்பாகத் தாள்களை 
கசக்கி விடாதீர்கள், 
அஃது உங்களை யொரு ஓவியராகவும் 
மாற்றிவிடக் கூடும் .

- மு.முகமது பாட்சா

வாழ்பவன்

Image result for கண்ணதாசன்

முத்தையாவிற்கு 
முகவரிகள் தேவையில்லை,
கண்ணதாசனாய் 
கவிதைகளில் வாழ்கிறான்,
சொல்லாட்சிகளின் 
செல்லப் பிள்ளையவன்,
பாமரன்களை 
பாட்டுக்குச் சொந்தமாக்கியவன்,
பட்டினத்தாரையும் 
ரசம் மாற்றிக் கொடுப்பான்,
கொக்கோகத்தையும் 
குளிர்வித்து தருவான்! 
யதார்த்தத்தை 
இறைத்துவிட்டுப் போகும் எளியவன், 
அவனுக்கு அந்தரங்கமும் 
அரங்கமும் ஒன்றுதான்,
சாவிற்கும் சாபமிட்டுப் பாட 
அவனுக்குத் தெரிந்திருந்தது,
அவன் பிறந்தது இன்று அல்ல 
1927... 
அவன் இறந்தது தெரியவில்லை,
கவிதைகளில்தான்
அவன்  இன்னமும் வாழ்கிறான்! 

- மு.முகமது பாட்சா

Thursday, 22 June 2017

கடவுளை பார்த்தவன்

Related image

கடலைக் குடித்துவிட்டதாக 
கர்வப் பட்டக் காகத்திடம் 
கடவுளைப் பார்த்தாயா? எனக் கேட்டார் 
அந்த மனிதர், 
கடவுளென்றால் யாரெனக் கேட்டது 
அந்தக் காகம்... 

மானையடித்த புலியிடம் கேட்டதற்கு 

மானுக்குத் தெரிந்திருக்கலாம் 
என்று சொன்னது புலி,

ஆபரணங்கள் குவித்த 

நங்கையிடம் கேட்டதற்கு 
கேள்விப் பட்டேன் ஆனால் 
பார்த்ததில்லையென்றாள்... 

ஐசுவரியங்கள் மீது அமர்ந்திருந்த 

ஆடவனிடம் கேட்டார், 
அவரென்ன விலையென்று 
சொல்லிவிட்டுப் போங்களென்றான், 

தொழுகையை விட்டுவிடாத 

தூயவரிடமும் கேட்டார்... 
தேடுகிறேன்...தேடுகிறேன் 
இன்னமும் கிடைக்கவில்லை என்றார் 

மலமள்ளி தூய்மை செய்யும் 

மனிதனிடம் மாண்புடன் கேட்டார்... 
பார்த்தேன் என்றான்... 
அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர், 

பசி மறந்த என் தாயின் 

புன்னகையில் என்றான்... 

அவர்கள் அவனைப் பார்த்து சிரித்தார்கள், 

கடவுள் அவர்களைப் பார்த்துச் சிரித்தான் .

- மு.முகமது பாட்சா

சிதறல்

Image result for தூக்கணாங்குருவி
0 விதைகளில்;யார்
உழவனின் உயிரை வைத்தது?

0 கைகேயின் வரத்தில்
சகினியின் தாயம் ஒளிந்திருந்தது!
சகுனியின் உருட்டளில்
கூனியின் தந்திரம் மறைந்திருந்தது!

0 அரசியல் பேசும் ஆலயங்களில்
கடவுள் இருப்பதில்லை!

0 தூக்கணாம் 
குருவிகளுக் கெல்லாம்
வீடு இருக்கிறது!
நமக்கும் ஒரு வீடு வேண்டாமா?

0 காக்கைகள்தான்,மனிதனுக்கு
சவத்தை அடக்கக் 
கற்றுக் கொடுத்ததாம்!
நிச்சயம் மனிதர்கள்தான்,
காக்கைகளுக்கு; திருடக்
கற்றுக் கொடுத்திருப்பார்கள்!

- மு.முகமது பாட்சா

கடவுள்கள் விற்பனைக்கு

Image may contain: water

கடை வீதியின் கடையிலோர் 
கடவுள்களை 
விலைக்கு வாங்கப் போனேன்,
விதவிதமாகக் கடவுளர்கள் 
வித்தியாசமான விலைகளில்,
சாத்தானும் 
விற்பனைக்கிருக்கிறான்,
செய்வினைக் கர்த்தாக்களுக்கு 
தேவைப் படுவானாம், 
குபேரனும் சிரிக்கும் புத்தரும்தான் 
விலையதிகம்,
செல்வம் கொடுப்பவர்களாம் ,
குபேரன் வட்டிக்குதானே 
பணம் கொடுப்பான்...? 
வாங்கும் விலைகளில் 
எந்தக் கடவுள்களும் காட்சியில் இல்லை,
வசதிதாரர்களுக்கு
மட்டுமே கடவுள் போலும்,
அங்கேயே ஆடித் தொட்டி யொன்றில் 
அழகானதாய்ச் சுற்றும் ஒற்றை மீன் 
ஒரு லட்சம் ரூபாயாம் ! 
வசதி தருவதற்காக வாஸ்துவானதாம்,
கடவுள்களை வாங்கினால் போதுமே 
ஐசுவரியம் தானாக வராதா? 
கடைக்காரன் இளக்காரமாய்ச் சிரிக்கிறான்,
கடவுள்களை வேண்டித் தரிசனம் கண்டு 
காரியம் வாங்கும் முன்பு 
ஆயுள் காரியம் முடிந்து விடுமாம்....
அப்படியும் இருக்கலாம் ,
கடவுள்களின் சக்திகளும் 
இப்போது கடைகளின் விற்பனையில், 
சரி ! திருஷ்டியாவது போகட்டுமென 
ஒற்றை ரூபாய்க்கு 
கருப்புக் கயிற்றை வாங்கிச் செல்கிறேன்,
விற்பவன் காது பட விமர்சிக்கிறான்...
அல்லது சபிக்கிறான்... 
"சாவுக் கிராக்கி காலங்கார்த்தால 
வந்து நமக்கென வாய்க்கிதுப் பார்,
தூங்கியெழுந்த மூஞ்சி சரியில்ல " 
காலையிலெழுந்தவுடன் அவனும் 
கடவுளின் முகத்தில்தானே விழித்திருப்பான் !

-மு.முகமது பாட்சா

உண்மையும் ஒரு நாள்



அந்துகத்தி லடங்கி நிற்கும் 
பெருங்களிறுச் சங்கிலியே பலமென 
ஞாபகத்திற் கொணர்ந்து மாவுத்தன் 
அங்குசத்தின் கட்டுப்பாட்டில் 
காலாட்டியே நின்று மொய்க்கும், 
ஈ யிற்க்கும் கொசுவிற்கும் காதுமுறமாட்டி 
விரட்டி வேடிக்கைக்காய் நின்று நகர்ந்து 
மாவுத்தன் கூவளிக்கும் தலையாட்டி 
பிள்ளைகளைத் தன் னபரத்திலேற்றி
கைந் நாகத்தி லாசிகள் வழங்கி 
அங்குலியில் தட்சனைகள் வாங்கி 
கொடுத்து ,கூனிக் குறுகி நுடங்கி, 
பசித்திடும் ஒவ்வொரு வேளைக்கும்
நெய்ம்மிதிக்கவளம் எதிர்பார்த்தே 
நிற்கும் அவ்வேளையிலும் பிடியின் 
நினைவுப் பிடித்தாட் கொண்டால் 
சிந்தனைக ளொருமித்து நிறுத்தி 
தன் பலமறிந்து அந்துகத்தை 
அறுத்தெறிந்துப் பாகனைத் 
தூக்கி மிதித்துக் கர்வமமாய்த் தலை 
நிமிர்ந்து நடக்கும் உண்மையும் ஒரு நாள்! 

- மு.முகமது பாட்சா

லைலத்துல் கத்ர்



Image may contain: night and sky

அழகிய இரவின் நறுமணத்தை 
நுகர்ந்தீர்களா ? 
பசித்திருந்தும் விழித்திருந்தும் 
செய்த துவாக்கள் 
பூக்களாய் சொறியும் ஓர் இரவு, 
திருமறையின் திருப் படிகள் 
பூமிக்கு இறங்கி வந்ததால் 
லைலத்துல் கத்ர் 
விடைபெறும் ரமலானின் 
அழகிய புன்னகைக்கும் இரவு, 
தர்மத்தை நியாயமாக்கிய மாதம் 
மனிதத்தைக் கண் காணிக்கிறது, 
புன்னகைக்கக் கற்று கொடுத்த மாதம் 
விடைபெறப் புன்னகைக்கிறது... 
இந்த இரவை அருந்திக் கொள்ளுங்கள், 
கற்றுக் கொண்ட நேசத்தை 
கழற்றி வைக்காதீர்கள்... 
தொழுகையும் இபாபத்தையும் 
விவாதங்களுக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள், 
அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லும் 
வாய்களில் 
அருவெறுப்பான பேச்சுகள் எதற்கு? 
நேசம் என்பது 
இறைவனை நேசிப்பது மட்டுமல்ல.. 
சகலரையும் காதலோடு சுவாசிப்பது..., 
தழுவிக் கொள்ளுங்கள் இந்தப் புனித இரவை. 

- மு.முகமது பாட்சா

Wednesday, 21 June 2017

தெளியும் ஞானம்


Image result for கண்ணீர்

நிட்காரமாய்ப் பார்க்கும் 
கட்புலம் தப்பி நகர் விட்டோடி 
பாலைச் சென்றடைந்து 
அகடூரி விரட்டித் தாக்க 
காடியடுப்பில் விழுந்து வெந்து 
சலதாரையே சுகமென 
புரண்டுத் தெளிவில் 
செத்துமடியும் கர்வ விளிம்பில் 
புழுக்களின் கூட்டில் 
செத்தப் பிணமாய்த் தெளியும் ஞானம்!
-------------------------------------------------
நிட்காரமாய் - நிந்தனையாய்
கட்புலம்     - கண் பார்வை
அகடூரி      - பாம்பு
சலதாரை    - கழிவு நீர்

- மு.முகமது பாட்சா

Popular Posts