Monday, 31 July 2017

நான் இரசித்த கவிதைகள் - 10

இருமை

Image may contain: one or more people, sunglasses, beard and closeup

நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.
ஒரு நாள் வகுப்பறையில்
என் அழகான ஆசிரியை
உலகை உருண்டையாய் வனைந்து
பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.
சூரியனை தேரினால் இறக்கி
பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.
பின்னர் கல்லூரியிலோ
ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்
கோடிகோடி சூரியன் வைத்தார்.
இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில்
வாழ்வு மனசிலாகியது.
கற்ற உலகிலோ எனது அறிவு
கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.
இந்த இருவேறு உலகும்
என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.
நதியின் அக் கரையோ
முன்பொரு காலத்தில்
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற்கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.
காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களும்!

வ.ஐ.ச.ஜெயபாலன் (இலங்கை)

இப்படியும் சிலர்


வார்த்தைகள்
நொண்டியடித்தன,
கண்கள்
கண்ணீர் சிந்தின,
ஆட்டம் முடிந்தது,
வாருங்கள் 
நாம், 
அடுத்த ஆட்டத்தைத்
தொடங்குவோம்...!

         ***

கடவுள் உண்டியலுக்கு 
கருப்பு மாடன்தான் காவலாளி ! 
காவல் காக்கும் நேரம் 
கடவுளிடம் அவன் கேட்கலாம் , 
கருவறைக்குள் என்னை 
எப்போது அனுமதிப்பாயென்று !

- மு.முகமது பாட்சா

ஒதெல்லோவை கொன்று விடு

Othello  classic painting க்கான பட முடிவு

டெஸ்டிமோனாவின் முன் 
பிணமாகக் கிடந்தான் இயாகோ, 
மன்னித்து விடுங்கள் தலைவியே... 
கலகத்தின் விதையைத்தான் அழித்திருக்கிறேன், 
என் கணவனையல்ல.. 
உன் கணவனையும் கொன்று விடுங்கள் 
அவன் காதலை விட 
சந்தேகத்தின் கைக் குட்டையைத்தான் 
அதிகமதிகம் மோர்ந்து கொண்டிருந்தான் 
உங்களின் ஒதெல்லோ என்றோ இறந்து விட்டான், 
மூர் இனத்து முரடனிடம் மலர்ந்திருந்த 
ரோஜாத் தோட்டம் கருகிய வாசனையை 
நீங்கள் நுகரவில்லையா? 
இனியும் 
அவனுருவம் ஆதிக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள், 
அவன் என்றோ இறந்து விட்டான், 
நம்மைப் போல்தான் பியான்காவும் 
கேஷியாவிடம் காதலைப் பதியம் போட்டாள்... 
பியான்காவின் படுக்கறைக் கசங்கல்கள் 
காஷியாவை மட்டுமேன் காயப் படுத்த வில்லை? 
அதுதான் காதல் 
என் முட்டாள் தலைவியே விழித்துக் கொள் 
இனியும் இப்படியொரு கதையெழுத 
நமக்கினி ஷேக்ஸ்பியர்கள் தேவையில்லை... 
முடிவுகள் எழுதத் தெரியாதவரை 
நம் முகவரிகள் 
ஆண்களின் காலடியில் கசங்கித்தான் கிடக்கும், 
காத்திருங்கள்... 
சற்று நேரத்தில் அந்தச் சந்தேகப் பூனை 
மெதுவாக உள்ளே நுழைந்துவிடும்.

- மு.முகமது பாட்சா

Sunday, 30 July 2017

வக்கிர வார்த்தைகள்

Image may contain: 1 person

மெளனத்தைத் தின்று கொண்டிருந்த 
வார்த்தைகளை வீசி எறிகிறேன்..., 
அவைகள், உருண்டுத் திரண்டு 
பந்துகளாக மாறி 
பந்துக்களை உதைத்துத் திரும்புகிறது , 
உறவுகளில் விரிசல் ! 
ஒட்டுவதற்குப் பசைத் தேடுகிறேன்.., 
அதற்கான வார்த்தைகளை 
யாராவது இரவல் கொடுங்கள் ! 

- மு.முகமது பாட்சா 

Saturday, 29 July 2017

நான் இரசித்த கவிதைகள் - 9



சுவாசம்

Image may contain: 1 person, smiling, closeup

எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நான் இல்லாத போதே
நிகழ்ந்துவிடுகின்றன

ஒவ்வொரு முறையும்
எதையும்
ஸ்பரிசித்து உணர்வதற்குள்
அவை நிகழ்ந்து முடிகின்றன

நான்
முயன்றுதான் பார்க்கிறேன்
என்றாவது
எதுவாயினும்
நிகழ்வதற்கு முன்பே
நான் அதைத் தொடுவதற்கு

ஆயினும்
என் முயற்சிகளைத் தோற்கடித்து
எனக்காக நிகழும் அவை
நானில்லாமலேயே நடந்துவிடுகின்றன

மலர்கள்
மனிதர்களுடனான
உலகம்
மிகப் பெரியது
என்னை விட

நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா
என் சுவாசம்
நானின்றி நிகழ்வதை ?

கவிதாயினி சல்மா

விசித்திர மிருகம்

தொடர்புடைய படம்

நாம் கற்பனைகளை விழுங்கிக் கொண்டு 
மகிழ்ச்சிற்காக அலையும் 
விசித்திர மிருகங்களென்று சொன்னால்... 
என்னை விசித்திரமாகப் பார்க்காதீர்கள். 
துதி மொழிகளுக்குள் துயில் கொள்வது 
நமக்கு என்றுமே கை வந்த கலை, 
அதனால்தான் 
நடிப்பு மொழி அவர்களுக்குச் சுலபமாக வருகிறது 
அவர்களென்பது இங்கு அரசியல் வாதிகள்தான், 
நாம் கேட்க விரும்புவதை 
அவர்கள் அழகாகவே பேசுகிறார்கள், 
உணர்வுகளைத் தூண்டிவிட்டு 
அச்சங்களை எளிதில் விதைக்கிறார்கள், 
கொலைகள் கூட 
அவர்களுக்குக் கொடூரமாகத் தெரிவதில்லை, 
கைத் தட்டத் தெரிந்த நமக்கு 
அவர்களின் கன்னம் தட்ட அச்சம் தடுக்கிறது., 
மனித உரிமைகளை அதிகம் பேசும் அவர்கள் 
மனித சக்திகளையும் விற்பனை செய்கிறார்கள், 
நம்மைச் சுற்றிலும் 
காமிராக் கண்கள் சுற்றிக் கொண்டேயிருக்கின்றன... 
நாளை இந்தக் காமிராக் கண்களே 
தோட்டாக்களைப் புதைத்து 
நம்மைத் துளைத்தும் வெளியேறலாம்... 
அப்போதும் ஒரு கூட்டம் அங்கே மகிழ்ச்சியுடன் 
தலையாட்டிக் கொண்டேயிருக்கும், 
தங்கள் கைகளின் கங்கணமாய் அவர்கள் 
சாதிகளையும் மதங்களையும் கட்டித் திரிகிறார்கள்... 
இனியும், 
நாம் கற்பனைகளை விழுங்கிக் கொண்டு 
மகிழ்ச்சிற்காக அலையும் 
விசித்திர மிருகங்களென்று சொன்னால்... 
என்னை விசித்திரமாகப் பார்க்காதீர்கள். 
துதி மொழிகளுக்குள் துயில் கொள்வது 
நமக்கு என்றுமே கை வந்த கலை.

- மு.முகமது பாட்சா

பச்சோந்தியழகி

No automatic alt text available.

அழகிய வனத்திற்குள் நுழைகின்றேன்... 
என் கவிதை 
மிகப் பெரிய வனத்தைத்தான் சமைத்திருந்தது, 
அங்குதான் அவளென்னை வரச் சொன்னாள், 
அவளை என் கவிதை பார்த்தது கிடையாதாம், 
அவளுக்கும் 
என் கவிதையை மட்டும்தான் தெரியுமாம், 
வழி காட்டி அழைத்துச் செல்லும் விசித்திரப் பறவை 
ஓவியன் வனத்திலிருந்து வந்திருக்கலாம், 
துருவிய 
நட்சத்திரக் குவியல்களின் உள்ளிருந்து வெளிப்பட்டாள், 
காட்டின் நிறம்  பூசியப் பேரழகி, 
அவள் புன்னகைத்த நொடியில் 
பூக்களெல்லாம் வனத்தை அலங்கரித்தன, 
தன் கையை என் பக்கம் நீட்டுகிறாள்... 
ஸ்பரிசத்தவன் பாசாங்கின்றி அவளிடம் நுழைகின்றேன் , 
நான் தீப் பற்றிக் கொள்ள 
அவளென்னை அணைக்கிறாள், 
குளிர்ந்து போகிறேன் 
உறைப் பனிக் கரடிகள் கடந்து போகின்றன, 
கவிதைகள் இலையுதிர்க்க 
வார்த்தைச் சந்தங்கள் இசை கூட்டுகின்றன 
அவள் நடனத்தில் லகரிகள் பொங்கி வழிகின்றன... 
ஓடமில்லாத நீச்சல்காரன் நீந்திக் களிக்கின்றேன், 
ஒருவரையொருவர் துவட்டிக் கொள்கின்றோம்... 
நட்சத்திரங்கள் உதிர்ந்து 
வனம் பச்சையம் பூசிக் கொள்கிறது... 
தொட்டெழுப்பிய சூரியனைத் தூரத்தில் வைத்து விட்டு 
பக்கத்தில் பார்க்கிறேன் 
பச்சோந்தி உடையைக் கழற்றி வைத்தவள் 
அடுத்தக் கவிதைக்காரனை தேடிப் போயிருந்தாள்.

- மு.முகமது பாட்சா

Friday, 28 July 2017

நான் இரசித்த கவிதைகள் - 8


.எச்சில் தீட்டு

நிழல் பெண் க்கான பட முடிவு

‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே
சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே
மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே
தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் – பராபரமே
நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே
அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே
எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’
.
கவிதாயினி . ஆவுடையக்காள்

* பாரதியாருக்கு முன்னோடியான இவரது கவிதைகள் மறைக்கப் பட்ட வரலாறாக இருக்கிறது, இவரது கவிதைகளின் தாக்கம் பாரதியின் பாடல்களில் காணலாம். தீண்டாமையை துணிந்து எதிர்த்த பெண். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இவரது கவிதைகளை பின்னர் தொகுத்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாவின் அக்காள் கோமதி ராஜாங்கம் என்பது குறிப்பிடத் தக்கது. 

வாழ்க்கை கணக்கு

Image may contain: one or more people

கவலைகளைப் பெருக்கி 
மெளனக் கூட்டலில் 
மூழ்கிக் கிடக்கிறாய் , 
கழித்துவிட்டு எழு என்கிறேன், 
நீ வகுத்துக் கொண்டிருந்தால் 
வாழ்க்கையில் கவலை 
மிச்சம் இருக்கதான் செய்யும் ! 
சமன் பாடுகளில் எப்போதும் 
தொலைந்துப் போகாதே ! 
விகிதங்களின் பகுதியில் 
கவலைகளுக்கும் 
நிச்சயம் பங்குண்டு ! 
கணக்குப் போட்டு வாழ்வதல்ல 
வாழ்க்கை , 
விட்டுக் கொடுக்கும் மாண்பை 
கடனாக வாங்கிக் கொள், 
விடையில் மகிழ்ச்சி 
எப்போதும் மிச்சமாய் இருக்கும்! 

- மு.முகமது பாட்சா

கல்விக் கூடம்...கட்டுக்கட்டாய் பணம்

No automatic alt text available.

காசாளர் அறையில் 
கட்டுக் கட்டாய் பணம் , 
கல்விக் கூடம் திறந்தாச்சி ,

பாடசாலை முழுவதும் 
மாணவர்கள், 
பாடம் நடத்தத் தெரியாத 
ஆசிரியர்கள் ,

நடத்தாத பாடத்தில் 
எழுதாத வீட்டுப் பாடத்திற்கு 
அம்பது ரூபாய் அபராதம் , 

அடுத்த மாதம் 
ஆசிரியருக்கும் ஆசிரியைக்கும் 
கல்யாணமாம் , 
கல்விக் கூடம் உபயம் , 

நிர்வாகக் கூட்டம் 
பள்ளி வளர்ச்சிக்காக ...
இன்னமும் , 
எத்தனை வகுப்புகளை 
எப்படி  கூட்டலாம் , 

தாசில்தார் அனுமதி 
பள்ளி விரிவாய் வளர்வதற்கு , 
அவர் பிள்ளைக்கும் அங்கே 
இடம் கிடைத்தது ,

அரசுப் பள்ளியின் ஆயா 
தன் பிள்ளையைக் 
கூட்டிப் போக வந்திருக்கிறாள்...
சம்பளத்தை 
கான்வென்டில் கட்டியாகி விட்டது ,

ஆளில்லாப் பள்ளிகளை 
மூடி விடுங்கள் , 
அரசின் அதிரடி உத்தரவு ... 
மந்திரிக்குப் பணம் 
கான்வென்டிலிருந்து , 

+2 
முடித்து வந்தவனுக்கு 
தமிளும் தெரியவில்லை 
ஆங்கிலமும் புரியவில்லை ,

ஆங்கிலப் பள்ளியில் 
வரிசைக் கட்டி நிற்கின்றது 
ஆடம்பரக் கூட்டம் ! 
சீட்டுக் கிடைக்கத்தான் 
கடவுளுக்கு நேர்த்திக் கடன் .

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 7


அக்னி

Image may contain: one or more people and smoking

என்னிடமே பகை கொண்டு 
ஏற்றிவிட முயன்றிட்டாலும் 
நொடியில் நான் எரிவேன்,அணைவேன் 
நிமிஷத்தில் சாவேன்,பிறப்பேன் 
வாழ்வென்றெனக் கொன்றில்லை 
தாழ்வென்று ஏதுமில்லை 
இளமையுடன் இருப்பேன் என்றும் 
எரியும் தொழில் தலை எழுத்து 
நட்பென்னும் உறவிலுண்டு 
பகைமையின் போல் விதைகள் 
கட்டுதிட்டக் கவனத்தோடு 
காதலித்தால் என்னை நீங்கள், 
கால் செருப்பாய் சேவை செய்வேன்; 
குழந்தை போல் சுகமளிப்பேன்; 
கவனமின்றி , போட்டு விட்டால் 
பிரளயத் தீ படமெடுப்பேன்; 
இயற்கை என்னும் எங்கள் வம்சம் 
எளிதென்று எண்ண வேண்டாம், 
நேசம் வேண்டாம், பகைமை வேண்டாம், 
கவனித்தால் சேவை செய்வோம்!

- ந.பிச்சமூர்த்தி

மரண தண்டனை

மரண தண்டனை க்கான பட முடிவு
மரண தண்டனைக்கு
மரண தண்டனை விதிக்க
யார் வருவார்?

கருணையே இல்லாத
பதிலுக்காகவே
காத்திருக்கின்றன
கருணை மனுக்கள்,

நீதி தேவதையின்
கண்களை கட்டும் போது
காதுகளையும்
சேர்த்து கட்டிவிட்டார்கள்,

சாட்சி சொல்லவந்தவனை
சாகடிக்கும் பெருமை,
அவர்களுக்கு மட்டும்தானே
நயமாய்த் தெரியும்

ஒப்புதலில்லாத ஒப்புதலை
நுட்பமாய் எழுத
கற்றா தர வேண்டும்,


மரணித்த உயிருக்காக
அழும் நல்லவர்களே...

நாளை
மரணிக்கும் உயிருக்காக
எத்தனை பேர்
அழப் போகிறீர்கள்?

- மு.முகமது பாட்சா

இயற்கையோடு


dream forest painting க்கான பட முடிவு
வனதேவதையின் பாட்டோசை 
சில்லென்று சிலிர்த்து வியாபிக்க... 
சிறகுலர்த்தும் மறவைகளின் 
சிறாக் சப்தம் மெருகூட்டி, 
மென்காற்றுத் தட்டிய சிலிர்ப்பில் 
சிகையசைக்கும் மரங்களின் இலைகள் 
மகிழிசைக்க, 
துல்லிய கதிரொளித் தூவலாய்ச் சிதறி விழ, 
துரத்தலின் நாடகம் இரைக்காய் அரங்கேற, 
பறத்தலும் விரட்டலும் பகலெனக் கழிவுற, 
மிரட்டல்களடங்கி மீள் துயில் தொடங்க 
இருட்டிலும் தாலாட்டும் இயற்கையின் பாடல் 
எதுகையும் 
மோனையும் இல்லாமல் இசைப் பரப்ப.. 
உறங்காத ஓடையில் ஒன்றிடும் அருவியாய் 
கவிதைக்குள் சற்றே கண்ணயர்கிறேன் கண்ணே 
நகரத்தின் வாழ்க்கையாம் நரகத்தில் 
எத்தனை நாள் 
என் கவிதையை வீணாய்ப் புதைப்பது... 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 6

அன்று வேறு கிழமை

Image may contain: 1 person, eyeglasses

நிழலுக்காகப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாயொன்று

பதுங்கிச் சென்ற நாய்வயிற்றில்
கிழக்குக் கோடிப் பிணந்தூக்கி
காலால் உதைத்தான். நாய் நகர

மேற்குக் கோடிப் பிணந்தூக்கி
எட்டி உதைத்தான். அது நகர
தெற்குக் கோடிப் பிணந்தூக்கி
தானும் உதைத்தான். அது விலக
வடக்குக் கோடிப் பிணந்தூக்கி
முந்தி உதைத்தான். இடக்கால்கள்
எட்டா நிலையில் மையத்தில்
பதுங்கிப் போச்சு நாய்ஒடுக்கி

நான்கு பேரும் இடக்காலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
ஓட்டம் பிடித்து அவர் மீண்டும்
பாடைதூக்கப் பாடையின் கீழ்
பதுங்கிப் போச்சு நாய் மீண்டும்
.
கவிஞர். ஞானக்கூத்தன்.


மாய வனம்

Image may contain: tree, plant, outdoor and nature

சிதைந்து போயிருந்தது 
அந்தப் பறவையின் கூடு 
ஒரு வரலாறு 
வாழ்ந்து மறைந்த 
அடையாளங்களோடு , 

இந்த ஒற்றை மரம் 
நிழலுக்காக 
விட்டு வைத்திருக்கலாம் , 
தோப்பின் மற்ற மரங்களைக் 
காணவில்லை , 

புகார் வாங்கிய 
வனத் துறைக்காரன் 
உட்கார்ந்திருந்தது 
அந்தத் தோப்பின் 
மற்றைய மரத்தின் 
ஒற்றை மரமாக இருக்கலாம் ,

வரலாற்றின் படிமங்களாய் 
மிருகங்களின் தோல்கள் 
மணிப் பர்சுகளாகவும் 
உயர் ரக ஷூக்களாகவும் , 

நாளை 
நகரமாகவும் ஒப்பனைப் படலாம் 
இந்த வனம் , 

தண்ணீரைத் தேடி 
மனித வேர்கள் திரியலாம் , 

மரங்களை நடுங்கள் 
என்ற கோஷங்கள் விரியலாம் ,

ஆனாலும் 
மேகங்கள் வனத்தைத் தேடி 
அலையும் அவ்வேளையில்... 

பறவைகள் எங்காவது 
எச்சத்தை விதைத்து 
சொச்சமாய் ஒரு வனம் 
விளைந்திருக்கும் ,

அந்த மாய வனம் காக்க 
மிருகங்கள் 
வேலிப் போட்டிருக்கக் கூடும் , 

பார்த்துப் போங்கள்... 
அங்குப் போகும் மனிதர்கள் 
காணாமல் போவார்கள்!

- மு.முகமது பாட்சா

சாட்டையெடு தோழா

No automatic alt text available.

சாட்டையெடுத்துச் சுழற்றுத் தோழா 
சாட்டையெடுத்துச் சுழற்று ! 

மாட்டுத்தோலை உரிக்கும் உன்னை 
வாட்டி வதைக்கும் மனிதன் தோலை 
மாட்டி உரிக்க என்ன தயக்கம் ? 

நிமிர்ந்த உன்னைக் குனியச் செய்ய 
முதிர்ந்த வேதத் தந்திர மனிதர் 
செய்யும் சூழ்ச்சி இதுவென் றறிந்து... 

சாட்டையெடுத்துச் சுழற்றுத் தோழா ! 
சாட்டையெடுத்துச் சுழற்று ! 

சட்டைப் போட தடுத்த முறையர் 
எச்சில் கழுவ விதித்த தரையர் 
இச்சயம் நிறைந்த சாதி வெறியர் 
மிச்சமிருக்க விட்டு விடாதே ... 

சாட்டையெடுத்துச் சுழற்றுத் தோழா ! 
சாட்டையெடுத்துச் சுழற்று ! 

அடிமைப்பட்டுக் கிடந்தது போதும் 
படிமைப் பொருளாய் வாழ்ந்ததும் போதும் 
சிறுமை மீண்டும் சூழும் முன்னே... 

சாட்டையெடுத்துச் சுழற்றுத் தோழா ! 
சாட்டையெடுத்துச் சுழற்று ! 

- மு.முகமது பாட்சா

Thursday, 27 July 2017

அலையும் மௌனம்

தொடர்புடைய படம்

மௌனம் 
தனிமையில் சுற்றித் திரிகின்றது, 
யாரும் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை, 
புத்த விகாரங்கள் சிதைந்து கிடக்கின்றன... 
போதி மரத்தினில் அனற் கற்று வீசுகின்றது, 
பிரச்சனைகள் 
மௌனத்தின் முதுகேறிப் பயணிக்கின்றன, 
இரத்தச் சுவடுகளில் 
கால் பதிக்காமல் எப்படி நடப்பது? 
அவலங்களின் ஓல ஓசையில் 
மௌனம் இறந்து விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள், 
கடலைத் தேடிப் போன மௌனம் 
தோட்டாக்கள் துளைத்த 
உதிரச் சப்தத்தில் உறைந்து போனது, 
எயினனாய் எல்லோரும் கூவினில் 
நா இரைக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள், 
அகலிடக் கூறுகளை ஆயுதம் துளைக்க 
ஆலைகளின் சப்தம் வானையும் சிதைக்கிறது, 
விசித்தலில் நுரைத்த மௌனம் 
தனிமையில் சுற்றித் திரிகின்றது, 
யாரும் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. 

- மு.முகமது பாட்சா

பொல்லா வர்க்கம்

காற் சிலம்பை கழற்றியெறிய 
இவளொன்றும் கண்ணகியில்லை, 
தோளிருக்கும் திடம் மட்டும் 
வெட்டறிவாள் கையில் இருக்கும், 
போக்கத்த காவியத்தின் 
பெண்ணாக  நாட்டமில்லை.. 
ஆணுக்கு பெண்ணொன்றும் 
அத்துணை சளைப்பில்லை...
தலை நீட்டும் புல்லிற்கே 
இத்தனை கர்வம் என்றால், 
வேர் தாங்கும் மண்ணிற்கு 
எத்துணை பலமிருக்கும்...
போடா நீ, 
போக்கத்த பொல்லாத வர்க்கமே நீ!

- மு.முகமது பாட்சா

தேடுதல்

Image may contain: bird

தேடுதல் ஒரு தவம்,
தேடியது 
கிடைக்கும் வரை 
தேடுவதை நிறுத்தாதே,

தேடியவுடன்
கிடைத்து விட்டால்
அது
தேடியதே கிடையாது,

தேடியது ஒன்றாகவும்,
கிடைப்பது வேறாகவும் 
இருப்பதுவே
உண்மையான தேடல்,

கல்வியை தேடினால்
அறிவை பெற வேண்டும்,

அன்பைத் தேடினால்
உறவுகள் கிடைக்க வேண்டும்,

உழைப்பை தேடினால்
உயர்வுகள் வர வேண்டும்,

ஆனாலொன்று,

மரணத்தை மட்டும்
நீயாகவே தேடாதே...

ஜனனத்தை போலவே
மரணமும் ஒரு நாள்
தானாக வந்துவிடும்.

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 5

விற்றுப் பிழைக்கின்றோம்



சிந்தையிலே பின்னிவைத்த சிலந்திவலைச் செல்வி
செல்வழியில் கண்ணியிட்டு செயத்தம்பம் நாட்டும்!
"இந்தியர்கள் நாடல்லோ இமையவர்கள் நாடு!
கந்தமலர் பூச்செரிவில் கடவுளர்களோடு
கன்னியர்கள் கந்தருவர் களித்துவளர் நாடு"
என்று பல சொல்லியதை சொல்லளவில் நம்பி
எவனுக்கும் மண்டியிடும் ஏந்து புய நாடு!
ஆற்றுக் கரையருகே அணிவயல்கள் உண்டு;
சோற்றுக்குத் திண்டாட்டம் சொல்லி முடியாது!
வேதம் படித்திடுவோம், வெறுங்கை முழம் போட்டிடுவோம்!
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம்!
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதை பேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்.

புதுமைப் பித்தன்

நான் இரசித்த கவிதைகள் - 4

கத்திரிக்காய் என்ன காதலா?

Image may contain: 1 person, eyeglasses and closeup

இரவில் 
காதல் என்ன கத்திரிக்காயா?
தொடர் கதை எழுதிய
வாணி மணாளன்
பகலில் 
காய் கறிக்கடை 
சந்தைக்கு சென்று
கத்திரிக்காய் விலை 
கிலோ இரண்டென கேட்டு
அதிர்ந்தார் அயர்ந்தார்
கத்திரிக்காய் கடைக்காரன்
கடுப்பில் சொன்னான்
அவ்வளவு மலிவாய்
அள்ளிக்கொண்டு செல்ல
கத்திரிக்காய் என்ன காதலா?

கவிஞர்.மீரா

சூழ் வலி

Image may contain: one or more people and people sitting

இறந்துக் கிடந்த கவிதைகளை 
குப்பைக் கூடையில் 
அள்ளித் தட்டுகிறாள் அம்மா ,

'பொழைக்கிற வேலையைப் பார் '
இஃது அப்பா ,

கவிதைகளை 
எரித்துவிடச் செல்கிறேன்... 
வேறு பெயர்களில் அவை 
உயிர் பெறலாம் ,

பசிக்கு விழுந்த உணவு 
அப்பா காசென்று சிரிக்கின்றது ,

மரத்துப் போய் 
மடங்கிக் கிடக்கிறது 
வாங்கிய பட்டம் , 

சிரிப்பதெல்லாம் இப்போது 
செயற்கையாகி விட்டது , 

மீண்டும் 
வெள்ளைத் தாளைதான் 
தேர்ந்தெடுக்கிறேன் , 

கவிதைகள் மட்டும் தான்
என் கூடவே இருக்கின்றது 
கவலைகளை வாங்கிக் கொள்ள . 

- மு.முகமது பாட்சா

கவிதையா இது?

Image may contain: one or more people and people standing

இதுதான் 
கவிதையென்று 
சொல்லிவிட்டுப் போகிறான் 
ஒருவன் ,

இதுவாக் கவிதையென்று 
நகைக்கிறான் ஒருவன் , 

யாப்பைத் தேடி 
களைக்கிறான் ஒருவன் ,

பாரதியைத் தேடுகிறான் 
ஒருவன் , 

காதலே 
இல்லையென்கிறான்  
ஒருவன் ,

காசுக்கும் தேறாதென்கிறான் 
ஒருவன் ,

ஒருவன்கள் இராஜ்ஜியத்தில் 
நான் மட்டும் தனியாளாய் 

கவிதையின் தாளாய் 
கசங்கிக் கொண்டு ... 

- மு.முகமது பாட்சா

Wednesday, 26 July 2017

பரம இரகசியம்



love me morden painting க்கான பட முடிவு

இரகசியக் கவிதைதான் இஃதென்று 
என்னிடம் கொடுத்தாள்... 
நானும் 
இரகசியமாகத்தான் பிரித்துப் பார்த்தேன், 
அஃது 
இரகசியமாகவே என்னிடம் 
எந்தச் செய்தியையும் சொல்லவில்லை, 
கிழித்துக் காற்றில் பறக்க விட்டேன் 
அவை வாவல்களாக 
வானில் வலம் வரத் தொடங்கின, 
எங்கிருந்தோ வந்த கழுகுகள் 
இரகசியங்களை 
ஒவ்வொன்றாகக் களவாடிச் சென்றன... 
அவள் மீண்டும் என்னிடம் வந்து 
இரகசியம் எங்கேயென்று கேட்டாள், 
நான் கழுகுகளைக் காண்பித்தேன்... 
அவள் சிரித்துவிட்டு 
அதுவல்லவே அந்த இரகசியம்' 
எனச் சொல்லி இடம் நழுவினாள், 
நான் 
அவளின் பின்தான் தொடர்ந்து செல்கிறேன், 
இரகசியம் இப்போது என்னை 
இரகசியமாகவே கடத்திச் செல்கிறது... 
புரியவில்லைதானே? 
இரகசியங்கள் எப்போதுமே அப்படிதான், 
சீக்கிரத்தில் புலப் படாது... 
புலப்பட்டால் 
அஃது இரகசியமாகவும் இருக்க முடியாது. 

- மு.முகமது பாட்சா

இரகசியங்கள்

adam misfortune in apple classic painting க்கான பட முடிவு

புரிந்தது போல் நடந்து கொள்கிறோம், 
ஆனால் 
நம்மையே நாம் புரிந்து கொண்டதில்லை, 
இரகசியங்களை வைத்துக் கொண்டே 
நடமாடுகிறோம்... 
பதில் தராத கேள்விகள்தாம் 
நம்மை ஆழமாகப் புதைத்து வைத்திருக்கின்றன, 
சொல்ல மறந்த கதைகளை விட 
இங்குச் சொல்ல மறுத்த கதைகள்தான் அதிகம், 
தீப் பற்றியெரியும் வனத்தில் 
இங்கு யார்தான் தீக்குச்சி? 
அழுக்குகளைக் கழுவி விட்டு 
அழுக்குகளை உடுத்த நமக்கு மட்டுமே தெரியும், 
சித்தார்த்தன் வீதியில் 
சிதறிக் கிடக்கின்றன நிழற் பதுமைகள், 
நூல் பிடித்தேறி 
ஆதாமின் ஆப்பிள் கனியை பறித்துக் கொள்கிறோம், 
சாத்தான் நிம்மதியாக உறங்குகிறான்... 
இரகசியங்களை 
ஏதனின் தோட்டத்தில் இறக்கி வைத்திருக்கிறேன் 
ஒரேயொரு மூலிகை குளியலுக்காக.. 
ஈவாவின் ஆப்பிள் என்னை விரும்பி அழைக்கிறது. 

- மு.முகமது பாட்சா

கவிஞரின் தமிழ்

No automatic alt text available.

இலக்கணம்
பிழை யென்றார்,

சீர் கெட்டு
போனதென்றார்,

தலைக் கணம் 
கூடியதால்
அடிப் பிறழ்ந்து
போனதென்றார்,

எதுகையும்,மோனையும்
இல்லவே 
இல்லையென்றார்,

வாய்பாடும்,
தப்பிதம் என்றார்,

அயலான் மொழி
ஊடுருவல்
அதிகம் என்றார்,

குறில்,நெடில்
குழப்பத்தால்
வார்த்தைகள்
சிதைந்ததென்றார்,

மொத்தத்தில்
இந்த "தமிழ்" 
கவிதையே 
பிழை என்றார்...

ஓடிப் போன
தன் மகள் தமிழை
நினைவில் இருத்தி.

- மு.முகமது பாட்சா

குற்றமில்லை

Image may contain: one or more people, cloud and sky

சிதைவுகளில் 
சிக்கி  சீரழியும் 
மனதின் வலிகளை 
யார் உணரக் கூடும் ,

கவலைகள் 
கூடு கட்டியிருப்பவனின் 
கண்களில் 
கண்ணீர் துளிகள் குற்றமில்லை ,

இடறி விட்டவன் 
நடந்து போகிறான்...
விழுந்தவன்தான் இனி 
எழுந்து நடக்க வேண்டும் 
வேற வழி ,

படகோட்டியின் 
தோள்களின் வலி 
மீனைச் சாப்பிடுபவனுக்கு 
எப்படித் தெரியும் ? 

ஆறுதல் சொல்வது 
எப்போதும் சுலபமானது 
சுமைகளை யார் 
பகிர்ந்து கொள்வது ? 

கண்ணீரை துடைப்பதற்கு 
கரங்கள் வேண்டாம்... 
கைகளைத் தூக்கி விட்டால்  
அதுவே போதும் . 

- மு.முகமது பாட்சா

நான் இரசித்த கவிதைகள் - 3

Image may contain: 1 person, eyeglasses and closeup

வெளியேற்றம்

இன்னும்
இருவரிகள் தேவைப் படலா‘ம்
இந்தக் கவிதை முடிவதற்கு

அழைப்புமணி

அலற அடுத்தநொடி நுழைந்தவரின்
பாதங்களின் அவசரங்களில்
நசுங்கினவோ அவ்வரிகள்!

எழுதி முடித்த

எந்த வரியிடமும் எஞ்சிய இருவரிகள்
எதிர்பார்த்துத்
தாகமோ தவிப்பா ஏதும் இல்லை
"எழுதுகிறவன் பாடு அது
எதற்கு நமக்கென்றிருந்தன

நிர்வாணமாக

எனது நெஞ்சில் நீந்திக் கொண்டிருக்கும்
இருவரிகள்மேல்
தேடல் அடையாளம்
இழந்து கிடக்கும்
தருணம் தகர்ந்து போனது
"எரிவாயு தீர்ந்து போனது
சொன்னீர்களா?" என்ற என் மனைவி
சொற்களால்.

சன்னலோரம்

போய் நின்றபோது
குழாயடியில் குடங்களின் வரிசை
தெரிந்தது

பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விட்ட வேளையில்

பசங்கள் பறப்பது
தெரிந்தது
ஈ மொய்க்கும் இலந்தைப் பழ வியாபாரம்
சுறுசுறுப்பாய் நடப்பது
தெரிந்தது

அத்திமரத்தடியில்

இலாடம் அடிக்கக் கவிழ்க்கப்பட்ட
மாடுகள் மூக்கில்
நுரைதள்ளி யெழுந்த
மூச்சில் வேதனை நெடி
தெரிந்தது

அந்திப்பழம் கொத்திப்போடும்

காக்கைகள் நிறம்
துக்கம் அனுசரிப்பது
தெரிந்தது
என் கவிதை முடியத் தேவைப்படும்
இருவரிகள் தவிர
என்னென்னமோ தெரிந்தன

மீண்டும்

மேசைக்குத் திரும்பிக்
காகிதத்தில்
கண்களைக் கவிழ்த்தபோது
"நீ
தேடும் இருவரிகளே போதும்
எதற்கு நாங்கள்" என்று
ஏனையவரிகள் எழுதி வைத்திவிட்டு
வெளியேறியிருந்தது
தெரிந்தது.
.

கவிஞர்.ஈரோடு தமிழன்பன்

Tuesday, 25 July 2017

முகமி மனிதர்கள்

தொடர்புடைய படம்

எனக்கான முகமியை அணிந்து கொள்கிறேன் 
அஃது எனக்காக 
அரசு வடிவமைத்துக் கொடுத்ததுதான், 
என்னைப் போலவே 
எல்லோரும் முகமிகளுடன்தான் திரிகிறார்கள், 
முகமிகள் இல்லாமல் 
யாரும் நடமாடவே கூடாதென்பது 
அரசரின் ஆணை, 
சிரிப்பது போலவே 
நேர்த்தியாய் முகமிகள் வடிவு செய்யப் பட்டுள்ளன, 
எங்களின் அழுகையை நீக்க 
அரசு கொண்டுவந்த எளிய திட்டமிது... 
இப்போதெல்லாம் நாங்கள் 
பொது வெளிகளில் அழுவதே கிடையாது, 
அரசருக்கும், அமைச்சர்களுக்கும் கூட 
முகமிகள் உண்டு, 
அதினில் அவர்கள் 
புத்தனைப் போலவே புன்னகைத்திருப்பார்கள்... 
அவர்களின் உதிரம் தோய்ந்த இரத்த நாக்குகள் 
வெளியில் தெரியவே தெரியாது, 
முகமிகள் இல்லாமலும் 
இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்... 
சிறைகளில் தேசத் துரோகக் கைதிகளாக.

- மு.முகமது பாட்சா

Popular Posts