
இருப்பின் வருகைப் பதிவேடுகள்
அவசரவசரமாகப் பதியப்படுகின்றன
தலைவா நானிருக்கிறேன் என்று
தொண்டர்கள் குரலை உயர்த்துகிறார்கள்
நாங்கள் இங்குதான் நிற்கிறோமென்று
உறவுகள் சொல்லிக் கொள்கின்றன
பகைவர்கள் கூட வசை மொழிகளால்
வருகையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்
எதிரிகள்
நாங்களெப்போதும் எதிரிகளல்லவென்று
எழுதிவிட்டுப் போகிறார்கள்
வராதவர்களெல்லாம் வருகிறார்கள்
வரக்கூடாதவர்களும் கூட வருகிறார்கள்
ஏனிந்த அவசரம்?
எதற்காகவிந்த இருப்பின் தக்க வைத்தல்?
ஒரு மூச்சுக்காற்றினோசை அச்சுறுத்துகிறது
நாளைய கணக்குகள்
காய்களை மெல்ல மெல்ல நகர்த்துகின்றன
நிழல் படிமங்களில்
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்...
மரணம் ஓரிடமாய்ப் போய் உறங்குகிறது.
- மு.முகமது பாட்சா*
01 /08 /2018






























