Monday, 31 December 2018

பிணக்கும் எழுத்துகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

எழுத்துகளுக்கும் எனக்கும் 
சற்றுமுன்தான் 
சண்டை நடந்து ஓய்ந்திருந்தது... 
கணினியும் அவற்றோடு 
சேர்ந்து கொண்டது ஆச்சரியம்.. 
அவலத்தை அடிக்கடி கொண்டுவந்து 
அமரவைக்கிறேனாம்... 
உலக நடப்பில் உனக்கென்ன அக்கறை? 
ங்கே என்று உட்கார்ந்திருந்த எழுத்துகளும் 
கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டன 
சண்டையிடவே தெரியாது என்பது 
ஆயுத எழுத்தின் குற்றச்சாட்டு... 
காதல் வார்த்தையில் அமர்ந்து பார்க்க 
வல்லினத்திற்கும் ஆசையுண்டாம் 
இது மெல்லினத்தின் வக்காலத்துப் புலம்பல்... 
இவன் காதலிக்கவே தெரியாதவன் 
என்று நகைத்தது இடையினம்... 
அவலமும் 
தேசத்தின் காதலில்லையா? என்றேன் 
அடுத்த மகாத்மா 
எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று 
ஒட்டுமொத்தமாய்ச் சப்தம் எழுப்பின... 
நான் என்னதான் செய்யவேண்டும்? 
'ஒரு காதல் கவிதையாவது 
ஒழுங்கா எழுதிக்காட்டு இல்லையென்றால் 
இங்கிருந்து நடையைக் கட்டு' 

வருடத்தின் முதல் நாளே இப்படியா... 

சமரசம் பேச யாரவது வருவீர்களா? 

- மு.முகமது பாட்சா* 
01 /01 /2019

சிறகுகளை இழந்தவன் - நுண் புனை கதைகள்


நுண்புனை கதைகள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்


நான் அணிந்திருந்த சிறகுகள் இரவலென்று சற்றுமுன்தான் தெரிந்தது. 
நானிப்போது பறப்பதை நிறுத்திக் கொண்டேன்... 
என்னைப் பார்ப்பவர்கள் சிரிக்கும் சிரிப்பில் ஏளனம் நிறைந்திருந்தது 
கனவுகளை நான் சிறகுகளுக்குள்தான் வைத்திருந்தேன் 
அவை ஒவ்வொன்றாக இப்போது உதிர்ந்து கொண்டேயிருந்தன 
சிறகுகளைப் பிய்த்தெறிந்துவிட்டு 
மீனாகக் கூட மாறிவிடலாமென்று கடலை நோக்கியோடினேன்... 
என் கவலையை அந்தக் காகம் உணர்ந்திருக்கலாம் 
என்னருகில் மெல்ல நெருங்கிவந்தது... 
என் எண்ணத்தை அதனிடம் பகிர்ந்து கொண்டேன்.. 
நீ எனக்கு உணவாக விருப்பமா? என்று கேலியாகக் கேட்டது 
ஆணவமா? என்று கோபப்பட்டேன் 
பிறகென்ன, நீ மீனாக மாறினால் என்றாவது ஒரு நாள் 
கருவாடாக என்னெதிரில் விழாமலாப்போவாய் என்று நகைத்தது 
அப்படியென்றால் என் சிறகுகள் யாருடையது என்று கேட்டேன் 
என் அப்பாவித்தனத்தை அது ரசித்திருக்கலாம் 
தலைசாய்த்து என்னைப் பார்த்துவிட்டு நெகிழ்வோடு சொன்னது 
முதலில் நீ பறவையேயில்லை! உனக்குச் சிறகுகளும் இல்லை... 
நீயொரு மனிதன் 
நீ நீயாக இருக்கவே ஆசைப்படு அதுதான் உனக்கும் நல்லது... 
உன்னால் ஓட முடியும் ஆட முடியும் 
பறவைகளான எங்களால் அவற்றைச் செய்ய முடியுமா? 
இப்போது என்னிடம் சிறகுகளில்லை 
கனவுகள் என் கால்களைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தன...

- மு.முகமது பாட்சா* 
31 /12 /2018

புத்தாண்டு வாழ்த்துகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

வாழ்த்துகள் சொல்லும் போது 
பல்லில் எதுவும் 
சிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்... 
ழகரம் கெட்டுவிட வாய்ப்புகளுண்டு 

கைகளை 
சுத்தமாக வைத்துக் கொள்வது முக்கியம் 
அப்போதுதான் 
விரல்களினிடையே பூக்கள் பூக்கும் 

புன்னகையை மறந்துவிடக் கூடாது... 
புள்ளினங்களின் வானம் அது... 

நறுமணம் நல்லதுதான் 
வார்த்தைகளில் சேர்ந்திருந்தால் 
நட்பின் வாசலை அதுதான் திறக்கும்... 

வாழ்த்துகள் நட்பினரே 
வரவேற்போம் இனிய புத்தாண்டை. 

-மு.முகமது பாட்சா 
31 /12 /2018 to 01 /01 / 2019 

Sunday, 30 December 2018

வன்மக்கொலை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம் மற்றும் வெளிப்புறம்

மூச்சிறைத்துப் பேசும் அக்கிழவனிடம் 
என்ன பேசிவிடப் போகிறீர்கள்? 
நீ ஆடிய ஆட்டத்திற்கு 
அடங்கிவிட்டாய் என்றா? 
அவனது படுக்கைப் புண்களின் ரணத்தை 
பங்கீட்டுக் கொள்வதைப் பற்றியா? 
அவன் துப்பியக் கோழையில் 
இலக்கணப் பிழை என்ன இருக்கப்போகிறது? 
அவன் கட்டிலின் கால்களுக்கு இருக்கும் 
இரக்கம் கூட இல்லாதவர்கள் 
அவன் மூச்சிறைப்பில் முகம் சுளிக்கிறீர்கள் 
போய்த் தொலையட்டும் என்பது கூட 
ஒரு வன்மக் கொலைதான்... 
அவனது வாலிபம் இப்போது 
உங்களிடம்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது 
உணரும் நேரத்தில் 
உங்களுடன் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். 

- மு.முகமது பாட்சா* 
31 /12 /2018 

Saturday, 29 December 2018

அந்தப்பூனை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூனை

கொஞ்சம் பொறுங்கள்
அந்தப் பூனையை 
விரட்டிவிட்டு வருகிறேன்
மகுடேஸ்வரன் 
கவிதையிலிருந்து வந்து
என் கவிதையை 
நக்கிக்கொண்டிருக்கிறது

- முகமது பாட்சா -

கண்கள் துப்பிய எச்சில்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

ட்ராலியா 
கிரேன்ஷாட்டா என்பதை 
கோணம்தான் நிர்ணயிக்கிறது.... 
மேகம் வளையம் போட்டு தடுக்க 
லைட்டிங் பாய் 
ஒளித் தகடுகளை நகர்த்திக் கொண்டேயிருந்தான் 
காமிரா 
அப்ஸ்குராவை அசைபோட்டுக்கொண்டது 
இருண்ட அறையின் விளக்காய் விழுந்த பிம்பம் 
நிஜத்தை நிழலாக்கி 
நிழல்கள் 
இன்று நிஜங்களாக வடிகட்டிக்கொள்வது 
வியப்பின் அரிச்சுவடிகள்... 
ஷாட் ரெடி... டேக் 1 சீன் 1 
கிரேனிலிருந்து இறங்கிய கண்கள் 
அவளின் அதரத்தில் ஊடுருவி 
ஆடைகளை வளைத்து விழுங்கியது... 

சீன் 2 
காமிராவில் விழுந்தவளைத் துப்பிய வெளிச்சம் 
திரையில் தெரிக்க 
விசில் சப்தம் 
அவளுக்கு விளக்கை ஏற்றிக் கொண்டிருக்க 
ட்ராலியுடன் கண்கள் 
அடுத்த ஷாட்டிற்கு ரெடியாகிக் கொண்டிருந்தது.
லைட்ஸ் ஆன் 

-மு.முகமது பாட்சா* 
30 /12 /2018

அவனா இவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

எனக்குள்ளிருந்த அவனை 
புதைத்துவிட்டு வந்த பிறகுதான் பார்த்தேன் 
என்னைக் கடந்து போனவன் 
அவனைப்போலவே இருந்தான்... 
நிச்சயம் 
இவன் அவனாக இருக்கவே முடியாது... 
அவனுக்கு இரண்டு கொம்புகளிருக்கும் 
அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொள்கிறேன் 
அறைமுழுவதும் 
அவன்தான் வியாபித்து உட்கார்ந்திருக்கிறான்... 
இவன் அவனாக இருக்கவே முடியாது... 
அவனுக்கு நரியொத்தப் பற்கள் நீண்டிருக்கும்... 
அவனை விரட்டிவிட்டு 
சயனச் சந்திப்பில் கனவினுள் நுழைகிறேன் 
அவன் சாகரத்தை பிரசவித்து 
முகத்தைப் பிறாண்டுகிறான்.... 
இவன் அவனாக இருக்க வாய்ப்பேயில்லை 
அவனுக்கு ராஜாளியின் நகங்கள்.... 
புதைத்தவிடத்தில் தோண்டிப் பார்க்கிறேன் 
அவன் நகங்களும் கொம்புகளும் மட்டும் 
அங்கிருக்கிறது... 
பற்களோடு போனவனைத் தேடுகிறேன்... 
நிலைக் கண்ணாடிக்குள் நின்று சிரித்தவன் 
என் கழுத்தை குறிவைத்துப் பாய்கிறான்....
இவன் அவனேதான்! 

- மு.முகமது பாட்சா* 
29 /12 /2018 

Friday, 28 December 2018

சிக்கிய மொழி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், தண்ணீர் மற்றும் இயற்கை
ஒரு சொல்லின் மொழி 
எங்கேயோ சிக்கிக்கிடக்கிறது... 
விருட்சங்கள் 
வேர்களைப் பார்ப்பதே கிடையாது 
முகமென்பது 
திரும்பிக் கொள்வதால் 
முகவரி விலாசமிழக்கிறது... 
சிறகுகளை வரைந்தவன் 
முதலில் உறவுகளின் 
கால்களைத்தான் நறுக்குகிறான் 
அனிச்சை இச்சையாகி 
எழுத்துகள் சிதறிக் கிடக்கின்றன.. 
ஒரு சொல்லின் மொழி 
எங்கேயோ சிக்கிக்கிடக்கிறது. 

- முகமது பாட்சா - 

28 /12 /2018  

அண்டத்தின் ஆதி

தானியங்கு மாற்று உரை இல்லை.

நிழல் என்னை வேவு பார்க்கிறது 
கடந்தகால தினசரிக் குறிப்பொன்றில் 
நான் இன்னமும் 
கர்ப்பத்தைவிட்டு வெளியாகவில்லையென 
கருவின் திசுக்கள் 
எழுதி வைத்திருக்கின்றன... 
என் நாபிக்கொடியின் ஒருமுனை 
இன்னமும் 
கர்ப்ப கிரகத்தில்தான் வாசம் செய்கிறது 
முலைக்காம்பின் பற் தடங்களை 
பாதுகாத்துவைத்திருப்பது 
நாபிகிரகத்தின் துணைக்கோள்கள்தான் 
நான் '(அ)ம்மா...' எனும்போது எழும் சிலிர்ப்பில் 
அவ் அண்டத்தின் ஆதி 
சற்றே ஆடியடங்கிப் பதறுகிறது. 

- மு.முகமது பாட்சா* 
29 /12 /2018 

Thursday, 27 December 2018

தவறுகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

எழுதாத பேனாவில் 
என்ன இருக்கப்போகிறது? 
கற்பனையை ஊற்றுகிறேன்... 

அடையாள அட்டை வைத்துக்கொண்டு 
அலைந்து கொண்டிருக்கிறது 
என் சுயமரியாதை... 

சிறகுகளைக் கொடுத்துத்தான் 
வாக்குக் கேட்டார்கள் 
வாக்களித்தபின் உதிர்ந்துபோனது... 

பூட்டிய அறைக்குள் 
நுழைந்திருப்பவன் திருடனல்ல 
அரசாங்கம்.... 

அறுவடைக்குப் பின்தான் தெரிந்தது 
விளைந்தது விளைச்சலல்ல 
பெரும் கவலை.... 

எழுதாத கவிதையில்தான் 
எத்துணைத் தவறுகள் 
தாள் வெள்ளையாகவே இருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
28 /12 /2018 

அலைக்கழியும்

காண்திறல் மாயபிரும்மம் 
என்றில்லா வனப்பிரவேசச் சுடர்மதி... 
காற்றிலோடி அலைக்கழிக்கும் தளர்வில் 
கற்பனை மரணம் மனிதம்.

- முகமது பாட்சா -

Wednesday, 26 December 2018

பிரபஞ்சயிருட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

வெறித்தவிசாரத்தின் பிரபஞ்சகட்டையில் 
உன்விரல்கள் மெல்ல இசைகின்றன... 
சிரசிற்குள் நுழையும் அரூபக சங்கீதம் 
தாளக்கட்டில் சுரம் பிரித்து நரம்புகளை மீட்டுகிறது 
பாணச்சியின் பாடல் வரிகள் 
பந்தயமெழுப்பி எழுத்துகளை இலாவகமாய்ப் பிரிக்க 
என் எழுதுகோலின் முனையில் 
ஒரு பிரபஞ்சயிருட்டு நாட்டியமாடுகிறது ! 

- மு.முகமது பாட்சா* 
27 /12 /2018 

விதியின் வாய்ப்பாடு



புழுவாக இருந்த நான் 
சிறகுகள் முளைத்து 
சுற்றிலும் பறக்கத் தொடங்கினேன் 
பட்டாம்பூச்சியென்று 
மலர்கள் எனை கொஞ்சி மகிழ்ந்தன... 
உயரப் பறக்கும்போது 
நானுமொரு இராசாளியானேன் 
காற்றின் வேகம் கர்வத்தைச் சாய்த்து 
விழுந்து எழுந்தவன் மெல்ல நடக்க 
சிறகுகள் உதிர்ந்து மனிதனாகினேன்... 
வனங்களையழித்துக் கடலை வரைந்தேன்... 
ஆழியலைகள் என்னைச் சூழ 
நான் மீனாகி நீந்திக் களித்தேன்... 
ஆசைப்புழு தூண்டிலில் தவிக்க 
ஆர்வத்தில் இரையெடுத்து அகதியானேன்... 
புழுவாக ஜனித்த எனக்கு 
புழுவால்தான் 
மரணமென்பதும் விதியின் வாய்ப்பாடு. 

- மு.முகமது பாட்சா* 
26 /12 /2018 

Tuesday, 25 December 2018

இணையக் கண்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

இணையம் 
என் முன்னாலமர்ந்து 
என்னையே வாசித்துக் கொண்டிருக்கிறது... 
விரல்களின் வழி 
மரபணுவினை உறிஞ்சும் இலாவகத்தில் 
என் மதியின் முடிச்சு நரம்புகள் 
கீழே அறுந்து விழுகின்றன... 
சாத்தானின் கிளை நாக்குகளில் 
ஆசை விருட்சங்கள் உயிரூட்டம் பெற... 
மேதாவி என்ற 
சுய முத்திரை குத்திக் கொள்கிறேன்... 
இராஜாங்கத்தின் ஒற்றர்கள் 
எனது எழுத்துகளை 
நாடு கடத்துகிறார்கள்... 
நானிப்போது உறங்கும் அறையில் 
நக நுணுக்குகளாய் 
ஆயிரம் கண்கள் மேய்ந்து கொண்டிருக்க... 
என் நிர்வாணத்தை 
எவனோ சுகித்துக் கொண்டிருக்கிறான்... 
நானென்பது நீங்களாகவும் மாறிவிட்டீர்கள்... 
கூர்ந்து கவனியுங்கள் 
துரோகிகளின் கண்கள் படர்வது 
உங்களின் இணையத்திலும் தெரியும். 

- மு.முகமது பாட்சா*
26 /12 /2018

Sunday, 23 December 2018

அந்த டிசம்பர் 25

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

தச்சனின் கைகளால் 
மரங்கள் இழைக்கப்பட்டிருந்தன... 
இவர் சிறந்த தச்சரென்று 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்... 
இழைக்கப்படாத மரங்கள் 
எரிக்கப்படுகின்றன... 
இழைக்கக் கூடாத மரங்களையும் 
இழைத்தது தச்சுக்கூடம்... 
கரியோத்தின் இராஜ்ஜிய ஆசை 
சாத்தானின் வனத்தில் தழைத்தது... 
பேதுருவின் மொழிகள் 
சாத்தானின் வசனங்களாய் ஊறியது 
அறிந்தவருக்குத் தெரிந்தது 
அந்த ஒற்றைப் புன்னகைதான்... 
சிலுவையில் அறைந்தவர்கள் 
உண்மையைத்தான் எழுதினார்கள்... 
இவர் யூதர்களின் ராஜா... 
இதைத்தான் சொன்னது அந்த 
டிசம்பர் 25 

- மு.முகமது பாட்சா* 
24 /12 /2018 

அம் மணித்துளிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் காலணிகள்

எனக்கான மணித்துளிகளைச் 
சேகரித்து வைத்திருக்கிறேன். 
அசைவு நாற்காலியின் ஆடலில் 
அவை துளிர்த்தெழும். 
மழுங்கியப்பார்வையில் மணம் கமழும், 
'வாசனைக்கோர்த்து உரையாடும். 
கேட்காத செவிக்குள் நுழைந்து 
சிருங்காரம் பேசும், 
தளர்ந்த நரம்புகளைத் தடவிக் கொடுக்கும், 
சுருக்கம் நீவி சுந்தர முத்தமிடும், 
அழகுறுத்தி ஒப்பனைச் செய்யும், 
பொறுமையுடன் என் மொழி கேட்கும், 
தலைகோதி தாலாட்டும், 
புறம்பேசா மென் பொழில் காட்டும், 
புத்துயிராய் என்னுடன் படுக்கும்... 
பின் இறுதி மூச்சினை அவை இட்டு நிரப்பும்.. 
அதுவரை பத்திரமாக இருக்கட்டும் 
பாதுகாக்கும் அம் மணித்துளிகள்! 

- மு.முகமது பாட்சா* 
23 /12 /2018

Saturday, 22 December 2018

சரியா? தவறா?

தானியங்கு மாற்று உரை இல்லை.


யார் சொல்வது சரியென்பதுதான் 
இப்போதுள்ள முக்கியப் பிரச்சனை... 
அவர் சொல்லும் போது 
அது சரியாகவேயிருக்கிறது.... 
இவர் சொல்லும் போது 
இதுவும் சரியாகவேயிருக்கிறது... 
சரியென்பதெல்லாம் 
சரியானதல்ல என்றொரு பேச்சும் உண்டு 
இங்கு எதுவுமே சரியில்லையென்ற 
விரக்தியொன்று நடந்து போகிறது... 
சரியாகத் தவறு செய்தால் 
அஃதெப்படி சரியாகும் என்ற கேள்வி 
எதிரில் வந்து உட்கார்ந்துகொள்ள 
கேள்விகளே தவறென்று 
சில நாற்காலிகள் முணங்குகின்றன.. 
இந்தக் கவிதை சரியா 
அல்லது தவறா என்று தெரியவில்லை 
ஆனாலும் 
பிழைகள் இருக்கத்தான் செய்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
22 /12 /2018 

Friday, 21 December 2018

சருகுகள் பேசுகின்றன

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒரு மரணத்தைக் கண்டவுடன் 
சருகுகள் பேசத்தொடங்குகின்றன... 
சித்தார்த்தன் 
தன் ஆடைகளைக் களைந்துவிட்டு 
அரண்மனை விட்டு வெளியேறுகிறான்... 
மௌனம் 
தன்னையுடைத்துக் கரைகிறது... 
கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கி நகர 
நினைவுகள் மீட்சிமையாகின்றன... 
குழி புதுவரவிற்கான 
மண்வாசத்தைப் பூசிக்கொள்ளவும் 
அல்லது விறகுகள் 
உடன்கட்டையேறவும் தயாராகின்றன... 
மந்திரங்கள் வெறும் மன நிம்மதி - 
மரணத்தையே 
அவை ஒன்றும் செய்யாதவை.... 
பிணத்தைச் சுமந்தவர்கள் 
இறக்கிவைத்ததும் இந்தக் கவிதை 
குழியில் 
சில வார்த்தைகளைத் தூவிவிட்டு 
ஆசைகளைச் சுமந்துகொண்டு 
அடுத்தக் கவிதைக்கு நகர்ந்துவிடுகிறது... 
பிரபஞ்சம் துளிர்களாலும் 
இலைகளாலும் நிரம்பியதுதான்... 
மண் தன்னை உரமேற்றி கொள்ளட்டும். 

- மு.முகமது பாட்சா 
21 /12 /2018 

Thursday, 20 December 2018

வாசிப்போம் கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி

இந்தக் கவிதையின் 
ஒரு முனையை நீயும் 
மறுமுனையை நானும் 
படித்துக்கொண்டே தொடர்கிறோம் 
இடை நிறுத்தல்கள் நில்லாமல் 
தொடர்கிறது கவிதை 
இலக்கணப் பிழையென்பதும் 
காதலர்களின் 
கவிதைகளில் அழகுதான் 
மழலைகளின் 
மொழியறியாதவர்கள் 
அங்கே 
மாய்ந்து கொண்டிருக்கட்டும்... 
சிறகுகளிருப்பதால் 
கவிதையோடு பறக்கிறோம் 
கற்பனைகள் குற்றமென்றால் 
கனவுகளை யார் சிதைப்பது? 
நிழல்களை யார்தான் தண்டிப்பது? 
கவிதைகளின் சந்திப்பில் 
நாம் வியந்து நிற்கும் போது... 
காலம் மட்டும்தான் கடந்திருக்கும் 
இந்தக் கவிதை 
நம்மை 
முழுமையாகவே வாசித்திருக்கும். 

- மு.முகமது பாட்சா*
21 /12 /2018

சங்கீதம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஸ்வரங்களின் கோர்வையில்
அநாகத ஸ்வர நாதம்....
குயில்களின் காற்றிசை சங்கீர்தம்
மரங்களின் தாளம்
மேக தாள மின்னல்களின் ஜதிவர்ணம்
நரம்பிசை மீட்டும் நதிகளினோட்டம்
தவளைகளின் க்ரீச் க்ரீச் கைத்தாளம்
அபஸ்வரம் இசையாகும்
கோணாய்களின் இரவோலம்
அட்சரம் பிசகா இராகசுதி லயம்
இத்துணையும் இருத்து
நிரம்பி வழிந்த சங்கீத சங்கமத்தில்
சபாவில் வழிந்தது ஆகதநாதம்
கைத்தாளம் நழுவிய
அசந்த கர்ண கண்ணுறக்கம்!

- மு.முகமது பாட்சா*
20/12/2018

Friday, 14 December 2018

சொல்லெடுத்து

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஆளுக்கொரு 
சொல்லாக எடுத்துக்கொண்டு
எல்லோரும் 
எங்கெங்கோ விரைகிறார்கள்...
என்னிடமும் 
ஒன்றிரண்டு சொற்கள்
பத்திரமாக  இருக்கின்றன...
சொற்களை விற்று சிலர் 
சொற்களை 
வாங்கிக் கொண்டிருந்தார்கள்
சொற்களை எழுதிவைத்தவன் 
விற்பதற்கு 
புத்தகச் சந்தைகளை 
தேடி ஓடிக்கொண்டிருந்தான்
பணத்தைப் பூட்டியவன்
சொற்களை 
வாயில் குதப்பிக் கொண்டான்
சொற்கள் சிலவிடங்களில் 
மிதிபட்டும் இறந்து கிடந்தது
சொற்களைச் சேகரித்த புத்தன்
ஆக்கிரமிப்புகளை 
அதிகமாக்கி அரசனானான்
மேசையிலிருந்த சொற்களை
என் தேநீர் 
அருந்திக் கொண்டிருக்க...
நான் 
பூக்களில் இறந்து கிடந்தேன்.
என்னைச் சுற்றிலும் 
சில சொற்கள் 
இப்போது மொய்க்கத் தொடங்கின.

- மு.முகமது பாட்சா*
14 /12 /2018


Wednesday, 12 December 2018

அரசனானவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

அரசனானவன் 
தன் புஜங்களை உயர்த்தி 
வசனங்களை உதிர்த்தான்.... 
வரலாறு 
தன் பக்கங்களை மூடிக்கொண்டதாக 
மாயன் காட்டி புலம்பியது... 
காட்சிகளை மாற்றியது காலப்பிழையென 
காற்றுப் பதுங்கியது... 
சிறகுகள் பறவைகளுக்குப் பாரமென 
அகற்றப்பட்டது... 
உதிரம் அரசுடையதாகின... 
நிழல்களுக்கு வரி செலுத்துவது 
தேசிய உணர்வென அலங்கரிக்கப்பட்டது 
கடவுள்களை விற்றவர்கள் 
கடவுள்களாக அவதரித்தார்கள்... 
நீதியென்பது 
தீது என்று மொழியாக்கமானது... 
சூதுகளி 
சூட்சமமாய் விரிய 
பிணங்களே கம்பளங்களாகின... 
அருகம்புல்லுரசலில் 
ஆகாசவனம் பற்றியெரிய... 
அகந்தை 
எங்கு உட்கார்ந்திருந்ததென 
ஆய்ந்து கொண்டிருந்தார்கள் அவனெலும்பை 
அதிலிருந்தது 
சாத்தானின் கைப்பிடி மண் மட்டுமே!

- மு.முகமது பாட்சா* 
12 /12 /2018

தொன்மை கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.

உன்னுடன் 
கை குலுக்கிய நாட்களில் 
அந்தக்கவிதை உதிர்ந்திருக்கலாம்... 
தொன்மையின் சாயலிருப்பதாக 
சிலர் சிலாகித்தார்கள் 
முகத்தை 
மூடியபடியே என்னைச் சுவாசித்தாய்... 
முதல்வரியில் 
பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டன... 
சந்திப்(பு)பிழைகளில் 
தடுமாறிக்கொண்டிருந்த காதல்... 
சந்தத்தை விடாமல் 
வார்த்தைகளைத் தொடர்ந்தது... 
முதல் முத்தம் கண்களென்றால் 
இரண்டாம் முத்தமாய் 
இருவரின் விரல்கள் சிலிர்த்தன 
இதழ்கள் மட்டும் அரும்பவேயில்லை! 
இனித்த வார்த்தைகளை 
மணமுடிக்க மறுத்த கவிதை.... 
தொலைக்கும்போது 
நம் முகவரியைக் கலைத்திருந்தது. 

- மு.முகமது பாட்சா*
13 /12 /2018

Tuesday, 11 December 2018

நான் கவிஞனா?

தானியங்கு மாற்று உரை இல்லை.

நானொரு கவிஞனென்றேன் 
ஏறக்குறைய கேவலமாகப் பார்த்தான் 
எழுதிய நூல் இருக்கிறதா என்றான் 
எடுத்துப்போட்டேன் 
புரியவில்லையென்றவன் 
நீயென்ன புத்தகப்புழுவா 
பக்கங்கள் அரித்திருக்கிறதென்று 
நக்கலடித்தான்.... 
சிரிப்புவரவில்லை கோபமும் கூடத்தான் 
இதுவெல்லாம் கவிதையா? 
என்று விசிறியடித்தவன் 
பார்க்கத் தவறிவிட்டான் 
அஃதென் 
மீசை பாரதியின் கவிதைகளென்று! 

- மு.முகமது பாட்சா*
11 /12 /2018

Monday, 10 December 2018

முறையற்ற வாசல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

சுயமற்றுப்போகிறது  சொற்புலம்புகள்
கனவின் வித்தாரம் கடலுக்குள் நுழைகிறது
மௌனத்தின் வாசம் மிளகாய் நெடி
காந்தாரம் பற்றியெரிவது மனசு
களவு போனவர்கள்
காட்சிப்பிழையில் மெல்லிய கோடாய்...
சிறகுகள் இருப்பதே
கால்கள் ஒடிந்தபிறகுதான் தெரிகிறது...
ஆசையின் இச்சைகளில் அலைக்கழிகிறது
ஒன்பது துவாரங்கள்...
முறையற்ற வாசலில்
மூங்கில்கள் பூத்து கிடக்க
எலிகள் தானியங்களை கொறிக்கின்றன...
மக்கிப் போன பிறகு
மனசையும் மண்ணென்றே சொல்கிறார்கள்
நிழலிருக்கும்வரை
ஓட்டங்கள் தொடர்கின்றன...
ஓய்வெடுக்கும்போது
யாரும் அருகில் இருப்பதில்லை...
காலம் என்றே கடக்கிறது கடிகாரத்தின் முட்கள்
காத்திருப்பென்பது
விழும் வரை வாழும் சுவர்தான்.

- மு.முகமது பாட்சா*
11 /12 /2018


இரவோடு இரவாக

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு மற்றும் வெளிப்புறம்

இரவை பிடித்துவைத்துக் கொண்டு 
சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்... 
இரவு சிலரோடு அமர்ந்து 
மது அருந்திக் கொண்டிருந்தது... 
இரவின் காவலோடு ஒருவன் 
சுடுகாட்டு எலும்புகளை 
சேகரித்துக் கொண்டிருந்தான் 
இரவிடம் 
இரவல் வாங்கி எழுதிய கவிதையில் 
நட்சத்திரங்களோடு 
நிலாவும் உட்கார்ந்திருந்தது 
இரவோடு இரவாக ஒருவன் 
கயிற்றிடம் 
கதை பேசிக் கொண்டிருந்தான் 
இரவின் நூல்பிடித்து இருவர் 
காதலைக் காமத்தில் நுழைக்க 
காதலிக்காக ஒருவன் 
இரவை 
மடித்து வைத்துக் கொண்டிருந்தான் 
இரவின் வாசனையோடு 
வீதியில் ஒருத்தி அழைப்பு விடுக்கிறாள் 
இரவோடு இரவாக இருவர் ஓடிப்போக 
இரவின் ருத்திரம் 
அவர்களை விரட்டித் திரிகிறது... 
ஆலயங்கள் இரவில் மூடிக் கிடக்கின்றன 
இரவில்தான் 
கள்ளர்கள் விழித்துக் கொள்கிறார்கள்... 
இரவிடமிருந்துதான் 
இவற்றை நான் சேகரிக்கிறேன்... 
பகல் என் மதுக்குடுவையில் 
தள்ளாடுகிறது! 

- மு.முகமது பாட்சா* 
10 /12 /2018 

Friday, 7 December 2018

கிடைக்காத ஒன்று

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்த ஒன்றுக்காகத்தான் 
எல்லோரும் அலைந்து கொண்டிருப்பதாக 
அந்த சூஃபிக்கிழவன் 
பிதற்றிக் கொண்டேயிருந்தான்.. 
எத்துணைத் தேடல்களிலும் 
அந்தவொன்று மட்டும் கிடைப்பதேயில்லை 
அந்தவொன்று 
அத்துணை மகாப்பெரியதுமில்லை 
அந்தவொன்றுக்காகத்தான் 
எல்லோரும் 
இங்கு அழுது கொண்டேயிருக்கிறார்கள் 
அந்தவொன்று நிச்சயமாக 
நீங்கள் நினைக்கும் அஃதில்லை 
அந்தவொன்று 
என்னவென்று அறியாமலேயே 
எல்லோரும் கஃபனுக்குள் நுழைந்து 
கல்லறைகளுக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள் 
அந்தவொன்றை 
யாராவது அறிந்துகொள்ளும்வரை 
இந்த உலகம் 
கபன் துணியால் பொதியப்பட்ட மையத்துதான் 
என்று சொல்லிவிட்டழுதக் கிழவன் 
அந்தவிடத்தை விட்டு கடந்து செல்கிறான்

- மு.முகமது பாட்சா*
07 /12 /2018

கசலாய் களவாடியவள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ககனத்தைக் களவாடியவள் போல் 
நீ சென்றுகொண்டிருக்கிறாய்... 
களவு மந்திரத்திற்குக் 
கட்டுப்பட்டவன் போல் 
நான் வந்து கொண்டிருக்கிறேன்... 

என் நிழலைத் திருடியவள் 
நீயாகத்தான் இருக்கவேண்டும்... 
பொன்னழலில் நான் 
பொசுங்கிக் கொண்டல்லவா இருக்கிறேன்... 

கசங்கிய காகிதங்களில் 
என் கவிதைகள் மடிந்து கிடக்கின்றன 
ஆனாலும் அதற்குள்தான் 
உனக்கான நேசமும் ஒட்டிக் கிடக்கிறது... 

ரோஜாக்களின் தோட்டத்தை 
நீ மூடி மறைத்திருக்கிறாய்.... 
காதலின் வாசத்தை 
காற்றல்லவா சுமந்து வருகிறது... 

பார்ப்பவர்கள் இதனைக் காதலென்பார்கள் 
நான் கசல் என்கிறேன். 

- மு.முகமது பாட்சா* 
08 /12 /2018 

Thursday, 6 December 2018

வாசற்கதவுகள் இல்லை

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஓலங்களும் 
ஒப்பாரிகளுக்கும் நடுவே 
அந்தக் குயிலின் குரல் 
தனியாகக் கேட்கிறது... 

வானம் வெளுத்துக்கிடந்தாலும் 
சூழல் கருத்திருக்க... 
கன்றொன்றின் அபயக்குரல் 
ஆதரவைத் தேடியதாக இருக்கலாம். 

ஒற்றைச்சுவரில் 
அசைந்தாடும் தன் மகனுக்கு 
மெழுவர்த்தியை எங்குத் தேடுவாள் 
கண்ணீர் மட்டும் காணிக்கை 

விழுந்த கிடந்த மரத்தில்தான் 
தொங்கிக் கொண்டிருக்கிறான் 
விவசாயி... 

வருகிறார்கள் போகிறார்கள் 
யார் வீட்டிலும் 
வாசற்கதவுகள் இல்லாமல் போனதால் 

ஆலயங்களின் கதவுகளெல்லாம் 
மூடப்பட்டிருக்கின்றன... 
துப்புரவு பணி 
இன்னமும் முடியவில்லை. 

நோய் பிடித்த தேசம் 
மருத்துவமனைகளின் வரிசையில்... 

கழுகுகள் வட்டமடிக்கின்றன 
அந்தக் குயிலின் குரல் 
இப்போது ஏன் கேட்கவில்லை? 

- மு.முகமது பாட்சா* 
06 /12 /2018 

Wednesday, 5 December 2018

ஓவியனின் ஓவியன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஓவியனின் தூரிகையிலிருந்து 
மெல்ல 
வெளிப்பட்டுக்கொண்டிருந்தவன் 
தன்னை 
அதற்குள் நிரத்திக்கொண்டான். 

அவனின் விரல்கள் 
இப்போது தூரிகையைப் பிடித்து 
ஓவியனை வரையத் தொடங்கியது... 

ஓவியனின் 
இதயத்திற்குள் ஊடுருவும் ஓவியன் 
வண்ணங்களை வாரி 
தன்மீது இரைத்துக்கொள்கிறான்... 

விரல்களை முத்தமிட்டவன் 
சிறகுகளை ஏந்திக்கொண்டு 
விலாசத்தை வாங்கிக் கொண்டான் 

கூடங்களுக்குள் நுழைந்தவன் 
தன்னை விலைபேசிக் கொண்டிருப்பதை 
இந்தக்கவிதை விசுவாசம் என்கிறது. 

நீங்களோ 
விலையதிகம் என்கிறீர்கள். 

- மு.முகமது பாட்சா* 
05 /12 /2018 

Tuesday, 4 December 2018

அந்தக்கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

எழுதாத கவிதைக்காக 
எல்லோரும் 
அலைந்து கொண்டிருந்தார்கள் 

நானும் கூட 
எழுதாத பேனாவுடன் 
வெள்ளைத்தாளாய் அங்கிருக்கிறேன் 

எழுத்துகளைச் சேகரித்தவன் 
வார்த்தைகளில் 
வழுக்கி விழுந்துகொண்டிருந்தான் 

தேடியெடுத்த எழுத்துகளை 
ஒருவன் எரித்துவிட்டு 
இதுதான் அந்தக் கவிதையென்றான் 

வராத அந்தக் கவிதைக்காக 
வாசல் கதவை திறந்து வைத்தவன் 
சன்னல்களை மூடிவிட்டான்... 

கவிதைகளை 
தடைசெய்யச் சொன்ன ஒருவன் 
இதுவரை 
எழுத்துகளைப் பொறுக்கவேயில்லை... 

நான் 
சேகரித்த வார்த்தைகளை 
காகத்தின் எச்சம் கலைத்திருந்தது.. 

அங்கு முளைத்திருந்த மரத்தில்தான் 
எத்துணை அணில்கள்... 
எத்துணைப் பழங்கள்... 

யாரும் எழுதாத கவிதை 
இதுவாகக் கூட இருக்கலாம்.

- மு.முகமது பாட்சா*
05 /12 /2018

Sunday, 2 December 2018

இலிகிதன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

கிமு வில் எழுதப்பட்டதா அல்லது 
கிபி யில் எழுதப்பட்ட லிகிதமா 
எனத் தெரியவில்லை 
வார்த்தைகளின் தடுமாற்றங்களில் 
எழுத்துகள் வளைந்து நெளிந்திருந்தன... 
காதல் லிகிதமாக இருக்கலாம்... 
ஆங்காங்கே 
இரகசியக்குறிப்புகள் பேசிக்கொண்டன... 
விளக்கின் வாசனையிருப்பதால் 
இரவில் எழுதப்பட்டிருக்கும் என்பது 
ஆய்வாளர்களின் சமர்ப்பிப்பு... 
இலிகதன் கடிதம் எழுதியவுடன் 
இறந்திருக்கக் கூடும்! - இறுதிவரியில் 
இரத்தத் துணுக்குகள் ஒட்டியிருந்தன... 
அவள் என்பதை 
கேள்விக் குறிக்குள் வைத்து 
ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருக்க... 
அவன் இப்போதும் உயிருடன் இருப்பதாக 
ஓர் இரகசிய லிகிதம் வந்திருக்கிறது... 
முந்தைய லிகிதத்தின் 
இறுதிவரி இரத்தத் துணுக்களில் 
அவளைத் தேடச்சொல்லியும் 
இரகசியக் குறிப்பொன்றிருக்கிறது... 
கையெழுத்துகள் ஒத்துபோவதால் 
இந்த லிகிதமும் 
அதே இலிகிதன்தான் எழுதியிருக்கிறான். 

- மு.முகமது பாட்சா* 
13 /12 /2018 

Saturday, 1 December 2018

இனமறியா வினை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

காயல்மொழி வறண்டு கிடக்கிறது 
உயிரெழுத்துப் போராட்டங்களில் 
வல்லினம் மிகுவதாகச் சொல்வது அரசியல் 
நிழலின் அழல் தகிப்பை 
யார்தான் இங்கு உணர்கிறார்கள்? 
கடலின் ஆதங்கத்தை அலையென்றும் 
பெருமூச்சை 
காற்றென்றும் கடந்து போகிறவர்கள் நாம்.... 
ஓடாத நதியில் உப்பளம் கட்டுகிறவன் 
விளையாத பயிர்களுக்கா வியர்க்கப்போகிறான்? 
வினையில்லாத எச்சங்களுக்கு 
வினையெச்சமென்று பெயரிடாதீர்கள்... 
பறப்பதெல்லாம் பறவையென்றால் 
வௌவால்களை 
பழம்தின்னியென்றேன் சொல்கிறோம்? 
இனம் பிரிக்கத் தெரியாமல் 
ஏமாந்துபோவதுதான் நமக்கு வாடிக்கை... 
இல்லையென்றால் 
வாக்களித்துவிட்டு  புலம்புவோமா? 

-மு.முகமது பாட்சா* 
02 /12 /2018 

Popular Posts