Sunday, 31 December 2017

2018

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
2017 ல் 
கிழித்துப் போட்ட கவிதைகளையெல்லாம், 
அரைத்துப் போட்டு 
முறம் செய்து கொண்டிருந்தாள், அம்மா  

அதில் புடைத்துப் போடும் அரிசியில் 
புதுக் கவிதைகள் பிறக்கலாம் , 2018 ல் 

கொழித்துப் போட்ட கூளங்களை மேயும் 
கோழிகளும் கொடுக்கலாம் , நல்ல கவிதைகளை, 

அரித்துப் போட்ட தானியத்தில், 
விருட்சம் கூட, மிரட்சியாக வளர்ந்து நிற்கலாம், 

விருட்சம் தரும் கனிகளைக் கொறிக்கும் 
அணில்கள் கூடக் கவிதைகள் எழுதலாம், 

அணில்களை விரட்டும் அகடூரிகளெல்லாம் 
கவிதைகளிலமர்ந்து புரட்சி செய்யலாம், 

முறத்தில் இணைந்த கவிதைகள் கூட, 
முழுதாய் புது வடிவம் எடுக்கலாம்  

2017 ல் 

கிழித்துப் போட்ட கவிதைகளையெல்லாம், 
அரைத்துப் போட்டு 
முறம் செய்து கொண்டிருந்தாள், அம்மா ! 

- மு.முகமது பாட்சா*

Friday, 29 December 2017

கிழிக்கப் பட்ட திகதிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.
Painting Famous Artist : Jatin Das

கிழிக்கப் பட்டக் காலண்டரின் திகதிகள் 
இறந்துவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள், 
கடந்து போன காலங்கள் 
இடுகாட்டின் சுவடுகளெனக் 
கவிதையெழுதுகிறான் ஒருவன், 
பூமியில் புதைந்த பிணங்கள் 
மக்கிவிட்டதாக 
மண் வளச் சோதனை சொல்கிறது, 
ஆதாம் விழுந்தவிடத்திலும் 
சபிக்கப் ப ட்ட கனி மரங்கள் 
முளைத்திருக்கின்றன, 
ஏவாள்களை இரதத்தில் பூட்டி 
ஊர்வலம் போகிறார்கள் சாத்தான்கள், 
நதிகளை அழுக்காக்கியவர்கள் 
பாவங்களைச் சுமந்து கொண்டு திரிகிறார்கள், 
விலாவெலும்பின் விரிக் கூட்டில் 
ஆதாமின் மூச்சுக் காற்றுப் படர்கிறது... 
சபிக்கப் பட்டக் கனிகளை உண்பவன் 
ஏவாளைக் குற்றம் சொல்கிறான், 
இறைத் தூதர்கள் 
இனி வருவதற்கில்லை என்பதால், 
காபிரியல் பெருங்காற்றை விழுங்கி 
காத்திருக்கிறார் இறைவனின் கட்டளைக்காக, 
காலண்டரின் திகதிகள் 
ஒன்று சேரும் அப் பெரும் நாளில் 
பிறக்கலாம் இனிய புத்தாண்டு.

- மு.முகமது பாட்சா*

Thursday, 28 December 2017

தொலைந்துவிட்ட மனிதர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

காலம் 
சில மனிதர்களைத் தொலைத்துவிடுகிறது, 
அவர்கள் எப்போதும் 
படிக்கட்டுகளாகவே இருந்திருக்கிறார்கள், 
உயரத்திலேறி உட்கார்ந்து கொண்டவன் 
ஏணியின் கால்களை மறந்து விடுகிறான் , 
அட்சரம் கற்றுக் கொடுத்த அ வின் கைகள் 
யாருக்கும் நினைவிலில்லை, 
தொலைந்து போன முகங்கள் 
தொன்மைக்குள் உட்கார்ந்து கொண்டு 
காலத்தை நகர்த்துவது யாருக்குத் தெரியும்? 
கரம் கொடுத்த கைகள் 
முகங்களை அடையாளம் காட்டுவதில்லை, 
நான் என்ற சொல் 
அவர்களுக்கு நஞ்சாகவே இருக்கிறது, 
நிழலுக்கு ஒதுங்கியவன் 
மரத்தை அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான், 
தன் வீட்டிற்கு முத்தம் கொடுத்த மனிதர்கள் 
எத்துணைப் பேர்? 
செருப்புகளைக் கேவலமாகப் பார்க்கும் சமூகத்தில் 
காலம் 
சிலர் மனிதர்களைத் தொலைத்து விடுகிறது 
அவர்கள் எப்போதும் 
படிக்கட்டுகளாகவே இருந்திருக்கிறார்கள்.

- மு.முகமது பாட்சா* 

கவிதைக்காரன்



கவிதைகளில் வாழ்கிறவன், 
கதைகளுக்குள்ளும் பிரவேசிக்கிறான். 

வானத்தை மடக்குவதும், 
விரிப்பதுவும் 
அவனுக்கு  கை வந்த கலை ! 

நட்சத்திரங்களை இடம் மாற்றி 
பண்டங்களை 
உருமாற்றத் தெரிந்தவன், 

அவன் வானத்தில் மட்டும் 
காதலென்ற ஒற்றைச் சிறகு 
எப்பொழுதும் பறந்து கொண்டேயிருக்கும் ! 

எழுத்துகளில் கண்கள் வரைந்து 
கோபம் காட்டவும், 
கருணைக் காட்டவும் தெரிந்தவன், 

எழுத்துகளுக்குள் 
எழுத்தாக வாழக் கற்றவன், 
வார்த்தைகளால் 
ஆயுதங்களைத் தயாரிக்கத் தெரிந்தவன் ! 

அவனது கனவுலகமும் 
திறந்து வைத்த தந்திரவெளி, 
அந்த மந்திரவெளியில் 
யாரும் பிரவேசிக்கலாம் , 
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்! 

அவனென்றுமே, 
மகா கவியாக இருப்பது கிடையாது, 
அதன் உயரம், கோபுரத்திலேற்றி 
மற்றவர்களால் 
அண்ணாந்து பார்க்க வைத்துவிடும், 

அவனென்றுமே, சாதாரணன்தான் ! 

- மு.முகமதுபாட்சா*
28/12/2016

களவுப் போனவள்



வாசலில் நீரைத் தெளித்து 
கோலம் போட்டவள் 
தன் கற்பனைகளை 
அதற்குள் விரித்து வைக்கிறாள், 

கணவனும்  அதைத்தான், 
துணியில் விரித்து 
காசாக்கி சோறு போடுகிறான் 

சிந்திக் கிடந்த 
வண்ணக் குழம்புகளையெடுத்து 
ஓவியமொன்று சமைக்கிறாள், 
ஒளிந்திருந்த வான்கோவை 
கிழித்தெறிந்து நக்கல் செய்கிறான் , 

ஓவியக் கூடத்தின் 
வண்ணங்களை மிஞ்சிடும், 
சமையலறையின் சித்திரங்களை 
அவள்தான் வடிவமைத்தாள் 

அவளின் கனவுகள் வரையும் 
ரகசிய சித்திரங்களை 
தனது டைரிக் குறிப்புகளில் 
பதுக்கி வைத்திருக்கிறாள், 

என்றாவது ஒரு நாள் 
அதுவும் கூடக் களவு போகக் கூடும் 
அவளைப் போலவே 
அவள் கணவனின் பெயரோடு .

- மு.முகமது பாட்சா*
28/12/2016

நான் இரசித்த கவிதைகள் - 111

 படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

அவளும் பூவரசும். 

தோட்டத்துப் பூவரசுதான் 
அவளுக்கு எல்லாமும். 

காலையில் எழுந்ததும் ஒருமுறை 
காப்பியருந்தியதும் ஒருமுறை 
குளிக்கப் போகுமுன் ஒருமுறை 
குளித்தபின்பு ஒருமுறை யென 
அதனோடு பேசித் திரிவாளெப்போதும். 

எப்போது பூக்கும் 
எப்போது காய்க்கும் 
எல்லாம் அறிவாள் .. 
அதுவும் அறியக்கூடும் 
அவள் பூத்த தருணங்களையும் 
காய்த்த தருணங்களையும். 

இலை பறிப்பாள். சுற்றி 
கொழுக்கட்டை அவிப்பாள். 
அதன் மடியிலமர்ந்தே உண்பாள். 
காய் பறிப்பாள். சாறெடுப்பாள். 
சருமத்தில் தடவிச் சிரிப்பாள். 
கழுத்து சங்கிலியிட்ட கருப்பு 
மறையுமென்பாள். 
அம்மா அதட்டிடிலோ மரத்தடியில் 
அமர்ந்தழுவாள். 
பட்டையுடைத்துக் கடித்து 
அது இனிப்பென்பாள். 
பகல் முழுதும் அதன் பக்கத்திலிருப்பாள். 
அந்தி சாயப் பிரியவொண்ணாது 
எழுந்து வருவாள். 

நாள்தோறும் பொழுதெல்லாம் 
அவளிருப்பது பூவரசின் அடியில்தான். 

பிள்ளைவீட்டார் பெண்கேட்க 
பூவரசிடம் தான் சொல்வாள் 
மாப்பிள்ளையழகை 
பிடித்தாலும் பிடிக்காவிடினும். 
மரம் போல் நிற்கும் பூவரசு. 

வரனொன்று தகைந்த நேரம் 
யாரெனக் கேட்டாளில்லை 
வயதென்ன கேட்டாளில்லை 
குணமென்ன கேட்டாளில்லை 
தொழிலென்ன கேட்டாளில்லை 
உடன்பிறந்தாரெத்தனை.. 
மாமியார் கொடுமையுண்டா.. 
மாமனார் பரிவாவதுண்டா.. 
எதையுமே கேட்டாளில்லை... 

கேட்டதெல்லாம் ஒன்றேயொன்று 
அங்கன பூவரசமிருக்கா.. 

 சுரேஷ் பரதன்.

Wednesday, 27 December 2017

பேனா புகைகிறது



இரவைக் கிழித்த மின்னல் 
உடனே இறந்துவிட்டது 
வானம் அழுவது யாருக்காக? 

நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவன் 
அப்பாவிடம் கேட்டான் 
நட்சத்திரங்களும் நம்மை எண்ணுமா? 

நான்கு சுவருக்குள் 
உட்கார்ந்திருக்கும் மௌனத்தை 
ஒரு தும்மல் கலைத்து விடுகிறது, 

படிக்காத புத்தகங்கள் 
யாராவது ஒருவரின் வாசிப்பிற்காகவே 
உயிரோடு வாழ்கிறது, 

உணர்வில்லாத காதலை 
உதறிவிட்டுப் போனவன் தேசாந்திரி 
உறவுகள் காத்திருக்கின்றன, 

காடுகளுக்குப் போனால் வன வாசம் 
காடுகளே போனால்? 

நகரத்தின் சுவாசங்கள் 
மருத்துவ மனையில் நிற்கின்றன 
ஆக்சிசனுக்குக் காசு வேண்டும், 

எழுத்துகள் இடம் மாறும் போது 
சில நேரம் தீப்பற்றிக் கொள்கின்றன 
பேனா புகைகிறது. 

- மு.முகமது பாட்சா*

நான் இரசித்த கவிதைகள் - 110

அறை 
.
அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது. 
கோடைகாலம் குளிர்காலம் 
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது. 
எனக்குத் தோவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன். 
இந்த அறை 
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது. 
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது. 
இந்த அறையில் நான் 
வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் 
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும் 
எனக்கு தகவல் வருகிறது. 
இது என்ன விசித்திரம்! 
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன? 
இனி எனக்கு நிம்மதியில்லை. 
நான் நானாக இருக்கவே முடியாது. 
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன. 
அறைக்குள் என் ஆடைகளை மீறி 
கண்கள் என்னை ஒற்றறிகின்றன. 
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள். 
*

சுகந்தி சுப்ரமணியம் (அமரர்)
நூல் : மீண்டெழுதலின் ரகசியம்

Tuesday, 26 December 2017

பறப்பதற்கா? புதைப்பதற்கா?

தானியங்கு மாற்று உரை இல்லை.

பறப்பதற்காக 
சிறகுகளைக் கோதிக் கொண்டிருக்கிறேன் 
உதிர்ந்த இறகுகள் சோகமாகப் பார்க்கின்றன, 

என் நிழலில் நானே எப்படித் தங்குவது 
பிறர் நிழலில்லாமல் 
யாரும் நிஜமாகவே இருப்பதில்லை, 

வார்த்தைகளுக்கு 
வாசனைத் தைலம் தேய்க்கிறேன் 
இல்லையென்றால் 
அவை சாக்கடைகளில் சேர்ந்துவிடலாம், 

மௌனமென்பது 
மரணத்தில் நிலவும் இறுதி மொழி, 
மௌனிப்பவன் 
ஏதோ ஒரு வகையில் மரணித்திருக்கிறான், 

இளமையைத் தொலைத்த பிறகும் 
முதுமையில் தேடுகிறார்கள் இளமையை 
வாழ்க்கை அங்கேயே நிற்கிறது, 

நடப்பவனுக்கும் தரைதான் வானம் 
பறவைகளும் 
இங்குத்தானே உணவு உண்ணுகின்றன, 

பாட்சாவின் கவிதைகள் 
பறப்பதற்கா அல்லது புதைப்பதற்கா? 
சிறகுகளைச் சற்றே உலர்த்திக் கொள்கிறேன்.

- மு.முகமது பாட்சா* 

வெண்மணியின் புகை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு மற்றும் இரவு

வெண்மணியின் நெருப்பின் புகை 
இன்னமும் மிச்சமிருக்கிறது... 
ஆதிக்கத்தின் கால்கள் 
எப்போதும் நீண்டே இருக்கின்றன, 
புகைந்தெரியும் நெருப்புகளில் 
எதுதான் சாதித் தீ? 
யோனிகளில் நுழைந்த உறுப்புகளுக்கு 
அவையேன் தெரியாமல் போனது, 
காமத்தின் மிச்சங்களின் எச்சில்கள் 
மிகைக் கிரீடம் சூடிக் கொண்டால் 
மன்னனென மாறி விடுமா? 
நீதியென்பது அதிகாரத்தின் முன்பு 
எப்போதும் 
தலை குனிந்தே நிற்கிறது 
மனிதம் பேசாத சாதிகளல்லவோ 
மிகவும் மட்டமானவை 
முத்தங்களையெல்லாம் 
விஷமாக்கி வைத்து விட்டு 
மோகிப்பதில் என்ன பயன்? 
சாட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு 
சாப்பாடு போடுவதால் பசியாறிவிடாது, 
நீங்கள் 
இப்போதும் கொளுத்துவது நெருப்புகளைத்தான் 
அது கொளுத்தியவனையும் 
தீண்டாமல் விடவே விடாது... 
அதிகாரமென்பதே நாய்களின் குரைப்பு.... 
அடங்காமை மௌனத்தின் வெடிப்பு... 
வெண்மணி நெருப்பின் புகை 
இன்னமும் கனன்று கொண்டுதானிருக்கிறது 
சாம்பல்களெழுந்து 
பெரும் தீயினை மூட்டுவதற்கு.

- மு.முகமது பாட்சா*

Monday, 25 December 2017

நான் இரசித்த கவிதைகள் - 109

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி ! 

தலைசாய்த்து நீரருந்தும் 
சிறு பட்சியைப் போல 
வீட்டின் முற்றத்தில் 
அமர்ந்திருந்த அப்பாவிடம் கேட்கிறேன் 

நீர்நாயின் நனையாத தோலென 
மினுமினுக்கின்றன அவர் கண்கள் 
உள்ளுக்குள் உடைப்பெடுத்தாலும் 
காட்டிக்கொள்ளாமல் நிற்கின்றேன் 

உடலின் குப்பியில் விஷத்தை இட்டாற்போல் 
வலி பெருகுகிறது 

உள்ளங்கையை முறமாக்கி 
சலித்தெடுத்த மண்ணை 
ருசிபார்த்த காலந்தொட்டே 
கேட்டுக் கொண்டிருக்கிறேன் 
பதில் சொல்வாரில்லை. 

ஒட்டுப்போட்ட சக்கரமென 
தும்பியைப் பிடித்துக் களித்த பருவத்திற்கு 
உருண்டோடுகிறது அவர் மனம் 

வலி பிசகாமல் 
அவரும் அவரப்பாவிடம் கேட்டது 
நினைவிலாடும் போலிருக்கிறது 
அப்பாவும் அழுகிறார் நானும் அழுகிறேன் 

இதயத்தின் ஒற்றைக் கப்பியில் கட்டப்பட்ட 
கேள்வியின் ஊஞ்சல் 
காலத்தின் இருபுறமும் சென்று வருகிறது 
பதிலின்றிப் பதில் சொல்வார் எவருமின்றி 

சற்றுத் தொலைவில் சொப்பு வைத்து 
தனியே விளையாடும் என் மகள் 
உதட்டின் விளிம்புக்குள் துக்கத்தை மடித்து 
அதே கேள்வியைக் கேட்கிறாள் என்னிடம் 

சேரி ஊராகாதா அம்மா? 

சுகிர்தராணி 

நூல் : இப்படிக்கு ஏவாள்

எட்டு பக்க கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

எட்டு பக்கக் கதையை வைத்துக் கொண்டு 
இதுதான் நாவலென்கிறாள், 
சிரித்துவிட்டேன், 
ஒற்றை வார்த்தை வைத்துக் கொண்டு 
கவிதை எழுதும் போது , 
இதுவும் சாத்தியமென்றாள் , 
உள்ளே நுழைந்து பார்த்தேன், 
ஒற்றை வரியைக் கடக்கும் முன்பே 
ஓராயிரம் நினைவுகளை மீட்டு வைக்கிறாள் , 
அவளின் இரவுகளும் பகல்களும் 
என்னை கடத்திச் செல்கின்றன , 
அவளின் அழுகைகளை என் கண்களில் 
அனாயாசமாய் இறக்கி வைக்கிறாள், 
அவளின் கதையின் நாயகன் 
நானில்லை என்றாலும் 
நானும் இருக்கிறேன் தோழனாக ... 
இன்னமும் படிக்காத பக்கங்கள் 
இருக்கத்தான் செய்கின்றன , 
ஆம், 
அவளிடமும் நான் 
படிக்காத பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன , 
சிலச் சிரிப்புகளும் 
அவள் பக்கத்தில் சிதறிக் கிடந்தன , 
அவளின் சிரிப்புகளில் நான் இயைந்த போது 
என் கண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள், 
அப்போதுதான் அவளின் கண்களைக் கவனித்தேன், 
மிச்சமுள்ள கதையை , 
இன்னமும் அவள் எழுதாமல் வைத்திருப்பதை,
.
இப்போதும் சொல்கிறேன் 
அவள் எட்டு பக்கத்தில் எழுதியிருப்பது நாவலல்ல, 
பெரும் காவியம் 

- நட்புடன்...முகமது பாட்சா*
25/12/2016

Sunday, 24 December 2017

காலம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர் மற்றும் வெளிப்புறம்

காலம் குதிரையாக மாறுகிறது 
உட்கார்ந்திருக்கிறவன் இடம் மாறுகிறான் 
நிழல்களைப் பிடிக்கத்தான் 
இத்துணை வேகமாக ஓடுகிறார்கள் 
தேவதைகளென்பது மாயவார்த்தை 
மயக்கமென்பது காலத்தின் படிமம் 
நின்றவிடத்தில் நின்று கொண்டு 
வந்துவிட்டதாகச் சொல்பவன் மனிதன் 
கற்பனை அவனை உண்ணுகிறது 
கர்வம் அவன் தலையின் அழுத்தம் 
நிர்வாணம் நிஜம் மூடப்பட்டது 
வெளிச்சம் பார்வைகளின் மாயை 
இருட்டு நிஜம் - நிழலென்கிறான் 
பூமியின் மணம் அவன் உடல் வாசம் 
பறந்தாலும் சீரணிப்பது மண் 
ஆசை - மாயையின் மாபெரும் வலை 
மாட்டியவன் கரைதான் கடலென்கிறான் 
கடல்தான் வாழ்வின் தத்துவம் 
மணற்துகள்கள் எண்ண முடியாத நிராசைகள் 
சுவடுகள் மறையக் கூடியது 
அலைகள் எப்போதும் ஓய்வதில்லை 
காலம் குதிரையாக மாறுகிறது 
உட்கார்ந்திருக்கிறவன் இடம் மாறுகிறான் 

- மு.முகமது பாட்சா*

Saturday, 23 December 2017

கிறிஸ்துமஸ்



கூட்டல் குறிப் போட்டு 
சிலுவை என்கிறாள் 
அந்தச் சுட்டிப் பெண்

கோமாளித் தாத்தா 
கொடுத்தப் பரிசில் 
பார்பி பொம்மை

குடிலுக்கு 
குச்சியை நட்டு விட்டு 
குடிலையே 
தான் தான் அமைத்ததாய் 
பெருமைச் செய்கிறாள் 
ரோஸ்லினா

"ஏம்ப்பா.., 
ஏசுவும்,முருகரும் 
ஃபிரண்டா?" 
எனக் கேட்கிறாள் 
கிரேஸியா!

"அப்பா, 
அவளுக்கு ஒன்றும் 
தெரியவில்லை.. 
அல்லாவும், ஏசுவும் தான் 
ஃபிரெண்ட்?" 
என்றுச் சிரிக்கிறான் 
ஸ்டீஃபன்!

ஜார்ஜிக்கோ 
பதில் சொல்லத் தோன்றவில்லை

மகிழ்ச்சியிலேன் 
மதத்தை நுழைக்க வேண்டும்?
அப்படியே 
இருந்து விட்டுப் போகட்டும்... 
ஏசுவின் பிறந்த நாள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

- மு.முகமது பாட்சா* 
24/12/2016

Friday, 22 December 2017

கிறிஸ்து தினம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

பிலாத்துவின் கைகளில் 
திணிக்கப்பட்ட எழுதுகோல் 
முள் கிரீடம் சூடியிருந்தது, 
பேதுருவின் வாக்குறுதி 
மூன்று முறை நழுவிச் சென்றது, 
சபிக்கப் பட்ட முத்தம் 
யூதாசு காரியோத்துவின் 
இதழ்களிலிருந்து, 
சீடர்களின் நம்பிக்கையில் 
உயிர் பயம் ஒட்டிக் கொள்ள, 
கயபாவின் பாடசாலை 
பொய்களுக்குப் புடம் போட்டது.. 
அதிகாரத்தின் மாட்சிமை 
அகங்காரம் சூடிக் கொள்ள 
எரோதுவின் குதிரைகளும் 
எத்துணைக் குழந்தைகளை 
புதைத்திருக்கும் 
மாட்டுத் தொழுவம் 
மகிமையை ஏந்திக் கொள்கிறது 
தச்சன் வீட்டில்தான் 
தத்துவன் பிறக்கிறான், 
முத்தமிட்ட இதழ்களுக்கு 
மீட்சிமை கிடைத்தது... 
சிறு குடிலமைத்து 
நட்சத்திர விளக்கேற்றி 
நினைவு கூறலில் மட்டுமே 
முடிந்து விடுகிறது 
கிறிஸ்துவின் ஜனன தினம்!

- மு.முகமது பாட்சா* 

நான் இரசித்த கவிதைகள் - 108

 ராபியத்துல் பஸ்ரியா க்கான பட முடிவு

என்னை ஆள்கிறது அமைதி , 
உடன் பிறாவா சகோதர, சகோதிரிகளே, 
சாந்தியும் சமாதானமும் 
உங்களை நோக்கியே மொழிகிறேன் 
என்னைச் சூழ்ந்து நிற்கும் சூட்சமங்களை 
நான் மிகவும் நேசிக்கிறேன் 
என் இறைவனின் அன்பிற்கு
என்றுமே மாற்றுகள் கிடையாது ...
காதலை, கஷ்டங்களாக 
இறக்கி வைத்தவன் அவன்தான் 
அவன் அழகிற்குள்தான்  மூழ்கிக் கிடக்கிறேன், 
நிறைவில்லா மரணமென்னை 
நிலைக் கிடத்திப் போனாலும், 
அவன்தான் என் இதயத்தின் காதல்வாசம், 
அவன்தான் என் பயணத்தின் கிப்லாவாகும்,
துன்பங்களென்னை சூழ்ந்தால் என்ன ? 
மருத்துவன் என்னருகே இருக்கிறான் , 
மகிழ்ச்சியில் உறுதியாக வேர் ஊன்றிய 
பரவசத்தின் பரவசமவன்,
நேசனே சங்கமத்தில் சங்கமிக்கத்தான் 
துன்பங்களையும் 
காதலாகவே ஏந்திக் கொள்கிறேன் , 
இறைவா ! பிறவியின் முழுமை 
உன் அன்பிற்காகவே ஏங்கிக் கிடக்கின்றது, 
ஏற்றுக்கொள் !

ராபியத்துல் பஸ்ரியா
(பெண் சூஃபி) 

தமிழ் : முகமது பாட்சா* 

கி.பி 695 ல் அரபு நாட்டில் பிறந்த பெண் சூஃபி யாவார். 
இவர் இறைவன் மீது அளப்பறிய அன்புக் கொண்டவர். 
கவிதைகள் எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தார்.

விரல்களின் சப்தம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

விரல்களின் ரேகை வழியே 
ஏதாவதொரு சப்தம் 
ஓடிக் கொண்டேயிருக்கிறது, 
மின்னூட்டம் வழியே அவற்றை 
கணினிக்குக் கடத்துகிறேன், 
காற்றாய் வரும் எழுத்துகள் 
குதிரைகளையும் பறவைகளையும் 
இழுத்து வருகின்றன... 
கடலாய் விரியும் வார்த்தைகள் 
என்னை உள் வாங்கிக் கொள்ள, 
நீச்சல் தெரியாதவன் நீந்துவதற்கு 
தேவதைகள் கூடவே வருகிறார்கள், 
காலை பிடித்திழுக்கின்றன 
வஞ்சக வார்த்தைகள் 
மணலுக்குள் 
ஆழப் புதையும் கவிதைகளை 
ராஜாளியின் இறகுகள் 
ஏந்திக் கொள்கின்றன, 
மீட்பின் வெளிச்சம் கண்களைக் கூச 
பறவைகளின் பார்வை ரேகைகள் 
ஒரு சில வார்த்தைகளை 
கற்றுத் தருகின்றன... 
அதிலொன்று 
'பார்வைகளிலோடும் சப்தங்களையும் 
பத்திரமாக்கப் பழகிக்கொள்'. 

- மு.முகமது பாட்சா* 

Thursday, 21 December 2017

கனவுகளின் தவம்

தானியங்கு மாற்று உரை இல்லை.
Thanks ,  painting: Marefumi komura - jappan artist

கடந்து போகும் கனவுகளைப் பிடித்து வந்து 
தலையணையின் கீழ் மறைத்து வைக்கிறேன், 

இரவுகளை மட்டுமல்ல - அது 
பகல்களையும் சாப்பிட்டு விடுகிறது, 

அவாந்தரத்தில் நிற்கும் அந்திமப் பொழுது, 
வெளிச்சமில்லா வெற்றிருட்டில் நடந்து போகிறது, 
வேடிக்கை மனிதர்களும் அங்கில்லை, 

விழிப்பது போல் ஜனனமும் 
உறங்குதல் போல் மரணமும் வந்து விடுகிறது 

படித்த பாடங்களை 
தலைமுறைகள் புரட்டிப் படிக்கின்றன, 
ஆளுக்கொரு சிரிப்பாய் அகன்றும் போகிறார்கள், 

பட்டாம் பூச்சிகளின் கனவுகளை 
பாடம் செய்து வைக்கிறது 
இலையுதிர் காலத்தின் மரங்கள், 

புழுக்களின் தவம் இலைகளில் கூடு கட்டும் 
பூச்சிகளாய் பறக்கும் போது மட்டுமே 
பூக்களின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. 

- மு.முகமது பாட்சா*


Wednesday, 20 December 2017

பட்டாம் பூச்சிகளாய்


தானியங்கு மாற்று உரை இல்லை.
கதையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு 
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் , 
பட்டாம் பூச்சிகளின் வண்ணங்களை 
தூவிச் செல்லும் அந்தப் பறவையின் பெயர் 
பட்டாம்பூச்சி என்றே கூட இருக்கலாம் , 
வண்ணங்களை எழுத்தில் சேர்த்த பிறகுதான் தெரிந்தது 
நானொரு ஓவியன் என்று ! 
என் ஓவியத்தில் மிளிர்ந்த தாரகையின் 
கண்களின் மையெடுத்து 
கவிதைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன், 
அஃது அவள் கன்னத்தில் 
திருஷ்டிப் புள்ளியாய் உட்கார்ந்திருக்கிறது , 
கவிதையெழுத வந்தவன் 
அவளோடு கதையொன்றில் நுழைகிறேன், 
கதையின் வாசல் எங்களுக்காகவே திறந்திருக்கிறது, 
உங்கள் வீட்டின் சன்னல் கதவுகளை மூடி வையுங்கள், 
நாங்கள் பட்டாம் பூச்சிகளாய் உருமாறி 
உங்களின் வீடுகளுக்குள்ளேயும் நுழையக் கூடும் !
- மு.முகமது பாட்சா*
21/12/2016

நான் இரசித்த கவிதைகள் - 107



பழக்கம்.. பழக்கம் வேண்டும் 
தானாகவே அது ஒழுக்கத்தைத் தரும் 
என்று சான்றோர்கள் அடித்துச் சொன்னார்கள் 
தவமும் ஒரு பழக்கமா ? 
‘சும்மா இரு ‘ ஒரு தத்துவமா ?

கிரமமாக காலை மாலை பல ஆண்டுகளாக 
அவன் துதி பாடி ஆடிச் சரணம் அடைவதை 
வழக்கத்தில் ஆரம்பித்தது 
இன்று பழக்கமாகி வட்டதை நான் உணர்கிறேன்

மூன்று வேளையும் தவறாது சாப்பிடுவதும் 
ஒரு பழக்கம் தானே ? 

ஒரே முனையாக ‘சும்மா இருக்க ‘ நிர்மல 
ஆகாயம் போல் நிசப்தமாய் இருக்க 
நிச்சயம் செய்து கொண்டு 
காலையில் ஏற்றி வைத்த வெள்ளி விளக்கின் முன் இருந்தேன். 

முதல் நாள் அந்தியில் தெரு வாசலில் வீட்டுக்கு முன் 
குப்பை லாரி எடுத்துச் செல்ல 
இரண்டு பெட்டிகள் நிறையக் குப்பையும் 
உடைந்த ‘கராஜ் டோர் மெஷினையும் ‘ வைத்தோம். 
கண் மூடியிருந்த மனம் ஏசுதாஸ் பாடிய பக்திப் பாடலில் அழுந்த 
நன்றாகத் தெளிவாகக் குப்பை லாரி வரும் 
சப்தம் கேட்டு எழுந்தேன். 

என் வீட்டுக் குப்பைகள் 
லாரியில் கொட்டுவதை ஜன்னல் வழியாகப் பார்த்து முடிந்த பின் தான் 
திரும்பினேன் என் மெடிடேஷனுக்கு. 

நினைவுச் சரம் பக்திப் பாசுரங்களைத் தொடர 
மனம் ஓடியது உன் தியானம் மிக மிக உயர்ந்தது 
குப்பையெல்லாம் போனதா என்று அறிய 
உடன் ஆசனத்தை விட்டு எழுந்தாய் அல்லவா ? 
அதன் பொருளில் கலந்த கருத்துத் தான் என்ன ?

ஏற்றின கற்பூரம் , கற்பூரத்தின் நறுமணம் 
விண்ணெல்லாம் சூழும். 

குப்பை போனாலும் இருந்தாலும் குப்பை தானே ? 
நீ எது ஆனாய் ? குப்பையா ? கற்பூரமா ? 
சும்மா இருக்கத் தெரியாத வெறும் ஒரு பெண் ஜென்மம் தான். 

ஆனால் முனிவர்கள் நடமாடும் காட்டுப் பாதையில் 
தலை நிமிராமல் புல் பூண்டுகளைப் பறித்தெறியும் 
சீலத்தைப் பெரிதாகக் கொண்ட மூதாட்டி சபரி 
என் மனக் கண்ணில் தோன்றி மறைவானேன் ? 
சுவரில் மாட்டியிருக்கும் அன்னை தெரிசாவின் படம் 
எதற்குச் சாட்சி ? 
*
கவிதாயினி திரிசடை

குறிப்பு : காலஞ்சென்ற திரிசடையின் இயற்பெயர் சாந்தா சுவாமிநாதன். ‘பனியால் பட்ட பத்து மரங்கள் ‘ கவிதைத் தொகுதியின் ஆசிரியை. கவிஞர் நகுலனின் சகோதரியும் ஆவார்.

 இவர் கவிதைகள், கவிஞர் வெண்ணிலா அவர்களால், தொகுக்கப் பட்டு 1999-ல் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை அந்தத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது.)

தன்போகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இரவில் விழித்துக் கொண்ட குரங்கு 
வனத்தை நோக்கி ஓடியது, 
விழுதுகளைப் பிடித்து இடம் மாறியது, 
கொத்துப் பழங்களை எச்சில் செய்தது, 
சொட்டும் தேனை நக்கிச் சுவைத்தது, 
முற்றும் மறந்த மோன நிலையில் 
கொட்டும் மழையில் நனைந்து களித்தது , 
நதியில் மூழ்கி யெழுந்த வேளையில் 
உருவம் தொலைத்து அழகனானது, 
மனத்தைப் பிசைந்து வடிவம் செய்து 
அழகியொருத்தியை அருகில் வைத்தது, 
பஞ்சணையொன்றில் படுக்கவைத்து, 
பழரசம் பருகி படர்ந்தக் கொடியாய் 
பிணைந்து இணைந்தது , 
அழகியின் முகத்தில் அகோரம் துளிர்க்க 
கோரம் மிகைத்து பிசாசன் ஆனது, 
இரவும் தன்னை இழந்து நிற்க, 
உருவம் தொலைத்து மனிதம் பூசி, 
குரங்கும் , மனதில் இறந்து கிடந்தது !

- மு.முகமது பாட்சா*
20/12/2016

Tuesday, 19 December 2017

மொழிகளுக்குள் அடங்காத கவிதை

தானியங்கு மாற்று உரை இல்லை.


மொழிகளுக்குள் அகப்படாத 
கவிதையொன்றைத் தேடிக் கொண்டிருந்தேன் 
வார்த்தைகளுக்குள் 
அடங்காத தன் பரந்த குடையை 
அஃது எங்கு விரித்திருக்கும்? 
மௌனமென்பதும் 
ஒரு மொழியாகிவிட்டதாகக் 
காற்றில் உதிர்ந்த சருகுகள் சொல்கின்றன, 
பார்வைகளின் மொழியில்தான் 
காதல் வளர்கிறது... 
காகமொன்றிடம் அக் கவிதைப் பற்றிக் கேட்டேன் 
அஃது ஒற்றுமையென்றது, 
நேசம் கூட ஒரு மொழிதானென்று 
புறாக்கள் சொன்னது, 
உடல் மொழிதான் 
மொழிகளின் ஆதார சுருதியென்று 
ஊமையொருவன் சாடையில் சொல்கிறான், 
மொழி என்பதே சொல்வதுதானே! 
சொல்லாத கவிதையை 
நான் எங்குதான் தேடி பிடிப்பது? 
காற்றிடம் கடைசியாகக் கேட்டுப் பார்த்தேன் 
அது சிரித்துவிட்டு 
அந்தக் கவிதை 
கபர்குழியின் கடைசி வெப்பம் என்றது 

- மு.முகமது பாட்சா*

Monday, 18 December 2017

கிழிந்த கவிதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அந்தக் கவிதையை 
ஆளுக்கொருவராகக் கிழித்தெறிந்தார்கள், 
பெண்ணாயிருவென்று 
பொட்டிலடித்தான் அண்ணன் 
யாரவன் என்ற அப்பாவின் கையில் 
கூந்தல்கற்றைச் சிக்கிக் கொண்டது... 
அம்மா 
ஒரு மூலையில் அழுது கொண்டிருந்தாள் 
அவளின் கவிதையும் 
அப்படியொரு நாள் கிழி பட்டிருக்கலாம், 
எட்டிப் பார்த்த யன்னல்கள் 
காலம் கெட்டு விட்டதாகச் சொன்னது, 
எட்டு வயது தங்கைக்கு 
புரியாமல் இருக்கலாம்.... 
ஆனாலும் அழுது கொண்டிருந்தாள்... 
பெண்ணின் இலக்கணம் சற்றே புரிய, 
மானம் போனதாக 
அப்பாவின் விரல்கள் முதுகில் எழுதியது 
மாப்பிள்ளையைப் பாருங்கள் 
சனியனை முதலில் அனுப்புவோம் 
அண்ணா பொறுப்பாகப் பேசினான், 
கவிதையிலிருந்தவன் கற்பனையென்று 
விளங்க வைக்கும் நேரத்தில் 
இந்தச் சனியின் கழுத்தில் சங்கடன் கட்டிய தாலி 
கவிதையை முடித்திருக்கலாம்.

- மு.முகமது பாட்சா

சுனாமி என்றும்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர், சமுத்திரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

மௌனத்தைக் கடத்தி சிறை வைக்கிறேன், 
சப்தங்களின் கூட்டுத்தொகை 
வனத்தை அசைத்துப் பார்க்கிறது , 
போதி மரத்தின் கீழ் 
கரையான் புற்றுகள் ஆக்கிரமிக்க, 
புற்றீசல்களைப் புசிக்க 
அகடூரிகள் ஆக்கிரமிப்புச் செய்கின்றன, 
புத்தன் சிலையாகவே இருக்கிறான், 
அவன் மடியிலேறி 
பாம்புகள் சல்லாபம் செய்கின்றன ! 
மௌனத்தைக் கிழித்து வந்த அம்பொன்று 
சமாதானப் புறாவை சாய்த்துவிட்டுப் போகிறது, 
வேடனுக்கான இரை, 
வல்லூற்றுக்கென்ற விதியை யார் மாற்றுவது ? 
வலிகளும் ,இழப்புகளும் 
மௌனத்திற்குள் புதைந்தெழும் போது 
கடலின் சீற்றம் வனத்திற்குள் நுழைந்து, 
போதிமரங்களை சாய்த்துவிட்டு நகரும் 
அலைகளின் நீரில்தான் 
பாம்புகளும் செத்து மிதக்கின்றன 
கரையான்களோடு...

இந் நிகழ்வை சுனாமி என்றும் சொல்லலாம், 
மௌனத்தின் பெருத்த கோபமென்றும் சொல்லலாம் !

நட்புடன்...முகமது பாட்சா*
19/12/2016

இன்ஸ்டன்ட் கவிஞர்கள்




தானியங்கு மாற்று உரை இல்லை.


கவிதைகளுக்கான 
சொற்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள், 
அடித்த காற்றில் 
பறந்து போனதாக ஒருவன் சொன்னான், 
எலிகள் இழுத்துப் போயிருக்கலாம் 
என்றும் கருத்து வைக்கப் பட்டது , 
எழுதாத கவிதையொன்றை எழுத 
வாய்ப்பே யில்லையென்று 
ஒருவன் அலுத்துக் கொண்டான், 
திருடிய வார்த்தைகளை அடுக்கிய ஒருவன் 
அருத்தம் கிடைக்காமல் 
புரிந்தவர்களுக்கு இது புரியுமென்றான், 
வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் 
"நிலா" என்ற வார்த்தையை மீறி 
நகராமல் நின்றான், 
நவீனத்திற்கே விளக்கம் தெரியாமல் 
பின் நவீனத்தை ஒருவன் பேசிக் கொண்டிருந்தான், 
எழுத நினைத்த கவிதைகளெல்லாம் 
அவர்களின் 
விரல்களின் இடுக்கில்தான் அமர்ந்திருந்தது, 
உதறிவிட்டுக் கொண்டே 
கவிதைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள் !

- மு.முகமது பாட்சா*

ஆங்கில மொழிப்பெயர்ப்பு : ஸ்ரீ என்.ஸ்ரீவத்ஸா

They were searching 
words for poems
Blown away by the winds
said one
May have been dragged off
by mice
was another view put forth
One lamented 
about the lack of opportunity 
to write 
an unwritten poem
The person who was
arranging stolen words
without getting their meaning
declared that 
those who understand
shall comprehend 
The one who was
gazing at the sky
not wanting to go
beyond the word "moon"
stood still
Unaware of the definition 
of a novel
one went on about the neo novel
All the poems they
wished to write
were right there
in the gaps 
between their fingers
Shaking off
they kept searching

for poems


Popular Posts