நடந்துபோவது
மிகவும் கஷ்டமாக இருக்கிறது
இப்போதுதான்
அந்தச் சாலையைப் போட்டிருந்தார்கள்
சரளைக்கல்லொன்று
தோள்பட்டையைப் பதம் பார்க்கிறது...
தோள்பட்டையென்றவுடன்
அவளின் நினைவு வராமல் இருந்தால் தவறு
அதிலவள் முகத்தை வைத்து உறங்குவாள்...
சூடான மூச்சுக்காற்றில்
என் சாபங்கள் விமோசனம் பெறும்...
அப்போதும்
அழுதுக்கொண்டே ஓடிவந்தாள்...
சராசரியாக நின்றிருந்த என்னைச்
சம்மட்டிகள் ஓங்கியடித்தன...
நான் அப்படியே நிற்க
அவள் தலைச் சுற்றி கீழே விழுகிறாள்
அவள் விழுந்தவிடம் புல் முளைத்திருக்கிறது
என் கால்களின் கீழ் தீயும் வாசனை
நான் அங்கிருந்து நகர்கிறேன்
நடந்துபோவது
மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
27 /02 /2019
நான் பறந்து கொண்டிருக்கிறேன்
எதற்கான உத்தரவுகளென்று தெரியவில்லை
வட்டமிட்டுக் காட்டும் ரேடர்
சுயேச்சையாகவே சுடுவதற்கு உத்திரவிடுகிறது
கீழே சில நூறு உயிர்கள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன...
சற்று நேரத்தில் புகை வானுயர்கிறது...
ஓலங்களைக் கேட்க வாய்ப்பில்லை
மனதிற்குள் சின்னக் கீறல் நகர்ந்துபோகிறது
மகள் புன்னகைத்துக் கையசைக்கிறாள்...
மனைவி தன் கண்ணீரைக்
கைக்குட்டையில் மடித்துத் தருகிறாள்..
பெருமையாகத்தான் இருக்கிறது
கீழே அமைதியாக இருக்கிறது
அமைதியென்பது எவ்வளவு ஆபத்தானது...
நான் விழுந்து கிடக்கிறேன்
என்னைச் சுற்றிலும் எதிரியின் சிப்பாய்கள்..
மகள் புன்னகைத்துக் கையசைக்கிறாள்...
மனைவி தன் கண்ணீரைக்
கைக்குட்டையில் மடித்துத் தருகிறாள்..
இது யாருக்கான யுத்தமென்று
கத்தவேண்டும் போல் இருக்கிறது...
எனக்கு அதற்கு மட்டும் அனுமதியில்லை.
- மு.முகமது பாட்சா*
27 /02 /2019
சற்று நிதானித்து நடக்கிறேன்
ஆம்புலன்சின் சைரன் வேகமாகக் கடக்கிறது
பாடைப்பூக்கள்
மரணத்தின் வாசனையை நிறைக்க
ஸ்கூட்டியில் சென்றவள் மணக்கிறாள்...
மண்லாரி
ஆற்றினைத் திருடிக்கொண்டுபோக
குடங்களுடன்
ஒரு சில பெண்கள் நடந்து போகிறார்கள்...
கோக் பானத்தின் விளம்பரம்
குளிர்பான கடையை அறிமுகம் செய்கிறது...
சினிமா சுவரொட்டியை
மாடொன்று நாக்கால் நக்கி வழிக்க...
நாளைய முதல்வரென்று ஒரு நடிகரை
சுவரொன்று அறிமுகம் செய்கிறது...
இடிந்த வீட்டிற்குள்ளிருந்து
எல்.சி.டி திரையிசை, ' அதாரு அதாரு '
ஸ்கூட்டரொன்று வேகமாகச்செல்ல
ஒரு பெரும் சப்தம்
அடிபட்ட நாயைச் சுற்றிலும் வார்த்தைகள்...
'நாய்தானே
பராவாயில்ல நிதானமாப் போப்பா'
நான்
சற்று நிதானித்துதான் நடக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
26 /02 /2019
உண்மை
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
நானும்
உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்...
நான் காணாமல் போனவன்
என் கேள்விகளுக்கு விடைத் தெரியாதவர்கள்
கடத்திச் சென்றிருக்கலாம்
என் கால்கள் கட்டப்பட்டிருக்கிறது...
நான் இறந்திருக்கலாம் என்பதும் கூட
ஒருவகை உண்மைதான்...
இருட்டில்
எனக்கான வெளிச்சம் இறந்து கிடக்கிறது...
பொய்யிடம் நீங்கள்
புகார் மனு கொடுத்திருக்கிறீர்கள்...
அவர்கள் தேடுவதுபோல்
நடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்...
பிரம்புகளோடு
நானும் சிதைந்திருக்கிறேன்....
என்றாவது ஒரு நாள்
நீங்கள் என்னைக் கண்டு பிடித்துவிடுவீர்கள்...
அப்போது நான்
காயங்களோடு இறந்திருப்பேன்...
என் மரணம் அரசியலாகி அரியணைத் தேடும்.
- மு.முகமது பாட்சா*
26 /02 /2019
வலிபொறுக்காமல்
எல்லோரும்
அப்படித்தான் பேசிக் கொண்டார்கள்...
ஏதோ ஒன்று நிகழப்போவதாக
வானிலை அறிக்கை மேற்கோள் காட்டியது...
பிரபஞ்சத்தின் கவலை ரேகைகள்
நதிகளின் வழித்தடங்களாக விரிந்தன...
கடல் உள்வாங்கிக் கொண்டு
பெருமூச்சினை விட்டது...
பறவைகள் வழி தெரியாமல் பறந்தன...
தொலைக்காட்சிப் பெட்டிகள் செயலிழக்க
சீரியல் விசனங்கள் வீதியில் கூடி நின்று
விருந்து வைத்தன...
செல்பேசிகள் தங்களின்
உறவுகளைத் துண்டித்துக்கொண்டன...
மதபோதகர்கள்,
'அந்த நாள் இந்த நாள்தான்' என்றழ...
குடியொருவன்
கட்டுமரமொன்றைத் தயார் செய்கிறான்..
நோவாவின் புன்னகை
வானத்தை மெல்லிதாகக் கீறிவிட
வலிபொறுக்காமல் அழுத மழை அமிலமாகி
பூமியை பொரித்தெடுத்துக் கொண்டிருக்க
அடுத்த யுகத்திற்கான விதைகள்
வேர்களினாழத்தில் அமர்ந்து
தங்களை அடைகாத்துக் கொள்கின்றன...
அவற்றின் வேண்டுதல்
'மனிதர்களில்லாத ஓர் உலகம்'
#முகமது_பாட்சா * 25/02/2019
UNABLE TO BEAR THE PAIN
Everybody said so.
The weather bulletin quoted
that something would happen.
Worried wrinkles of the universe
extended into courses of rivers.
The sea withdrew into itself
and sighed.
Birds flew directionless.
When television sets stopped working,
serial anguishes partied on the streets.
Cell phones severed their relationships.
Evangelists weep "that day is this very day".
A resident readies a catamaran.
As Noah's smile scratches the sky
and the rain crying in unbearable pain
turns into acid and fries the earth,
the seeds for the next Age
seated at the depths of roots
incubate themselves.
Their prayer -
a world without humans.
கோடாரியால்
கடல் நீரைப் பிளந்து கொண்டிருந்தவர்களை
வேடிக்கை பார்க்கிறது ஒரு கூட்டம்...
பட்டத்தால்
ஆகாயத்தை இழுப்பதாக
ஒருவன் சொல்லிக் கொண்டு திரிகிறான்
சிலைகளை வைத்தால்
சிந்தனை வளரும் என்பது
தேசியகீதத்தில் சேர்ந்து கொள்கிறது...
அருள் வேண்டி
ஆலய வாசல்கள் நிறைந்திருக்கக்
கடவுள்கள்
முகம் திருப்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்...
நல்லவர்கள்
நாற்புறமும் சூழ்ந்து கொள்கிறார்கள்...
வாக்குப்பெட்டிகள்
யாகம் வார்த்துத் தவம் கிடக்க
ஏழைகளின் வாசல்
எப்போதும் போல் இருட்டாகவேயிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
24 /02 /2019
மண் போதை, மரணமது வாசல்
விரிந்தது வானம், விடைத்தெரியா மாயம்
நிழல் நான், நிஜம் நீ
சுவையறியும் நாக்கு, சொற்களில் பிழை
வாங்குவது கடன் வசிப்பதும் கூட
(பின் செல்லும் அந்தாதி)
வசிப்பதும் கூடக் கடன்
கடன் வாங்குவது பிழை
பிழைச் சொற்களில் நாக்கு
நாக்குச் சுவையறியும் நீ
நீ நிஜம் நான்?
நான் நிழல் மாயம்
மாயம் விடைத்தெரியா வானம்
வானம் விரிந்தது வாசல்
வாசல் மரணமது போதை
போதை மண்.
- மு.முகமது பாட்சா*
22 /04 /2019
5 வருடத்திற்கு ஒருமுறை
இப்படித்தான் நடக்கிறது...
அழையாத விருந்தாளிகளாக
வருகிறார்கள்!.... போகிறார்கள்!
நலம் விசாரிக்கிறார்கள்...
குறைகளைக் கேட்டுக்
குறித்துக் கொள்கிறார்கள்....
இவர் எப்பவுமே நம்மாளுப்பா என்று
சிபாரிசிக்கிறார்கள்....
'மறந்திடாதீங்க' என்று
தொலையாத ஞாபகத்தை
மீட்டெடுக்கிறார்கள்...
போடாம
எங்கப் போயிடப் போறாரென்று
சற்று மிரட்டியும் வைக்கிறார்கள்...
கடைசியாகக் காதில் வந்து
'ரூபாய் வந்திடும்னு' ஞாபகமாகச்
சொல்லிவிட்டுச்
சிரிக்கவும் செய்கிறார்கள்...
என்ன செய்வது ஏழைங்கன்னா
எப்பவுமே இப்படித்தான்.
- மு.முகமது பாட்சா*
21 /02 /2019
பூக்கடையில்
பூ வாங்கும்போதுதான் கவனித்தேன்
பூப்போன்றேவள் சிரித்தாள்...
பூவின் பெயர் என்னவென்று கேட்டேன்
பூதான்
அதன் பெயர் என்பது
அவளுக்கு நன்றாகவே தெரியும்
இருந்தாலும்
மல்லிகை என்றே மணத்தாள்...
தொடுத்தவள் விரல்களை
முத்தமிட்டிருந்த பூக்கள் முழங்கைவரை
சரசமாடி
என் கைகளுக்கு வந்து சேர்ந்தபோது
அதற்கும் ஒரு விலையிருந்தது...
- மு.முகமது பாட்சா*
20/04/2019
தனிமை
என்னுள் வந்தமர்ந்தபோது
உறவுகள் விலகி நின்று
சிரித்துக்கொண்டிருந்தன...
நான் எனக்கென்ற முகமூடியை
வடிவமைக்கத் தொடங்கினேன்
அஃது எப்போதும்
சிரித்துக் கொண்டேயிருந்தது...
தோல்களில் வண்ணம் கூட்டிக்கொண்டேன்
கைகுலுக்கியவர்கள்
கண்சிமிட்டி மகிழ்ந்தார்கள்....
தனிமை
தனிமைப் பட்டு வெளியேற...
முகங்களைக் கழுவ
முகமூடிகளைக் கழற்றினோம்...
எல்லோருமே
என் முகத்தையே உடுத்தியிருக்க...
முகமூடிகள்
எங்களைப் பார்த்துச் சிரித்தது.
- மு.முகமது பாட்சா*
21 /02 /2019
என்னதான் செய்தி என்று
என்னிடம் கேட்கிறீர்கள்...
உங்களிடம்தான்
செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன...
நீங்கள்
அமர்ந்திருக்கும் நாற்காலி
ஒரு மரத்தின் செய்தியைச் சொல்லும்...
புழுக்கம் வரும்போது
காற்றின் தேவையை
எந்தச் செய்தி சொல்கிறது?
மீன் சுவையானதுதான்
கடலைப் பற்றி
யாரும் சிந்திப்பதில்லை...
வாகனங்கள் சுகமானது
நோய்களை வாங்கிக்கொள்கிறோம்...
எரிவாயு என்பது
பூமிப்பந்தின் சுவாசக் காற்று...
மலைகளைப் பெயர்த்து
எலிப் பொந்துகளை அடைக்கிறது நாகரீகம்
பூமி அதிரும்போது
அச்சாணிகளைத் தேடி என்னப்பயன்?
நதிகளைத் தொலைக்கவிட்டு
நீருக்காக அலைவது யாருக்கான செய்தி?
உன் மீது விழும் மழைத்துளி
ஆயிரம் செய்திகளின் அச்சாரம்...
பனித்துளியை
ரசிக்கத் தெரியாதவன்
பூக்களைப் புகழ்வது போலியானது...
என்னதான் செய்தி என்று
என்னிடம் கேட்கிறீர்கள்...
உங்களிடம்தான்
செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
19 /02 /2019
கவிதை என்றால் என்ன?
சந்த மொழிக்குள்
சிந்து பாடுவதாக இருக்கலாம்...
சிந்துவாரத்தில் மூழ்கி
முத்தெடுப்பதாகவும் இருக்கலாம்...
கதைகள் புதைத்திருக்கும்
(க)விதைகளின் நுட்பம்
கவிதையாக இருக்குமோ?
'காற்றுடன் பேசும் வார்த்தை'
கவிதை என்கிறான்
அரபியக் கிழவனொருவன்...
ஆற்றோடு கடந்து போகின்றன
நாடோடியின் பாடல் வரிகள்...
காமம் சிந்தித்த வியர்வைதான்
காளிதாஸன் பாடலா?
காதல் சொல்லும் எளியவழி
கவிதையின் மொழியா?
சோம்பேறிகளின் சொல்மொழியென்று
ஒருவன் நகைக்கிறான்...
சொற்களின் பிறப்பிடமென்று
கவிஞர்கள் மறுக்கிறார்கள்...
உழைப்பவனைப் பாடும் மொழி
என்னவாக இருக்கும்?
உழைப்பவனே பாடும் மொழி
கவிதை என்று படித்திருக்கிறேன்...
உண்மையில்
கவிதை என்றால் என்ன?
- மு.முகமது பாட்சா*
18 /02 /2019
ஒரு கோடு போட்டு
உட்கார்ந்து கொள்கிறேன்
என்னைச் சுற்றிலும் -
பல நூறுகோடுகள்
வரையப்பட்டிருக்கின்றன
கோடுகளைக்
கோலங்களாக மாற்றும் போது
பூக்கள்
என்னைச் சூழ்ந்து கொள்கின்றன...
பூக்களைப் பறித்து
மாலையாக்குகிறேன்
மணப்பெண்ணொருத்தி
தேடி வந்து நிற்கிறாள்
வாசம் நீ என்கிறேன்
வாசல் கதவினைத் திறந்து -
வாழ்ந்து பார் என்கிறாள்...
தோட்டம் பெரிதாகுகிறது
தோப்பின் மரங்கள்
நிழல் விரித்துப் படர்கின்றன...
அதன் கீழ்தான்
என் கல்லறை காற்றாறுகிறது...\
நான் அந்தக் கோடுகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
17 /02 /2019
அந்தக் கபர்களை
விளையாட்டிற்கும் தோண்டிப் பார்க்காதீர்கள்
அவை பெரும்பாலும்
பச்சிளம் குழந்தைகளாகத்தான் இருக்கும்...
அதனுள் எப்போதும்
ஒரு நடுக்கம்
நகர்ந்து கொண்டேயிருக்கிறது...
அவை கிடையாகக் கிடத்தப்பட்டதல்ல
கூளங்களாகப் பொதியப்பட்டது...
அவற்றிற்கு
தேசங்களின் எல்லைகள் தெரியாது...
அதன் காதுகளில்
அதானின் சப்தங்களை விட
குண்டுகளின் முழக்கம்தான் நிறைந்திருக்கிறது...
கேள்விகள் கேட்க யாரும்
அவற்றை அனுமதித்ததில்லை...
அவை நிம்மதியுடன் உறங்குவதாக
கற்பனை செய்துகொள்வோம்...
மதங்களைவிட மாபெரும் வன்மம்
உலகத்தில்
வேறெதுவும் கிடையவே கிடையாது.
- முகமது பாட்சா*
16 /02 /2019
தொடர்பில்லாத வரிகள்
ஒவ்வொன்றும்
ஏதோ சொல்ல வருகின்றன...
மனக்கூளம்
மாய்மாலம் பூசி நடிக்கின்றது...
மதுக்குடுவையில்
வரிகளைப் போட்டு உறிஞ்சுகிறவன்
வாசற்கதவைத் தேடிக் கொண்டிருக்கிறான்...
இரத்தச்சகதியில்
தோட்டாக்கள் உயிரிழந்திருக்க...
ஓலங்களைப் பாத்திரத்தில் நிரத்தி
வாக்குக் கேட்கிறார்கள்...
பிழைகளின் மீதுதான்
இங்கு, கிரீடம் நடந்து போகிறது...
சந்திப்பிழைக்காக ஒருவன்
வரிகளிடம்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்...
சாவைக் கையில் வைத்துக் கொண்டு
சிலர் ஓடிக்கொண்டிருக்க...
சங்கீதப் பிழைக்காக
மதிப்பெண்கள் எத்துணைக் குறைவு?
- மு.முகமது பாட்சா*
16 /02 /2019
எனது வார்த்தைகளை
வயக்காட்டின் பக்கமாக ஓட்டிச்செல்கிறேன்..
சில வார்த்தைகள்
காய்ந்தப் புற்கள் மீது உரசி
தீப்பிடித்துக் கொள்கின்றன...
எலும்புகளின் சாம்பலைப் பூசிக்கொண்டு
ஒருவன்
அங்குமிங்கும் ஓடுகிறான்...
தண்ணீரைத் தேடி
தாகத்துடன் சில வார்த்தைகள்
நடந்து செல்கின்றன...
மலையொன்று அதிர்ந்து விதிர்க்க
துளையிடும் கருவியினருகே
சில வார்த்தைகள் இறந்து கிடந்தன...
மிச்சமிருந்த வார்த்தைகளை
தேடியபோது அவற்றை
கரையான் தின்று கொண்டிருந்தது...
இப்போது
நான் மட்டும் தனியாக ... என்
- மு.முகமது பாட்சா*
14 /02 /2019
இதனைச் சிலர்
சிறைச்சாலை என்கிறார்கள்...
நான்
நான்கு சுவர்களுக்குள் அடங்கிய
தேசம் என்று மொழிபெயர்க்கிறேன்...
எங்களுக்கும்
அவர்களுக்குமிடையில் இருக்கும் தடுப்பு
சுதந்திரத்தைப் பற்றியது...
அவர்களின் உடை
நாகரீகமாக மின்னுகின்றன...
நாங்கள்
கிழிந்த உடையிலிருக்கும் கைதிகள்...
அவர்களின் கோபம்
எங்களின் சதைகளின் மீது
திணிக்கப்படுகின்றன...
அவர்களின் காமம்
எங்களின் கழிவறையில் கழிகின்றன...
அவர்களின்
துப்பாக்கி அங்கீகரிக்கப் பட்டது
எங்களின்
சொற்கள் தடை செய்யப்பட்டது...
அவர்களின் உணவு
எங்களின் உணவுகளை வீசி எறிகின்றது...
அவர்கள்
எங்களுக்கு வைத்திருக்கும் பெயர்
காட்டுமிராண்டி
நாங்கள் அவர்களை
சார் என்றுதான் அழைக்கிறோம்...
இதனைச் சிலர்
சிறைச்சாலை என்கிறார்கள்...
இந்தக்கவிதை
அதனைப் படிமம் என்று விளக்குகிறது.
- மு.முகமது பாட்சா*
15 /02 /2019
பிரபஞ்சத்தின் பெருமூச்சு
ஸ்வரக் கூட்டல்களோடு புழுதியுயர்த்தி
பெருமான்மாவை அசைக்கிறது...
புனிதப்பாடல் இசைத்துக் கொண்டு
நாடோடியொருவன் நகர்கிறான்...
விழாக்காலப் பொம்மைகள் என்னை
விற்பனைச் செய்ய...
நான் தொலைந்தவிடத்தை
திருவிழா தேடிக் கொண்டிருக்கிறது...
-மு. முகமது பாட்சா*
14 /02 /2019
பதமான கத்தியொன்றால்
வெங்காயத்தை நறுக்கியவள்
மழையை ரசித்துச் சிரித்தாள்
மேகத்திற்கு யார்
இன்னல் செய்திருக்கக்கூடும்?
முட்டையை உடைக்கும் போது ,
அவனின் முறிவு
நினைவில் வந்து போனது...
இரவை உடுத்திக் கொள்வதாக
சொன்னவன்
பகலில்
புத்த சிற்பத்தோடு நடந்து செல்ல
அமைதி
அவளிடம் மட்டும் வந்து
அமர்ந்துகொண்டது...
வயிற்றிற்குள் எட்டி உதைத்த
வாழ்க்கையைத் தடவிப்பார்த்தாள்
'முட்டைத் தீய்ந்து கருகும் வாசனை'
- மு.முகமது பாட்சா*
13 /02 /2019
என் கீரிடம் மிகுத்த சுமையானது
அதில்
விலையுயர்ந்தக் கற்களை
பதித்து வைத்திருக்கிறீர்கள்....
நான்
மிகுந்த பசியுடன் இருக்கிறேன்...
என் கைகள் மட்டுமில்லை
நம்பிக்கையும் அழுக்காக இருக்கிறது...
நீங்கள் கொடுத்த மதுவைக்
குடித்துவிட்டு
நாயாக மாறிவிடுகிறேன்
நீங்கள்
என்னைத் தடவிக் கொடுக்கிறீர்கள்...
போதைத் தெளிந்ததும்
வனாந்தரத்தில் உலாவுகிறேன்...
என்னைச் சுற்றிலும்
மிருகத்தின் சப்தங்கள் உலாவுகின்றன...
போர்வை
கிழிசலாகவே இருக்கிறது
கிரீடம் விலையுயர்ந்தது...
பசித்த மிருகமொன்று
இரையை வேட்டையாடிக் கொண்டிருக்க
நான் மட்டும்
மிகுந்த பசியுடன் இருக்கிறேன்,
என் ராஜ்ஜியம்
சுருங்கிக் கிடக்கிறதா? - ஆனாலும்
கிரீடம் விலையுயர்ந்தது.
- மு.முகமது பாட்சா*
13 /02 /2019
தூக்கம் எத்தனை மோசமானது...
தூங்கும்போது
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
இறந்தவனை
தூங்குகிறான் என்று சொல்வது நியாயம்தான்
கனவில் வருகிறவனை
கண் மூடித் தூங்கும்போது புதைத்து விட்டு
வாசல் கதவைத் தட்டும்போது
அடைத்து விடுகிறீர்கள்...
காக்காய்க்குச் சோறு வைக்காதீர்கள்
விரட்டிவிட்ட வீட்டிற்கு
மானமுள்ள யாரும் வருவதில்லை.
- மு.முகமது பாட்சா*
12 /02 /2019
நீ வருவாயா?
தேடலின் மிச்சத்தை
சன்னலோரத்தில் வைத்திருக்கிறேன்....
தேயிலை வடிநீரில்
உன் பார்வைகள் வந்து இடறுகின்றன...
கோப்பை ஏனோ மிகைக்கிறது!
வர்ணிக்கத் தெரியாதவனின் முற்றத்தில்தான்
காதல் பறவைகள் கூடமைக்கின்றன...
அவ்வப்போது நான் அதில் இளைப்பாறுகிறேன்...
ரசமிழந்தக் கண்ணாடியின் அரூபம்
எங்கோ அழைத்துச் செல்ல
மந்தகாச இருட்டில்
சிறு வெளிச்சமாய் நீ வருகிறாய்...
வெட்பம் இருவருக்குள்ளும்
புதைந்து போனதால்
விரல்பிடித்த தருணம் உணர்ந்தேன்
உலகம் உறைந்து கிடந்ததை...
இலைகள் அசைகின்றன
இதமான காற்று உள் நுழைகிறது.
- மு.முகமது பாட்சா*
12 /02 /2019
எப்போது
என் காதல் தேசத்தைப் பார்ப்பது?
ஒளிந்துவிளையாடும் கண்ணாமூச்சியில்
நீ மட்டும் சிக்குவதேயில்லை...
உன் விதைப் புன்னகையைத் தூவிவிடு
ரோஜா வனம் மலரட்டும்....
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்
வெளிச்சம் வெகு தூரத்தில் இருக்கிறது...
எந்த வார்த்தையில்
உன் நேசம் செவ்வதரமாய் ஒட்டியிருக்கும்?
சொற்கள் என்னை
விழுங்கிக் கொண்டே இருக்கின்றன...
நானொரு பரிதாபி,
காதலை யாசித்துக் கொண்டிருக்கிறேன்...
நீ என் வார்த்தைகளில்
யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
- மு.முகமது பாட்சா*
11 /02 /2019
- ஹலோ!
விளிம்பில் நிற்கும் வார்த்தை
எப்போதும் குதிக்கலாம்...
- ஹலோ!
உன் வார்த்தைகளின் சூடு
என் காதுகளில் பரவியப் பரவசம்...
- ஹலோ!
என்னிதயம் துடிப்பதை
உன் விழிகள் எப்படியறிந்தன ?
- ஹலோ!
உன் குரலில் நான்
புதைந்து கொண்டிருக்கிறேன் தோழி...
- ஹலோ!
நலம் என்பதில்தான்
எத்துணை அழகான பொய்...
- ஹலோ!
வைத்துவிடவா என்பதை
இருவருமே விரும்பவில்லை...
- ஹலோ!
இணைப்பை இழந்த பின்பும்
என் காதுகளில் உன் குரல்...
- ஹலோ! - ஹலோ! - ஹலோ...
- மு.முகமது பாட்சா*
10 /02 /2019
அந்தக் கதை
என்னருகில் வந்து அமர்ந்தது...
அதன் இருமல் சப்தம்
கோழையோடு தொண்டைக்கமறி
வீதியில் விழ
சற்று நகர்ந்து கொண்டேன்...
முதுமைப் படரா வயதுதான்...
முழு நிலவென்று
பதின்மத்தில்
பாராட்டுக்கவிதைகள் வாங்கியிருக்கலாம்...
சிறகொடிந்திருந்தது...
தாய்மைச் சூப்பா முலைகளில்
வன்மம் சூப்பிச் சூம்பிக்கிடக்க...
மாராப்பை விலக்கி வைத்தது...
'பசிக்குது காசு தர்ரீயா' என்று கேட்டக் கதை
'தாங்க்ஸ்' சொல்லிவிட்டு நகர்ந்தபோது
'வர்ரீயா...' என்று கேட்டு மதர்வுடன்
மாராப்பை விலக்கி நின்றது
தொடரும் போட்ட மற்றொரு கதை.
- மு.முகமது பாட்சா*
10 /02 /2019
நான் உன்னை நேசிக்கிறேன்
என் வார்த்தைகள்
மிக உயரத்தில் உட்கார்ந்திருக்க
நான் மட்டும்
மெதுவாகக் கீழே விழுகிறேன்...
உன்னிடம் பேசுவதற்கு
என்னிடம் வார்த்தைகளில்லை
நீ என் கண்களில்
குளித்துக்கொண்டிருக்கிறாய்
நீதான்
என் கவிதைகளையும் எழுதுகிறாய்...
நான் தேசாந்திரியாகத் திரிகிறேன்
என் நிழல்
உன்னையே சுமந்து திரிகிறது...
என் காற்றில்
உன் பெயர் எழுதியிருக்க
என் சுவாசம் மூச்சிறைக்கிறது...
காதல் ஓய்வெடுக்குமிடத்தில்
ஒரு கல்லறை நிச்சயமிருக்கும்...
அதன் வாசகங்களை
நான் எப்போது எழுதப்போகிறேன்?
- மு.முகமது பாட்சா*
09 /02 /2019
பதாகைகள்
பட்டாடை உடுத்திக் கொள்கின்றன...
அலங்கார வாசல்கள்
கிராமத்தை
அழகாக்கி விடுகின்றது...
வாகனங்கள் விரைகின்றன...
வருகிறார் கட்சியின் தலைவர்...
இப்போதும்
தடுப்புகள் இருக்கத்தான் செய்கின்றன...
பிரமாண்ட மேடை
பிரமிப்பில் என்றும் மக்கள்...
வாழ்க முழக்கம்
வருகையின் சரவெடிகள்....
கைகளை ஆட்டியதும்
பறக்கிறது தியேட்டர் விசில்கள்...
ஒழிக என்றவன்
ஓரமாய் அடி வாங்கிக் கொண்டிருக்க...
குவார்ட்டர் பிரியாணியுடன்
500 ரூபாய்
தடையில்லா விநியோகம்...
காசைப் போட்டால்தானே காசை எடுக்கமுடியும்.
- மு.முகமது பாட்சா*
09 /02 /2019
அந்தக் கவிதைக்குள்
என்னதான் இருக்கப் போகிறதென்று
அலட்சியமாகக் குதித்தான்
வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன...
முதலையொன்று முதுகேற்றி
அவன் பயணத்தைச் சுவாரசியமாக்கியது...
கானகம் இடைமறிக்கக்
கடல் நகர்ந்து கொண்டது...
பறவைகளின் கூட்டை
தங்குவதற்கு ஒதுக்கிக் கொண்டான்...
அங்குதான் அவனுக்கு
இசை ஞானம் பிறந்தது...
விதையின் நுட்பங்களை
வேர்கள் சொல்லிக்கொடுத்தன...
விழாமல் இருப்பது எப்படியென்று
விழுதுகள் பாடம் நடத்தின...
காதலை கங்காருக்களிடம் கற்றான்...
வனம் ஆசிர்வதித்தனுப்ப
பாலை நிலம்
பரவசம் கொண்டு வரவேற்றது...
அமைதியென்பது அங்குதான் இருந்தது...
கள்ளிச்செடிகளின் கருணை விளங்கியது...
தண்ணீர் சேமிப்பென்பதை
ஒட்டகம் ஓதியது...
நிழல் தேவைதான் என்பதனை
அங்குதான் தெரிந்து கொண்டான்...
காற்று அவனைத் தூக்கி எறிந்தபோது ,
கவிதையின் கடைசிப் பக்கம்
அவன் கைகளில் இருந்தது.
- மு.முகமது பாட்சா*
08 /02 /2019
வீதிகள்
பற்களை விளக்கிக் கொள்கின்றன ...
தேவர்கள்
சாமரங்களோடு இறங்கி வருகிறார்கள்...
ஒட்டு போட்ட வீட்டில்
கடவுள் உணவருந்துகிறார்...
ஆலயங்களில்
நல்லிணக்கம் மேலோங்குகிறது...
வீடு தேடி வருகிறது
விருந்துகளின் உபசரிப்பு...
கட்டிப்பிடி வைத்தியம் இல்லாமல்
புன்னகை இல்லை...
உறவாகிப்போன தேவலோகம்
ஒருத்தரையும் வஞ்சிக்கவில்லை...
தேர்தல் வருகிறது.
- மு.முகமது பாட்சா*
07 /02 /2019
கிணறுகளை வெட்டி
பூதங்களை எழுப்பப் பார்க்கிறார்கள்...
இரத்தத்தைத் தெளித்து
பெரும் காற்றில் ஊதுகிறார்கள்...
மதங்களின் நூல் பிடித்து
மகிமை மந்திரம் ஓதப்படுகிறது...
சாதிகளின் பெயர்களைச்சொல்லி
சாத்தான்கள்
ஊர்வலம் போகின்றன...
புனிதம் என்பதன் விளக்கத்தை
அகராதி மாற்றிக்கொள்கிறது...
மயானத்தின்
எலும்புகளைப் பிரிக்கச்சொன்னால்...
உறவுகளின் எலும்புகளைக்கூட
இனம் காணாதவர்கள்
கிணறுகளை வெட்டி
பூதங்களை எழுப்பப் பார்க்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
07 /02 /2019
அது நாட்குறிப்பல்ல
ஒரு கடலின் அகன்றக்கரை
அலைகள் எப்போதும்
தழுவிக்கொண்டேயிருக்கின்றன...
சீற்றத்தின்போது
எழுத்துகளும் நெளிந்து ஆக்ரோஷிக்கிறது
நான் மீன் பிடிக்கும்போது
தலையை வருடித் தாயாகிறது...
ஆழ்கடலுக்குள் சுமந்து சென்று
நீச்சல் பழக்குகிறது...
தொலைவானத்தைக் காண
தோள்களில் சுமந்து உயரம் கூட்டுகிறது...
கடல் குட்டையாகும் போது
நான் கடலாகிறேன்...
குட்டையின் பெருமிருமல்
அலைகளின் சப்தத்தில் கேட்கவில்லை...
குட்டை மட்டமானவுடன்...
அந்த நாட்குறிப்பு
மீண்டும் கடலாகி என்னைத் தழுவுகிறது...
அது நாட்குறிப்பல்ல
ஒரு கடலின் அகன்றக்கரை .
- மு.முகமது பாட்சா*
06 /02/2019
' நீ நல்லாவே இருக்க மாட்ட '
அவன் சபித்தபோது
முகத்தைக் கழற்றி
தன் கைகளில் வைத்திருந்தான்...
நோயில் விழுந்தவனைப் பார்த்தவன்
'சாபம் பலித்தது' என்று
மனசோடு சிரித்துக்கொண்டான்...
விளக்குப்போட்டு
சிலர் சபித்துக் கொண்டிருந்தார்கள்....
சாபம்
மதுக்கடைகளைச் சுற்றி வந்தது...
கோவில்களில் கூட சாபம்
பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது...
வயிறு எரிகிறது என்பதும் கூட
ஏழைகளின் சாபமாக இருக்கலாம்...
சாபம் என்பது
இராக்கதனின் வேதமென்றும் - சிலர்
சத்தியத்தின் குரலென்றும்
சொல்கிறார்கள்....
சாபம் என்பது பொய்யாகவும் இருக்கலாம்
தேசத்தின் சாபம்
ஆட்சி செய்பவர்களை
சற்றும் அசைத்தே பார்த்ததில்லை.
- மு.முகமது பாட்சா*
06 /01 /2019
அவர்கள் எல்லோரும் கூடி நின்று
மலர்களை அடுக்குகிறார்கள்
வாசனைத்திரவியங்கள் தெளிக்கப்பட்டு
மணக்கிறது...
நினைவு கூறலென்று
5 நிமிட மௌனம் பரவுகிறது...
மகள் ஆசையாகக் கேட்ட பொம்மை,
எப்படியும் வாங்க நினைத்த ஐ ஃபோன் ,
பதிவுக்காகக் காத்திருக்கும்
50 ஏக்கர் நிலம்,
மனைவி கேட்ட நெக்லஸ்,
மகன் திருமணத்திற்கான ஏற்பாடு
இத்துணையும் ஆக்கிரமிக்க
விரைந்து
5 நிமிடங்கள் கடந்து விடுகின்றன...
ஆறடியென்பது
எப்படியும் கிடைத்துவிடுவதால்....
அதைப்பற்றிச் சிந்திக்காமல்
அவர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன்
அந்தச் சமாதி மட்டும்
தனியாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
05 /02 /2019
யானை
யானையாக இருக்கும் போதுதான்
அதற்கு 'கசேந்திரன்' என்று பெயரிடுகிறான்...
வனத்தைச் சுமந்து திரியும் யானை
இப்போது
முகப்பாடத்துடன் ஊர்வலம் போகிறது...
யானை யாசிக்கிறது
ஆசிர்வதிக்கிறது...
அதன் வனம் சப்தக்கூடுகளையிழந்து
நகரத்தின் வீதிகளில் நகர்ந்து செல்கின்றன...
சப்பரத்திலமர்ந்து
சாமி அருள்பாலிக்கிறார்
யானை இப்போது
ஒரு மதத்திற்குள் நுழைந்து கொண்டது....
கவளங்களாய்
சோற்றை உண்ணக் கற்றுக் கொள்கிறது...
காடு வறட்சியாகி அழிந்து போகின்றன...
தும்பிக்கையை மறந்துவிட்ட யானை
அங்குசத்திற்குள் அடங்குகிறது...
யானை காட்சிப்பொருளாகிறது...
யானைக்கு அவர்களிட்ட பெயர் மறைந்து
யானை என்றே இப்போதும் அழைக்கப் படுகிறது...
அதன் உள்ளிருக்கும் விதைக் காடு
துளிர்த்தெழுந்து...
அசுரவனமாக ஆகாயம் தொடும்போது
பாகன் மிதிபட்டு இறந்து கிடக்கிறான்...
எல்லோரும் ஓடுகிறார்கள்....
காடு மெல்ல
தன்னிடம் நோக்கி நகர்ந்து செல்கிறது.
- மு.முகமது பாட்சா*
04 /02 /2019
அந்தக் கொரியன் திரைப்படம்
அத்துணையொன்றும்
சுவாரசியமில்லை - அவன்
அவளிடம் பேசிக்கொண்டேயிருக்கிறான்
அவள் அவனிடம்
சண்டையிட்டுக் கொண்டேயிருக்கிறாள்...
நீயும் அப்படித்தான்
என் முகத்தில் அடிக்கடி
வார்த்தைகளை வீசிவிட்டுப் போவாய்
என்வார்த்தைகள் வீதி முழுவதும்
சவப்பூக்களாய்ச் சிதைந்திருக்கும்....
அவள் தன் வீட்டிற்குச் சென்றதும்
நினைவுகளை
தலையணையில் புதைத்து அழுகிறாள்...
மெல்ல விடியும் போது
காமிரா அவன் சவத்தைக் காட்டுகிறது...
இதுவென்ன முடிவு?
எல்லோரும் கைதட்டினார்கள்...
நான் சவமாக வெளியேறுகிறேன்...
உன் சமாதியில் பூத்திருக்கும்
அந்தக் காதல் பூக்களை இரசிப்பதற்காக!
- மு.முகமது பாட்சா*
04 /02 /2019
ஒரு கவிதையின் பின்னால்
ஓடுவதென்பது அத்துணைச் சுலபமல்ல...
மூளையின் நரம்புகள்
இறுகிப்பிடித்துத் தளர்த்தும் அந்தத் தருணங்கள்
அலாதியானவை...
தேநீர் கோப்பை ஆறி
ஆதங்கத்துடன் நம்மை ஏளனமாய்ப் பார்க்கும்....
வார்த்தைகளில் இடறிவிழுந்து
எழுவதற்குள் மூச்சுத் திணறுமே
அதுவும்கூட ஒரு முத்துக் குளியல்தான்....
இடம் மாறி
இனம் மாறும் இரசவாதம் நிகழாத கவிதைகள்
எப்போதும் இறந்தே கிடக்கும்...
சொற்களை அடுக்கி வைத்துவிட்டு
சுகம் தேடுவது
காய்ந்த புண்ணைச் சொறிந்து கொள்வது போல்தான்...
எனவேதான்
ஒரு கவிதையின் பின்னால்
ஓடுவதென்பது அத்துணைச் சுலபமல்ல...
- மு.முகமது பாட்சா*
03 /01 /2019