Wednesday, 31 October 2018

சலபங்களின் பாட்டு

தானியங்கு மாற்று உரை இல்லை.

புல்லாங்குழலின் இசையோடு நகர்கிறேன் 
சுரக் கூட்டில் மூச்சுக்காற்று நிறைகிறது 
சொற்கட்டுகளில்தான் எத்துணை ஜதிகள்? 
நிழற்பிரியா மேகங்கள் 
நிர்மூல வானத்தில் படுக்கை.... 
அசமந்த வானத்தில் விரிகிறது கனவுகள் 
காற்றின் பிறப்பிடம் யாருக்குத் தெரியும்? 
சுவாசத்தை நெய்யாமல் 
பிரபஞ்சம் விரிவதில்லை... 
சலபங்களின் பாட்டை யாராவது கேட்டீர்களா? 
அதனிசையுருக்கில் மேகங்கள் வழிகிறது 
மழை வரட்டும் 
என்னிசையை அஃது எங்காவது சுமந்து செல்லும். 

- மு.முகமது பாட்சா* 
01 /11 /2018

Tuesday, 30 October 2018

சிலைகள் சிலைகளல்ல

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், செடி, மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

சிலைகள் 
தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன... 
சிலைகளைச் சுற்றிலும் 
பாதுகாப்புக் கவசங்கள் அமைக்கப்படுகின்றன 
சிலைகளுக்குள்ளும் சாதிகள் இருக்கின்றது 
சிலைகள் பகுத்தறிவும் பேசுகின்றன 
சில சிலைகள் ஆயுதங்களுடனே திரிகின்றன 
சிலைகளை 
வெறும் சிலைகள் என்று மட்டுமே 
கடந்துவிட முடியாது 
உயரத்தினளவில் தன்னைக் கூட்டிக் கொள்கின்றன 
இப்போதெல்லாம் மனிதர்கள் 
உயரம் குறைந்து கொண்டே வருகிறார்கள் 
அவர்களின் வறுமையை 
சிலைகள் உணவாக அருந்திக் கொள்கின்றன... 
சிலைகளின் பெருமை 
சுடுகாடுகளின் வழியையும் அடைக்கின்றது... 
சிலைகள் அரசியல் செய்கின்றன 
ஆதிக்கச் சிலைகள் அண்ணாந்து உயர்கின்றன 
சிலைகளைச் சுற்றிலும் 
சிதறிக் கிடக்கின்றன வறுமையின் கூடாரங்கள் 
சிலைகளாக மக்கள் உறைந்து கிடக்க 
சிலைகள்தான் உயிர் பெற்று 
ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து அதிகாரம் செய்கின்றது. 

- மு.முகமது பாட்சா* 
31 /10 /2018 

Sunday, 28 October 2018

தடுக்கிவிட்ட கற்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் தண்ணீர்

உதிரும் இறகின் மௌனமாய் 
நம்பிக்கை மெல்ல நழுவுகிறது... 
பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறது 
குற்றமுள்ள மனது 
கலைந்துபோன கூட்டின் சப்தத்தை 
மரம் உள்வாங்கிக் கொள்கிறது 
தடுக்கிவிட்ட கற்களில் அகலியாக்களின்
சாபம் பொதிந்திருக்கலாம் 
அழுக்கைக் களைந்தவன் 
பாவத்தை 
பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்கிறான் 
ஆலயங்களின் சுவர்கள் 
அழுது கொண்டேயிருக்கின்றன 
புத்தனில்லாத போதிமரம் மோட்சம் பெறலாம் 
சருகுகள் சப்தமின்றி நிறைகின்றன 
போன்சாய்களின் தேடல் வனத்திற்குள் 
பறவைகளின் தேடல் ஆகாயத்தில்.... 
விதைகளை எறும்புகள் திண்ண 
பிரபஞ்சம் செல்லரித்துக் கொண்டிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
29 /10 /2018 

Saturday, 27 October 2018

நானும் கூட

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

கழுத்தறுபட்ட 
அந்தப் பொம்மையின் கீழ் 
சிலவாசகங்கள் 
இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கின்றன... 
நானும் கூட என்று சிலர் 
ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்க 
அது தனியாகவே முனங்குகிறது 
அறுபட்ட யோனியில் ஒட்டியிருக்கும் 
சாதிய விந்துத் துளிகளில் 
தூமை நக்கிகளின் 
காம எச்சில் சிந்திக் கிடக்க..... 
நானும் கூட என்று சிலர் சொல்வது 
இந்தப் பொம்மை அறியாதது... 

- மு.முகமது பாட்சா* 
28 /10 /2018

களிமண் காதல்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒரு களிமண் 
இன்னொரு களிமண்ணுடன் காதல் கொள்கிறது 
இரண்டும் 
ஒன்றோடு ஒன்று பிசைந்து கொள்கின்றன 
வயிறு புடைத்த களிமண் 
பானையாக உருவெடுக்கலாம் 
குயவன் இன்னமும் முடிவு செய்யவில்லை 
நீர் தெளித்து நீர் தெளித்து அதனை நீட்டுகிறான் 
கைகளை வளைத்து வனைத போது 
ஒரு பதுமை தோன்றி மறைகிறாள் 
அடிப்பருமனை அகலமாக்கி வாயைக் குறுக்குகிறான் 
காலில்லாத கர்ப்பிணியாய் 
கண் திறந்து பார்க்கிறது காதல் 
உலைவெப்பம் என்பதே உருக் கொடுக்கத்தான் 
இனிமேல்தான் காதலை 
உடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

- மு.முகமது பாட்சா* 
27 /10 /2018 

Thursday, 25 October 2018

போதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர்

வைன் அருந்திய போதையாய் 
காதல் 
கண்ணைக் கட்டிக் கொண்டு நிற்கிறது 
அதன் கைகளில் 
சில கோரிக்கை விண்ணப்பங்கள் 
ஆர்வத்துடன் எதையோ தேடுகிறார்கள் 
உளறல் மொழிகளில் 
ஆடைகளை நெய்து கொள்கிறார்கள் 
விரல்களில் 
கவிதை நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது 
சுயம் வைனில் கரைகிறது... 
முதலீட்டில் 
முத்தம் சேமிப்பாகிறது.... 
இருட்டிற்குள் வெளிச்சம் பரவ 
போர்த்திக் கொள்ள ஆடைகள் வேண்டாம் 
கோப்பை காலியாகக் கிடக்க 
ஈவாவின் விரல்களில் 
வெட்கம் பின்னிப் படர்கிறது.... 
ஆதாம் அயர்ந்துறங்க 
வியர்வையில்  மயங்கிக் கிடக்கிறது
காதல்! 

- மு.முகமது பாட்சா* 
26 /10 /2018 

நகரத்து குப்பை



இருட்டிற்கு 
வெளிச்சமென்று பெயர் வைத்துவிட்டு 
விளக்கை 
இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்... 
எரியாத விளக்குகளில் 
எண்ணெய்யை தேடிக் கொண்டிருந்தோம் 
வீடுகளை எரித்துவிட்டு 
வெளிச்சம் வந்ததாகச் சொன்னவர்கள் 
ஆலயங்களில் அடைக்கலம் தந்தார்கள் 
காசில்லாத பிரார்த்தனைகள் 
கருவறைகளுக்குள் செல்லாததால் 
வீதிகளுக்கு விரட்டப்பட்டோம்.... 
விதியிதுவென 
விழுந்த கண்ணீர் துளிகளைச் சேகரித்து 
விளை நிலங்களில் பாய்ச்சினோம் 
நதிகளை நாய்கள் நக்கிக் கொண்டிருந்தது 
நகரத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம் 
கிராமங்கள் தூய்மையடைந்ததாக 
பிரதமர் 
வானொலியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் 
நகரம் குப்பையாகிக் கொண்டிருந்தது. 

- மு.முகமது பாட்சா* 
25 /10 /2018 

Wednesday, 24 October 2018

ஒரு படம் - மூன்று கவிதைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒரே படத்திற்காக 
மூன்று கவிதைகள் முளைத்திருந்தன 
வார்த்தைகளை விழுங்கிய படம் 
பேருருவெடுத்துப் பெருமாட்டமாடியது 
சிந்திய எழுத்துகளை 
சில காகங்கள் பொறுக்கிச் சென்றன... 
வடிவழிந்த வார்த்தைகள்... 
படத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டன 
எழுதியவனை 
படம் தேடிக் கொண்டிருக்க 
கவிதைகளைத் தேடிக் கொண்டிருந்தனர் 
அந்த மூன்று கவிஞர்கள். 

- மு.முகமது பாட்சா* 
25 /10 /2018 

இறந்து போனவள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இறந்து போனவள்
தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள் 
ஓர் ஆலிலையைப் பறித்து 
ஆடைக்குள் பதுக்கிக் கொண்டவள் அழுதாள்... 
கூந்தலைச் சிரைத்து கொளுத்தினாள் 
எலுமிச்சைப் பழங்களையுருட்டி சிலிர்த்தாள் 
ஆக்ரோசம் கூட்டியாடியவள் 
மாகாளி மகளென்று விளித்துக் கொண்டாள் 
மண்டையோட்டிற்கு முத்தமளித்து 
மடியில் கட்டிக் கொண்டாள்.... 
பேயென்றவர்கள் 
பிசாசின் நாற்றம் சூடியவளென்றார்கள்... 
ஆடைகளைக் களைந்தவள் 
பற்களை நரநரத்த சப்த கொடூரத்தில் 
பயந்து பதுங்கிக் கொண்டார்கள்.... 
அழுகியக் கையை 
ஆழம் தோண்டி புதைத்துக் கொண்டிருந்தவள் 
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் அழுதாள்.... 
யோனியில் புழு நெளிந்து கொண்டிருந்தது 
கையில்லாத பிணமொன்று கரையொதுங்கியிருப்பதாக 
புதிய கதை ஊரில் வலம் வரத்தொடங்கியது.

- மு.முகமது பாட்சா*
24/10/2018 

Tuesday, 23 October 2018

தேடலின் தூரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

தேடல் 
எங்கேயிருந்து தொடங்குகிறது? 
ஒரு முற்றுப்புள்ளி 
முகவரியாய் விரிவதிலிருந்தா? 
ஒரு முடிவுரையின் 
முற்றுப்புள்ளியிலிருந்தா? 
எதைத்தான் நாம் தேடுகிறோம் ? 
வியப்பின் குறிகள் 
வினாக்களாக மாறிவிடுகின்றன 
பெரும் பிரபஞ்சத்தின் சப்தங்களை 
முட்டைக்குள் அடைகாத்தவன் 
எவனாகவிருக்கும்? 
விந்துக்குள் விதை வைத்தவன் 
அழுகையை 
அதற்குள் எப்படி நுழைத்தான்? 
ஆசை 
தன் நிழலை அகலமாக விரிக்கிறது.... 
சிக்கிக் கொண்டவனின் கைகளில் 
தூண்டில் முள் 
வெறும் தக்கையோடு மிதக்கிறது.... 
இளமைக்கும் 
முதுமைக்குமான இடைவெளி 
பெரும் மூச்சின் தூரம் மட்டுமே  
சக்ராத்தின் விழிகளின் தேடல் 
எதுவாக இருக்குமென்று 
யாரும் எழுதிவைக்கவில்லை.... 
மண்ணறைக்குள் புதைத்துவிட்டு 
தேடல் மீண்டும் 
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது 
ஒரு கருவறைக்குள்ளிருந்து. 

- மு.முகமது பாட்சா*
24/10/2018

Alex Kanevsky Painting 

அவர்கள் அப்படித்தான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

அவர்கள் அப்படித்தானென்று பேசிக் கொள்கிறார்கள் 
அவர்கள்தான் வரிசைகளில் நின்று 
கரியைப் பூசிக் கொண்டு கறையோடு வந்தவர்கள், 
காசைப் பார்த்தால் வாய்களைப் பிளப்பார்களாம்... 
ஆம், அவர்கள்தான் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு 
வாயைப் பிளந்தவர்கள்... 
அவர்கள் அவர்களாகவே இருப்பதில்லையாம் 
உண்மைதான்.... வாழ்க கோஷம் போட்டு 
வாய்க்கரிசி வாங்கத் தெரிந்தவர்கள் அவர்கள் மட்டுமே... 
தேர்தல் நேரத்தில் சமத்துவம் 
அவர்களின் வீட்டு வாசல்களில் வந்து அமர்ந்து கொள்கிறது 
அவர்களின் சவம் போகும் பாதைகளில் 
சாக்கடைகள்தான் இன்னமும் ஓடுகிறது... 
அவர்கள் அப்படித்தான் 
ஆம், கொடி பிடிக்கத் தெரிந்த அவர்களுக்கு 
இன்னமும் தடி பிடிக்கத் தெரியவில்லை... 
அவர்கள் ஒரு பொருட்டேயில்லை 
அவர்களுக்கென்றுதான் எந்தப் பொருளுமேயில்லையே 
அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் 
என்ன செய்வது? 
அவர்களில்லையென்றால் 
இங்குத் தெரு நாய்கள்கூட உலாவுவதில்லை. 

- மு.முகமது பாட்சா* 
23 /10 /2018 

Monday, 22 October 2018

நிலம் தொட ஆசை - நூல் விமர்சனம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் உரை 

நிலம் தொட ஆசை - வட்டூர் அ.கு.ரமேஷ்
பதிப்பகம் : ஓவியா

'வறள் நிலமதில்
விதை மணிகள் ஊன்றி
வியர் நீர் தெளித்து
அன்னமாய் உணவளிப்பான்...
அவன் உவர்சுவை கலந்து
நிரம்பிய வயிற்றுடன்
மறந்துதான் போனோமோ
உழவிட்ட உப்பளவை.'

- எவ்வளவு அழகான வரிகள்! உணவில் உழவனின் உவர்சுவை
கலந்திருக்கிறதாம். அதை வயிறு புடைக்க உண்ட பிறகும்
அவன் மீதான விசுவாசம் நமக்கு எள்ளளவும் இல்லை என்பதை
இதைவிட அழகாக எப்படிச் சொல்ல முடியும்?

'குரைத்து நின்ற
நாயின் வளர்ப்பில் தெரிந்தது
அந்த வீட்டின் இருப்பு' 

- இவர்களிடம் நேசம் எப்படி இருக்க முடியும்?
சின்ன சின்ன வார்த்தைகளே கூட போதும் செழுமையான கவிதைகளை 
விளை நிலமாக்குவதற்கு... சகோதரர் அ.கு ரமேஷ்
அவர்களின் வரிகள் சமூகத்தை உற்று நோக்கும் சொல் அத்திரங்கள்.

களைப்பிலும் களிப்புறும் கர்வத்தை எவ்வளவு அருமையாக
சாடுகிறார் பாருங்கள்:

'இளைப்பாறிக் கொண்டிருக்கும் 
முயலிடத்தில் ஓடிக் கொண்டிருந்தது
தலைக்கனம்'

ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவனின் பெயர் இருக்கும் என்ற
முதுமொழி நமக்குத் தெரியும். அதையே காலத்திற்கேற்றார் போல்
மாற்றிச் சொல்கிறார் கவிஞர் 

'மருத்துவர் கொடுத்த
குளிகைகளில்
நோயின் பெயர்கள்'

நம்பிக்கையும் கூட ஊன்று கோல்தான். முதியவர்களின் அந்த 
மூன்றாவது காலை நம்பிக்கையாகப் பார்ப்பதும் கூட ஓர் அழகுதான்

'கூனிப்போன
முதுமையை
நிமிர்த்தி நடக்கின்றது
ஊன்றுகோல்'

சமூகத்தின் எச்சமாய் மிச்சமிருக்கும் படிமங்களை கலைந்திருக்கும் கூட்டிற்குள் 
சப்தங்களாய் சேகரிக்கும் இந்தக் கவிதை காலத்தின் அடையாளம்

'மரத்தில் இருந்து
விழுந்த கூட்டில்
கரைதல்களும், கூவல்களும்
சமத்துவம் அங்கிருந்தது
பறவைகள் மட்டும்
அங்கில்லை'

கவிஞர் பழனிபாரதி அவர்களின் முன்னுரையோடு வந்திருக்கும் 
இந்த நூல் , கவிஞர் அ.கு.ரமேஷ் அவர்களின் நம்பிக்கை என்றே
சொல்லலாம்.

- மு.முகமது பாட்சா*
22 /10 /2018

Sunday, 21 October 2018

விடை தேடும் யாகம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

முகிழ்த்த காதலுக்கு 
முதல் வார்த்தை எதுவாகவிருக்கும்? 
கனவு பிரபஞ்சத்தின் 
அகராதிச் சொற்குவியல்களில் 
சிக்கிக் கிடக்கிறது என் ஆடைகள்... 
சளக்கிடும் நீரோடியின் சங்கமம் 
வெப்பமழையின் வெதுவெதுப்பின் சுகம்... 
பிச்சுத் தின்னுதலின் வியர்க்கும் 
எழுத்துகளில் புது வரவாய் கவிதைகள்... 
நானே நீயாகி 
நீ நானாகி நாமாகும் மாயப் பிரபஞ்சத்தில் 
மகிழம்பூ வாசனை.... 
ஆமாம்...இங்கு யார் போர்வை? 
ஏழாம் சுவையுணர்வின் எட்டாம் வானம் 
இங்கு எப்படி இறங்கியது? 
பத்துவிரல்கள் படிக்கின்ற பாடத்தில் 
நீயும் நானும் எந்த அதிகாரம்? 
யோகிப்பின் கூட்டிற்குள் தேகத்தை நுழைத்து 
விடை தேடுவோம்.... 
விடியம் வராமலிருக்கப் பெரும் யாகம். 

- மு.முகமது பாட்சா* 
22 /10 /2018 

Saturday, 20 October 2018

நாகரீக சுதந்திரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அவர்களெப்போதும் 
ஆங்கிலத்துடனே நடக்கிறார்கள்.... 
நாகரீகம் கிழிந்து தொங்குவதை 
ஜீன்ஸ் பொறுப்பேற்றுப் 
படிமமாக மாற்றிக் கொண்டது.... 
உயரம் கூட்டத்தானென்றாலும் 
எலும்புகள் 
இடம் மாறிக் கொண்டதை அறியவில்லை 
புன்னகைக்கும் கைக் குலுக்கலில் 
நகங்கள் சோடனைதான்.... 
நாபி வளையத்தைக் காணாமல் 
கண்கள் நகரக் கூடாதாம்.... 
ஒப்பனை முகங்களில் 
ஒன்றுகூட உண்மையின் நிழலில்லை 
பப்புகளில் இடித்துக் கொள்கின்றன 
கண்ணாடிக் குவளைகள்.... 
ஹிப்பைப் பிடித்தவன் இதழில் 
ஒட்டிக் கிடக்கிறது தேனிதழின் இரசம்.... 
நரகத்தின் வாசல் 
சுவர்க்கத்தின் 
சோலையாய் அலங்கரிக்கப்பட்டிருக்குமா? 
குப்பைத் தொட்டிகள் 
இப்போதுதான் நிரம்பி வழிகின்றன... 
தேடுகின்ற சுதந்திரம் 
ஆடையின்றி அம்மணமாகக் கிடந்தது. 

- மு.முகமது பாட்சா* 
21 /10 /2018 

விடைத் தெரியாத நான்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இப்போதுதான் 
நான்' என்பதை வீசியெறிந்துவிட்டு வந்தேன் 
நீ யார்? என்று கேட்டது நிழல் 
விடைத் தெரியாத கேள்வி என்றேன் 
கேள்வி என்பது ஞானமா? என்றது... 
ஞானமற்றவனுக்கு விடையெப்படித் தெரியும் 
தர்க்கம் அறியாதவன் என்றேன் 
அண்ணாந்து பார்த்தது.... 
உனக்கு உடையெதற்கு என்றது 
மானம் காக்க என்றேன் 
மானம் என்பது உன்னுடையதா? என்றது 
மறதி வரும் வரை ஒட்டிக் கொள்கிறதென்றேன் 
நிழல் இப்போது அமைதியாக வந்தது 
என் செருப்பைக் கழற்றிவிட்டு 
வீட்டிற்குள் நுழைகிறேன்.... 
என்னைச் சுற்றிலும் நான் விரவிக் கிடக்கிறேன் 

- மு.முகமது பாட்சா* 
20 /10 /2018 

Friday, 19 October 2018

ஆரிகாமிகளின் வனம்

தொடர்புடைய படம்

காகிதங்களின் வனைவுகளில்
ஆரிகாமிகளின் வனம் விரிகிறது....
மழையை வனையத் தெரியாத விரல்கள்
கப்பல்களை 
அதிகம் உற்பத்தி செய்கின்றன....
மரங்களை வனைந்தவன்
நிழலை மட்டும் நிஜமாகக் காண்கிறேன்
காற்றிலாடும் நூலில்
ஊஞ்சலாடும் பறவைகளுக்கு உயிரில்லை
வேட்டையாடத் தெரியாத விலங்குகள்
அழகாக மட்டுமே இருக்கின்றன...
காற்றும் நான் வனைந்ததில்லை...
பெரும் மழையொன்றில்
நான் பற்றியெரிந்து கொண்டிருக்கிறேன்...
ஆரிகாமிகளின் வனம்
ஆகாசத்தை தேடிக் கொண்டிருக்கிறது.

- மு.முகமது பாட்சா*
19 /10 /2018

அன்பு நண்பர் ஶ்ரீ வத்ஸா அவர்களின் அருமையான உடனடி மொழியாக்கத்தில்:

In the folds of 
sheets of paper,
origami forests
spread wide.
Fingers which don't know 
how to shape rain,
produce lots of ships.
I, who gave form to trees,
see only the shadow 
as real.
The birds swinging
on the thread 
swaying in the air
are lifeless.
Animals that don't know 
how to hunt
look pretty only. 
The wind also
has not been shaped by me.
I caught fire 
and am burning
in a big deluge.
The origami forest
is in search
of the sky. 


~Sri 20:02 :: 19.10.2018 :: Noida

Saturday, 6 October 2018

காய்ச்சலில்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் உணவு

அனலைப் பூசிக்கொள்கிறது தேகம் 
நரம்புகளின் பின்னலில் 
நொறுங்குகின்றன எலும்புகள்.... 
மூளை வலியை வாசிக்க 
வார்த்தைகள் வலிவிழந்து தொங்குகின்றன... 
மழைதான் காரணமென்று 
மருத்துவச் சங்கீதம் பாடல் இசைக்கிறது 
மருத்துவரின் மருந்துகள் குறிப்பில் 
ஆறு நாட்களுக்குப் படுத்துக் கொள்கிறேன்... 

மருந்தகம் 
மணவறைப் பந்தலாய் வழிகிறது 
மொழி எழுதியாகிவிட்டது 

சூடான கஞ்சிதான் இதமாக இருக்குமாம் 
மருத்துவர் வீட்டில் பிரியாணியாக இருக்கலாம் 
உறக்கம் சுகமென நினைக்கிறது மனம் 
மரணம்கூட அப்படிதானோ! 

போர்வைக்குப் பிரியம் நழுவுவதில்லை.... 
அணைத்துக் கொள்கிறது.... 
நான் உறங்குகிறேன்... 
கவிதைகள் காய்ச்சலில் படுத்திருக்கின்றன! 

- மு.முகமது பாட்சா* 
06/10/2018 

Thursday, 4 October 2018

கடவுள் மறந்த கடவுச்சொல் - ஜின்னா அஸ்மி - நூல் விமர்சனம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Mohamed Ali Jinna, உரை

இப்போது கவிஞர் ஜின்னா அஸ்மி அவர்களின் தோட்டமான இந்தக் 'கடவுள் மறந்த 
கடவுச் சொல்' என்ற கஸலின் சோலைக்குள் நுழைவோம். 

கஸல் கவிதைகளின் அழகைக் கொஞ்சமும் சிதைக்காமல் 
மிக அழகாக எழுதியிருக்கிறார் கவிஞர் ஜின்னா அஸ்மி. கவிஞரை கஸலின் 
காதலரென்றே சொல்லலாம். கருத்தின் ஆழமும் நுட்பமும் நிறைந்த சொற்களால் 
கவிதைகளை அழகான நெசவு செய்திருக்கிறார். முதல் கவிதையிலேயே 
தன்னைத் தேடத் தொடங்கிவிடும் கவிஞர் ,அடுத்தடுத்த கவிதைகளில் நம்மைக் 
கஸலின் வேறொரு தளத்திற்கு நகர்த்திக் கொண்டு போவது 
பெரும் வியப்பாக இருக்கிறது.

'என்னைத் தேடுவதற்கு 
நானே புறப்படுகிறேன்... 
அதற்கு முன் 
எப்படியாவது என்னைத் 
தொலைத்துவிட வேண்டும்' 

- தேடலுக்கு முன் தொலைத்துவிட்டு தேடுவது முரணாகத் தெரியலாம். 
ஆனாலும் அங்குதான் தேடலின் ஞானவெளி பிரகாசிக்கிறது... இங்கிருந்தே, 
நாமும் நம்மைத் தொலைத்துவிட்டு தேடத்தொடங்கி விடுகிறோம். ரூமி அலைஹி 
அவர்கள் தேடலைப் பற்றிச் சொல்லும் போது, ' கண்ணாடியின் ரசத்தை அகற்றிவிடு / 
அடுத்தப் பக்கத்தை / எளிதில் பார்க்கலாம்' என்பார். 

புன்னகையைக் காளான் குடையுடன் ஒப்பிடும் நுட்பம், கவிஞருக்குள் உண்டான 
கஸலின் காதலை வெளிப்படுத்துகிறது. காளான் குடையென்பது 
மழையில் பூக்கும் தாவரம் என்றாலும் அது நிரந்தரமில்லை.. வாழ்வின் புன்னகைகளும் 
கூட அப்படித்தான், பெரும் ஞான விளக்கத்தைச் சுமந்து செல்கிறது 
இந்தச் சிறிய கவிதை 

எதற்காகக் குடை விரித்தோமெனக் 
குழம்பி நிற்கும் காளானைப் போல 
இல்லைதானே 
உன் புன்னகை. 

துன்பங்கள், வாழ்வின் படிக்கற்களாக மாறும் போது, இலக்கை எட்டும் உயரம் 
சுலபமாகிப் போகிறது. இங்குக் கவிஞர் வைக்கும் கேள்வியின் ஆழம், காதலிக்கும் 
பொருந்தும் இறைக் காதலுக்கும் பொருந்தும். கடலென விரியும் கவிதையென்றே 
இதைச் சொல்லலாம். கேளுங்கள் இந்தப் புல்லாங்குழலின் இசையை, 

என்மேல் எதற்காக 
இத்தனை துளைகள் இடுகிறாய் 
புண்ணாவதற்கா? 
புல்லாங் குழலாவதற்கா? 

சில கவிதைகள், சற்றுப் பிசகினாலும் காமம் சொட்டும் கவிதையாக மாறிவிடும், 
அடுத்துவரும் கவிதைக்குள் ஒளிந்திருக்கிறது ஒரு பேரின்பம் சிற்றின்பமாக 
வடிவெடுத்து... இறை நேசத்தின் மிகுதி, சொற்கூட்டுக்குள் அடைகாக்குகின்றன. 

'நீ மேலே இருக்கிறாய் 
நான் கீழே இருக்கிறேன் 
உன் பார்வை எனக்காகக் கீழ்நோக்கியும் 
என் பார்வை உனக்காக மேல்நோக்கியும் 
இப்போது நாம் சந்திக்கும் இடம் 
கீழா.. மேலா?' 


மிர்ஸா காலிப்பின் மிகச் சிறந்த கவிதையொன்று என்னை வியப்பிலாழ்த்தியதுண்டு. 

'கடவுளே, நான் பேசுவது 
அவளுக்குப் புரியவேயில்லை, 
அவளுக்கு வேறு இதயத்தைக் கொடு 
இல்லையென்றால் 
எனக்கு வேறு மொழியாவது கொடு.' 

அஹமத் நஸீம் காஸ்மி அவர்கள் அவரது கவி நடையில் வேறு மாதிரி சொல்லியிருப்பார். 

யாருக்காக நான் 
ஒரு விளக்கைப் போல் 
காத்திருந்தேன் - 
அவள் வந்தாள் 
சென்றாள் 
ஒரு சூறாவளி போல்! ( மொழியாக்கம் கவிக்கோ) 

ஜின்னா அஸ்மியின் இந்தக் கவிதையும் அதே தாக்கத்தை, அதே பரிதவிப்பை நம்முள் எழுப்பிவிடுகிறது 

'விலக்கப்பட்ட ஆப்பிளாய் 
வெறுக்கவே இல்லை உன்னை 
பிறகு ஏன் 
சபிக்கப்பட்டவனாய் 
நினைக்கிறாய் என்னை?'

கோடை நாளோடு ஒப்பிட்டுப்பார்க்கவா? 
நீ அதைவிட வசீகரம், 
நீ அதைவிடச் சம நிலை. 
என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது கவிதையொன்றில் சொல்லியிருப்பார். 
காதல் இனம் புரியாத ஓர் இன்ப உணர்வு . அரபு மொழியின் நாடோடிப் பாடலொன்று 
மஜ்னு பாடுவதாகச் சொல்கிறது 

ஓ லைலா! 
தடங்களை மணலில் புதைத்துவிட்டு 
காதலை மட்டும் 
ஏன் கையோடு எடுத்து சென்றுவிட்டாய் ! 

காதல் - சிற்றின்பத்தின் சிறகுகள் மட்டுமில்லை..பேரின்பத்தின் 
பெரும் குகையும் கூட.. வழித்தெரியாமல் அதற்குள் சிக்கிக் கொள்கிறோம். 
இந்தக் கவிதை நூலின் ஒரு கவிதையும் அதை ஒத்ததாக இருப்பதைக் கண்டு 
பெரும் வியப்படைகிறேன். 

'நீ போகும் போது 
பூத்ததாகச் சொல்லப்படும் பாலை வனத்திலும் 
நான் போகும் போது மணலாக இருக்கிறது' 

காதலை வெளிச்சமாகப் பார்க்கும் கவிஞர் 'என் வெளிச்சம் இருட்டில்தான் 
இருக்கிறது' என்ற ரூமியின் வரிகளில் சிக்கிக் கொள்வதாகவே 
இந்தக் கவிதையைப் பார்க்கிறேன். 

வெளிச்சத்திற்கு 
விழிகளைத் திறந்து வை 
விளக்குகள் எதற்கு 

மலையாளத்தின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான குஞ்ஞுண்ணியின் கவிதைகள் 
யதார்த்தத்தின் நவினம் பொதிந்தவை. அவர், தன் கவிதையொன்றில் 
இவ்வாறாகச் சொல்கிறார், 

எனக்கு நான் உபயோகமேயில்லை 
அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் 
ஒருகைக்குச் சொரியவேண்டுமானால் 
அதேகையால் முடியாதில்லையா? - 

யோசிக்கத்தரும் இதே சிந்தனை கவிஞர் ஜின்னாவிற்குள் நுழைந்துவிடுவதாக 
உணர்கிறேன்  அவரது கவிதையைப் பாருங்கள் 

தன்னையே தாழிட்டுக் கொள்ளும் 
ஒரு கதவைப்போல் இருக்கிறேன் 
என்னைத் திறப்பதும் நீயே 
மூடுவதும் நீயே. 

எப்படிச் சொரிகின்ற கை சொரிந்துக் கொள்ளமுடியாதோ அதே நிலைதான் தானாக 
மூடிக் கொள்ளும் கதவிற்கும் காற்றில் கூடத் திறந்து கொள்ளும் வலுவற்றது. 
இங்கே காதலின் கையில் தன்னையே ஒப்படைத்துவிட்டு ஜடப்பொருளாய் 
மாறும் பேரானந்தம். 

மற்றுமொரு கவிதையில் 

காதலென்பது 
முகம் பார்க்கும் கண்ணாடி 
உடையாமல் பார்த்தால் 
ஒன்றாகத் தெரிவோம் 
உடைந்த பின் பார்த்தால் 
ஒவ்வொன்றாகத் தெரிவோம். 

இது சாதாரணமான பிரதிபலிப்புதான் என்றாலும் வாழ்வியலின் பெரும் 
சித்தாந்தத்தைத் தோலுரிக்கிறது. உறவுகள் உடைந்தாலும் 
இதை நாம் உணரமுடியும்.  

காதலென்பதே ஒரு தவிப்பான உணர்வுதான். கவிக்கோ அவர்கள் கூட 
'உண்மையில் /நான் உன்னைக் காதலிக்கவில்லை / காதலைத்தான்/ காதலிக்கிறேன் ' 
என்று அழகாகச் சொல்லியிருப்பார். இதே அழகை, புகழ்பெற்ற உருதுக்கவிஞரான 
அஹமத் ஹூசைன் அவர்கள் 

'பிறை 29க்குப் பிறகு 
ஈகைத் திருநாள் வரலாம்... 
நோன்பின் 29ல் 
உன்னைக் கண்டேன் 
நாளை ஈகைத் திருநாளா? 

என்பார் இதே ஏக்கம் ஜின்னாவின் இந்தக் கவிதையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. 

என் கிளைகளில் 
காதல் கூடுகளைக் கட்டுகிறாய் 
இருப்பினும் 
தனக்குத்தானே நிழல் கொடுத்துக்கொள்ள முடியாத 
மரமாய்த் தவிக்கிறேன் நான் 

கவிஞரின் பார்வை மிக விசாலமானது. அதனால்தான், முடிப்பைக் கூடச் சரி தவறுகளில் 
தனது பார்வையை வைத்துவிட்டு ஒரு கேள்வியைக் கொக்கியாக வைக்கிறார், 

தவறு செய்யமுடியாத சரி நீ 
சரி செய்ய முடியாத தவறு நான் 
இதில் 
யார் சரி? யார் தவறு? 

இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே நன்முத்துகள்தான். எதையுமே, 
பழுதென்று விலக்கிவிட்டு சென்றுவிட முடியாது. இறை நேசத்தின் காதலாழம் 
கஸலாக மிளிர்கிறது. தலைப்பும் கூடக் கஸலின் அழககோடுவே அமைந்திருக்கிறது. 
கடவுள், எந்தக் கடவுச் சொல்லையும் மறந்துவிட மாட்டார். 
ஆனாலும் என்னை மறந்து விடாதே! என்ற காதலின் ஏக்கமாகத்தான், 
தலைப்பும் அமைந்திருக்கிறது. வாழ்த்துகள் கவிஞரே! 

படைப்பு முகநூல் குழுமம் மற்றும் தகவு மின்னிதழ் இவற்றின் நிர்வாகியாக 
விளங்கும் கவிஞர், ஜின்னா அஸ்மி தனது இலக்கியச் சேவைகளுடன் 
ஒரு சிறந்த படைப்பாளியாகவும் விளங்குகிறார். இவர் மேலும், தொடர்ந்து பல 
நல்ல படைப்புகளை வழங்க வேண்டும்.. இவரது இந்தக் கவிதை தொகுப்பு 
இவருக்கு மேலும் பல சிறப்புகளைச் சேர்க்கப் போகிறது என்பதிலும்  வியப்பில்லை.

- முகமது பாட்சா*
( எனது ஆய்வுரையிலிருந்து)

ஒதுங்கிய நான்

தானியங்கு மாற்று உரை இல்லை.

புரியாத கவிதையென்று பெயரிட்டபிறகு 
பிரித்து ஆராயத் தொடங்கினார்கள்.... 
நெருடிய வார்த்தைகள் அத்துணையும் 
நெகிழி பைக்குள் அடைக்கலமானது... 
புறாவைப் பறக்க விட்டவர்கள் 
காகம் யாரென்ற விவாதத்தில் சாகடித்தார்கள் 
கடல் மட்டும் அலை வீசிக் கொண்டிருக்க 
மீன்களில்லாததால் இஃது அரசியலென்று 
கொட்டிக் கவிழ்த்தார்கள் 
ஓரமாய் ஒதுங்கிய பிணத்தை 
அவசரமாய்க் குழியில் போட்டு மூடியவர்கள் 
இறுதியாய் கவிதை படிக்கும் போது 
நான் மட்டும் 
பெயராய் ஒட்டிக்கொண்டிருந்தேன் 
என்னைச் சுற்றிலும் 
வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தன.

- மு.முகமது பாட்சா*
04 /10 /2018

Wednesday, 3 October 2018

மழை விட்டது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் வெளிப்புறம்

சிறு சிறு மழைத்துளிகளென்று 
எல்லோரும் கடந்து போகிறார்கள்... 
பூஞ்சிட்டுகள் 
தலை சிலிர்த்துக் கொள்கின்றன... 
மழையில் நனைகிறான் தெருக்குடை வியாபாரி... 
தேநீர்க் கடை 
அரசியலை விற்றுக் கொண்டிருக்கிறது... 
கனக்கிறது நீர்த் திவலைகள் 
பெருமழையொன்றிற்கு 
எல்லோரும் பதுங்குகிறார்கள்... 
கிளையொன்று வேகமாக முறிகிறது... 
காகங்களின் பரிதவிப்பை 
யாரும் இலட்சியம் செய்யவில்லை... 
மின்னல்வெட்டிய பொழுதில் 
மின்சாரம் வெளிச்சத்தை இழந்தது... 

வானம் வெளுத்தபோது விடிந்திருந்தது... 
கூவத்தில் மிதக்கும் பிணம் உப்பியிருந்தது... 
காதலைத் தொலைத்தவள் அழுது கொண்டிருந்தாள்... 
முற்றத்துச் சுவரில் இரத்தக்கறை! 

- மு.முகமது பாட்சா* 
03/10/2018 

Tuesday, 2 October 2018

சுவனத்தின் மொழி

Thinking - painting க்கான பட முடிவு

கனவு வெளியென்பது
பிரபஞ்சத்தின் அளவுதான்
கோள்களை கணக்கெடுத்தவன்
ஆயுளில் தோற்றுப் போகிறான்...
எழுத்துகள் குறைவானது
வார்த்தைகளுக்கு இங்கு அளவுண்டா?
சொற்கூட்டங்களில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
வசையும் இசையும் என்பது கூட
மொழிதலின் வித்தியாசம்தான்
மொழிகள் குற்றவாளிகள் கிடையாது...
சுவனத்தின் முதல் வார்த்தை
புன்னகை மட்டும்தான் என்பதை
இங்கு யார் அறிவார்கள்?
கஸ்தூரியின் மணம் என்பது
இதயத்திலிருந்தல்லவா வரவேண்டும்?
ஆசையென்பது
காற்று நிறைந்த பைகளால் கட்டிய மாளிகை...
காற்றடித்தால் விழுவோமென்பது
அவற்றிற்கு தெரியாது...
கனவுவெளி கட்டுக்குள் இருக்கட்டும்
மேகங்கள் 
கடவுள்களாக ஆகிவிட முடியுமா?
மழை என்பதும் 
மனதிற்குள் 
இதம் தரும்போதுதான் மகிழ்வாகிறது....
கனவு வெளியென்பது
பிரபஞ்சத்தின் அளவுதான்
காற்றிற்கும் 
எல்லை உண்டென்பதை ...
கவனத்தில் வரைந்து வைப்போம்.
சுவனத்தின் மொழியை மறந்துவிடாதீர்கள்.

- மு.முகமது பாட்சா*
03/10/2018


Monday, 1 October 2018

அவள் பெயர் காந்தி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

அவள் தன் பெயரை 
காந்தி என்று சொல்லிக் கொண்டாள் 
அவளுக்குப் பிடிக்காத வார்த்தை 
அகிம்சை ... 
சுதந்திரம் என்பதின் விளக்கம் 
'கிடைக்காதது' என்றுதான் 
அவளின் அகராதி சொல்கிறது... 
அவளின் கைத்தடியில் கத்தியொன்றை 
சொருகியே வைத்திருக்கிறாள்... 
அவளின் புன்னகை போலியானது 
தேசத்தின் விலாக்கூட்டில் 
இன்னமும் எத்துணைத் தடிகளை 
சொருகிவைப்பீர்கள்? என்ற கேள்வி 
விடையறியாதது.... 
அவள் அவ்வப்போது மயங்கி விழுகிறாள் 
அவளை நோயாளியென்று 
ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்... 
அவளை 
வணங்கிவிட்டுப் போகும் தியாகிகள் 
தேசத்தின் தாய் என்கிறார்கள். 

- மு.முகமது பாட்சா* 
02 /10 /2018 

பாகன் திரும்பும்வரை - வலங்கைமான் நூர்தீன் - நூல் விமர்சனம்

நூல் : பாகன் திரும்பும் வரை 
கவிஞர் : வலங்கைமான் நூர்தீன் 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: Valangaiman Noordeen, நிற்கிறார் மற்றும் உரை


'ஆடைகளைக் களைந்து 
அவள் செல்லட்டும் 
பாவம் பைத்தியக்காரி... 
உங்கள் மனசை ஏன் 
நிர்வாணமாக்கினீர்கள்?' 

படித்துக் கொண்டே வரும்போது நச்சென்று அறைகிறது இந்த வரிகள். பார்வையின் 
அளகீடுகளைப் படிக்கிறது இந்தக் கவிதை. 

பாகன் திரும்பும்வரை நூலின் ஆசிரியர் வலங்கைமான் நூர்தீனின் ஒவ்வொரு வரிகளுமே 
சமூகத்தை நோக்கி வினா எழுப்புவதாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதையும் 
ஒவ்வொரு தளத்தில் உட்கார்ந்து கொள்கின்றன. 

ஜீன்ஸ் பேண்டை நாபியின் கீழிறக்கிக் கொண்டு விலையுயர்ந்த காரைவிட்டு இறங்கும் 
மங்கையொருத்தி, முழுகாமல் இருப்பதை விவரிக்கும் கவிதையொன்று... 
கடைசியாகச் சொல்கிறது 

'... 
அவன் கணவனில்லாத பட்சத்தில் 
அந்த இளம் சிவப்புக்கோட்டில் 
துடிக்கத்தொடங்கியிருக்கும் உயிர் 
இன்றோ நாளையோ ஏதோவொரு 
தனியார் மருத்துவ மனையின் 
கழிவுத் தொட்டியில் 
சிதறிக்கிடக்கலாம்... 
கலைக்கப்பட்ட சிவப்புக் கோடுகளாய்.' 

ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளிடம் கவிஞர் வைக்கும் கோரிக்கைகளில் 
மிக முக்கியமான ஒன்று... 

'.... 
ஓட்டு கேட்க வரும்போது 
இலவச வாக்குறுதிகளில் உறுதி செய்துவிடுங்கள் 
விவசாயிகளின் துர் மரணங்களையும்' 

ரயில் பிச்சைக்காரர்களின் பாடலைப்பற்றி ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர் 

'...விழியற்றவர்களின் 
கச்சேரிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் 
அனைத்துமே அவர்களின் 
பஞ்சப்பாடல்கள்.'
 - என்று முடிக்கும் போது அவர்களை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார். 

ஏழைகளிடம் நடமாடும் பணம் எத்தகையது என்பதைக் கவிஞர் 
தெளிவாகச் சொல்கிறார் தன் கவிதையொன்றில் 

'ரூபாய் நீட்டும் கரங்களிலெல்லாம் 
பளபளக்கிறது தங்கமாக 
தாலியோ கம்மலோ 
மூக்குத்தியோ ஏதோவொன்று...' - 

இவற்றில் ஏதோவொன்றுதான் அவர்களின் பணமாகக் கை மாறியிருக்கிறது. 
மறக்க முடியாத ஏழ்மையின் நிதர்சனத்தை வேறு எப்படித்தான் சொல்லமுடியும்? 

மயிலிடமிருந்து 
வலிக்க வலிக்க 
பிடுங்கிய இறகுகளால் 
ஒதுக்கிவிட்டு நடக்கிறான் 
எறும்புகளை - என்று கவிஞர், புதிதாக அவதாரம் எடுத்துள்ள ஜீவ காருண்யர்களை 
நக்கலான மொழியில் சாடுகிறார். 

வன்புணர்வுகள் மலிந்துவிட்ட காமத்தின் நிழல் படிந்த பூமியில் சாகத்துணிந்த 
மங்கையொருத்தி கடைசிக் கடிதமாக இப்படி வரைகிறாளாம்! 

'பிரேத பரிசோதனைக்கு முன் 
என் பிணத்தை நிர்வாணமாக்கி 
ஒரு அறையில் வைத்துவிடுங்கள் 
வரிசையில் வந்து அவர்கள் 
புணர்ந்து செல்லட்டும்.' - இயலாமையின் கோபம் தேசத்தின் நிதர்சனமாகிப்போகிறது. 
இந்த எச்சிலை யார்தான் துடைப்பது? 


புல்லாங்குழல் மற்றும் மூங்கில் இவை இரண்டுமே கவிஞர்களின் கனவு பொருட்களாகும். 
இவரின் புல்லாங்குழல் வாசிக்கும் இரங்கற் இசையைத் தவிர்த்துவிட்டு யாராலும்
 இங்கிருந்து நகரமுடியாது... 

'புல்லாங்குழல் விற்பவனின் 
சவத்தைத் தாங்கிச் செல்லும் 
அந்த மூங்கில் பாடையிலிருந்து 
மௌனமாய்க் கசியும் 
மரணத்தின் இசை.' 

தாபத்தின் அழகை உள்வாங்கி, கூடலைப் பேசும் இந்தக் கவிதை 
மெல்லக் காதல் தீ மூட்டுகிறது.... 

'நடுங்கும் குளிர் 
கூடலில் தகிக்கும் வெப்பம்... 
அறையெங்கும் 
சிணுங்கல்களாய்க் கேட்கிறது 
வெளியே மழையின் சப்தம்... 
ஏற்றிய மெழுகு ஒழுக ஒழுக 
அணைந்து கொண்டிருக்கிறது 
அவளுக்குள் தீ.' 

பேருந்தில் நின்றபடி பயணிக்கும் ஒரு பெண்ணின் பிருஷ்டத்தை மொய்க்கும் 
கண்களைக் காணும் கவிஞர் 

அவள் பிருஷ்டத்தின் மீது 
பதிந்திருந்த கண்களனைத்தும் 
படர்கின்ற கைகளாகவும்.' - என்று வேதனையை வெளிப்படுத்துகிறார். 

ஒற்றை விசயங்களுக்குள் முடங்கிவிடாமல் கவிதையைப் பல வழித்தடங்களிலும் 
பயணிக்கவிட்ட கவிஞருக்கு வாழ்த்துகளை நாம் தெரிவிக்கலாம். 

திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதும் கவிஞர்...மேலும் பல சிறந்த படைப்புகளை 
வழங்கவேண்டும் என்பதே என் போன்றோரின் கருத்தும் கூட. 

இந்த நூலின் விலை ரூபாய் 80 தான். நூல் வேண்டுவோர் அவரது 
nfayha@gmail.com என்ற மின் முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். 

- நட்புடன்.....முகமது பாட்சா* 
01/10/2018 

Popular Posts