வட்டத்திற்குள் வட்டம் வரைந்து
வெளிவரத்துடிக்கும் இணைப்பிற்கு,
சங்கிலி என்று பெயரிடுகிறேன்...
வரையாத கோடுகள்
உறங்காத நிலத்திற்குள் வேர்களாக
ஊடுருவும் சிக்கல்களை
உறுதி என்று எடுத்துக் கொள்கிறது காலம்...
பறவைகளின் சிறகசைப்பில்தான்
விடியல் என்றால் யாரும் நம்புவதில்லை...
மலர்வனத்தில் முட்களும்
அடர் வனத்தில் நாகங்கள் இருப்பதும் கூட
அவற்றின் காவலுக்குத்தான்.
எதிர் வினைகளை எழுதாத காலம்
உறக்கம் மூடியிருக்கும் முட்டை...
.... அச்சமென்பது பசலை ...
மூடியிருக்கும் பூனையின் கண்களில்
எலிகள் எப்போதும்
ஓடிக் கொண்டிருக்கும் என்பது தேடலின் விதி..
சகலம் என்பது
சாத்தானையும் உள்ளடக்கியதுதான்...
தராசில் எது மிகைக்கிறது என்பதில்தான்
சுதந்திரம் தெளிவாகிறது.
இரவை மடித்து வைத்தாலும்
தீப்பந்தம் நெஞ்சுரத்தில் மிகைத்திருக்கட்டும்..
- முகமது பாட்சா*
11/01/2020
வட்டத்திற்குள் வட்டம் வரைந்து
வெளிவரத்துடிக்கும் இணைப்பிற்கு,
சங்கிலி என்று பெயரிடுகிறேன்...
வரையாத கோடுகள்
உறங்காத நிலத்திற்குள் வேர்களாக
ஊடுருவும் சிக்கல்களை
உறுதி என்று எடுத்துக் கொள்கிறது காலம்...
பறவைகளின் சிறகசைப்பில்தான்
விடியல் என்றால் யாரும் நம்புவதில்லை...
மலர்வனத்தில் முட்களும்
அடர் வனத்தில் நாகங்கள் இருப்பதும் கூட
அவற்றின் காவலுக்குத்தான்.
எதிர் வினைகளை எழுதாத காலம்
உறக்கம் மூடியிருக்கும் முட்டை...
.... அச்சமென்பது பசலை ...
மூடியிருக்கும் பூனையின் கண்களில்
எலிகள் எப்போதும்
ஓடிக் கொண்டிருக்கும் என்பது தேடலின் விதி..
சகலம் என்பது
சாத்தானையும் உள்ளடக்கியதுதான்...
தராசில் எது மிகைக்கிறது என்பதில்தான்
சுதந்திரம் தெளிவாகிறது.
இரவை மடித்து வைத்தாலும்
தீப்பந்தம் நெஞ்சுரத்தில் மிகைத்திருக்கட்டும்..
- முகமது பாட்சா*
11/01/2020
ஓர் ஆட்டிடையனின் வழக்காக
இதனைப் பதிவு செய்ய வேண்டும் ஐயாமாரே...
மேய்ச்சல் நிலங்களில்லாததால்
பசி எங்களைத் தின்று கொண்டிருக்கிறது...
தொறட்டிக் கோலின் முனையில்
கொடிகளைக் கட்டி
ஊர்வலத்திற்கு அழைத்தவர்கள் பிரியாணி
குவார்ட்டருக்கு அடிமையாக்கியதால்
மேய்ப்பர்கள் அவர்களாகவும்
மந்தைகள் நாங்களாகவும் மாறிப்போனோம்....
சிறப்பு விருந்திற்கு
நாங்கள்தான் பலியாடுகள்...
கசாப்புக் கடையில் புல்லைத் தின்று கொண்டு
தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம்...
நாங்கள் மேய்ப்பர்களாகவும்
அவர்கள் ஆடுகளாகவும் மாறுவதற்கு
வழியிருந்தால் சொல்லுங்கள் ஐயாமாரே!
- முகமது பாட்சா*
12/01/2020
அரசனின் எழுதுகோல் முனை
எதையாவதொன்றை எழுதிக் கொண்டேயிருக்கிறது
மசியில்லாத வரைவுகளின் உத்தரவுகள்
சங்கிலிகளைப் பிணைத்து
வீதிகளில் நுழைந்து படர்கின்றன...
காடுகளை வெட்டிச் சாய்க்கிறது...
நதிகளின் நாரிகளைக் கிள்ளி நகைக்கிறது...
பித்துப்பிடித்து
கழுத்துகளைக் கவ்விக் குதறுகிறது...
காசு விட்டெறிந்து
பொறுக்கவிட்டுப் போதையில் போகிக்கிறது...
நானென்று நிமிர்ந்து
துப்பாக்கியை உயர்த்திப் பிடிக்கிறது....
எழுதக் கூடிய பேனாக்கள்
மசி வழிந்து உறங்கிக் கொண்டிருக்க
வெள்ளைத்தாள்களை
ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன...
- முகமது பாட்சா*
12/01/2020
கண்டங்களை
7 ஆல் வகுத்த பிறகு ஈவுகளின் மிச்சம்
நிறைந்து வழிய...
ஆசியக் கண்டத்தினடியில்
சொட்டுகின்ற கண்ணீர் வழிசலாய் என்
தேசத்தின் முகம் முக்கடலில்
மூழ்கித் தவிக்கிறது...
இறுதி மூச்சை
இழுத்துவிடும் மீன்களின் உடலுக்குள்
கடல் நீந்திச் செல்கிறது என்று
எனக்குள்ளிருக்கும் சூஃபி கிழவன்
பாடிக்கொண்டு செல்கிறான்....
அர்த்தமற்ற மாயை வலைகளைச் சாத்தான்
விரித்து வைத்திருக்க
ஓட்டைகளைக் கண்டு அஞ்சுவது
கடலின் மீதான நம்பிக்கையைக் கருவாடாகக்
கரையில் காய வைத்துவிடுகிறது...
சென்னாகூனிகளின் படை
பெரிய கப்பல்களின் மகா அச்சம் என்பதை
பெரிய மீன்களும்
மறந்துவிடுவதுதான் வேடிக்கை...
புவித் தட்டுகளின்
அடுக்குகள் இணைகின்ற போது ஏற்படும்
அதிர்வலைகளின் ரிக்டர்களில்
எல்லைக்கோடுகள் காணாமல் போகும் நாளில்
நாம் எல்லோரும் உடன் பிறப்புகளே!
- முகமது பாட்சா*
13/01/2020
அலையின் சப்தங்கள்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்க,
கடலின் மௌனத்திற்குள்
சொற்களோடு நீந்துகிறேன்...
மலை முகட்டில் ஒற்றை விளக்கெனப்
பௌர்ணவி உட்கார்ந்திருக்கும்
மோனத்தவம் யாரின் வருகைக்காக?
செத்த பறவையிடம்
சொற்கள் நிறைந்திருக்கும் என்பதால்
ஒற்றை இறகிடம்
பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்...
பற்றறுந்த முற்றிலையிலமர்ந்து
கரையொதுங்கும் எறும்பிற்குத் தெரிந்த கவிதை
சருகிற்குச் சமர்ப்பணம்...
புத்தனமர்ந்த இடத்தில்
கொட்டிக்கிடக்கும் சொற்கள்
யசோதரைக்கு தெரிந்த மொழி...
சாமியாடியின் மொழியறியாதவர்கள்
எதிர்கால மிச்சத்திற்கு
வார்த்தைகளை வாங்கிச் செல்கிறார்கள்...
செத்துக் கிடக்கும் பிணத்தினருகே
மொய்த்துக் கொண்டிருப்பது ஈக்களல்ல
சொற்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை...
அடை வைத்த கோழியிடம்
சொற்கள் பொரிந்திருக்கின்றன
மேயவிட்டு இனி வளர்த்துக் கொள்ளலாம்.
- முகமது பாட்சா*
14/01/2020
அறைக்குள் பூட்டி வைத்த சாம்பிராணி
புகையாய் வழிகிறது
பிரம்ம ஏட்டு ரகசியங்களை
நாரதன் கைத் தும்புரு
ஒட்டுக் கேட்டு உளறிக் கொண்டிருக்கிறது...
அந்தப்புரத்தில்
அழுது கொண்டிருக்கும் இளவரசி
குதிரைக்காரன் தொழுவத்தில் பேசிக் கொண்டிருக்கிறாள்
ஜன்னல் வழியாகப்
பேசிவிட்டுப் போகும் புன்னகையை
ஒரு நாவலின் எட்டாம் பக்கத்தில் பார்க்கிறேன்
கடைசிப் பக்கத்தில்
என் பெயர் எழுதப்படாமல் இருக்கிறது...
சற்று முன் வந்த செய்தி இனி
சில அந்தங்களை உடைக்கக்கூடும்
அரங்கம் வாய் வழி வழுக்கி சாலையில் ஓட
அவன் நேற்றே இறந்துவிட்டான்.
- முகமது பாட்சா*
15/01/2020
வெளிச்சத்தைப் பற்றி
யோசித்துக் கொண்டிருந்த போது
இருட்டைப் பற்றி
பேசிக் கொண்டிருந்த சூபி ஸஅதி
என்னை எழுப்பி விட்டுப் போகிறார்.../
கல்லறைத் தோட்டம்
இருட்டைக் கண்டு அஞ்சுவதில்லை.../
பூத்திருக்கும் குல் மொஹர்
குல் மொஹர் பூக்களாகவே சிரிக்க...
கபர்களுக்கும் நிழல் தேவைப்படும்.../
இருட்டில் இருப்பதால்
வேர்கள் இறந்து விட்டது என்கிறான் முட்டாள்.../
சஜ்தாவில் குனிவது போல்
வளைந்து நிமிரும் போது காற்று
உடலுக்குள் ஊடுருவி நுழைந்திருக்கும்.../
வலமிடம் திருப்பி
சலாம் சொல்லும் நந்தியாவட்டைச் செடிகள்
கபர்ஸ்தானின் அழகியல்.../
யாரையோ
வெட்டுவதற்காக நீ ஓடிக் கொண்டிருக்கிறாய்/
கால்களின் கீழ்தான்
உன் வருகைக்காக நயனதாராப் பூக்கள்
சிரித்துக் கொண்டிருக்கின்றன
- நட்புடன்.....முகமது பாட்சா*
17/01/2020
சூபி - இறைஞானி , சஜ்தா தொழுகையின் ஒரு நிலை, கபர் - கல்லறை
மதுக்கடைகளை
மூடிவிட்டுச் செல்லும் மனசிற்குள்
அழுக்குகள் சாராயம் காய்ச்சுகின்றன
உத்தமன் வேசம்
ஓரங்க நாடகத்தின் ஓர் அங்கம்...
அதிகம் பேசுகிறவன்
கள்ளத்தியின் உறவில் கபடம் இசைக்கிறான்...
ஆடம்பரங்கள்
அழுக்குகளைக் கழுவிவிடுமா?
காயம் முற்றில்லாதது...
கைகளை விரித்து வைத்திருக்கும் முஸல்லா
கிப்லாவைப் பார்த்துக் கொண்டிருக்க
தொழுகிறவனின் பயணம்
வேறெங்கோ பாதையை விரிக்கிறது...
இஹ்றாம் கட்டியவன்
காபத்துல்லாவில்தான் இருக்க வேண்டும்
என்பது என்ன நியதி?
நாடோடியின் பாதங்களும்
திக்ருவில் தஸ்பி உருட்டிக் கொண்டிருக்கலாம்.
கருணை மழை கன்னத்தில் விழுவதை
கண்ணீரென்று சொல்கிறீர்கள்....
நாடோடி
காதலென்று மொழி பெயர்க்கிறான்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
18/01/2020
முஸல்லா - தொழுகை விரிப்பு, கிப்லா - தொழுகையின் திசை, இஹ்ராம் - ஹஜ் செல்பவர்கள் உடுத்தும் வெள்ளுடை, காபத்துல்லா - மக்கா ஆலயம் , திக்ர் - தியானம், தஸ்பி - கையுருட்டு மணி
#விஷம்_நுரைக்கும்_கோப்பைகள்
எழுத்துகள் தடுமாறிக் கொண்டிருக்க
அள்ளியெடுக்க அவனுக்கு
இரண்டு கைகள் போதவில்லை...
பாட்டில்கள் நுரைத்து வழிகின்றன
வார்த்தைகளை
வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறான்...
காட்சிப் பிழைகளைக் கண்களில் ஏந்திக் கொண்டு
விரைகிறது வாகனம்
அலறி விழுந்த ஒரு வார்த்தை
அகாலமாய் இறந்து கிடக்க...
வாகனத்துடன் விழுந்து கிடப்பவன் மது...
படிக்க வேண்டிய வயதில்
பூக்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்
பாழ் நிலத்துக்காரி...
விழித்துக் கொண்டவன்
சமர் செய்து கொண்டிருக்கிறான்
மனதிற்குள் மூடியிருக்கும் மதுக்கடை
உடைந்து கிடக்கும் பாட்டில்கள்
என்னதான் பேசிவிடப் போகின்றன...
குடிப்பவனின் படிமம் என்பதைத் தவிர!
- முகமது பாட்சா*
19/01/2020
விளங்காத
மொழிபெயர்ப்பு கவிதையொன்றில்
அறியாத மொழியாக
மீனொன்று நீந்திக் கொண்டிருக்கிறது
ஓட்டைக்குள்
ஒன்பது ஓட்டைகள் நுழைய
அதிலொன்று நுழைந்து வெளியேறும்
மிச்சத்தை
பித்தாகரஸ் கணக்கிடுகிறான்...
கூம்பின் உயரத்திலமர்ந்து
கப்பல்களின் உயரத்தையளக்கும் தேலஸ்
ஆழத்தில் மூழ்கிய கப்பல்களை
எப்படிக் கணக்கிடுவான்?
மரணத்துடன் பேசும் ஆலம்
விழுதுகளையிறக்கி உறவினைத் தழுவ
நீயூட்டனின் விதிகள் தேவையில்லை...
விளங்காத
மொழிபெயர்ப்பு கவிதையொன்றில்
அறியாத மொழியாக
மீனொன்று நீந்திக் கொண்டிருக்கிறது
- நட்புடன்....முகமது பாட்சா*
20/01/2020
வாருங்கள்
கைக்குலுக்கிக் கொண்டு விடை பெறுவோம்
அறிவு வாசலில்
அகப்பட்டதை வாங்கிக் கொண்டோம்
அலமாரிகள் நிறைந்திருப்பது பெருமை!
வடிவேல் நகைச்சுவை போல்
மூளை அப்படியே... பிரஷ்ஷ்ஷாகவே இருக்கட்டும்...
அகால இலக்கியம்
சுயமெடுத்து வளர்ந்து கொண்டிருக்க
அறிவு ஜீவிகளின் கையெழுத்தோடு...
சினிமா வாசனைப்பூசி கொஞ்சம் நகர்ந்தது...
பபாசி அரசியலில்
இறந்து கிடந்த கடையை வேடிக்கை பார்த்தோம்...
எஸ்.ரா. எப்போதும் போல்
வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்க...
விவரப் பட்டியலில்
விலையடுக்குகளைப் பார்த்துவிட்டு
அறிவுப் பசிக்காரன் வெறும் வயிற்றுடன்
வெளியேறிக் கொண்டிருந்தான்...
நான் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்..
சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
20/01/2020
கோப்பைகள்
காலியாகவே இருக்கின்றன...
விஷம் நிரப்பவா? விவரம் நிரப்பவா?
உடைந்து போன கோப்பை
அதிகமாக நிரப்புகிறது உருவத்தை!
கோப்பையின் கைப்பிடியில்
இடையின் வளைவு
இடறித் தெறிக்கிறது தேநீர் துளிகள்...
பூக்களை நிரப்பி வைத்தால்
கோப்பைகள்
ஜாடியாகவே மாறிவிடுகின்றன...
மதுக்கடையில்
இடித்துக் கொள்ளும் கோப்பைகளுக்கு
பூனையின் கண்கள்!
உடைகின்ற கோப்பைகளுக்கு
ஒரு வரலாறும் இருப்பதில்லை
கூட்டி, கழித்து விடுகிறார்கள்!
பிரமை நிரம்பியிருக்கும்
கோப்பையில்
ஈக்கள் எப்போதும் மிதக்கின்றன...
உடைந்து போன கோப்பையில்
நிறைந்து வழிகிறேன்
வார்த்தைகள் என்னைக்
குடித்துக் கொண்டிருக்கின்றன!
- நட்புடன்.....முகமது பாட்சா*
21/01/2020
மணலில்
தூண்டில் போட்டு விட்டு
கடல் வருமென்று காத்திருக்கிறேன்...
ஓரிசொன்று
குலவையிட்டபடி அலைந்து கொண்டிருக்க
ஆகாசத்தை இழுத்துவந்த கரும் மேகம்
சாரல் தோரணம் கட்டுகிறது...
கூடடைய விரிக்கும்
சிறகுகளையும் எத்திப் பறக்கிறது காகத்தின்
கண்ணோரம் அமர்ந்த பாசம்...
கடல் மெதுவாக எட்டிப் பார்க்க
கால்களை நனைக்கிறது மீன்களின் சுவாசம்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
அருகில் அமர்ந்து பேசும் கற்பனையிடம்
கற்பனைக்கு
அப்படியே உன் முகம்!
கடல் உள் வாங்கிச் செல்கிறது....
நான் மட்டும் முழுதாக நனைந்திருக்கிறேன்!
- நட்புடன்....முகமது பாட்சா*
22/01/2020
இசைவு இல்லாத மொழியில்
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..
மூச்சுக் காற்றின் முன் பாதி
வெற்றிடங்களை நிரப்பிச் செலவழிக்கப்பட்டன..
மதங்களைச் சாப்பிட்டு எடுத்த வாந்தி
மக்காத குப்பையில் நுரைத்துக் கொண்டிருக்க,
திருடர்கள்
பாதைகளை வரையறுக்க...
கோடுகளை வரைந்து எல்லைகளென்கிறார்கள்..
எனக்கு அவை
ஓர் அடிமரத்தின் வேர்களாகத்தான் தெரிகின்றன...
காற்றைப் பிரிக்கத் தெரியாதவன்
கதவுகளை மட்டும் வைத்துக் கொண்டு
வீட்டைத் தேடுகிறான்...
பறவைகளின் மொழியைப் படிக்காமல்
பிரபஞ்சத்தின் சுவாசத்தைத் தேடிக் கொண்டிருக்கிறவன்...
ஆழ இழுத்துவிடும் மூச்சில்
ஒரு பறவை சுதந்திரமாகப் பறக்கும் என்றால்
உன் இறைவன் உண்மையானவன்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
22/01/2020
கஸலாய் ஒரு காதல்
நீ போகிற வழியில்தான்
நான் வந்து கொண்டிருக்கிறேன்
உன் பாடல்
என்னைக் கடந்து செல்கிறது!
நீ பார்ப்பதற்காக
ஆயுளை அழகு செய்து கொண்டேன்
அந்திவானம்
ஏன் உன்னை மறைக்கிறது?
சுவடுகளை அழுந்தி முத்தமிடுகிறேன்
அதரங்களில் கஸ்தூரி வாசம்
நீ மட்டும் அருகில் இல்லை!
உன்னழகை இமைகளுக்குள் ரசித்து
விரல்களை
வெட்டிக் கொண்டேன்...
விழிகள் திறக்க மறுக்கிறது!
நீ என்பது
எல்லாவிடத்திலும் நீயாக இருக்க...
என் பாடலில் மட்டும்
ஏன் இத்தனை இலக்கணப் பிழை?
- நட்புடன்.....முகமது பாட்சா*
23/01/2020
நீங்கள் பக்கீரா?
கேட்டவன் அருகில் இருந்தான்
உன் கேள்விக்குப் பதில் இருக்கும்வரை
நான்தான் ஆலம்பனா என்று சிரித்தார் சூஃபி!
அதிசயங்கள் நிகழ்த்துவீரா? என்றான்
மூசாவின் ஆசாக் கோல்
உன்னிடம் பத்திரமாக இருக்கும் போது
என்னிடம் கேட்கிறாயே! என்றார்
இஷ்க்கைத் தேடு
இல்ம் நிறைந்துவிட்டால் நீயும் ஆலம்பனா...
இப்போது சொல் யாரிங்கு பக்கீர்?
புரியவில்லைதான்; ஆனாலும்
பள்ளிவாசலின் மாடங்களில் புறாக்கள்
கூடடைவதை
பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்....
- நட்புடன்....முகமது பாட்சா*
24/01/2020
பக்கீர் - ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் வாழ்பவர்
ஆலம்பனா - அரசன், ஆசாக்கோல் - இறை மகிமை நிறைந்த தடி , இஷ்க் - இறைக்காதல் , இல்ம்- அறிவு
காடன்
குத்தீட்டியை எடுத்துப் பார்க்கிறான்...
அப்பனாடிய வேட்டையின்
மிச்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
காட்டிற்குள்ளிருந்து பன்றிப் பாய எத்தனிக்க
இலாவகமாய் நெளிந்து பாய்ச்சிய கூர்மையில்
அதன் உதிரத்தின் காய்ச்சல்...
காட்டினலறலில்
கைவிரித்துப் பறக்கும் சிறகுகளின் சப்தத்துடன்
மணம் கூட்டும் வாசம்...
கோலாத்தாவின் சட்டியில் வேகும்....
அருகிலருகும் அரவத்தின் சப்தத்தை
அழகாய் சுவாசித்து
திரும்பாமல் தூக்கியெறிவாள்
அது பயந்து நெளிந்து புதருக்குள் ஒளியும்...
காடுகள் காணாமல் போன நாளில்
வீதிகள் நெளிந்தன
வெளிச்சமென்று கம்பங்கள் உயர்ந்த போது...
காடன்
கண் டாக்டரிடம் இருந்தான்...
கோலாத்தா
பாம்பு கடித்துதான் இறந்து போனாள்!
கும்பத்துடன் வைத்த படையலாய்
குத்தீட்டியைச் சாத்தி வைத்தவன்...
மிருகங்களின் வாசமருகும் போது கையிலெடு
காடு நெருங்கிவிடும்
ஓதிவைத்தவன் போன போது
அவனுக்குக் கேன்சர் என்று சொல்லிக் கொண்டார்கள்...
இப்போது
அப்பன் தினமும் உசுப்பிக் கொண்டிருக்கிறான்
எடு மகனே!
வேட்டையாடும் வேலை வந்துவிட்டது!
காடன்
குத்தீட்டியை எடுத்துப் பார்க்கிறான்
அப்பனாடிய வேட்டையின்
மிச்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
- நட்புடன்.....முகமது பாட்சா*
25/01/2020
உறையிலிருக்கும் வாளையெடுத்து
சொறிந்து கொள்கிறவனுக்குத் தெரியாது
அதன் சுகம் விபரீதமானதென்று!
நிழல்களோடு பேசிவிட்டு
நிஜத்தைச் சிறையிலடைக்கிறவன் கழுத்தில்
ஒரு கயிறு சுற்றியேயிருக்கும்!
வஞ்சகத்தியின் வளையோசையை
சங்கீதம் என்று மொழி பெயர்க்கிறவன்
பஞ்சத்தின் அழுகுரல்களையும்
அப்படியேதான் இரசித்துக் கொண்டிருப்பான்...
தேசம் என்பது சிறைச்சாலையல்ல...
தேரிழுக்கிறவன்
சப்பரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டால்
சாமி ஊர்வலம் எப்படி நகரும் ?
ஏழையொருவன்
என்றைக்குக் கொடியேற்றுகிறானோ அப்போதுதான்
அதன் கயிறுகள் வலுப்பெறும்!
குடியரசு என்பது குடிகளுக்கானது
இங்கே மன்னர்கள்
கைக்குலுக்கிக் கொள்ளத் தேவையில்லை!
வாழ்க தேசியம் ! வளர்க நல்லிணக்கம்!
- முகமது பாட்சா*
26/01/2020
வீணையைக் கையில் வைத்துக் கொண்டு
கலைமகள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்,
கருவியிலிருந்து அபஸ்வரம்
இசைத்துக் கொண்டேயிருக்கிறது,
விரல்களிலிருந்து வழியும் வண்ணத்தை
மருதோன்றியென்று சிலாகிக்கிறார்கள்,
அஃது இரத்தமாகவும் இருக்கலாமெனப்
பிரம்மன் பிராது செய்கிறான்...
இவள் நாமடந்தையின் நகலென்றும்
ஒரு செய்தி உலாவருகிறது...
மீட்டாத வீணையின் அபஸ்வரத்தை
இராஜ சங்கீதமென்று,
கல்விச்சாலைகள்
கையிலெடுத்து வாசிக்கத் தருகின்றன...
புத்தகங்களில்
புழுக்கள் மேய்ந்து கொண்டிருக்க,
முதல் வரிக்கே மீண்டும் திரும்பி விடுங்கள்...
அதற்கு முன் சிறு கோரிக்கை
இறந்து கிடக்கும் அப்பாவிச் சிறுவர்களை
புத்தகங்களோடு பத்திரமாகப் புதைத்துவிடுங்கள்!
- முகமது பாட்சா*
27/01/2020
மைக்கை அசைத்துச் சரி செய்தபின்
ஒலிவாங்கி
அவரை உள்வாங்கி வெளியே துப்பிக் கொண்டிருக்க..
கடம் தாங்கி
அவ்வப்போது பார்த்துச் சிரித்துக் கொள்ள...
வயலின் எங்கோ இழுத்துச் செல்லும் இசையில்
ஒருவர் தோணியில் நகரும் வேளை,
சைலண்டிலிருந்த கைப்பேசி துருத்திக் காட்டிய
வெளிச்சத்திற்குள் நுழைந்து,
ரகசியம் பேசும் ஜிப்பாக்காரனை திரும்பிப் பார்த்தவன்,
மீண்டும்
கிண்டிலில் விழுந்து வாசித்துக் கொண்டிருக்க,
பட்டுப்புடவைகளைப் பற்றி
சுவராசியமாக இரண்டு மாமிகள் நெய்து கொண்டிருக்க...
'வாவ்!' என்ற சப்தத்துடன்
திடிரென்று எழும் கரவொலி சப்தத்தால்
இவர்கள் எல்லோருக்குமே
உடனே அபஸ்வரம் தட்டத்தான் செய்கிறது!
- நட்புடன்.....முகமது பாட்சா*
27/01/2020
நதியின் மௌனத்தை
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...
கடலின் சப்தம்
அதனடியில் ஓடிக்கொண்டிருக்கிறது...
போதியின் சக்கரத்தைக் கழற்றி வைத்தவன்
புற்களோடு இப்போதுதான்
பேசத் தொடங்கியிருக்கிறான்
ஈர்க்கம்புல்
உயர்ந்திருந்தாலும்
பனை மரத்தின் வேர்களுக்குப்
பாடம் சொல்லித்தர முடியுமா?
ஆகாயம் என்பது
பறவைகள் பாதுகாக்கப்பட்ட பகுதி...
சர்ப்பங்கள்
ஊர்ந்து செல்லவே பணிக்கப் பட்டிருக்கின்றன..
எறும்புகளின் கூட்டத்திற்குள்
யானையாக இருந்தாலும்
நகர்ந்துதான் செல்ல வேண்டும்...
- நட்புடன்.....முகமது பாட்சா*
28/01/2020
எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தைத்
தூக்கிக் கொண்டு திரிகிறேன்..
அஃது இப்போது மிகவும் கனமாக இருக்கிறது...
நடையில் நுழைந்த தள்ளாட்டத்தை
மதுக்கடையில்
சிலர் நுழைத்துப் பார்த்தார்கள்...
பரத்தையின் வீட்டிற்குப் போகிறவன் பாதங்கள்
இப்படித்தான்
தடுமாறும் என்று பேசிக்கொண்டார்கள்...
முத்தத்தின் ஈரம் சுரந்து
உதடுகள் பெருத்து வளரத்தொடங்கின...
முத்தம் வார்த்தைகளின் கொதி கலன் என்று
எனக்கு நானே பேசிக் கொள்கிறேன்...
அவத்தையைக் கண்ட நாடோடி
கவலைப்படாதே முத்தத்தை இரவு தின்றுவிடும்...
பிறகு சுமை இருக்காது
என்று சொல்லிவிட்டுப் போனான்...
ஆனாலும், முத்தம் என்பது
நீங்கள் நினைப்பது போல் இருக்க வேண்டும் என்று
எந்த அவசியமுமில்லை... !
- நட்புடன்.....முகமது பாட்சா*
நடு நிசி கவிதைகள் - 1
குறுக்கு வழிகளென்பதே
தடை செய்யப்பட்ட பகுதிகள்தான்...
இரவின் நிசப்தத்தை
அவை ஆழ்ந்து இரசிக்கின்றன...
மர அசைவுகளில் விழும் பௌர்ணமி நிலாத்
துண்டங்களை
யாரும் பொறுக்கவே முடியாது...
ஆந்தையின் பாடலுக்கு மொழி பெயர்க்கும்
நரிகளின் ஊளைகளை
நாரசாராம் என்று நீங்கள் ஆக்கம் செய்யும் போது
ஒரு நிழல் எளிதில் கடந்து போகும்
நீங்கள் பேயென்று அலறலாம்...
அஃதுங்களின் பாவ நிழலாகவும் இருக்கும்...
அந்தச் சமாதிகள்
நிம்மதியாக அங்கேயே உறங்கட்டும்..
அலறி எழுப்பிவிடாதீர்கள்
உங்களிடம் விடுதலைப் பெற்றதாக எண்ணி
உறங்கிக் கொண்டிருக்கின்றன...
- நட்புடன்....முகமது பாட்சா*
29/01/2020
கூப்பியக் கையில்
குரோதத்தின் சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது
புன்னகை
எப்போதும் இனிமையாக
இருக்க வேண்டிய அவசியமில்லை...
விழிகளின் இலக்கு கூப்பி நிற்க
சங்கி, குனிந்து காலைத்தொடும் போது
மூன்று தோட்டாக்கள்
தேசத்தின் மீது பாய்ந்திருந்தது!
காந்தியும் ஏமாந்து போயிருந்தார்....
தேசத்தினழுக்கு
இங்கேயே தேங்கிக் கிடப்பதை அறியாமல்...
இந்தியா முழுவதும்
இன்றும் கூட இரத்தத்தின் கவிச்சி!
- முகமது பாட்சா*
30/01/2020
நடுநிசிக் கவிதை - 2
நடுச்சாமம்
'அகலிகையின் பாதங்கள்
வானத்தில் சிதறிக்கிடக்கின்றன' என்று
அருந்ததி
உருண்டுப் புரண்டு அரட்டுகிறாள்...
சமாதிக்குள்ளிருந்து வெளியான புழுக்கத்தை
காகங்கள்
கொத்தித் தின்று பசியாறுகின்றன...
நரம்பொன்றை இழுத்து இசைமீட்டும்
வல்லூரின் அலகில்
யோனியின் முத்த தழும்புகள்...
சமாதிக்குள்ளிருந்து எழும் வலியின் இசை
இரவை
கள்ளத்தனமாய் மூடி வைக்கிறது..
'அர்த்த சாமம்
பூசைக்கு உகந்ததல்ல!' என்று
ஆலயங்களின் கதவுகள் அடைபட்டிருக்க
காசையிறைத்தவன்
கடவுளாக நடந்து செல்கிறான்...
சமாதிக்குள்
புழுக்கம் தாழிட்டுத் தரையிறங்கிக் கொள்ள
அறிவிப்புப் பலகையொன்று
சிகப்பு விளக்கின்
வெளிச்சத்தில் அநாதியாகக் கிடக்கிறது
'இது தடை செய்யப்பட்ட பகுதி'
- நட்புடன்.....முகமது பாட்சா*
31/01/2020
வெளிவரத்துடிக்கும் இணைப்பிற்கு,
சங்கிலி என்று பெயரிடுகிறேன்...
வரையாத கோடுகள்
உறங்காத நிலத்திற்குள் வேர்களாக
ஊடுருவும் சிக்கல்களை
உறுதி என்று எடுத்துக் கொள்கிறது காலம்...
பறவைகளின் சிறகசைப்பில்தான்
விடியல் என்றால் யாரும் நம்புவதில்லை...
மலர்வனத்தில் முட்களும்
அடர் வனத்தில் நாகங்கள் இருப்பதும் கூட
அவற்றின் காவலுக்குத்தான்.
எதிர் வினைகளை எழுதாத காலம்
உறக்கம் மூடியிருக்கும் முட்டை...
.... அச்சமென்பது பசலை ...
மூடியிருக்கும் பூனையின் கண்களில்
எலிகள் எப்போதும்
ஓடிக் கொண்டிருக்கும் என்பது தேடலின் விதி..
சகலம் என்பது
சாத்தானையும் உள்ளடக்கியதுதான்...
தராசில் எது மிகைக்கிறது என்பதில்தான்
சுதந்திரம் தெளிவாகிறது.
இரவை மடித்து வைத்தாலும்
தீப்பந்தம் நெஞ்சுரத்தில் மிகைத்திருக்கட்டும்..
- முகமது பாட்சா*
11/01/2020
வட்டத்திற்குள் வட்டம் வரைந்து
வெளிவரத்துடிக்கும் இணைப்பிற்கு,
சங்கிலி என்று பெயரிடுகிறேன்...
வரையாத கோடுகள்
உறங்காத நிலத்திற்குள் வேர்களாக
ஊடுருவும் சிக்கல்களை
உறுதி என்று எடுத்துக் கொள்கிறது காலம்...
பறவைகளின் சிறகசைப்பில்தான்
விடியல் என்றால் யாரும் நம்புவதில்லை...
மலர்வனத்தில் முட்களும்
அடர் வனத்தில் நாகங்கள் இருப்பதும் கூட
அவற்றின் காவலுக்குத்தான்.
எதிர் வினைகளை எழுதாத காலம்
உறக்கம் மூடியிருக்கும் முட்டை...
.... அச்சமென்பது பசலை ...
மூடியிருக்கும் பூனையின் கண்களில்
எலிகள் எப்போதும்
ஓடிக் கொண்டிருக்கும் என்பது தேடலின் விதி..
சகலம் என்பது
சாத்தானையும் உள்ளடக்கியதுதான்...
தராசில் எது மிகைக்கிறது என்பதில்தான்
சுதந்திரம் தெளிவாகிறது.
இரவை மடித்து வைத்தாலும்
தீப்பந்தம் நெஞ்சுரத்தில் மிகைத்திருக்கட்டும்..
- முகமது பாட்சா*
11/01/2020
ஓர் ஆட்டிடையனின் வழக்காக
இதனைப் பதிவு செய்ய வேண்டும் ஐயாமாரே...
மேய்ச்சல் நிலங்களில்லாததால்
பசி எங்களைத் தின்று கொண்டிருக்கிறது...
தொறட்டிக் கோலின் முனையில்
கொடிகளைக் கட்டி
ஊர்வலத்திற்கு அழைத்தவர்கள் பிரியாணி
குவார்ட்டருக்கு அடிமையாக்கியதால்
மேய்ப்பர்கள் அவர்களாகவும்
மந்தைகள் நாங்களாகவும் மாறிப்போனோம்....
சிறப்பு விருந்திற்கு
நாங்கள்தான் பலியாடுகள்...
கசாப்புக் கடையில் புல்லைத் தின்று கொண்டு
தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம்...
நாங்கள் மேய்ப்பர்களாகவும்
அவர்கள் ஆடுகளாகவும் மாறுவதற்கு
வழியிருந்தால் சொல்லுங்கள் ஐயாமாரே!
- முகமது பாட்சா*
12/01/2020
அரசனின் எழுதுகோல் முனை
எதையாவதொன்றை எழுதிக் கொண்டேயிருக்கிறது
மசியில்லாத வரைவுகளின் உத்தரவுகள்
சங்கிலிகளைப் பிணைத்து
வீதிகளில் நுழைந்து படர்கின்றன...
காடுகளை வெட்டிச் சாய்க்கிறது...
நதிகளின் நாரிகளைக் கிள்ளி நகைக்கிறது...
பித்துப்பிடித்து
கழுத்துகளைக் கவ்விக் குதறுகிறது...
காசு விட்டெறிந்து
பொறுக்கவிட்டுப் போதையில் போகிக்கிறது...
நானென்று நிமிர்ந்து
துப்பாக்கியை உயர்த்திப் பிடிக்கிறது....
எழுதக் கூடிய பேனாக்கள்
மசி வழிந்து உறங்கிக் கொண்டிருக்க
வெள்ளைத்தாள்களை
ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன...
- முகமது பாட்சா*
12/01/2020
கண்டங்களை
7 ஆல் வகுத்த பிறகு ஈவுகளின் மிச்சம்
நிறைந்து வழிய...
ஆசியக் கண்டத்தினடியில்
சொட்டுகின்ற கண்ணீர் வழிசலாய் என்
தேசத்தின் முகம் முக்கடலில்
மூழ்கித் தவிக்கிறது...
இறுதி மூச்சை
இழுத்துவிடும் மீன்களின் உடலுக்குள்
கடல் நீந்திச் செல்கிறது என்று
எனக்குள்ளிருக்கும் சூஃபி கிழவன்
பாடிக்கொண்டு செல்கிறான்....
அர்த்தமற்ற மாயை வலைகளைச் சாத்தான்
விரித்து வைத்திருக்க
ஓட்டைகளைக் கண்டு அஞ்சுவது
கடலின் மீதான நம்பிக்கையைக் கருவாடாகக்
கரையில் காய வைத்துவிடுகிறது...
சென்னாகூனிகளின் படை
பெரிய கப்பல்களின் மகா அச்சம் என்பதை
பெரிய மீன்களும்
மறந்துவிடுவதுதான் வேடிக்கை...
புவித் தட்டுகளின்
அடுக்குகள் இணைகின்ற போது ஏற்படும்
அதிர்வலைகளின் ரிக்டர்களில்
எல்லைக்கோடுகள் காணாமல் போகும் நாளில்
நாம் எல்லோரும் உடன் பிறப்புகளே!
- முகமது பாட்சா*
13/01/2020
அலையின் சப்தங்கள்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்க,
கடலின் மௌனத்திற்குள்
சொற்களோடு நீந்துகிறேன்...
மலை முகட்டில் ஒற்றை விளக்கெனப்
பௌர்ணவி உட்கார்ந்திருக்கும்
மோனத்தவம் யாரின் வருகைக்காக?
செத்த பறவையிடம்
சொற்கள் நிறைந்திருக்கும் என்பதால்
ஒற்றை இறகிடம்
பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்...
பற்றறுந்த முற்றிலையிலமர்ந்து
கரையொதுங்கும் எறும்பிற்குத் தெரிந்த கவிதை
சருகிற்குச் சமர்ப்பணம்...
புத்தனமர்ந்த இடத்தில்
கொட்டிக்கிடக்கும் சொற்கள்
யசோதரைக்கு தெரிந்த மொழி...
சாமியாடியின் மொழியறியாதவர்கள்
எதிர்கால மிச்சத்திற்கு
வார்த்தைகளை வாங்கிச் செல்கிறார்கள்...
செத்துக் கிடக்கும் பிணத்தினருகே
மொய்த்துக் கொண்டிருப்பது ஈக்களல்ல
சொற்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை...
அடை வைத்த கோழியிடம்
சொற்கள் பொரிந்திருக்கின்றன
மேயவிட்டு இனி வளர்த்துக் கொள்ளலாம்.
- முகமது பாட்சா*
14/01/2020
அறைக்குள் பூட்டி வைத்த சாம்பிராணி
புகையாய் வழிகிறது
பிரம்ம ஏட்டு ரகசியங்களை
நாரதன் கைத் தும்புரு
ஒட்டுக் கேட்டு உளறிக் கொண்டிருக்கிறது...
அந்தப்புரத்தில்
அழுது கொண்டிருக்கும் இளவரசி
குதிரைக்காரன் தொழுவத்தில் பேசிக் கொண்டிருக்கிறாள்
ஜன்னல் வழியாகப்
பேசிவிட்டுப் போகும் புன்னகையை
ஒரு நாவலின் எட்டாம் பக்கத்தில் பார்க்கிறேன்
கடைசிப் பக்கத்தில்
என் பெயர் எழுதப்படாமல் இருக்கிறது...
சற்று முன் வந்த செய்தி இனி
சில அந்தங்களை உடைக்கக்கூடும்
அரங்கம் வாய் வழி வழுக்கி சாலையில் ஓட
அவன் நேற்றே இறந்துவிட்டான்.
- முகமது பாட்சா*
15/01/2020
வெளிச்சத்தைப் பற்றி
யோசித்துக் கொண்டிருந்த போது
இருட்டைப் பற்றி
பேசிக் கொண்டிருந்த சூபி ஸஅதி
என்னை எழுப்பி விட்டுப் போகிறார்.../
கல்லறைத் தோட்டம்
இருட்டைக் கண்டு அஞ்சுவதில்லை.../
பூத்திருக்கும் குல் மொஹர்
குல் மொஹர் பூக்களாகவே சிரிக்க...
கபர்களுக்கும் நிழல் தேவைப்படும்.../
இருட்டில் இருப்பதால்
வேர்கள் இறந்து விட்டது என்கிறான் முட்டாள்.../
சஜ்தாவில் குனிவது போல்
வளைந்து நிமிரும் போது காற்று
உடலுக்குள் ஊடுருவி நுழைந்திருக்கும்.../
வலமிடம் திருப்பி
சலாம் சொல்லும் நந்தியாவட்டைச் செடிகள்
கபர்ஸ்தானின் அழகியல்.../
யாரையோ
வெட்டுவதற்காக நீ ஓடிக் கொண்டிருக்கிறாய்/
கால்களின் கீழ்தான்
உன் வருகைக்காக நயனதாராப் பூக்கள்
சிரித்துக் கொண்டிருக்கின்றன
- நட்புடன்.....முகமது பாட்சா*
17/01/2020
சூபி - இறைஞானி , சஜ்தா தொழுகையின் ஒரு நிலை, கபர் - கல்லறை
மதுக்கடைகளை
மூடிவிட்டுச் செல்லும் மனசிற்குள்
அழுக்குகள் சாராயம் காய்ச்சுகின்றன
உத்தமன் வேசம்
ஓரங்க நாடகத்தின் ஓர் அங்கம்...
அதிகம் பேசுகிறவன்
கள்ளத்தியின் உறவில் கபடம் இசைக்கிறான்...
ஆடம்பரங்கள்
அழுக்குகளைக் கழுவிவிடுமா?
காயம் முற்றில்லாதது...
கைகளை விரித்து வைத்திருக்கும் முஸல்லா
கிப்லாவைப் பார்த்துக் கொண்டிருக்க
தொழுகிறவனின் பயணம்
வேறெங்கோ பாதையை விரிக்கிறது...
இஹ்றாம் கட்டியவன்
காபத்துல்லாவில்தான் இருக்க வேண்டும்
என்பது என்ன நியதி?
நாடோடியின் பாதங்களும்
திக்ருவில் தஸ்பி உருட்டிக் கொண்டிருக்கலாம்.
கருணை மழை கன்னத்தில் விழுவதை
கண்ணீரென்று சொல்கிறீர்கள்....
நாடோடி
காதலென்று மொழி பெயர்க்கிறான்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
18/01/2020
முஸல்லா - தொழுகை விரிப்பு, கிப்லா - தொழுகையின் திசை, இஹ்ராம் - ஹஜ் செல்பவர்கள் உடுத்தும் வெள்ளுடை, காபத்துல்லா - மக்கா ஆலயம் , திக்ர் - தியானம், தஸ்பி - கையுருட்டு மணி
#விஷம்_நுரைக்கும்_கோப்பைகள்
எழுத்துகள் தடுமாறிக் கொண்டிருக்க
அள்ளியெடுக்க அவனுக்கு
இரண்டு கைகள் போதவில்லை...
பாட்டில்கள் நுரைத்து வழிகின்றன
வார்த்தைகளை
வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறான்...
காட்சிப் பிழைகளைக் கண்களில் ஏந்திக் கொண்டு
விரைகிறது வாகனம்
அலறி விழுந்த ஒரு வார்த்தை
அகாலமாய் இறந்து கிடக்க...
வாகனத்துடன் விழுந்து கிடப்பவன் மது...
படிக்க வேண்டிய வயதில்
பூக்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்
பாழ் நிலத்துக்காரி...
விழித்துக் கொண்டவன்
சமர் செய்து கொண்டிருக்கிறான்
மனதிற்குள் மூடியிருக்கும் மதுக்கடை
உடைந்து கிடக்கும் பாட்டில்கள்
என்னதான் பேசிவிடப் போகின்றன...
குடிப்பவனின் படிமம் என்பதைத் தவிர!
- முகமது பாட்சா*
19/01/2020
விளங்காத
மொழிபெயர்ப்பு கவிதையொன்றில்
அறியாத மொழியாக
மீனொன்று நீந்திக் கொண்டிருக்கிறது
ஓட்டைக்குள்
ஒன்பது ஓட்டைகள் நுழைய
அதிலொன்று நுழைந்து வெளியேறும்
மிச்சத்தை
பித்தாகரஸ் கணக்கிடுகிறான்...
கூம்பின் உயரத்திலமர்ந்து
கப்பல்களின் உயரத்தையளக்கும் தேலஸ்
ஆழத்தில் மூழ்கிய கப்பல்களை
எப்படிக் கணக்கிடுவான்?
மரணத்துடன் பேசும் ஆலம்
விழுதுகளையிறக்கி உறவினைத் தழுவ
நீயூட்டனின் விதிகள் தேவையில்லை...
விளங்காத
மொழிபெயர்ப்பு கவிதையொன்றில்
அறியாத மொழியாக
மீனொன்று நீந்திக் கொண்டிருக்கிறது
- நட்புடன்....முகமது பாட்சா*
20/01/2020
வாருங்கள்
கைக்குலுக்கிக் கொண்டு விடை பெறுவோம்
அறிவு வாசலில்
அகப்பட்டதை வாங்கிக் கொண்டோம்
அலமாரிகள் நிறைந்திருப்பது பெருமை!
வடிவேல் நகைச்சுவை போல்
மூளை அப்படியே... பிரஷ்ஷ்ஷாகவே இருக்கட்டும்...
அகால இலக்கியம்
சுயமெடுத்து வளர்ந்து கொண்டிருக்க
அறிவு ஜீவிகளின் கையெழுத்தோடு...
சினிமா வாசனைப்பூசி கொஞ்சம் நகர்ந்தது...
பபாசி அரசியலில்
இறந்து கிடந்த கடையை வேடிக்கை பார்த்தோம்...
எஸ்.ரா. எப்போதும் போல்
வாடிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்க...
விவரப் பட்டியலில்
விலையடுக்குகளைப் பார்த்துவிட்டு
அறிவுப் பசிக்காரன் வெறும் வயிற்றுடன்
வெளியேறிக் கொண்டிருந்தான்...
நான் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்..
சேக்கிழார் எழுதிய கம்ப ராமாயணம்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
20/01/2020
கோப்பைகள்
காலியாகவே இருக்கின்றன...
விஷம் நிரப்பவா? விவரம் நிரப்பவா?
உடைந்து போன கோப்பை
அதிகமாக நிரப்புகிறது உருவத்தை!
கோப்பையின் கைப்பிடியில்
இடையின் வளைவு
இடறித் தெறிக்கிறது தேநீர் துளிகள்...
பூக்களை நிரப்பி வைத்தால்
கோப்பைகள்
ஜாடியாகவே மாறிவிடுகின்றன...
மதுக்கடையில்
இடித்துக் கொள்ளும் கோப்பைகளுக்கு
பூனையின் கண்கள்!
உடைகின்ற கோப்பைகளுக்கு
ஒரு வரலாறும் இருப்பதில்லை
கூட்டி, கழித்து விடுகிறார்கள்!
பிரமை நிரம்பியிருக்கும்
கோப்பையில்
ஈக்கள் எப்போதும் மிதக்கின்றன...
உடைந்து போன கோப்பையில்
நிறைந்து வழிகிறேன்
வார்த்தைகள் என்னைக்
குடித்துக் கொண்டிருக்கின்றன!
- நட்புடன்.....முகமது பாட்சா*
21/01/2020
மணலில்
தூண்டில் போட்டு விட்டு
கடல் வருமென்று காத்திருக்கிறேன்...
ஓரிசொன்று
குலவையிட்டபடி அலைந்து கொண்டிருக்க
ஆகாசத்தை இழுத்துவந்த கரும் மேகம்
சாரல் தோரணம் கட்டுகிறது...
கூடடைய விரிக்கும்
சிறகுகளையும் எத்திப் பறக்கிறது காகத்தின்
கண்ணோரம் அமர்ந்த பாசம்...
கடல் மெதுவாக எட்டிப் பார்க்க
கால்களை நனைக்கிறது மீன்களின் சுவாசம்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
அருகில் அமர்ந்து பேசும் கற்பனையிடம்
கற்பனைக்கு
அப்படியே உன் முகம்!
கடல் உள் வாங்கிச் செல்கிறது....
நான் மட்டும் முழுதாக நனைந்திருக்கிறேன்!
- நட்புடன்....முகமது பாட்சா*
22/01/2020
இசைவு இல்லாத மொழியில்
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்..
மூச்சுக் காற்றின் முன் பாதி
வெற்றிடங்களை நிரப்பிச் செலவழிக்கப்பட்டன..
மதங்களைச் சாப்பிட்டு எடுத்த வாந்தி
மக்காத குப்பையில் நுரைத்துக் கொண்டிருக்க,
திருடர்கள்
பாதைகளை வரையறுக்க...
கோடுகளை வரைந்து எல்லைகளென்கிறார்கள்..
எனக்கு அவை
ஓர் அடிமரத்தின் வேர்களாகத்தான் தெரிகின்றன...
காற்றைப் பிரிக்கத் தெரியாதவன்
கதவுகளை மட்டும் வைத்துக் கொண்டு
வீட்டைத் தேடுகிறான்...
பறவைகளின் மொழியைப் படிக்காமல்
பிரபஞ்சத்தின் சுவாசத்தைத் தேடிக் கொண்டிருக்கிறவன்...
ஆழ இழுத்துவிடும் மூச்சில்
ஒரு பறவை சுதந்திரமாகப் பறக்கும் என்றால்
உன் இறைவன் உண்மையானவன்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
22/01/2020
கஸலாய் ஒரு காதல்
நீ போகிற வழியில்தான்
நான் வந்து கொண்டிருக்கிறேன்
உன் பாடல்
என்னைக் கடந்து செல்கிறது!
நீ பார்ப்பதற்காக
ஆயுளை அழகு செய்து கொண்டேன்
அந்திவானம்
ஏன் உன்னை மறைக்கிறது?
சுவடுகளை அழுந்தி முத்தமிடுகிறேன்
அதரங்களில் கஸ்தூரி வாசம்
நீ மட்டும் அருகில் இல்லை!
உன்னழகை இமைகளுக்குள் ரசித்து
விரல்களை
வெட்டிக் கொண்டேன்...
விழிகள் திறக்க மறுக்கிறது!
நீ என்பது
எல்லாவிடத்திலும் நீயாக இருக்க...
என் பாடலில் மட்டும்
ஏன் இத்தனை இலக்கணப் பிழை?
- நட்புடன்.....முகமது பாட்சா*
23/01/2020
நீங்கள் பக்கீரா?
கேட்டவன் அருகில் இருந்தான்
உன் கேள்விக்குப் பதில் இருக்கும்வரை
நான்தான் ஆலம்பனா என்று சிரித்தார் சூஃபி!
அதிசயங்கள் நிகழ்த்துவீரா? என்றான்
மூசாவின் ஆசாக் கோல்
உன்னிடம் பத்திரமாக இருக்கும் போது
என்னிடம் கேட்கிறாயே! என்றார்
இஷ்க்கைத் தேடு
இல்ம் நிறைந்துவிட்டால் நீயும் ஆலம்பனா...
இப்போது சொல் யாரிங்கு பக்கீர்?
புரியவில்லைதான்; ஆனாலும்
பள்ளிவாசலின் மாடங்களில் புறாக்கள்
கூடடைவதை
பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்....
- நட்புடன்....முகமது பாட்சா*
24/01/2020
பக்கீர் - ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் வாழ்பவர்
ஆலம்பனா - அரசன், ஆசாக்கோல் - இறை மகிமை நிறைந்த தடி , இஷ்க் - இறைக்காதல் , இல்ம்- அறிவு
காடன்
குத்தீட்டியை எடுத்துப் பார்க்கிறான்...
அப்பனாடிய வேட்டையின்
மிச்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
காட்டிற்குள்ளிருந்து பன்றிப் பாய எத்தனிக்க
இலாவகமாய் நெளிந்து பாய்ச்சிய கூர்மையில்
அதன் உதிரத்தின் காய்ச்சல்...
காட்டினலறலில்
கைவிரித்துப் பறக்கும் சிறகுகளின் சப்தத்துடன்
மணம் கூட்டும் வாசம்...
கோலாத்தாவின் சட்டியில் வேகும்....
அருகிலருகும் அரவத்தின் சப்தத்தை
அழகாய் சுவாசித்து
திரும்பாமல் தூக்கியெறிவாள்
அது பயந்து நெளிந்து புதருக்குள் ஒளியும்...
காடுகள் காணாமல் போன நாளில்
வீதிகள் நெளிந்தன
வெளிச்சமென்று கம்பங்கள் உயர்ந்த போது...
காடன்
கண் டாக்டரிடம் இருந்தான்...
கோலாத்தா
பாம்பு கடித்துதான் இறந்து போனாள்!
கும்பத்துடன் வைத்த படையலாய்
குத்தீட்டியைச் சாத்தி வைத்தவன்...
மிருகங்களின் வாசமருகும் போது கையிலெடு
காடு நெருங்கிவிடும்
ஓதிவைத்தவன் போன போது
அவனுக்குக் கேன்சர் என்று சொல்லிக் கொண்டார்கள்...
இப்போது
அப்பன் தினமும் உசுப்பிக் கொண்டிருக்கிறான்
எடு மகனே!
வேட்டையாடும் வேலை வந்துவிட்டது!
காடன்
குத்தீட்டியை எடுத்துப் பார்க்கிறான்
அப்பனாடிய வேட்டையின்
மிச்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
- நட்புடன்.....முகமது பாட்சா*
25/01/2020
உறையிலிருக்கும் வாளையெடுத்து
சொறிந்து கொள்கிறவனுக்குத் தெரியாது
அதன் சுகம் விபரீதமானதென்று!
நிழல்களோடு பேசிவிட்டு
நிஜத்தைச் சிறையிலடைக்கிறவன் கழுத்தில்
ஒரு கயிறு சுற்றியேயிருக்கும்!
வஞ்சகத்தியின் வளையோசையை
சங்கீதம் என்று மொழி பெயர்க்கிறவன்
பஞ்சத்தின் அழுகுரல்களையும்
அப்படியேதான் இரசித்துக் கொண்டிருப்பான்...
தேசம் என்பது சிறைச்சாலையல்ல...
தேரிழுக்கிறவன்
சப்பரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டால்
சாமி ஊர்வலம் எப்படி நகரும் ?
ஏழையொருவன்
என்றைக்குக் கொடியேற்றுகிறானோ அப்போதுதான்
அதன் கயிறுகள் வலுப்பெறும்!
குடியரசு என்பது குடிகளுக்கானது
இங்கே மன்னர்கள்
கைக்குலுக்கிக் கொள்ளத் தேவையில்லை!
வாழ்க தேசியம் ! வளர்க நல்லிணக்கம்!
- முகமது பாட்சா*
26/01/2020
வீணையைக் கையில் வைத்துக் கொண்டு
கலைமகள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்,
கருவியிலிருந்து அபஸ்வரம்
இசைத்துக் கொண்டேயிருக்கிறது,
விரல்களிலிருந்து வழியும் வண்ணத்தை
மருதோன்றியென்று சிலாகிக்கிறார்கள்,
அஃது இரத்தமாகவும் இருக்கலாமெனப்
பிரம்மன் பிராது செய்கிறான்...
இவள் நாமடந்தையின் நகலென்றும்
ஒரு செய்தி உலாவருகிறது...
மீட்டாத வீணையின் அபஸ்வரத்தை
இராஜ சங்கீதமென்று,
கல்விச்சாலைகள்
கையிலெடுத்து வாசிக்கத் தருகின்றன...
புத்தகங்களில்
புழுக்கள் மேய்ந்து கொண்டிருக்க,
முதல் வரிக்கே மீண்டும் திரும்பி விடுங்கள்...
அதற்கு முன் சிறு கோரிக்கை
இறந்து கிடக்கும் அப்பாவிச் சிறுவர்களை
புத்தகங்களோடு பத்திரமாகப் புதைத்துவிடுங்கள்!
- முகமது பாட்சா*
27/01/2020
மைக்கை அசைத்துச் சரி செய்தபின்
ஒலிவாங்கி
அவரை உள்வாங்கி வெளியே துப்பிக் கொண்டிருக்க..
கடம் தாங்கி
அவ்வப்போது பார்த்துச் சிரித்துக் கொள்ள...
வயலின் எங்கோ இழுத்துச் செல்லும் இசையில்
ஒருவர் தோணியில் நகரும் வேளை,
சைலண்டிலிருந்த கைப்பேசி துருத்திக் காட்டிய
வெளிச்சத்திற்குள் நுழைந்து,
ரகசியம் பேசும் ஜிப்பாக்காரனை திரும்பிப் பார்த்தவன்,
மீண்டும்
கிண்டிலில் விழுந்து வாசித்துக் கொண்டிருக்க,
பட்டுப்புடவைகளைப் பற்றி
சுவராசியமாக இரண்டு மாமிகள் நெய்து கொண்டிருக்க...
'வாவ்!' என்ற சப்தத்துடன்
திடிரென்று எழும் கரவொலி சப்தத்தால்
இவர்கள் எல்லோருக்குமே
உடனே அபஸ்வரம் தட்டத்தான் செய்கிறது!
- நட்புடன்.....முகமது பாட்சா*
27/01/2020
நதியின் மௌனத்தை
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...
கடலின் சப்தம்
அதனடியில் ஓடிக்கொண்டிருக்கிறது...
போதியின் சக்கரத்தைக் கழற்றி வைத்தவன்
புற்களோடு இப்போதுதான்
பேசத் தொடங்கியிருக்கிறான்
ஈர்க்கம்புல்
உயர்ந்திருந்தாலும்
பனை மரத்தின் வேர்களுக்குப்
பாடம் சொல்லித்தர முடியுமா?
ஆகாயம் என்பது
பறவைகள் பாதுகாக்கப்பட்ட பகுதி...
சர்ப்பங்கள்
ஊர்ந்து செல்லவே பணிக்கப் பட்டிருக்கின்றன..
எறும்புகளின் கூட்டத்திற்குள்
யானையாக இருந்தாலும்
நகர்ந்துதான் செல்ல வேண்டும்...
- நட்புடன்.....முகமது பாட்சா*
28/01/2020
எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தைத்
தூக்கிக் கொண்டு திரிகிறேன்..
அஃது இப்போது மிகவும் கனமாக இருக்கிறது...
நடையில் நுழைந்த தள்ளாட்டத்தை
மதுக்கடையில்
சிலர் நுழைத்துப் பார்த்தார்கள்...
பரத்தையின் வீட்டிற்குப் போகிறவன் பாதங்கள்
இப்படித்தான்
தடுமாறும் என்று பேசிக்கொண்டார்கள்...
முத்தத்தின் ஈரம் சுரந்து
உதடுகள் பெருத்து வளரத்தொடங்கின...
முத்தம் வார்த்தைகளின் கொதி கலன் என்று
எனக்கு நானே பேசிக் கொள்கிறேன்...
அவத்தையைக் கண்ட நாடோடி
கவலைப்படாதே முத்தத்தை இரவு தின்றுவிடும்...
பிறகு சுமை இருக்காது
என்று சொல்லிவிட்டுப் போனான்...
ஆனாலும், முத்தம் என்பது
நீங்கள் நினைப்பது போல் இருக்க வேண்டும் என்று
எந்த அவசியமுமில்லை... !
- நட்புடன்.....முகமது பாட்சா*
நடு நிசி கவிதைகள் - 1
குறுக்கு வழிகளென்பதே
தடை செய்யப்பட்ட பகுதிகள்தான்...
இரவின் நிசப்தத்தை
அவை ஆழ்ந்து இரசிக்கின்றன...
மர அசைவுகளில் விழும் பௌர்ணமி நிலாத்
துண்டங்களை
யாரும் பொறுக்கவே முடியாது...
ஆந்தையின் பாடலுக்கு மொழி பெயர்க்கும்
நரிகளின் ஊளைகளை
நாரசாராம் என்று நீங்கள் ஆக்கம் செய்யும் போது
ஒரு நிழல் எளிதில் கடந்து போகும்
நீங்கள் பேயென்று அலறலாம்...
அஃதுங்களின் பாவ நிழலாகவும் இருக்கும்...
அந்தச் சமாதிகள்
நிம்மதியாக அங்கேயே உறங்கட்டும்..
அலறி எழுப்பிவிடாதீர்கள்
உங்களிடம் விடுதலைப் பெற்றதாக எண்ணி
உறங்கிக் கொண்டிருக்கின்றன...
- நட்புடன்....முகமது பாட்சா*
29/01/2020
கூப்பியக் கையில்
குரோதத்தின் சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது
புன்னகை
எப்போதும் இனிமையாக
இருக்க வேண்டிய அவசியமில்லை...
விழிகளின் இலக்கு கூப்பி நிற்க
சங்கி, குனிந்து காலைத்தொடும் போது
மூன்று தோட்டாக்கள்
தேசத்தின் மீது பாய்ந்திருந்தது!
காந்தியும் ஏமாந்து போயிருந்தார்....
தேசத்தினழுக்கு
இங்கேயே தேங்கிக் கிடப்பதை அறியாமல்...
இந்தியா முழுவதும்
இன்றும் கூட இரத்தத்தின் கவிச்சி!
- முகமது பாட்சா*
30/01/2020
நடுநிசிக் கவிதை - 2
நடுச்சாமம்
'அகலிகையின் பாதங்கள்
வானத்தில் சிதறிக்கிடக்கின்றன' என்று
அருந்ததி
உருண்டுப் புரண்டு அரட்டுகிறாள்...
சமாதிக்குள்ளிருந்து வெளியான புழுக்கத்தை
காகங்கள்
கொத்தித் தின்று பசியாறுகின்றன...
நரம்பொன்றை இழுத்து இசைமீட்டும்
வல்லூரின் அலகில்
யோனியின் முத்த தழும்புகள்...
சமாதிக்குள்ளிருந்து எழும் வலியின் இசை
இரவை
கள்ளத்தனமாய் மூடி வைக்கிறது..
'அர்த்த சாமம்
பூசைக்கு உகந்ததல்ல!' என்று
ஆலயங்களின் கதவுகள் அடைபட்டிருக்க
காசையிறைத்தவன்
கடவுளாக நடந்து செல்கிறான்...
சமாதிக்குள்
புழுக்கம் தாழிட்டுத் தரையிறங்கிக் கொள்ள
அறிவிப்புப் பலகையொன்று
சிகப்பு விளக்கின்
வெளிச்சத்தில் அநாதியாகக் கிடக்கிறது
'இது தடை செய்யப்பட்ட பகுதி'
- நட்புடன்.....முகமது பாட்சா*
31/01/2020
No comments:
Post a Comment