இரவு எரிந்து கொண்டிருக்கிறது
இயலாமை
கதவுகளை மூடிக் கொண்டு கதறியழ
பெட்ரோல் குண்டுகள்
வீதிகளில் வழுவி வெடிக்கின்றன...
நச்சுப்புகைகள்
மந்திரம் ஓதுகின்றன 'ஜெய் ஶ்ரீராம்!'
மன நோயாளிகள்
ஒருமித்து ஓடி வருகிறார்கள்...
உதிரப்புஷ்பங்களில்
கடவுள் மயங்கி விழுந்து கிடக்கிறார்...
மன்னிக்காத வரலாறு
ஒருங்கூட்டிக் காறியுமிழ்கிறது...
துடைத்துக் கொண்ட முதலாளிகளின் வீட்டில்
நட்சத்திர விளக்குகளோடு
இரவு விருந்து அமோகமாக நடக்கிறது...
வியாபாரிக்குப் பிரிவு உபசாரம்!
- முகமது பாட்சா*
26/02/2020
தேசமென்பது என்னவாக இருக்கும்?
துப்பாக்கிகளும்
கற்களும் நிறைந்ததாகவா?
கடவுள்கள்
சண்டையிட்டுக் கொள்ளும் களங்களாகவா?
நிழல்களைப் பிரித்து
நிஜங்களைக் கொல்லும் தந்திரங்களாகவா?
உதிரத்தில் சேலைக்கட்டியாடும்
பூமியாகவா?
உடைப்பெடுத்த நதியில்
தாகத்திற்கலையும் நாய்களாகவா?
தேசமென்பது என்னவாகத்தான் இருக்கும்?
எரிகின்ற தீயில்தான் இங்கு
வெளிச்சம் வந்ததென்று சொல்கிறார்களே!
- முகமது பாட்சா*
25/02/2020
ஆத்திகனுக்கும்
நாத்திகனுக்கும் இடையில்
கடவுள் மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறார்.
கைக்குலுக்கல்களில்
மிளிரும் தாரகைகளின் இடையில்
மெல்லியக்கீற்றாய்
மூன்றாம் பிறைப் புன்னகை.
தென்றல் காற்றிற்குத்
தழுவ மட்டுமே தெரிந்திருக்கிறது...
அதற்கும் கடவுள் யாரென்று
சொல்லிக் கொடுத்துவிட்டு வாருங்கள்...
கடவுளின் புன்னகை
மெல்லிய மலர்களில் இருக்குமென்றால்
நாத்திகனுக்கும் கொடுக்கலாம்.
நைவேத்தியங்கள்
பசியையாற்றிவிடும் என்றால்
பாழ் குடிசைகளுக்குள்ளும்
கடவுள்கள் நுழைந்துவர யார் தடை விதிப்பது?
ஆலயங்களை உயர எழுப்பிவிட்டு
குடிசைகளை அதனருகில் வைத்தால்
கடவுளுமதை விரும்பமாட்டார்.
குடிசைகளை எரித்துவிட்டுக்
கோபுரங்களை எழுப்பினால்
குடியிருப்பது நிச்சயம்
கடவுளாகவே இருக்க முடியாது.
போதி மரத்தை விற்றுவிட்டு
புத்தரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
கடவுள்களைக்
கடவுள்களாக இருக்க விட்டாலே போதும்
நாத்திகன் தோள்களிலும்
கடவுள் தைரியமாக கைபோட்டு நடப்பார்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
24/02/2020
அக்கினித் தகிக்கின்ற தணலுக்குள்
அகன்றெழும்
பெரும் பிம்பமாய் விரிகிறது சூழல்....
இடைவிடாதுச் சுற்றும் மிதிவண்டியில்
பாதங்களைத் தாங்கினாலும்
மிதித்தாங்கிக்கிகளுக்குச் சுற்றுவதுதான்
சுகமான வாழ்க்கை...
இருப்பதைப் பிடிக்கும் போது
பறப்பதின் மீது
கண்கள் அமர்ந்து கொள்கின்றன...
வலிகளுக்கு நிவாரணியாய்
பிரார்த்தனைகள் கையேந்தினாலும் கூடவே
ஆசைக்கும்
அத்திவாரம் இடுகிறது சுயமோகம்...
பக்தியென்ற சொல்லுக்குள் போதை நிரப்பிக்
காட்டுகின்ற சூடத்தில் எரிவது
யோக்கியம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்...
பிரார்த்தனைக் கூடங்களில்
உண்மைகள் இறந்தே கிடக்கின்றன!
- நட்புடன்......முகமது பாட்சா*
23/02/2020
கோழியிறகையே
பார்த்துக் கொண்டிருந்தார் சூஃபி
அது கோழியொன்றை வரைகிறது...
கோழிகளின் கொக்கரிப்பு
திசையெங்கும் நிறைகின்றன
கோழிகளைப் பிடிக்கப்
பூனைகளின் கண்கள் நெருங்கிவர
சம்பந்தமில்லாமல்
எலிகள் ஏனோ ஓடித் திரிகின்றன...
அதானின் அழைப்போசையை
அலைவரிசையொன்று அழைத்துவர
சூஃபி அனைத்தையும் வாரி ஒற்றை
இறகாக்கி விட்டு
ஒலுவெடுக்கச் செல்கிறார்
இறகு இப்போது புறாவை வரைய,
புறாக்கள்
பள்ளி வாயிலின் மாடங்களில் அடைகின்றன.
தொழுகைத் தொடங்குகிறது.
#முகமது பாட்சா
அதான் - பள்ளிவாசல் அழைப்பு,
ஒலு - சுத்தம் செய்துக் கொள்ளல்
----
நடுநிசிக் கவிதை - 17
எனக்குள் நான் நீந்துகிறேன்.
என்னைச் சுற்றிலும் நீர்க் குமிழிகள்
வட்டமடிக்கின்றன.
சிறகிழந்தப் பறவைக்கு
வானம் மிக உயரத்தில் இருக்கிறது!
இரவைப் பற்றி
ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்,
அது பகலைக் கண்மூடிப் பார்க்கிறது.
சுவனத்தின் வாசலையே
தட்டிக் கொண்டிருக்கிறான்,
கடவுளை நெசவுச் செய்கிறவன் .
கடவுளின் கண்கள்,
நரகத்தின் வாசலில் அமர்ந்து
அழுதுகொண்டிருக்கிறது.
பாடலில்லாத வரிகளுக்குத்தான்,
இங்கு இசையமைக்கப் பட்டிருக்கிறது.
பல்லவியைத் தேடி அலைகிறேன்..
பாதைகள் வெறுமையாக இருக்கின்றன.
அப்போதுதான் ஒரு தேசாந்திரியின்
சரணம் என்னைக் கடந்து போகிறது...
'கண்களை மூடி இறந்தவன்,
இரவோடு
இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறான்'.
- நட்புடன்.....முகமது பாட்சா*
19/02/2020
சீட்டைக் கலைத்து ஆடும் போதுதான்
பகடையை உருட்டுகிறார்கள்
பகடைகளில் காயை நகர்த்தும்போது
பாம்பின் வாய் பிளந்திருக்கிறது!
ஏணிகள் ஏன் இல்லை? என்று கேட்க
யாருக்கும் தைரியம் வரவில்லை...
புலிகளுக்கிடையில் ஆடுகள்
வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கின்றன
பகடையை உருட்டினால்
ஸ்டைக்கரில் அடிபடாமல் சிகப்புக் காய்
ஒதுங்கி நிற்கிறது...
ராஜாவிற்குச் சப்பைக்கட்டுகளாய்
பிஷப்புகளோடு மந்திரி நிற்க
இப்போது நாங்கள்
எந்த விளையாட்டைத்தான் விளையாடுவது?
- நட்புடன்.....முகமது பாட்சா*
18/02/2020
சொற்களுக்குள் சொற்களைப் புதைத்து
நிர்வாணத்திற்கு
ஒப்பனைக் கூட்டுகிறார்கள்
நிர்வாணம்
தன்னைத் தவமென்று தம்பட்டம் செய்கிறது...
ஆடைகளில்லாமல் இந்த உலகம்
எப்படி இருந்திருக்கும்?
பொட்டல் வெளியின் பெரும் தவத்தில்
பொதுமை உயிர்கள் வாழ்ந்திடுமா?
அலசல்களின் பக்கங்களில்
கேள்விகள்தானே அனாரியனின் ஆடைகள்!
நிர்வாணம்
பொய்மையாளர்களின் புறமுதுகு...
விளக்கிற்கும் கூட ஆடை
இருட்டாகவே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!
தவமென்பது
கண்களை மூடிய நிர்வாணமல்ல...
கேள்விகளை அலையவிட்டுப்
போர்த்திக் கொள்கின்ற மிகப்பெரிய அற்புதம்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
17/02/2020
அவன் அவனில்லை ( நுண் புனை கதைகள்)
அவன் தன் கைகளைத் தட்டி அனைவரையும் அழைத்தான். அவனைச் சுற்றிலும் இப்போது கூட்டம் கூடியிருந்தது. அவன் பேசும் மொழி யாருக்கும் விளங்கவில்லை. அவன் குஜராத்தி அல்லது பிகாரியாக இருக்கலாம். சற்றே இந்தியின் சாயல். அவனது கண்கள் சாம்பல் நிறமாக இருந்தன. ஒருவன் அவனைச் செல் போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஆக்ரோசமாகப் பேசத் தொடங்கினான். ஒரு பாட்டிலிலிருந்து ஒருவிதத் தைலத்தை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டான். இவன் தைலம் விற்பவனாக இருக்கும் என்று ஒருவன் கருத்தாகப் பேசினான். அவன் பீடியொன்றை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, அதைப் பற்றவைத்தான். இப்போது அவனைச் சுற்றிலும் நெருப்புச் சூழ்ந்திருந்தது.. அதிர்ச்சியானவர்கள் விலகி ஓடினார்கள்.. ஒருவன் தனது மகளின் கண்களைக் கைகளால் பொத்தி ஓரமாக அழைத்துச் சென்றான். ஒருவன் அவன் மீது மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் காணவில்லை. இப்போதும் செல் போனில் ஒருவன் படம் பிடித்துக் கொண்டிருக்க.. அந்தச் செய்தி அந்த இடத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது சில நூறு லைக்குகளோடு.
- முகமது பாட்சா*
16/02/2020
நடு நிசிக் கவிதை - 16
இரவைப் பிடித்து, இரவை வலித்து
இரவைச் சலித்துக் கொண்டிருக்கிறார்கள்...
இரவு ஆடையில்லாமல் அழுது கொண்டிருக்கிறது!
வன்மத்தின் கைத்தடிகள்
இரவைப் புரட்டியெடுக்கின்றன...
இரவு மரணத்தின் வதையை எழுதுகிறது...
இரவு வெளிச்சம் பார்க்காத காட்டுக் குருவி
இரவுக்கு உதிரத்தின் வாடை!
இரவை இரவாக விட்டு வையுங்கள் என்று
இரவாளன் கதறியழுகிறான்...
பெரும் கதைகளின் கூடாரத்தைக் கலைத்துவிட்டு
இரவுக்குள் நுழையுங்கள்...
பகல் தின்ற மிச்சமான உங்களை
இரவுதான் மீண்டும் செதுக்கிக் கொண்டிருக்கும்...
இரவை இராக்கதனாக்கி விடாதீர்கள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
15/02/2020
ஒயின் பாட்டிலைத் திறந்த பிறகுதான்
அந்தக் கவிதை
கோப்பையைத் தேடுகிறது!
புளிக்க வைத்த திராட்சை ரசத்தில்
மாமிசத்தின் துண்டுகள் முக்கியெடுக்கப் படுகின்றன
ஒயின் பேசுகிறது
பாட்டுகளைப் பதம் கோர்த்து வாசிக்க
தளும்பும் வார்த்தைகளை அணிக் கோர்க்கிறது
அசைக் கெட்டு அலம்புகிறது
தொடைத் திறந்து இசையும் செய்யுள்ளில்
சீர்கெட்டு விழும் வரிகள்
தேவதூதனாய் புத்தனாய் பொதிந்துரைக்க
தூக்கிச் சுமக்கும் போதை
கைத்தட்டல்களில் சுயம் கூட்டி வாசிக்கிறது!
ஆக, இதுதான்
இன்றைக்கு மிகச் சிறந்த கவிதை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
15/02/2020
உடைக்க உடைக்க
சுவர்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன!
அணைச் சுவர்களுக்குள்
எப்போதும் ஒரு பொருமல் இருந்து கொண்டேயிருக்கும்!
சாதிச்சுவர்களை உடைத்தாலும்
மீண்டும் உயர்த்திக் கட்டி விடுகிறார்கள்!
எல்லைச்சுவர்கள்
பலி வாங்காமல் உறங்கியதே கிடையாது!
எதிலிகளுக்கான சுவர்கள்
எந்தத் தேசத்தில் திறந்திருக்கும்?
இதயத்தில் சுவரெழுப்பியப் பின்புதான்
கலவை பூசப்பட்ட சுவர்கள் உயர எழும்புகின்றன...
இருக்கின்ற சுவர்களையே
உடைப்பதற்கு
வழி தெரியாமல் திணறும் போது
ஏழ்மைக்கான சுவர்
அதிவேகமாகத்தான் இங்கு எழும்புகிறது!
உலகத்தின் கண்களுக்கு
அழுக்கை அணைப் போட்டு மறைக்கிறார்களாம்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
14/02/2020
அமிழ்தம் பொதிந்த
செவ்வலர் நாக்கு அவளுக்கு!
அணியில் கோர்த்த
அழகிய பற்களல்லவா அவளது!
அவள் அளந்து போடும் பேச்சில்
நிறைந்து வழிபவர்கள்
இன்னமும் வரிசையில் நிற்க
இவளை அடைந்ததனால்;என்னை
ஊரே போற்றும்
சொல்லொன்று இங்கு உண்டு...
நானும் வெட்கி சிவந்து
வியப்பினில் விழுந்துகிடக்க
'இந்த நல்லோன்தான்
இவளையடைந்த கணவன்' என்று!
- முகமது பாட்சா*
14/02.2020
---------------------------------------------------------
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில்
மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
- தொல்கபிலர்
---
அவர்கள்
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்
தருவிக்கப்பட்ட பானத்தில்
உதடுகளை அடிக்கடி நனைத்துக் கொண்டார்கள்
முலாம் பூசப்பட்ட வார்த்தைகளைப்
பரிமாறிக் கொண்டார்கள்...
அவனொரு கவிதையைக் கொடுத்தான்
அவளும் தன் கைத்துண்டைக் கொடுத்தாள்
உதடுகள் வலிக்காமல் சிரித்தார்கள்
சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள்
அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க
அத்தனை பேருக்கும் ஜோக்கர் முகம்!
- முகமது பாட்சா*
13/02/2020
நடுநிசிக் கவிதை -15
இரவுகள்
விசித்திரம் பூசியே விழிக்கின்றன
காமத்தின் நாக்குகள் வளர்ந்துவிடுகிறது
துரோகத்தின் ஒப்பனையில்
பகலைச் சுருட்டி வைத்துவிடுகிறார்கள்...
ஷாரியரின் இரவு
வாளோடு திரிந்தால் ஷாரஸாத்தின் இரவுகள்
கதைகளை நகர்த்துகிறது...
சித்தார்த்தனின் இரவு
சிக்கலான மொழிகளைச் சுமந்து செல்கிறது...
ராகுலனின் இரவு
உப்புப்பாலாய் உவர்ந்துச் சுவைக்க
யசோதரையின் இரவு
கண்ணீரால்தானே கழுவப் பட்டிருக்கும்?
இரவுகளின் கைகள்
ஆயிரம் நாக்குகளை நீட்டி ருசிக்கின்றன...
சுவை தேனென்கிறீர்கள்
உவர்ப்பும் கசப்பும் கூடியது மட்டுமில்லை...
தந்திரமும் தடவிக்கொண்டது!
- நட்புடன்.....முகமது பாட்சா*
12/02/2020
நடுநிசிக் கவிதை - 14
சமன்பாட்டின் வெளியே அமர்ந்திருக்கிறேன்
சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது...
காற்றைக் கொன்றுவிட்டேன்
சூழல் கெட்டுவிட்டதாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
சற்றுமுன்தான்
குளத்தில் சிறுநீர் கழித்தேன்...
மீன்களெல்லாம் செத்து மிதக்கின்றன!
முகத்தை நகங்களால் கீறி வைத்திருக்கிறேன்
யாரும் அடையாளம்
கண்டுகொள்ளக் கூடாதென்பதற்காக...
குப்பைத்தொட்டிகளை ஈன்றவள்
சீமாட்டியாக இருக்கிறாள்...
குப்பைத் தொட்டிகள் ஈன்றவன் என்னைப்போல்
ஓடிக் கொண்டிருக்கிறான்...
மேய்ப்பனின் வயல் திருடு போன பிறகு
சாலைகளில் அடிபட்டுக் கிடக்கும் நாய்களின் மீது
ஏன் கருணை?
இருட்டிற்கு இரண்டு உருவங்கள் இருக்கின்றன...
அதிலொன்று நிம்மதியில்லாமல்
அலைந்து கொண்டேயிருக்கும் சைக்கோ
- நட்புடன்.....முகமது பாட்சா*
12/02/2020
நடுநிசிக் கவிதை - 13
மைனர் ஸ்கேலில் வயலின் அழும்போது
இரவு கிழிந்து தொங்குகிறது...
சர்பத்தின் சருகசைவுகள்; உறங்கும்
தாய்க் கோழியை எழுப்பிவிட
தலை நிமிரும் சிலிர்ப்பில் இரவுப்பாடலை
தவளைகள் இசைக்கின்றன...
மரணம் இரவிற்கான
இரையென்று எழுதிய பாடலில் ஸ்வரம்
சுத்தமாக இருக்க....
உதிரம் தோய்ந்த கத்தியுடன் நடக்கும் சுயம்
நிழலில்லாமல் அலைகிறது...
வெட்டியான் பாடலுக்கு இசைக்கூட்டும்
விறகின் எரியிசை
காலத்தின் படிமமாய் உயர....
'நீதான் ஜீவன்' என்று நெருங்கித் துளிர்த்த
முத்தத்தைச் சுவைப்பவள்...
பால்வெளி பிரபஞ்சத்திற்குள் பறக்கிறாள்...
ஆழி அடங்காமல் இசைத்துக் கொண்டிருப்பது
அலர் வனத்தின் காமம்!
- நட்புடன்....முகமது பாட்சா*
11/02/2020
பாய்பெஸ்ட்டி
அவனொரு சிறந்த பாய்பெஸ்டியாக இருந்தான்
அவன் காதுகளை
அவள்தான் எப்போதும் வைத்திருந்தால்...
இவன் தும்மும்போது
அவள் கர்ச்சிப்போடு சிந்திக் கொண்டிருந்தாள்...
லவ்வர்ஸை
கிண்டல் செய்து கடலைப் போட்டார்கள்,
அக்கறையாக
துன்பங்களைத் துடைத்துக் கொண்டார்கள்
எங்களுக்குள் எதுவும் இல்லையென்றக் கோட்டில்
எதுவும் என்பது
அவர்களுக்கே கேள்விக் குறியாக இருந்தது...
அந்த எதுவும் எதுவாக இருக்கும்
என்று தேடிக் கொண்டிருந்த வேளைகளில்,
பெஸ்டி மெல்லத் தேய்ந்திருக்க...
அவளும் தன்னை
கேர்ள்பெஸ்டி என்றே சொல்லிக் கொண்டாள்...
பெஸ்டிகள் பெஸ்டிகளாகவே
இருக்கவேண்டிய அவசியமில்லை....
அவள் அவனுக்கானவனை
அடையாளம் காட்டிய நாளில்தான்...
அவன் அவனுக்காகவே அழுது கொண்டிருந்தான்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
10/02/2020
நடுநிசிக் கவிதை - 12
இரவு இருமிக் கொண்டேயிருக்கிறது...
இரவின் வாசனை
தனிமை என்பது எத்துணைப் பேருக்குத் தெரியும்?
கனவின் மொழி பெயர்ப்பைக்
கடந்துவிட்ட பிறகு
காட்டுத்தீயில் குளிர் காய்கிறது மரணம்...
ஒற்றையடிப் பாதையில் செல்லும்
மனசிற்குள் பூத்திருக்கிறது கள்ளிச்செடிகள்....
படுக்கையில் கிடக்கும் இருட்டை
வெளிச்சம் என்று சுமப்பது
மயான வீதியின் மகரந்தச் சேர்க்கை...
சன்னலைத் திறந்து வையுங்கள்
யாக்கையினழுக்குப் பறந்து போகட்டும்....
துர் நாற்றம்
வார்த்தைகளால் சூழ்ந்து கொள்ள....
இரவை அடக்கம் செய்யும் போது அத்தர் தெளிப்பது
ஒப்பனைதானே!
- நட்புடன்.....முகமது பாட்சா*
10/02/2020
நடுநிசிக் கவிதை - 11
இரவைக் கிழித்துச் செல்லும் வெளிச்சம்
வெடிக்கிறது
பூட்ஸ் கால்களின் ஓசைகள் நெருங்கிவர,
துப்பாக்கிகள்
ரவைகளால் இரத்தச் சிதறல்களை
ஓவியம் தீட்டுகின்றன...
ஆமினாவின் கைகளில்
அசைவற்று உறங்குகிறாள் சைபுனிசா...
கத்தியழவேண்டாம் என்று
சுபைர் சொன்னது நினைவிற்குவர
அருகில் கிடப்பவனை
அழுகையால் அசைத்துப் பார்க்கிறாள்
வெறித்துப் பார்க்கிறது கண்கள்
கத்தியழாதே செல்லமே!
'யாருக்காக
இந்த இரவு சாத்தானாய் மாறிப்போனது?'
யா அல்லாஹ்!
சப்தமிட்டு அழைத்தவளினருகில்
நின்றபூட்ஸ் கால்களை வாரிவிட்டு ஏறியமர்ந்தவள்
கழுத்தைக் குடித்து நிமிர்ந்தபோது...
வானம் சிவந்த நிறத்தில்
அவளின் காலடியில் விழுந்து கிடந்தது.
- நட்புடன்.....முகமது பாட்சா*
08/02/2020
அவன் வீட்டு வாசலில்தான்
அவன் உழுது கொண்டிருக்கிறான்
படுத்துக் கொண்டிருக்கிறான்
அவனைப் பைத்தியம் என்று சிரிக்கிறீர்கள்;
நாளை
உங்கள் வீட்டு முற்றத்திலும்
ஓர் ஆலையின் சங்கு முழங்கலாம்!
- முகமது பாட்சா*
08/02/2020
நடு நிசிக் கவிதை - 10
பகலை இரவில் நகர்த்தி வைக்கிறேன்
குதிரைத் தன் கால்களை அகலப்பாய்ச்சி என்னை வீழ்த்துகிறது..
கட்டம் கட்டிய படைகள்
நகரவிடாமல் தடுக்கின்றன
ஆட்டமிழந்தவன்
சீட்டுகளில் சேராத ஜோக்கராக வெளியேறுகிறேன்
சப்தமிடாமல் அழுது கொண்டிருக்கும் சாலை விளக்குகள்
இரவின் படிமங்களில் நொந்து கிடக்கின்றன..
சல்லடை விழுந்த தார்ப்பாயின் கூரைக்குள்
நட்சத்திரங்களைப் பூசிக்கொண்டு
நகர்வலம் போகின்ற ஜோடிகள் தேவர்கள் கூட்டம்...
காவலுக்கு அமர்ந்திருக்கும் கூரன்
என் மீதமர்ந்திருக்கும்
இருட்டைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்...
மயான வீதியில்
பூ வைத்துக் கொண்டு ஒருத்தி காத்திருக்கிறாள்
சுவரொட்டி ஒட்டுபவன் அருந்தும்
தேநீர் சுவையில் இடுகாட்டின் வாசனை ...
என்னைக் கடந்து போகிறவன்
நேற்று கூட என்னைப் பார்த்ததாகச் சொல்லி விட்டு
நகர்கிறான்...
நான் சுவரொட்டிகளில் நிறைந்திருக்கிறேன்.
கருப்பு எழுத்துகளில் அஞ்சலி!
- நட்புடன்.....முகமது பாட்சா*
08/02/2020
நடுநிசிக் கவிதை - 9
பல நூறு வார்த்தைகளைக் குலுக்கிப் போட்டு
சில ஊறும் வார்த்தைகளை
பியானாவிற்குள் போடுகிறார் இசை இயக்குநர்...
பகல் இரவில்
பாதங்களையூன்றி நர்த்தமிடும் விரல்கள்,
இசையாக வழியும் போது நனையும் பாடகன்
வயலினுக்குள் நுழைந்து,
கித்தார் பேஸ்களில் அதிர்கிறான்...
இடையில் நுழையும் மூங்கில் வனம்
பௌர்ணமியைப் பிடித்துவந்து,
கப்பலில் ஏற்றிக் காதுகளைக் கடத்தும் வேளை,
அதிரும் ட்ரம்ஸில்
பறவைகள் கூடி மேகங்களைக் கொத்தித் தின்ன ;
விடாதுப் பெய்யும் மழையில்
இரவும் பகலாகிவிடுகிறது
இசையமைக்கும் திரைக்கூட வழித்தடத்தில்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
07/02/2020
நடுநிசிக் கவிதை - 8
இரவில்
கோப்பைகள் தடுமாறிக் கொள்கின்றன
மதுக்கிண்ணங்களில்
இரவை நிறைத்து உறிஞ்சுகிறார்கள்...
கலைத்து அடுக்கும் சீட்டுகளில்
இரவு ஜோக்கராக
இடம் மாறி இடம் மாறி அமர்கிறது...
இரவின் மீது கைபோட்டவன்
இடையின் கீழ்
எதையோ தொலைத்துவிட்டுத் தேடுகிறான்...
இரவையிசைப்பவள்
இருட்டை வெளிச்சமாக்க முயல்கிறாள்...
இரவைக் குலுக்கிப்போட்டு
தொடைகளை மாற்றிக் கொள்கிறார்கள்...
இரவு
வெளிச்சத்தை அணைத்துவிடுகிறது....
விடிந்ததும்; பகல்
பத்தினி தெய்வங்களுடன் உலாவரும்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
06/02/2020
நடுநிசிக் கவிதை - 7
ஒளியைத் தின்னும் மிளிர்த்தகடுகள்
பகலை நகலாக்கிப் பொழிகிறது...
கிரேன் தாழப் பறந்து
வலமிருந்து இடமாக நகர,
இடமிருந்து வலமாக ஓடி வரும் நாயகன்
இழுத்து அணைத்த ஒத்தடத்தில் பிழையென்று
அடுத்த ஷாட்!
'கொஞ்சம் வந்து எட்டிப் பார்த்துவிட்டு போப்பா...
அப்பா சீரியஸா இருக்கார்'
அழைப்பை அணைத்தவன் 'ஷாட் ரெடி !
டேக்.. சீன்..' சொல்லி
கிளாப் பலகையை அடித்தபோது
நகர்ந்த காமிரா
மீண்டும் மீண்டும் நெருங்கிச் செல்ல,
ஒத்தடங்கள் பிழையாகிக் கொண்டேயிருந்தன
மினுங்கி எரிந்த செல்போனில் வந்த
கடைசித் தகவல்
'அப்பா போயிட்டார்! இப்பவாவது வருவியா?'
ஒளியைத் தின்னும் மிளிர்த்தகடுகள்
பகலை நகலாக்கிப் பொழிகின்றன..
அவன் கும்மிருட்டாக நடந்து செல்கிறான்...
இயக்குநரின் மணிக்கட்டில் இரவு 1.00
- நட்புடன்.....முகமது பாட்சா*
06/02/2020
நடுநிசிக் கவிதை - 6
இரவின் இரண்டாம் சாமத்தையுடுத்தி
பூனையாக நடந்து போகிறாள்...
வெளிச்சம் காறியுமிழ்ந்து ஆடைகள் கனக்கின்றன
உதிரும் உடம்பின் ஒப்பனையழுக்கு
வலிந்த புன்னகையில் கதறுகிறது
நானும் ஒரு பெண் தானென்று...
பெற்ற மொழியைத் தொலைத்துவிட்டு
புது மொழிக்குள்
பிணைந்து கொள்கிறது தேகம்...
ஆனாலும், அட்டக்கருப்பு இந்த இரவு...
வீதியெங்கும்
விந்தொழுகிச் சிதறும் காம எச்சங்கள்...
பொதுக்கழிப்பிட மனசில்
ஆபாசச் சித்திரமாய்
அழுகி ஒழுகிக் கொண்டிருக்கும் அங்கங்கள்...
இரவை
இதழ்களால் கவ்வி முத்தமிடுகிறாள்...
இரவின் மார்பினில் சரிந்து
மூன்றாம் சாமத்திற்குள் முகவரித் தேடுகிறாள்...
காமம் குழைகிறாள்... பிணைகிறாள்
அங்கதம் கூட்டி அழுகிறாள்...
கண் சொக்கும் பின்னிரவு காதலித்துப் புணர்கிறது
அவன் என்ற அவளை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
05/02/2020
நடுநிசிக் கவிதை - 5
இரவைப் புரட்டிப் போட்டுப் படுக்கிறாள்
அப்போதும்
அது கருப்பாகவே இருக்கிறது...
ஆடைகளைக்
கழற்றி வீசியவளின் காமம்
பஞ்சணையில் பொதிந்து அழுது கொண்டிருக்க
எரிகின்ற இதயத்தை
நீருக்குள் அமுக்கித் தாகம் தணிக்கிறாள்...
விரகம் பிசறும் முலைகளைக் கிள்ளி
இடரின் மீதெறிந்து நெளிகிறாள்...
இல்லாதவனுக்காய் அழுது
புலம்பும் விழிகளைச் சபித்துப் பிதற்றுகிறாள்...
கருணையில்லாதவன்
கிடையாய் கிடக்கும் இருள் குழிக்குள்
புழுக்கள் நெளிந்து வழிந்து கொண்டிருக்க....
இரவைத் தின்கிறது காமம்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
04/02/2020
மூன்றாவது நாளாகத்
துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்கிறது...
நாளையும் கூடத் தொடர்ந்து கேட்கலாம்...
அச்சத்தை
அடுக்கிவைத்துச் சரிக்கும்போது
பெருமச்சம் பேரலையாக எழும்புகிறது...
துப்பாக்கி
ஓர் ஊடகத்தின் கருவி மட்டுமே...
பேசும் மொழியை
ஈயக்குண்டுகள் எளிதில் மொழி பெயர்க்கின்றன...
ஆனால் அவற்றிற்குத் தெரியாது
சுடுகிறவர்கள் கோட்சேக்களாக இருந்தாலும்
எதிரில் இருப்பவர்கள்
சரிந்துவிழும் காந்திகளாக இருக்கவேண்டிய
அவசியம் இல்லையென்று...
மூன்றாவது நாளாகத்
துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்கிறது...
நாளையும் கூடத் தொடர்ந்து கேட்கலாம்...
- முகமது பாட்சா*
03/03/2020
நடுநிசிக் கவிதை - 4
இரண்டு இறுக்கங்கள்
முகங்களைத் திருப்பிப் படுத்திருக்கின்றன...
இடைவெளியின் அமானுஷ்யத்தில்
பிடில் வாசித்துக் கொண்டிருப்பவன் தனது
ஆடைகளைக் களைந்தெறிகிறான்...
அவனது இலக்க எண் 666
அறையின் சன்னல்கள்
முட்டிமோதி முட்டிமோதித் திரும்புகின்றன...
கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட
பல்லியினருகில்
இரையொன்று சகஜமாக நகர்ந்து செல்கிறது....
ஆடும் திரைச்சீலை
ஓர் அரூபத்தைக் கடத்தியசைக்க...
அலறியெழுந்த இரவில்
நடுச்சாமக் கோடாங்கி குடுப்பையடித்துச்
செல்லும் திசையில்
பைரவம் சூழ்ந்து குறைக்கும் போது...
சாத்தானைக் கொன்று; இறுக்கங்கள் தளர்ந்து
தேகத்தில் கட்டில் ஏறும் நேரம்...
சரியாக இரவு மணி 2 .00
- நட்புடன்.....முகமது பாட்சா*
02/02/2020
நடுநிசிக் கவிதை - 3
கோப்பைகளையுயர்த்தி
சியர்ஸ் சொல்லிக் கொள்கிறார்கள்...
'க்ளிங்ங்...' - அதிகாரர்களின் இரகசியக் குறியீடு...
இடுக்கியிலிருந்து விழுந்த
ஐஸ் கட்டிகளின் செழுமை ஊடுருவ...
நாய்கள் கோப்பைகளைச் சிப் செய்கின்றன...
ஒருவன் பன்றியாக மாறி
அரை வேக்காட்டு முட்டையை விழுங்க....
' நிச்சயம் செய்கிறோம்' என்ற அமைச்சனின் வாயில்
வாந்தி எடுத்தவன்
இட்ஸ் ஓகே என்றான்...
பெல்லி இடுப்பில் விழுந்த அதிகாரன்
மேலடுக்கில் ஏறிச்செல்ல
ஆடைகளை நழுவவிட்ட நர்த்தகி ஒயினாக
அவனது குடலுக்குள் இறங்கி
நாக்கைத் துழாவிய போது
செல்போன் அழைப்பைக் கிரகித்த தீப்பந்தொன்று
சேரிக்குள் நுழைந்து
இடுப்பை உச்சமாக ஆட்டி ஆடிக் கொண்டிருக்க
குடிசைகள் வெந்து கொண்டிருந்த நேரம்
சரியாக நடுநிசி!
- நட்புடன்....முகமது பாட்சா*
01/02/2020
இயலாமை
கதவுகளை மூடிக் கொண்டு கதறியழ
பெட்ரோல் குண்டுகள்
வீதிகளில் வழுவி வெடிக்கின்றன...
நச்சுப்புகைகள்
மந்திரம் ஓதுகின்றன 'ஜெய் ஶ்ரீராம்!'
மன நோயாளிகள்
ஒருமித்து ஓடி வருகிறார்கள்...
உதிரப்புஷ்பங்களில்
கடவுள் மயங்கி விழுந்து கிடக்கிறார்...
மன்னிக்காத வரலாறு
ஒருங்கூட்டிக் காறியுமிழ்கிறது...
துடைத்துக் கொண்ட முதலாளிகளின் வீட்டில்
நட்சத்திர விளக்குகளோடு
இரவு விருந்து அமோகமாக நடக்கிறது...
வியாபாரிக்குப் பிரிவு உபசாரம்!
- முகமது பாட்சா*
26/02/2020
தேசமென்பது என்னவாக இருக்கும்?
துப்பாக்கிகளும்
கற்களும் நிறைந்ததாகவா?
கடவுள்கள்
சண்டையிட்டுக் கொள்ளும் களங்களாகவா?
நிழல்களைப் பிரித்து
நிஜங்களைக் கொல்லும் தந்திரங்களாகவா?
உதிரத்தில் சேலைக்கட்டியாடும்
பூமியாகவா?
உடைப்பெடுத்த நதியில்
தாகத்திற்கலையும் நாய்களாகவா?
தேசமென்பது என்னவாகத்தான் இருக்கும்?
எரிகின்ற தீயில்தான் இங்கு
வெளிச்சம் வந்ததென்று சொல்கிறார்களே!
- முகமது பாட்சா*
25/02/2020
ஆத்திகனுக்கும்
நாத்திகனுக்கும் இடையில்
கடவுள் மட்டுமே உருண்டு கொண்டிருக்கிறார்.
கைக்குலுக்கல்களில்
மிளிரும் தாரகைகளின் இடையில்
மெல்லியக்கீற்றாய்
மூன்றாம் பிறைப் புன்னகை.
தென்றல் காற்றிற்குத்
தழுவ மட்டுமே தெரிந்திருக்கிறது...
அதற்கும் கடவுள் யாரென்று
சொல்லிக் கொடுத்துவிட்டு வாருங்கள்...
கடவுளின் புன்னகை
மெல்லிய மலர்களில் இருக்குமென்றால்
நாத்திகனுக்கும் கொடுக்கலாம்.
நைவேத்தியங்கள்
பசியையாற்றிவிடும் என்றால்
பாழ் குடிசைகளுக்குள்ளும்
கடவுள்கள் நுழைந்துவர யார் தடை விதிப்பது?
ஆலயங்களை உயர எழுப்பிவிட்டு
குடிசைகளை அதனருகில் வைத்தால்
கடவுளுமதை விரும்பமாட்டார்.
குடிசைகளை எரித்துவிட்டுக்
கோபுரங்களை எழுப்பினால்
குடியிருப்பது நிச்சயம்
கடவுளாகவே இருக்க முடியாது.
போதி மரத்தை விற்றுவிட்டு
புத்தரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
கடவுள்களைக்
கடவுள்களாக இருக்க விட்டாலே போதும்
நாத்திகன் தோள்களிலும்
கடவுள் தைரியமாக கைபோட்டு நடப்பார்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
24/02/2020
அக்கினித் தகிக்கின்ற தணலுக்குள்
அகன்றெழும்
பெரும் பிம்பமாய் விரிகிறது சூழல்....
இடைவிடாதுச் சுற்றும் மிதிவண்டியில்
பாதங்களைத் தாங்கினாலும்
மிதித்தாங்கிக்கிகளுக்குச் சுற்றுவதுதான்
சுகமான வாழ்க்கை...
இருப்பதைப் பிடிக்கும் போது
பறப்பதின் மீது
கண்கள் அமர்ந்து கொள்கின்றன...
வலிகளுக்கு நிவாரணியாய்
பிரார்த்தனைகள் கையேந்தினாலும் கூடவே
ஆசைக்கும்
அத்திவாரம் இடுகிறது சுயமோகம்...
பக்தியென்ற சொல்லுக்குள் போதை நிரப்பிக்
காட்டுகின்ற சூடத்தில் எரிவது
யோக்கியம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்...
பிரார்த்தனைக் கூடங்களில்
உண்மைகள் இறந்தே கிடக்கின்றன!
- நட்புடன்......முகமது பாட்சா*
23/02/2020
கோழியிறகையே
பார்த்துக் கொண்டிருந்தார் சூஃபி
அது கோழியொன்றை வரைகிறது...
கோழிகளின் கொக்கரிப்பு
திசையெங்கும் நிறைகின்றன
கோழிகளைப் பிடிக்கப்
பூனைகளின் கண்கள் நெருங்கிவர
சம்பந்தமில்லாமல்
எலிகள் ஏனோ ஓடித் திரிகின்றன...
அதானின் அழைப்போசையை
அலைவரிசையொன்று அழைத்துவர
சூஃபி அனைத்தையும் வாரி ஒற்றை
இறகாக்கி விட்டு
ஒலுவெடுக்கச் செல்கிறார்
இறகு இப்போது புறாவை வரைய,
புறாக்கள்
பள்ளி வாயிலின் மாடங்களில் அடைகின்றன.
தொழுகைத் தொடங்குகிறது.
#முகமது பாட்சா
அதான் - பள்ளிவாசல் அழைப்பு,
ஒலு - சுத்தம் செய்துக் கொள்ளல்
----
நடுநிசிக் கவிதை - 17
எனக்குள் நான் நீந்துகிறேன்.
என்னைச் சுற்றிலும் நீர்க் குமிழிகள்
வட்டமடிக்கின்றன.
சிறகிழந்தப் பறவைக்கு
வானம் மிக உயரத்தில் இருக்கிறது!
இரவைப் பற்றி
ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்,
அது பகலைக் கண்மூடிப் பார்க்கிறது.
சுவனத்தின் வாசலையே
தட்டிக் கொண்டிருக்கிறான்,
கடவுளை நெசவுச் செய்கிறவன் .
கடவுளின் கண்கள்,
நரகத்தின் வாசலில் அமர்ந்து
அழுதுகொண்டிருக்கிறது.
பாடலில்லாத வரிகளுக்குத்தான்,
இங்கு இசையமைக்கப் பட்டிருக்கிறது.
பல்லவியைத் தேடி அலைகிறேன்..
பாதைகள் வெறுமையாக இருக்கின்றன.
அப்போதுதான் ஒரு தேசாந்திரியின்
சரணம் என்னைக் கடந்து போகிறது...
'கண்களை மூடி இறந்தவன்,
இரவோடு
இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறான்'.
- நட்புடன்.....முகமது பாட்சா*
19/02/2020
சீட்டைக் கலைத்து ஆடும் போதுதான்
பகடையை உருட்டுகிறார்கள்
பகடைகளில் காயை நகர்த்தும்போது
பாம்பின் வாய் பிளந்திருக்கிறது!
ஏணிகள் ஏன் இல்லை? என்று கேட்க
யாருக்கும் தைரியம் வரவில்லை...
புலிகளுக்கிடையில் ஆடுகள்
வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கின்றன
பகடையை உருட்டினால்
ஸ்டைக்கரில் அடிபடாமல் சிகப்புக் காய்
ஒதுங்கி நிற்கிறது...
ராஜாவிற்குச் சப்பைக்கட்டுகளாய்
பிஷப்புகளோடு மந்திரி நிற்க
இப்போது நாங்கள்
எந்த விளையாட்டைத்தான் விளையாடுவது?
- நட்புடன்.....முகமது பாட்சா*
18/02/2020
சொற்களுக்குள் சொற்களைப் புதைத்து
நிர்வாணத்திற்கு
ஒப்பனைக் கூட்டுகிறார்கள்
நிர்வாணம்
தன்னைத் தவமென்று தம்பட்டம் செய்கிறது...
ஆடைகளில்லாமல் இந்த உலகம்
எப்படி இருந்திருக்கும்?
பொட்டல் வெளியின் பெரும் தவத்தில்
பொதுமை உயிர்கள் வாழ்ந்திடுமா?
அலசல்களின் பக்கங்களில்
கேள்விகள்தானே அனாரியனின் ஆடைகள்!
நிர்வாணம்
பொய்மையாளர்களின் புறமுதுகு...
விளக்கிற்கும் கூட ஆடை
இருட்டாகவே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!
தவமென்பது
கண்களை மூடிய நிர்வாணமல்ல...
கேள்விகளை அலையவிட்டுப்
போர்த்திக் கொள்கின்ற மிகப்பெரிய அற்புதம்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
17/02/2020
அவன் அவனில்லை ( நுண் புனை கதைகள்)
அவன் தன் கைகளைத் தட்டி அனைவரையும் அழைத்தான். அவனைச் சுற்றிலும் இப்போது கூட்டம் கூடியிருந்தது. அவன் பேசும் மொழி யாருக்கும் விளங்கவில்லை. அவன் குஜராத்தி அல்லது பிகாரியாக இருக்கலாம். சற்றே இந்தியின் சாயல். அவனது கண்கள் சாம்பல் நிறமாக இருந்தன. ஒருவன் அவனைச் செல் போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தான். இப்போது அவன் ஆக்ரோசமாகப் பேசத் தொடங்கினான். ஒரு பாட்டிலிலிருந்து ஒருவிதத் தைலத்தை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டான். இவன் தைலம் விற்பவனாக இருக்கும் என்று ஒருவன் கருத்தாகப் பேசினான். அவன் பீடியொன்றை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, அதைப் பற்றவைத்தான். இப்போது அவனைச் சுற்றிலும் நெருப்புச் சூழ்ந்திருந்தது.. அதிர்ச்சியானவர்கள் விலகி ஓடினார்கள்.. ஒருவன் தனது மகளின் கண்களைக் கைகளால் பொத்தி ஓரமாக அழைத்துச் சென்றான். ஒருவன் அவன் மீது மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் காணவில்லை. இப்போதும் செல் போனில் ஒருவன் படம் பிடித்துக் கொண்டிருக்க.. அந்தச் செய்தி அந்த இடத்தைவிட்டு மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது சில நூறு லைக்குகளோடு.
- முகமது பாட்சா*
16/02/2020
நடு நிசிக் கவிதை - 16
இரவைப் பிடித்து, இரவை வலித்து
இரவைச் சலித்துக் கொண்டிருக்கிறார்கள்...
இரவு ஆடையில்லாமல் அழுது கொண்டிருக்கிறது!
வன்மத்தின் கைத்தடிகள்
இரவைப் புரட்டியெடுக்கின்றன...
இரவு மரணத்தின் வதையை எழுதுகிறது...
இரவு வெளிச்சம் பார்க்காத காட்டுக் குருவி
இரவுக்கு உதிரத்தின் வாடை!
இரவை இரவாக விட்டு வையுங்கள் என்று
இரவாளன் கதறியழுகிறான்...
பெரும் கதைகளின் கூடாரத்தைக் கலைத்துவிட்டு
இரவுக்குள் நுழையுங்கள்...
பகல் தின்ற மிச்சமான உங்களை
இரவுதான் மீண்டும் செதுக்கிக் கொண்டிருக்கும்...
இரவை இராக்கதனாக்கி விடாதீர்கள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
15/02/2020
ஒயின் பாட்டிலைத் திறந்த பிறகுதான்
அந்தக் கவிதை
கோப்பையைத் தேடுகிறது!
புளிக்க வைத்த திராட்சை ரசத்தில்
மாமிசத்தின் துண்டுகள் முக்கியெடுக்கப் படுகின்றன
ஒயின் பேசுகிறது
பாட்டுகளைப் பதம் கோர்த்து வாசிக்க
தளும்பும் வார்த்தைகளை அணிக் கோர்க்கிறது
அசைக் கெட்டு அலம்புகிறது
தொடைத் திறந்து இசையும் செய்யுள்ளில்
சீர்கெட்டு விழும் வரிகள்
தேவதூதனாய் புத்தனாய் பொதிந்துரைக்க
தூக்கிச் சுமக்கும் போதை
கைத்தட்டல்களில் சுயம் கூட்டி வாசிக்கிறது!
ஆக, இதுதான்
இன்றைக்கு மிகச் சிறந்த கவிதை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
15/02/2020
உடைக்க உடைக்க
சுவர்கள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன!
அணைச் சுவர்களுக்குள்
எப்போதும் ஒரு பொருமல் இருந்து கொண்டேயிருக்கும்!
சாதிச்சுவர்களை உடைத்தாலும்
மீண்டும் உயர்த்திக் கட்டி விடுகிறார்கள்!
எல்லைச்சுவர்கள்
பலி வாங்காமல் உறங்கியதே கிடையாது!
எதிலிகளுக்கான சுவர்கள்
எந்தத் தேசத்தில் திறந்திருக்கும்?
இதயத்தில் சுவரெழுப்பியப் பின்புதான்
கலவை பூசப்பட்ட சுவர்கள் உயர எழும்புகின்றன...
இருக்கின்ற சுவர்களையே
உடைப்பதற்கு
வழி தெரியாமல் திணறும் போது
ஏழ்மைக்கான சுவர்
அதிவேகமாகத்தான் இங்கு எழும்புகிறது!
உலகத்தின் கண்களுக்கு
அழுக்கை அணைப் போட்டு மறைக்கிறார்களாம்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
14/02/2020
அமிழ்தம் பொதிந்த
செவ்வலர் நாக்கு அவளுக்கு!
அணியில் கோர்த்த
அழகிய பற்களல்லவா அவளது!
அவள் அளந்து போடும் பேச்சில்
நிறைந்து வழிபவர்கள்
இன்னமும் வரிசையில் நிற்க
இவளை அடைந்ததனால்;என்னை
ஊரே போற்றும்
சொல்லொன்று இங்கு உண்டு...
நானும் வெட்கி சிவந்து
வியப்பினில் விழுந்துகிடக்க
'இந்த நல்லோன்தான்
இவளையடைந்த கணவன்' என்று!
- முகமது பாட்சா*
14/02.2020
---------------------------------------------------------
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில்
மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
"நல்லோள் கணவன் இவன்" எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
- தொல்கபிலர்
---
அவர்கள்
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்
தருவிக்கப்பட்ட பானத்தில்
உதடுகளை அடிக்கடி நனைத்துக் கொண்டார்கள்
முலாம் பூசப்பட்ட வார்த்தைகளைப்
பரிமாறிக் கொண்டார்கள்...
அவனொரு கவிதையைக் கொடுத்தான்
அவளும் தன் கைத்துண்டைக் கொடுத்தாள்
உதடுகள் வலிக்காமல் சிரித்தார்கள்
சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள்
அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க
அத்தனை பேருக்கும் ஜோக்கர் முகம்!
- முகமது பாட்சா*
13/02/2020
நடுநிசிக் கவிதை -15
இரவுகள்
விசித்திரம் பூசியே விழிக்கின்றன
காமத்தின் நாக்குகள் வளர்ந்துவிடுகிறது
துரோகத்தின் ஒப்பனையில்
பகலைச் சுருட்டி வைத்துவிடுகிறார்கள்...
ஷாரியரின் இரவு
வாளோடு திரிந்தால் ஷாரஸாத்தின் இரவுகள்
கதைகளை நகர்த்துகிறது...
சித்தார்த்தனின் இரவு
சிக்கலான மொழிகளைச் சுமந்து செல்கிறது...
ராகுலனின் இரவு
உப்புப்பாலாய் உவர்ந்துச் சுவைக்க
யசோதரையின் இரவு
கண்ணீரால்தானே கழுவப் பட்டிருக்கும்?
இரவுகளின் கைகள்
ஆயிரம் நாக்குகளை நீட்டி ருசிக்கின்றன...
சுவை தேனென்கிறீர்கள்
உவர்ப்பும் கசப்பும் கூடியது மட்டுமில்லை...
தந்திரமும் தடவிக்கொண்டது!
- நட்புடன்.....முகமது பாட்சா*
12/02/2020
நடுநிசிக் கவிதை - 14
சமன்பாட்டின் வெளியே அமர்ந்திருக்கிறேன்
சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது...
காற்றைக் கொன்றுவிட்டேன்
சூழல் கெட்டுவிட்டதாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
சற்றுமுன்தான்
குளத்தில் சிறுநீர் கழித்தேன்...
மீன்களெல்லாம் செத்து மிதக்கின்றன!
முகத்தை நகங்களால் கீறி வைத்திருக்கிறேன்
யாரும் அடையாளம்
கண்டுகொள்ளக் கூடாதென்பதற்காக...
குப்பைத்தொட்டிகளை ஈன்றவள்
சீமாட்டியாக இருக்கிறாள்...
குப்பைத் தொட்டிகள் ஈன்றவன் என்னைப்போல்
ஓடிக் கொண்டிருக்கிறான்...
மேய்ப்பனின் வயல் திருடு போன பிறகு
சாலைகளில் அடிபட்டுக் கிடக்கும் நாய்களின் மீது
ஏன் கருணை?
இருட்டிற்கு இரண்டு உருவங்கள் இருக்கின்றன...
அதிலொன்று நிம்மதியில்லாமல்
அலைந்து கொண்டேயிருக்கும் சைக்கோ
- நட்புடன்.....முகமது பாட்சா*
12/02/2020
நடுநிசிக் கவிதை - 13
மைனர் ஸ்கேலில் வயலின் அழும்போது
இரவு கிழிந்து தொங்குகிறது...
சர்பத்தின் சருகசைவுகள்; உறங்கும்
தாய்க் கோழியை எழுப்பிவிட
தலை நிமிரும் சிலிர்ப்பில் இரவுப்பாடலை
தவளைகள் இசைக்கின்றன...
மரணம் இரவிற்கான
இரையென்று எழுதிய பாடலில் ஸ்வரம்
சுத்தமாக இருக்க....
உதிரம் தோய்ந்த கத்தியுடன் நடக்கும் சுயம்
நிழலில்லாமல் அலைகிறது...
வெட்டியான் பாடலுக்கு இசைக்கூட்டும்
விறகின் எரியிசை
காலத்தின் படிமமாய் உயர....
'நீதான் ஜீவன்' என்று நெருங்கித் துளிர்த்த
முத்தத்தைச் சுவைப்பவள்...
பால்வெளி பிரபஞ்சத்திற்குள் பறக்கிறாள்...
ஆழி அடங்காமல் இசைத்துக் கொண்டிருப்பது
அலர் வனத்தின் காமம்!
- நட்புடன்....முகமது பாட்சா*
11/02/2020
பாய்பெஸ்ட்டி
அவனொரு சிறந்த பாய்பெஸ்டியாக இருந்தான்
அவன் காதுகளை
அவள்தான் எப்போதும் வைத்திருந்தால்...
இவன் தும்மும்போது
அவள் கர்ச்சிப்போடு சிந்திக் கொண்டிருந்தாள்...
லவ்வர்ஸை
கிண்டல் செய்து கடலைப் போட்டார்கள்,
அக்கறையாக
துன்பங்களைத் துடைத்துக் கொண்டார்கள்
எங்களுக்குள் எதுவும் இல்லையென்றக் கோட்டில்
எதுவும் என்பது
அவர்களுக்கே கேள்விக் குறியாக இருந்தது...
அந்த எதுவும் எதுவாக இருக்கும்
என்று தேடிக் கொண்டிருந்த வேளைகளில்,
பெஸ்டி மெல்லத் தேய்ந்திருக்க...
அவளும் தன்னை
கேர்ள்பெஸ்டி என்றே சொல்லிக் கொண்டாள்...
பெஸ்டிகள் பெஸ்டிகளாகவே
இருக்கவேண்டிய அவசியமில்லை....
அவள் அவனுக்கானவனை
அடையாளம் காட்டிய நாளில்தான்...
அவன் அவனுக்காகவே அழுது கொண்டிருந்தான்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
10/02/2020
நடுநிசிக் கவிதை - 12
இரவு இருமிக் கொண்டேயிருக்கிறது...
இரவின் வாசனை
தனிமை என்பது எத்துணைப் பேருக்குத் தெரியும்?
கனவின் மொழி பெயர்ப்பைக்
கடந்துவிட்ட பிறகு
காட்டுத்தீயில் குளிர் காய்கிறது மரணம்...
ஒற்றையடிப் பாதையில் செல்லும்
மனசிற்குள் பூத்திருக்கிறது கள்ளிச்செடிகள்....
படுக்கையில் கிடக்கும் இருட்டை
வெளிச்சம் என்று சுமப்பது
மயான வீதியின் மகரந்தச் சேர்க்கை...
சன்னலைத் திறந்து வையுங்கள்
யாக்கையினழுக்குப் பறந்து போகட்டும்....
துர் நாற்றம்
வார்த்தைகளால் சூழ்ந்து கொள்ள....
இரவை அடக்கம் செய்யும் போது அத்தர் தெளிப்பது
ஒப்பனைதானே!
- நட்புடன்.....முகமது பாட்சா*
10/02/2020
நடுநிசிக் கவிதை - 11
இரவைக் கிழித்துச் செல்லும் வெளிச்சம்
வெடிக்கிறது
பூட்ஸ் கால்களின் ஓசைகள் நெருங்கிவர,
துப்பாக்கிகள்
ரவைகளால் இரத்தச் சிதறல்களை
ஓவியம் தீட்டுகின்றன...
ஆமினாவின் கைகளில்
அசைவற்று உறங்குகிறாள் சைபுனிசா...
கத்தியழவேண்டாம் என்று
சுபைர் சொன்னது நினைவிற்குவர
அருகில் கிடப்பவனை
அழுகையால் அசைத்துப் பார்க்கிறாள்
வெறித்துப் பார்க்கிறது கண்கள்
கத்தியழாதே செல்லமே!
'யாருக்காக
இந்த இரவு சாத்தானாய் மாறிப்போனது?'
யா அல்லாஹ்!
சப்தமிட்டு அழைத்தவளினருகில்
நின்றபூட்ஸ் கால்களை வாரிவிட்டு ஏறியமர்ந்தவள்
கழுத்தைக் குடித்து நிமிர்ந்தபோது...
வானம் சிவந்த நிறத்தில்
அவளின் காலடியில் விழுந்து கிடந்தது.
- நட்புடன்.....முகமது பாட்சா*
08/02/2020
அவன் வீட்டு வாசலில்தான்
அவன் உழுது கொண்டிருக்கிறான்
படுத்துக் கொண்டிருக்கிறான்
அவனைப் பைத்தியம் என்று சிரிக்கிறீர்கள்;
நாளை
உங்கள் வீட்டு முற்றத்திலும்
ஓர் ஆலையின் சங்கு முழங்கலாம்!
- முகமது பாட்சா*
08/02/2020
நடு நிசிக் கவிதை - 10
பகலை இரவில் நகர்த்தி வைக்கிறேன்
குதிரைத் தன் கால்களை அகலப்பாய்ச்சி என்னை வீழ்த்துகிறது..
கட்டம் கட்டிய படைகள்
நகரவிடாமல் தடுக்கின்றன
ஆட்டமிழந்தவன்
சீட்டுகளில் சேராத ஜோக்கராக வெளியேறுகிறேன்
சப்தமிடாமல் அழுது கொண்டிருக்கும் சாலை விளக்குகள்
இரவின் படிமங்களில் நொந்து கிடக்கின்றன..
சல்லடை விழுந்த தார்ப்பாயின் கூரைக்குள்
நட்சத்திரங்களைப் பூசிக்கொண்டு
நகர்வலம் போகின்ற ஜோடிகள் தேவர்கள் கூட்டம்...
காவலுக்கு அமர்ந்திருக்கும் கூரன்
என் மீதமர்ந்திருக்கும்
இருட்டைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்...
மயான வீதியில்
பூ வைத்துக் கொண்டு ஒருத்தி காத்திருக்கிறாள்
சுவரொட்டி ஒட்டுபவன் அருந்தும்
தேநீர் சுவையில் இடுகாட்டின் வாசனை ...
என்னைக் கடந்து போகிறவன்
நேற்று கூட என்னைப் பார்த்ததாகச் சொல்லி விட்டு
நகர்கிறான்...
நான் சுவரொட்டிகளில் நிறைந்திருக்கிறேன்.
கருப்பு எழுத்துகளில் அஞ்சலி!
- நட்புடன்.....முகமது பாட்சா*
08/02/2020
நடுநிசிக் கவிதை - 9
பல நூறு வார்த்தைகளைக் குலுக்கிப் போட்டு
சில ஊறும் வார்த்தைகளை
பியானாவிற்குள் போடுகிறார் இசை இயக்குநர்...
பகல் இரவில்
பாதங்களையூன்றி நர்த்தமிடும் விரல்கள்,
இசையாக வழியும் போது நனையும் பாடகன்
வயலினுக்குள் நுழைந்து,
கித்தார் பேஸ்களில் அதிர்கிறான்...
இடையில் நுழையும் மூங்கில் வனம்
பௌர்ணமியைப் பிடித்துவந்து,
கப்பலில் ஏற்றிக் காதுகளைக் கடத்தும் வேளை,
அதிரும் ட்ரம்ஸில்
பறவைகள் கூடி மேகங்களைக் கொத்தித் தின்ன ;
விடாதுப் பெய்யும் மழையில்
இரவும் பகலாகிவிடுகிறது
இசையமைக்கும் திரைக்கூட வழித்தடத்தில்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
07/02/2020
நடுநிசிக் கவிதை - 8
இரவில்
கோப்பைகள் தடுமாறிக் கொள்கின்றன
மதுக்கிண்ணங்களில்
இரவை நிறைத்து உறிஞ்சுகிறார்கள்...
கலைத்து அடுக்கும் சீட்டுகளில்
இரவு ஜோக்கராக
இடம் மாறி இடம் மாறி அமர்கிறது...
இரவின் மீது கைபோட்டவன்
இடையின் கீழ்
எதையோ தொலைத்துவிட்டுத் தேடுகிறான்...
இரவையிசைப்பவள்
இருட்டை வெளிச்சமாக்க முயல்கிறாள்...
இரவைக் குலுக்கிப்போட்டு
தொடைகளை மாற்றிக் கொள்கிறார்கள்...
இரவு
வெளிச்சத்தை அணைத்துவிடுகிறது....
விடிந்ததும்; பகல்
பத்தினி தெய்வங்களுடன் உலாவரும்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
06/02/2020
நடுநிசிக் கவிதை - 7
ஒளியைத் தின்னும் மிளிர்த்தகடுகள்
பகலை நகலாக்கிப் பொழிகிறது...
கிரேன் தாழப் பறந்து
வலமிருந்து இடமாக நகர,
இடமிருந்து வலமாக ஓடி வரும் நாயகன்
இழுத்து அணைத்த ஒத்தடத்தில் பிழையென்று
அடுத்த ஷாட்!
'கொஞ்சம் வந்து எட்டிப் பார்த்துவிட்டு போப்பா...
அப்பா சீரியஸா இருக்கார்'
அழைப்பை அணைத்தவன் 'ஷாட் ரெடி !
டேக்.. சீன்..' சொல்லி
கிளாப் பலகையை அடித்தபோது
நகர்ந்த காமிரா
மீண்டும் மீண்டும் நெருங்கிச் செல்ல,
ஒத்தடங்கள் பிழையாகிக் கொண்டேயிருந்தன
மினுங்கி எரிந்த செல்போனில் வந்த
கடைசித் தகவல்
'அப்பா போயிட்டார்! இப்பவாவது வருவியா?'
ஒளியைத் தின்னும் மிளிர்த்தகடுகள்
பகலை நகலாக்கிப் பொழிகின்றன..
அவன் கும்மிருட்டாக நடந்து செல்கிறான்...
இயக்குநரின் மணிக்கட்டில் இரவு 1.00
- நட்புடன்.....முகமது பாட்சா*
06/02/2020
நடுநிசிக் கவிதை - 6
இரவின் இரண்டாம் சாமத்தையுடுத்தி
பூனையாக நடந்து போகிறாள்...
வெளிச்சம் காறியுமிழ்ந்து ஆடைகள் கனக்கின்றன
உதிரும் உடம்பின் ஒப்பனையழுக்கு
வலிந்த புன்னகையில் கதறுகிறது
நானும் ஒரு பெண் தானென்று...
பெற்ற மொழியைத் தொலைத்துவிட்டு
புது மொழிக்குள்
பிணைந்து கொள்கிறது தேகம்...
ஆனாலும், அட்டக்கருப்பு இந்த இரவு...
வீதியெங்கும்
விந்தொழுகிச் சிதறும் காம எச்சங்கள்...
பொதுக்கழிப்பிட மனசில்
ஆபாசச் சித்திரமாய்
அழுகி ஒழுகிக் கொண்டிருக்கும் அங்கங்கள்...
இரவை
இதழ்களால் கவ்வி முத்தமிடுகிறாள்...
இரவின் மார்பினில் சரிந்து
மூன்றாம் சாமத்திற்குள் முகவரித் தேடுகிறாள்...
காமம் குழைகிறாள்... பிணைகிறாள்
அங்கதம் கூட்டி அழுகிறாள்...
கண் சொக்கும் பின்னிரவு காதலித்துப் புணர்கிறது
அவன் என்ற அவளை!
- நட்புடன்.....முகமது பாட்சா*
05/02/2020
நடுநிசிக் கவிதை - 5
இரவைப் புரட்டிப் போட்டுப் படுக்கிறாள்
அப்போதும்
அது கருப்பாகவே இருக்கிறது...
ஆடைகளைக்
கழற்றி வீசியவளின் காமம்
பஞ்சணையில் பொதிந்து அழுது கொண்டிருக்க
எரிகின்ற இதயத்தை
நீருக்குள் அமுக்கித் தாகம் தணிக்கிறாள்...
விரகம் பிசறும் முலைகளைக் கிள்ளி
இடரின் மீதெறிந்து நெளிகிறாள்...
இல்லாதவனுக்காய் அழுது
புலம்பும் விழிகளைச் சபித்துப் பிதற்றுகிறாள்...
கருணையில்லாதவன்
கிடையாய் கிடக்கும் இருள் குழிக்குள்
புழுக்கள் நெளிந்து வழிந்து கொண்டிருக்க....
இரவைத் தின்கிறது காமம்.
- நட்புடன்.....முகமது பாட்சா*
04/02/2020
மூன்றாவது நாளாகத்
துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்கிறது...
நாளையும் கூடத் தொடர்ந்து கேட்கலாம்...
அச்சத்தை
அடுக்கிவைத்துச் சரிக்கும்போது
பெருமச்சம் பேரலையாக எழும்புகிறது...
துப்பாக்கி
ஓர் ஊடகத்தின் கருவி மட்டுமே...
பேசும் மொழியை
ஈயக்குண்டுகள் எளிதில் மொழி பெயர்க்கின்றன...
ஆனால் அவற்றிற்குத் தெரியாது
சுடுகிறவர்கள் கோட்சேக்களாக இருந்தாலும்
எதிரில் இருப்பவர்கள்
சரிந்துவிழும் காந்திகளாக இருக்கவேண்டிய
அவசியம் இல்லையென்று...
மூன்றாவது நாளாகத்
துப்பாக்கிச் சுடும் சப்தம் கேட்கிறது...
நாளையும் கூடத் தொடர்ந்து கேட்கலாம்...
- முகமது பாட்சா*
03/03/2020
நடுநிசிக் கவிதை - 4
இரண்டு இறுக்கங்கள்
முகங்களைத் திருப்பிப் படுத்திருக்கின்றன...
இடைவெளியின் அமானுஷ்யத்தில்
பிடில் வாசித்துக் கொண்டிருப்பவன் தனது
ஆடைகளைக் களைந்தெறிகிறான்...
அவனது இலக்க எண் 666
அறையின் சன்னல்கள்
முட்டிமோதி முட்டிமோதித் திரும்புகின்றன...
கதவிடுக்கில் மாட்டிக் கொண்ட
பல்லியினருகில்
இரையொன்று சகஜமாக நகர்ந்து செல்கிறது....
ஆடும் திரைச்சீலை
ஓர் அரூபத்தைக் கடத்தியசைக்க...
அலறியெழுந்த இரவில்
நடுச்சாமக் கோடாங்கி குடுப்பையடித்துச்
செல்லும் திசையில்
பைரவம் சூழ்ந்து குறைக்கும் போது...
சாத்தானைக் கொன்று; இறுக்கங்கள் தளர்ந்து
தேகத்தில் கட்டில் ஏறும் நேரம்...
சரியாக இரவு மணி 2 .00
- நட்புடன்.....முகமது பாட்சா*
02/02/2020
நடுநிசிக் கவிதை - 3
கோப்பைகளையுயர்த்தி
சியர்ஸ் சொல்லிக் கொள்கிறார்கள்...
'க்ளிங்ங்...' - அதிகாரர்களின் இரகசியக் குறியீடு...
இடுக்கியிலிருந்து விழுந்த
ஐஸ் கட்டிகளின் செழுமை ஊடுருவ...
நாய்கள் கோப்பைகளைச் சிப் செய்கின்றன...
ஒருவன் பன்றியாக மாறி
அரை வேக்காட்டு முட்டையை விழுங்க....
' நிச்சயம் செய்கிறோம்' என்ற அமைச்சனின் வாயில்
வாந்தி எடுத்தவன்
இட்ஸ் ஓகே என்றான்...
பெல்லி இடுப்பில் விழுந்த அதிகாரன்
மேலடுக்கில் ஏறிச்செல்ல
ஆடைகளை நழுவவிட்ட நர்த்தகி ஒயினாக
அவனது குடலுக்குள் இறங்கி
நாக்கைத் துழாவிய போது
செல்போன் அழைப்பைக் கிரகித்த தீப்பந்தொன்று
சேரிக்குள் நுழைந்து
இடுப்பை உச்சமாக ஆட்டி ஆடிக் கொண்டிருக்க
குடிசைகள் வெந்து கொண்டிருந்த நேரம்
சரியாக நடுநிசி!
- நட்புடன்....முகமது பாட்சா*
01/02/2020
No comments:
Post a Comment