Monday, 6 July 2020

கவிதை என்றால் என்ன?


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
கவிதை என்றால் என்ன?

இரவின் மறுபக்கத்தை இருட்டில்
கடத்திக் கொண்டிருந்தவளின் இதழ்க்கடையில்
ஒரு சோகம்!

கவிதை எப்படியிருக்கும்?

இரசமிழந்தக் கண்ணாடியில் பொட்டை
ஒட்டிவைத்தவள்
கனகாம்பரத்தைக் கசக்கிவிட்டு
ஆடைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்!

இலக்கணம் இருக்கிறதா?

சபிக்கப்பட்ட வீதியில்
சத்தமுடன் நகரும் வாகனங்களுக்கிடையில்
நசுங்கிக்கொண்டிருந்தது
அவளின் பசி!

நல்ல கவிதை எப்படியிருக்கும்?

கோழையைக்
காவாயில் துப்பிவிட்டு
மருந்தைக் கைகளில் பிடித்துக் கொண்டு
மயக்கத்தை வாங்கினாள்!

கவனிக்காத கவிதையின் மொழி?

அரித்துக் கொண்டிருந்த
முத்தங்களைப் பொறுக்கி எச்சிலில்
ஊறவிட்டவளின்
உடலில் மிச்சமிருந்த காற்றுப் பிரிந்தபோது....
வானம் இருட்டாகியது!

- முகமது பாட்சா*
03/07/2020

No comments:

Post a Comment

Popular Posts