கொரானா நூறு
1
அச்சுப் பிழைகளால் எழுதப்பட்ட நூலை
மறு வாசிப்பிற்கு வைக்கிறேன்!
நச்சுக் கிருமிகள் சூழ்ந்ததாய்த் தொடங்குகிறது
அதன் கவிதை!
மிச்சமிருக்கும் விரல்களைத் தொலைத்தவர்கள்
எழுந்து நிற்க ஆண்டவனிடம்
ஆறாவது கால்களை வேண்டி நிற்கிறார்கள்!
இரண்டாவது மணித்துளியில்
வூகான் சந்தைக்குள் நுழையும் வரிகள்
ஆதாரமில்லாத வார்த்தைகளை வாங்கிக் கொண்டு
வெளியேறுகிறது!
உலகமே மூச்சு வாங்குவதாக
ஊடகங்கள் செய்திகளை வாசிக்கத் தொடங்க...
இங்கே தடுப்புச் சுவர்களைப் பற்றி
சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
இப்போதெல்லாம்
இரவில்தான் அரண்மனை விழித்துக் கொள்கிறது!
கட்டியங்காரன்
ஊர் கூத்தில் ஊரடங்கை அறிவிக்க
கிருமிகள்
கை கால்கள் முளைத்து அசுரமாய் நடக்கின்றன!
வெற்றுத்தாள்களாய் தொடரும்
இருபது பக்கங்களும்
மக்களின் நல உதவிகள் என்று அரசனின்
கையேடு சொல்கிறது!
இடம் மாறுதல் என்ற இரண்டாம் அத்தியாயம்
இந்தியாவின் விலாவெலும்பில்
தாயக்கட்டைகளைத் தயார் செய்கின்றன...
சகுனி தாயம் உருட்ட
கௌரவர்கள் 'மாமன் நல்லவன்' என்றே நம்புகிறார்கள்!
குருஷேத்திரன்
ஒவ்வொருவராய் விழுங்க..
மிச்சமிருக்கும் நிலத்தை விற்பனைக்கு வைக்கும்
கவிதை
இதிலிருக்கும் பிழைகள் எல்லாம்
வளர்ச்சிக்கென்றே
அணிந்துரையில் அகலமாய் எழுதப்பட்டிருக்கிறது!
2
இரண்டாம் பாகம்
ஏகலைவனின் வில் அம்போடு தொடங்கலாம்!
- முகமது பாட்சா*
08/07/2020

No comments:
Post a Comment