Monday, 14 October 2019

விடுபட்ட கவிதைகள் 5

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

பார்வையை
தவிர்த்துத்தான் சென்றாள்...
அவளின் பின்னால்
அந்தப் பூனை
மெதுவாகத் தொடர்ந்து கொண்டிருந்தது...
அவள்
வீட்டிற்குள் நுழைந்தவுடன்
எதிர் வீட்டிலிருந்த எலியொன்று
எட்டிப் பார்த்து முத்த சப்தம் எழுப்பியது...
பால் வாங்கிய இடத்தில்
'எருமை மாடொன்று உரசிவிட்டு நகர
வாங்கிய காய்கறிகளில்
புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன...
பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொருவராக
அவளைத் தின்று கொண்டிருக்க...
எலும்புக்கூடாக
வண்டியில் ஏறிக் கொண்டவள்...
நடத்துநரின் நகரும்மா உரசலில்
நரகத்திற்குப் போய்விட்டு வந்து...
தன்னையே அறுத்துப் போட்டுச்
சமைத்து உணவு பரிமாறியபோது...
உப்பு அதிகம் என்று கை கழுவினான் கணவன்

- மு.முகமது பாட்சா*
05/10/2019
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
அருவத்தின்
முடிச்சொன்றைத் தேடிப் பயணிக்கிறேன்..
நிழல்கள் தரையில் விரிந்து கிடக்கின்றன...
விளக்கிலிருந்த இருட்டு
ஜோதியின் வழி பயணிக்கிறது...
நான் என்பவன் இங்குத் தனித்தவனல்ல...
நாளை என்பதும் இன்றின் மிச்சம்தான்...
உடையும் கண்ணாடிக்கு
ஒன்பது ஓட்டைகள் வைத்து
ஆசைகளை ரசம் பூசிப் பார்க்கிறோம்...
உப்புத் தண்ணீரில் மீன்கள் வாழ்ந்தாலும்
உப்பு ஏறாதது ஏனென்று தெரியவில்லை...
அறிவு என்பதே
அறியாததைத் தேடிக் கொண்டேயிருப்பதுதான்...
உருவமென்பது ஒரு நாள் அரூபமாகிறது....
அருவமென்பது அருகில்தான் இருக்கிறது
ஆனாலும் உருவங்களைத் தேடிப் பயணிக்கிறோம்...
இங்கு நானென்பதும்
உறவுகளின் வார்த்தைகளில் கலந்த
அரூபமாக இருக்கலாம்...
உடைந்த பிறகு
பிம்பத்தின் நினைவுகள்தான்
அடுக்குகளில் அலைந்து கொண்டிருக்கும்.
ரசம் கலைந்த பிறகு
நாம் உருவத்தை எங்கே போய்த் தேடுவது?

- மு.முகமது பாட்சா*
09/10/2019

கிளையை விட்டுதிர்ந்த ஆப்பிள் பழத்தை
தரையானது
கை நீட்டி வாங்கிக் கொள்கிறது...
நீயுட்டன்
மோசசிற்குக் காணிக்கையாக்குகிறான்...
ஜியார்டானோ புரூனோவின்
வாய் கிழிக்கப்பட்டு எரிக்கப்படுகிறான்
அண்டவெளிக் கோட்பாடுகள்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன...
ஸ்டீபன் ஹாக்கிங்
வானக் கருந்துளையில்
ஓம் பிரளய மந்திரம் கேட்டதிர்கிறார்...
ரபேல் விமானம் நகர மறுக்க
அமைச்சர் ஆயுத பூஜை செய்கிறார்
எலுமிச்சையின்
அதிர்வு மந்திரம் எளிதாக இயக்க
கருப்புக் கயிற்றுடன் இந்தியா உயர்கிறது
வானத்தில் டிஜிட்டல் நுட்பத்துடன்.

- மு.முகமது பாட்சா*
09/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
கிழிந்த ஆடையுடன் இருந்தான்
அவன் மீது
மூன்று நாள் பசி நாற்றம் வீசியது..
ஒரு ரொட்டித்துண்டை வாங்கிக் கொடுத்தேன்
வாயில் திணித்துக் கொண்டவன்
கணக்கில் வைப்பதாக எழுதிக் கொண்டான்...
யாரென்று கேட்டேன்
யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் ...
இந்தத் தேசத்தின் பிரதமர் என்றான்...
சிரித்துவிட்டேன்
அப்படியென்றால் மோடி யாரென்று கேட்டேன்..
சிந்தனைக்குள் நுழைந்தவன்
ரகசியங்கள் ஆபத்தானது என்று எச்சரித்தான்...
அங்கு வந்த காவலர்கள்
அவனை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்..
சீனப்பிரதமரின் வருகையையொட்டி.

- மு.முகமது பாட்சா*
10/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
வீதியெங்கும் இறைந்திருக்கும்
சப்தங்களின் நடுவே
சில வார்த்தைகள்
சிக்கிக் கொண்டு கதறுகின்றன..
இரவைத் திருப்பிப் போட்டது போல் சிரித்தவள்
தன் மார்புக்கூட்டில்
சுமையேங்கி இயங்குகிறாள்..
ஆதியின் சொரூபமென்றும்
அன்னையென்றும் அர்ச்சனைகள் தூவியிறைக்க
அதிரும் சப்தக் கூட்டிலாடும் ஓங்காரம்
அலைக்கழிகிறது..
பசித்தேடும் விலங்குகளின் அறை வாசல்களில்
ஆடையிழந்த மானம்
உயிர் பெற்றெழ...
உதிரத்தீட்டில் இறைந்து கிடக்கும்
யோனிக் கண்களுக்கு
டைபீரியஸ் வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறான்...
ஆடையைத் திருத்திச் சொருகிய துணியில்
சில மீசை முடிகள் ஒட்டிக் கொண்டிருக்க...
அவளின் சிரிப்பில் காலங்கள்
அநியாயத்திற்கு இறந்து கிடந்தன.

- முகமது பாட்சா*
10/10/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு
இந்த நகரத்தைச்
சற்று மூடி வைக்கிறோம்
யாரும் உள்ளே நுழைந்துவிடாதீர்கள்...
உங்களின் தும்மல்களை
அடக்கியே வாசிப்பது சிறப்பானது...
வியாபாரம் முடிந்த பிறகு
வீதிகள் திறக்கப்படும்
நீங்கள் உங்கள் கனவுகளோடு
எங்கு வேண்டுமென்றாலும் திரியலாம்...
அதுவரை
இந்த நகரத்தைச்
சற்று மூடி வைக்கிறோம்
யாரும் உள்ளே நுழைந்துவிடாதீர்கள்...

- மு.முகமது பாட்சா*
11/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், இரவு மற்றும் குளோஸ் அப்
சொற்களை மூட்டிக் குளிர் காய்கிறாய்
வார்த்தைகளில்லாமல்
வதங்கிக் கொண்டிருக்கிறேன்
நேசம் என்பதைப் பற்றிப்
பேசுவதே கிடையாது...
பேசு பொருள்களில்
அழுக்கான பக்கங்களை
அதிகமாக அலசிக் கொண்டிருக்கிறோம்
ஆதாரமில்லாத வார்த்தைகள்
நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன...
நீ நீயாகவும்
நான் நானாகவும் அமர்ந்திருக்க
எரிகின்ற இதயத்திற்கு
காதலென்றே பெயர் சூட்டுகிறேன்.

- மு.முகமது பாட்சா*
12/10/2019


No comments:

Post a Comment

Popular Posts