
அவர்கள் கூடினார்கள்
ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொண்டார்கள்
சிலரின் தோள்களை விடமாட்டேனென்ற
ஜோல்னாப் பைகள்
புத்தகங்களை முகர்ந்து கொண்டேயிருந்தன...
அவர் இவர்தான் என்றும்
இவர் அவர்தான் என்றும்
சிலர் ஜாடை காட்டி பேசிக் கொண்டார்கள்...
ஒலிவாங்கியைப் பார்த்தவுடன்
சிலருக்கு வாய் நமநமத்துக் கொண்டிருந்தது...
ஒருவன் புருவத்தையுயர்த்தி
இவனுங்களெல்லாம் அறிவு ஜீவிகளாம் என்று
நக்கலை நழுவவிட...
முக்கியஸ்தர்
தேடியெடுத்த குறிப்புகளை வாந்தியெடுக்கத் தொடங்கினார்
வந்தவர்கள் கைகளைத் தட்டி ரசிக்க...
மேடை இருட்டாகி
திடீரென்று ஒளிர்ந்த போது உள்ளே நுழைந்தது
சினிமாவின் பிரபல வெளிச்சம்...
இப்போது அவர்களின் நிறம் மங்கிக் கொண்டிருக்க
கை குலுக்கி
செல்பி எடுத்துக் கொண்டவர்களின் கைகளில்
புத்தகங்கள்
வியர்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தன.
- மு.முகமது பாட்சா*
15/10/2019
No comments:
Post a Comment