
நாங்களா
ஒன்றும் தெரியாதவர்கள்?
கோடிகளுக்கு எத்தனை சுழியங்களென்று
எங்களுக்கு நன்றாகவே தெரியும்...
பொருளாதாரம்
படித்தவர்கள் மட்டும் மேதைகளல்ல
விழித்திருக்கும் போதே
உங்களின் கைகளைக் கட்டியவர்கள்
நாங்களென்ன பேதைகளா?
ஒட்டகங்களைக் கட்டிவைத்து
கூடாரங்களைப் பாதுகாக்கிறோம்...
அவை அடிக்கடி தலைகள் நீட்டுவதை
நீங்கள் வீழ்ச்சி என்கிறீர்கள்...
நாங்கள் எழுச்சி என்கிறோம்...
மடிகளையறுத்து பால் வழங்கும் திட்டம்
எங்களால் மட்டுமே முடிகிறது..
பட்டினிப் போட்டாவது
ஏழைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்...
அன்னிய அச்சுறுத்தல்
ஆபத்தானதல்லவா அடிமைகளே...
வாருங்கள்
எல்லைகளில் போர் புரிவோம்...
நீங்கள் கோட்சேவை
கொண்டாடவிட்டாலும் பரவாயில்லை...
காந்தியை தூக்கிக் கொண்டு திரியாதீர்கள்...
கிழவர்கள் நம் நாட்டை
ரொம்பவே கெடுத்து வைத்திருக்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
30/09/2019

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக வட சென்னை
'தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
சார்பில் கவிஞர் நா.வே. அருள் அவர்களால் தொகுக்கப்பட்டு
இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு
வெளியான 'முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்'
நூலில் எனது கவிதையும் தார்மீக கோபத்தை பதிவு
செய்திருக்கிறது...
பிழைத் திருத்தும் புத்தகங்களைப்
பிழை திருத்திக் கொண்டிருக்கிறோம்...
எழுத்துகள்
மொழி மாற்றம் செய்து கொள்கின்றன...
ஆகம விதிகளுக்குள்
நுழைந்துவிட்ட புதிய கொள்கை
புண்ணாக்கு விற்பவனைப்
படிக்கவேண்டாம் என அறிவுறுத்துகிறது...
மூன்றாம் வகுப்பு மாணவன்
பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறான்...
கனவுகளைப் புதைத்து விடுங்கள்
குலத் தொழில் கற்பிக்கச்
சரஸ்வதி சாக்பீஸை எடுத்துவிட்டாள்...
கல்வியின் கர்ப்ப கிரகம்
உயர் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது...
இனி வாசலில் நின்று
சாமி என்று கூப்பிடப் போகிறாயா?
அல்லது தன் மானம் போர்த்தி
கல்விக்காகப் போரிடத்தான் போகிறாயா?
- முகமது பாட்சா*

தலையை வலம் சாய்த்து
மெதுவாக நகர்கிறது மிருகம்
நகங்கள் உள்ளுக்குள் மறைந்திருக்க
தந்திரங்கள்
கண்களுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தன..
கொடியாடுகள்
மேய்ச்சலுக்கான புற்களில் அசைந்த
எதிரியின் தடம் உணர்ந்து
மூக்குகள் மொசுமொசுத்துத் திரும்பி..
கோபமும் பயமும் பிடரியிலிறங்கி
கால்களை உறுதியாக்கி ஓடும்போது
மூச்சிரைக்கும் விரட்டலில்
பசிப் பாய்ந்துப் பிடரியைப் பிடிக்கும் வேளையில்
மறைந்திருந்த உறுதியொன்று
ஆக்ரோசம் கூட்டி
பிட்டத்தில் கொம்புகளைச் சொருகித்
தூக்கிப்போட்ட வேளையில்...
பயம் இடம் மாறிக்கொள்ள
தந்திரம் பொதுவாகி
மிருகம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது...
- மு.முகமது பாட்சா*
01/10/2019

இந்தத் தேசம்
வித்தியாசமாகத்தான் மாறியிருக்கிறது..
கதர் குல்லாக்களை
எங்கும் பார்க்க முடிவதில்லை...
காந்தியின் பிறந்த நாள்
திருவிழாக்களாகக் களைகட்டுகின்றன...
சிலைகள்
மாலைகளை நிறைத்துக் கொள்ள
பேனர் காந்திகளை
சங்கிகள் துப்பாக்கிகளால் சுட்டு விளையாடி
கோட்சேக்களை நினைவுக் கூறுகிறார்கள்..
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன்
காந்தி சங்கல்ப யாத்திரை தொடங்குகிறது...
நம் தேசத்தந்தை யார் என்பதை
அமெரிக்க அதிபர் நிர்ணயம் செய்கிறார்...
காந்தி என்பவர்
யாரெனக் கேட்கிறார்கள் மாணவர்கள்...
வேலை வெட்டியில்லாமல்
சும்மா சுற்றிக் கொண்டிருந்தவர் எனச்
சொல்லிக்கொடுக்கலாம் புதிய பாடத்திட்டம்.
- மு.முகமது பாட்சா*
02/10/2019
Painting : M.F.Husain

"மூக்கு மட்டும்
ஏன் திறந்தே இருக்கிறது?"
என்று அவள் கேட்ட போது
காதுகளும் கூடத் திறந்துதானே இருக்கிறது
எனக் கேட்க நினைத்துக்
கேட்காமல் விட்டுவிட்டேன்...
அவளுக்கு அடிக்கடி
மூக்கின் நுனியில் கோபம் வரும்...
உதடுகளை இறுக்கி
முத்தமிட்டுக் கொள்ளும் போது
சுவாசம் இடம் மாறுவது
வெந்நீர் ஒத்தடமாய்ச் சுகிக்கும்...
ஒரு சமயம்
அம்மாவின் நாடித்துடிப்பைப் பார்த்த டாக்டர்
மூக்கில் கை வைத்துவிட்டு
ஸாரி என்று சொன்னார்....
காதுகள் பார்த்த காட்சியை
கண்களும் வாயும் மூடிக் கொண்டபோது
மூக்கு மட்டும்தான்
பெருமூச்சு விட்டுப் பேசியது...
"என்னதான் சொல்ல வருகிறாய்?"
என அவள் இப்போது கோபப்படும் போதும்
மூக்கு விடைப்பதை
இரசிக்காமல் இருக்க முடியவில்லை...
ஆமாம் ஏன் மூக்கு மட்டும்
திறந்தே இருக்கிறது!
- மு.முகமது பாட்சா*
02/10/2019
No comments:
Post a Comment