Friday, 4 October 2019

விடுபட்ட கவிதைகள் 3


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நீங்கள் தயவு செய்து
இந்தக் கவிதையைப் படிக்காதீர்கள்...
உங்களின் ஒற்றைச் சிகரெட் புகைய ஆஷ்ட்ரேவில்
விழும் சாம்பல்களில்
என் எழுத்துகளைப் பொறுக்கத் தயாராகயில்லை....
உங்களின் மதுக்கிண்ணவோரத்தில்
ஒட்டியிருக்கும்
அழகிகளின் உதடுகள் துப்பிய வார்த்தைகள்
எனக்குத் தேவைப்படாது...
நீங்கள் முகம் சுளிக்கும் நடைபாதையில்
வார்த்தைகளோடு உருண்டு கொண்டிருக்கிறேன்...
எரியாத அடுப்பிலிருக்கும்
கரித்துண்டுகளில் எழுதும் கவிதைகள்
சற்று தீச்சலாகத்தான் இருக்கும்...
இந்தக் கவிதை பழங்கஞ்சியோடு
பச்சை மிளகாயைக் கடித்துப் பசியாறுகிறது..

- மு.முகமது பாட்சா*
27/09/2019

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள்

'ம்'
என்ற இந்தச் சந்தத்தைத்
தூக்கிச் சுமந்து திரிகிறேன்...
'ம்'
காடுகளை வளர்த்து
பறவைகளிடம் சங்கீதம் கற்றுத் தருகிறது
உதடு பிரியாத அந்தச் சப்தம்
சாத்தானிடம் கைக்கட்டி அமர்ந்திருக்க
தேவலோகத்தின் கதவுகளைத்
தட்டிக்கொண்டிருக்கிறது அந்த 'ம்'
தட்டிக்கழித்த வார்த்தையென
மூளையின் செல்கள்
பற்களால் பிறாண்டிக் கொண்டிருக்க
சம்மதம் என்று
உன் கண்கள் பேசியதாக
கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்..
இனி யாராவது 'ம்' என்று இசைத்தால்
நீ வந்து போவது நிச்சயம்.

- மு.முகமது பாட்சா*
28/09/2019
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.


நகரத்தின் சுவர்களை
வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
சாலைகள்
ஒப்பனைகளில் மூழ்கியிருக்கின்றன
பதாகைகள்
பிரதமரின் வருகையைக் கட்டியங்கூற..
எனக்குள் முளைத்த கேள்விகளைச்
சிறையிலடைக்கிறேன்...
கனவுகளை விற்பதற்கான மேடையொன்று
தயாராகிக் கொண்டிருக்க...
எதிர் காலத்தைக்
கூண்டுக்கிளியிடம் ஒருவன்
கேட்டுக் கொண்டிருந்தான்...
இங்கெல்லாம்
நிக்கக் கூடாதென்றத் தாணாக்காரர்
எதுக்கு இந்த ஆடம்பரம்?
என்று முணங்கிக் கொண்டே நகர்ந்தார்...
செதுக்கலில் பூரணிக்காத புத்தரின் ஒரு கண்
விடைப்பாகவே இருக்க...
கால்கள் பாறையாகவே இருந்தன...

- மு.முகமது பாட்சா*
29/09/2019
 
                                                                       படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் இயற்கை

இந்தக் கவிதைக்கு
என்ன தலைப்பு வைக்கலாமென்று
இதுவரை முடிவு செய்யவில்லை...
வெளியே மழை
தன் வேலையைச் சிறப்பாகச் செய்து
கொண்டிருக்கிறது..
பறவைகள்
எங்கே கூடடைந்திருக்கும் என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
'மிருகங்களுக்கு மழையொன்றும் செய்யாதா?'
மனம் கேள்வியைக் கேட்டுவிட்டு
சிறுவனைப் போல் என்னைப் பார்க்கிறது...
யாசகனின் போர்வையே ஒழுகிக் கொண்டிருக்க
தூரத்தில் என்னைக் கடந்து போகிறான்...
இன்னம் சற்று நேரத்தில்
மின்சாரம் துண்டிக்கப் படலாம்...
மின்னல் பலமாக வெட்டிக் கொண்டிருக்கிறது...
நாயர் கடை டீ மட்டும்
மழைக்கெல்லாம் எங்கும் ஒதுங்குவதேயில்லை...
குளிர் மெல்ல
என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போகிறது...
மரங்கள்
என்னை இரசித்துக் கொண்டிருக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
30/09/2019

No comments:

Post a Comment

Popular Posts