Tuesday, 5 November 2019

விடுபட்ட கவிதைகள் -8

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

உள்ளே நுழைந்தவுடன்
ஆளுக்கொரு முகமூடி கொடுக்கப்பட்டது..
சாவகாசமாகத் தேநீர் அருந்தினார்கள்..
குடும்பக் கதைகளை ஓடவிட்டு
ஆற்றாமைகளை அலசிக் கொண்டார்கள்..
ஷாட் ரெடி என்றவுடன்
கவுண்ட் டவுண் இறங்கிக் கொண்டிருக்க
காமிரா சுழல ஆரம்பித்தது...
கண்களை நெருப்பில் போட்டு
வார்த்தைகளையுருட்டி வீசினார்கள்...
அடிப்பது போல் முஷ்டிகளை உயர்த்தினார்கள்
நேரம் முடிந்தவுடன்
முக மூடிகளைக் கழற்றிக் கொடுத்தவர்கள்
மறந்திடாதே மிஸ்டர் எதிர்க்கட்சி
பெண்ணுக்கு நல்ல பையனா இருந்தா சொல்லு
என்று சிரித்துக் கொண்ட போது
தொலைக்காட்சி பெட்டிகள்
ஆங்காங்கே வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.

- முகமது பாட்சா*
17/10/2019
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
இந்தக் காதல் கவிதையைப்
படித்துவிட்டுக் கிழித்துவிடுவதுதான்
உங்களுக்கு உசிதமாக இருக்கும்
எனது ஜன்னல்களை
நானே அறைந்து சாத்தியிருக்கும் போது
எதிர் வீட்டு விழிகளைப் பற்றிப்
பேசுவது 100 % பொய்
இல்லாதவள் மிதந்ததாகக்
கற்பனைக் கொள்கிறது இந்தக் கவிதை..
இயலாதவொன்றை
எடுத்துத் தைத்து
ஆடையாகப் போர்த்திக் கொள்கிறேன்...
எரியாத அடுப்பைக் கொண்டு
சூடான தேநீர் பருகுவதே
இந்தக் கவிதைக்கு வாடிக்கையாகிவிட்டது...
கவிதை சிருஷ்டித்த உலகத்தில்
நான் இறந்து கிடக்கிறேன்
என்னை அங்கேயே விட்டுவிடுங்கள்...
காகிதப் பூக்கள் நாறாதென்றாலும்
மகரந்த சேர்க்கைக்கு வண்டுகள் வராது என்பதும்
100 % உண்மை.

- முகமது பாட்சா*
18/10/2019




ஒரு யுகத்தின்
பிரமாண்டம் கடந்து செல்கிறோம்
விலங்குகள் அகற்றப்படாமல்
கைகளுக்கான விலங்குகளைச் செய்கிறான்
பிரம்மக் கொல்லன்
அழுகாச்சி காவியங்களுக்கான
வார்த்தைகளை
உரலில் போட்டு இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
மாராப்பு போடாதா ஆயந்திகள்...
அதனை மொழியாக்கம் செய்யும் துபாசிகள்
கவர்னர்களின் கால்களை வருடி
மண்டைகளைச் சொரிந்து கொள்கிறார்கள்..
கைகளில் துப்பிய எச்சிலோடு
கால் பணமும் காணி நிலமும் வாங்கிக் கொள்பவர்கள்
வேலையைச் சரியா பாரென்று சொல்வது
இன்னமும் தொடர்கிறது...

- முகமது பாட்சா*
19/10/2019


No comments:

Post a Comment

Popular Posts