Wednesday, 6 November 2019

இறையழகன் 1 - 6

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், படுக்கையறை மற்றும் உட்புறம்

சுடர்விட்டெரிகிறது
இன்னிதழ் மிளிரும் வார்த்தைகள்...
காதற்ற மௌனம்
பிரபஞ்ச பேரொளிக்குள் ஊடுருவ...
கடவுள் யாரென்ற வினா
காலம் காலமாய் தொடர்கிறது கட்டவிழ்ந்து
அத்தர் வீதிகளில்
அரபியக் குதிரைகளுடன் குமரிகளும்
விலைக்கேக
பொற்காசுகளை முத்தமிட்டவர்கள்
கடவுள்களாய்
கஜானாக்களில் நிரப்பிக் கொள்கிறார்கள்..
ஒட்டகங்களின் முதுகுகளில் ஒன்பது கடவுள்கள்
பெற்ற குழந்தை பெண்ணென்றால்
பிணமாக்கும் நிராசை...
நபி இப்றாஹீம் நிர்ணயித்த
இறையில்லம் காஃபாவிற்குள்
சாத்தான் குதிரைகளின் சலங்கைகள் சப்தம்...
வேக்காட்டில் வெந்திருக்கும் தேசத்தில்
நோக்காடு இன்றி பெற்றெடுத்தாள் அன்னை ஆமினா
அண்ணல் முகம்மது எனும்
அழகியத் திருமேனி.

- முகமது பாட்சா*
31/10/2019
                      -2 -


கனவு பிரபஞ்சத்தைக்
காய்ச்சி ஊற்றிக் கொண்டிருந்தவர்கள்
இதுதான் தேனாறென்றார்கள்
அரப் என்றாலே
பொட்டல் காடென்று பொருள்...
ஒரு கையை இழந்த
ஹூபுல் சிலை உள்ளே நுழைந்தபோது
நபி இப்றாஹீம் தொகுத்த
இறை நேசம் மெல்ல எரிந்து கொண்டிருந்தது...
செத்துக்கிடந்த
மனாத்,லாத் மற்றும் உஜ்ஜாவெல்லாம்
கல்லிலிருந்து
கடவுள்களாகக் காட்சியானார்கள்...
குறைஷிகளின் குர்தாப் பைகளுக்குள்
பொற்காசுகளும் ஆனார்கள்...
கோத்திரத்திற்கு
ஒரு கடவுளென இருந்த கற்கள்
வீட்டிற்கொரு தெய்வங்களாக விளைந்தன..
ஆட்டுப்பாலும் ஆண்டவனாக
ஒட்டகப்பாலும் அபிஷேகத்திற்காகின...
இறந்தவர்களும் கடவுள்களாகிவிட..
இல்லாதவர்களும் பெருகினார்கள்...
சாங்கியங்களைச் சட்டங்களாக்கி சாத்திரம் பேசும்
பூசாரிகள் பெருகினர்...
இவர்கள் யாருக்குமே தெரியாது
சத்திய திருமேனியொன்று
இங்குதான் ஜனிக்கப் போகிறதென்று.

- முகமது பாட்சா*
01/11/2019

                  - 3 -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நேர்ச்சைகளால்
நிரம்பிவழிந்தன மூடத்தனங்கள்...
சடங்குகளையே
சட்டமாக்கிக் கொண்ட அடிமைத்தனம்
கைகளைக் கட்டிக்கொண்டு
நட்சத்திரங்களிடம் பலன்களைக் கேட்டது...
குறிசொல்பவன்
கோபுரத்தில் வாழத் தொடங்கினான்...
அம்புகள் அடையாளம் காட்டின
இனக்குழுக்கள் எதுவென்று
விளைச்சல்களைப் பங்கு கேட்டனர்
புதிதாகப் பிறந்த கடவுள்கள்...
அடிமைகளின் வியாபாரம்
நேர்ச்சைக்காகி காமவெறிக்கும் ஆனது..
வஸீலா விடப்பட்ட ஆடுகள்
ஆண்களுக்கு மட்டுமே சுவையானது..
ஆடைகளே அவசியமில்லையென்று
பெண்களுக்குக் கற்றுத் தரப்பட்டன..
காஃபா
உண்மையில் இப்போதுதான்
கறுப்பு அங்கியை அணிந்து அழுதது...
அதன் முனகல் சப்தம்
முடிவிற்கு வர
முகம்மது(ஸல்) வின் நறுந்தேகம் கருவாகி உருவாக...
அம்ரு இப்னு லுஹய்
நரகத்தின் வாசலில் அழுது கொண்டிருந்தான்.

- முகமது பாட்சா*
02/11/2019

                      - 4 -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி
குலப்பெருமைகளைச் சூடிக் கொண்டவர்கள்
குட்டி சுவராவதற்கு
வழிகளைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள்...
மாற்றான் மனைவிகளுக்காக மல்யுத்தங்கள் நடந்தன...
கொடி நட்ட வீடுகளில்
கூத்தோடு கும்மாளம் தொடர்ந்தது...
இனப் போர்களுக்காக
ஆயுதங்கள் தீயில் வெந்து கொண்டேயிருந்தன...
பஞ்சம் தலைவிரித்தபோது
இனப் பெருமை சண்டையிட்டுக் கொண்டது..
தராசுத் தட்டுகளைச் சூதுகள் கவ்வின..
நீதியென்பது ஆணுக்காக மட்டும் அமைந்தது...
இல்லாமையும் இயலாமையும்
கடவுள்களின் கல்லாப்பெட்டியை நிரப்ப..
வட்டித் தொழில்
வசதியாக அமர்ந்து கொண்டது...
மதுக்குடுவைகளில் கவிதைகளையெழுதி
மங்கைகளுக்குப் பரிசளித்தார்கள்...
உக்கா புகையிழுத்து உற்சவம் தேடியவர்கள்
நிச்சயம் அறியவில்லை
முடிவிற்கு வரும்
முகம்மது(ஸல்) எனும் முழுமதிக் கருவால்.

- முகமது பாட்சா*
03/11/2019

                       - 5 -

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஹாஷீம் குலத்தின் அருந்தவம்
அப்துல் முத்தலிப் கனவில் சுரந்தது
புனித ஜம்ஜம் நீரூற்று...

இணை வைப்பால் மூடிக்கொண்ட புனிதம்...
புத்துயிர் பெற்றுச் சுரந்தது...
குழந்தை நபி இஸ்மயில் அழுகுரல் கேட்டு
தாகம் தீர்த்தத் தாய்க்கிணறு...

அகழ்ந்த கிணற்றிற்குள் புதையலாய்
தங்கம் அதிகமாய் கொட்டிக்கிடக்க..
காஃபா ஆலையம் கதவுகளில்
தங்கச்சட்டையை அணிந்து கொண்டது...

ஆசையூற்று
குரைஷிகளிடம் அதிகமாய்ச் சுரக்க...
கிணற்றிற்கான
உரிமைச் சண்டை சங்கடம் கோர்க்க
லேசாக்கித் தருபவன் இறைவனென்பதால்
நேர்சையாகப்
பிள்ளையொன்றை காணிக்கையாக்க
உறுதிக் கொண்டார் முத்தலிப்...

அந்த அதிசயக் கிணறு
கண்திறந்து பார்த்தபோது யாருக்கும் தெரியாது
அப்துல் முத்தலிப்பின் குடும்பத்தில்தான்
அற்புத முத்தொன்று
அழகாகப் பிறக்கப் போகிறதென்று....

- முகமது பாட்சா*
04/11/2019
                    - 6 -

படம் இதைக் கொண்டிருக்கலாம்: நெருப்பு
யானை ஆண்டு
காஃபா
மெல்ல தன் கண்களைத் திறந்தது...
கஸ்தூரியின் வாசம் காற்றில் தவழ்ந்தது...
நேசமொழிகள்
தன்னை அலங்கரிக்கத் தொடங்க...
இறை இல்லத்தை இல்லாமலாக்கிட
அப்ரஹாவின் பெரும் படை
முகம்மஸ் எனுமிடத்தில் களி முகாமிட்டது...
கற்பனைக்கும் எட்டாதது அதிசயங்கள்...
கரும்புகை மேகம்
வானலையென வலை விரித்து நகர்ந்திட
அப்ரஹாவின்
யானைப்படைகள் நகர மறுத்தன...
மினா - முஜ்தலிபா இடையில்...
காதுகள் பெருத்த ஆப்ரிக்கா களிறுகள்
திசைகள் நான்கில் மேற்கைத் தவிர்த்து
மாற்றுத் திசைகளில் மதம் பிடித்தோடின...
கணக்கிலடங்கா காலாட்படைகள்
கர்வத்துடனே காஃபாவை நெருங்கிட...
கும்பிடும் கடவுள்கள் குவியல்களாவிருந்தும்
குறைஷிகளும் மற்றவர்களும்
பதுங்கு குழிகளே
பாதுகாவல் என்று ஒளிந்து கொண்டனர் ...
திடீரென்று கேட்ட
இறகுகளின் இரைச்சல் பெரிதாய் நெருங்க...
பெரும் படையாய்த் திரண்டன அபாபீல் பறவைகள்...
அவை வீசிய கற்கள் சிறியதே என்றாலும்
பெரும் பேரலை நெருப்பை விழுங்கியே விழுந்தன..
இறை மறையுரைத்த வசனம் போன்றே
கூளங்களாக எதிரிகள் கிடக்க...
அதிசய நோய் கண்டு
அபரஹாவும் அழுகித்தான் இறந்தான்...
ஏனிந்த அறிகுறி ஏதும் அறியாமல்
பதுங்கிய குறைஷிகள்
அறிந்திட வாய்ப்புகள் அன்று அமையவேயில்லை
காஃபாவை கழுவியே சுத்தம் செய்திடப்
புனிதர் இங்குதான்
அப்துல்முத்தலிப்பின் இல்லத்தில்
பேரழகனாகப் பிறப்பாரென்று...

- முகமது பாட்சா*
06/11/2019







No comments:

Post a Comment

Popular Posts