

அறைக்குள் நுழைந்திருக்கும் திருடன்
பறக்கும் குதிரையிலேறி வந்திருக்கலாம்..
காற்று மண்டலத்தில் ஊடுருவி
கைப்பேசிக் கஜானாவைக் களவாடுகிறான்...
யூதக்கூட்டத்தின் குதிரைக்குளம்பு
இந்தியாவின்
அறிவு கூட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது...
பெகாசூஸ் என்று அதற்குப் பெயர்...
கைப்பேசியின் கண்களைத் திறந்து வைத்து
காட்சிகளைக் களவாடியவன்...
அதன் காதுகளை
தன் காதுகளில் பொருத்திக் கொள்கிறான்...
அவன் காதிற்கு
இப்போது வைத்திருக்கும் பெயர்
இந்திய அரசாங்கம்...
கையோடு மாட்டிக் கொண்டவர்கள்...
கண்களை மூடி இருந்ததாகச் சொல்கிறார்கள்...
விசாரணை தொடர்கிறது...
- முகமது பாட்சா*
01/11/2019

காதுகளுக்குள்
சில வார்த்தைகளை அறைந்து
மூடி வைத்திருக்கிறீர்கள்...
நிழல்களுக்குக் கப்பம் கட்டாமல்
பாக்கி வைத்திருக்கிறேன்...
தோல்களின் நிறக்கூறுகள்
தாழ்த்திக் கொள்கின்றன..
ஆதியின் சுவடு
முதுகை வளைத்தே நடக்கிறது...
பாதைகளை அடைத்துவிட்டு
சாக்கடையில் நீந்தச் சொல்லும் மந்திரம்
சத்தியம் என்ற உபதேசம்..
நிர்வாணம் தேவைகள் அற்றது..
மிருகப் பசி
சங்கீர்த்தனம் வாசிக்காது..
நிமிர்வதற்கு முன்
வாசற்கால்களையாவது
கொஞ்சமாக உயர்த்திட வேண்டும்.
- முகமது பாட்சா*
01/11/2019

தமிழோடு
விளக்கொளியும்
விலைமகள் நட்பும் வேறல்ல காண் ;
தூண்டும் நெய்யற்றுப் போனால்
வெளிச்சம் கையறும்,
அவ்வண்ணம் பொருளறுந்தால்
காமம் அகலும் கண்திறந்து.
- முகமது பாட்சா*
விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
- நாலடியார் - 371

கூதிர் நெருக்கப்
பெரும் கம்பளம் கேட்கும்
மென் தேகம் நெருக்கி
காமம் துப்பும் கயமை போதம் விட்டு
அனல் வெப்பம் கூட்டி
சாகமெச்சில் திகட்டமிசைத்து
ஆடை நீக்கி
அலரும் நாழிகைக் கொட்டிச்சிதற..
உதரப்பைக்குள் ஒட்டிச் சிதறும்
ஓராயிர மீன்கள்
செத்து மிதக்க ஒன்றில் மட்டும்
உருவாகி நெகிழும்
வீரத்திற்கும்
காதலென்ற மொழியே உயிராகும்.
- முகமது பாட்சா*
02/11/2019

அவர்
ஒரு கதைதான் எழுதியிருந்தார்...
பார்த்தும் பார்க்காதது போல் சென்றார்
நேற்று கூட ஒருவரைச் சந்தித்தேன்
ஒரு நூல்தான் எழுதியிருந்தார்
இப்போதெல்லாம்
நேரம் கிடைப்பதில்லை என்றார்...
ஒருவர்
ஒரு பாட்டு மட்டுமே எழுதினார்
படம் ஓடவில்லை
ஆனாலும் அவரின்
வாய்ப்பாட்டு ஓயவேயில்லை...
புகழ்ச்சியைப் போர்த்தாவிட்டால்
புன்னகைக்கவே மறந்து விடுகிறார்கள்...
எறும்பு தன்னை
ஞானியென்று சொல்லிக் கொள்வதில்லை..
கர்வத்திற்குப் பெயர்
அறிவு என்று சொல்லிக் கொண்டால்
அவர்களைக்
காறியுமிழ்ந்து கடந்து போவதில்
தப்பேயில்லை.
- முகமது பாட்சா*
03/11/2019
No comments:
Post a Comment