Thursday, 19 December 2019

விடுபட்டக் கவிதைகள் 11

காதலைப் பற்றி எழுதுவதற்கு முன்
முத்தங்களையாவது
சேகரித்துக் கொள்ளவேண்டும்

இருட்டைச் சுவாசிக்கிறேன்
வெளிச்சம் அதிகம் என்கிறாய்!

உன் விரல்களில்
ஒட்டிக்கிடக்கும் வரிகளில்
என் பெயர் மட்டும் இருக்கிறது!

நீ ரசிப்பதை நான் ரசிக்கிறேன்
உன் கண்கள் அடிக்கடி
என் கன்னங்களில் அறைகின்றன!

நீ, நேரமாகிவிட்டது என்று சொல்வதை
எப்படி எடுத்துக் கொள்வது?

நீ போகும் போது முனங்கிய பாட்டை
வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன்...
காலர் ட்யூனில் ஒட்டிக் கொள்கிறது!

நாளை வரும்வரை
இரவு என்னோடு பேசிக் கொண்டிருக்கும்
உன்னைப் பற்றி மட்டும்!

- முகமது பாட்சா*
08/11/2019

அறையின் கதவைப் பூட்டிவிட்டு
உள்ளேயே
ஆடிப்பாடச் சொல்கிறார்கள்...
உதடுகளெல்லாம்
உலர்ந்துபோய் ஒட்டிக் கொண்டிருக்க...
எழுது கோல்களில் நிரப்பிக் கொடுத்த மை
எதை எழுதினாலும் அழித்து விடுகிறது...
பேசாமல் இருப்பதே
சுதந்திரம் என்ற கட்டமைப்பு
ஜனநாயகத்தூண்களில்
மெல்ல ஏறிக் கொண்டிருக்கின்றன....
பாம்புகள் நம்மைப்
பாதுகாப்பாக இருங்களென எச்சரிக்கும் போது
பதுகாக்கப்பட்ட கனிமரம்
பற்றி எரிந்து கருகிக் கொண்டிருப்பதை
யாரும் பார்க்கவில்லை....

- முகமது பாட்சா*
09/11/2019

தலையுயர்த்திப் பார்க்கும் துளிர்களின்
வேர்க்கால்கள்
மெல்ல ஊன்றி நகர்கின்றன..
அருகில் செழித்த களைக்கு நீரையுறிஞ்சும் அவசரம்
மணிகட்டிய ஆடு
நுனிக்கு மேய்கையில் அசத்த
வேர்களில் அடுத்த முயற்சி தொடர்கிறது...
களை வேரோடு களவாடப்பட்டது.

- முகமது பாட்சா*
09/11/2019

எனக்குள்ளிருக்கும் ஒருவனை
யாரவது
உசுப்பிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்...
அவர்களுக்கே தெரிவதில்லை
ஏன் உசுப்பிவிட்டோம் என்று...
அவன் அவ்வப்போது
கிளைகளில் தாவுகிறான்
நீருக்குள் மூழ்குகிறான்
மூர்ச்சையாகிக் கிடக்கிறான்
பயந்தது போல் பாசாங்கு செய்கிறான்
சில நேரங்களில்
கோரைப்பல்லை வளர்த்துக்
கிடைத்ததைக் குதறுகிறான்
திடீரென்று ஞானமாகி புத்தனாகிறான்...
புத்தகங்களைச் சாப்பிட்டு
வார்த்தைகளை வாந்தியெடுக்கிறான்..
வேடிக்கையை மட்டும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

- முகமது பாட்சா*
10/11/2019

இமைகள் துடிப்பதுபோல்
இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது
உன் இதழ்களின் அசைவிற்கு!

கண்டிப்போடு
இருப்பதாகக் காட்டிவிட்டு
கனவிற்குள்
நுழைந்து கல்மிசம் செய்கிறாய்

அகராதி கிடைக்காமல்
புழுக்கத்தில் தவிக்கிறேன்
சிரிப்பின் மொழி விளங்கவில்லை!

எது பிடிக்கும்? என்றாய்
நீ என்றேன் ; உனக்கு? என்றேன்
உன் பொய் என்கிறாய்!

கனவில்
தவறிழைப்பேன் என்பதால்
காற்றோடு மட்டும்
பேசிக் கொண்டிருக்கிறேன்...

நீ இல்லாவிட்டால் மட்டும்
இரவு ஏன்
இத்தனை நீளமாக இருக்கிறது?

- முகமது பாட்சா*
10/11/2019

நிலம்கொத்திப்பறவை

திக்கற்றப் பறவையைப் போல்
இந்தக் கவிதை இங்கேயே சுற்றித் திரிகிறது...
இதன் நிலம்
இப்போது தொலைந்து போனதாக
தேசாந்திரியின் பயணக் குறிப்பில் செல்லரித்துக் கிடக்க
விவசாயி ஒருவன் தூக்கிட்டுக் கொண்டு
நிலத்திற்குக் கடிதமெழுதி வைத்திருக்கிறான்...
தாலாட்டு கேட்ட தாய் மரங்கள்
தங்களின் கதைகளையெழுத...
அதன் வேரில் வைத்திருந்த மிச்ச நீரையும்
உறிஞ்சு கொண்டிருக்கின்றன ஆயில் நிறுவனங்கள்
சோம்பலுக்குப் பிறந்தவர்கள்
வீசி சென்ற நெகிழிகளில் மூர்ச்சையான நிலத்தை
எதனைக் கொண்டு தெளிவிப்பது?
வீட்டையிழந்தவனுக்குத்தான்
தாயின் மடியைப் பற்றிப் புலம்பத் தெரியும்..
தாங்கி பிடித்த நிலத்தில்
மலட்டு விதைகளை ஊன்றிவிட்டு
விளைச்சலென்று மார் தட்டிக் கொள்ளும் போதே
தாயொருத்தி மலடான கதையை எழுத
இந்தப் பறவை இடம் தேடியலைகிறது...

- முகமது பாட்சா*
11/11/2019

எழுதாத கவிதைகளில்
உன்னை எழுதிப் பார்க்கிறேன்...
வார்த்தைகள் வெட்கப் படுகின்றன!

காதலிக்க வழி கேட்டால்
புன்னகைத்து
சொர்கத்திற்கு வழி காட்டுகிறாய்!

புத்தகங்களை மூடி வைத்துவிட்டு
உன்னை மட்டும்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்!

சன்னல் வழியே வரும் காற்றிற்கு
உனது மணம்!

ஆறிய தேநீரில்
அதன் ஆடையைக் களைகிறேன்
உனக்கேன் புன்னகை?

நிலாவில்
என்ன தெரிகிறது? என்கிறாய்
உன் முகத்தைப் பார்த்துக் கொண்டு
வெட்கம் என்கிறேன்...

- முகமது பாட்சா*
12/11/2019

அவர்கள் எப்போதும்
அழகிய வார்த்தைகளுடனே உலா வருகிறார்கள்
அவர்களைச் சுற்றிலும்
எப்போதும் மேகக் கூட்டம் தவழ்கிறது...
அவர்கள் அணிந்திருக்கும்
காலணிகளின் பெயர் வாக்குறுதி...
அவர்கள் துடைத்துக் கொள்ளும் டிஷ்யூ பேப்பர்
நம்பிக்கை துரோகம்...
பிடிக்காதது கேள்விகள் கேட்பது...
இருக்கை எலும்புகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது...
கடவுள்கள்தான் இவர்களின் கைக் கடிகாரம்
ஏழைகள்
இவர்களின் உதைப் பந்துகள்...
இவர்களை நீங்கள்
தலைவர்கள் என்று தூக்கிச் சுமக்கிறீர்கள்
இந்தக் கவிதையோ
சாத்தானின் தூதர்களென்று ஒதுங்கிப் போகிறது...

- முகமது பாட்சா*
12/11/2019

பிரிவாற்றாமை
@

சொல்லுருக்கி என்னை
விழியால் அடிக்கடி சுவைத்திட்டாய்
கண்ணுருக்கி இதயத்தில்
புத்தொளிரும் வனம் அமைத்தாய்...
மென்திறன் வார்த்தைகளால்
மெல்லிடையை வளைத்திழுத்தாய்
பண்திறன் பகடையிசைத்து
பாம்பின் வாய் நுழைய விட்டாய்...
வண்கரச் சேட்டைகளால்
வசமிழந்து போனவள் நான்...
இப்போது
பிரிவு எனும் கோடிழுத்து
குப்புறவே தள்ளுகிறாய்
காதலுக்குள் இஃதென்ன நியாயமிது?
செல்லாமை உண்டென்றால்
இன் சொல்லால் எனைச் சுடர் தழுவு...
இல்லையென்றால்; நீயிங்கு வரும் போது
காத்திருக்கும் கள்ளத்தியிடம் போய்க்
கனிவாகச் சொல்
'போய் வருகிறேன்' என்று

- முகமது பாட்சா*

குறள் 1151:.
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

வார்த்தைகள்
ஒரு கூடை எடுத்து வந்தேன்
உன்னைப் பார்த்ததும்
காற்றிலவை கரைந்துவிட்டன...

கவிதை எழுதத் தெரியாதவன் என்று
கேலி செய்கிறாய்
எனக்கு நகலெடுக்கவும் தெரியாது...

மழையில் நனைவதற்காகக்
கூப்பிடுகிறாய்
அதுதான் தினமும் நனைகிறேனே...

இரவை நகர்த்துவதற்கு
இதழில் ஒத்தடம் கொடுத்தாய்
அது பகலையும் எரித்துவிட்டது....

நீ எழுதித்தந்த என் பெயரை
வாசித்துக் கொண்டேயிருக்கிறேன்
இன்னமும் தீரவில்லை.

- முகமது பாட்சா*
13/11/2019


உன் பெயர் என்ன?
ஃபாத்திமா லத்திஃபா
நீயெல்லாம் எப்படி முதல் தகுதியில் வந்தே!
வரக்கூடாதா?
எங்கே நீ எழுதியதைக் காட்டு!

- நன்றாகவே எழுதியிருந்தும்
அவளின் எழுத்துகள் இப்போது
முக்காடு போட்டு அல்லாஹூ அக்பர் என்று
தொழுது கொண்டிருந்தது...

'நீ ஓடிப்போ' என்ற குரல்
நாற்புறமும் சப்தமிட்டு இரைய..
அந்தப் பெயர்
கழுத்தில் வளையம் போட்டுச் சுருக்குகிறது..

என் மகளை
அவள் பெயரே சாகடித்துவிட்டது -
நீதி வேண்டும் என்ற தந்தையை
அதே கேள்வி
மீண்டும் சுற்றி வளைக்கிறது...

உன் பெயரென்ன?

- முகமது பாட்சா*
14/11/2019

அவரொரு பொதுப்பெயரில்
கதைகள் எழுதிக் கொண்டிருந்தார்
ஏனென்று கேட்டேன்
ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு
சும்மா என்று நகர்ந்தார்
எம்.எஸ்.அக்பர் தான் தூயவன் என்பதே
நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்
மனுஷ்யபுத்ரன் என்பதால் அவர்
கிறித்துவராக இருக்கும் என நினைத்ததுண்டு
நடிகர் ராஜ்கிரணின் பெயர் காதர் என்பது
இன்னமும் சிலருக்குத் தெரியாது
நான் கூட முதலில் தீபக் என்ற பெயரில் எழுதினேன்
நேரில் கண்டவர்கள்
நீ முஸ்லீமா? என்ற போதுதான் மாமூத்,
முகமது பாட்சா பெயர்களில் எழுத முடிவு செய்தேன்
ஜெயமோகன் கூட
இஸ்லாமியர்களின் எழுத்துகள் குப்பை என்கிறார்...
பெயர்தான் இங்குப் பிரச்சனையாகிறது
இவனெல்லாம் என்று சொல்ல வைக்கிறது...
ஆடைகளை உரித்துப் பார்த்து
அடையாளம் கேட்கிறது...
திறமைகளுக்குத் தொப்பி போட்டு
மூலைகளில் உட்கார வைக்கிறது...
கல்வி கொடுக்காமல் தற்கொலைக்குத் தள்ளுகிறது...
கடைய நல்லூர் பென்ஸி,
பாலைவன லாந்தர் இவர்கள் கூட முஸ்லீம்கள்தான்
என்று சொல்லிவிட்டு
இதை எழுதியவன் பெயர்
கீழே திருத்தமாக எழுதியிருக்கிறேன். முகமது பாட்சா என்று.

- முகமது பாட்சா*
14 /11 /2019

வெளிச்சத்தைப் பற்றித்தான்
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
என்னை நசுக்கிவிடாதே!
என்ற பிரார்த்தனையின் கீழ்
சில புற்கள் மிதி பட்டுக் கிடக்கின்றன..
கண்ணீரைப் பிறருக்காகச் சிந்துவதில்
கஞ்சத்தனம் மிகுத்துவிட்டது
அடிபட்ட நாயிக்கு அழுதுவிட்டுப் போகிறவன்
மிதி பட்டுக் கிடக்கும் மனிதனைப் பார்த்து
நகைத்துவிட்டுப் போகிறான்
பிறப்பொக்கும் குறள் இன்னமும் கூட
திருக்குறளாகவே இருக்கிறது...
சாணக்கியம் என்பதே தந்திரம் மட்டும்தான்
உழைப்பவன் வியர்வையை நக்கிவிட்டு
நான்தான் ராஜா என்கிறவன்
நாயைவிடவும் மிகக் கேவலமானவன்...
இறந்தவன் அரசனென்றாலும்
வெட்டியான்தான் எரிக்கப் போகிறான்...
விளக்கிலிருக்கும் திரி நூல் மட்டுமே
வெளிச்சத்தைத் தரும்
அது கூட எண்ணெய் இல்லையென்றால்
கருகிவிடும்.

- முகமது பாட்சா*
15/11/2019


No comments:

Post a Comment

Popular Posts