Tuesday, 3 December 2019

ஆரிகாமி வனம் - விமர்சனம் - துருவன் பாலா

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஆரிகாமி வனம்

நேரம் வாய்க்கும் போதெல்லாம், கவிதை நெடுஞ்சாலையில் நான் காலாற நடப்பதுண்டு.

அப்படி நடந்த ஓர் தருணத்தில்தான் அச்சாலையில் இடது புறம் ஓர் 
புதிய அறிவிப்புப் பலகை கண்ணில் பட்டது. 
அது "ஆரிகாமி வனம்"செல்லும் வழி என்பது தான். 

படைப்பு குழும நிலத்தில் ,தோழர்.முகம்மது பாட்சா அவர்களால் 
பதியமிடப்பட்டு, ஓங்கி வளர்ந்து செழித்தது.
அந்த கவிப் பெருவனம் என அத்திசை வழி மெல்ல நடக்கத் துவங்கிய 
சற்று நேரத்தில் கண்டு கொண்டேன். வனம் நெடுக 
உள் நுழைந்து நடந்தேன்....

அட டா .. அடடா ..

பூத்துக் குலுங்கிய கவி மரங்களின் சுகந்தம் நெஞ்சம் நிறைத்தது. கண்கள் விரிய , 
கண்டு களித்தும்... நுகர்ந்து வலித்தும் நடந்தேன். ஆம் களிப்புறுத்துவது மட்டுமல்ல 
கவிதை , வலியுணர்த்தி வதைப்பதும்தான் என்பதை , தோழர் முகம்மது பாட்சாவின் 
நெடிதுயர்ந்த ஒவ்வொரு கவிவன மரங்களும் உணர்த்தின. 
ஆம் அவரது ஒவ்வொரு கவி மரத்திலும் பூத்த மலர்கள் 
அனைத்தும் ஒன்று போலில்லை. அவ்வனமெங்கும் வீசிய மணத்திலிருந்து 
சிலவற்றை மட்டும் கவி (விசு)வாசிகளான உங்கள் நாசிக்கும் 
சற்று கடத்தலாமென்பது என் அவா.

இதோ ...

அந்நெடிய வனத்தில்

"நிராசைப் பயிர்கள்" என்ற ஒரு மரத்தில் ...

"போதி மரத்தினில் தொங்கும் விழுதுகளில்
கழுத்தின் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன
அண்ணாந்து பறக்கும் நம்தேசியக் கொடி
சற்று குனிந்து பார்த்தால் நன்றாக இருக்கும்"

என்பதாக இருந்த வரிகளில் மணந்த அரசியல் ஏமாற்றும் , நம்பினோர் சுமக்கும் 
நிராசைகளின் துர்நெடியும் மூக்கு துளைத்து என் மனம் சிதையச் செய்தது. 
நடந்தேன் ... விதவிதமாய் முகங்காட்டும் ஆரிகாமியின் புதுப் புதுப் பரிமாணங்களில் 
மேலும் பல கவி மரங்கள் பூத்துச் சிரித்தன. அதில் ...

"முகபடாம்" என்றொரு மரம்

அதன் பூக்கள் இவ்வாறானவை ..

கொள்ளுக்கும் புல்லுக்கும் ஓடும் தேசத்தில்
முகபடாம் தோலாக இருந்தாலென்ன ?
தங்கமாக இருந்தாலென்ன ?

என எள்ளி நகைத்து

என் முகத்தில் அரைந்து .. வேடமிட்டு வாழும் தேவைக்குள் திணிந்த மானுட 
அவலத்தையும் , இறுதியில் ஓர் இறந்த நாயின் படிமமாய் சிதையும் 
அதன் இயலாமையின் சாஸ்வதத்தையும் ..கூறி மனதில் துக்க மணத்தை நிரம்பச் செய்து ... 
மாற்று யாதென புருவம் நெரிக்கவும் வைத்தது ..

தோழர் முகம்மது பாட்சாவின் ஆரிகாமி வனத்தில் தேன் தமிழ் தூவிய , வார்த்தைகள் 
அணிந்து பூத்து நிமிர்ந்து நின்ற ஓர் கவி மரத்தின் கீழ் சற்று இளைப்பாற எண்ணி 
ஏமாந்தேன். காரணம் அம்மரம் குளிர்ச்சிக்குப் பதில் சற்று வெப்பம் வீசி 
என்னை மனம் புழுங்க வைத்தது இப்படி ..

"புகையும் பேனா "

அதில் ..

"நான்கு சுவர்களுக்குள்
உட்கார்ந்திருக்கும் மெளனத்தை
ஒரு தும்மல் கலைத்து விடுகிறது

காடுகளுக்குப் போனால் வன வாசம்
காடுகளே போனால் ?"

இப்படி தீ கேள்வியோடு அம்மரப் பூக்கள் பரப்பிய மணம்.. சற்று என்னை மூச்சு திணறச் செய்தது

அதன் இடம் மாறும் எழுத்துக்களால் அவரின் பேனா , தீப்பற்றிப் புகைகிறது .
இது இயற்கையை நேசித்து , மக்களுக்கான நல்ல கவிதைகளை நடவு செய்யும் 
ஒவ்வொரு கவிஞனுக்கும் நேரும் மனவெதும்பலல்லவா .. !
இது நம் கவிஞருக்கும் நேர்ந்தது வியப்பொன்றுமில்லை

நகரத்தின் சுவாசங்கள்
மருத்துவ மனையில்
ஆக்சிஜனுக்கு காசு வேண்டி நிற்க

நினைவில் நம் டெல்லி வரத்தானே செய்யும் ..

கவிஞர் மனம் நோவது இதன் பொருட்டே .

வனத்தின் தடம் பிடித்து மேலும் நடந்தேன் .

அடடே ...

"கிறிஸ்துமஸ் " எனும் கவி மரப் பூக்கள் மனசை மெலிதாக்கி காற்றில் மிதக்க வைத்தது..

அதில்

கிறிஸ்துமஸ் குடில்
அமைக்கும் ரோஸ்லினா ..

ஏம்ப்பா ..
ஏசுவும் முருகரும் ஃபிரண்டா ?
என கேட்கும்
கிரேஸியா ..

இல்லை ..
அல்லாவும் ஏசுவும்தான் ஃபிரெண்ட் எனும் ஸ்டீபன் ..

பதில் தெரியாத அப்பா ஜார்ஜ்

மகிழ்ச்சியிலேன்
மதத்தை நுழைக்க வேண்டும் ?
"அப்படியே
இருந்து விட்டுப் போகட்டும்..
ஏசுவின் பிறந்த நாள் "

என..

இந்த மகிழ்வில் எவ்வித ஊறும் செய்யாத, குழந்தை மன கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 
மனதில் கனவு கண்டு நம்முள்ளும் மணக்கும்படி செய்கிறது நம் 
"ஆரிகாமி வன காப்பாளரின் " நடவு ...

கூடவே அது..
மத வண்ணங்களின் மீதான வெற்றுக் கற்பிதங்களையும் , பெருமிதங்களையும் 
புறந்தள்ளி எள்ளி நகைக்கவும் தவறவில்லை ...

இது வனம் என்பதால் , அழகான பறவைகளும் இதில் நிறைய உண்டு .
ஆம் துறவிக்கு ஓராடை , சாமன்யனுக்கு ஆதார் , மதங்களுக்கு ஆயுதம் ,இரவுக்கும் 
பகலுக்கும் இருட்டு , ஒளியென அதனதன் அடையாளங்கள் , இப்படி ..

" அடையாளுங்களுக்கான முகமூடிகள்
சந்தைகளில்
ஏராளமாகக் கிடைக்கின்றன "

என்று முகமூடிகளை தன் கூரிய வரிகள் எனும் அலகால் கிழிக்கும் அழகிய 
பறவை ஒன்றை தன் வனத்தில் பறக்க விட்டு

"காதல் மட்டுமே
இங்கு அடையாளமின்றி வாழ்கிறது
ஆகையினால்
காதல் செய்வீர் மானிடரே "

என தன் கவிப் பறவையை உரத்துப் பாடவும் வைத்துள்ளார் கவிஞர் .முகம்மது பாட்சா

அப்பறவைக்கு ...
" அடையாளங்கள் "
எனும் பெயர் சூட்டியுள்ளது , மிக அழகு .

இந்த ஆரிகாமி வனத்தில் சல சலத்து ஓடும் பல தத்துவ ஓடைகளும் உண்டு ..
அப்படி ஒன்றில் நான் கால் நனைத்து, மனம் சிலிர்க்க நேர்ந்த..

இதோ " என் என்னோடு " எனும் கவி ஓடை ..

"என் தோள்களில் சாய்ந்து கொள்கிறேன்
என் விரல்கள்
என்னைக் கிள்ளி முத்தமிடுகின்றன"

என .. தன் சுயம் துழாவி கடைசியில் ..

" என் என்பது நிச்சயம் நானில்லை ! ஆனாலும்
என் என்பது என்றும் என்னோடுதான் "

என்று முடிவற்று ஓடுகிறது கவிஞர் ஓட விட்ட தத்துவ ஓடை ..

இப்படி ..

அழகிய வனத்தை சமைத்த கவிஞருக்கே ஓரிடத்தில் திசைக் குழப்பம் நேர்வது 
ரசிக்கும்விதமான ஓர் முரண் அழகுதான். ஆம் பல கவி மரங்களில் 
தன் அடையாம் தேடும் அவர். ஓரிடத்தில் ...

"நான் கவிஞனா ?"

எனக் குழம்பி நிற்கிறார் ..

சில கேள்விக்குறிகளையும்
சில ஆச்சரியக் குறிகளையும்
தன் கைவசம் வைத்துக் கொண்டு ..
தன்னை எழுதும் ஒரு கவிதைக்காக ஏங்கிக் காத்துக் கிடக்கிறார் 
நம் வனக் கவிஞர், முகம்மது பாட்சா

இது ஒவ்வொரு கவிஞருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் ஓர் சுய கேள்வி வலைதான் .. 
அதிலிருந்து விடுபட எப்போதும் இயல்வதில்லை ஓர் நல்ல கவிஞனால் .. 
இதில் நம் கவிஞரும் அடக்கம்தானே ...

இன்னும் என்னென்னவெல்ல்லாம் உண்டோ என ,வனத்தில் 
தொடர்ந்து நடந்து கொண்டிருக்க .. காட்டின் மத்தியில் நிறைய "சிலைகளை "யும் 
நிறுவியுள்ளார் கவிஞர் முகம்மது பாட்சா.
ஏனிப்படி என்று அவரிடம் கேட்டேன் ...

பேச ஆரம்பித்தார் இவ்வாறு ..

"சிலைகள் பகுத்தறிவு பேசுகின்றன..
சில சிலைகள் ஆயுதங்களுடனே திரிகின்றன ..
.....

இப்போதெல்லாம் மனிதர்கள்
உயரம் குறைந்து கொண்டே வருகிறார்கள்

சிலைகளின் பெருமை
சுடுகாடுகளின் வழியையும் அடைக்கிறது ...
.....

சிலைகளாக மக்கள் உறைந்து கிடக்கச்
சிலைகள்தான் உயிர் பெற்று
ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்து அதிகாரம் செய்கின்றன.

என்று , அசிங்க அரசியல் அப்பிக்கிடந்த அந்த சிலைகளைக் காட்டி, மனம் உடைந்து 
அவர் அழுத போது , தேற்ற வார்த்தைகளின்றி, நாடு தன் நெற்றியில் எழுதி ஒட்டியுள்ள 
ஜனநாயகம் எனும் போலிப் பாசாங்கு, அம்பலமாகி , சிதைந்து , வக்கிர வண்ணங்களாய் 
ஒளிர்வதை உணர்ந்து, கையறு நிலையில் நானும் அவரோடு சேர்ந்து கூடவே , 
பெருங்குரலெடுத்து அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

விடை பெற்று நடந்த என் கண்ணில் 
" அந்த மேடை" கண்ணில் பட்டது .

அதில் ..

"அவர்களை 
அவர்களே புகழ்ந்து கொண்டார்கள்..
.....
சுயமிகளுக்குள் 
ஒருவரையொருவர் பதுக்கியும் கொண்டார்கள்
.....
காட்சி முடிந்ததும் தங்களின்
முகமூடிகளைக் கழற்றி
கையுறைகளுக்குள் பதுக்கிக் கொண்டு
பத்திரமாய் நடந்தார்கள்.

என்ன கொடுமையிது ..
கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் ..மேடை மோகிகளை இப்படியா அம்பலப்படுத்துவது .. 
எனக் கவிஞர் மேல் சற்று கோபம் .. ஆமாம் பின்னே வேறென்ன..

என் கையுறையிலும் ரகசியமாக சில முகமூடிகளை நானும் சேமித்தல்லவா வைத்துள்ளேன்.

(அடடே ... நீங்களும் கூடவா..)

சரி விடுங்கள் ... கவிஞர் பிழைத்துப் போகட்டும் ..

வனம் பல ஜாலங்கள் காட்டி விரிய .. நடந்தேன். அப்போதுதான் தெரிந்தது , 
தன் "ஆரிகாமி வனத்தில் " ஆங்காங்கே சில ,கவிக் கன்னி வெடிகளையும் பாதையில் 
மறைத்து வைத்து அப்பாவி வாசகரை வீழ்த்தும் இவரின் சூழ்ச்சி. ஆம் என் காலடியிலும் 
அப்படியொன்று, வெடித்துச் சிதறி என்னை, ரத்தம் கசியக் காயப்படுத்திய போதுதான், 
அதை நானும் உணர முடிந்தது ..

ஆம் அவர் வனத்தில் புதைத்து வைத்திருந்த ..

" கட்டங்கள் " எனும் கன்னி வெடிதான் அந்த பேரதிர்வை என்னுள் நிகழ்த்தியது

சமையலறையின் தரையோடுகள்
சதுரங்க கட்டங்களாகவே
என்னைச் சுழற்றியடிக்கின்றன

மேலும்

என் கோரிக்கைகள்
சிப்பாய்களாக நின்று போராடித்
தோற்றுக் கொண்டேயிருக்கின்றன,

என

தைரியம் இழந்து வீழும்
அந்த வீட்டு ராணி ...

ராஜாவிற்கு
யாராவது செக் வைத்து விட்டால்

அவள்தான் , தன் நகைகளை வைத்துக் காப்பாற்ற

உயிர் பெற்று வருகிறாள் .

வேறென்ன , அந்த இல்ல ராணியின் மன வெதும்பலும், தியாகமும் கலந்த 
கந்தக செடிவு ,என் ஆணாதிக்கத் திமிர் எனும் பாதங்களைப் பதம் பார்த்த கன்னி வெடிதானே

ஊனப்பட்டு ரத்தம் வழியும் கால்களோடு தொடர்ந்து , தட்டுத் தடுமாறி வனத்திற்குள் நடக்கிறேன் .

தன்னுள் ரோஜாக்களின் தோட்டத்தை
மூடி வைத்திருக்கும்
காதலின் வாசத்தைச் சுமந்து வரும் காற்றில்
மயங்கிய நம் கவிஞரின் காதலி

கஸலாகவே அமர்ந்திருக்கிறாள் ..

அவளை வாழ்த்தி விட்டு .. வனம் விட்டு வெளியேறலாம் என்று எண்ணினேன் .

ஏதாவது மிருகம் தென்படலாம் என்று பயந்து , யோசித்து நடக்கையில் அது நிகழ்ந்தே விட்டது ..

ஆம்

கவிஞரின் பேனா துப்பாக்கியில் சுடப்பட்டு

" வலி பொறுக்காமல் "

தப்பி வந்த மிருகம் என்னை இப்படி , வெறி கொண்டு கடித்துக் குதறும் என 
சற்றும் நான் நினைக்கவில்லை .

கடல் உள்வாங்கிக் கொண்டு
பெருமூச்சினை விட்டது..
பறவைகள் வழி தெரியாமல் பறந்தன..

"செல்பேசிகள் தங்களின்
உறவுகளைத் துண்டித்துக் கொண்டன

மத போதகர்கள்
'அந்த நாள் இந்த நாள்தான்' என்றழ..

குடியொருவன்
கட்டுமரமொன்றைத் தயார் செய்கிறான் ..

நோவாவின் புன்னகை
வானத்தை மெலிதாகக் கீறிவிட
வலி பொறுக்காமல் அழுத மழை அமிலமாகி
பூமியைப் பொரித்தெடுத்துக் கொண்டிருக்க
அடுத்த யுகத்திற்கான விதைகள்
வேர்களினாழத்தில் அமர்ந்து
தங்களை அடைகாத்துக் கொள்கின்றன..
அவற்றின் வேண்டுதல்
"மனிதர்களில்லாத ஓர் உலகம்"

இப்படியான ..
அக்கவி மிருகத்தின் கொடூரக் கூர் பற்களின் கடியின் , வலிதாங்காமல் 
எப்படியாவது இந்த "ஆராகமி வனத்தில் " இருந்து மீண்டாகவேண்டும் எனும் 
அவசியம் மேலிட , வேக வேகமாய் நடையை எட்டிப் போடுகிறேன்.

ஆகா .. அடடா ..
இந்த வசிய வனத்தில் என் சிந்தை பிசகி ,வந்த வழி மறந்து போனது ..

ஆம் ..

இந்த கவிஞரின் "ஆரிகாமி வனத்தின் " பாதைகள் ஒவ்வொன்றும்
தொடங்கும் பாதையில் முடிவது போலவும் , முடியும் பாதையில் தொடங்குது 
போலவும், மாயம் காட்டி , மயங்கச் செய்யும் அடர்த்தி கொண்டு விரிந்து கிடக்கிறது. 
ஓர் வனத்திற்கான அத்தனை கூறுகளையும் வைத்து இந்த வனத்தைப் படைத்த , 
கவிக் காதல் காவலர் ,தோழர் முகம்மது பாட்சா தமிழ் சாறெடுத்து , மடித்து, ஒடித்து , 
ஆரிகாமியில் வானவில் ஜாலம் நிகழ்த்தும் ரசவாதம் கைவரப் பெற்றவர் என்பதை 
நான் மெத்த உணர்ந்து கொண்டேன் .

மீள்வோம் என நம்பி ,இந்த கவிஞர் முகம்மது பாட்சாவின் "ஆரிகாமி வனம்" எனும் 
மதிகெட்டான் சோலையில் உள் நுழைந்து , வெளிவரும் திசை தெரியாது 
நான் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் .

இலக்கிய வனத்துள் உலாத்தும் , விருப்பமும் ,தைரியமும் கொண்ட யாராவது , 
இந்த கவிதை அடர் வனத்திலிருந்து என்னை மீட்டு , வெளிக் கொணர உதவுவீர்களா ..

ஆனால் உங்களுக்கு ,ஒரே ஒரு நிபந்தனைதான் .எச்சரிக்கையும் கூட. 
என்னை மீட்க வந்த நீங்களும் ,இந்த "ஆரிகாமி வனத்தில் " வெளியில் செல்லும் 
வகையறியாது மாட்டிக் கொண்டால் நான் பொறுப்பல்ல.

("ஆரிகாமி வன(ம்) " உலா முற்றிற்று )

விமர்சனம் : தோழர்.துருவன்பாலா

இப்போது அமேசான் கிண்டிலிலும் கிடைக்கிறது

https://www.amazon.in/dp/B081X83LYG

No comments:

Post a Comment

Popular Posts