Thursday, 19 December 2019

விடுபட்டக் கவிதைகள் 14

அதிகமாகச் சிரிக்காதே!

காமம் போர்த்திய கண்களைக் கழற்றி
அலசிக் கொண்டிருந்தான்
நிர்வாணமானாள்

மெதுவாக நட!

கால்கள் வெட்கம் சேர்த்துக் கட்டப்பட்டது...

அதிகம் பேசாதே!

அசிங்கமான வார்த்தைகளை அணிந்து கொண்டவள்
பணிவிடைகளைச் செய்தாள்...

மனம் கோணாமல் நடந்து கொள்!

சமையலறை அவள் கதையைக்
கடைசி வரை எழுதிக் கொண்டிருந்தது....

பொறுமையில் பூமாதேவியாக இரு!

பூமிக்குள் புதைந்து போனாள்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
28/11/2019

காந்தியை
ஊடகச் செய்திகளில் அடிக்கடிப் பார்க்க முடிகிறது
அவர் மீதான குற்ற வழக்கு
எண்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன..
கோட்சேயின்
சிறைக் கதவுகள் திறக்கப்பட....
காந்தி நிமோனியாவில் இறந்திருக்க வாய்ப்புகளுண்டு
அமேசானில் கிடைக்கும் அவரது
ஊன்று கோல்களை அரசு அதிகமாக வாங்குகிறது...
விழும் போதெல்லாம்
அவைதான் அவர்களை நிமிர்த்துகின்றன....
கோட்சே தேச பக்தர் என்றால்
அவன் கையிலிருந்த இஸ்மாயில் மட்டும்
ஏன் தீவிரவாதியானான்!

- முகமது பாட்சா*
28/11/2019

விடுகதையொன்று
முடிக்கப்படாமல் தொடர்கிறது
துறட்டிக்கோலிடம்தான்
ஆடுகளின் நேசம் அதிகமாக இருக்கின்றன...
விழுந்து கிடக்கும் பழத்திற்குத் தெரியாது
தானொரு விருட்சமென்று...
கூதையை உடுத்திக் கொண்டு நடக்கிறவனே
வீரனாகிறான்...
அச்சம் என்பது ஒரு போர்வை...
அரசனென்றாலும் ஆய் போவது வாயிலில்லை...
நாய் நாற்காலியில் உட்கார்ந்தாலும்
நக்கித்தானே குடிக்கிறது
கேள்விகளைப் பெட்டியில் பூட்டியவன்
கால்களில் விலங்கை மாட்டிக் கொள்கிறான்...
ஆச்சரியக்குறி
அவசியத்திற்கு மட்டுமானது...
அடிக்கடி வாய் பிளந்தால்
ஆண்டை கூட அங்குதான் சிறுநீர் கழிப்பான்...
விடையில்லாதவையெல்லாம்
விடுகதையேயில்லை.

- முகமது பாட்சா*
29/11/2019

நீ வாசிக்கும்
புதினத்தின் மூன்றாம் பக்கத்தில்
அடிக் கோடிட்ட வரியில்
மறைந்திருக்கும் என் நிழல் பெயரில்
ஒரு முத்தம் வரைந்திருக்கிறாய்

7 ம் பக்கத்தில் எதுவும்
எழுத வில்லையென்றாலும் மடித்து வைத்திருக்கும்
மூலை நாம் சந்தித்த திகதியல்லவா!

21 ம் பக்கத்தைக் கிறுக்கி வைத்திருக்கிறாய்
பிறகுதான் தெரிந்தது
அதிலுள்ள வசைமொழியொன்று உன் மீது
கோபத்தில் பிரயோகித்தது...

குட்டிப் போடுவதாய்ச் சொன்ன மயிலிறகு
40 ம் பக்கத்தில் புன்னகையை
நகலெடுத்து அழ வைக்க விரலாகக் கோதுகிறேன்...

101 ம் பக்கத்தில்தான் பார்த்தேன்
எனக்குத் தராமல்
நீயே வைத்துக் கொண்ட நீண்ட கவிதையை...

இந்தப் புத்தகத்தில் நீ புரட்டியிருப்பது
காதலின் பக்கங்களென்பதால்
முகர்ந்து பார்க்கிறேன்..
புதினம் முழுவதும் உன் வாசனை !

- முகமது பாட்சா*
29/11/2019

புனிதம் என்று சொல்லி
இந்தக் கடலை பலப்படுத்திவிடாதீர்கள்...
உப்பு வியர்வையை முகர்ந்த வானம்
துப்பும் எச்சிலை மழையெனக் கொண்டாடுகிறோம்...
மீன்களின் எச்சம் நிறைந்த நீரை
சுத்தமெனப் போற்றிச் சுடரொளிக் காண்கின்றோம்...
கடல் மிச்சம் வைத்த பெருமூச்சையும்
சுகம் வீசும் காற்றென்று கொண்டாடுவோரே...
ஆதி மூலம் பார்த்து மனிதர்களை
அடுக்கும் சாத்திரங்கள் தீட்டென்று ஒதுக்கினாலும்
கால்கழுவும் நீரைக் கழற்றி வந்த நதியில்
தோஷம் போக்குகிறாய்...
நீர் மூலம் பார்க்க வேண்டாம்...
கிராமத்தியின் தூமையுலர்த்திய துணியின் வீச்சம்
கடல் வாசனை என்பதையாவது காண்!

- முகமது பாட்சா*
02/12/2019

காதல் என்று எழுதிவிட்டு
எப்படிப் படித்தாலும் இனிக்கத்தான் செய்கிறது!

நீ அடிக்கடிச் சொல்லும்
அந்த 'ம்' கள்
உதடுகளை அழுத்தமாகவே முத்தமிடுகின்றன!

நீ சிரிக்கும் போது
கண்களை அவசியம் கவனிக்கிறேன்
அதற்கு நடிக்கத் தெரியாது!

பொய்களைச் சகித்துக் கொள்
கற்பனையென்றாலும்
கனவுகளில் அவை திமிறி எழுந்தவை!

- முகமது பாட்சா*
02/12/2019

சுவரென்பது அரண் எனச் சொல்வது
பொய்மையின் கூற்று...
காடுகளுக்குள் நுழைந்த சுவர்கள்
நாடுகளைப் பிரிக்கின்றன...
வேதங்கள் சுவர்களாகி மனிதர்களை உண்ணுகின்றது
வர்ணத்தின் சுவர்கள்
வரவேற்பறையில் நுழைந்த பிறகு
சாணக்கியம் பிரித்த சொல் தாழ்த்தப்பட்டவன்...
இடைச்சாதியென்பதும்
இங்கு இடுப்பெலும்பின் புற்று நோய்தான்...
உயரம் எழுந்த சுவருக்குப் பின்னால்
ஒளிந்திருந்த சாதியத் திமிர்
பலிக் கேட்டிருக்கிறது 17 உயிர்களை...
ராஜாவாக இரு
பல்லாக்கு தூக்குகிறவன் பாதியில் விட்டுப் போனால்
நீயும் கூடப் பரதேசிதான்.

- முகமது பாட்சா*
03/12/2019

நீ மழையைப் பற்றி எழுதிய
கவிதையில்
அடிக்கடி நனைகிறேன் ஆனந்தமாக!

நீ மழை என்பதால்
எனக்குக்
குடையே தேவைப்படவில்லை!

உன் புன்னகையின் சாரலில்
நான்தான்
அடிக்கடி பூத்துக் குலுங்குகிறேன்!

உன் மேகம் மட்டும்
எப்படி
சப்தமில்லாமல் இடிக்கிறது?

கண் சிமிட்டிய மின்னலில்
குருடான பிறகுதான்
பார்வையே கிடைத்திருக்கிறது!

- முகமது பாட்சா*
03/12/2019

மழையைப் பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தவன்
அணைந்து விளம்பரத்திற்கு மாறினான்
தலைவலிக்குச் சூடாகத் தேநீர் ஆர்டர் கொடுத்தேன்
அடுத்த மேசையின் பஜ்ஜி வயிற்றைக் கிள்ள அதிலும் இரண்டு
சட்டினி சுமார்தான் அவள் என்னையே பார்த்தாள்
அவளிடம் ஒருவன் பூவைக் கொடுத்துவிட்டு எதையோ பேசினான்..
சார் வேற எதாவது - சப்ளையர்
போதும் என்று சொல்லிவிட்டுத் திரும்பினால் அவளில்லை
டிப்ஸில் மிளிரும் புன்னகை இதமாகிறது
வெளியே மழை இன்னமும் கொட்டிக் கொண்டேயிருந்தது...
குடையை விரித்த போது
அவள் தெருவெல்லாம் தூறிக்கொண்டேயிருந்தாள்.

- முகமது பாட்சா*
03/12/2019

சில வார்த்தைகளோடு
கை கோர்த்தே நடந்து செல்கிறோம்...
கண் முன் நடந்த விபத்திற்கு
ஒரு 'ச்' போதுமானதாக இருக்கிறது...
எரிந்து கிடக்கும்
பிணத்தைப் பார்த்துவிட்டால்
'என்ன கொடுமை' மட்டும் போதும்..
அரசின் அதிகார மீறல்களுக்கு
'அவர்கள் அப்படித்தான்'
முத்தாய்ப்பாக
போராடுபவர்களைப் பார்த்தால்
'வேலை வெட்டி இல்லாதவர்கள்'

- முகமது பாட்சா*
04/12/2019

மரம் என்றார்கள்
மகிழ்வுடன் தலையாட்டிக் கொண்டிருந்தேன்
மரம் என்றார்கள்
பூக்களைப் பூத்து வாசம் கூட்டினேன்
மரம் என்றார்கள்
காய்களையும் கனிகளையும் கொடுத்தேன்
மரம் என்றார்கள்
ஒரு நாள் காற்றில் விழுந்தேன்
இப்போது நாற்காலி,
வாசற்கால், மேசை என்றெல்லாம் அழைக்கிறார்கள்
நான் இன்னமும்
மரமாகத்தான் இருக்கிறேன்.

- நட்புடன்.....முகமது பாட்சா*
04/12/2019

நண்பர் ஶ்ரீவத்ஸா அவர்களின் உடனடி ஆங்கில மொழியாக்கத்தில் :

They said the tree.
I kept nodding
happily.

They said the tree.
I bloomed flowers
and added fragrance.

They said the tree.
I gave fruits
raw and ripe.

They said the tree.
One day I fell
in the wind.

Chair and table they now say
and also doorway.
As just the tree
I still stay.

குதிரையின் முதுகில் எறும்பின்
பயணம் போல் நகர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கை....
கடலை குடித்துவிட்ட காகம்
கற்பனையில் பறக்க மறந்துக் கூட்டிலுறங்க...
அலைச் சர்ப்பம் ஆடியசைந்து ஏறும் அம் மரத்தில்
அலறும் முட்டைகளின் வெதும்பல்
இதமென எழுதிவைக்கிறது காலப் பரீட்சயம்...
சுகமென்ற வார்த்தையை விழுங்கியிருக்கும்
அசூயையை எல்லோரும்
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்...
துளிருக்குத் திரும்பாத
சருகிற்குத்தான் தெரியும் மீட்க முடியாதது
காலமென்று...

- முகமது பாட்சா*
05/12/2019

என்னை நான்
நிரூபித்துக் கொண்டேயிருக்கிறேன்...
மௌன வெளியில் உலாவும் போது
சுற்றுச்சுவர்கள் உயரம் எழும்பி விடுகின்றன...
உடைத்துவிட்டு வெளியேறுகிறேன்...
இரவுகளின் எழுதாத பக்கங்களில் நுழைந்து
விடியலைத் தொடும் போது
எனக்குள் நொறுங்கிப் போன கனவுகள்
வீடு கட்டத் தொடங்குகின்றன...
நான் நான்தான் என்பதற்கு
என் புன்னகை ஓடிவந்து உதவி செய்கிறது...
சில கைக்குலுக்கல்களில் என்னை
நானே அறிமுகப் படுத்திக் கொள்கிறேன்...
மனைவிக்கு முத்தம்
உறவுகளுக்கு நல விசாரிப்புகளென
விரிகிறது என் பெரும் முயற்சி...
பிள்ளைகளிடம்
பாசத்தைக் குழைத்துப் பிம்பத்தைக் கடத்துகிறேன்...
எதிரிக்கும் எதிர்வினைகள்
நட்பிற்கும் நல வெண்பாக்களென எழுதுகிறேன்...
இந்தக் கவிதை கூட இருப்பை
அழுத்தமாகவே சொல்வதற்கும் இருக்கலாம்....

- முகமது பாட்சா*
05/12/2019

பிறப்பின் மீது பாய்கின்ற அம்புகளுக்கு
என்ன பெயரிடப் போகிறீர்கள்?
வணக்கத்தின் வாசலை
கடவுள் எப்போதும் அடைத்தே வைத்திருப்பானா?
சரஸ்வதி
தன் வீணையில் ஒற்றை நரம்பை மட்டுமா
மீட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஒதுக்கங்களைச் சுத்தம் செய்வதற்கும்
ஓர் இனம் தேவையா?
கடவுள் பல்லாக்கில் ஏறினால் சரி...
பண்டாரங்களையும் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?
நிலமகள் எப்போது
தன்னை விலைமகள் ஆக்கிக் கொண்டாள்?
மனிதன் சாமியாகிவிட்டால்
கடவுளுக்கேன் கற்பூர ஆராதனை?
கேள்விகளையெல்லாம் தூக்கிச் சுமந்தவன்...
விடை தேடுவதற்கு
கல்விக் கூடத்தில் விளக்கேற்றிக் கொண்டான்...
அடங்க மறு என்பதே ஆயுதம் என்றான்...
எழுவதற்குக் கல்வியை உடுத்த சொன்னவன்...
கருப்புக் கோட்டோடு நிமிர்ந்த போது
வர்ணத்தின் வாசல் ஆடத்தான் செய்தது!

- முகமது பாட்சா*
06/12/2019









No comments:

Post a Comment

Popular Posts