பிழிந்து வைத்த மௌனத்தை
உலர்த்துவதற்கு
நிழல் மரமொன்றைத் தேடுகிறேன்...
கரைதலில் சுகம்காணும் காகம்
கால்களின் கீழ்
மௌனத்தைப் பிடித்து
வைத்து சிதைத்துக் கொண்டிருக்கிறது!
பூனையின் தவத்தை
எலிகள் மௌனம் போர்த்தியே
உலர்த்துகின்றன!
சாலைகளில் பூசப்பட்ட மௌனத்தை
மெல்ல அவிழ்க்கிறார்கள்
பசி
மௌனத்தைத் தின்று கதறுகிறது!
- முகமது பாட்சா*
31/05/2020
பொய்களை
வீசிக் கொண்டிருக்கிறார்கள்
அது
நகரத்தைத் தொலைத்தவர்களுக்கு
அரண்மனைகளைக் கட்டிக் கொடுக்கின்றது...
சிதைந்த உடல்கள்
மண்ணையுதறிவிட்டு
மகிழ்ச்சியுடன் எழுந்து செல்கின்றன...
சுயச் சார்பு இந்தியாவின்
கொட்டேஷனுக்குள்
திருடர்களின் கூட்டம் படுத்துறங்க...
வேலை வாய்ப்புகள் உருவாகிவிட்டதாக
பிரதமரின் உரை நிகழ்கிறது...
ஆனாலும்
வெளியில் வராதீர்கள்
கிருமிகள் எங்கும் பரவியிருக்கின்றன!
நீங்கள்
பொய்களை வாங்கிப் பொய்களையே ருசித்து
மகிழ்வோடு இருங்கள்!
மாஸ்க்கு கட்டாய அவசியம்
வாயை மூடிப் பேசவும்!
- முகமது பாட்சா*
30/05/2020
பசித் தின்று போட்ட மிச்சம்
சாலையில் உதிரியாகக் கிடக்கிறது...
போர்வையைப் போர்த்துகிறான் மகன்
அம்மாவுக்குக் குளிரும்!
அம்மாவொருத்தி
கர்ப்பப்பையைக் கைகளில் தூக்கிக் கொண்டு
சாலையில் ஓடுகிறாள்
ஆம் அவள் பித்துப் பிடித்தவள்தான்
உங்கள் அகந்தையால்
தன் சொத்தைத் தொலைத்தவள் !
யாருடைய பிணமென்று தெரியவில்லை
யாரோவொருத்தி அழுகிறாள்
அவள் பிள்ளையின் முகம் அவனுக்கு!
முகம்மதுவின் தோளில்
ராம் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான்
நீங்கள் ஏன்
அவனைக் காப்பாற்ற வில்லை?
உங்கள் கோவில்களில்
கொலுவிருக்கப் போவது எந்த ராம்?
- முகமது பாட்சா*
29/05/2020
ஓடியோடி செய்திகளைப் பறித்துக்
காமிராவிற்குள் கருணையைக்
கொலை செய்வது வாடிக்கையாகிறது!
நிகழ்காலம் என்பதைப் பற்றிய பசி
அதிகாரத்தின் அட்டைகளுக்குப் புரிவதில்லை!
அவர்களோதும் தோத்திரங்கள்
முதலைகளுக்குச் சோத்திரங்களை விழுங்கிக்
குபேர லோகம் விரிகிறது!
அகராதித் திருத்துகின்றவன்
கருணையைக்
கொலையென்றே மொழி பெயர்க்கிறான்!
எல்லைகளை வகுத்த கோடுகள்
புலம் பெயர்கிறவனின் கால் வெடிப்புகளில்
தினமும் அழுது கொண்டிருக்க...
தீப்பிடிக்கும் குடிசைகள்
சாதாரணனின் குறியீடென்று யாருக்குத் தெரியும்?
யன்னல்களை அடைத்துவிட்டு
சுத்தமான காற்றைச் சுவாசியென்பவனின்
கால்களுக்குத் தீவைத்துவிட்டு
இதுதான் ராஜ நடையென்று சொல்லும் நாளில்
சுத்தமான காற்று
புவியின் சுகசீவனத்தில் பரவி விரவலாம்!
- முகமது பாட்சா*
27/05/2020
முகத்தைத்
திரையிட்டு மறைத்திருந்தாள்!
கண்களை எங்கோ பார்த்திருக்கிறேன்!
என்னிடம் பேசிவிட்டுதான் நகர்ந்தது
மொழி விளங்கவில்லை!
அச்சம் பூசிக் கொண்டு எல்லோரும் நடக்கிறார்கள்
அம்மாவை தூக்கிக் கொண்டு நடக்கிறவன்
தாயின் சூட்டைக்
கடத்திக் கொண்டிருந்தான்...
நகரம் தொலைந்து விட்டதாக
செய்திக் குறிப்பொன்றில்
நாடோடிகள் கையொப்பமிடுகிறார்கள்!
உலகம் ஒரே நாளில்
வௌவாலாக மாறிவிட்டது!
எல்லோரும் தலைகீழாகத் தொங்குகிறார்கள்!
வாகனப்புகையொன்று
வீட்டிற்குள் முடங்க உத்திரவிட்டுச் செல்ல
வீடேயில்லாதவன் கேள்வி
மரணத்திற்கான பள்ளத்தாக்கு இதுதானா?
தொலைவிலவள் அமர்ந்திருக்கிறாள்
கால்களை பார்க்கிறேன்...
இரத்தம் வழிந்து கொண்டிருந்தது...
கண்கள்
இன்னமும் ஏதோ பேசிக் கொண்டேயிருக்கிறது!
- முகமது பாட்சா*
26/05/2020
#ரமலான்_2020
நோன்பின் 30 நாட்களும்
விரதத்தின் அமைதியுடன் கடந்து செல்கிறது!
பள்ளிவாசல்களின் விரதம்
இன்னமும் முடியாததால் பெரு நாளின்
சங்கை மிகும் தொழுகைகள்
திக்ரின் தியானத்தில்!
"அல்லாஹூ அக்பர்! அல்லாஹூ அக்பர்!
லா இலாஹ இல்லல்லாஹூ
அல்லாஹூ அக்பர் ! அல்லாஹூ அக்பர்!"
குத்பாவிற்கான அழைப்போசை
வீடுகளில் நிறைந்து
அர்ஷின் வானத்தை எட்டிச் செல்கிறது!
பேரன்பின் பெருமிதம்
தன்னையே வளைத்து நதியாகவோட...
கைகளை ஜக்காத் எனும்
சானிட்டைசரால் சுத்தம் செய்து கொண்டவர்கள்
ஏழைகளின் பசிகளை
துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஏழ்மை என்றும்
ஒருவருக்கே நிலைத்ததல்ல....
கொடுக்கும் கரங்களில்தான் நிலைக்கிறது
இறைவனின் மஜ்லீஸ் வாசனை!
நோன்பு பிடித்தலென்பது பட்டினியல்ல...
சுவனத்திற்கான திறவுகோல்!
தொழுகைக்கு முன்பே
பித்ரா தருமத்தை கொடுத்துவிடுங்கள்!
சோதரர்களின் வீட்டு அடுப்புகளும்
சுவாசிக்கட்டும்!
முஸபா செய்வது
இப்போது இடை நிறுத்தலென்றாலும்
முபாரக் சொல்வதை
யாரும் தடை செய்துவிட முடியாது!
வாருங்கள்
வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வோம்
இனிய ரமலான் நல் வாழ்த்துகள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
24/05/2020
விவாத முரண்
என்னைப் பற்றிய சில குறிப்புகளை
கைகளில் வைத்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறார்கள்
படிமத்திற்குள் நுழைந்த கதாப் பாத்திரங்கள்!
வினாக்களின் முரண்களில்
விடயங்களை
உலர விட்டுக் கொண்டேயிருக்கிறோம்!
யன்னலைத் திறந்தும்
தீராப்புழுக்கத்தில் நடந்தேறிய சம்பவங்கள்
யாக்கைகளைக் கீறிக் கொள்கிறது!
மன்னிக்கவும்!
அவர்கள்
உங்களைப் பற்றியும் கூடச் சில குறிப்புகளை
கைகளில் வைத்திருக்கிறார்கள் என்பது
பிறகுதான் தெரிய வந்தது!
- முகமது பாட்சா*
23/05/2020
நீங்கள்
இரவை இரவென்றே
சொல்லி வருகிறீர்கள்!
நாங்கள்
விடியும் என்று
எப்போதோ மாற்றிவிட்டோம்!
- முகமது பாட்சா*
அச்சம் சூழ் இரவு!
உருவகமில்லா ஓர் இரவுக்குள் நுழைந்து கொள்கிறோம்
அரூபம் வார்த்தைகளையடுக்கி வசமாய் நம்மைச் சிறை வைக்கிறது!
கோடுகளைப் போடுகிறவனெல்லாம் லட்சுமணன் என்றால்
சீதையின் சிறைவாசம் நியாயமாகிவிடும்!
அரக்கு மாளிகையிலிருந்து தப்பிக்க முதலில் வழி வகுக்க வேண்டும்...
மூளச்சாவு அடைந்த பிறகு சொல்லும்
வாழ்வதற்கான வழிகள் காதுகளுக்குள் நுழைகின்ற பெரும் மலைப் பாம்பு!
உருவகமில்லா என்பதை
அச்சம் சூழ்ந்த என்று கூடத் திருத்திக் கொள்ளலாம்!
- முகமது பாட்சா*
22/05/2020
#திக்ர்
இரவின் மொழி
கோளங்களை
மெல்ல அசைத்துக் கொண்டிருக்கிறது!
அண்ணல் நபிகளின் தேடல்
தொழுகையைக் கொண்டு இரவை நகர்த்த....
நட்சத்திரங்களைச் சாட்சியாக வைத்தவன்
நிலவின் வழித்தடங்களைக்
உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்கிறான்!
பாதைகளைப் போட்டவன்
நமக்குக் கொடுத்த முதல் பயணக் குறிப்பே....
" நபியே! நீர் ஓதுவீராக!"
புனித இரவின் மடியில்
தஸ்பீகளின் தாளச்சப்தம் தொடர்கிறது
தொழுகையின் இருக்கைகள்
புனிதக் குரானை
மனனமாய் மடியில் வைத்துத் தாலாட்ட....
ஜக்காத்தை அருளாக்கியவன்
கைகளை
அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளச் சொல்கிறான்!
கொடியது பசி!
- நட்புடன்..... முகமது பாட்சா*
21/05/2020
கருவறையிருட்டை
கண்கள் உணரவில்லை
இதயத்தில் வெளிச்சம்!
*
முகமது பாட்சா
காதறுந்த தேசம்
விற்ற முதலில்
மிச்சமிருப்பது வாரறுந்த செருப்பு!
காதறுந்த ஊசியில்
நூல் நுழைந்திருப்பதாகக் கற்பனை
செய்து கொள்ளுங்கள்!
ஒட்டுப் போடும் போது
தேசத்தின் புன்னகையைக் கீழே எழுத
மறந்து விடாதீர்கள்!
புரட்சிப்பாடலைப் பாடுவதாக இருந்தால்
'நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்'
சரியாக இருக்கும்....
' சாரே ஜஹான் சே அச்சா'
எப்போதோ காலாவதியாகிவிட்டது!
சூரபத்மன் கதைகளை
சூட்கேசில் வைத்துப் பூட்டி விடுங்கள்...
வேலாயுதத்தை
அவன் கையில் கொடுத்துவிட்டல்லவா
கடவுளென்று கும்பிடுகிறீர்கள்!
அந்தாதி எழுதும்
புலவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
இனி மேலாவது சந்தமுள்ள பாட்டிற்குப் பதிலாக,
சத்தமுள்ள பாட்டுகளாக எழுதுங்கள்...
கைகளைக்
கட்டி வைத்துள்ள இந்த தேசத்தில்
காதல் பாடல்கள் நெருடத்தான் செய்கின்றன!
- முகமது பாட்சா*
17/05/2020
கனவின் மொழி நீளமாக நகர்கிறது
ஆளுக்கொரு எழுத்துகளால்
வார்த்தைகளைக் கட்டமைக்கிறார்கள்...
நீளம் கருதி
சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பில்
சில பகல்களும்
இரவுகளும் தீப்பிடித்து எரிகின்றன...
தூக்கத்தைக் கட்டிவைத்து
நீளும் வார்த்தைகளின் பிரகாசத்தில்
மிளிரும் நடனசைவுகள்
காயும் வயிறுகளில் கஞ்சி வார்ப்பதாக
புலவன் பாட்டிசைக்கிறான் ...
வேறு வழியில்லை எல்லோருமே
இப்போது கனவை
பிய்த்துத் தின்னத் தொடங்கி விட்டார்கள்!
- முகமது பாட்சா*
16/05/2020
இப்போதெல்லாம்
அவள் அவள் மாதிரியே இல்லை...
அடிக்கடி முகத்தைக் கழுவிக்கொள்கிறாள்
கைகளைக் கீறிவிட்டு
ஏதோ கடித்துவிட்டதாகப் பினாத்துகிறாள்...
நடக்கும் போது ஏதோ
ஒட்டிக் கொண்டதாகத் தேய்க்கிறாள்...
சில நேரங்களில்
வீட்டிற்குப் போக வேண்டுமென அழுகிறாள்...
இதுதான் அவள் வீடு என்றால்
சுற்றிலும் பார்த்துவிட்டு
நீங்களெல்லாம் யார் என்று அச்சம் கூட்டி
வியக்கிறாள்...
இவளை வெட்டிப் போட்டிருக்கும் பிழையை
அழிக்கப் பார்க்கிறோம்
அது துளிர்விட்டு
அடுத்த தெருவிலும் கிளை விட்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
15/05/2020
தாயம் உருள்கிறது
இரவும் பகலும்
நட்சத்திரங்களை உதிர்க்கின்றன ,
காட்சிகள் தானாகவே
மரத்திலேறிக் கொள்கிறது!
பிணங்களிடறி விழும் மழைத்துளிகளில்
என்ன வாசனை இருக்கும்?
வழித்தடங்கள் வேர்வையில் குளிக்கின்றன..
நச்சரவங்கள் வழிவிட்ட பாதைகளில்
மின்சார ரயில்கள்
நாக்கை நீட்டிப் பாய்கின்றன!
கண்ணீர்த்துளிகளைக் காயப்போட்டுக்
காயப்போட்டுக் கற்களாகின்றன!
வருத்தம் செய்திகளாகி
நாற்புறமும் கால் நீட்டிப் படுக்க,
நாற்காலி அதிகாரம் தாயம் சுழற்றுகிறது!
கவர்ச்சிக் கன்னி
செய்திகளில் உருள்கிறாள்....
- முகமது பாட்சா*
14/05/2020
வேதாளம் சொல்லும் கதை
'அரசன்
மாடத்திலேறி காட்சி அருள் பாலிக்க...
தேசம் வழக்கம் போல்
அண்ணாந்து பார்க்கிறது!
நீங்கள்தான் இந்தத் தேசத்தின் தூண்கள் என்று
மகிழ்ந்து கையசைக்கிறான்...
உலகமே நம்மைப் பார்த்துதான் வியக்கிறது
என்று கைகளைத் தட்டுகிறான் !
பட்டினிச் சாவுகளைக்
கிள்ளி எறிந்துவிட்டதாகச் சொன்னவன்...
வறுமையோடு
வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று
அறிவுறுத்தினான்..
கைகளை அடிக்கடியாட்டி களிப்புற்றான்!
அண்டை நாடுகள்
சில நாட்களில் நமது நாடாகும் என்றவன்
உலகமே நம் அதிகாரத்தின் கீழ்
வந்துவிடும் என்றெல்லாம்
உடைந்த வீணையெடுத்து வாசித்தான்...
உங்கள் பழைய சங்கிலிகளை அவிழ்த்துவிட்டு
புதிய சங்கிலிகளை
மகிழ்வுடன் பூட்டிக் கொள்ளுங்கள்
இப்படிக்கு
உங்கள் மீது அக்கறை உள்ளவன் என்பது
மக்களுக்களித்த மகிழ்ச்சியான சேதி'
மீண்டுமொரு
புதிய கதையுடன் சந்திப்பதாக விடை பெற்றவன்
பொய் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு
பறந்து செல்ல...
கதை கேட்ட விக்கிரமாதித்தனின் மண்டை
விடையறியாமல்
சுக்கு நூறாக உடைந்து கிடந்தது!
- முகமது பாட்சா*
14/05/2020
வயிற்றில்
ஈரத்துணியை நன்றாகக் கட்டிக்
கொள்ளுங்கள்
கால்களில் கிழிந்த சாக்குகளை
மாட்டிக் கொள்ளுங்கள்
பசி வந்தால்
பிச்சையெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
வழியில் இறப்பவர்களை
அங்கேயே புதைத்துவிடுங்கள்...
உறங்க இடம் இல்லையெனக்
கவலை வேண்டாம்...
கற்பனையில் மாளிகைகளைக்
கட்டிக் கொள்ளுங்கள்...
ஆனால் ஒன்றை மட்டும்
மறந்து விடாதீர்கள்...
நீங்கள் எப்போதும் உச்சரிக்கவேண்டிய
சுலோகம் ஒன்று உண்டு
ஹமாரா தேஷ்! சப் மேரா பாரத்!
- முகமது பாட்சா*
13/05/2020
இலையின் நுனித்தொட்டு
ஏறிக் கொண்டிருக்கும் எறும்பிற்கு
மரணத்தைப் பற்றிய
சிந்தையில்லை!
நீரிலுதிர்ந்த முதிரிலை
மரணத்தைப் பற்றிய
பெரும் உரையாடலை நிகழ்த்த
சென் பாடலொன்றில்
தேநீரின் தியான வாசனை!
அகம் பொருள் இன்பம்
சுயம் கோர்த்த பயணம் , இடம்
பொருள் ஏவலில்
அச்சம் சூழ் அகால அரூப
ஆவியாகும் மரணத்தின் நிறம் மண்!
- முகமது பாட்சா*
12/05/2020
#திக்ர்
எல்லோரும்
சில கோடுகளை வரைகிறார்கள்,
சில புள்ளிகளைச் சேர்க்கிறார்கள்...
அவை வார்த்தைகளாகி,
மொழிகளாகிக் காலத்தைக்
கட்டுக்குள் கொண்டு வருகின்றன...
கடலாக மாறும் போது
காலம் படகாக நீந்துகிறது!
நாம் மீனவனாகிறோம்...
வனமாகும் போது பறவைகள்,
விலங்குகள்
எனப் பெருகி மழையாகிறது...
நாம் விறகுகளை வெட்ட அது நகரமாகிறது!
களமாகும் போது
எழுத்துகள் ஆயுதங்களாகின்றன!
இப்போது எங்கும்
கோடுகளும் புள்ளிகளுமே நிறைந்திருக்க
காலம் நம்மைத் தின்று
துப்பியிருக்கிறது!
அதன் மிச்சத்தை ஒருவன் மரணம் என்கிறான்
சூஃபியொருவர் அதுதான்
ஜனனம் என்று சொல்கிறார்....
திக்ரில் தஸ்பீக்கள் உருள்கின்றன!
- முகமது பாட்சா*
11/05/2020
கண்ணீர்த் துளியை வரையும் தூரிகை
அழுதுவிட்டு நகர்கிறது....
வறுமை எப்போதுமே காட்சிப் பொருள்!
சிறகுகளை வரைந்த பிறகுதான் தெரிகிறது
பறவைக்கு
நகங்களை வரையாதது...
உவமைக்குள் ஓடிவரும் நாய்களுக்கு எப்போதுமே
வாலாட்ட மட்டுமே தெரிகின்றன!
நிஜம்
அருவெறுப்பில் ஒதுங்கிக்கிடக்க...
வாகனத்தைத் துடைத்துவிட்டு
காசு கேட்கும் சிறுமி
வயிற்றைத் துடைத்துவிட்டுச் சுருண்டு கிடக்கிறாள்!
பசியைப் பற்றிப் பேசாதவன்
தேநீர்க் கடையைப் பற்றிக் கதை எழுதுகிறான்...
மிதக்கும் ஆவி
உருவம் கொள்ளாது அலைகிறது!
- முகமது பாட்சா*
10/05/2020
கழுகுகள் வட்டமடிக்க
அதன் நுண்புலனுணர்வுகளில்
முக்கியச் செய்திகள்
இணைக்கப்படுகின்றன!
இரவு கந்தலாகக் கிழிந்திருக்கிறது...
நெய்யாத துணியை
நெய்துவிட்டதாக அரசன் களிக்கிறான்...
ஆண்டைகளின் ஆமாம் என்பதில்
கறிச் சோற்றின் வாசனை!
புலம் பெயர்தல் புலன்கள்
பெயர்தல் என மொழியாக்கம் செய்யப்பட
வீதிகளையே கூலங்களாக
அள்ளி வாருகிறார்கள்!
சோகப்பாடல் பாடுபவனின் இசை
தண்டவாளங்களில் சிதறலாய் கிடக்க
துந்தனாக் கருவியின் நரம்பில்
விரல் மட்டும் உதிரத்துடன்
மீட்டிக் கொண்டிருப்பது தேசிய கீதம்!
- முகமது பாட்சா*
09/05/2020
மது
ரோமானியத்தின் ஒரு சொட்டு அழுகை
என்றவனைச் சிலாகிக்கிறேன்...
காலத்தின் கையில்
ஒரு கோப்பை
எப்போதும் வழிந்து கொண்டேயிருக்கிறது...
டையோனிஸஸின் ஏம்ப்ரோ மட் பாண்டங்களில்
ஊறிக் கொண்டிருக்கும்
புராணக்கதைகளின் பெர்ரி நுரைத்தல்...
மகிழ்ச்சியான தலைவலி!
மாய ஆவிக்குள் நுழைத்துவிடு பிதாவே!
மரணத்தை வாங்க வரிசையில் நிற்கிறார்கள்...
மதுவையும் மாதுவையும்
மடக்கி வைத்துக் கொள்கிறவன் ஆண் விபச்சாரி!
கஜானாவை நிரப்பும் களவாணிக்கு
காய்ந்து கிடக்கும் சட்டிகள் கருப்பானவை!
கல்லா நிரம்புமென்றால்
கொரானாவையும்
ஊசிகளிலேற்றி விற்பார்கள்...
ஊறலுக்குள் எப்போதும் இருங்கள் மக்களே...
'போதை என்றும் சுகமானது'
எம்மாட்சி உங்களையே அருந்துகிறது!
- முகமது பாட்சா*
07/05/2020
இப்போதெல்லாம் கவிதைகள்
அவ்வளவு அழகானதாகத் தெரியவில்லை...
மூச்சை மூடிவைத்து
முகத்திரையில் வார்த்தைகள் நெளிய...
நானும் சில வார்த்தைகளை
கைகளையுதறி எடுத்து வைக்கிறேன்....
ஏளனமாகப் பார்த்துவிட்டு
தன் நடையைக் கட்டுகின்றன...
உதிர்ந்து கிடக்கும்
வேப்பம் பூக்களில் இரவு வாசம் கவிதை...
ஒருவன் மல்லிகை மோகினி
நகர்வலம் வருவதாக அச்சம் கொள்கிறான்...
நாடோடியின்
நாலாந்தர வார்த்தைகள் இவையென
சிலர் நகர்ந்து செல்கிறார்கள்...
விதைகளுக்காக
உயிர்களையிறைத்த பறவைகளெனப்
பரிதாபம் கொள்பவன்
தன் வயதைத் தொலைத்து
வாசலில் யாரையோ எதிர் நோக்குகிறான்...
ஓர் அம்மாச்சி
கூட்டி வாரி வார்த்தைகளைப் பக்குவம் செய்கிறாள்
வேப்பம் பூக்கள் கவிதையாகின்றன!
- நட்புடன்.... முகமது பாட்சா*
05/05/ 2020
கட்டங்கள் வரைந்து
தள்ளியே நிற்கிறது வாழ்க்கை...
இடும்பை வானத்தில்
இளம் பிறை பறவையைப் போல்
நகர்ந்து செல்ல...
முடங்கிக் கிடக்கிறது முதலில்லாக் கனவு!
துன்பத்தின் நிழல்
பூனையாக நடந்து செல்ல
கருடன் பறப்பது
கன்னத்தில் போட்டுக் கொள்ளவா?
- முகமது பாட்சா*
03/05/2020
ஒரு ரொட்டித் துண்டு என்பது
ஒரு யுகத்தின் கனவென்று உங்களுக்குத்
தெரிவதில்லை...
நாங்கள் இன்னமும் அதைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறோம்....
எங்கள் கனவுகளின் நிழலை நாங்கள்
ருசித்ததில்லை...
உங்கள் வீடுகள் எங்களின்
நடைபாதை கதவுகளை எப்போதாவது
தட்டிப் பார்த்திருக்கிறீர்களா?
உங்கள் அறைகளின்
குளுமையும் வெட்பமும் அறியாத
எங்களின் ஆடைகளுக்கு ஆயிரம் கண்கள்!
காலத்தை
நீங்கள் கவிதைகளில்தான் ஈசிக்கிறீர்கள்...
காலம் எங்களை மென்று தின்று சீரணிக்கிறது....
இந்தக் கவிதையின் பெயரை
நீங்கள் 'வெற்றுப் புலம்பல்' என்று கூடப்
பெயரிட்டழைக்கலாம்...
எங்களைப் பொறுத்தவரை இதன் தலைப்பு
'ரோட்டி, கப்படா அவுர் மக்கான்'
- நட்புடன்.....முகமது பாட்சா*
02/05/2020
#என்னை_மட்டுமே_காப்பீராக!
கொடும் கனவின் துயிலைக்
கலையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்...
நச்சுக் காற்றைப் பற்றி
நகரத்தின் வேதாந்தன் பாடமெடுக்க...
மூச்சுக் காற்றினைச் சேகரிக்க அறியாதவன்
தன்னைக் கிழித்துக் கொள்கிறான்!
இப்போது உலகம்
தட்டையானது என்று ஒப்புக் கொள்கிறார்கள்...
மனிதத்தை மிதித்துச் செய்த பொம்மைகள்
கொலுவை விட்டுக் கீழிறங்கி
அற்புத வசனங்கள் ஓதுகின்றன....
மேய்ப்பவனை நம்புவதே
ஆடுகளுக்கு வழக்கமாகிப் போகிறது....
இரவுக்கும் பகலுக்கும்
வித்தியாசம் தெரியாத உலகத்தில் நுழைந்தவர்கள்
இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டு
உயிருக்காகக் கையேந்துகிறார்கள்!
'பரம பிதாவே
எம்மை மட்டுமே காப்பீராக!'
- நட்புடன்.....முகமது பாட்சா*
01/05/2020
உலர்த்துவதற்கு
நிழல் மரமொன்றைத் தேடுகிறேன்...
கரைதலில் சுகம்காணும் காகம்
கால்களின் கீழ்
மௌனத்தைப் பிடித்து
வைத்து சிதைத்துக் கொண்டிருக்கிறது!
பூனையின் தவத்தை
எலிகள் மௌனம் போர்த்தியே
உலர்த்துகின்றன!
சாலைகளில் பூசப்பட்ட மௌனத்தை
மெல்ல அவிழ்க்கிறார்கள்
பசி
மௌனத்தைத் தின்று கதறுகிறது!
- முகமது பாட்சா*
31/05/2020
பொய்களை
வீசிக் கொண்டிருக்கிறார்கள்
அது
நகரத்தைத் தொலைத்தவர்களுக்கு
அரண்மனைகளைக் கட்டிக் கொடுக்கின்றது...
சிதைந்த உடல்கள்
மண்ணையுதறிவிட்டு
மகிழ்ச்சியுடன் எழுந்து செல்கின்றன...
சுயச் சார்பு இந்தியாவின்
கொட்டேஷனுக்குள்
திருடர்களின் கூட்டம் படுத்துறங்க...
வேலை வாய்ப்புகள் உருவாகிவிட்டதாக
பிரதமரின் உரை நிகழ்கிறது...
ஆனாலும்
வெளியில் வராதீர்கள்
கிருமிகள் எங்கும் பரவியிருக்கின்றன!
நீங்கள்
பொய்களை வாங்கிப் பொய்களையே ருசித்து
மகிழ்வோடு இருங்கள்!
மாஸ்க்கு கட்டாய அவசியம்
வாயை மூடிப் பேசவும்!
- முகமது பாட்சா*
30/05/2020
பசித் தின்று போட்ட மிச்சம்
சாலையில் உதிரியாகக் கிடக்கிறது...
போர்வையைப் போர்த்துகிறான் மகன்
அம்மாவுக்குக் குளிரும்!
அம்மாவொருத்தி
கர்ப்பப்பையைக் கைகளில் தூக்கிக் கொண்டு
சாலையில் ஓடுகிறாள்
ஆம் அவள் பித்துப் பிடித்தவள்தான்
உங்கள் அகந்தையால்
தன் சொத்தைத் தொலைத்தவள் !
யாருடைய பிணமென்று தெரியவில்லை
யாரோவொருத்தி அழுகிறாள்
அவள் பிள்ளையின் முகம் அவனுக்கு!
முகம்மதுவின் தோளில்
ராம் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறான்
நீங்கள் ஏன்
அவனைக் காப்பாற்ற வில்லை?
உங்கள் கோவில்களில்
கொலுவிருக்கப் போவது எந்த ராம்?
- முகமது பாட்சா*
29/05/2020
ஓடியோடி செய்திகளைப் பறித்துக்
காமிராவிற்குள் கருணையைக்
கொலை செய்வது வாடிக்கையாகிறது!
நிகழ்காலம் என்பதைப் பற்றிய பசி
அதிகாரத்தின் அட்டைகளுக்குப் புரிவதில்லை!
அவர்களோதும் தோத்திரங்கள்
முதலைகளுக்குச் சோத்திரங்களை விழுங்கிக்
குபேர லோகம் விரிகிறது!
அகராதித் திருத்துகின்றவன்
கருணையைக்
கொலையென்றே மொழி பெயர்க்கிறான்!
எல்லைகளை வகுத்த கோடுகள்
புலம் பெயர்கிறவனின் கால் வெடிப்புகளில்
தினமும் அழுது கொண்டிருக்க...
தீப்பிடிக்கும் குடிசைகள்
சாதாரணனின் குறியீடென்று யாருக்குத் தெரியும்?
யன்னல்களை அடைத்துவிட்டு
சுத்தமான காற்றைச் சுவாசியென்பவனின்
கால்களுக்குத் தீவைத்துவிட்டு
இதுதான் ராஜ நடையென்று சொல்லும் நாளில்
சுத்தமான காற்று
புவியின் சுகசீவனத்தில் பரவி விரவலாம்!
- முகமது பாட்சா*
27/05/2020
முகத்தைத்
திரையிட்டு மறைத்திருந்தாள்!
கண்களை எங்கோ பார்த்திருக்கிறேன்!
என்னிடம் பேசிவிட்டுதான் நகர்ந்தது
மொழி விளங்கவில்லை!
அச்சம் பூசிக் கொண்டு எல்லோரும் நடக்கிறார்கள்
அம்மாவை தூக்கிக் கொண்டு நடக்கிறவன்
தாயின் சூட்டைக்
கடத்திக் கொண்டிருந்தான்...
நகரம் தொலைந்து விட்டதாக
செய்திக் குறிப்பொன்றில்
நாடோடிகள் கையொப்பமிடுகிறார்கள்!
உலகம் ஒரே நாளில்
வௌவாலாக மாறிவிட்டது!
எல்லோரும் தலைகீழாகத் தொங்குகிறார்கள்!
வாகனப்புகையொன்று
வீட்டிற்குள் முடங்க உத்திரவிட்டுச் செல்ல
வீடேயில்லாதவன் கேள்வி
மரணத்திற்கான பள்ளத்தாக்கு இதுதானா?
தொலைவிலவள் அமர்ந்திருக்கிறாள்
கால்களை பார்க்கிறேன்...
இரத்தம் வழிந்து கொண்டிருந்தது...
கண்கள்
இன்னமும் ஏதோ பேசிக் கொண்டேயிருக்கிறது!
- முகமது பாட்சா*
26/05/2020
#ரமலான்_2020
நோன்பின் 30 நாட்களும்
விரதத்தின் அமைதியுடன் கடந்து செல்கிறது!
பள்ளிவாசல்களின் விரதம்
இன்னமும் முடியாததால் பெரு நாளின்
சங்கை மிகும் தொழுகைகள்
திக்ரின் தியானத்தில்!
"அல்லாஹூ அக்பர்! அல்லாஹூ அக்பர்!
லா இலாஹ இல்லல்லாஹூ
அல்லாஹூ அக்பர் ! அல்லாஹூ அக்பர்!"
குத்பாவிற்கான அழைப்போசை
வீடுகளில் நிறைந்து
அர்ஷின் வானத்தை எட்டிச் செல்கிறது!
பேரன்பின் பெருமிதம்
தன்னையே வளைத்து நதியாகவோட...
கைகளை ஜக்காத் எனும்
சானிட்டைசரால் சுத்தம் செய்து கொண்டவர்கள்
ஏழைகளின் பசிகளை
துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஏழ்மை என்றும்
ஒருவருக்கே நிலைத்ததல்ல....
கொடுக்கும் கரங்களில்தான் நிலைக்கிறது
இறைவனின் மஜ்லீஸ் வாசனை!
நோன்பு பிடித்தலென்பது பட்டினியல்ல...
சுவனத்திற்கான திறவுகோல்!
தொழுகைக்கு முன்பே
பித்ரா தருமத்தை கொடுத்துவிடுங்கள்!
சோதரர்களின் வீட்டு அடுப்புகளும்
சுவாசிக்கட்டும்!
முஸபா செய்வது
இப்போது இடை நிறுத்தலென்றாலும்
முபாரக் சொல்வதை
யாரும் தடை செய்துவிட முடியாது!
வாருங்கள்
வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வோம்
இனிய ரமலான் நல் வாழ்த்துகள்!
- நட்புடன்.....முகமது பாட்சா*
24/05/2020
விவாத முரண்
என்னைப் பற்றிய சில குறிப்புகளை
கைகளில் வைத்துக் கொண்டு
அமர்ந்திருக்கிறார்கள்
படிமத்திற்குள் நுழைந்த கதாப் பாத்திரங்கள்!
வினாக்களின் முரண்களில்
விடயங்களை
உலர விட்டுக் கொண்டேயிருக்கிறோம்!
யன்னலைத் திறந்தும்
தீராப்புழுக்கத்தில் நடந்தேறிய சம்பவங்கள்
யாக்கைகளைக் கீறிக் கொள்கிறது!
மன்னிக்கவும்!
அவர்கள்
உங்களைப் பற்றியும் கூடச் சில குறிப்புகளை
கைகளில் வைத்திருக்கிறார்கள் என்பது
பிறகுதான் தெரிய வந்தது!
- முகமது பாட்சா*
23/05/2020
நீங்கள்
இரவை இரவென்றே
சொல்லி வருகிறீர்கள்!
நாங்கள்
விடியும் என்று
எப்போதோ மாற்றிவிட்டோம்!
- முகமது பாட்சா*
அச்சம் சூழ் இரவு!
உருவகமில்லா ஓர் இரவுக்குள் நுழைந்து கொள்கிறோம்
அரூபம் வார்த்தைகளையடுக்கி வசமாய் நம்மைச் சிறை வைக்கிறது!
கோடுகளைப் போடுகிறவனெல்லாம் லட்சுமணன் என்றால்
சீதையின் சிறைவாசம் நியாயமாகிவிடும்!
அரக்கு மாளிகையிலிருந்து தப்பிக்க முதலில் வழி வகுக்க வேண்டும்...
மூளச்சாவு அடைந்த பிறகு சொல்லும்
வாழ்வதற்கான வழிகள் காதுகளுக்குள் நுழைகின்ற பெரும் மலைப் பாம்பு!
உருவகமில்லா என்பதை
அச்சம் சூழ்ந்த என்று கூடத் திருத்திக் கொள்ளலாம்!
- முகமது பாட்சா*
22/05/2020
#திக்ர்
இரவின் மொழி
கோளங்களை
மெல்ல அசைத்துக் கொண்டிருக்கிறது!
அண்ணல் நபிகளின் தேடல்
தொழுகையைக் கொண்டு இரவை நகர்த்த....
நட்சத்திரங்களைச் சாட்சியாக வைத்தவன்
நிலவின் வழித்தடங்களைக்
உன்னிப்பாகக் கவனிக்கச் சொல்கிறான்!
பாதைகளைப் போட்டவன்
நமக்குக் கொடுத்த முதல் பயணக் குறிப்பே....
" நபியே! நீர் ஓதுவீராக!"
புனித இரவின் மடியில்
தஸ்பீகளின் தாளச்சப்தம் தொடர்கிறது
தொழுகையின் இருக்கைகள்
புனிதக் குரானை
மனனமாய் மடியில் வைத்துத் தாலாட்ட....
ஜக்காத்தை அருளாக்கியவன்
கைகளை
அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளச் சொல்கிறான்!
கொடியது பசி!
- நட்புடன்..... முகமது பாட்சா*
21/05/2020
கருவறையிருட்டை
கண்கள் உணரவில்லை
இதயத்தில் வெளிச்சம்!
*
முகமது பாட்சா
காதறுந்த தேசம்
விற்ற முதலில்
மிச்சமிருப்பது வாரறுந்த செருப்பு!
காதறுந்த ஊசியில்
நூல் நுழைந்திருப்பதாகக் கற்பனை
செய்து கொள்ளுங்கள்!
ஒட்டுப் போடும் போது
தேசத்தின் புன்னகையைக் கீழே எழுத
மறந்து விடாதீர்கள்!
புரட்சிப்பாடலைப் பாடுவதாக இருந்தால்
'நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்'
சரியாக இருக்கும்....
' சாரே ஜஹான் சே அச்சா'
எப்போதோ காலாவதியாகிவிட்டது!
சூரபத்மன் கதைகளை
சூட்கேசில் வைத்துப் பூட்டி விடுங்கள்...
வேலாயுதத்தை
அவன் கையில் கொடுத்துவிட்டல்லவா
கடவுளென்று கும்பிடுகிறீர்கள்!
அந்தாதி எழுதும்
புலவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
இனி மேலாவது சந்தமுள்ள பாட்டிற்குப் பதிலாக,
சத்தமுள்ள பாட்டுகளாக எழுதுங்கள்...
கைகளைக்
கட்டி வைத்துள்ள இந்த தேசத்தில்
காதல் பாடல்கள் நெருடத்தான் செய்கின்றன!
- முகமது பாட்சா*
17/05/2020
கனவின் மொழி நீளமாக நகர்கிறது
ஆளுக்கொரு எழுத்துகளால்
வார்த்தைகளைக் கட்டமைக்கிறார்கள்...
நீளம் கருதி
சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பில்
சில பகல்களும்
இரவுகளும் தீப்பிடித்து எரிகின்றன...
தூக்கத்தைக் கட்டிவைத்து
நீளும் வார்த்தைகளின் பிரகாசத்தில்
மிளிரும் நடனசைவுகள்
காயும் வயிறுகளில் கஞ்சி வார்ப்பதாக
புலவன் பாட்டிசைக்கிறான் ...
வேறு வழியில்லை எல்லோருமே
இப்போது கனவை
பிய்த்துத் தின்னத் தொடங்கி விட்டார்கள்!
- முகமது பாட்சா*
16/05/2020
இப்போதெல்லாம்
அவள் அவள் மாதிரியே இல்லை...
அடிக்கடி முகத்தைக் கழுவிக்கொள்கிறாள்
கைகளைக் கீறிவிட்டு
ஏதோ கடித்துவிட்டதாகப் பினாத்துகிறாள்...
நடக்கும் போது ஏதோ
ஒட்டிக் கொண்டதாகத் தேய்க்கிறாள்...
சில நேரங்களில்
வீட்டிற்குப் போக வேண்டுமென அழுகிறாள்...
இதுதான் அவள் வீடு என்றால்
சுற்றிலும் பார்த்துவிட்டு
நீங்களெல்லாம் யார் என்று அச்சம் கூட்டி
வியக்கிறாள்...
இவளை வெட்டிப் போட்டிருக்கும் பிழையை
அழிக்கப் பார்க்கிறோம்
அது துளிர்விட்டு
அடுத்த தெருவிலும் கிளை விட்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
15/05/2020
தாயம் உருள்கிறது
இரவும் பகலும்
நட்சத்திரங்களை உதிர்க்கின்றன ,
காட்சிகள் தானாகவே
மரத்திலேறிக் கொள்கிறது!
பிணங்களிடறி விழும் மழைத்துளிகளில்
என்ன வாசனை இருக்கும்?
வழித்தடங்கள் வேர்வையில் குளிக்கின்றன..
நச்சரவங்கள் வழிவிட்ட பாதைகளில்
மின்சார ரயில்கள்
நாக்கை நீட்டிப் பாய்கின்றன!
கண்ணீர்த்துளிகளைக் காயப்போட்டுக்
காயப்போட்டுக் கற்களாகின்றன!
வருத்தம் செய்திகளாகி
நாற்புறமும் கால் நீட்டிப் படுக்க,
நாற்காலி அதிகாரம் தாயம் சுழற்றுகிறது!
கவர்ச்சிக் கன்னி
செய்திகளில் உருள்கிறாள்....
- முகமது பாட்சா*
14/05/2020
வேதாளம் சொல்லும் கதை
'அரசன்
மாடத்திலேறி காட்சி அருள் பாலிக்க...
தேசம் வழக்கம் போல்
அண்ணாந்து பார்க்கிறது!
நீங்கள்தான் இந்தத் தேசத்தின் தூண்கள் என்று
மகிழ்ந்து கையசைக்கிறான்...
உலகமே நம்மைப் பார்த்துதான் வியக்கிறது
என்று கைகளைத் தட்டுகிறான் !
பட்டினிச் சாவுகளைக்
கிள்ளி எறிந்துவிட்டதாகச் சொன்னவன்...
வறுமையோடு
வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று
அறிவுறுத்தினான்..
கைகளை அடிக்கடியாட்டி களிப்புற்றான்!
அண்டை நாடுகள்
சில நாட்களில் நமது நாடாகும் என்றவன்
உலகமே நம் அதிகாரத்தின் கீழ்
வந்துவிடும் என்றெல்லாம்
உடைந்த வீணையெடுத்து வாசித்தான்...
உங்கள் பழைய சங்கிலிகளை அவிழ்த்துவிட்டு
புதிய சங்கிலிகளை
மகிழ்வுடன் பூட்டிக் கொள்ளுங்கள்
இப்படிக்கு
உங்கள் மீது அக்கறை உள்ளவன் என்பது
மக்களுக்களித்த மகிழ்ச்சியான சேதி'
மீண்டுமொரு
புதிய கதையுடன் சந்திப்பதாக விடை பெற்றவன்
பொய் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு
பறந்து செல்ல...
கதை கேட்ட விக்கிரமாதித்தனின் மண்டை
விடையறியாமல்
சுக்கு நூறாக உடைந்து கிடந்தது!
- முகமது பாட்சா*
14/05/2020
வயிற்றில்
ஈரத்துணியை நன்றாகக் கட்டிக்
கொள்ளுங்கள்
கால்களில் கிழிந்த சாக்குகளை
மாட்டிக் கொள்ளுங்கள்
பசி வந்தால்
பிச்சையெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
வழியில் இறப்பவர்களை
அங்கேயே புதைத்துவிடுங்கள்...
உறங்க இடம் இல்லையெனக்
கவலை வேண்டாம்...
கற்பனையில் மாளிகைகளைக்
கட்டிக் கொள்ளுங்கள்...
ஆனால் ஒன்றை மட்டும்
மறந்து விடாதீர்கள்...
நீங்கள் எப்போதும் உச்சரிக்கவேண்டிய
சுலோகம் ஒன்று உண்டு
ஹமாரா தேஷ்! சப் மேரா பாரத்!
- முகமது பாட்சா*
13/05/2020
இலையின் நுனித்தொட்டு
ஏறிக் கொண்டிருக்கும் எறும்பிற்கு
மரணத்தைப் பற்றிய
சிந்தையில்லை!
நீரிலுதிர்ந்த முதிரிலை
மரணத்தைப் பற்றிய
பெரும் உரையாடலை நிகழ்த்த
சென் பாடலொன்றில்
தேநீரின் தியான வாசனை!
அகம் பொருள் இன்பம்
சுயம் கோர்த்த பயணம் , இடம்
பொருள் ஏவலில்
அச்சம் சூழ் அகால அரூப
ஆவியாகும் மரணத்தின் நிறம் மண்!
- முகமது பாட்சா*
12/05/2020
#திக்ர்
எல்லோரும்
சில கோடுகளை வரைகிறார்கள்,
சில புள்ளிகளைச் சேர்க்கிறார்கள்...
அவை வார்த்தைகளாகி,
மொழிகளாகிக் காலத்தைக்
கட்டுக்குள் கொண்டு வருகின்றன...
கடலாக மாறும் போது
காலம் படகாக நீந்துகிறது!
நாம் மீனவனாகிறோம்...
வனமாகும் போது பறவைகள்,
விலங்குகள்
எனப் பெருகி மழையாகிறது...
நாம் விறகுகளை வெட்ட அது நகரமாகிறது!
களமாகும் போது
எழுத்துகள் ஆயுதங்களாகின்றன!
இப்போது எங்கும்
கோடுகளும் புள்ளிகளுமே நிறைந்திருக்க
காலம் நம்மைத் தின்று
துப்பியிருக்கிறது!
அதன் மிச்சத்தை ஒருவன் மரணம் என்கிறான்
சூஃபியொருவர் அதுதான்
ஜனனம் என்று சொல்கிறார்....
திக்ரில் தஸ்பீக்கள் உருள்கின்றன!
- முகமது பாட்சா*
11/05/2020
கண்ணீர்த் துளியை வரையும் தூரிகை
அழுதுவிட்டு நகர்கிறது....
வறுமை எப்போதுமே காட்சிப் பொருள்!
சிறகுகளை வரைந்த பிறகுதான் தெரிகிறது
பறவைக்கு
நகங்களை வரையாதது...
உவமைக்குள் ஓடிவரும் நாய்களுக்கு எப்போதுமே
வாலாட்ட மட்டுமே தெரிகின்றன!
நிஜம்
அருவெறுப்பில் ஒதுங்கிக்கிடக்க...
வாகனத்தைத் துடைத்துவிட்டு
காசு கேட்கும் சிறுமி
வயிற்றைத் துடைத்துவிட்டுச் சுருண்டு கிடக்கிறாள்!
பசியைப் பற்றிப் பேசாதவன்
தேநீர்க் கடையைப் பற்றிக் கதை எழுதுகிறான்...
மிதக்கும் ஆவி
உருவம் கொள்ளாது அலைகிறது!
- முகமது பாட்சா*
10/05/2020
கழுகுகள் வட்டமடிக்க
அதன் நுண்புலனுணர்வுகளில்
முக்கியச் செய்திகள்
இணைக்கப்படுகின்றன!
இரவு கந்தலாகக் கிழிந்திருக்கிறது...
நெய்யாத துணியை
நெய்துவிட்டதாக அரசன் களிக்கிறான்...
ஆண்டைகளின் ஆமாம் என்பதில்
கறிச் சோற்றின் வாசனை!
புலம் பெயர்தல் புலன்கள்
பெயர்தல் என மொழியாக்கம் செய்யப்பட
வீதிகளையே கூலங்களாக
அள்ளி வாருகிறார்கள்!
சோகப்பாடல் பாடுபவனின் இசை
தண்டவாளங்களில் சிதறலாய் கிடக்க
துந்தனாக் கருவியின் நரம்பில்
விரல் மட்டும் உதிரத்துடன்
மீட்டிக் கொண்டிருப்பது தேசிய கீதம்!
- முகமது பாட்சா*
09/05/2020
மது
ரோமானியத்தின் ஒரு சொட்டு அழுகை
என்றவனைச் சிலாகிக்கிறேன்...
காலத்தின் கையில்
ஒரு கோப்பை
எப்போதும் வழிந்து கொண்டேயிருக்கிறது...
டையோனிஸஸின் ஏம்ப்ரோ மட் பாண்டங்களில்
ஊறிக் கொண்டிருக்கும்
புராணக்கதைகளின் பெர்ரி நுரைத்தல்...
மகிழ்ச்சியான தலைவலி!
மாய ஆவிக்குள் நுழைத்துவிடு பிதாவே!
மரணத்தை வாங்க வரிசையில் நிற்கிறார்கள்...
மதுவையும் மாதுவையும்
மடக்கி வைத்துக் கொள்கிறவன் ஆண் விபச்சாரி!
கஜானாவை நிரப்பும் களவாணிக்கு
காய்ந்து கிடக்கும் சட்டிகள் கருப்பானவை!
கல்லா நிரம்புமென்றால்
கொரானாவையும்
ஊசிகளிலேற்றி விற்பார்கள்...
ஊறலுக்குள் எப்போதும் இருங்கள் மக்களே...
'போதை என்றும் சுகமானது'
எம்மாட்சி உங்களையே அருந்துகிறது!
- முகமது பாட்சா*
07/05/2020
இப்போதெல்லாம் கவிதைகள்
அவ்வளவு அழகானதாகத் தெரியவில்லை...
மூச்சை மூடிவைத்து
முகத்திரையில் வார்த்தைகள் நெளிய...
நானும் சில வார்த்தைகளை
கைகளையுதறி எடுத்து வைக்கிறேன்....
ஏளனமாகப் பார்த்துவிட்டு
தன் நடையைக் கட்டுகின்றன...
உதிர்ந்து கிடக்கும்
வேப்பம் பூக்களில் இரவு வாசம் கவிதை...
ஒருவன் மல்லிகை மோகினி
நகர்வலம் வருவதாக அச்சம் கொள்கிறான்...
நாடோடியின்
நாலாந்தர வார்த்தைகள் இவையென
சிலர் நகர்ந்து செல்கிறார்கள்...
விதைகளுக்காக
உயிர்களையிறைத்த பறவைகளெனப்
பரிதாபம் கொள்பவன்
தன் வயதைத் தொலைத்து
வாசலில் யாரையோ எதிர் நோக்குகிறான்...
ஓர் அம்மாச்சி
கூட்டி வாரி வார்த்தைகளைப் பக்குவம் செய்கிறாள்
வேப்பம் பூக்கள் கவிதையாகின்றன!
- நட்புடன்.... முகமது பாட்சா*
05/05/ 2020
கட்டங்கள் வரைந்து
தள்ளியே நிற்கிறது வாழ்க்கை...
இடும்பை வானத்தில்
இளம் பிறை பறவையைப் போல்
நகர்ந்து செல்ல...
முடங்கிக் கிடக்கிறது முதலில்லாக் கனவு!
துன்பத்தின் நிழல்
பூனையாக நடந்து செல்ல
கருடன் பறப்பது
கன்னத்தில் போட்டுக் கொள்ளவா?
- முகமது பாட்சா*
03/05/2020
ஒரு ரொட்டித் துண்டு என்பது
ஒரு யுகத்தின் கனவென்று உங்களுக்குத்
தெரிவதில்லை...
நாங்கள் இன்னமும் அதைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறோம்....
எங்கள் கனவுகளின் நிழலை நாங்கள்
ருசித்ததில்லை...
உங்கள் வீடுகள் எங்களின்
நடைபாதை கதவுகளை எப்போதாவது
தட்டிப் பார்த்திருக்கிறீர்களா?
உங்கள் அறைகளின்
குளுமையும் வெட்பமும் அறியாத
எங்களின் ஆடைகளுக்கு ஆயிரம் கண்கள்!
காலத்தை
நீங்கள் கவிதைகளில்தான் ஈசிக்கிறீர்கள்...
காலம் எங்களை மென்று தின்று சீரணிக்கிறது....
இந்தக் கவிதையின் பெயரை
நீங்கள் 'வெற்றுப் புலம்பல்' என்று கூடப்
பெயரிட்டழைக்கலாம்...
எங்களைப் பொறுத்தவரை இதன் தலைப்பு
'ரோட்டி, கப்படா அவுர் மக்கான்'
- நட்புடன்.....முகமது பாட்சா*
02/05/2020
#என்னை_மட்டுமே_காப்பீராக!
கொடும் கனவின் துயிலைக்
கலையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்...
நச்சுக் காற்றைப் பற்றி
நகரத்தின் வேதாந்தன் பாடமெடுக்க...
மூச்சுக் காற்றினைச் சேகரிக்க அறியாதவன்
தன்னைக் கிழித்துக் கொள்கிறான்!
இப்போது உலகம்
தட்டையானது என்று ஒப்புக் கொள்கிறார்கள்...
மனிதத்தை மிதித்துச் செய்த பொம்மைகள்
கொலுவை விட்டுக் கீழிறங்கி
அற்புத வசனங்கள் ஓதுகின்றன....
மேய்ப்பவனை நம்புவதே
ஆடுகளுக்கு வழக்கமாகிப் போகிறது....
இரவுக்கும் பகலுக்கும்
வித்தியாசம் தெரியாத உலகத்தில் நுழைந்தவர்கள்
இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டு
உயிருக்காகக் கையேந்துகிறார்கள்!
'பரம பிதாவே
எம்மை மட்டுமே காப்பீராக!'
- நட்புடன்.....முகமது பாட்சா*
01/05/2020
No comments:
Post a Comment