
ஆளாளுக்கு
ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்கள்!
முதலில் சாதாரணமாகத்தான் நகர்ந்தது...
பின்னர் அதற்குக்
கை கால்கள் முளைத்து நடக்கத் தொடங்கின...
ஒவ்வொருவரின் கதையில் இருந்தவர்களும்
இப்போது
ஒரே கதைக்குள் நுழைந்து கொள்ள,
கதை மிகவும் சூடு பிடித்தது!
நாங்கள் காதுகளைத் திறந்து வைத்தோம்,
அவர்களோ கண்களைத்தட்டிச் சப்தமிட்டவாறு
வெளியில் வந்தார்கள்!
அச்சத்தால் ஓடத் தொடங்கினோம்...
இருந்தவிடமும்
எங்களோடு ஓடி வந்து கொண்டிருந்தது!
நாங்கள்
கதைக்குள் நுழைந்துவிட்டோம்,
கதை எங்களைச் சிறை வைத்துவிட்டு
வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கியது!
- முகமது பாட்சா*
16/06/2020

ஓர்
அரூப ஓவியமாகப் பாவித்து
என்னைக் கடந்து போகிறார்கள்!
எனக்குள்ளிருக்கும் கோடுகளை ஆக்கிரமித்த
வண்ணங்களிடம் பேச
அவர்களுக்கேன் இத்தனை தயக்கம்?
நின்று நிதானித்தவன்
சிரித்துவிட்டுச் சொல்கிறான் ; இவை
கூட்டிமுடிக்காத கூளங்களென்று!
அடுத்தவன்
உற்றுக் கவனித்து
ஒரு நட்சத்திரம் மிதக்கிறது என்றான்!
இடிந்து விழுந்த
கட்டிடங்களின் பிரமையாக இருக்கலாம்
என்றான் வேறொருவன்!
கோடுகளோடு ஓடியும்
முடிவு இல்லை என்று ஆதங்கித்தான்
ஓரளவு ஓவியம் அறிந்தவன்!
ஒருவன் மட்டும்
வரைந்தவன் பெயரைப் பார்த்துவிட்டு
இது ஓவியம்! என்று வியந்து
விலைகொடுத்து வாங்கிச் சென்றான்!
மாட்டியவிடத்தில் இனி
அப்படியே தொங்கிக் கொண்டிருப்பேன்!
- முகமது பாட்சா*
17/06/2020

வீடுகளை
விரைந்து காலி செய்கிறார்கள்!
வீடுகள், சோகத்துடன்
முகத்தைத் திருப்பிக் கொள்கின்றன,
பசியோடு
அவர்களை என்றுமே பார்த்ததில்லை!
நகரத்தையே தொலைத்தபிறகு
வீடுகளுக்கு வாசல் கதவுகள் வெறும்
பரிமாணங்கள் மட்டுமே!
இறந்த வீட்டின் ஒப்பாரியாகச் சாலைகள்
பதைக்கின்றன!
கடற்கரை வெளி வெறிச்சோடிக் கிடக்க...
அங்கேயே காத்திருக்கும்
காகங்களின் கதைகளைக் கேட்க யாரும்
வருவதில்லை!
முத்தங்களையிழந்தப் பூங்காக்கள்
பூக்களை வெறுத்து வசை பாடுகின்றன!
நகரம், ஆட்சிப்பிழையால்
புலம்பெயர்ந்து நரகமாகிவிட்டது!
நரகத்தின் வாசல்களைப்
பூட்டியே வையுங்கள்
கிருமிகள் முற்றிலுமாகச் சாகும்வரை!
- முகமது பாட்சா*
18/06/2020
No comments:
Post a Comment