Tuesday, 20 July 2021

மகாத்மா மாஸ்க்

 கொலையைப் பார்த்தவள்

சாட்சி சொல்கிறாள்...

விசாரணை

அவளைக் கொலை செய்கிறது!

கொலை செய்யப்பட்டவன் உயிர்பெற்று

தன்னையே குத்திக்கொள்ள

குற்றவாளிகள்

அவனைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்!

விசித்திர வழக்குகள் மட்டுமே

விசாரணைக்கு வருகின்றன! என்று

தீர்ப்பை எழுதும் போது

நீதி தேவன் கழுத்தை,

குற்றவாளிகள் களவாடிச் செல்ல...

அங்கு இப்போது

நிறையக் கொலைகள் நடந்தேறியிருந்தன!


- முகமது பாட்சா*

20/07/2020

-------------------------------

மகாத்மா_மாஸ்க்




அந்தச் சதுக்கத்தில்

அவர்கள் ஒன்றாகக் கூடியிருக்க...

வெள்ளைக்குதிரையில் வந்தவர்

மகாத்மாவின் முகமூடி அணிந்திருந்தார்!

பின்னால் நின்றவர்கள்

தேசத்தின் முத்திரையைக் குத்தி நிற்க

தேசியக்கொடி அசைந்து கொண்டிருந்தது!

மகாத்மாதான்

முதலில் துப்பாக்கியால் சுட்டார்...

படுகொலைகள்

எந்தவித பாசாங்குகளும் இல்லாமல்

நடந்து கொண்டிருந்தது!

இப்போது மகாத்மா அழுது கொண்டிருந்தார்

தேசத்தைப் பாதுகாக்க

அவசர சட்டங்கள் தேவையென்று

உரை நிகழ்த்த

துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது...

தேசிய கீதம் இசைக்கிறது!

மகாத்மாவின் முகமூடி

கேட்பாரற்று கொலைக் களத்தில் கிடக்க,

செய்தியாளன் சிறைக்குள் அடைக்கப்படுகிறான்

தேசத் துரோக வழக்கு!

"என் தேசம்"

மகாத்மாவின் முகமூடி

மிகுந்த கவலையுடன் உரையாற்றிக் கொண்டிருக்க

கைகளிலிருந்த துப்பாக்கியின் புகையில்

துண்டு மீசைக்காரன் நெளிகிறான்.


- முகமது பாட்சா*

20/07/2020


No comments:

Post a Comment

Popular Posts