சன்னலை
திறந்தே வைத்திருக்கிறேன்
அவர்கள் சலிப்படைகிறார்கள்
என் கவிதைகள்
அதிகமாகவே சன்னல்களைத் திறப்பதாக!
வேறு வழியில்லை
புழுக்கம் போகவில்லை என்பது,
என் எழுத்துகள் வைக்கின்ற குற்றச்சாட்டு!
பூனையொன்று
சன்னலின் வழியே உள்ளே நுழைகிறது!
எலியை இப்போதுதான்
சன்னலுக்கு வெளியே விரட்டினேன் என்று
அதற்குத் தெரியாது!
என் மேசை மீது
இரண்டு நாட்களாகியும் சூடே ஆறாத
தேநீர்
என்னை இரசித்துக் கொண்டிருக்கிறது!
அதற்கும் கவிதை மனம்!
இப்போதுதான்
முழுமையாகப் பசியாறினேன் என்பதும்
கவிதையின் அழகியல்!
பின் எப்படி நான் மெலிந்திருக்க முடியும்?
இந்த அப்ஸ்ட்ராக்ட் கவிதை
பொய் சொல்லலாம்!
மன்னர்கள்
பொய் சொல்வது எப்படி என்றுதான்
எங்களுக்கு
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
- முகமது பாட்சா*
29/07/2020
No comments:
Post a Comment