Wednesday, 28 July 2021

யா தைபா 6 - 13

 #தைபா_6


பெரும் மழையொன்றில்

பேரானந்தத்துடன் நனைகிறேன் தைபா,

உன் அருள் மழை அஃதென்பதால்!


சாரல் மழை

தஸ்பீக்களாக எங்கும் உருள்கின்றன

ஓடையில் ஒளிர்கிறது

மேகமாய் விரியும்  வெள்ளாடை!


இஸ்தபரக் விரித்து

வார்த்தைகளைத் தூபகலத்தில் தூவுகிறேன்

வாசனை நுகர்வதற்கு

வாசல் வரையாவது வருவாயா!


ஹிஜரத் செய்யும் ஒட்டகம் நான்

உன்னைத் தேடுவதற்காகவே அலைகிறேன்

தாகம் பெரிதல்லவா!


- முகமது பாட்சா*

19/07/2020

இஸ்தபரக் - சிறந்த பட்டாடை

ஹிஜரத் - இடம் பெயர்தல்



#தைபா_7


உன் இரசவாதத்தில்

மெய் சிலிர்க்கிறேன் தைபா

பாதையில் முற்களைப் போட்டுவிட்டு

பார்வையில்

பூக்களையல்லவா சொரிகிறாய்!


நானொரு காகிதக் கப்பல்

ஆனாலும்

கடலளவு ஆசைகளையல்லவா

சுமந்து கொண்டு செல்கிறேன்!


எனக்குள்ளிருக்கும் அழகிய மீனை

நீயே சமைத்து உண்டுவிடு

இப்லீஷின் பூனை

என்னுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறது!


இரையெடுக்கும் போதெல்லாம்

புறாக்கள்

உன்னையல்லவா முத்தமிடுகின்றன!

அதானின் அலைவரிசை

முகிலையணைத்து முத்தமிடுகிறது

முஸல்லாவை நிறைக்கட்டுமா!


- முகமது பாட்சா*

21/07/2020


இப்லீஷ் - சாத்தான்

முஸல்லா - தொழுகை விரிப்பு

,..............

#தைபா_8


பகலைவிட இரவு

குளுமையாக இருக்கிறது தைபா!

திக்ருகளால் நெய்கிறேன்

பட்டாடையை உடுத்திக் கொள்வாயா!


கம்பளியாடைக்காரன்

உன்னைப்

புல்லாங்குழலால் இசைக்கிறான்

நானொரு ஆடாக அமர்ந்திருக்கிறேன்!


நதியின் சோகத்தைக்

கூழாங்கற்கள் இசை மீட்டுகின்றன...

என்னைத் தழுவிச்செல்ல

மழையாக ஓடி வரமாட்டாயா!


ஆகிரத்து அங்கேயே இருக்கட்டும்

என்னை ஏரில் பூட்டாமல்

துனியாவில்

உன் பாட்டுகளை எப்படிதான் உழுவேன்?


- முகமது பாட்சா*

22/07/2020


திக்ரு - நினைவுகள்

ஆகிரத்து - மறுமை

துனியா - இம்மை

.............

#தைபா_9


அந்திவானத்துப் பறவைகள்

ஆயத்துல் குர்ஸியை ஓதிக்கொண்டு

திரும்புகின்றன!

கூடுகளுக்குள் கூடுகட்ட வா தைபா!


மக்ரீப்பின் வானம்

என்னைப்போலவே வெட்கப்படுகிறது!

இஷாவின் பர்ளுவில்

எத்தனை இரக்காத்துகள் தொழவேண்டும்?


யாசகனின் கைகள் மேலெழுகின்றன

தப்ஸின் இசையைத்

தரையில் கிடத்தி உருட்டுகிறேன்...

மஜ்னூவிற்குப் போதை சற்றதிகம்தான்!


இரவை

முடித்துவிடாதே தைபா!

இன்னமும் உன்னிடம் பேசவேண்டியது

அதிகம் இருக்கின்றன!


- முகமது பாட்சா*

23/07/2020


ஆயத்துல் குர்ஸி - இறைவசனம்

மக்ரீப்,இஷா - தொழுகை நேரங்கள்

இரக்காத்து - தொழுகை அளவு

தப்ஸ் -  இசைக்கருவி



#தைபா_10


உன் புகழ் மாலையில்

அத்தரைத் தெளித்து வாசனைக் கூட்டி

அதானின் சிறகுகளுக்கும்

முத்தமிட்டு தூது அனுப்புகிறேன் தைபா!


ஒளுவு அலம்பும் நீர் நிலையில்தான்

என்னவொரு சங்கீதம்!

ரேஹாலிகள்

வாசலைத் திறந்து வைக்கின்றன

உன் வார்த்தைகளை இசைப்பதற்காகவே!


எத்தனை முறை உச்சரிப்பது

உன் பெயரை?

அத்தனையிலும் உன் வாசனையையல்லவா

பூசியிருக்கிறாய்!


விரல்களுக்குள்

உன்னை எண்ணிவிடப் பார்க்கிறேன்,

அத்தனையிலும்

அடங்கிவிடுவாயா என்ன ?

யாசிப்பதிலும் நேசிக்கிறேன் தைபா!


- முகமது பாட்சா*

24/07/2020


அதான் - பாங்கு

ஒளுவு - சுத்தம் செய்து கொள்ளல்

ரேஹாலி - புத்தகம் வாசிக்கும் மடிப்பு மேசை

.......

#தைபா_11


இப்லீஷ் இடறிவிட்ட பாம்பு

என் விழிகளுக்குள் நடனமாடுகிறது!

தவறிழைக்கும் முன்பாகவே

என்னைக் கைது செய்துவிடு தைபா!


கனவுகளைத் தினமும் உருட்டுகிறார்கள்

தாயம் விழுகிறது

நான் என் காதலைத்தான் உருட்டுகிறேன்

என் காயமே நீதான் தைபா!


நான் ருக்ஊவில் குனியும் போது

நம் காதல்

தக்பீர் கட்டிக் கொள்கிறது...

சலாம் கொடுக்காமல் தொழலாமா!


யாசகன் கைகளில்

பிச்சையாக எதையும் கொடுத்துவிடாதே...

என்னையே எடுத்துக்கொள்

நானே செல்வந்தன் ஆகிடுவேன்!


- முகமது பாட்சா*

25/07/2020


இப்லீஷ் - சாத்தான்

தக்பீர், ருக்ஊ - தொழுகை நிலை


........

#தைபா_12


அரண்மனைகள்

ஆபரணங்களை மட்டுமே காதலிக்கின்றன,

நான் உன்னழகையல்லவா

நேசிக்கிறேன் தைபா!


அஸ்மாவுல் ஹுஸ்னாவில்

அதியற்புத நறுமணம் கமழ்கிறது

புழுக்கத்தைப் போக்க

ஆயிரம் விசிறிகள் தேவையில்லை

உன் பெயர்கள் மட்டுமே போதும்!


எறும்புகள் போல்

சேகரிக்கிறேன் உன் மீதான காதலை

என்னோடு சேர்ந்து

நீயும் உணவருந்த மாட்டாயா?


கடற்கரை காகங்கள் காத்திருப்பது

கரையொதுங்கும் மீன்களுக்காக...

ஆனால்;

நான் கடலையேயல்லவா

அருந்தக் காத்திருக்கிறேன் தைபா!


- முகமது பாட்சா*

27/07/2020


அஸ்மாவுல் ஹுஸ்னா -இறைவனின் திருப்பெயர்கள்


.......

#தைபா_13


எனக்குள் என்னையே

தினமும் பாயாக முடைகிறேன் தைபா!

உனக்குள் வருவதற்கு

ஓர் அழகிய தொழுகை விரிப்பாக!


படர்கின்ற கொடிக்கு

ஓர் இருப்பிடம் தேவைதானே!

அது நீயாகவே இருந்துவிடு

நம் காதல் அழகழகாய் பூக்கும்!


மரணத்தின் வாசலில், என்

சுவாசம் இசைக்காமல் போகலாம்,

கல்புக்குள் இருக்கும் கஸலின் வாசனை

உன் கைகளுக்குள்

வராமலா போய் விடும்!


இகாமத்திற்குப் பின்னும் நமக்குள்

இடைவெளிகள் எதற்குத் தைபா?

சைத்தானை

அள்ளியெறிந்துவிடு

சங்கடமில்லாமல் சேர்ந்து கொள்வோம்!


- முகமது பாட்சா*

28/07/2020


இகாமத் - தொழுகை தொடங்கிவிட்டதற்கான அறிவிப்பு


No comments:

Post a Comment

Popular Posts