Saturday, 29 December 2018

அவனா இவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

எனக்குள்ளிருந்த அவனை 
புதைத்துவிட்டு வந்த பிறகுதான் பார்த்தேன் 
என்னைக் கடந்து போனவன் 
அவனைப்போலவே இருந்தான்... 
நிச்சயம் 
இவன் அவனாக இருக்கவே முடியாது... 
அவனுக்கு இரண்டு கொம்புகளிருக்கும் 
அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொள்கிறேன் 
அறைமுழுவதும் 
அவன்தான் வியாபித்து உட்கார்ந்திருக்கிறான்... 
இவன் அவனாக இருக்கவே முடியாது... 
அவனுக்கு நரியொத்தப் பற்கள் நீண்டிருக்கும்... 
அவனை விரட்டிவிட்டு 
சயனச் சந்திப்பில் கனவினுள் நுழைகிறேன் 
அவன் சாகரத்தை பிரசவித்து 
முகத்தைப் பிறாண்டுகிறான்.... 
இவன் அவனாக இருக்க வாய்ப்பேயில்லை 
அவனுக்கு ராஜாளியின் நகங்கள்.... 
புதைத்தவிடத்தில் தோண்டிப் பார்க்கிறேன் 
அவன் நகங்களும் கொம்புகளும் மட்டும் 
அங்கிருக்கிறது... 
பற்களோடு போனவனைத் தேடுகிறேன்... 
நிலைக் கண்ணாடிக்குள் நின்று சிரித்தவன் 
என் கழுத்தை குறிவைத்துப் பாய்கிறான்....
இவன் அவனேதான்! 

- மு.முகமது பாட்சா* 
29 /12 /2018 

No comments:

Post a Comment

Popular Posts