
நாடகம்
முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்
நான் இன்னமும்
அந்த இருக்கையில்தான் உட்கார்ந்திருக்கிறேன்
அதிலுள்ள ஒரு வசனம்
என்னைக் கடந்த காலத்திற்குக் கடத்திப் போக
காட்சி மாறுகிறது
அவளாக நீயிருக்கிறாய்
அங்கேயும்
என்னை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்...
நாயகன் எடுத்த முடிவில் உடன் பாடில்லை
அரங்கத்தின் வெளியே நல்ல மழை
காபியோடு கவிதையைக் கேட்கிறாய்...
இரண்டும் சூடாக இருந்ததால்
நீ கொடுத்த
மூன்றாம் சூட்டைப் பாதுகாத்துக் கொள்கிறேன்
ஆனால், நீயேன் அப்படி நடந்து கொண்டாய்?
மழை நின்றிருந்தது...
என்ன சிந்தனை?
என்று மனைவி அழைத்தபோதுதான் கவனித்தேன்
அவர்களெல்லாம் சென்று விட்டார்கள்...
ஆமாம்
நாடகத்தின் கதைதான் என்ன?
- மு.முகமது பாட்சா*
03 /09 /2018
No comments:
Post a Comment