Tuesday, 4 September 2018

திருமுழுக்கு வார்த்தைகள்



திருமுழுக்கு வார்த்தைகள் 
இன்னமும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது 
அண்ணாந்து புகைவிடும் போக்கியை 
பீடியை ஊதிக் கொண்டே பார்த்தோம்... 
கேன்சரில் இறந்தவர்களை 
விதிப்பயன் என்ற திருமுழுக்கு வார்த்தையால் 
குளிப்பாட்டினோம் 
கூரைவீடுகள் கேவலம் என்ற 
பொதுப்புத்தியின் வார்த்தைகளுக்குள் 
நுழைந்து கொண்டோம்... 
தரமான சிமென்ட், உறுதியான கம்பிகள் 
என்ற ஸ்லோகன்கள் 
எங்களின் உறுதிப்பாட்டினை அசைக்க 
கால்வாய்களை மடக்கி 
கான்கிரீட்டுகளால் சுவரெழுப்பிக் கொண்டோம்... 
உறவுகளின் சப்தங்கள் கேட்கவில்லை... 
திரைப்படம் வீட்டிற்குள் நுழைந்தது 
ஆலமரங்களை வெட்டி எடுத்துச் சென்றார்கள் 
ஆடுபுலியாட்டம், தாயம் அனாதையாயிற்று 
நதிகள் கொள்ளை போனது தெரியாது 
ஏனென்றால்  நாங்கள் 
வீதிகளைப் பார்த்து வியந்தவர்கள்... 
நிலங்களைப் பிடுங்கியபோதுதான் 
கிராமத்தையே தொலைத்தது புரிந்தது... 
வளர்கிறது இந்தியா என்ற திருமுழுக்கு... 
சற்றுப் போதையானதுதான்... 
நகரத்தின் சுவர்கள் 
எங்களைக் காறித்துப்பி வெளியேற்றுகின்றன... 
நாடோடிகளின் 
நடைபாதையாகிப்போன இந்தியாவில் 
இப்போதுதான் நாங்கள் குரலெழுப்புகிறோம்... 
தீவிரவாதிகளென்ற முத்திரையை 
துப்பாக்கி முனைகள் குத்திக் கொண்டிருக்கின்றன. 
இப்போது நாங்கள் என்ன கோஷமிடுவது... 
வாழ்க என்றா? அல்லது ஒழிக என்றா? 

- மு.முகமது பாட்சா*
04 /09 /2018

No comments:

Post a Comment

Popular Posts