Tuesday, 25 September 2018

சாபம் தூவும் மகரந்தம் - வத்சலா ரமேஷ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Vathsala Ramesh, நிற்கிறார் மற்றும் உரை


நூல்:  சாபம் தூவும் மகரந்தம் - 
கவிஞர்  வத்சலா ரமேஷ்

கவிதைகள் ஒவ்வொருவருக்குள்ளும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் - 
என்ற, கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களின் முன்னுரையுடன் 
கவிதையின் பக்கங்களுக்குள் நுழைகிறேன். 

கவிதைகளுக்கு பலமென்பது வார்த்தைகளின் ஒழுங்கென்பதைத் தனது 
முதல் கவிதையிலேயே நிருபித்துவிடுகிறார் சகோதரி வத்சலா அவர்கள்.

எனதுபாட்டியின்
இளமைப் பருவத்தை
நான் பார்த்ததில்லை -  என்று சொல்பவர் அதற்கு அடுத்தே

நான் வளர்ந்த பருவத்தில்
பாட்டியும் வீட்டில் இல்லை - 

என்று தொடர்கிறார்...குழந்தையாகவே மாறிப்போன பாட்டியை 
விடுதியிலிருந்து வீட்டிற்கே கொண்டுவரவேண்டும் என்ற பெயர்த்தின் 
பாசத்தைச் சொல்லும் அந்தக் கவிதை மிகவும் சிறப்பானது.

ஆறிப்போன  தேநீரில் ஆடை கட்டுவதையும் கூட ஒரு கவிதை 
காதலாய் மாற்றிக் கொள்கிறது...

நாங்களிருவரும் பேசியதை
வேடிக்கை பார்த்த தேநீர்கள் 
வெட்கம் கொண்டு
முகம் மூடிக் கொண்டது
அதன் ஆடையில். 

வறுமை, இயலாமை, முதுமை இவற்றின் வலிகளை, கவிஞர் வத்சலா 
அவர்களின் ஒவ்வொரு கவிதைகளுமே பேசத் தயங்கவில்லை.

குப்பை பொறுக்கும்
சிறுமியின் முகத்தில்
சொட்டிய வியர்வையால் கழுவப்பட்டது
அவள் புன்னகை - என்ற வரிகள் சற்றென்று நம் மனதில் பெரும் தாக்கத்தை  
ஏற்படுத்திவிடுகின்றது.

தாத்தாவின் வீடு என்ற கவிதையில் உள்ள அடுத்துவரும் வரிகள் நம் மனதைவிட்டு 
சீக்கிரம் நீங்கிவிடாது. அவரது பார்வையின் ஏழ்மை நம் மனதை அசைக்கிறது

எப்போதேனும் வந்தமரும்
ஒற்றைக் குருவியாய்
ஆகிப்போனது
சொந்தங்களின் வருகை

இறந்துவிட்ட பாட்டியை காணாமல், பெயர்த்தி ஒவ்வொருவரிடமும் 
பாட்டி எங்கே? பாட்டி எங்கே? என்று கேட்டு கேட்டுத் துளைக்கிறாள். 
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி பாட்டி வெளியே 
சென்றிருப்பதாக ஏமாற்றுகிறார்கள்.  
அப்போதும் அவளின் மனம் தன் பாட்டியையே சுற்றி வருகிறது.   
அண்ணனின் துணையோடு மறு நாள் பாட்டிக்கு கடிதம் ஒன்றை 
எழுதுகிறாள் பெயர்த்தி...என்னவென்று பாருங்கள்...

உன்னோட வாக்கிங் ஸ்டிக்
ஹாலில் மாட்டியிருக்கும்
உன் படத்திற்கு முன்னால்
பத்திரமாக வச்சிருக்கேன்
அது இல்லாமல்
அங்கே நீ
எப்படி வாக்கிங் போறே? --- என்று நீண்டு கொண்டே வரும் அந்தக் கடிதத்தில் 
அவளுக்கே உள்ள குறும்போடு

உன் மூக்கு கண்ணாடிகிட்டயும்
வாக்கிங் ஸ்டிக் கிட்டயும்
பேசிப்பேசி விளையாடியதில்
அதற்குக் கொம்பு முளைத்து
என்னை முட்ட வருது...
நீ வா பாட்டி - என்ற அவளின் முறையீட்டு வரிகள், அவளுக்கும் 
பாட்டிக்குமான நேசப் பிணைப்பை  அழகாக சொல்லிவிடுகிறது.


மேலும் சிறந்த படைப்புகளைச் சகோதரியிடம் தொடர்ந்து 
இனியும் எதிர்பார்க்கலாம். இனிய வாழ்த்துகள்

மு.முகமது பாட்சா*
25/09/2019
  

No comments:

Post a Comment

Popular Posts