Thursday, 27 September 2018

ரம்மியாடும் சொற்கள்

தொடர்புடைய படம்

கிளைக்கு, இலை 
சரியாகவிருக்கும் என்று தேர்ந்தெடுத்தேன் 
அருகும் சருகும் கூட 
அடம்பிடித்து அருகில் வந்து உட்கார்ந்து கொண்டது 
புத்தன் என்று எடுத்துவைத்தவுடன் 
எத்தன் என்னையும் சேர் என்கிறான் 
சொல் என்ற சொல்லுக்கு 
எள் ஏன்தான் ஆசைப்படுகிறது? 
எழுது'க்கு விழுது வந்து சேர்ந்ததில் 
கொஞ்சம் மகிழ்ச்சிதான் 
எருதுக்கும் விருதுக்கும் கூட 
ஏதாவது சம்பந்தம் இருக்கலாம் 
சிறைக்கு நிறை என்பதும் 
ஆட்சியாளர்களின் மொழிதானே! 
சாதிக்கு போதி என்று 
ஏன் வருகிறது விளங்கவில்லை 
மதத்திற்கு அதத்தை 
நானே தேர்ந்தெடுத்தேன் 
சுகம் என்றவுடன் முகம் 
அகம் இரண்டும் வித்தைக் காட்டுகிறது 
வார்த்தைகளை 
கலைத்துபோட்டு அடுக்குகிறேன் 
ரம்மி விளையாட 
தொலைக்காட்சியென்னை அழைக்கிறது 
வார்த்தைகள் கொஞ்ச நேரம் உறங்கட்டும் 
நான் 
கவிதையோடு ரம்மியாடிவிட்டு வருகிறேன். 

- மு.முகமது பாட்சா* 
27 /09 /2018 

No comments:

Post a Comment

Popular Posts