
ஒரு வார்த்தையை வைத்துவிட்டு
வாதிடத் தொடங்குகிறோம்
வார்த்தைகள் பெருகி
மேசை முழுவதும் ஆக்கிரமிக்கின்றன
அப்போது அங்கிருந்த தேநீர்
சில வார்த்தைகளை மிடறிக்கொள்கிறது
சில வார்த்தைகளை
குப்பைக்கூடையில் எறிகிறோம்
வார்த்தைகள் தீராமல்
இன்னமும் வந்து கொண்டேயிருக்கின்றன
மௌனமும்
சில வார்த்தைகளைப் பறித்துக் கொள்ள
இருவரும்
காகங்களாக மாறி இரையெடுக்கிறோம்
குறையாத வார்த்தைகள்
இரவைச் சூடாக்கி சமர்ப்பிக்கிறது
பார்வைகளில்
சில வார்த்தைகள் பதுங்கிக்கொள்கின்றன
இதழில் ஒட்டிக் கொண்ட வார்த்தைகள்
இதயத்தில் புன்னகை செய்கிறது
அத்துணை வார்த்தைகளையும்
அலமாரியில் வைத்துவிட்டு
வார்த்தையேயில்லாத
போர்வையைப் போர்த்திக் கொண்டோம்
விடிந்த பிறகுதான் தெரியும்
அந்த ஒரு வார்த்தை என்னவென்று.
- மு.முகமது பாட்சா*
19 /07 /2018
No comments:
Post a Comment