
அந்தக் கதையின் முதல் வரியில்
உட்கார்ந்துகொண்டு பயணிக்கிறேன்,
இடை நிறுத்தலில்லாமல் பயணம் நகர்கிறது,
நடத்துநரிடம் ஒருவன் சில்லறைக்காகச்
சண்டையிட்டுக் கொண்டிருந்தான்,
"கொய்யா கொய்யா" என்றவளின் கூடையில்
கதையை வைத்துவிட்டு
அவளின் கதையை வாசிக்கிறேன்,
அழகை மறைக்கத் தெரியாதவள்
அழுக்காக இருந்ததும் நல்லதற்கே,
அவளிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தவன்
கையில் பலான புத்தகம்,
வண்டி மீண்டும் நகர... சிறிது தூரம் ஓடிவந்தவள்
கதையை என்னிடம் கொடுத்துவிட்டு
புள்ளியாக மறைந்தாள் ,
ஆங்காங்கே ஆலைகள் சுவாசித்துக் கொண்டிருந்தன,
வயல்களுக்கு வயதாகி பாதம் வெடித்துக் கிடந்தது,
அழுவதற்கும் கண்ணீரில்லாமல்
ஏரியொன்று அழுது கொண்டிருக்க...
கதையில் இப்போது முக்கியத்திருப்பம்
'ப்ப்ஷ்ஷ்ஷ்'ஷென்று டயரிலிருந்த ட்யூப்,
மூச்சை இறக்கி இயலாமையை இலகுவாக்கியது.
எல்லோரின் வாசிப்பும் டயரின் பக்கம் திரும்ப ...
ஸ்டெப்னி
தன்னைப் பெருமையாகப் பார்த்துக் கொண்ட தருணம்...
தொடரும் பயணத்தின் அடுத்த நிறுத்தம்
டீக்கடைதான்.
அப்படியொன்றும் இங்கு நிகழவில்லை
பலான புத்தகக்காரன்
பேரம் பேசாமல் டீத்தண்ணீக் குடித்தான் என்பதுதான்
முக்கியமான செய்தி
ஓட்டுநர் வந்தால் வண்டி நகரத்தானே செய்யும்,
ஊர் வந்து இறங்கிய பிறகுதான் கவனித்தேன்
நான் வாசித்த கதையின் முதல் வரி
இன்னமும் நகராமல் அங்கேயே உட்கார்ந்திருந்தது.
- மு.முகமது பாட்சா*
01 /07 /2018
No comments:
Post a Comment