
ஒரு குட்டிச்சுவர் போதும்
எதுவும் ஏறி சற்று உட்கார்ந்துகொள்ள
யார் என்ன சொல்லப்போகிறார்கள்?
அந்தரங்கங்களை அலசிக் காயப்போடலாம்
அழுக்குகளைப் பூசிக்கொள்ளலாம்
பனைமரத்து வண்டுகள் எங்கும் பறக்கின்றன
பனம்பழத்தின் வாசனை அலாதியானது
வரப்பிழந்த வயலில்
காட்டாமணக்குப் பூக்கள் கண் சிமிட்ட செய்யும்
காட்சிகள் மட்டுமே எப்போதும் மாறுகின்றன
காத்துக் கிடக்கும் சுமைதாங்கி
எந்தக் கர்ப்பிணியின் நினைவுகளைத் தாங்கிக் கொள்கிறது?
மனிதம் தனியாக அலைகின்ற போது
ஆசை சிறகுகளைக் கட்டிக் கொண்டு பறக்கின்றது
காலம் காலடியில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்க
தவறான கணக்குகளை எப்போதும் சரியென்கிறோம்
அந்தக் குட்டிச்சுவர் சுமந்திருக்கும் கதைகளை
யாரும் எப்போதும் நினைத்ததேயில்லை
- மு.முகமது பாட்சா*
12 /07 /2018
No comments:
Post a Comment